காதலர் கண்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல் நாடகம்
கதைப்பதிவு: May 28, 2025
பார்வையிட்டோர்: 3,663 
 
 

(1956ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாடக பாத்திரங்கள்

மகமது ஷா – டில்லி பாதுஷா 

ஜுல்பிகர்கான் – பாதுஷாவின் மகம்மதிய சேனாபதி 

ஜெயசிங் – பாதுஷாவின் ரஜபுத்ர சேனாபதி 

மதால்சிங் – ஜெய்சிங்கின் வேலையாள்

மதன்சிங் – குர்ஜர மன்னன் புதல்வன்

வீர்சிங் – மதன்சிங்குடைய நண்பன்

செயிட்சிங் – ஜெய்சிங்கின் நண்பன்

உதயசிங் – அஜ்மீர் அரசன்

தாதேகான் – ஓர் மகமதிய தலைவன்

தாராபாய் – உதயசிங் தமயன் புத்ரி 

துளசிபாய் – தாராபாயின் தோழி 

பிரபுக்கள், சோப்தார்கள், சேவகர்கள். 

கதை நிகழிடம்:- டில்லியிலும் அஜ்மீரிலுமாம். 

காதலர் கண்கள்

முதல் அங்கம்

முதற் காட்சி

இடம் – பூந்தோட்டத்தில் பளிங்குக்கல் மண்டபம், காலம் – நடுப்பகல். மத்தியில் சயனத்தில் மஹம்மதுஷா ஹுக்கா பிடித்தவண்ணம் சயனித் திருக்க, சுற்றிலும் ஜுல்பிகர்கான், தாதேகான் முதலிய மகம்மதி யத் தலைவர்கள் மதுபானம் செய்துகொண்டும், ஹுக்கா பிடித்துக் கொண்டும், உட்கார்ந்திருக்கின்றனர். விலைமாதர் ஆடிக் கொண் டிருக்கின்றனர். செயிட்சிங் ஒரு நிருபத்துடன், பாதுஷா அருகில் வருகிறான். 

செ. ஷா இன்ஷா!- ஷா இன்ஷா -ஷா இன்ஷா! 

ம. (தலையை மெல்லத் திருப்புகிறான்.)

செ.ஜெயசிங்கிடமிருந்து அவசரமான லிகிதம் வந்திருக்கிறது.

ம. அச்சா ! 

(தலையைத் திருப்பிக்கொண்டு ஹுக்கா பிடிக்கிறான்.)

செ. என்னடா இது ? – ஷா இன்ஷா ! இது அவசரமான கடிதம். 

ம. கியா ? 

செ.ஜெயசிங்கிடமிருந்து வந்திருக்கிறது. 

ம. கோன் ஜெயசிங் ? 

செ. சர்க்கார் ரஜபுத்ர சேனாதிபதி. 

ம. அச்சா! 

(மறுபடியும் தலையை திருப்பிக் கொள்ளுகிறான்.) 

செ.ஜெயசிங்கிட மிருந்து அவசரமாய் ஒரு சவார் கொண்டு வந்திருக்கிறான் – படிப்பதா? 

ம. நம்பள்கி படிக்கறான், என்னாத்கு? 

செ. தங்களுக்கு மேல் விலாசம். 

ம. ஹோ! அச்சா! மேல்விலாசம்கி சரி யிர்க்கறான்? 

செ. ஆமாம்,ஷா. 

ம. அச்சா! ஜாவ். 

[ஹுக்கா பிடிக்கிறான்.]

செ. என்ன ஜாவ் ! — இங்கே சர்க்காருக்கு சமாசாரந் தெரிய வேண்டாமா? 

ம. கியா சமாசாரம்? 

செ. இந்த நிருபத்தி லிருக்கும் சமாசாரம். 

ம. கிம் 

செ. இது ஏதோ அவசரமான காகிதம், சர்க்காருக்குத் தெரியவேண்டும், படிக்கிறேன், மன்னிக்கவேண்டும். 

ம. அச்சா! அல்லாம் பட்ச்சி, சோடா கர்கர் ஏக் பல சொல்றான். 

செ. என்ன ஏக் பாத்லே சொல்ரது? – தலைவிதி ! நித்ய கண்டம் பூர்ணாயுசு, இதைக் கட்டிக்கொண்டு அழுகிறது. 

ம. கியா போல்தா? என்னா சொல்றான்? 

செ.இல்லை, முக்கியமான சமாசாரமென்று சொன்னேன். 

ம. கியா சமாசார் ? – படோ. 

செ. [நிருபத்தைப் பிரித்துப் படிக்கிறான்.] ஷா இன்ஷா, நாடிர்ஷா- 

(வெளியில் நகாரா முழங்குகிறது.) 

ம. [பயந்தெழுந்து] அல்லாரே! நாடிர்ஷா! நாடிர்ஷா!

எல்லோரும். [பயந்தெழுந்தவர்களாய்] அல்லா ! அல்லா ! 

செ.ஷா இன்ஷா ! நாடிர்ஷா மர்கயா! மர்கயா ! 

ம. ஆ! குதாவந்த்! பர்வர்திகார் !–செயிட்சிங், நம்பள்கி பயங்காட்னா ?–சோப்தார் ! செயிட்சிங் தகல்தேவ் பாராகானாகு! 

சோ. ஜே ஹுகும்! ஷா இன்ஷா! 

[குடி வெறியில் தாதேகான் கழுத்தைப் பிடித்து நெட்டுகிறான்.] 

தா . அரேரேரே! அமார் தாதேகான் ! தாதேகான் ! 

சோ. சலாவ்! 

[வெளியே தள்ளிக்கொண்டு போய்விடுகிறான்.) மற்றோர் சோப்தார் வருகிறான். 

ம-சோ. ஷா இன்ஷா! ஜெயசிங் ! 

ம. கோன் ? 

ம-சோ. ஜெயசிங் ! 

காதலர் கண்கள் 

ம. செயிட்சிங், ஜெயசிங் ஏன் வந்தான்? 

செ. நாடிர்ஷாவைத் தோற்கடித்து, ஹுஜூரிடம் நஜர் உடன் பார்க்க வந்திருக்கிறான் போலிருக்கிறது. இந்தக் கடிதத்தில் அந்தச் சமாசாரந்தா னெழுதி யிருக்கிறது. 

ம. அச்சா அச்சா !- ஜுல்பிகர் ! 

ஜு. பொஹுத் அச்சா ! 

ம. சோப்தார், புலாவ் ஜெயசிங். 

சோப்தார்கள் கட்டியங் கூறிக்கொண்டு முன்னே செல்ல ஜெயசிங் வருகிறான். 

அவன் பின்னால் அநேகம் போர்வீரர்கள் நஜர்கள் கொண்டு வந்து வைக்கின்றனர். அவைகளை மகம்மதுஷா அங்கீகரிக்கிறான்;

கடைசியாக மதால்சிங் வருகிறான். 

மதா. ஷா இன்ஷா? 

(முழந் தாளிடுகிறான்.) 

ம. அச்சா! அம்கு பஹுத் குஷிஹை, ரொம்ப சந்தோஷம் பண்ரா! தும்கு என்னா ஓணும், பூச்சோ. 

மதா. எனக்கா?-ஏ!-ஷா இன்ஷா, ரொம்ப நாளாக் கேக்கரே – எனக்கு ஒரு கண்ணாலம் பண்ணிடணும் ! 

ம. கியா கல்லாண், செயிட்சிங்? 

செ. ‘ஷாதி’ ஷா இன்ஷா. 

மதா. தாடியா? எனக்கு வாணாமையா தாடி.

செ. ஷாதி! ஷாதி! 

ம. ஓ! ஷாதி ! அச்சா!-ஜுல்பிகர் ! 

ஜு. பொஹுத் அச்சா ! 

ம. கல்ரோஜ் படம் வந்துதே, அந்த அஜ்மீர் ராஜா பேடியெ இவன்கு ஷாதி கரோ. 

ஜு. பொஹுத் அச்சா ! 

செ. இதென்ன இது? – ஷா இன்ஷா ! இவன் ஜெயசிங் அல்ல, ஜெயசிங்கினுடைய வேலைக்காரன், நவ்கர். 

ம. பர்வா நை.ஜெயசிங் எங்கே?- ஜெயசிங், நீ அந்த ராஜ் குமாரி ஷாதி கரோ. 

ஜெ. ஷா இன்ஷா ! நான் கேட்கவில்லையே! எனக்கு விவாகம் வேண்டாம். 

ம. நை, நைமை, ஹுகும் தியா, நீ அந்த ராஜா பேடியெ ஷாதி பண்ணோணும். 

ஜெ. ஷா இன்ஷா, என்னை மன்னிக்கவேண்டும் எனக்கு இப்பொழுது விவாகமே வேண்டாம். 

ம. நான் ஷா இன்ஷா! ஹுக்கும் கொடுக்றேன், நீ நை சொல்றான்! கபர்தார் ! – ஜுல்பிகர்! ஜெயசிங்கு புலாகர் அஜ்மீர்கு ஜாவ். வஹான் அஜ்மீர் மஹாராஜா பேடீகு இன்கு ஷாதி கரோ ஜல்தி. 

ஜூ. அச்சா! ஷா இன்ஷா! 

ஒரு சோப்தார் வருகிறான், 

சோ. ஹுஜுர் ! காசா தீயார் ! 

ம. பிஸ்மில்லா !- செயிட்சிங், நீயும் ஜுல்பிகர்கூட ஜாகர், ஷாதி ஜல்தி பண். 

[சோப்தார்கள் கட்டியம் கூறிக்கொண்டு முன் செல்ல ஜூல்பிகர்கான் முதலான மற்ற மகம்மதியர் பின்வர, மஹம்மதுஷா போகிறான்.]

ஜெ. இதென்ன இது? நானாவது அஜ்மீர் ராஜகுமாரியை விவாகம் செய்து கொள்வதாவது? அவர்களுக்கும் எங்களுக்கும் மூன்று தலை முறையாக ஜன்மத்துவேஷம், செயிட்சிங், இவ்விஷயம் நீ அறியாத தன்றே ? 

செ. ஆம்,ஆம்.இந்தத் தர்ம சங்கடத்திற் கென்ன செய்வது ? இந்த மூடன் ஒன்றைச் சொல்லிவிட்டால், தப்போ ஒப்போ அதே பிடிவாதம் பிடிப்பான். [மதால்சிங்கைக் காட்டி] இந்த இழவு போய், ‘எனக்குக் கல்யாணம் வேண்டும்’ என்று கேட்க வேண்டுமா? 

ஜெ. அவன் கேட்டால் எனக்கு உத்தரவு செய்வா-னேன்? 

செ. அதுதான் அந்தே தர்பார் ! ஜனங்கள் சொல்வது சரியாகத்தா னிருக்கிறது. முதலில் இவனை நீதான் என்று எண்ணி உத்தரவு செய்து விட்டான் ஆசாமி. பிறகு நான் இன்னானென்று சொல் லவே, சொன்ன உத்தரவை மாற்றக் கூடாதென்று உன்னைப் பிடித்தது சனி ! 

ஜெ. உம்! சனி யென்னைப் பிடித்ததோ மகம்மதுஷாவைப் பிடித் ததோ சற்று பார்ப்போம் ! இவன் யார், நீ இந்த ராஜகுமாரியைக் கலியாணம் செய்துகொள், என்று எனக்குக் கட்டளை யிடுவ தற்கு? எனக்கு சேனாதிபதிப் பட்டம் வேண்டாம்! இந்த க்ஷணம் ராஜிநாமா கொடுத்துவிடுகிறேன். 

செ. ஜெயசிங், அவசரப்பட்டு ஒன்றுஞ் செய்யாதே, வீணில் அவ னுக்குக் கோபம் வரும்படிச் செய்யாதே, பிறகு பிரமாதமாய்ப் போகும். 

ஜெ. யாருக்குப் பிரமாதம்? இவனுடைய கோபத்திற்கோ நான் பயப் படுவேன்? இவன் பாட்டனுக்குப் பாட்டன் அந்த அவ்ரங்க சீப்பே வந்தபோதிலும் எதிராக, நான் அவனுடைய தாடியைப் பிடித்து ஒரு ஆட்டம் ஆட்டும் படியான சக்தி எனக்கு உண் டென்று நம்பு. நான் மாட்டேனென்று ஒரே உறுதியாய்ச் சொல்லி விடுகிறேன். அதன்மேல் என்னைப் பலாத்காரம் செய்ய முயன் றால், நான் ஜெயசிங் ! க்ஷத்ரிய குலத்திலுதித்த ரஜபுத்ர சுத்த வீரன் என்பதை அவன் கவனிக்கும்படிச் செய்கிறேன். 

மதா. அரசே, இவ்வளவு கஷ்டம் என்னாத்துக்கு? பேசாதே அந்த ராஜ குமாரியெ கண்ணாலம் பண்ணிக்கினா ? தானா வர்ர சீதே வியெ – 

ஜெ. மதால் ! பேசாம லிரு ! உன்னால் வந்தது இவ்வளவு கஷ்ட மும்; என்னத்துக்கடா கல்யாணம் வேண்டு மென்று கேட் டாய்? உனக்கேன் கல்யாணம் இப்பொழுது? 

மதா. வயசு சும்மா ஆச்சேண்ணு பார்த்தேன். 

ஜெ. ஆமாம் வயதுதான் வீணாக வளர்ந்தது, அதனோடு புத்தி வளர்ந் ததா? இல்லாவிட்டால் இந்தச் சங்கடத்திற்கு என்னைக் கொண்டு வருவாயோ? இப்பொழுது யார் அந்த ராஜ குமாரியைக் கலி யாணஞ் செய்து கொள்வது? 

மதா. நீங்க வாணாம்னா, நான் கண்ணாலம் பண்ணிக்கிறேனே. 

ஜெ. நீயா?- எனக்குச் சிரிப்பு வருகிறது, இந்த முழு முண்டத்தை கட்டிக்கொண்டு அழுகிறது ! 

[நகைக்கிறான்.] 

குடி வெறியால் தள்ளாடிக்கொண்டு ஜூல்பிகர்கான் வருகிறான்.

ஜூ. [மதால் சிங்கைச் சுட்டி] ஜெயசிங் ! ஷா இன்ஷா உத்தரவு பண்ணா,நம்பொ உடனே புறப்பட்ராங்கோ. இண்ணக்கி சாய்ங் கால் பொறப்பட்ராங்கோ, உன்கு ஷாதிபண்ணோ. உடனே பொறப்பட், கபர்தார்! 

(போகிறான்.)

செ. சரிதான், ராஜாவுக்குத் தகுந்த சேனாதிபதி! அவன்தான் அந் தத் தப்பு செய்தா னென்றால், இவனுக்குங் கூட கண் தெரிய வில்லை. 

ஜெ. அப்படியல்ல, இவனுக்கு என்னை நன்றாய்த் தெரியாது. இவன் என்னை அதிகமாய்ப் பார்த்ததில்லை-செயிட்சிங் எனக் கொரு யுக்தி தோன்றுகிறது. நம்முடைய மதாலுக்கு என்னுடைய உடை முதலியன வெல்லாம் தரித்து, அஜ்மீருக்கு உங்களுடன் அனுப்புகிறேன். ஜுல்பிகர்ருக்கு இந்த மர்மந் தெரியாது. இவன் ஜெயசிங் என்று எண்ணி யிருக்கிறான். நீ மாத்திரம் உண் மையை வெளியிடாமலிருப்பையானால் நமது காரியங் கைகூடும். விவாகமானபின் மாற்ற ஒருவராலு மாகாது. அஜ்மீர் அரசன் மகள் கேவலம் ஒரு நவகரை மணம் புரியும்படி செய்வித்தால், அவள் குடும்பத்தார் எங்கள் குடும்பத்தாரை வருத்தினதிற் கெல் லாம் சிக்ஷையு மாகும். 

செ. நல்ல யுக்தி தான்- பிறகு உண்மை எப்படியும் வெளியாகுமே, அப்பொழுது என்ன செய்கிறது? 

ஜெ. இதைவிட என்ன கெட்டுப்போகப்போகிறது? இப்பொழுது ஆகிறது, அப்பொழுது ஆகட்டும். மதால், நீ யென்ன சொல்லுகிறாய்? உன்பாடு அதிர்ஷ்டந்தான். அஜ்மீர் அரசன் மகளே உனக் குப் பெண்ஜாதி யானால், உனக்கென்ன குறை? என்னைப்போல் வேஷம் போட்டுக் கொண்டு போகிறாயா? 

மதா. ஆஹா! அப்படியே செய்ரேன்-அப்பா! இப்போதான் அந்த ஜோஸ்யன் சொன்னது நெஜமாகுது. 

ஜெ. அதென்ன, ஜோசியன் சொன்னது? 

மதா. இல்லெ, நானு சின்னப்பொ ஒரு ஜோசியன்கிட்ட போயி நானு ஒரு ராஜா பொண்ணெ கண்ணாலம் பண்ணிக்குவனா இண்ணு கேட்டேன். அப்படியே ஆவும்ணு ஜோஸ்யம் சொன்னான். அது முதலு நானு சமயம் பார்த்துக்குனே இர்ந்தேன், இப்போதான் அந்த சமயம் வந்தது. ஆனால் ஒரு சமாசாரம். 

ஜெ. என்ன ? 

மதா. நானு தனியா, ஒண்டியா. அஜ்மீருக்குப் போவமாட்டேன். நீங்களும், கூடவந்தாத்தான் நான் போவேன். 

ஜெ. நான் கூட வருவதாவது? 

மதா. ஒரு வேளே கண்ணாலம் ஆவுரத்துக்குள்ளே யாராவது என்னெ கண்டு புடிச்சுட்டா, நான் என்ன செய்யரது? கண்ணாலம் ஆய்பூட்டா பரவாயில்லே. அதுவரைக்கும் கஷ்டமாச்சே. அது வரைக்கும் நீங்க எம் பக்கத்திலேயே யிருக்கொணும். 

ஜெ. இதென்ன ஒரு சங்கடம் ! நான் உன்னுடன் வருவதாவது ? நீ யென்னைப்போல் வேஷம் போட்டுக்கொண்டு போகப் போகிறாய், நான் எப்படி உன்னுடன் போவது ?-ஆயினும் ஒரு யோசனை. அங்கே அஜ்மீரில் ஒருவரும் என்னைப் பார்த்த தில்லை. நான் உன்னுடைய நவ்கர்– வேலையாளைப் போல் வேஷம் போட்டுக் கொண்டு உன்னுடன் வருகிறேன். நானும் அஜ்மீரைப் பார்த்த தில்லை – செயிட்சிங், என்ன சொல்கிறாய்? 

செ. சரி, அப்படியே. 

மதா. அதெல்லாம் சரிதான்-ஒரு சந்தேகம் மாத்திரம். 

ஜெ. என்ன இன்னும் ? 

மதா. இல்லெ. அந்த ராஜகுமாரத்தி அழகா யிருப்பாளா – 

ஜெ. சத்! வாயை மூடு. கெட்ட கேட்டிற்குப் பிச்சைக் குடுவை யிரண்டாம் ! ராஜகுமாரி கிடைக்கிறது போதாதோ? ? அழகா யும் இருக்க வேண்டுமா ? வா போவோம் நமது வீட்டிற்கு. 

மதா. இல்லெ, சும்மா கேட்டேன். 

[எல்லோரும் போகிறார்கள்.] 

இரண்டாவது காட்சி

இடம் – அஜ்மீர் அரண்மனையைச் சேர்ந்த தோட்டம், காலம் — காலை. 

புஷ்பக்கூடை ஒன்றை வைத்துக்கொண்டு தாராபாய் வருகிறாள்.

தா. இவ் வழகிய ரோஜாச் செடி என்ன ரமணீயமாய்ப் புஷ்பித் திருக்கிறது. இதைப் பார்க்கும்போது என் நினைவு எனக்கு வருகிறது. புஷ்பித்த இவ் வழகிய செடி, அதன் புஷ்பத்தின் அழகையும் மேனியையும் மணத்தையும் அறிந்து, அனுபவிக்க வல்ல அறி ஞன் கையில் அடைந்தால். அவன் கரத்திலும் சிரத்திலும் அதிக சுகத்தையும் மேன்மையும் எப்படி அடையுமோ, அப் படியே நானும் என் கருத்திற் கினிய, என்மீது உண்மையிற் காதல்கொண்ட கணவனைப் பெறுவேனாயின், கவலை யற்றுச் சுக மாய் வாழ்நாட்களைக் கழிப்பேன் ! அஃதன்றி இவ்வழகிய ரோஜா அதன் மகிமையையறியாத மௌட்டீகன் கையை யடைந்தால் எப்படி கசக்கப்பட்டழியுமோ, அவ்வாறே காதலில்லாக் கண வனைக் கைப்பிடிக்கும்படி நேரிட்டால், கருத் தழிந்து மாள்வேன்! என் னழகிய ரோஜாவே! உன்னை நான் சிரசாக வகிப்பது போல எனக்கு நேருங்கணவன் என்னைச் சிரசாக வகிப்பானாக! 

(ரோஜா புஷ்பத்தைத் தலையில் அணிந்துகொள்கிறாள்.)

எனது கருத்தினுக் கிசைந்த காதலன் எக் கணம் என் கண் ணெதிர்ப்படப்போகிறானோ? பார்ப்போம். சீக்கிரம் என் மனோரதம் நிறைவேறுமென்று எனக்குள் ஏதோ ஒன்று சொல்லு கிறது. யார் அங்கே ? 

துளசிபாய் வருகிறாள். 

து. நான் தான். 

தா. நீயா? யாரோ வென்று பார்த்தேன். 

து. யா ரென்று பார்த்தாய்? ஒரு வேளை மதனசிங்தான் இங்கு வந் தாரென்று நினைத்தையோ? 

தா. துளசி! உனக் கெத்தனை முறை சொல்வது, அந்த ராஜகுமாரன் பெயரையும் என்முன் கூறவேண்டா மென்று? 

து. சொல்ல வில்லை யம்மா. உனக்குக் கோபம் வேண்டாம். மறுபடியும் சொல்வ தில்லை மதனசிங் பேரை. 

தா. மறுபடியும் பார் ! 

து. அது தான் சொல்லவில்லை யென்றேனே. அது போனாற் போகட் டும். இங்கே யென்ன செய்கிறாய் தனியாக? பயமாயில்லையா? 

தா. ஏன்? 

து. திடீரென்று கண்முன்பாக இங்கு எதிர்ப்பட்டால். தா. என்ன அது? 

து. அவர். 

தா. எவர்? 

து. அவர்தான்! பெயரைத்தான் சொல்லவேண்டா மென்றாயே.

தா. துளசிபாய், துளசிபாய் ! உனக்கு எவ்வளவுதான் எடுத்துச் சொல்வேன் ? எத்தனை முறை சொன்னாலுந் தெரிய வில்லையே. எப்படியாவது அந்த ராஜ குமாரனைப் பற்றி நிமிஷத்திற் கொரு தரம் பேசுகிறாயே. அப்படிப் பேசுவதில் உனக்கென்ன லாபம் ? 

து. அப்படிப் பேசுவதில் உனக்கென்ன நஷ்டம்? 

தா. நான்தான் அன்றே என் தந்தை முன்பாக ஒரே பிடிவாதமாய்க் கூறிவிட்டேனே. குர்ஜர மன்னன் குமாரனை நான் மடிந்தாலும் மணஞ் செய்துகொள்ள மாட்டேனென்று. 

து. ஆனால் இனி நான் பேசுவதில்லை அம்மா. எனக்கேன் இந்தப் பழி ? 

தா. துளசிபாய், இந்தச் சனி நமது நாட்டை விட்டு ஒழியும் மார்க்க மில்லையா? 

து. எந்தச் சனி ? 

தா. குர்ஜர தேசத்திலிருந்து வந்திருக்கிறதே அந்தச் சனி!

து. அவரா? அவரைப் பற்றிப் பேசவேண்டா மென்றாயே, ஆகவே வேறு என்னவோ கேட்கிறாயென்று நினைத்தேன். அவர் நமது நாட்டைவிட்டுப் போவதற்கு ஒரு மார்க்க மிருக்கிறது.-சரி, அதைச் சொல்வானேன், பிறகு நீ அவரைப் பற்றி ஏன் என்முன் வார்த்தை யாடினா யென்று என்னை நீ வைவானேன்? 

தா. இல்லை இல்லை. சொல், என்ன மார்க்கம்?

து. பிறகு என்மீது கோபங் கொள்ளக்கூடாது. 

தா. இல்லை, இல்லை. சொல். 

து. அவர் இந்த நாட்டைத் திரும்பிப் பாராதிருக்க வேண்டு மென்றால், அவரை நீ மணஞ் செய்து கொண்டு, குர்ஜர தேசம் போய்ச் சேர். மறுபடியும் இந்தப்பக்கம் திரும்பிப் பார்க்கிறாரா பார்.

தா. துளசிபாய், இன்னும் இந்தப் பிடிவாதமா? நான் மகாராஜாவிடம் போய்ச் சொல்லுகிறேன். 

[திரும்புகிறாள்.] 

து. (தடுத்து) தாராபாய் ! தாராபாய் ! இது நியாயமா? நீயே யோசித்துப்பார். நானாக எதாவது எடுத்துக் கூறினேனா ? நீ கேட்டதற்குப் பதில் கூறினேன். அப்பொழுதே யென் மீது கோபங் கொள்ளக்கூடாதென்று கேட்டேனா, இல்லையா? போனது போகட்டும். இனி அந்த வார்த்தை யெடுப்பதில்லை உட்கார். வேறு ஏதாவது பேசுவோம் -தாராபாய், எனக்கொரு சந்தேகம். இத்தனை ராஜகுமாரர்கள் உன்னைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமென்று வந்து கேட்கிறார்களே. என் னைக் கலியாணம் செய்துகொள்ள வேண்டுமென்று ஏன் ஒரு வரும்- வருவதில்லை ? 

தா. இந்த மாதிரி வா யிருப்பதனால்தான்.-அதிருக்கட்டும், நமது மந்திரி தேசாந்திரம் போனவர் ஆங்காங்கு தான் பார்க்கும் ராஜ குமாரர்களின் படங்களை யெல்லாம் அனுப்புகிறேன் என்றாரே, ஏதாவது வந்து சேர்ந்ததா தெரியுமா உனக்கு? 

து. ஒன்றுதான் இதுவரையில் அனுப்பி யிருக்கிறார். ஆனால் தான் பார்த்ததிற்குள்ளாக அதுதான் நிரம்பவும் அழகுள்ள தென்றும், அதைவிட மேலானது கிடைப்பது கஷ்டமென்றும் சொல்லி யனுப்பியிருக்கிறார். 

தா. எங்கே அந்தப் படம்? யாருடைய படம் அது? 

து. அது யாருடைய படமோ நன்றாய்த் தெரியவில்லை. நான் எப் படிச் சொல்வது ? நான் அதைப் பார்க்கும் பொழுதெல்லாம் அத னுடைய அழகு என் கண்களைக் கூசச் செய்கிறது. அப் படத்தைப் பார்ப்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும். 

தா. அப்பா! அவ்வள வழகிய அரச குமாரன் யார்? அந்தப் படம் எங்கே ? நான் பார்க்கவேண்டும். 

து. இதோ போய்க் கொண்டுவருகிறேன். (சற்று போய் மறுபடியும் திரும்பி வந்து] ஓகோ! ஞாபகம் வந்தது, என்னிடமே யிருக் கிறது. உனக்குக் காட்டவேண்டுமென்றே எடுத்து வைத்தேன், இதோ பார். 

[ஒரு சித்திரப் படத்தைக் காட்டுகிறாள்.]

தா. [அதைப் பார்த்துத் துண்டுதுண்டாய்க் கிழித்தெரிந்து] துளசி பாய்! என்னை யேமாற்றுகிறாயா நீ? என்னைப் பரிகாசஞ் செய் கிறாயா? அந்தக் குர்ஜர நாட்டுக் குரங்கின் படத்தை யென் னிடங் காட்ட இந்தச் சூது எடுத்தாயோ? போ என் முன் நில்லாதே. [துளசிபாயைப் பிடித்துத் தள்ளுகிறாள்.]

து. இதோ போகிறேன். போகுமுன் ஒரு வேண்டுகோள்.

தா. என்ன? 

து. இந்த துண்டுகளை யெல்லாம் பொறுக்கிக் கொண்டு போகிறேன். தா. செய், எப்படியாவது தொலை. 

து. [துண்டுகளைப் பொறுக்கிக்கொண்டே] ஐயோ! என்ன கண்கள்! என்ன கண்கள்! 

தா. ஆந்தைக் கண்கள். 

து. ஊம்- இந்த மூக்கு ஒன்று போதாதா! 

தா. காக்கை மூக்கு! 

து. ஊம், உனக்கு அப்படித்தான் தோன்றும் – அதிருக்கட்டும். இந்த வாயினழகைப் பார்த்தாயா? 

தா.பார்த்தேன், பப்பரவாய் அதனோடு தத்துவாய் ! 

து. அது போனாற்போகட்டும். இந்த முகம் இருக்கிறதே – நல்ல சரத் காலத்து – 

தா. மந்தியைப்போல். 

து. எதற்கும் அதிர்ஷ்டம் வேண்டாமா? 

தா. துளசி ! துளசி! அதோ பார், யார் அங்கே வருகிறது?

து. அவர்தான் ! அவர்தான் ! 

தா. ஐ ஐ யோ ! இங்கும் வந்ததா சனி ?- துளசிபாய், நான் இப் படியே வசந்த மண்டபத்திற்குப் போய்விடுகிறேன். அவர் இங்கு வந்து கேட்டால், நான் இங்கு இல்லை யென்று நீ யேதா வது போக்குச் சொல்லி யனுப்பிவிடு. 

து. உம்-உம். சீக்கிரம் போய்விடு. 

[தாராபாய் வேகமாகப் போகிறாள்.] 

சற்று தூரத்தில் மதன்சிங்கும், வீர்சிங்கும் வருகிறார்கள். 

மத. தொ…தோ ரா…. ராஜகு…குமாரி!

வீ. ஆனால் சீக்கிரம் போய் உம்மை விவாகஞ் செய்துகொள்ளும் படி கேளும் நேரில். 

மத. எ! நே … நேற்று க…. கண்ணாலம் ப… பண்ணிக்கும்படி கே.கேக்கச் சொ… சொன்னியே. 

வீ. இதென்ன இழவா இருக்கிறது !- இரண்டும் ஒன்றுதான். சீக் கிரம் போய்க் கேளும், ராஜகுமாரி போய்விடப் போகிறாள். 

மத. உம் உம் ! [துளசிபாய் சமீபம் சென்று] ரா … ராஜ கு…குமாரி. 

ராஜகுமாரா, என்ன விசேஷம்? ஏன் இங்கு வந்தீர்? 

மத. நானா ? கொ… கொஞ்சம் பொ… பொறு, நானு போ…போய் கே… கேட்டுவர்ரேன்.  [வீர்சிங்கிடம் போகிறான்.] 

வீ. என்ன வந்துவிட்டீர் ? 

மத. ரா… ராஜகு ….குமாரி நா…நானு ஏ …ஏன் இங்கே வந்தெண்ணு கே கேட்டா அதுக்கு நீப.. பதில் சொ….சொல்லிக் கொடு…கொடுக்கலியே. 

வீ. என்னடா பெரிய கஷ்டமா இருக்கிறது !-அதற்குப் பதில் சொல் லவுந் தெரியவில்லையா ? அது கூடவா நான் சொல்லிக்கொடுக்க வேண்டும்? நீ யென்னை மணஞ் செய்து கொள்கிறாயா என்று நேரிற் கேட்பதற்காக வந்தே னென்று சொல்கிறது தானே? 

மத.கொ…கொஞ்சம் மு முன்னே வெ வாஹம் செ செய்து கொ …கொள்ளும்படி கே… கேக்கச் சொ…. சொன்னியே. 

வீ. இதென்ன பேரிழவா யிருக்கிறது ! – மணம் என்றாலும், விவா ஹம் என்றாலும், கலியாணம் என்றாலும் எல்லாம் ஒரு இழவு தான்! போம். 

மத .ஓ! ச…சரி. 

(துளசிபாய் சமீபம் போகிறான்.)

து. [தனக்குள்] நம்மை ராஜகுமாரி யென்று நினைத்துக்கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. இதுவும் நம்முடைய அதிர்ஷ்டந்தான். 

மத.ரா…ராஜகு… குமாரி! நீ எ …. என்ன ம… மணம், வெ…. வெவாகம் க…கண்ணாலம் எ ..எல்லாம் ஒரு எ .. எழவுதான் செ… செய்துகரையா இ…ண்ணு கே… கேக்க வ.. வந்தேன். 

து. நானா? 

மத. ஆமாம், நீ…நீதான். 

து. உண்மையில் ? 

மத. உ… உண்மெயா. 

து. நீர் உண்மையில் என்னைக் கேட்கும் பக்ஷத்தில் எனக்கு ஆக்ஷேப மில்லை. 

மத.ப.. பலே ! பலே! 

து. எதற்கும் மஹாரஜாவின் உத்தரவு கேளும். 

மத. [வீர்சிங்கிடம் வந்து) வீ வீர்சிங்! வீர்சிங் ! ரா ராஜ கு…குமாரி ஆ… ஆவட்டும்ணு ஒ… ஒப்புக்கொண்டா. 

வீ. என்ன ஆச்சரியம்! இத்தனை நாளாக ஒரே பிடிவாதமாக இருந்தவள் இவ்வளவு சீக்கிரத்தில் ஒப்புக்கொண்டது ! 

மத. ஆ… ஆனா ஒ ஒரு ச… சமாசாரம் ம… மகாராஜாவே கே… கேக்கச் சொ…சொன்னா உத்தரவு. 

வீ. ஒருவேளை அவர் சொல்லி இணங்கினாளோ, என்னவோ? வாரும் சீக்கிரம் – காற்றுள்ளபோதே துற்றிக்கொள் ளென்று உடனே மஹாராஜாவிடம் போய்ச் சொல்லி, அவர் அனுமதி பெறுவோம். 

மத. நா.. நான் எ… என்னா சொ… சொல்றேண்ணா. சீ..சீக்ரம் போ…. போவுணும் ! 

வீ. இதற்கா இத்தனை நேரம் ? அதைத்தான் நானும் சொல்ல வந்தது. வாரும் சீக்கிரம். 

[மதன்சிங்கை யழைத்துக்கொண்டு போகிறான்.]

கவனித்த வண்ணம் தாராபாய் மறுபடியும் வருகிறாள். 

தா. துளசி, ஒழிந்ததா சனி ? 

து. போய்விட்டார். வா.- தாராபாய், வீணாக அந்த ராஜ குமாரனைச் சனியென்று ஏன் வைகிறாய்? நீ கலியாணஞ் செய்துகொள்ளா விட்டாற் போகிறது. வேறு யாராவது கல்யாணஞ் செய்து கொள்கிறார்கள், நீ வைவா னேன் ? 

தா. தவறுதான் போனாற் போகட்டும்.- நீ அந்த – அவரை என்ன சாக்குச் சொல்லி யனுப்பிவிட்டாய்? 

து. நல்ல சாக்குத்தான் சொல்லி யனுப்பிவிட்டேன். நீ இனி ஒன் றுக்கும் அஞ்சவேண்டாம். அவர் இனி உன்னைக் கண்ணெடுத்தும் பாரார். 

தா. ஆஹா! அப்படிப்பட்ட யுக்தி என்ன செய்தாய்? சொல் அதை, கேட்போம். 

து. உனக்கு நான் சொல்வானேன்? அது ஒரு யுக்தி செய்திருக்கிறேன். 

தா. [தூரத்தில் மதன்சிங் வருவதைக் கண்டு] ஐ ஐ யோ ! துளசி பாய்! கெட்டிக்காரிதான். உன் யுக்தியும் நீயும் ! இதோ அந் தச்சனி மறுபடியும் வருகின்றதே பிதாவை யழைத்துக்கொண்டு அதைக் கட்டிக்கொண்டு நீதான் அழு! நான் ஒரு க்ஷணமும் இருக்கமாட்டேன். [போகிறாள்.]

மற்றொருபுறம் உதயசிங்கும், மதன்சிங்கும், வீர்சிங்கும், வருகிறார்கள். 

வீ. இவ்விஷயம் உங்களிடங் கூற உங்களைத் தேடிக்கொண்டு புறப் பட்டோம்; கும்பிடப்போன தெய்வங் குறுக்கே வந்ததுபோல் எதிர்ப்பட்டீர் நீரும். 

உ. சந்தோஷம்.-ஆயினும் தாராபாய் ஒப்புக்கொண்டனளா? மத. ஆ ஆம், ஆம் 

உ. உண்மையில்? 

மத. ச சத்யமா ! 

உ. என்ன ஆச்சரியம் 1 இன்று காலை நான் கேட்டபோதும் ஒரே பிடிவாதமாய் மாட்டேன் என்றவள், இதற்குள்ளாக எப்படி மனம் மாறினாள் ? 

மத. நா… நான் தான் நே ர்லே கே கேட்டேனே. 

உ. எனக்கென்னவோ விந்தையா யிருக்கிறது. 

வீ. இது உண்மைதான். இவர் நேரிற் கேட்டு, சம்மதி பெற்றார். நானும் அறிவேன். 

உ. சரி, தாராபாய் ஒப்புக்கொண்டால் எனக்கு ஆக்ஷேபனை யில்லை யென்று அப்பொழுதே கூறியிருக்கிறேன். ஆயினும் அவளை நான் நேரிலே ஒரு வார்த்தை கேட்டுவிட்டு பிறகு நாள் குறிப்போம். 

மத. இ..இன்னும் எ … என்னாத்துக்குக் கே… கேக்கறது ? வி.இல்லை, கேட்டுக்கொள்ளட்டும், அதனா லென்ன?- உடனே கேட்டு நிச்சயித்துக்கொண்டு, விவாகத்திற்குத் தக்க ஏற்பாடு கள் செய்ய ஆரம்பியும். நாங்களும் வேண்டிய ஏற்பாடுகள் செய்யவேண்டியிருக்கிறது. 

உ. ஆகவே, நீங்கள் நாளை காலை என்னை வந்து காணுங்கள். இதற் குள் எல்லாத் தீர்மானமுஞ் செய்வோம். 

மத. நா… நான் வ…வர்ரேன். 

வீ. மஹாராஜா, உத்தரவு. 

[மதன்சிங்கை அழைத்துக்கொண்டு போகிறான்.]

உ. என்ன ஆச்சரியம்! நான் எத்தனையோ சிறந்த அரச குமாரர் களை யெல்லாம் மணஞ் செய்துகொள்ளும்படி வேண்டியும் தன் மனத்திற் கினிய மணவாளன் அல்ல என்று மறுத்தவள் இந்த தத்துவாய்ச் சடையனைத் தரணியில் மணக்கத் தன் மனம் இசைந்தனளா? எங்கே தாராபாய்? இங்கு நந்தவனத்திலிருப் பதாகச் சொன்னார்களே. எங்கே தாராபாய்? காணோம். அவள் தோழி யெங்கே ? துளசி ! துளசி !-ஒருவரையுங் காணோம். 

மறுபடியும் தாராபாய் வருகிறாள்.

தா. அப்பா என்னை யழைத்தீரா? 

உ. ஆம், அம்மா-இது உண்மைதானா ?

தா. எது அப்பா? 

உ. நீ குர்ஜர தேசத்து அரச குமாரனை மணஞ் செய்து கொள்ள ஒப்புக் கொண்டனை யாமே? 

தா. என் பாவமா! யார் சொன்னது உமக்கு? போயும் போயும் அந்தத் தத்தித் தத்துவாயனையா நான் மணம் புரிய ஒப்புக் கொள்வேன் ? இதென்ன விந்தை! 

உ. நினைத்தேன், நினைத்தேன்! ஏதோ சூது நடந்திருக்க வேண்டு மென்று. அந்தப் பயித்தியம் எதையோகொண்டு நீ விவாகத்திற்குச் சம்மதித்ததாக என்னிடங் கூறியது; அப்பொழுதே நான் உன் வாயினின்றும் நேரில் கேட்டாலொழிய நம்பமாட்டேனென்று கூறிவிட்டேன். 

தா. எதைக்கொண்டு அந்த அரசகுமாரன் அவ்வாறு எண்ணி உம்மிடம் கூறினார்? 

உ. அதுதான் எனக்குந் தெரியவில்லை. ஒரு வேளை உன்னுடன் நேரில் ஏதாவது பேசினனா? 

தா. ஒரு வார்த்தையும் பேசவில்லையே நான். 

உ. தான் நேரில் உன்னுடன் பேசி உன் சம்மதி பெற்றதாகக் கூறினனே! 

மறுபடியும் துளசிபாய் பின்புறமாக வருகிறாள். 

தா. அவ்வளவும் பொய். அந்தச் சனியன் முகத்தைப் பார்த்தது யார்? இதோ துளசிபாயைக் கேளுங்கள். 

உ. சரிதான், அந்த வீர்சிங்கினுடைய யுக்தியா யிருக்கும் இதெல் லாம். என்ன பொய்! ராஜகுமாரியை நேரில் கேட்டேன், ஒப் புக் கொண்டாள் என்று நேராக வாய் கூசாது பொய் பேசினனே!

து. பொய் யென்ன அதில் ? நான் ராஜகுமாரி யன்றோ? 

உ. நீ ராஜகுமாரியா ? துளசிபாய், சமாசார மென்ன? 

து. எனது பாட்டி என் முன்னோர்கள் பேபர் சக்கிரவர்த்தி காலத்தில் நரசிங்கபுரத்தில் அரசாண்டதாகச் சொல்ல நான் கேட்டிருக் கிறேனே. 

உ. இருக்கட்டும், இருந்தாலென்ன ? 

தா. ஓஹோ ! 

து. ஆகவே நான் ராஜகுமாரிதானே ? சற்று முன்பாக குர்ஜர ராஜ குமாரன் வந்து நேரில் என்னை விவாகஞ் செய்துகொள்ளும்படி மிகவும் வேண்டினார். நானும் ஒப்புக்கொண்டேன். உம் முடைய அனுமதியைக் கேட்கச் சொன்னேன். அதுதான் உம்மை வந்து கேட்டாற்போலிருக்கிறது. இதில் தவறு என்ன? பொய் யென்ன ? 

உ.தா. ஓஹோ! [நகைத்துக் கொண்டே] அப்படியா சமாசாரம்?

தா. நினைத்தேன், நினைத்தேன் நான்! 

[நகைக்கிறாள்.] 

து. உங்களுக் கென்ன நகைப்பா யிருக்கிறதோ? 

(திருமுகம் ஒன்றுடன் ஒரு சேவகன் வருகிறான்.) 

சே. ராஜாதிராஜனே, ஷா இன்ஷா மகம்மதுஷாவிட மிருந்து ஒரு சவார் இந்த நிருபத்தைக் கொண்டுவந்தான். 

[கடிதத்தைக் கொடுக்கிறான்.]

உ. என்ன அவ்வளவு அவசரமான காகிதம் ? ஷா இன்ஷாவிட மிருந்தா? சரி, நீ போ. 

(சேவகன் போகிறான்,கடிதத்தை வாசித்து நழுவ விட்டு அங்கிருந்த ஓர் ஆசனத்தின் மீது சாய்ந்து விடுகிறான்.) 

தா. அப்பா ! அப்பா ! என்ன சமாசாரம்? என்ன? 

து. என்ன ! என்ன ! மகாராஜா ! 

உ. ராஜ்யமுங் குன்றி, தேகபலமுங் குன்றி யிருக்கின்றேன்! நா னென்ன செய்யப் போகிறேன்? – ஈசனே! ஜகதீசனே! இதுவோ என் கதி?  (வருந்துகிறான்.) 

தா. அப்பா, அப்பா நீர் கண்ணீர் சொரியக் காதகி நான் கண்டு எப் படிச் சகிப்பேன் ? அப்பா,சமாசாரம் இன்ன தென்று கூறுமே. எனக் கொன்றுந் தோற்றவில்லையே. பேதை, பெண்பால் நான் என்ன செய்வேன்? 

உ. கண்மணி, நீ எல்லாப் பாஷையும் நன்றாய்ப் படித்திருக்கிறாய், அந்த மகம்மதியனிடமிருந்து வந்திருக்கிற விகிதத்தைப் பார்.

தா. (காகிதத்தை எடுத்துப் படித்துவிட்டு) அப்பா, இதென்ன அகி யாயம்! சக்ரவர்த்தியாயிருந்தால் எந்தக் கொடுமையையும் செய்ய லாமோ ? இந்த அதிகாரம் இவனுக்கு யார் கொடுத்தது ? [கடிதத்தைப் படித்துவிட்டு.]

உ. கண்மணி ! அந்தக் கொடிய அவுரங்கஜீப் காலத்தில் அப் பாத கன் ஏற்படுத்திய வழக்கம் இது. ராஜகுமாரிகளை யெல்லாந் தனக் கிஷ்டமான ராஜகுமாரர்களுக்கு மணஞ் செய்துகொடுக்கும்படி பலவந்தித்து வந்தான். அவனுக்குப் பிற்காலம் வந்த சக்ரவர்த் திகள் அக் கொடிய வழக்கத்தைப் பெரும்பாலும் விட்டனர்.இம் மடையன் இப்போது மறுபடியும் அப் பாழும் வழக்கத்தை ஆரம்பித் திருக்கிறான். ஐயோ! இருபது வருஷங்களுக்கு முன் இம்மாதிரி இந்த மகம்மதுஷா எனக் கெழுதி யிருக்க லாகாதா? நான் வயோதிகனானேன்! வயோதிகனானேன்! 

தா. அப்பா, நீர் எதற்கும் அஞ்ச வேண்டாம். இந்த மகம்மதுஷா வினால் என்ன முடியும்? இந்த மகம்மதுஷாவின் கட்டளையை நிறைவேற்றுவதைவிட நான் அக்னிப் பிரவேசமாகி அமரருலகை அரைக் கணத்தி லடைவேன். அப்பா, நீர் கொஞ்சமும் அஞ்ச வேண்டாம். இனி நாம் அரைக் கணமுந் தாமதிக்கலாகாது. எப் படியும் நாம் மறுத்தவுடன் ஜெயசிங் மகம்மதுஷாவின் உத்தரவு பெற்றவனாய், அவனது சைனியங்களைக் கொண்டு பலாத்காரஞ் செய்ய வருவான். நாம் நமது க்ஷத்ரிய வீரர்களை யெல்லாம் விரைவில் ஒருங்கு சேர்க்கவேண்டும். 

உ. ஐயோ! அவர்களது சைனியங்க ளெங்கே ! நமது சைனிய மெங்கே ! 

தா. அப்பா, என்ன அப்படிக் கூறுகிறீர் ? தனது தாய் தனது தங்கை, தனது தாரம், இவர்களுடைய மானத்தைக் காப்பாற் றும் பொருட்டு தன்னுயிரை விடத் தயாராயில்லாத க்ஷத்திரிய னும் நமது நாட்டி லிருக்கிறானா ? 

உ. இந்த மகம்மதிய சைனியங்களுக்கு நான் அஞ்ச வில்லை. அவர் களுக்குதவியாய், அவர்கள் சேனாதிபதியாய், இந்த ஜெயசிங் இருக்கும் வரைக்கும் நாம் அவர்களை ஜெயிப்பது கடினம், கடி னம் !- சரி, வேறு வழியில்லை. விருதாவாக நம்முடைய சுத்த வீரர்களை மடியும்படிச் செய்வானேன்? நாம் இருவரும் உயிர் விடுவோம். பிறகு மகம்மதுஷா இந்தக் கட்டளையை நிறை வேறச்செய்யட்டும். 

தா. ஆம், அப்படியே செய்வோம். பயனொன்று மில்லாமல் அவர்கள் உயிரை எல்லாம் பலி கொடுப்பானேன் முடிவை யறிந்து ? து. ஐயோ, சாமி! இவ்வளவு கஷ்டமேன் ? பேசாமல் அந்த ஜெய சிங்கைக் கலியாணஞ் செய்துகொண்டாற் போகிறது. 

தா. போ! நீதான் கலியாணஞ் செய்துகொள் போ. அப் பாதகனை! து. செய்துகொள்கிறேன், என்ன கெட்டுப்போகிறது? தா. அப்பா-அப்பா, எனக் கொரு யுக்தி தோற்றுகிறது. அந்த ஜெயசிங் முதலானவர்களுக்கு என்னைத் தெரியாது. நமது துளசி பாய்க்கு என்னைப்போல் வேஷந் தரித்து, இவள்தான் தாராபாய் என்று கூறி, நீர் அந்த ஜெயசிங்கிற்கு இவளை விவாகஞ் செய்து கொடுத் தனுப்பிவிடுமே? 

உ. ஆம், ஆம்! – துளசிபாய், என்ன சொல்கிறாய் ? 

து. ஜெயசிங் மதனசிங்கைவிடப் பெரிய ராஜகுமார னல்ல ? அப்படியே ஆகட்டும், எனக் கொரு ஆக்ஷேபனையு மில்லை. 

தா. அதுவுமல்லாமல் ஜெயசிங்கிற்குத் தத்துவா யில்லை.

து. ஆம், ஆம்,சரிதான். 

உ. சரி,- நாம் ஒரு க்ஷணமுந் தாமதஞ் செய்ய லாகாது. உடனே போய் இதற்குத் தக்க ஏற்பாடுகளை யெல்லாஞ் செய்ய வேண் டும். வாருங்கள் போவோம் அரண்மனைக்கு. [போகிறார்கள்] 

மூன்றாவது காட்சி

இடம் அரண்மனையைச் சேர்ந்த தோட்டம். காலம் – காலை

ஜுல்பிகர்கானும், மதன்சிங்கும், வீரசிங்கும், வருகிறார்கள்.

ஜூ. அரே! தும் கோன் ? நீ யார் ? என்னாத்கி நம்பளே இங்கே கூப்டான் ! 

மத. நா… நானு.. கு… 

ஜு. அரே! கியா ஜபான் பேசரா? 

மத. கு… குர்ஜ… 

ஜூ. அரே, நிம்பள்கி பேசரது நம்பள்கி தெரியரான் இல்லே.

மத. கு… குர்ஜர ரா … 

ஜூ. அரே திவானா! நம்பள் கிட்டே பேசரா, யா, நம்பள்கி நங்கி காட்ரா? 

வீ. இழவு! நீ சற்று பேசாம லிரும். நான் சொல்கிறேன் கான் சாஹெப், இவர் குர்ஜர தேசத்து ராஜ குமாரன். 

ஜூ. அரே! அத்தெ முன்னியே யேன் சொல்லி அய்வுலே ! நம்பள்கி நங்கி காட்ரா? 

வீ. இல்லை, இல்லை – கொஞ்சம் தத்துவாய். 

ஜு. தத்துவாய்கி இர்க்கறா! அரேரேரேரேரே! இப்போ நம்பள்கி தெரிஞ்சான்.– அச்சா! தத்துவாய், நம்பள்கி என்னாத்கு கூப்டான்? 

மத. நா…நானு… 

ஜு. அரே! சுப்ரஹோ, தத்துவாய்! [வீர்சிங்கைப் பார்த்து] நீ பேசரான். 

வி. இந்தத் தேசத்து ராஜகுமாரியைக் கலியாணஞ் செய்து கொள்ள விரும்புகிறார். 

ஜூ. அரே ரேரே! நம்பள்கி கண்ணாலம் பண்ணிக்ரா! வாணாம், வாணாம்! நம்பள்கி ஏக் ஹஜார், ஏக் ஆயிரம் பீபிங்கோ இர்க் ராங்கோ, நம்பள்கி வாணாம் பாய். 

மத. எ…எனக்கு. 

ஜு. ஓ! தத்துவாய்க்கி கண்ணாலம் பண்ணிக்ரா? 

வீ. ஆம், ராஜ குமாரியுஞ் சம்மதித் திருக்கிறார்கள். 

ஜு. அரே ரே! ராஜகுமாரி கேட்டான், ஷாதீகி மின்னே? நம்பள் கிட்ட ஜூட்பாத் பேசரான்? 

வி. இல்லை, இல்லை வாஸ்தவம். நீங்கள் வேண்டு மென்றால் மஹாராஜாவைக் கேட்டுப் பாரும். வாஸ்தவம்; இது எங்கள் ஹிந்து வழக்கந்தான். 

ஜூ. ஏ,கியா வள்கம் ? தூத்தேரி ! ஹிந்து லோக் சோப் பண்ணீகியிர்க்கிரா ? 

வீ. [தனக்குள்] நீ, யெதையாவது சொல்லி யழு. எங்கள் வேலை முடிவதைப் பார்க்க வேண்டும்.—கான் ஸாஹெப், நீங்கள் என் னவோ ஷா இன்ஷாவிடமிருந்து ராஜகுமாரியை ஜெயசிங்கிற்குக் கலியாணம் செய்யும்படி உத்தரவு கொண்டு வந்திருப்பதாகக் கேள்விப்பட்டோம். 

மத. ஆ… ஆகவே நீ…நீங்க 

ஜூ. அரே, தூத்தேரி! தத்துவாய், பேசாத்! 

வீ. ஆகவே தாங்கள் பெரிய மனசு பண்ணி- 

ஜூ. அரே, சுவர்! நம்பள்கி திட்ரான்? மாரோ! நம்பள்கி பெரிய பண்ணி!

[கத்தியை உருவுகிறான்.]

வி. அப்படியல்ல, கான் சாஹெப், கேளுங்கள் கொஞ்சம், அவசரப்படவேண்டாம். கத்தியை உரையிற் போடுங்கள். தாங்கள் பெரிய மனது செய்து, இந்த ராஜகுமாரியை எப்படியாவது இவருக்குக் கலியாணஞ் செய்து வைக்க வேண்டும். 

ஜு. அரே, கியா பாத்போலே? நம்போ ஷா இன்ஷாகி நவ்கர், உன்கி இவன்கி, தத்துவாய்கி நவ்கர்? 

வீ. நீங்கள் பெரிய கான் சாஹெப், தாங்கள் அப்படிச் சொல்லலாமா? இவருக்குக் கலியாணஞ் செய்து வைத்தால் உங்களுக்கு ஏதாவது உதவி செய்வதாகச் சொல்கிறார். 

ஜூ. அரே ரே, முடியாத். இவன்கி ஷாதி பண்ரா, நம்பள்கி சத்து பூட்ரா, ஷா இன்ஷா நம்பள் தலெ வெட்டிப் பூட்ரான்.

வி. இல்லை, உங்களுக்கு நூறு பொன் இதற்காகக் கொடுக்கிறார். ஷா இன்ஷாவிற்கு ஏதாவது பொய் சொல்லிவிட்டால் போகிறது. 

ஜூ. நை, நை, நூறு பொண்ணுகி ஒரு ஜூட்பாத் சொல்றான்? நம்பொ பெரியவங்கோ அப்படி சொல்கூடாத் சொல்ராங்க.

வீ. ஆனால் இருநூறு பொன் வைத்துக் கொள்ளும். 

ஜூ. நை, நை, கிதாப்மே தேகோபாய். எங்கோ கிதாப்மே சொல் ரான் அஞ்சி நூறு பொண்ணுக்கி ஜூட்பாத், பொய்,பேசாதே இண்ணு 

வீ. ஆனால் எத்தனைப் பொன்னுக்குத்தான் பொய் பேசலாமென்று அந்த புஸ்தகத்தில் எழுதி யிருக்கிறது ? 

ஜு. அச்சா, ஏக் ஹஜார், ஏக் ஆயிரம் பொண்ணுகி ஒரு பொய் பேசலாம் இண்ணு ஹஸரத் எய்தி யிருக்கிறாங்கோ. 

வீ. சரி, அப்படியே கொடுக்கிறோம். எப்படியாவது இந்தக் கலி யாணத்தைப் பூர்த்தி செய்யவேண்டும். 

ஜு. அச்சா, யோச்னே பண்ராங்க நம்போ – பொண்ணெங்கே ?

மத. பொ… பொண்ணா ? 

வீ. பொன் ! நீர் பேசாம லிரும். கான் சாயப், அதோ ஜெயசிங் முதலானவர்கள் வருகிறாற்போ லிருக்கிறது. இந்தப் பக்கமாய் வாரும். அங்கே பொன்னை வைத்துக்கொண்டு தயாரா யிருக் கிறான் எங்கள் சேவகன். மற்ற விஷயங்களை அங்கே பேசிக் கொள்வோம். 

[மூவரும் ஒரு பக்கம் போகிறார்கள்.] 

[மற்றொரு பக்கம் செயிட்சிங்கும், ராஜகுமாரனைப்போல உடை தரித்த மதால்சிங்கும், வேலையாள் போல வேடம் பூண்ட ஜெயசிங்கும் வருகிறார்கள்.]

ஜெ. அருகில் வந்து விட்டோம். ஜாக்கிரதை, நான் சொன்ன தெல்லாம் ஞாபக மிருக்கட்டும்.

செ. இதென்ன? நம்மையிங்கு வரச்சொல்லிவிட்டு ஜுல்பிகர்கான் யாரையோ அழைத்துக்கொண்டு அந்தப் பக்கம் போகிறான். மஹாராஜா வரும் சமயமாயிற்று. நாம் ஜாக்கிரதையா யிருக்க வேண்டும். நான் சொன்னதெல்லாம் ஞாபக மிருக்கிறதா ? 

மதா. ஞாபக மிருக்குது, இருக்குது. 

செ. சரி.- மதால்சிங் ! 

ம.ஜெ. ஏன். 

செ. ஐ ஐ யோ ! கெட்டது குடி! இது தானா எல்லாம் ஞாபக மிருக்கிறது? மதால்சிங் என்று அழைத்தால், நீ ‘ஏன்’ என்று சொல்லக் கூடாது? ஜெயசிங் என்றால் தான் ‘ஏன்’ என்று சொல்ல வேண்டுமென்று எத்தனை முறை சொல்லி யிருக்கிறேன் !

ஜெ. நீ மதால்சிங் என்பதை முற்றிலும் மறந்துவிடு; இங்கேயிருக்கும் வரைக்கும் நீதான் ஜெயசிங் என்று எண்ணிக்கொள். அவர்களே திரில் இந்த மாதிரி பேசிவிட்டால் தீர்ந்தது அதனுடன்; அப்புறம் ராஜகுமாரி உன்னை மணஞ் செய்துகொள்வதெல்லாம் பறந்து போம். 

மதா. இல்லெ, இல்லெ. இனிமேலே தப்பு செய்யமாட்டேன். மன்னியும் அரசே. 

ஜெ. பார்த்தையா மறுபடியும்! ‘அரசே’ என்று என்னை யழைக் கிறாயே! நீதானே அரசன், ஜெயசிங்; நான் அல்லவோ உன்னை அரசே யென்றழைக்க வேண்டும்? 

மதா. அட்ட்ட்டா ! மறந்துப்பூட்டேன். இனிமேனே மறக்க மாட்டேன். நான் ஜெயசிங், நான் ஜெயசிங், நான் ராஜா, நான் ராஜா ! நீர் மதால்சிங், நீர் மதால்சிங்! 

ஜெ. அதோ உதயசிங் முதலானவர்கள் வருகிறாற் போலிருக்கிறது. ஜாக்கிரதை ! 

[சற்று தூரமாய் நிற்கிறான்.] 

மதா உம்-உம்.மறந்து பூட்டேனே. மஹாராஜா வந்தவுடனே என்ன செய்ரது? 

செ. ஐயோ ! இழவு ! அவர் என்ன செய்கிறாரோ அப்படியே செய். பத்திரம் ! 

மதா. உம்-உம். 

செ. நன்றாக முடுக்காய் நில். 

மதா. உம்-உம். 

[முடுக்காக நிற்கிறான்.]

சற்று தூரத்தில் உதயசிங்கும், ஜுல்பிகர்கானும்: மதனசிங்கும், வீர்சிங்கும் வருகிறார்கள். 

ஜூல்பிகர்கான், செயிட்சிங், மதால்சிங் இம்மூவரும் ஒருவரை யொருவர் வந்தனஞ் செய்கிறார்கள். 

செ. உதயசிங் மஹாராஜா, இவர்தான் ஜெயசிங். [மதால்சிங்கைக் காட்டுகிறான்.) 

ஷா இன்ஷா ஹுகும்பிரகாரம் ஜெயசிங்வந்திருக்கிறார். ஷா இன்ஷா உத்தரவு தங்களுக்கும் வந்திருக்கலாம். 

உ. ஆம்,வந்திருக்கிறது. (பெருமூச் செறிகிறான்.) 

மதா. [ஜெயசிங் சமீபம்வந்து] நான்கூட! மூக்குசிந்த வோணுமோ?

ஜெ. [மெல்ல] இல்லை,இல்லை. பேசாம லிரு. 

செ. இனி காலதாமதஞ் செய்யாமல் உடனே கலியாணத்திற்கு நாள் குறித்துக்கொண்டு ஆரம்பஞ் செய்ய வேண்டியது தான். இவர் சீக்கிரம் நிஜாம் மீது படையெடுக்கும்படி உத்திரவு பெற்றிருக்கிறார்: ஆகவே- 

மதா. [ஜெயசிங்குடன்] என்னா, நானா நிஜாமோடே சண்டே போடணும்? 

ஜெ. அப்படி ஒன்றுமில்லை, பயப்படவேண்டாம். பிறகு சொல்லுகிறேன். ஆமாமென்று சொல். 

மதா. ஆம், ஆம். நான் சீக்கிரம் போகணும், சீக்கிரம் விவாகம் ஆகணும். 

ஜு. அரே, ஷாதீகி அவ்சரம்? கொஞ்சம் பொறு, டைரோபாய்.

வீ. [முன் வந்து] ஐயா, செயிட்சிங், இதில் கஷ்டம் ஒன்று நேர்ந் திருக்கிறது. ஷா இன்ஷா உத்திரவு இங்கு வருவதற்கு முன் குர்ஜர மன்னன் புதல்வராகிய இவருக்கு ராஜகுமாரியை மணஞ் செய்து கொடுக்கும்படி ஏற்பாடாய் விட்டது. ராஜ குமாரியின் அனுமதியை நேராகப் பெற்றிருக்கிறார். மதனசிங் மஹாராஜாவும் சரிதானென்று ஒப்புக்கொண்டிருக்கிறார்.

மதா. ஏ ! என்னாதது? 

செ. கொஞ்சம் பொறும்; அப்படியானால் ஜெயசிங்குடன் நான் இதைப்பற்றிப்பேசி, அவர் எண்ணத்தைத் தெரிவிக்கிறேன் உங்களுக்கு – அரசே இப்படி வாரும். 

[ஜெயசிங் இருக்குமிடத்திற்கு மதால் சிங்கை அழைத் துச் சென்று ஒரு புறமாக ஜெயசிங்குடன்.] 

ஜெயசிங், நமக்கு நல்ல போக்கு அகப்பட்டது. அந்த வீர்சிங் கூறியதைக் கேட்டனையல்லவா ? இது தான் சாக்கென்று அந்தக் குர்ஜர மன்னன் புதல்வனையே இந்த ராஜகுமாரி மணக்கும்படி விட்டுவிட்டு, நமது நகரம் போய்ச் சேர்வோம். மதா. என்னாது ! நானு இவ்வளவு கஷ்டப்பட்டதுக்கு சும்மா போரதோ? மாட்டேன். 

ஜெ. ராஜகுமாரிக்கும் மதனசிங்கிற்கும் முன்பே விவாகம் நிச்சயித் திருக்கிறார்களாமே, ராஜகுமாரியே அவனை மணஞ் செய்து கொள்வதற்கு இசைந்திருக்கின்றாளாமே, நாம் என்ன செய்யக் கூடும்? 

மதா. அதெல்லாம் ஒதவாது நான்போய்ச் சொல்றேன். 

[ஜுல்பிகர்கான் சமீபம் சென்று.]

ஜூல்பிகர்கான் சாயபு ! ஷா இன்ஷாவே எனக்கு உத்திரவு கொடுத்திருக்கிறாரு ராஜகுமாரியெ கண்ணாலம் பண்ணிக்கும் படி. இவங்கோ என்னமா கண்ணாலம் பண்ணிக்கலாம்?

மத. ரா… ராஜ கு….குமாரியே எ …. என்னே க….க கண்ணாலம் பண்ணிக்கிறேண்ணு உ… உத்திரவு கொ.. கொடுத்திருக்கிரா . இ …இவங்க என்னமா க….கண்ணாலம் ப .. பண்ணிக்கலாம். 

மதா. அதெல்லாம் ஒதவாது நான் ஜெயசிங் ! நான் ராஜ குமாரன்! எனக்கு ஷா இன்ஷா உத்ரவு குடுத்திருக்குறாரு. நான் தான் ராஜகுமாரியெ கண்ணாலம் பண்ணிக்கணும். 

மத. நா.. நான் கு.. குர்ஜர ரா …. ராஜ கு… குமாரன், ரா .. ராஜ… கு… குமாரியோடே நே.. நேரா பே…பேசனேன். அவளே உ …. உத்ரவு கு… குடுத்திருக்கிறா. நா … நான்தான் க கண்ணாலம் ப … பண்ணிக்கணும். 

மதா. அது ஒதவாது, அது ஒதவாது, நான் தான் கண்ணாலம் பண் ணிக்கணும். நான் எவ்வளவுக்கஷ்டப்பட்டு வந்திருக்குறேன்!

மத. பாக்கலாம், பா பாக்கலாம்! நா… நாம் போ போயி ம… மகம்மதுஷா உ… உத்ரவு வா …. வாங்கி வர்ரேன்.

ஜு. அரேரேரே ! லடாய்! டைரோ கியா சமாசார்? 

மதா. ஜூல்பிகர்கான் சாயபு, நீங்கதான் சொல்லுங்க. நான் தானே ராஜகுமாரியெ கண்ணாலம் பண்ணிக்கணும் ? ஷா இன்ஷா எனக்குத்தானே உத்ரவு குடுத்தாரு? 

மத. ஜு ஜூல்பிகர்கான் சா… சாயபு, நா..நான் தானே ரா…ராஜ கு… குமாரியெ க.. கண்ணாலம் ப.. பண்.. ணிக்கணும் ? ரா … ராஜ.. கு குமாரி யெ …. யென்னெ தானெ க… கண்ணாலம் ப…பண்ணிக்கிறேண்ணா?

ஜு. அரேரே! சமாதான், சமாதான். நம்போ ஏக்பாத்சொல்ரான். [மதால் சிங்கைப்பார்த்து] 

நீ ராஜ்குமார்கி கண்ணாலம் பண்ணிக்கிறான்? 

மதா. ஆமாம். 

ஜு. [மதனசிங்கைப் பார்த்து) நீ ராஜ்குமார்கி கண்ணாலம் பண் ணிக்கிறான் ? 

மத. ஆ ஆமாம்

ஜு. அரேரேரே! ரெண்டுபேர், வண் ராஜ்குமாரி, எப்படிக் கண்ணாலம் பண்ரா? 

மதா. அத்தொட்டு நான்தான் கண்ணாலம் பண்ணிக்கணும். 

மத.  ஊம், ஊம்.- நா…. நான் தான் க கண்ணாலம் ப …. பண்ணிக்கணும். 

ஜு. அரே, நம்போ தீர்மானம் பண்ரா-எக் அவ்ரத், எக்மரத், நீங்க ரெண்டுபேர் சண்டே போட்ராம், வர்த்தேன் சத்துப்பூட்ரான், வர்த்தென் கண்ணாலம் பண்ணிக்கரான். 

மதா. நான் கண்ணாலம் பண்ணிக்றேன், அவரே செத்துப்பூடச் சொல்லுங்க. 

மத. அ…அவரே செ…செத்துப்பூடச் சொ….. சொல்லுங்க, நா… நான் க… கண்ணாலம் ப.. பண்ணிக்றேன். 

ஜு.  அரேரேரே, வாய்லே சத்துப்பூட்ரான் பாய்? ரெண்டு பேர் சண்டே போட்ரான். வர்த்தன் சத்துப் பூட்ரான் வர்த்தன் கண்ணாலம் பண்ணிக்ரான்.-உடைசிங், கியா போல்தா ? நாயம் ? 

உ. நல்ல நியாயம்! அப்படியே செய்வது, “நாளைத்தினம் காலை இங்கே இவ் விருவர்களும் கட்க யுத்தஞ் செய்ய ஏற்பாடு செய் வோம். ஜெயிப்பவன் ராஜகுமாரியை மணம் புரிவது இதுவே தக்க ஏற்பாடு. 

ஜு.  பொஹுத் அச்சா! ஜெயசிங் ! மதனசிங்! நாளெகாலமே ஆட் கண்ட்டேகு தயார். மைஹுகும் தியே, போங்கோ, இப்போ சண்டெ வாணாம். 

மத. வீ … வீர்சிங். நா…நானா சண்டெ போ…போடணும்? 

வீ. [ஒரு புறமாக மதனசிங்குடன்] ஒன்றும் பேசாதீர், வெட்கக் கேடு. வாரும் சொல்லுகிறேன். உத்தரவு பெற்றுக்கொண்டு வாரும். 

மத. நா.. நான் வ… வர்ரேன். 

ஜு. ஹுஷார், நாளெக்கி ஆட் கண்ட்டேகி தயார். 

மத. ஆ.. ஆமாம். (வீரசிங்குடன் போகிறான்.) 

மதா. நான் இப்பவே சொல்லிடுரேன் நாளெக்கி சண்டெக்கி வரமாட் டேண்ணு, நான் கண்ணாலம் பண்ணிக்க வந்தேனா, சண்டை போட வந்தேனா? 

ஜெ. [ஒரு புறமாக மதால்சிங்குடன்] வாயை திறக்காதே. என் மானம் போகிறது. நீதான் ஜெயசிங் கென்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாம் சொல்லுகிறேன் அப்புறம். உத்தரவு பெற்றுக்கொண்டு வா சீக்கிரம். 

மதா. நான் வர்ரேன். 

ஜு. ஹுஷார், ஆட் கண்ட்டேகி தயார். 

மதா. தயார் தான் [ஜெயசிங் செயிட்சிங் இவர்களுடன் போகிறான்.] 

ஜு. உடைசிங், அச்சா தீர்மான் ? நம்போ போரான். நிம்பள் தேவடிமே அச்சா ஷராப் இர்க்ரா சொல்ராங்க, அத்கே நம்பள் கொஞ்சம் மாத்ரி பாக்கரா : கியா போல்தா? 

உ. ஆனால் வாரும் போவோம். (இருவரும் போகிறார்கள்.] 

நான்காவது காட்சி

இடம் – அரண்மனைத் தோட்டத்தில் ஓர் வெளி. காலம் – காலை

தோழியைப்போல் உடை தரித்த தாராபாயும், ராஜ குமாரியைப்போல் வேடம் பூண்ட துளசிபாயும் வருகிறார்கள். 

தா. துளசிபாய், நான் இதுவரையில் சொன்னதெல்லாம் நன்றாய் ஞாபக மிருக்கட்டும், நீ மிகவும் ஜாக்கிரதையாய் நடந்து கொள்ளவேண்டும். அவர்கள் முன்னிலையில் உன்னை யின்னவ ளென்று யாராவது அறிந்து கொண்டார்களோ,தீர்ந்தது என் கதி ! நீயும் ராஜகுமாரர்களில் ஒருவனை மணம்புரிய முடியாது. தெரியுமா? 

து. தெரியும், தெரியும் தாராபாய். 

தா. சரி, சரி; இனிமேல் என்னைத் தாராபாய் என்று கூப்பிடாதே. அவர்களெல்லாம் வரும் சமய மாயிற்று. இனி யென்னைத் துளசிபாயென்றே அழை. நான் உன்னைத் தாராபாயென்றே அழைப்பேன். 

து. சரிதான், அப்படியே ஆகட்டும் தாராபாய். 

தா. பார்த்தையா! சொல்லிக்கொண்டே யிருக்கிறேன், இதற்குள் மறந்துவிட்டனையே. என்னைத் துளசிபாயென்றே அழை.

து. ஒரு சந்தேகம்.-தாரா-உம் — துளசிபாய், நான் ராஜகுமார னைக் கலியாணஞ் செய்துகொண்ட பிறகு நான் அவரை என்னவென் றழைப்பது? 

தா. ஐயோ, சுவாமி ! இதற்குள் அதற் கென்ன அவசரம் ? கலி யாணந்தா னாகட்டுமே. பிறகு அதெல்லாம் சொல்லிக் கொடுக் கிறேன். 

து. கொஞ்சம் இப்பொழுதுதான் சொல்லேன். 

தா. பிராணநாதா என்றழைக்கவேண்டும். 

து. என்ன? புராணநாதாவா? 

தா. புராணநாதா அல்ல-பிராணநாதா 

து. பிராணநாதா பிராணநாதா, தெரியும்,சரி, அவர்கள் வந்து விடப்போகிறார்கள். மாலையைக் கொடு என்னிடம்.

தா. இதற்குள் என்னத்திற்கு? மாலை போடவேண்டிய சமயத் தில் கொடுக்கிறேன், அதுவரைக்கும் தோழியாகிய நானல் லவோ வைத்திருக்கவேண்டும். அதிருக்கட்டும்.-மறந்தேன் பார்த்தையா, ஜெயிக்கும் ராஜகுமாரன் கழுத்தில் மாலையை யெப்படிப் போடவேண்டும் தெரியுமா உனக்கு ? 

து. அது கூடவா தெரியாது? இதோ அதைக் கொடு காட்டுகிறேன்.

தா. எதோ பார்ப்போம். [மாலையைக் கொடுக்கிறாள்.]

து. [மாலையை வாங்கிக்கொண்டு] எதோ கழுத்தைக் காட்டு. 

[தப்பாகப் போடுகிறாள் தாராபாய் கழுத்தில்.] 

தா. நினைத்தேன், நினைத்தேன்; அம்மட்டும் இப்பொழுதாவது ஞாபகம் வந்ததே துளசிபாய், இம்மாதிரி செய்தையோ எல் லோரும் நகைத்துவிடுவார்கள். சமாசாரமும் வெளியாகி விடும். அப்புறம் எந்த ராஜகுமாரனும் உன்னை ஏறெடுத்தும் பார்க்கமாட்டான், 

து. பின்பு நான் என்ன செய்வது ? நீ சொல்லிக்கொடு. 

தா. [மாலையை வாங்கிக்கொண்டு] ஆம், ஆம். இப்பொழுது சொல்லிக் கொடுக்கிறேன், பார்த்துக்கொள். ஜெயிக்கும் ராஜகுமாரன் உன்முன் வந்து நிற்பான், நின்றவுடன் மெல்ல எழுந்திருந்து, மாலையைக் கழுத்தில் இப்படிப் போட வேண்டும். (கழுத்தில் போட்டுக் காட்டுகிறாள்.) 

முகத்தைக் கொஞ்சந் திருப்பிக் கொள்ளவேண்டும்.

து. முகத்தை யேன் திருப்பிக் கொள்ளவேண்டும்? 

தா. இதென்ன? ஒரு புருஷனை முதல் முதல் பார்ப்பதென்றால் ஏறெடுத்துப் பார்க்கலாமா? நாணமா யிராதா ? 

து. சரிதான் சரிதான், தெரியுது தெரியுது 

தா. என்ன, ஒருவரையுங் காணோம் இன்னும்? மகாராஜா நம்மை முன்பே போயிருக்கச் சொன்னாரே இங்கே, 

து. ஒரு வேளை வராமற்போனால்? 

தா. உம் – வராமற்போனால் – வராம லிருப்பார்கள்! 

து. வந்தால்? 

தா. வருவார்கள். 

து. வந்தால் சண்டை போடவேண்டுமேயென்று யோசிக்கிறேன்- சண்டைபோடாமல் கலியாணம் நடக்க மார்க்க மில்லையா?

தா. என்ன மார்க்கம் ? இரண்டு ராஜகுமாரர்க ளிருக்கின்றார்களே இரண்டு பெயரும் உன்னை யெப்படி மணம் புரிவது?

து. ஆம், ஆம் அது ஒரு கஷ்டமிருக்கிறது. 

தா. சண்டை போட்டால் உனக் கென்ன கவலை? எப்படியும் ஒரு வன் ஜெயிக்கப்போகின்றான். 

து. இரண்டு பெயருந் தோற்றுப்போய் விட்டால்? 

தா. இரண்டு பெயரும் எப்படித் தோற்றுப்போவது ? 

து. இரண்டு பெயரும் செத்துப்போய் விட்டால்? நான் என்ன செய்வது ? 

தா. அப்படி ஒன்றும் இராது, பயப்படாதே, அதோ வருகிறார்கள் பிதா முதலானவர்க ளெல்லாம், ஜாக்கிரதை. 

உதயசிங், ஜுல்பிகர்கான், செயிட்சிங் வருகிறார்கள். 

ஜு. அரே ! ஆட் கண்ட்டே பஜே. இன்னம் வர்த்தன்கி காணோம். அச்சா, உடைசிங், நம்பள்கி இங்கே உக்கார்ரா, ராஜ்குமாரி அங்கே உக்கார்ராங்கோ, தமாஷா தேக்னேகு ; ராஜ்குமாரிகி நாஞ் சொன்ன தெல்லாம் சொன்னான்? 

உ. சொல்லி யிருக்கின்றேன். 

சமீபமாக ஜெயசிங் தன்னைப் பின்தொடர்ந்து வர, முதுகிலும் மார்பிலும் இரண்டு பெரிய கேடயங்களைத் தரித்துக்கொண்டு மதால்சிங் வருகிறான். வந்து எல்லோரையும் வணங்குகிறான். 

ஜு. அரேரேரே ! பாய் ! பூதம்கி வர்ரான் ! அரே, பாய்,சலாம், சலாம் ! ஏ கியா ? இது என்னா ? 

மதா. கேடயம்! 

ஜு. கேட்யம் இத்தனே பெரிஷ் இருக்றான் ?–அரேரே, பின்னாலே என்ன இர்க்குது? 

மதா. இன்னொரு கேடயம். 

ஜு. அரே, கேட்யம் முதுவுலெ கூட இர்க்றான் !

மதா. சுத்த வீரன் முதுவு எதிரிக்குத் தெரியக் கூடாதே! 

ஜு. அரேரேரே, ஜெயசிங், அச்சா! படே சூரன்கி இருக்றான் நீ, இப்ப கொஞ்சம் மூஞ்சி தெரியிரான், கேட்யம் கொஞ்சம் பெரிஷா யிர்ந்துதோ ரொம்ப நண்ணா யிர்க்றான். ஆமே, ஆமே பொலெ யிர்க்றான்! 

மதா. மதனசிங் எங்கே ? 

ஜு. அவன்கி சீக்ரம் வர்ரான், நீ போயி சண்டே போட்ர எடத் திலே நிக்றான். 

மதா. [ஜெயசிங்கைச் சற்று தூரமா யழைத்துச் சென்று] மதனசிங் இன்னும் வர்லெ, ஒருவேளே வராப்போனா? 

ஜெ. நல்ல தாச்சுது. உனக்குத்தான் ராஜகுமாரி. 

மதா. ஒருவேளெ வந்தா? 

ஜெ. சண்டை செய்துதான் தீரவேண்டும். நீ எதற்கும் பயப் படாதே. அவன் பெரும் பயங்காளி, சண்டை போடவே தெரியாது, எதற்கும் நா னிருக்கிறேன், தைரியமா யிரு. 

மதா. ஆமாமாம். நீங்க இப்படியே தயிர்யம் சொல்லிக்கி னிருங்க பக்கத்திலே இர்ந்துக்கினு, இல்லாப்போனா என் தயிர்யமெல் லாம் கறெஞ்சிப் பூடுது – ஒரு சந்தேகம், ஒருவேளெ நான் சண்டெ போடாப்பூட்டா? 

ஜெ. வெட்கக்கேடு ! என் மானமெல்லாம் போம். நான் இருக்கிறேன் பயப்படாதே எதற்கும். 

மதா. ஒரு வேளெ நான் சண்டெயிலே தோத்துப்பூட்டா, எனக்குப் பதிலா நீங்க செத்துப்பூடமாட்டிங்க, அல்ல? 

ஜெ. உம். தோற்காம லிருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன். மதா.ஏ, இன்னொரு சந்தேகம், ஒரு வேளே அவன் சமாதானத்துக்கு வந்தா ? 

ஜெ. வரமாட்டான் அவன். 

மதா. வந்தா? சும்மா உட்டூடலாம், பாவம்! பொழெச்சிப் போவுட்டுமே. 

முதுகிலும் மார்பிலும் இரண்டு பெரிய கேடயங்களைத் தரித்துக் கொண்டு மதனசிங் வீர்சிங்குடன் வருகிறான். 

வீ. அதெல்லாம் உதவாது, எப்படியும் சண்டை போட்டுத்தான் தீரவேண்டும். 

ஜு. அரேரேரே! இவன்கிகூட ஆமெ போலெ வர்ரான்! அரே பாய் நீங்க ரெண்டு பேரும் பந்தியம் போட்டான் எவன்கி கேட் யம் பெரிசிண்ணு? – அச்சா, ரொம்ப வஹத் ஹோகயா, சண்டெக்கி ஆரம்பம் பண்ரா. 

மத. (நடுங்கிக் கொண்டு) கொ கொஞ்சம் பொ…பொறுக்கணும். 

ஜு. அரே, பாய்! கால் நடுக்றா? பயம் இருக்றான் கியா ?

மத. இல்லெ.இல்லெ,கொ… கொஞ்சம் வா….. வாய்வு. 

ஜு. ஒ! இவன்கி பாத்து பயப்பட்ரா ? — அரேரேரே ! இவன்கி கூட கால் நடுக்றா? 

மதா. இல்லெ, இல்லெ, மயக்கம். 

ஜு. மயக்கம்கி சொல்றான், நான் நம்புறான் இல்லெ.

மத.  [வீரசிங் கையைப் பிடித்துக்கொண்டு] நா…நான். [ஒருபுறமாக அழைத்துச் செல்கிறான்.) 

வீ. உம். என்ன? 

மத. நா… நான்- 

வீ. நீர் என்ன, சீக்கிரம் சொல்லும், நேரமாகிறது. 

மத. நா.. நான் ஒ… ஓடி.. 

வீ. என்னது ஓடி ? 

மத. இ… இல்லெ நா… நான் அ… அதல்ல. 

வீ. பிறகு என்ன ? 

மத. நா… நான் சொ… சொன்னது- தெ.தெரியலே, நா . நான்-

வீ. தெரியவில்லை எனக் கொன்றும்; சீக்கிரம் சொல்லும், நேர மாகின்றது. அவர்க ளெல்லாங் காத்துக் கொண்டிருக்கிறார்கள். 

மத.  நா…நானு எ…என்ன சொ… சொல்ரே. நா… நானு… ஓ… ஓடிப்போ- 

வீ. ஓடிப்போவதாவது? என்ன சமாசாரம்? இனி அதெல்லாம் உதவாது. 

மத. அதாம், அதாம்,நா… நான் ஓ…ஓடிப் போ….போவமா… மாட்டேனல்லா? 

வீ. ஆமாம், ஆமாம், ஓடிப்போகமாட்டீர். 

ஜு. அரேரே, பாய், மதனசிங், ரொம்ப நாழி ஆய்பூட்டா, ராஜ் குமாரி காத்துக்னு இருக்கிறாங்கோ இங்கே, அங்கே நீ கதெ பேசரா? வா. இப்படி நில். ரெண்டு பேருங் கேக்ரா ; நான் வண்,ரெண்ட், மூண், சொல்றான். ராஜ்குமாரி கை குட்டெ கீயே போட்ராங்கோ இங்கே. நீங்க சண்டெ போட்ரான், தெரிஞ்சிச்சா? 

மதா- மத. உம்,உம். 

ஜு. தயார்! இது வண்ணு ! இது ரெண்டு!- ணு 

து. நில்லுங்கள், நில்லுங்கள்! என்னிடம் கைகுட்டை யில்லை கீழே போட. 

தா. ராஜகுமாரி, இதோ என் கைகுட்டை 

து. சரிதான். சரிதான். ஆரம்பியுங்கள். 

ஜு. தேகோ, உஷார்! இது வண்ணு ! 

[வீரசிங் மதனசிங்கையும் ஜெயசிங் மதால் சிங்கையும் பின்புறம் பிடித்துக்கொண் டிருப்பது கண்டு.]

அரேரேரே! ஏய் வீர்சிங்! உன்கா நாம் கியா? நீங்க ரெண்டு பேரும் பின்னாலே யென்ன செய்ராங்கோ? நானு மூண் சொல்ரான் ஓடனே நீங்க பின்னாலே வந்தூட்ரான், தெரியுமா?

வீ. அப்படியே. 

ஜு. இது வண்ணு ! இது ரெண்டு ! இது மூணு ! 

[துளசிபாய் கைகுட்டையைத் தரையில் எறிகிறாள். வீரசிங்கும் ஜெயசிங்கும் ஒதுங்கிப் போகிறார்கள். மதனசிங்கும் மதால் சிங்கும் உடனே திரும்பிக்கொண்டு வெகு வேகமாய் ஓடிப் போக, வீரசிங்கும் ஜெயசிங்கும் அவர்களைப் பின்பற்றி யோடுகிறார்கள்.] 

ஜு. அரேரேரே ! ஏ கியா? ஏகியா? 

து. இதென்னடி இது! இரண்டு பேரும் ஓடிப்போய் விட்டார்களே? நான் யாருக்கு மாலை போடுவது? 

ஜு. அரேரேரே! அச்சா பயில்வான் ஜெயசிங்! தூத்தெரி!- மதன்சிங் பொஹுத் அச்சா பயில்வான் ! 

ஜெயசிங் மதால்சிங்கை தள்ளிக்கொண்டு வருகிறான். 

ஜெ. [ஒரு புறம் தனியாய்] மதால் ! என் மானம் போகின்றது! கண்ணைத் திற. கண்ணை யேன் மூடிக்கொள்கிறாய்? நான் அப்பொழுதே சொன்னேனே, அந்த மதன்சிங் பெரிய பயங் காளி யென்று. அவன் அப்பொழுதே ஓடிப்போய் விட்டான், கண்ணைத் திற. 

மதா. [மெல்லக் கண் திறந்து பார்த்து] ஆ! எங்கே அந்தப் பயங்காளி ? எங்கே மதனசிங் ? வரச் சொல்லுங்க ! 

[கத்தியை வலசாரி இடசாரியாக வீசுகிறான்.]

ஜு. ஆ! அச்சா ! அச்சா ! மை தேகியா ! மை தேகியா!

செ. இல்லை, இல்லை; அவர் எப்பொழுதும் வாள் யுத்தத்தில் பின் புறம் பாய்ந்து பிறகு தான் வாள் வரிசை யாரம்பிக்கிறது வழக்கம். 

மதா. மதனசிங் பயந்து ஓடிப்பூட்டான். நான் ஜெயித்துட்டேன்! ராஜகுமாரியெ மாலெ போடச் சொல்லுங்க. 

து. இதோ. (மாலையை யெடுத்துக்கொண்டு எழுந்திருக்கிறாள்.]

தா. பொறும்,பொறும் ; அவசரப்படாதீர். 

உ. பொறு, ஜெயிப்பதற்குமுன் மாலை யிடலாமா? 

வீரசிங் மதன்சிங்கை தள்ளிக்கொண்டு வருகிறான்.

ஜு. ஆவ்,ஆவ்! மதன்சிங். 

மதா. மதன்சிங்கா ! 

(ஓடிப்போகிறான், ஜெயசிங்கு பின்பற்றிப் போகிறான்.)

ஜு. அச்சா! பொஹுத் அச்சா! அச்சா தமாஷா! அரேரேரே! சூரன்கி யிருக்றாங்கோ ரெண்டு பேரும்! 

உ. இப்படிப்பட்ட சூரனான ஜெயசிங்குக்குத்தான் ராஜகுமாரி யைக் கொடுக்கும்படி கட்டளை யிட்டார் ஷா இன்ஷா! 

வீ. இதேன் இப்படி நடுங்குகிறீர்? வெட்கக் கேடு! சரியாக நில் லும், அவர்களெல்லாம் பார்த்து நகைக்கிறார்கள். கண்ணைத் திறவுமையா. 

மத. அ ….அப்பா, நீ …. நீதான் சொ… சொல்லிவிடு, நீ நீதான் சொ… சொல்லிவிடு. 

வீ. நான் என்ன சொல்கிறது? 

மத. நா ……நானு தோ….. தோத்துப் போ…. தோத்துப் போ…. போனேண்ணு

வீ. தோற்றுப்போனதாவது? நான் அப்பொழுதே சொன்னேனே, அவன் பெரிய பயங்காளிபோலிருக்கிறதென்று. ஜெயசிங் இங்கு இல்லை. அப்பொழுதே ஓடிப்போய் விட்டான். கண் ணைத் திறந்து பாரும் இழவு! 

மத. ஆ அப்படியா? (கண்ணைத் திறந்து பார்த்து) ஆ.. பா.. பாத்தியா பா… பாத்தியா ! வி… வீர்சிங்! நா… நான் தான் ஜெ…. ஜெயிச்சேன், ஜெ… ஜெயிச்சேன்! 

[தன் வாளை வலசாரி இடசாரி யாக வீசுகிறான்] 

ஜு. பலே ! பலே ! ஷபாஷ் ! ஷபாஷ் ! இதர் ஆவ் பாய், முன்னே எங்கே ஓடிப்போனா ! 

மத. ஓ… ஓடிப்போனே? பி…. பின்னாலே போ புலிபோலே பா .. பாயப்போனேன். 

ஜு. அரே ! புலிகி இருக்றான் ? பில்லி! பில்லி! 

மத. எங்கே ஜெயசிங் ? ஜூ … ஜூல்பிகர்கான் சா… சாயபு, நா…நானு ஜெ… ஜெயிச்சேன்.ரா ராஜகுமாரியெ மாலெ போ…போடச்சொ… சொல்லுங்க. (துளசி பாய் முன் முழந்தாளிடுகிறான்.] 

து. சரி, இவருக்காவது போட்டு விடுகிறேன், அவரைக் காணோமே. 

உ. பொறு இது உதவாது. இரண்டு பெயரும் சண்டை செய்ய ஒருவர் மடியவேண்டும், பிறகுதான் நீ மாலை சூட்டவேண் டும். அதுதான் ஏற்பாடு. 

மத. ஆ…..ஆனா கொ கொண்டு வா …. வாங்க ஜெ ஜெயசிங்கே. போ… போட்ரேன் ச சண்டெ, கொ கொண்டு வா….வாங்க! 

மதால்சிங்கை இழுத்துக்கொண்டு ஜெயசிங் வருகிறான். 

ஜெ. இதோ, இதோ! 

ஜு. [மதனசிங் ஓடிப்போக முயல்வதைக் கண்டு] அரேரே! ஓடிப் போரான்! பக்ளோ ! பக்ளோ! 

[மதன சிங்கை வீரசிங் பிடித்துக் கொள்கிறான்.]

அரே, பாய்! நீங்க ரெண்டு பேரும் மீசெ மொளச்ச க்ஷத்ரி யில்லே? சண்டே போட்ரான் சொல்றான், ஓடிப் பூட்ரான். தூத்தேரி!- ஜெயசிங் ! நீ படே சூரன்கி யிருக்றான். பேர் மொளம் நீளம். வஹ்வா! வஹ்வா !–ஏ! மதன்சிங்! சண்டே போடரான் இல்லே, ராஜ்குமாரி ஓணும் கியா? சீ ! ரெண்டு பேரும் இப்பொ சண்டெ போட்ரான். இல்லாப் போனாக்கே, மை ஷா இன்ஷாகி சொல்லிப் போட்ரான். 

ஜெ. [மதால்சிங்குடன்] இந்தப் பக்கம் திரும்பினால் கொன்றுவிடுவேன், பத்திரம் ! 

வீ. [மதனசிங்குடன்] பத்திரம்! இப்படிப் பார்த்தீரோ நானே ஒரே குத்தாய்க் குத்திவிடுவேன். 

ஜு. போடுங்கொ சண்டெ! 

[மதால்சிங்கும், மதனசிங்கும், கத்திகளைப் போட்டுவிட்டு பூமியின்மீது விழுந்து, அசைவற்றிருக்கிறார்கள். .]

அரேரேரே! ஏகியா? ஏ கியா? அச்சா சண்டே ! அச்சா

ஏ! புலிபோலே பாஞ்சான் ! எய்ந்தீர், எய்ந்தீர்! 

[அசைத்துப்பார்த்து] 

ஏ! செத்தூப்பூட்டான் !—ஏ ! ஜெய்சிங்! எய்ந்திர். 

[அசைத்துப்பார்த்து) 

ஏ! இது செத்தூப்பூட்டான் ! அது சத்தூப்பூட்டான் !

ஜெ.  [மதால்சிங்குடன்]எழுந்திரு மையா! எழுந்திரும், எழுந்

வீ.  [மதனசிங்குடன்] திரும் ! 

து. இதென்ன? இரண்டு பெயரும் செத்துப்போய் விட்டால் நான் யாருக்கு மாலை போடுகிறது? 

தா. [மெல்ல] பேசாம லிரு கொஞ்சம், வெட்கக் கேடு! 

[மதால்சிங்கும், மதனசிங்கும் எழுந்திருந்து ஏதோ இருவரும் இரகசியமாய்ப் பேசிக்கொள்கிறார்கள்.] 

மதா. ஐயா.சாயபு ! நாங்க என்னத்துக்கு சண்டெ போடனும்?

ஜு. அரே, ராஜ் குமார்கி யார் கண்ணாலம் பண்ணிக்ரான் ?

மதா. அதுக்கா ? எங்க ரெண்டு பேர்க்கும் ராஜகுமாரி வாணாம், நாங்க சமாதானமாய் பூட்டோம் ! 

மத. ஆ…ஆமாம். 

ஜு. அரே, கியா சமாதான்! ஏ! க்ஷத்ரி ஜாதிகி ரோஷம் இல்லெ? மீசெ மொளச்ச ஆம்பிளேகி யிருக்றான் சண்டெ போட பயப் பட்ரான் ? தூத்தேரி ! 

வீ. ஜுல்பிகர்கான் சாஹேப்! ஒரே வார்த்தையாக க்ஷத்திரியர் களைப் பற்றி யெல்லாம் பேச வேண்டியதில்லை. குர்ஜர ராஜ குமாரனுடைய மானத்துக்காக நான் யுத்தம் செய்யச் சித்தமா யிருக்கிறேன் இதோ, நான் க்ஷத்ரியன்! என்னுடன் எவனாவது சண்டைக்கு வரட்டும். எவனானாலுஞ்சரி, நீர் வந்தாலும் வாரும், என் பௌரஷத்தைக் காட்டுகிறேன்! வருகிறீர்களா யாராவது? 

ஜெ. யாரா யிருந்தாலும் சரி யானால், என்னுடன் சண்டை செய்கி றீரா? நான் ஜெயசிங்கின் மானத்துக்காக சண்டை செய்கிறேன். 

வி. சரி ! எடு கத்தியை! 

ஜு. ஏ. ஏ : டைரோ ; அச்சா, நம்போ தீர்மானம் பண்ரான் ; ஜெயிச்சாக்கே மதன்சிங் ஜெயிச்சான்.-நீ ஜெயிச்சாக்கே ஜெயசிங் ஜெயிச்சான்! 

ஜெ.வீ. ஆம். 

மதா. சந்தோஷம்,சந்தோஷம் ! ராஜகுமாரி யெனக்குத்தான்! 

மத. வீ … வீர்சிங் : நீ …நீ.. ஜெ…ஜெயிச்சா நா… நானு ஜெ….. ஜெய்ச்சேன், நீ… நீ செ…செத்துப் பூட்டா நா …நானு செ… செத்தூப் பூடலே ! 

ஜு. சண்டே ஆரம்பிங்க. 

[வீரசிங்கும், ஜெயசிங்கும் சண்டை செய்கிறார்கள். வீரசிங் காயமடைந்து விழுகிறான்.] 

உ. பாவம் ! விட்டு விடு அப்பா அவனை உயிருடன் 

ஜெ. [வீரசிங் காதில் ரகசியமாய்) வீரசிங், இங்கே நில்லாதேயும், மதனசிங்கை யழைத்துக்கொண்டு உமது நகரம் போய்ச் சேரும். 

மத. வீ…வீர்சிங், பா பார்த்தாயா அ அதுக்குத்தான் நா… நானு ச…சண்டெ போ ..போடலே. 

மதா. ஆ சபாஷ் ! சபாஷ் ! நான் ஜெயிச்சுட்டேன் !-[துளசிபாய் சமீபம் சென்று முழந்தாளிட்டு] ராஜகுமாரி, எனக்கு மாலை போடுங்க. 

து. தடையென்ன ? [மாலை யிடுகிறாள்.]

ஜு. அரேரேரே! சண்டே போடாதே ராஜ்குமார்கி கண்ணாலம் பண்ணிக்றா? அதிர்சம் இருக்றா உன்கு அதிர்சம் ! ஏ! மதால் சிங்! [ஜெயசிங்கை நோக்கி] நீ சண்டே நண்ணா போட்டான், அச்சா ! 

செ. சரி, எல்லாம் சந்தோஷமாகவே முடிந்துவிட்டது.–மஹா ராஜா, இனி உடனே விவாகத்திற்கு ஏற்பாடு செய்யவேண்டியதுதான். 

உ. அதற்கென்ன ? உடனே அரண்மனைப் புரோகிதரை வர வழைத்து நாள் சீக்கிரத்தில் குறித்துக்கொண்டு பூர்த்தி செய்து விடுவோம். 

வீ. ஜுல்பிகர்கான் சாயபு, உங்களோடு ஒரு வார்த்தை பேச வேண்டும். கொஞ்சம் வரவேண்டும். 

ஜு. இதோ வர்ரான்,-சரி, உடைசிங், கண்ணாலத்துக்குத் தவாத் எல்லாம் ஏற்பாடு ஜல்தி கரோ ! நம்பள் வர்ரான். 

[வீரசிங் மதன்சிங்குடன் போகிறான்.] 

மதா. மகாராஜா, நான் வர்ரேன். 

[செயிட்சிங், ஜெயசிங், மதால்சிங் மூவரும் போகிறார்கள்.]

உ. தாராபாய், தாராபாய்! என்ன கதி உனக்கு வாய்க்க இருந்தது, அதினின்றுந் தப்பியது உன் ஜன்மாந்திர சுகிர்தமென்றே சொல்லவேண்டும். அறிவிலும், அழகிலும், குணத்திலும் சிறந்த நீ, அறிவற்ற அவலக்ஷணமுடைய, க்ஷத்ரிய குணம் சற்றுமில்லாத பதரினும் பதராகிய ஜெயசிங்கையோ மணப்பது? 

து. தாராபாய், இதோ பார்! மகாராஜா ஏன் வீணில் அவரை வைகிறார் ? 

தா. அப்பா, இதென்ன ஆச்சரியம்! ஜெயசிங் அரசிளங் குமாரன்! அனங்கனை வென்ற அழகன், அர்ஜுனனுக்குச் சமானமான அதி சூரன், உலகினில் ஒப்புயர் வில்லான் என்று சிலர் கூறக் கேட்டு எப்படி யிருப்பாரோ வென்று எண்ணி யிருந்தேன். அந்த ராஜகுமாரன் இங்ஙனமிருப்பா னென்று நான் கனவிலும் கருதினவ ளல்ல. 

து. சரி, நீயும் உன் சிறிய தந்தையுடன் சேர்ந்தாயோ அவரைத் திட்ட? 

தா. நீ கோபித்துக் கொள்ளாதே யிதற்குள். நான் என்ன, அவ ரைத் தூஷித்தேனா என்ன ? 

து. பிறகு என்ன ? 

தா. உண்மையைக் கூறினேன். 

து. உண்மையோ? போ, ஆனால் நான் அவரை விவாகஞ் செய்து கொள்ளவே மாட்டேன், போ. 

தா. இதென்ன, இப்படிச் சொல்லுகிறாய் நீ ? ஒரு ராஜகுமாரனுக்கு மாலையிட்ட பிறகு மாட்டே னென்று சொல்லலாமோ, இது நியாயமா? 

து. பிறகு ஏன் தூஷிக்கிறீர்கள் அவரை ? 

தா. நான் தூஷிக்க வில்லை யம்மா உன் கணவனை, அவர் என்ன சிறந்த வாள் வீரன் ! 

து. இல்லாமற் போனா லென்ன ? அவருக்குப் பதிலாக அவ ருடைய ஆள் என்ன நன்றாக வாள் யுத்தஞ் செய்து அந்த வீரசிங்கை வென்றான், அது போதாதோ? 

உ. யாரோ அந்த மனிதன் தெரிய வில்லை. வாள் யுத்தத்தில் மிகுந்த பயிற்சி யுடையவனாகக் காணப்படுகிறான். வாள் யுத் தம் புரிவதில் வீரசிங் மகாசூரன் ; இதுவரையிலும் அவனை ஒருவரும் வென்றதில்லை ; இந்த மதால்சிங் கென்பவன் மிக வும் எளிதில் வெற்றி பெற்றான். எனக்கு மிகவும் ஆச்சரியமா யிருக்கிறது. 

தா. அந்த – மனிதன் – யாரென்று விசாரிக்கிறதுதானே ? 

உ. ஆம், விசாரித்து அவனை நமது சேனையிற் சேர்த்துக் கொண் டால் நலமாயிருக்கும்; நல்ல சுத்த வீரன், முகத்தில் நல்ல க்ஷத்திரிய களை யிருக்கின்றது. 

து. அப்படி யிருந்தால் நான் அவனைக் கலியாணம் செய்து கொள்ளுகிறேனே? 

தா. யார்? நீயா?–ஆனால் ராஜ குமார னல்லவே. 

து.  ஆம், ஆம். அது ஒரு கஷ்ட மிருக்கிறது – ஐயோ. சாமி ! அவர் ராஜகுமாரனா யிருந்து இந்த ஜெயசிங் வேலையாளா யிருக்க லாகாதா?

உ. சரி, நேரமாகிறது போவோம். 

மறுபடியும் ஜெயசிங் வருகிறான். 

ஐ. அம்மட்டும் எனது பூஜாபலனே இந்த அஜ்மீர் ராஜகுமாரியை மணக்காது யுக்தி செய்து தப்பித்துக் கொள்ளும்படி செய்தது. என்ன ஆச்சரியம்! அஜ்மீர் அரசன் மகள் அழகிற் சிறந்தவள் என்று அனைவருங் கூறக் கேட்டிருக்கிறேன். அள வற்ற அழகும், அழகிற் கமைந்த அருங் குணமும் செறிந்த ஆர ணங்கு என்று அனைவரும் புகழும் அஜ்மீர் அரசிளங் குமரி யிவள்தானோ ? என்னை யேமாற்றும் பொருட்டு எல்லோரும் இவ்வாறு இயம்பினார்களோ? (கீழே சவுக்கம் இருப்பது கண்டு) இது ராஜகுமாரியின் சவுக்கமன்றோ? (எடுத்துக் கொண்டு, யுத்தம் ஆரம்பஞ் செய்வதற் கறி குறியாக எறியப் பட்டது இங்கேயே கிடக்கிறது. எடுத்துச் சென்று மதால்சிங் கின் மூலமாய் ராஜகுமாரிக்குச் சேர்ப்பிக்கவேண்டும். பொறு இது ராஜகுமாரியின் தோழியின தன்றோ? ராஜகுமாரி தன் னிடம் கை குட்டை இல்லை யென்று கூறியபொழுது, அருகி லிருந்த அவளன்றோ தன்னிட மிருந்து இதைக் கொடுத்தனள். அத் தோழிப் பெண்ணுடையதா யிருக்கவேண்டும். யாரு டைய பெயர் இருக்கிறது இதில், பார்ப்போம்-‘தாராபாய் தாராபாய் ! ராஜகுமாரியின் பெய ரிருக்கின்றது. ஒரு வேளை வேண்டியபொழுது கொடுக்க வேண்டுமென்று ராஜகுமாரியின் சவுக்கத்தை வைத்திருந்தனளோ? இம் மங்கை யாரோ தெரியவில்லை ! மெல்லிய வஸ்திரத்தினால் முகத்தை மூடியிருந்தும் சரத்காலத்துச் சந்திரனைப்போல் பிரகாசித்தது ! உத்தம க்ஷத்திரிய குலத்தி லுதித்த காரிகைபோல் என் கண் ணுக்குக் காணப்பட்டாள். சீ ! இவள் ராஜகுமாரியாய்ப் பிறந் திருக்க வேண்டும். – இதென்ன விந்தை ! இவளைக் கண்டு அரை நாழிகை யிராது, ஒரு வார்த்தையும் இவளுடன் பேசி னவ னன்று, இவள் ஊர் அறியேன், உற்ற பேர் அறியேன், குலம் அறியேன், 

அறியேன், கோத்திரம் அறியேன்; இருந்தும் இம் மடந்தையையே நாடுகின்றதே யென் மனம் ! அஜ்மீர் அரசன் மகளைக் கண்ணெடுத்துக் காண்பதே எனக்கு மானக் கேடென் றெண்ணி வந்த நான், அவள் தோழியின் மீது காதல் கொண்டேன் ! யார் விதி யாரை விட்டது ? நான் நகருக்குத் திரும்புமுன் எப்படியாவது அவளைக் கண்டு, அவளுடன் வார்த்தையாடி, அவளது காதலைப் பெற வேண் டும் நான். இந்தச் சவுக்கம் கிடைத்தது எனக்கு நலமாயிற்று. இதைக் காரணமாகக் கொண்டு, அவளுடன் பேசி, அவள் விருத்தாந்தத்தை யெல்லாம் விசாரித் தறியவேண்டும். நான் காலதாமதஞ் செய்ய லாகாது. [ஒரு புறமாய்ப் போகிறான்.] 

மற்றொரு புறமாகத் தாராபாய் மறுபடியும் வருகிறாள். 

தா. ஆஹா! ஆருலகில் மிகுந்த ஆச்சரியகரமானது எது என்று கேட்டதற்கு அந்தத் தர்மராஜன் கூறிய விடை யெனக்கு அமைந்ததா யிருக்கவில்லை. இவ் வீரேழ் புவனங்களிலும் இதைப் பார்க்கிலும் ஆச்சரியகரமானது இல்லை யென்று கூறு வதற்கு இக் காதலையே உதாரணமாகச் சொல்ல வேண்டும். ஆயினும் இக்காதல் இன்னதென்று, இதன் நிஜ ஸ்வரூபத்தை அறிந்தவர் ஒருவரு மில்லையே எவ் வுலகிலும் ! அதன் வலைக் குட்பட்டா லொழிய அது இன்னதென் றறிவது அதனிலும் அசாத்தியம்! நான் இதை யென்னென் றுரைப்பது !-இன்று காலைவரை இவர் முகத்தை நான் பார்த்தறியேன். இவர் இன் னாரென்றுங் கேட்டதில்லை. இந்த க்ஷணம்வரை யிவருடன் வாய் திறந்தொரு வார்த்தையாடி அறியேன். இவர் குலம் அறியேன், கோத்திரம் அறியேன். இவரைப் பற்றி யொன் றுமே அறியேன். நான் அஜ்மீர் அரசனது அரும் புதல்வி, அவரோ ஜெயபுரி அரசனது வேலையாளாய் வந்த வீரன், எங் கள் குலத்து ஜன்மத் துவேஷியைச் சார்ந்தவர். இன்று காலை அரைக் கண மிருக்கும் அவரது கண்களை எனது கண்கள் சந் தித்தது அக் கணத்தில் இக்காதல் கன்னி என்னை வென்ற தென்றால் இதன் பெருமையை நான் என்னென்று புகழ்வேன்? காதலுக்குக் காதலே சமானம்! 

[தரையில் ஓர் கணையாழி யிருப்பது கண்டு] 

இதென்ன கணையாழி ! [எடுத்துப் பார்த்து]

யாருடையதோ?–ஓஹோ ! அவருடையதா யிருக்கலாம்; வாள் யுத்தம் புரியும்பொழுது விரலினின்றும் கழன்று விழுந் திருக்க வேண்டும். எவ்வள வழகிய விர லாழி ! என்ன! ஏதோ பெயர் செதுக்கப்பட் டிருக்கின்றது ! ஜெயசிங்’ ஜெயசிங் ராஜகுமாரனுடையதோ? இவர் விரலிற் கண்ட ஞாபக மிருக்கின்ற தெனக்கு.-அதோ, வருகின்றார் அவர்” ஏதோ தரையில் உற்று நோக்கிய வண்ணம். ஓகோ ! இதைத் தான் தேடிவருகிறார், சந்தேக மில்லை. இதுவும் நமக்கு நலந் தான். இதைக் காரணமாகக் கொண்டு இவருடன் வார்த்தை யாடி எல்லா விஷயமும் அறியவேண்டும். 

ஜெயசிங் தேடியவண்ணம் வருகிறான். தாராபாய் தானும் தன் சவுக்கத்தைத் தேடுகிறாள். 

ஜெ. பெண்ணே, என்ன தேடுகின்றாய்? 

தா. ஐயா, என்னுடைய சவுக்கம் ஒன்று தரையில் விழுந்திருந்தது காணோம். அதைத் தான் தேடுகின்றேன். 

ஜெ. ஓ! இதுதானோ அந்தச் சவுக்கம்? 

தா. ஆம், இது உம்மிடம் எப்படி வந்தது? 

ஜெ. தையலர் நாயகமே, இது தாமரை யனைய உன் கரதலத்திருந்த பின் தரையிற் கிடப்பது தகுதி யன்று எனக் கருதி எடுத்து வைத்திருந்தேன் உன்னிடம் ஒப்புவிக்க. இதோ பெற்றுக் கொள். [கொடுக்கிறான்.) ஆயினும் எனக்கோர் சந்தேகம். இதில் ராஜகுமாரியின் பெயரிருக்கின்றதே, உன் வசம் எப் படி வந்தது? 

தா. இது என் வசந்தா னிருப்பது -ராஜகுமாரி வேண்டியபொழுது உபயோகித்துக் கொள்வது. 

ஜெ. பெண்ணே, இதை நான் உனக்குக் கண்டெடுத்துக் கொடுத்தேனே இதற்கென்ன கைம்மாறு தரப்போகின்றாய் எனக்கு?

தா. தாம் இங்கு நாடி வந்ததைத் தருகின்றேன் நான். 

ஜெ. அப்படியா? தருகின்றையா ? நான் எதை நாடி வந்தேன் தெரி யுமா?– சொல்லவா? 

தா. சொல்ல வேண்டியதில்லை, தெரியும் எனக்கு–பெற்றுக் கொள் ளும் இதை. 

ஜெ. எதை ? – உனக் கெப்படிக் கிடைத்தது இம் மோதிரம்? இதை இதுவரையிலுந் தேடிக்கொண்டிருந்தேன் நான்! 

தா. காணமற்போன என் பொருளை நான் நாடி யிங்கு வந்தபொழுது இதைக் கண்ணுற் றெடுத்தேன். 

ஜெ. மிகவும் சந்தோஷம். அது வேறொருவர் கண்ணிற் படாமல் உன் கரத்திற் பட்டதே, இது என் பூர்வ புண்யவசந்தான் ! கொடு இப்படி. 

தா. இதோ. [மோதிரத்தை ஜெயசிங் வாங்கிக்கொள்கிறான்.] ஐயா, இதில் ‘ஜெயசிங்’ கென்று பெயர் செதுக்கப்பட்டிருக்கின்றதே? 

ஜெ. ஆம், இது ஜெயசிங்கினுடையது தான். என்னிடங் கொடுத் திருக்கின்றார். அதிருக்கட்டும். நான் தேடி வந்த பொருளைத் தருகிறே னென்றையே. 

தா. ஆம். 

ஜெ. கொடு அதை ஆனால். 

தா. முன்பே கொடுத்தேனே. அதை அறியாது கேட்கின்றீரே மறுபடியும்? 

ஜெ. எப்பொழுது? பெண்பாவாய், நான் நாடி வந்ததை நீ யறிகிலை.

தா. நன்றா யறிவேன். உமது கையில் வைத்துக்கொண்டே கேட் கின்றீரே? 

ஜெ. என்ன அது? நீ சொல்வது எனக்குப் புலப்படவில்லை. 

தா. அம் மோதிரம், 

ஜெ. ஓஹோ ! இதையா நான் நாடி வந்தேன் ! 

தா. நீரே கூறினீரே சற்று முன்பாக, இம் மோதிரத்தைத் தேடிக் கொண் டிருந்ததாக. நீர் நாடி வந்தது இதைவிட வேறென்ன?

ஜெ. தையலர்க் கரசி, என்னை யிவ்வா றேௗனஞ் செய்தல் நியா யமோ? உள்ளமறிந்தும் ஒன்று மறியாதவள்போல் கேட் கின்றையே? நான் நாடி வந்ததை யறியாயோ? நான் வாய் திறந்து கேட்கவும் வேண்டுமோ? 

(தாராபாய் கரத்தைப் பற்றுகிறான்.) 

தா. நான் – வாய்திறந்து-பதில் உரைக்கவும் – வேண்டுமோ?

ஒரு பக்கம் மதால்சிங்கும், மற்றொரு பக்கம் துளசிபாயும் வருகிறார்கள். ஜெயசிங்கும், தாராபாயும் விலகிப் போகிறார்கள். 

மதா. ஆப்டதா அந்த மோதிரம்? – என்ன பேசாம லிருக்றீங்கொ? 

ஜெ. [மதால்சிங்குடன்] பேசவும் வேண்டுமோ? 

[உரத்து) ‘கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச் சொற்கள், என்ன பயனு மில 

து. என்ன செய்கிறாய் இங்கே துளசிபாய் ? 

தா. (துளசிபாயுடன்) கண்டதை வியந்துகொண் டிருக்கிறேன். [உரத்து] ” கண்ணிரண்டு போதுமோ கருத்தினை யான் கூறிடவே கண்ணாயிரம் வேண்டுமே கொண்டதைத்தான் வெளியிடவே” 

மதா. அந்த மோதிரம் ஆப்டுதா இண்ணா? 

ஜெ.[மதால்சிங்குடன்] ஆம், கிடைத்தது. 
[உரத்து] “கிடைத்தது கிடைத்தது கிடைக்கரும் பொரு ளெனக்குப் படைத்ததிப் புவியினில் பரமனருளா லென் பொருட்டே” 

து. அதிருக்கட்டும். அந்த மாலையை யெனக்கே கொடுத்து விடுவாரென்றையே, இன்னும் கொடுக்கவில்லையே. அதோ பார் நீ தான். 

தா. [துளசிபாயுடன்] கொடுப்பார், பயப்பட வேண்டாம். 

(உரத்து) “மாலை யுனக்குத் தந்தார் மாலை யுனக்குத் தாராரோ வேலையுனக் கேன்மனமே வீணினீ வருந்துவதேன்’ 

து. மாலை யெனக்குத் தந்தாரா ! அது தான் இல்லை யென்றேனே, 

தா. நான்- இரு பொருள் படக் கூறினேன். 

மதா. அதோ ராஜகுமாரி வந்திருக்கிறா; நான் என்ன பேசறதிண்ணு சொல்லிக் கொடுக்கலியே. 

ஜெ. [மதால்சிங்குடன்] பொறு, பொறு ; அவசரப்படாதே. 

[உரத்து] “ஆத்திரப் படலாமோ அந்தோ அந்தோ சற்றே காத்திருந்தா லென்ன காதலது குன்றிடுமோ” 

து. துளசிபாய், நீ சொல்வது எனக்கு ஒன்றும் அர்த்தமாக வில்லையே. அந்தச் சவுக்கமாவது கிடைத்ததா? தேடுவோம் வா,

தா. [துளசிபாயுடன்] இப்பொழுது இருட்டி விட்டது. இனி யெங்கு தேடுவது? 

[உரத்து] நாளைத்தினங் காலை நாமிங்கு வருவோமா? 

மதா. நாம்போ சாப்டப் போலாமா அரமனைக்கி? 

ஜெ.[மதால்சிங்குடன்) ஆம்; ஆம்; பசிக்கின்றதெனக்கும். 

[உரத்து] அப்படியே செய்வோம்; அதற்கென்ன சந்தேகம்? நேரமாகிறது. புறப்படு உடனே. 

து. [துளசிபாயுடன்] இதோ, உத்திரவுபடி. 

[உரத்து]”மறவாதீர் என்றனையே மண்ணின்மே லுள்ளவரை துறவாதீர் என்றனையே தூயமன துடையீரேல்’ 

தா. மதா. வாரும், வாரும்; நேர மாகிறது. 

ஜெ. “மறப்பேனோ வுன்றனையே மண்ணிலெந்த ஜன்மத்தும் துறப்பேனோ வுன்றனையான் தூய்மொழியே துன்புறேல்” 

மதா. [ ஜெயசிங்குடன்] என்ன பாடிக்கொண்டிருக்கிறீர்? 

து. [தாராபாயுடன் ] வா போவோம். 

[ஜெயசிங்கை ஒருபுறம் – மதால்சிங்கும், தாராபாயை மற்றொரு புறம் துளசிபாயும் இழுத்துக்கொண்டு போகின்றனர்.] 

ஐந்தாவது காட்சி

இடம் — அரண்மனைத் தோட்டம். காலம் – முன்னிரவு.

தாராபாய் ஒரு பூச்செண்டு கட்டியவண்ண மிருக்கிறாள்.

தா. இவ்வளவழகாக நான் என்றுங் கட்டியதில்லை. காதலானது எனது புத்தியையும் யுக்தியையும் கூர்மையாக்குகின்றது போலும். என்ன, இந் நேரமாயும் ஏன் பிராணநாதர் இங்கு வரவில்லை? ஒரு வேளை மறந்துவிட்டாரோ? அல்லது பொறுத்துப் போகலாமென்றெண்ணி யிருக்கிறாரோ ? ஐயோ. அவரை நான் வீணாய் வெறுக்கலாகாது. நான் சீக்கிரம் வந்து விட்டு, அவர் இன்னும் வரவில்லையென்று அவரை நான் பழிக்க லாமோ? குறித்த நாழிகைக்குச் சரியாய் வருவார். 

பின்புறமாகத் துளசிபாய் வருகிறாள். 

து. துளசிபாய்! 

தா. பிராணநாதா! [திரும்பிப்பார்த்து] நீயா? 

து. நினைத்தேன், நினைத்தேன் ! நீயும் ஒரு பிராணநாதனைச் சம்பா தித்துக்கொண்டாயா? 

தா. என்ன சமாசாரம்? என்ன நகைக்கின்றாய்? 

து. எல்லாம் சரியான சமாசாரந்தான், நகைப்பொன்று மில்லை, இப்பொழுது யாரைப் பிராணநாதா வென்றழைத்தாய்? 

தா. நான் எங்கே யழைத்தேன்? 

து. பிராணநாதாவென்று சற்று முன்பாக சொல்லவில்லை நீ ? 

தா. நான் எங்கு சொன்னேன்? நீ யெந்நேரமும் உன் பிராணநாதனையே நினைத்துக்கொண் டிருக்கிறாய்போலும். அது தான் உன் காதிற்கு அப்படிக் கேட்டதுபோலிருக்கிறது. 

து. ஓ ஹோ! பொய் பேசவுங் கற்றுக்கொண்டையா?-அதிருக் கட்டும். நேற்று சாயங்காலம் இங்கே என்ன செய்துகொண் டிருந்தாய்? 

தா. காணாமற்போன கைக்குட்டையைத் தேடிக்கொண்டிருந்தேன்

து. அவருடன் ஒன்றும் பேசிக்கொண்டில்லை? 

தா. யாருடன்? 

து. ஜெயசிங்குடன் வந்திருக்கிறாரே ஒருவர், அவருடன்.

தா. இதென்ன பயித்தியமா யிருக்கிறது? அவர் ஒரு பக்கம் ஏதோ மோதிரங் காணோமென்று தேடிக்கொண்டிருந்தார். நான் ஒரு பக்கம் சவுக்கம் காணோமென்று தேடிக்கொண்டிருந்தேன்.

து. எனக் கென்னவோ சந்தேகமாகவே யிருக்கின்றது. நீ என்ன சொன்னாலும் நான் நம்பவேமாட்டேன். முகத்தினழகு அகத்திலேயென்று சொல்லுகிறார்களே. அந்தமாதிரி நேற்று முதல் உன் முகத்திலும் ஓர்வித களை யுண்டாயிருக்கிறது. 

தா. கெட்டிக்காரி! ராஜகுமாரனைக் கலியாணம் செய்துகொள்ளு கின்றோமே யென்று உனக்குச் சந்தோஷம் சும்மா இருக்கவிட வில்லைபோலும், அதை யென்மீது சுட்டிக் காட்டுகின்றாயோ?

து. நான் ஜெயசிங்கைக் கலியாணஞ் செய்துகொண்டால் நீ ஜெய சிங்குடன் கூட வந்திருக்கிறவரைக் கலியாணஞ் செய்து கொள்ளப்போகிறாய், அவ்வளவுதானே? 

தா. துளசிபாய், துளசிபாய் ! உனக்கு நான் எத்தனை முறை சொல் வது, உன் புருஷன் பெயரை நீ சொல்ல லாகாதென்று?

து.  இன்று காலை மகாராஜா, ஜெயசிங்குக்கு -பிராணநாதருக்கு – நானே பலகாரம் கொண்டுபோய்க் கொடுக்கவேண்டுமென்று நியமித்திருக்கின்றாரே, நான் என்ன செய்வது சொல். அங்கே போய் நான் ஏதாவது தப்பிதஞ் செய்துவிட்டால்-இன்னும் மணமுகூர்த்தங்கூட நிறைவேற வில்லையே ! நான் என்ன செய்யவேண்டும் என்பதை ஆதியோடந்தமாகச் சொல்.

தா. ஆதியோடந்தமாகச் சொல்வதென்ன? பலகாரத்தைக் கொண்டு போய், ‘பிராணநாதா, கொஞ்சம் புசித்தருள வேண்டும்’ என்று கேட்டால் போகின்றது. 

து. ஏ! ஏ! அதெல்லாம் உதவாது, நன்றாய்த் தெரியும்படி ஒவ்வொன்றாய்ச் சொல். பலகாரத்தைக் கொண்டுபோய், நிற்பதா?- 

தா. நிற்கவேண்டும். அவர் பிறகு, ‘ஏன் நிற்கின்றாய்? உட்கார் என்று சொன்னவுடன் உட்காரவேண்டும். 

து. எங்கே உட்காருவது ? 

தா. எங்கே உட்காருவதாவது ! எங்கே உட்காருவது ?

து. இல்லை, மடிமேலே உட்காருவதா, பக்கத்தில் உட்காருவதா?

தா. சரி, சரி, கெட்டிக்காரிதான் ! இதற்குள் அவ்வளவுதூரம் போய் விடாதே பக்கத்தில் சற்று தூரமாகவே யுட்கார். உட் கார்ந்ததும் அவர் சற்றே முகத்தைத் திருப்பிக்கொண்டிருந் தால், ‘பிராணநாதா, இதோ கொஞ்சம் பலகாரங் கொண்டு 

து. “வந்திருக்கிறேன்,” என்று கேள் மெதுவாய். அவர் “எனக் குப் பசிக்கவில்லை” என்று சொன்னபோதிலும், “அடியாள் மீது தயவுசெய்து கொஞ்சம் புசிக்கவேண்டும்.” என்று வற்புறுத்திக் கேட்க வேண்டும், பிறகு ஏதாவது ஒன்றை எடுத்துக் கொஞ்சம் மெல்லெனக் கொடுக்க வேண்டும். அவ்வளவுதான். 

து. அவ்வளவுதானா? நான் சாப்பிட வேண்டாமா? 

தா. ஐயையோ! கூடவே கூடாது. அவர் புசித்தானவுடன் அவ ராக ஏதாவது கொஞ்சம் கையிலெடுத்து உன்னை வேண்டிக் கொடுத்தால், வேண்டாமென்று மறுத்து, பிறகு பலாத்காரஞ் செய்தால் கொஞ்சம் புசிக்கவேண்டும். 

து. ‘ஐயையோ! இதென்ன கஷ்டமா யிருக்கின்றது ! ஒருவேளை முன்னதாகவே அவர் எல்லாவற்றையும் புசித்துவிட்டால்? 

தா. அப்படி செய்யமாட்டார், கொஞ்சந்தான் சாப்பிடுவார். 

து. எனக்கென்னவோ சந்தேகமா யிருக்கிறது ; பார்க்கிறேன். நேரமாகிறது, போவோம் அரண்மனைக்கு. 

தா. நீ போ முன்பு, நான் அப்புறம் வருகிறேன். 

[தாராபாயும் துளசிபாயும் ஒருபுறமாகப் போகிறார்கள்.]

மற்றொரு புறமாக ஜெயசிங்கும், மதால் சிங்கும் வருகிறார்கள்.

ஜெ. அவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.- நான் சொல்லிய தெல்லாம் ஞாபக மிருக்கின்றதா? கொஞ்சமா வது தவறி நடந்தாயோ போயிற்றெல்லாம் அடியோடு. பிறகு ராஜகுமாரி ராஜகுமாரிதான் ! நீ நீதான் ! 

[மதால்சிங் விரல்களை எண்ணிக்கொண்டிருப்பது கண்டு]

நான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன், நீ யென்ன எண்ணிக் கொண்டிருக்கின்றாய் விரலை? 

மதா. இல்லெ, இல்லெ. கண்ணாலத்துக்கு இன்னம் எத்தனி நாளிருக்குதிண்ணு பார்த்தேன் ! ஆறு நாளிருக்குது. 

ஜெ. இந்தப் பயித்தியத்திற் கென்ன செய்வது ? நான் சொல் வதைக் கவனிக்காமற்போனால் பிறகு உண்மை எப்படியும் வெளியாகிவிடும் பிறகு ராஜகுமாரியைக் கலியாணஞ்செய்து கொள்வதெல்லாங் கனவுதான். 

மதா. இல்லெ, இல்லெ கோவிச்சிக்க வாணாம். நானென்ன செய்யணும்? 

ஜெ. எத்தனை முறைதான் உனக்குச் சொல்வது? 

மதா. இதாங் கடெசி தரம். இனிமேலிக்கி வாணம். 

ஜெ. கவனமாய்க் கேள். இப்பொழுதாவது கலியாணத்திற்கு இன்னும் எத்தனை நாட்களிருக்கின்றனவென்று கணக்கிட்டுக் கொண்டிருக்காதே! 

மதா. இல்லெ, 

ஜெ. ராஜகுமாரி யிங்கு வருவாள் சீக்கிரம்.- 

மதா. வருவாள். 

ஜெ. பலகாரத்தைக் கையி லெடுத்துக்கொண்டு- 

மதா. எடுத்துக்கினு. 

ஜெ. வந்தவுடன் வழக்கத்தைப்போல் அப்படியே வாயைத் திறந்து கொட்டிக் கொள்ளாதே. 

மதா. கொள்ளலே. 

ஜெ. அவள், பிராணநாதா, கொஞ்சம் தயவு செய்யவேண்டும் என்று கேட்டபிறகு, புசிக்க ஆரம்பி, தெரியுமா? 

மதா. தெரியும். 

ஜெ. கொஞ்சமாக. 

மதா. கொஞ்சமா – சரியா ஆறிருக்குது. 

ஜெ. என்னது ஆறு இருக்கின்றது ? 

மதா. நீங்க சொன்னதும் ஆறிருக்குது. கண்ணாலத்துக்கும் நாளு ஆறுதா னிருக்குது. 

ஜெ. மதால், மதால்! எல்லோரும் நீதான் ஜெயசிங்கென்று எண் ணிக்கொண் டிருக்கிறார்கள். உன் நடத்தையெல்லாம் என் பெயரைத்தான் கெடுக்கின்றது. 

மதா. நீங்க ஒண்ணுக்கும் பயப்பட வாணாம். எனக் கெல்லாம் காபக மிருக்குதிண்ணா. 

ஜெ. அதோ பார்,மறுபடியும் மீசையைக் கெடுத்துவிட்டாயே. சரி யாக வைத்திரு கொஞ்ச நேரமாவது. 

[மதால்சிங் மீசையை மறுபடி நன்றாய் முறுக்கி விடுகிறான்.] 

மதா. அப்பப்பா ! நோவுது ! நோவுது ! 

ஜெ. சும்மாதானா ராஜகுமாரி ! அதோ வருகிறாள்போ லிருக்கிறது. ஜாக்கிரதை ! உட்கார்ந்துகொள், நான் வருகிறேன். 

[போக முயல்கிறான்.] 

மதா. [தொடர்ந்து சென்று] எங்கே போரிங்க நீங்க ? 

ஜெ. [போய்க்கொண்டே] நான் இருக்கலாகாது இங்கு இனி. 

மதா. [ஜெயசிங் போவதை நிறுத்தி, ஒருபுறமாகச் சென்று) ஏ! ஏ! ஒரே ஒரு சமாசாரம், கேக்க மறந்துவிட்டேன்- 

தாராபாய் கையில் தின்பண்டங்களடங்கிய ஒரு தாம்பாளத்தோடு தன்பின் வர, மற்றொரு புறமாகத் துளசிபாய் வருகிறாள். 

து. துளசிபாய், தட்டைக் கொடுத்துவிட்டுப் போ நீ. 

[தட்டை வாங்கிக் கொள்கிறாள்; தாராபாய் போக முயல்வதைக் கண்டு]

இந்தா, அந்த புஷ்பச் செண்டையும் கொடு – ராஜகுமாரர் என்ன செய்கிறார் அங்கே? 

தா. [தனக்குள்] இதென்ன கஷ்ட காலமா யிருக்கிறது ! 

[அதை மறைத்துக் கொள்கிறாள்.] 

து. எங்கே அந்தப் புஷ்பச் செண்டு ? 

தா. எந்தப் புஷ்பச் செண்டு ? 

து. சற்று முன்பாக கையில் வைத்துக்கொண்டிருந்தாயே ? 

தா. என்னத்திற்கு அது? 

து. பிராணநாதருக்குக் கொடுக்கவேண்டும். 

[மதால்சிங் இருக்கும் பக்கம் திரும்பிப் பார்த்து] 

என்ன, அங்கேயே நின்றுகொண்டு பேசிக்கொண்டிருக்கிறாரே ! 

[பூச்செண்டைத் தாராபாய் பக்குவமாய் எறிய, ஜெயசிங் அதைப் பிடித்துக் கொள்கிறான்.] 

கொடு என்றால்? 

தா. என்னிடத்தில் இல்லையே. 

து. எங்கே போச்சுது அது? 

ஜெ. சரி. நேரமாகின்றது. ராஜகுமாரி காத்துக்கொண்டிருக்கிறாள் ஏதாவது எண்ணிக்கொள்ளப்போகிறாள். இனியாவது போய் உட்கார். 

மதா. சரிதான், நீங்க போங்க. 

[ஜெயசிங் புறப்பட அவனிடம் பூச்செண்டிருப்பது கண்டு]

உம். ஒரு சமாச்சாரம், 

ஜெ. என்ன? 

மதா. ஏது அந்தப் புஷ்பச் செண்டு? 

ஜெ. இங்கே யென் கையிற் கிடைத்தது.

மதா. ஆனா எனக்குக் கொடுங்க அத்தே.

ஜெ. உனக்கென்னத்திற்கு ? 

மதா. ராஜகுமாரி கையிலே கொடுக்கிறேன் நானு.

ஜெ. ராஜகுமாரி -வேண்டா மென்றால் ?

மதா. கேட்டுப் பார்க்கட்டுமா ? 

[துளசிபாய் இருக்கும் பக்கமாய்த் திரும்பும்போது ஜெயசிங் புஷ்பச்செண்டை தாராபாயிடம் எறிய, அவள் அதைப் பிடித்துக்கொள்கிறாள்.] 

ஒரு வேளே கோவிச்சிக்கினா? எதுக்கும் கேட்டுப் பாக்கி றேன்.[ஜெயசிங்கிடம் பூச்செண்டில்லாதது கண்டு] எங்கே அந்த பூச்செண்டு ? 

ஜெ. என்னிட மில்லை. 

மதா. எங்கே போச்சி ? 

ஜெ. வந்த வழியே போயிற்று. ராஜகுமாரி காத்துக்கொண்டிருக்கிறாள். போய் உட்கார் சீக்கிரம் 

[மதால்சிங் உட்காரப் போகிறான். ஜெயசிங் போய்விடுகிறான்.] 

மதா. [மறுபடியுந் திரும்பி] ஆ! ஒண்ணு கேக்க மறந்துப் பூட்டேன். [ஜெயசிங் இல்லாதது கண்டு] 

அடடே! எங்கேயோ பூட்டாரே! (உட்காருகிறான்.) 

தா. நேரமாய்விட்டது. அதோ ராஜகுமாரர் உட்கார்ந்து கொண் டிருக்கிறார்,பார். போ போ சீக்கிரம். 

து. எதோ ! [ போகத் திரும்பியதும், தாராபாய் போய்விடுகிறாள்.) (மறுபடியுந் திரும்பி] ஆனா அந்தப் புஷ்பச் செண்டை 

[தாராபாய் இல்லாதது கண்டு] 

எங்கே போய்விட்டாள் இதற்குள்?-போனாற்போகட்டும். 

[தாம்பாளத்துடன் மதால்சிங் அருகிற்சென்று கொஞ்சநேரம் நிற்கிறாள். பிறகு இருவரும் மாறிமாறி இருமுகிறார்கள்.] 

எத்தனை நாழி நிற்கிறது ? 

மதா. உக்கார்ரதுதானே? 

து. உட்காரச் சொன்னா லல்லவோ? 

மதா. நான் சொல்லணுமோ ?–சொன்னேன், உட்கார். 

து. [உட்கார்ந்து] இதென்ன இது? அந்தப் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தா லல்லவோ நான் கேட்பேன்? 

மதா. இதென்ன கஷ்டமாயிருக்குது !- இதெல்லாஞ் சொல்லித் தரலியே.– திரும்பிக்கினேன்,- பசிக்குது எனக்கு. 

து. பிராணநாதா, இதோ கொஞ்சம் பலகாரம் கொண்டு வந்திருக் கிறேன். கொஞ்சம் தயவு செய்யவேண்டும். 

[மதால்சிங் திரும்பி தாம்பாளத்தில் கையை வைக்கிறான்.] 

இதென்ன இது ? பொறும்,பொறும்! 

மதா. ஏன்? 

து. எனக்குப் பசிக்கவில்லை’ என்று சொல்லும். 

மதா. என்னாது ! எனக்குப் பசிக்கிலேண்ணு சொல்ரதா? பொய் பேசவா சொல்ரே? மாட்டேன் ! ரொம்ப பசிக்குது எனக்கு ! [பலகாரத்தை தின்றுகொண்டே] 

என்னாலே காத்துக்கு னிருக்க முடியாது. 

து. போம், போம். இப்படித்தான் செய்வாரோ ராஜகுமாரர்? நீர் வேண்டாமென்றால். நான் வற்புறுத்திக் கேட்டபிறகு கொஞ்சம் எடுத்துக் கொடுப்பேன். 

மதா. கொஞ்சமா? சரிதான் ! என் பசி யெனக்குத் தெரியும். 

[கூடிய வரைக்கும் தின்றுவிட்டுப் பிறகு மற்றதை ஓர் பையில் போட்டுக்கொள்கிறான்.]

து. எனக்கொன்று மில்லையா? 

மதா. உனக்கு ஓணும்ணா அரமனெக்கிப் போயி எடுத்துக்கோ. எனக்கு அப்றம் ஓணும்ணா நான் என்ன செய்றது ? ரெண்டு நாளா மத்யானத்லெ நானு கஷ்டப்பட்டது எனக்குத் தெரியும். நினைத்தேன், நினைத்தேன்! அப்பொழுதே சொன்னேன்.

மதா. என்ன சொன்னே ? 

து. ஒன்றுமில்லை – உம்முடைய பேச்சல்ல. 

மதா. [ஏப்பம் விட்டு] ஏவ் ! அப்பாடா! தாராபாய் ! உக்கார் என் நிக்கரே ? (துளசிபாய் உட்கார்ந்து கொள்கிறாள்] என்ன சமாச்சாரம்? சொல்லு இனிமேலே.[நகைக்கிறான்.) து. ஏன் சிரிக்கிறீர்கள்?–என்னைப் பார்த்தால் சிரிப்பா யிருக்கிறதோ? 

மதா.ஏ! ஏ! அப்படியல்லா! ஒரு சமாச்சாரத்தெ நெனெச்சிக்கினா சிரிப்பு வருது, சந்தோஷத்து மேலே, எனக்கு. 

து. என்ன சமாசாரம் அது ? 

மதா. அது ரகசியம் ! உனக்கு சொல்லக்கூடாது 

து. அது என்ன ரகசியம்? கொஞ்சம் சொல்லுமே, 

மதா. அப்பா! சொல்லக்கூடாது இப்போ. அல்லாங் கெட்டுப் பூடுமே இப்போ சொன்னா! 

து. அதை எப்படியும் எனக்கு சொல்லித்தான் தீரவேண்டும். இல்லாவிட்டால் உம்மை நான் விவாகஞ் செய்துக்கொள்ளவே மாட்டேன். [எழுந்திருக்கிறாள்.]

மதா. ஏ! ஏ! உட்கார் ! உட்கார்! கோவிச்சிக்காதே. துளசிபாய் உட்காருகிறாள்.) நான் ஒண்ணு கேக்ரேன், அதுக்கு சரியா பதிலு சொல்ரதாயிருந்தா சொல்ரேன்,இல்லாப்போனா மாட்டேன். 

து. என்ன? கேளும். 

மதா. உனக்கு, என்னே கண்ணாலம் பண்ணிக்க இஷ்டமா, இல் லாப்போனா என்னோடு வேலெக்காரர் ஒருத்தர் வந்திருக்கிறாரே அவரெ கண்ணாலம் பண்ணிக்க இஷ்டமா? 

து. இதென்ன கேள்வி ? உம்மைத் தான் கலியாணம் பண்ணிக் கொள்ள இஷ்டம். அதற்காக எவ்வளவு கஷ்டம் எடுத்துக் கொள்கிறேன் நான் !- 

மதா. என் மேலே தானே உனக்கு ஆசெ? 

து. ஆம், ஆம்; சந்தேக மென்ன அதற்கு ? 

மதா. ஆனா என்னெத்தான் கண்ணாலம் பண்ணிக்றேண்ணு சத்யம் பண்ணிக்குடு பார்க்கலாம். 

து. அதற் கென்ன ? உம்மைத்தான் நான் விவாகஞ் செய்து கொள்ளப்போகிறேன். சத்தியம் !–அது என்ன ரகசியம் சொல்லும். 

மதா. உம் – அப்றம் மாறிப்போமாட்டெ யல்லா நீ ? 

து. மாறவே மாட்டேன். நான் ஏன் மாறவேண்டும் ?-அதிருக் கட்டும், அந்த ரகசியம் என்ன அது ? 

மதா. வேறே ஒண்ணுமில்லே. நான் சொல்ர ரகசியத்தே வேறெ யாருக்கும்,– ஒருத்தருக்கும் – சொல்லாதே, தெரியுமா? 

து. இல்லை, இல்லை; சொல்லும். 

மதா. [நகைத்துக்கொண்டே) நானு ஜெயசிங்கு அல்லா! மதால் சிங். ஜெயசிங்கு அவரு, நானு அவர் வேலெக்காரன் ! 

து. [உரத்து ஓயாது நகைக்கிறான்.] ஓகோ! அப்படியா சமாசாரம்? அப்பொழுதே நினைத்தேன் ! என்னை யிப்படி மோசமா செய்தாய்! நான் ராஜகுமாரியிடம் போய்ச் சொல்கிறேன். நான் ஒரு போதும் உன்னைக் கல்யா ணம் செய்து கொள்ளவே மாட்டேன். இந்த க்ஷணமே ராஜ குமாரியிடம் போய்ச் சொல்லி விடுகிறேன். 

மதா. என்னது? ராஜகுமாரியிடம் போயி சொல்லிடுறியா? யார் ராஜகுமாரி ? நீ யல்லா ராஜகுமாரி? 

து. இப்பொழுது சொல்லுகிறதற் கென்ன பயம், நான்தான் உன் னைக் கலியாணஞ் செய்து கொள்ளப்போகிற தில்லையே ! என்னை ராஜகுமாரியென்று நினைத்துக்கொண்டாயோ? நான் ராஜகுமாரி யல்ல, ராஜகுமாரி தாராபாய் நான் அவள் தோழி, துளசிபாய்! 

மதா. ஏ! அப்படியா ? இவ்வளவுதானா?- 

து. என்னை மோசமா செய்தாய்? இதோ போய் ராஜகுமாரியிடஞ் சொல்லி உன்னை என்ன செய்விக்கிறேன் பார்! 

[ஒருபுறமாக விரைந்து போகிறாள்.]

மதா. எனக்கு மாத்ரம் கோவம் வராதோ ?- நான் போயி ராஜ குமாரரிடம் சொல்லிடுறேன் பாரு ! 

[மற்றொரு புறமாக விரைந்து போகிறான்.) 

விரைவுடன் தாராபாய் வருகிறாள். 

தா. காதலானது காரிகையர்க்கு எத்தனை யுக்திகளைக் கற்பிக்கின் றது! அதோ எனது காதலர் வருகின்றார் மிக்க விரைவோ டும். நான் இங்கே ஒளிந்து கொள்கிறேன். இங்கு வந்து என்னைத் தேடுவார் ; தேடட்டும். என்ன செய்கிறாரோ பார்ப் போம். பிணங்கியபின் இணங்குவதே பேதை மாதர்களுக் குப் பெரு மகிழ்ச்சி யுண்டாக்கும். அதோ வந்துவிட்டார். 

[மறைந்து கொள்கிறாள்.] 

விரைவுடன் ஜெயசிங் வருகிறான். 

ஜெ. (நான்கு பக்கமும் சுற்றிப் பார்த்து] எங்கே? காணோம்? இங் குதானே விரைந்து வந்தனள்? எங்கேயாவது ஒளிந்திருக்க வேண்டும்.- கண்ணே! கண்ணே ! இதுவும் ஓர் வினோ தமா ? கண்முன் உன்னை நான் காணாவிட்டாலும், காதலி. நீ இங்கிருப்பதை யறியேனோ? 

“கண்முனர்யா னுனையிப்போ காணாமற் போய்விடினும் 
உண்மனத்து ளுனையென்றுங் காண்கின்றேன் உத்தமியே” 

[பின்புறமாகத் தாராபாய் வந்து ஜெயசிங்கின் கண்களைத் தன்னிரு கைகளாலும் மூடிவிடுகிறாள்.] 

“கண்ணினைக் காதலின் மூடிக் கட்டிநீ யணைத்திடவே 
புண்ணியமென் செய்தேனோ பூர்வஜென்மத் திப்புவியில்,” 

தா. “உன்னதமோ நின்கண்செய் பாக்கியந்தான் உத்தமனே 
என் அதரம் செய்பாக்யத் திற்கீடோ இத்தரையில்”

பிராணநாதா, என் அதரமானது செய்த பாக்கியத்தை யோசித்தால் உமது கண்கள் செய்த பாக்கியம் அதன் முன் என்னாம்? 

ஜெ. காதலி, என்ன விந்தை ! கேவலம் எனது கண்களை, தேவ ரும் மூவரும் தேடியும் கிடைக்கொணா உன் அதரத்துடன் ஒத்திட்டுக் கூறலாமோ? என் கண்களல்ல என் தேக முழு துமே உன் பதமலருக்குச் சமான மாகாதே. 

தா. பிராணநாதா, தம்மைத் தாமே இவ்வா றிழித்துக் கூறுவது நியாய மல்ல. 

ஜெ. நியாய மல்லவா? நியாய மெடுத் துரைத்தால் ஒப்புக்கொள், இல்லாவிடின் நான் கூறியது தவறென்று ஒப்புக் கொள்கி றேன். 

தா. என்ன நியாயம் பிராணநாதா? 

ஜெ. கண்ணே, கேள் 

“உன்பாதம் மண்மீது வுறுத்துவதாற் சிவந்திடவும் 
என்றேகம் எல்லாமும் சிவந்திடவே யென் செய்கேன்?”

உன் பாத கமலங்கள் பூமியின்மீது உறுத்துவதினால் சற்றே சிவந்திடவும், அதனாலே பூவையே, என் கண்கள் மாத்திரம் அல்ல, என் உடல் முழுதும் இவ்வாறு சிவந்திடுதற் கென் செய்வேன்? 

தா. பிராணநாதா, நான் உட்கார வேண்டுமென்று இந்த யுக்தி செய்தீரோ? உட்காரும் நீர் முன்பு. 

[பலவந்தமா யுட்காரச்செய்து, தானும் உட்காருகிறாள்.]

பிராணநாதா, உம்மை யொன்று கேட்கவேண்டு மென்றிருந் தேன். சற்று முன்பாக நான் உமது கண்ணுக்குப் புலப்படா விடினும் உமது ஹிருதயத்தில் இங் கிருப்பதாக அறிகிறே னென்று கூறினீரே அது எங்ஙனம்? 

ஜெ. கண்ணே, சந்திர னுதயமானவுடன் மேகங்கள் மறைத்த போதிலும் அதை யறிந்து நீலோற்பலம் எங்ஙனம் மலருமோ, அங்ஙனமே உன் முகத்தை யிச்செடிகள் மறைத்தபோதிலும் என் ஹிருதயம் கண்டு மலர்கின்றது. 

தா. பிராணநாதா, எனக்கும் அப்படித்தா னிருக்கின்றது. அதை அறியும்பொருட்டே நான் கேட்டது. இதற்குக் காரணம் நாம் கொண்டிருக்குங் காத லன்றோ ? அக் காதலை விளைத்த கால காலன் கண்ணுதலாற் காய்ந் தெரித்த காமனது திறத்தை யென்சொல்வேன்? உருவமோ அருவம், தேரோ கிளிகளா கிய குதிரைகள் பூட்டிய தென்றல், வில்லோ கரும்பு, பாணமோ புஷ்பம், முரசமோ கருங்கடல், காகளமோ குயில், இவற்றைக் கொண்டு ஈசனையும் இன்னும் ஈசன் படைத்த எவ் வுயிரையும் ஜெயிக்கிறானே, அவனது மகிமையே மகிமை! பிராணநாதா, இல்லாவிடின் சிறந்த க்ஷத்திரிய வீரராகிய தாம் கேவலம் தோழித் தொழில் புரியும் என்மீது காதல் கொள்ளும் படி நேரிடுமோ? 

ஜெ. காதலியே, அப்படியல்ல. விரும்பும் எந்த ராஜகுமாரனையும் வரிக்க வல்ல குணமும் அழகுமுடைய நீ, கேவலம் குதிரை யாளாகிய என்மீது காதல் கொண்டதன்றோ ஆச்சரியம் என்று கூறல் வேண்டும். 

தா. பிராணநாதா, அதைத் தான் கேட்க வேண்டுமென் றிருந் தேன். தம்முடைய சிறந்த வீரத்திற்கு இதைவிட மேலான ஸ்திதியி லிருக்கவேண்டுமே. எது தாம் இத் தொழில் புரி வது? அதை. அடியாளுக் கருளவேண்டும். 

ஜெ. கண்மணி, அரசனா யிருப்பதும், அவனது வேலை யாளா யிருப்பதும் எல்லாம் விதிவச மென்றெண்ணுவாய். 

“காத்தருள் கண்ணன் றானுங் கடும்விதி வசத்தி னாலே
பார்த்தன்சா ரதியா யிந்தப் பாரினி லுழன்றா னன்றோ.”

அகில அண்டங்களையும் அளித்தருள் அக்கிருஷ்ணனே ஐவரி லொருவனாம் அர்ச்சுனனுக்குச் சாரதியாய் அசுவ மோட்டுக் தொழில் புரியும்படி நேரிட்ட தல்லவா விதி வசத்தால்? 

தா. ஆனால் அத் தொழிலில் தவிர மற்ற எத் தொழிலிலும் அவரைப்போ லாகமாட்டீரே? 

ஜெ. கண்ணே, கண்ணே, உனக்கேனிந்தச் சந்தேகம் ? தொழி லில் விஷ்ணுவின் அந்த அவதாரத்தை இப்பொழுது ஒத்திருந்த போதிலும், கோட்பாட்டில் அதற்கு முந்திய அவதாரத்தை யொத்திருக்கின்றேன். ஜகத் ரக்ஷகனாகிய ஸ்ரீராமபிரானைப் போல் எனக்கும், சொல்வது ஒரே வார்த்தை, வெல்வது ஒரே பாணம், கொள்வது ஒரே பத்னி ! கண்மணி, உனக்கே னிந்த சந்தேகம் என்மீது ? 

தா. பிராணநாதா. தாமோ எந்த க்ஷத்திரிய அரச குமாரியை விரும்பினும் மணக்கவல்ல குணங்கள் பொருந்தப்பெற்ற வரா யிருக்கின்றீர். அப்படி யிருக்க ஒரு அற்பத் தோழியா கிய என்மீது என்றுங் காதல் குன்றாதிருப்பீரா என்று கொஞ் சம் சந்தேகம் பிறந்தது. அதைத்தான் கேட்டேன், மன்னியும்.

ஜெ. கண்ணே, கண்ணே, நான் என் மனப்பூர்வமாகக் காதல் கொண்டபின், நீ யாரா யிருந்தாலு மென்ன? நீ யிதனிலும் இழி தொழில் புரியும் பாங்கியா யிருந்தால் அது குறையப் போகிறதா? அல்லது நீ யித்தேசத்து அரசியா யிருந்தால் அதிகமாகப் போகின்றதா? ஒன்றுமில்லை. ஆண்மக்களாகிய எங்களுக்கு அப் பேதமே கிடையாது. 

தா. அதென்ன, பிராணநாதா கடைசியில் ‘ஆண்மக்களாகிய எங் களுக்கு ‘ என்று ஒன்றைச் சேர்த்தீர் ? ஸ்திரீ ஜாதியாகிய எங் களுக்கு அந்தப் பேதம் உண்டென்று நினைக்கின்றீர் போலும், அப்படி ஒருகாலும் தாம் எண்ணலாகாது. இதோ ரூபிக்கின் றேன், கேளும்.நான் யாரை மணந்தாலும் இத்தேசத்திற்கு ஜன்மத் துவேஷியாகிய ஜெயபுரி அரசன் குமாரனைக் கண் ணெடுத்தும் பார்ப்ப தில்லையென்று தீர்மானித்திருந்தேன்–

ஜெ. இருந்தா லென்ன ? 

தா.  கேளும், இப்பொழுது நீர் ஜெயபுரி அரசகுமாரன்-

ஜெ. நானா ! யார் சொன்னது ? 

தா. என்று, கொஞ்சம் நினைத்துக் கொள்ளும். அப்படி யிருந்த போதிலும் எப்பொழுது தம்மீது காதல் கொண்டேனே அப் போதே அந்தத் துவேஷம் எல்லாம் போம் அரை க்ஷணத்தில். நீர்-இத்தேசத் தரசன்மீது ஜன்மத் துவேஷங் கொண்டிருக் கிறீர் – என்று கொஞ்சம் நினைத்துக் கொள்ளும். அப்படி யிருக்கும்பொழுது நான் இத்தேசத் தரசன் குமாரியா யிருப் பேனாயின் என்மீது காதல் கொள்வீரோ? காத்திரங் கொள் வீரோ ? 

ஜெ. கண்மணி, உன்மீது காதல் கொண்டபின் கோபம் எங்கிருந்து வரும் ? 

தா. சத்தியமாக ? 

தா.ஜெ. [யாரோ வருகிற சப்தம் கேட்டு, அந்தப் பக்கம் திரும்பி] யார் அது ? 

ஒரு புறமாக மதால்சிங்கும், மற்றொரு புறமாக துளசிபாயும் வெகு வேகமாய் வருகிறார்கள்.

மதா. நான் மின்னெ சொல்லிடுறேன் ! 

து. நான் முன்னெ சொல்லி விடுகிறேன்!- தாராபாய்! சமாசாரம் தெரியுமா? ராஜகுமாரன் இதல்ல ! அதோ அவர்தான்!

மதா. நான் சொல்லமாட்டேனோ ?-அரசே! அதோ ராஜகுமாரி 1 இது ராஜகுமாரியல்ல ! இது ராஜகுமாரியின் தோழி – தோழி!

ஜெ. தாராபாய்! 

தா. பிராணநாதா! 

[இருவர் கண்களும் சந்திக்கின்றன.)

மதா. அதிருக்கட்டும் — அரசே, நம்பளெ யிப்படி மோசஞ் செய்தாங் களே, இனிமேலே நம்போ ஒரு க்ஷணங்கூட இங்கேயிருக்கக் கூடாது. நம்ப ஊருக்குப் பூடுவோம் வாங்க. 

து. தாராபாய்! நம்மை யிப்படி மோசஞ் செய்த இவர்களைச் சும்மா விட்டுவிடுவதா? அவர்கள் ஊருக்குத் திரும்பிப் போகுமுன் தக்கபடி தண்டித் தனுப்ப வேண்டாமா?

தா. எல்லாம் யோசித்துச் செய்வோம், அவசரப்படாதே.

து. ஓகோ! யோசிக்கிறதாவது? உனக்கென்ன சொல்லாதே! நீ ராஜகுமாரனைக் கலியாணஞ் செய்துகொள்ளப் போகி றாயோ? என்னால் பொறுக்க முடியாது ! நான் பட்டது எனக் குத் தெரியும். நான் இவர்களைத் தண்டிக்கும் வழியைச் சீக்கிரம் தேடாவிட்டால், நான் துளசிபாயல்ல! 

[விரைந்து போகிறான்.] 

ஜெ. மதால், ராஜகுமாரி உனக்கு கிடைக்காமற்போனாற் போகிறது. ராஜகுமாரியின் தோழியாவது கிடைத்தாற்போது முனக்கு. அதோ துளசிபாய் கோபித்துக்கொண்டு போகிறாள்,நீ விரைந்து சென்று சமாதானப்படுத்தி உன்னை மணஞ் செய்து கொள்ளும்படி செய், போ உடனே. 

மதா. ஆமாம். அத்தெயாவது கேட்கிறேன். 

[போகிறான்.] 

ஜெ: தாராபாய்! சற்று முன்பாக நான் மகா பாதக மொன்று செய்தவன் என்று கூறினேனே, தெரிகின்றதா இப்பொழுது அது இன்னதென்று? 

தா. தெரிகின்றது.- அப்பொழுதே நான் சந்தேகித்தேன். 

ஜெ. கண்ணே, என் முன்னோர்கள் உன் வம்சத்தாருக்கிழைத்த தீங்குகளை யெல்லாம் மன்னித்து, என்னைக் கடைத்தேறச் செய்யமாட்டாயா? 

தா. பிராணநாதா,-அப்பொழுதே அதையெல்லாம் மறந்துவிட்டேன். 

ஜெ. எப்பொழுதே ? 

தா. உம்மீது காதல் கொண்ட பொழுதே ! பிராணநாதா, அதிருக் கட்டும் இப்பொழுது இந்தத் துளசிபாய்போய் ஏதாவது கலகஞ் செய்துவிடப் போகிறாள். மஹாராஜாவுக்கு இந்தச் சங்கதி யெட்டுமுன் நாம் அவர் முன்பு போய் ஏதாவது யுக்தி செய்து அவர் அனுமதியைப் பெறவேண்டும். என்ன சொல்லுகிறீர் ? 

ஜெ. ஆம், கண்ணே. அது ஒரு பெரிய கஷ்டமிருக்கின்றது. நீடித்து நமக்கிருந்த ஜன்மத் துவேஷத்தை நீ மறந்து மன்னித்ததுபோல் அவர் அவ் வயதில் அவ்வளவு சீக்கிரமாக மறத்தல் அசாத்திய மாயிற்றே ! 

தா. வாரும் போவோம் அவரிடம். இவ்வளவு நமக்கு அனுகூலஞ் செய்த இறைவன் இதிலும் நமக்கு வழிகாட்டுவார். தெய்வமே கதி யென்று போவோம் மஹாராஜாவிடம். வாரும் நீரும். 

[இருவரும் போகிறார்கள்.] 

காட்சி முடிகிறது. 

ஆறாவது காட்சி

இடம் – தோட்டத்தில் வசந்த மண்டபம். காலம் – மாலை

யோசித்தவண்ணம் உதயசிங் உட்கார்ந்திருக்கிறான். 

தாராபாய் வெகு அவசரமாய் வருகிறாள். 

தா. அப்பா, இங்கா இருக்கின்றீர்கள் ? உங்களைத் தேடி அரண் மனை முழுதுஞ் சுற்றிவந்தேன்.- என்ன இங்குத் தனியாய் உட்கார்ந்துகொண் டிருக்கிறீர்கள் ? முகம் ஒருவாறாய் மாறி யிருக்கின்றது ; என்ன விசேஷம் ? 

உ. கண்மணி, உன்னிடம் நான் கூறக்கூடாத விஷயமு முண்டோ? வே றொன்று மில்லை. நமக்கு நேர்ந்த சங்கடத் தினின்றும் நாம் யுக்தி செய்து தப்பித்துக் கொண்டபோதிலும், எப்படியும் ஒரு நாள் உண்மை வெளியாகுமே, அதற்கென்ன செய்வதென்று யோசித்துக்கொண்டிருந்தேன். அதற்குள் உனக்கு எப்படியாவது தக்க புருஷனைத் தேடி விவாகஞ் செய்துவிட்டால், பிறகு என்ன நேர்ந்தபோதிலும் எனக்குக் கவலையில்லை; உனது அழகிற்கும் அறிவிற்கும் அருங்குணத் திற்கும் அமைந்த புருஷனை நான் எங்கே தேடிக் கண்டு பிடிக்கப்போகிறேன் விரைவில் ? 

தா. அப்பா, இதுவரையில் தாம் எத்தனையோ க்ஷத்திரிய ராஜ குமாரர்களைப் பார்த்திருப்பீர்களே, ஒருவனாவது உமது மனத் திற்குத் தக்கவனாகத் தோற்றப்படவில்லையா? 

உ. தாராபாய், தாராபாய்! ஒருவனும் அகப்படவில்லை. உண் மையைக் கேட்பாயாயின் என் மனத்திற்குத் திர்ப்திகரமான உனக்குத் தக்க புருஷன் அவ் வீர னொருவன்தா னிருக்கிறான். கண்மணி, அவன் தான் உனக்குத் தக்க புருஷன் என்று எனக்குத் தோற்றுகிறது. ஆயினும் என் வாக்குதத்தத்தை நான் மறக்கவில்லை. நான் ஏதோ பலவந்திக்கிறேனென்று எண்ண வேண்டாம். 

தா. அப்பா, நான்- சொல்வ-தென்றால் – எனக்குக்-கூச்சமா யிருக்கிறது. 

உ. தாராபாய், என்னிடங் கூற உனக்குக் கூச்சமென்ன? 

தா. அப்பா, அந்தப் புருஷனைக் கண்டதுமுதல் அவரையே நாடி யது என் மனம். அதைப்பற்றிக் கேட்கவே நான் இங்கு வந் தேன் உம்மிடம். 

உ. பழம் நழுகிப் பாலில் விழுந்ததுபோ லாச்சுது. உன் மனத்தை அறிந்துகொண்டபிறகே அவனிடம் இதைப் பற்றிப் பிரஸ் தாபம் பண்ணவேண்டுமென் றிருந்தேன் – யாரடா அங்கே ? -(ஒரு சேவகன் வருகிறான்.) உடனே போய் மதால்சிங்கை நான் அழைப்பதாகச் சொல்லி அழைத்துவா இங்கு. 

(சேவகன் போகிறான்.)

ஜு. (உள்ளிருந்து] நம்போ ஜுல்பிகர்கான் சாயப் ! பாக்கணும் ! உடனே சொல்! 

உ. யார் அது ?- ஜுல்பிகர்கானா ? இப்பொழுது இங்கே என்னைப் பார்க்கவேண்டுமென்கிற அவசர மென்ன ? 

வேகமாய் ஜூல்பிகர்கான் வருகிறான். 

ஜு. ஹா ! உடைசிங்! அச்சா காம் கர்த்தே! நல்ல வேலே பண்ணா ! அரே, நம்பள்கி மோசம் பண்ணான் ! நம்பள்கி ஜுல்பிகர்கான் பஹதூர்கி, மோசம் பண்ணா நீ ? 

உ. கான் சாயப் ! என்ன சமாசாரம்? 

பின்புறமாக ஜெயசிங் வருகிறான். 

ஜு. அரே ! என்னா சமாசாரம் இண்ணு நம்பள்கி கேக்கரா இன் னம் ? மோஷம்கி செஞ்சிப்போட்டு சாம்நே நிண்ணு பேஷ் ரான் நீ ? உடைசிங், உன்கி- உன்கி–உன்கி – நவ்கர்கி ராஜ்குமாரி வேஷம்போட்டு நம்பள்கி மோசம் பண்ணா! உடைசிங் ! நீ க்ஷத்திரி இர்ந்துக்குனு மோஷம்கி பண்ணா! உடைசிங்! முசல்மான்கி கீளே ஆக்கிபோட்டான்! நம்போ ஜாதி நீ சே பண்ணி போட்ரான் ! 

ஜெ. சுப்ரஹோ; ஜூல்பிகர்! கியா பாத் போல்தா? மூடுவாயை! என்ன மதி மயங்கிப் பேசுகின்றாய் ? மதி யற்ற மடையா! நீயா எங்கள் க்ஷத்திரிய ஜாதியை இழிவாகப் பேசத்தக்கவன்? நீயா எங்கள் ஜாதியை மோசக்கார ஜாதி என்று சொல்லத்தக்க வன் இனி எங்கள் க்ஷத்திரிய குலத்தையாவது எங்கள் அரச னாகிய உதய சிங்கையாவது ஒரு வார்த்தை இழிவாகப் பேசுவதன் முன், எடு வாளை! எங்கள் க்ஷத்திரிய குலத்தின் சௌரி யத்தைக் காட்டுகிறேன் ! தாடியைப் படைத்த துலுக்கனானால் எடு வாளை! எங்கள் குலத்து வீரத்தைக் காட்டுகிறேன் ! 

ஜு. உன்கி நம்பள்கி சண்டே இல்லே பாய் ! — உன்கி திட்னா நம்பள்? 

ஜெ. என்னை வைதாலென்ன ? எங்கள் குலத்தை வைதாலென்ன? எங்கள் குல சிரேஷ்டரான இவரை வைதா லென்ன ? பேசாதே ஒரு வார்த்தை இனி ! 

உ. அப்பா! [ஜெயசிங்கைத் தழுவிக்கொண்டு] மெச்சினேன் ! மெச்சினேன்! க்ஷத்திரிய னென்றால் நீதான் க்ஷத்திரியன்! அப்பா, உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகி றேன்? கேள், உனக்கென்ன வேண்டுமோ தருகிறேன். இவ் விராஜ்ய முழுதும் வேண்டினும் கேள். இதை நான் ஆளச் சக்தியற்றவன். கேள், இட்சணம். 

ஜெ.அரசே, எனக்கு இந்த ராஜ்யம் வேண்டியதில்லை. இதினும் எனக் கருமையான தொன்றிருக்கின்றது. அதைத் தந்தருள வேண்டும். 

உ. என்ன? கேள் ! கொடுக்கிறேன்.- யோசியாதே; நான் ஒரு முறை வாக்களித்தபின் அது எதுவானாலும் தருவேன், பயப் படாதே. 

ஜெ. ஆனால் – உமது தமயன் குமாரியை எனக்குத் தானமாகக் கொடுக்கவேண்டும். 

உ. இதுதானோ ? நீ என்ன அசாத்தியமானது கேட்கப்போகின் றாயோ என்றிருந்தேன். சற்று முன்பாக நானே இக் கன்னி கையை உனக்குக் கொடுக்கவேண்டுமென்று யோசித்திருந் தேன். இதோ என் மனப்பூர்வமாகத் தந்தேன், பெற்றுக் கொள். [ஜெயசிங் கையில் தாராபாய் கையை வைக்கின் றான்.) மதால்சிங், நீ எப்பொழுது- 

ஜு. அரேரே! கோன் மதால்சிங்? உடைசிங்! நீ மோஷம் பண்ணா, அல்லா உன்கி மோஷம் பண்ணா! இவன்கிதான் ஜெயசிங்பாய்! 

உ. ஜெயசிங்! 

ஜெ. தா. [உதயசிங் பாதத்தில் வணங்குகிறார்கள்.] 

ஜெ. அரசே! என்னை மன்னிக்கவேண்டும். 

தா. அப்பா! என்னை மன்னிக்கவேண்டும்! அப்பா என் பிராண நாதர் மீது இனித் தாம் கோபிக்கலாகாது. நாம் எப்படி இதி னின்றும் தப்பித்துக்கொள்ள வேண்டுமென்று யுக்தி செய் தோமோ, அப்படியே அவரும் தப்பித்துக்கொள்ள எண்ணி யுக்தி செய்தார். நானவர் இன்னாரென்று அறியாமலே அவ ரைப் பார்த்தவுடன் அவர் மீது காதல்கொண்டேன் ; அவரும் நான் இன்னாளென அறியாமலே என் மீது காதல்கொண்டார். தாமும் அவருக்கு என்னை விவாகம் செய்து கொடுப்பதற் கிசைந்தீர். அன்றியும் நீர் கூறிய வாக்குத்தத்தின்படி என் னைத் தானமாக ஒப்புக் கொடுத்துவிட்டீர். இனி உமது வாக் குப் பழுதாகலாமா? 

உ. தாராபாய்! நமது ராஜ்யத்தையெல்லாம் கைப்பற்றுவதாக ஜெயசிங் சபதம் செய்திருக்கின்றான், தெரியுமா உனக்கு ?

ஜெ. அப்படிச் செய்யாவிட்டாலும் உமது ராஜ்யத்தின் அரசியைக் கைப்பற்றினேன்! அரசே, உமக்கேன் வருத்தம்? எனது சகல சைனியங்களுதவியைக் கொண்டு உமது ராஜ்யத்தைக் கைப்பற்றலாமென்று நான் யோசித்திருந்தது மேலோ? உமது குமாரத்தி தன திரு கண்களால் என்னைக் கைதியாகப் பிடித்துவிட்டது மேலோ? நான் ஒப்புக்கொள்ளுகிறேன், உமது குமாரத்தியே வென்றாள், நானே தோற்றேன், சம்மதம் தானோ ? அரசே, நான் சிறியவன். ஏதாவது பிழை அறியாது செய்திருந்தால், தாம் பெரியவர் மன்னிக்கவேண்டும்.

உ. ஜெயசிங் ! மன்னித்தேன் ! மன்னித்தேன் உன்னை ; விதியை வெல்லுவார் யார்? ஜெகதீசன் எண்ணம் மகம்மதுஷாவின் எண்ணம்போலவே இருந்ததுபோலும். 

ஜு. அரேரேரே ! நம்பள்கி தப்பு பண்ணா பாய் ! தப்பு பண்ணா பாய் ! 

செயிட்சிங் வருகிறான். 

உ. செ. என்ன? என்ன ? 

ஜூ. நம்பள் மனஸ்லே கட்படி, வந்தா ! தெரியாத் போச்சி பாய். மை ஷா இன்ஷாகு ஜெய்சிங் ராஜ்குமாரியெ கண்ணாலம் பண் ணலே, மோஷம் பண்ணா சொல்லி அனுப்பிச்சூட்டாம் பாய்!

செ. யாரை அனுப்பினீர்? 

ஜு. ஏ தத்துவாய் மதன்சிங் அனுப்பிட்டேன். 

செ. சரி ! அது முன்னமே தத்துவாய்! சரியாகச் சொன்னாலே தப்பாகச் சொல்லும். 

ஜு. அவன்கிகூட வீர்சிங் போனாம் பாய்! 

செ. சரி! அவன் வேலைதானிது எல்லாம். நினைத்தேன். அவன் போனால் சும்மா விடமாட்டான், ஷாஇன்ஷாவுக்கு நன்றாய்க் கோபம் மூட்டிவைப்பான். பிறகு என்ன பிரமாதம் நேரிடப் போகின்றதோ? 

ஜெ. பிரமாதம் ஒன்றும் நேரிடவேண்டியதில்லை. ஷாஇன்ஷா உத் தரவின்படிதான் எல்லாம் நடந்ததே : நான் ராஜகுமாரியைத் தானே விவாகம் செய்துகொள்கிறேன். ஷாஇன்ஷா கேட் கட்டும், நான் பதில் சொல்லிக் கொள்கிறேன். 

ஜு. ஓ! அச்சா, அச்சா, இப்பொ காபகம் வந்தான் ! அச்சா!

சன்யாசி உடை தரித்துக்கொண்டு மதால்சிங் வருகிறான். 

செ. எல்லாம் அச்சாதான் !-அரசே, மதால்சிங் தம்மை என் னவோ கேட்கவேண்டுமென்று வந்திருக்கிறான். 

ஜெ. என்ன மதால் ?-இதென்ன கோலம்? 

மதா. ஒண்ணு மில்லே-எனக்கு உத்தரவு கொடுக்கணும். ஜெ. என்ன உத்தரவு? 

மதா. நான் சன்னாசியா பூடப்போரேன்– 

ஜெ. சேசே ! அதென்ன அது ? இந்த ராஜகுமாரி போனாற் போகி றது. வேறே இந்த உலகத்திலே எத்தனை ராஜகுமாரிகள் இருக்கிறார்கள் ! (சீச்சீ! இந்தக் கோலம் உனக்கு வேண் டாம் !) துளசிபாயிடம் போய் கேட்டுப் பார்த்தையா? 

மதா. அது கேக்ரத்துக்கு முன்னே ஒரு வேலெ செய்யவோணும். 

ஜெ. அது என்ன ? 

மதா. நான் ஒரு ராஜகுமாரியெ கண்ணாலம் பண்ணிக்குவேண்ணு என் ஜாதகம் பாத்து சொன்னானெ, அந்த ஜோஸ்யன் தலெயெ ஒடெச்சிட்டு வரணும்? 

தா. ஐயோ! அப்படி ஒன்றும் செய்யவேண்டியதில்லை. துளசி பாயும் ராஜ வம்சத்தில் பிறந்தவள்தான். நான் துளசிபாயி டம் பேசி சம்மதிக்கச் செய்கிறேன். நீர் கவலைப்பட வேண்டாம். 

தா. பிராணநாதா, இந்த வேஷம் போட்ட வேலைதான் தீர்ந்ததே. இனி இக்கோலமேன் ? இதைக் கழற்றி உம்முடை ஆடை ஆபரணங்களைத் தரித்துக்கொள்ளும். 

ஜெ. அப்படியே ஆகட்டும். 

ஜு. உடைசிங், உடைசிங் ! இன்னும் என்ன தாம்ஷம் பண் ராம் பாய் ! உட்னே தாவத், தாவத், ஆரம்பி பாய்! 

உ. ஆம், வாருங்கள் போவோம் அரண்மனைக்கு. 

(எல்லோரும் போகிறார்கள்) 

ஏழாவது காட்சி

இடம் – கொலு மண்டபம். காலம்- காலை 

மங்கள வாத்ய கோஷம். கலியாணக் கோலத்துடன் ஜெயசிங்கும் தாராபாயும் வருகிறார்கள்; அவ்வாறே மதால்சிங்கும் துளசிபாயும் வருகிறார்கள் ; பிறகு உதயசிங், ஜுல்பிகர்கான், செயிட்சிங் முதலானோர் வருகின்றனர். 

கொலுவில் எல்லோரும் அமர்ந்தபிறகு ஜெயசிங்கிற்கு நஜர்கள் கொடுக்கப்படுகின்றன. 

உ. சபையோரே. எம்பெருமான் ஏகலிங்கன் அருளால் எல்லாம் சுபமாய் முடிந்தது, இனி –

[வெளியில் பேரிகை முழங்கக் கேட்டு] 

என்ன! இந்த சமயத்தில் நமது யுத்த பேரிகை முழங்கு வானேன்?- சேவகா, விரைந்துபோய் என்னவென்று விசா ரித்து வா.[ஓர் சேவகன் விரைந்து போகிறான்.] 

ஜெ. வெளியில் மகம்மதிய நகாராவின் ஒலியும் கேட்கிறது! 

தா. ஒரு வேளை மகம்மதுஷா வருகிறாரோ என்னவோ ? 

ஜெ. மகம்மது ஷா !

ஜு. அல்லாரே ! மகம்மத் ஷா!- 

மறுபடியும் சேவகன் வருகிறான். 

சே. மஹாராஜா ! மகம்மத் ஷா பாதுஷா பரிவாரங்களுடன் வேக மாய் வருகிறார் அரண்மனைக்குள்! 

எல்லோரும். ஆ ! அப்படியா! (எழுந்திருக்கின்றனர்.) 

ஜு. அல்லாரே! அல்லாரே! ஜெயசிங் ! ஜெயசிங்! நம்பளே நீ காப்பாத்ரா, இல்லாப்போனா நம்பள் சத்தூப் பூடரான் ! 

[“ஷா இன்ஷா ” மகம்மது ஷா பாதுஷா “உஷார் ஹோ ஜாவ்” என்று கூச்சல் உள்ளே] 

உ. செயிட்சிங் ! ஜூல்பிகர்கான் சாயப்! நீங்கள்போய் பாது ஷாவை அழைத்து வாருங்கள் எதிர்கொண்டு- 

[செயிட்சிங் ஜுல்பிகர்கான் போகிறார்கள்.] 

ஜெ. மஹாராஜா, தாங்கள் ஒன்றும் அவசரப்படவேண்டாம், நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுகிறேன். 

ஜுல்பிகர்கானும், செயிட்சிங்கும், வழி காட்ட மகம்மதுஷா பரிவாரங்கள் சூழ வருகிறான். 

உதயசிங் முதலானோர் அவனை மிகுந்த மரியாதையுடன் நல் வர வழைக்கின்றனர்: மதனசிங்கும், வீர்சிங்கும் வருகின்றனர். 

ம. ஜெயசிங்! இதர் ஆவ், மை மகம்மத்ஷா ! டில்லிகா பாது ஷா! நம்போ உத்ரவ் பண்ணா. நீ மோஷம் பண்ணா! உன்னே கொண்ணுப் போடரான் ! 

ஜெ. ஷா இன்ஷா! பொறுக்கவேண்டும். ஹுஜுர் கட்டளைப் படியே நடந்தேன் நான். 

ம. அஜ்மீர் ராஜா பேடி உன்னே ஷாதிபண்ண உத்ரவ் கொடுத் தான் நம்பள், உன்கி நவ்கர்கி ஷாதி பண்ண உத்ரவ் கொடுத்தான்? 

ஜெ. ஷா இன்ஷா ! அஜ்மீர் ராஜ குமாரியை நானே விவாகஞ் செய்துகொண்டேன். தாங்கள் விசாரித்துப் பார்க்கலாம். இது சத்தியம். உதயசிங் அவர்களைத் தாங்களே கேட்டுப் பார்க்கலாம். 

ம. உடைசிங்! ஏ கியா? ராஜ் குமார்கி கண்ணாலம் பண்ணா.

உ. ஆம், ஷா இன்ஷா. 

ம. அரேரேரே ! நம்பள்கிட்ட பொய் பேசனா ! புலாவ் இதர் வீர்சிங் ! – வீர்சிங்! நம்பட்கிட்ட ஜூட் பேசனா, ஜெயசிங் நவ்கர் வேஷம் போட்டா இண்ணு? உன்கி தலே வெட்டிப் போடரான் ! 

வீ. [ஒரு புறம்] என்ன கஷ்டம் ! இதற்கு என்ன சொன்னாலும் தெரியாதே.-ஷா இன்ஷா! நான் என்ன செய்வது? ஜூல் பிகர்கான் சாயப் சொல்லி யனுப்பியதைத் தங்களிடம் கூறி னேன் ! என்மீது தவறு ஒன்றுமில்லை. 

ம. ஹோ! அச்சா! புலாவ் ஜூல்பிகர்!-ஜுல்பிகர், மேரேசே ஜுட்பாத் கிம் கஹா? துமே சூலிபர் சடாகர் னேகு ஆகே ஜவாப் ஜல்தி தேவ் ! 

ஜு. ஷா இன்ஷா! அம்கு மாலும் நை ! ஏ மதன்சிங் வைசா போலியா அம்கு! 

ம. ஹோ! அச்சா! வைசா ஹை! புலாவ் மதன்சிங் இதர் மதன்சிங்! நீ பொய்பேசனா? உன்கி தலெ வெட்டிப் பூடரான் நம்பள் ! 

மத. ஏ! சா… …. உன்சா! 

மதால்சிங் வருகிறான். 

மதா. [ஜெயசிங்கிடம்] உத்தரவு செய்தூட்டேன் அரசே. 

மத. சா…வும் சா! வா.. வாஸ்தவம்! இ.இவன் தான் …. ஜெ…. ஜெய்சிங் வே…..வேஷம் போட்டா! 

ம. ஹோ ! மை ஜான்தே ! மை ஜான்தே ! நீ ஜெயசிங் வேஷம் போட்டா? இவன்கி தலெ வெட்டிப் பூடரான். 

மதா. ஏ! ஏ! என் தலெயா? இப்போதானே கண்ணாலம் ஆச்சி! 

ஜெ. ஷா இன்ஷா, இவனுக்கு இப்பொழுதுதான் ஷாதி ஆச்சுது: தாங்கள் மெஹர்பானி பண்ணவேண்டும். 

ம. அரே! உன்கி ஷாதி ஆச்சி? இவன்கி ஷாதி ஆச்சி ? 

ஜெ. இரண்டு பெயருக்கும் ஆச்சுது. 

ம. தோனோ ஷாதி! அச்சா ! பொஹத் அச்சா ! தாவத் ஹோகயா கியா? 

ஜு. நஹி ஷா இன்ஷா! ஆஜ்ரோஜ் தாவத் ஷுரு ஹை. 

தா. உடைசிங்! அச்சா! அம்கு பொஹுத் குஷி ஹுை ! நம்போ சரிகி வந்தான் ! குதாகு நமாஸ்கர்கர் பாதஸ் நம்போ தாவத்கு வர்ராங்கோ. அச்சா ஷராப் தயார் கரோ ! 

உ. அப்படியே ஷா இன்ஷா. 

தா. [ஜெயசிங்கிடம்] அந்த யுக்தி உங்களுக்குத் தெரியாமற் போயிற்றே பிராணநாதா ! 

ஜெ. ஆம் !- ஷா இன்ஷா, விருந்து சாப்பிடப் புறப்படுவோம். 

உ. ஏ கலிங்கா ! எல்லா இடரும் ஏகிய உன் கருணையால். 

[எல்லோரும் போகிறார்கள்]

(நாடகம் முற்றிற்று)

– ஐந்தாம் பதிப்பு 1956, நாடகப் பேராசிரியர் ப.சம்பந்த முதலியார், பி.ஏ.பி.எல் அவர்களால் இயற்றப்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *