காதலின் வீடு
காதலன் தன்னுடைய காதலியைக் காண, அவளது வீட்டுக்குச் சென்று, கதவைத் தட்டினான்.

“யாரது?” உள்ளே இருந்த காதலி கேட்டாள்.
“நான்தான், உன்னுடைய காதலன்!”
“காதலின் வீடு மிகச் சிறியது. அதில் இருவருக்கு இடம் இல்லை; ஒருவர்தான் தங்க முடியும்!”
கதவு திறக்கப்படவில்லை.
காதலன் ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றான்.
அவன் வேண்டிக்கொண்டதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். “நான் எப்படியேனும் என் காதலில் வெற்றி அடைய வேண்டும்!”
மாதங்களும் வருடங்களும் கழிந்தன.
பிறகு அவன் திரும்ப வந்தான். காதலியின் வீட்டுக் கதவைத் தட்டினான்.
“யாரது?” உள்ளேயிருந்து கேட்டாள் காதலி.
“நீதான் அன்பே!”
கதவு திறக்கப்பட்டது. காதலனை மகிழ்ச்சியோடு காதலின் வீட்டுக்குள் வரவேற்றாள் காதலி.