காதற் கதை





(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“நான் எதற்காக உயிர் வாழவேண்டும்?” என்று அலுப்புடன் தன்னையே கேட்டுக் கொண்டான் ஸெராவினோ. “எனக்கு வயசு இருபதுக்கு மேலாகி விட்டது. எதிலும் ஈடுபாடில்லை ; திறமையில்லை; அதிர்ஷ்டமுமிலலை. நான் ஏழை; ரத்தம் செத்தவன்; சந்தோஷமில்லாதவன். ஜோராக உடுக்க என்னிடம் ஒரு கறுப்பு ஆடை கூடக் கிடையாது. ஒரு சமயம் ஒரு கதை எழுதிப் பத்திரிகைக்கு அனுப்பினேன் ; அது மறுநாளே திரும்பி வந்துவிட்டது. என்னைப் படிக்க வைப்பதற்காக என் பெற்றோர் கணக்கற்ற தியாகங்கள் செய்ய வேண்டியிருந்தது ; அவர்கள் அவ்வளவு ஏழைகள். நானும் ஏதோ படித்துப் பாஸ் பண்ணிவிட்டேன். என்ன லாபம் ? என்னுடைய கட்டாய ராணுவ சேவை காலம் முடிந்தபின் என் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும்? திவ்விய மாகத்தானிருக்கும், கேட்பானேன்? கடைசியில் சாக வேண்டியதுதான். வேறு என்ன?
வாழ்க்கையில் பற்றுதல் உள்ளவர்களுக்கு சாவு, தற்கொலை என்னும் சிந்தனையே பயங்கரமானதாக இருக்கும். ஸெராவினோவுக்கு அப்படியில்லை. தற்கொலை செய்து கொள்வதைப்பற்றி அவன் சிந்திப்பது இது முதல் தடவையல்ல. ஆயுள்முழுவதும் ஒரே ஊரில் வாழ்ந்து அலுத்தவர்கள் வேறு ஊருக்குப் போவதைப்பற்றிச் சிந்திப்பதுபோல அவன் சாவைப் பற்றிச் சிந்தித்தான்.
அவன் மிகவும் மிருதுவான, இரக்கமான சுபா வம் படைத்தவன் ; உள்ளத்தில் அன்பு நிறைந்தவன். பூனைக்குட்டியைப் பிடித்து அவஸ்தைப்படுத்திக் குறும்புக்காரச் சிறுவர்கள் விளையாடுவதுபோல விதி தன்னுடன் விளையாடுகிறது என்று அவன் நினைத் தான். இந்த நிலைமையில் சாவைப் பற்றிய சிந்தனை கள் அவனுக்கு இன்பமாக இருந்தன என்பதில். ஆச்சரியம் என்ன ?
பாசறையின் வெளிக் கதவை அணுகிக் கொண் டிருந்த ஒரு குள்ள சோல்ஜர் உரக்கப் பாடியதைக் கேட்டு ஸெராவினோ ஆச்சரியத்துடன் திரும்பிப்பார்த் தான்.அந்தப் பாட்டின் வார்த்தைகள் அவனுடைய உள்ளத்தின் எதிரொலியே போல் அமைந்திருந்தன. வாழ்க்கையில் துயரத்தைத் தவிர வேறு எதுவுமே கிடையாது என்றும், துயரத்தின் முடிவு சாவிலே தான் என்றும் அந்த சோல்ஜர் பாடிக்கொண்டிருந்தான். ஸெராவினோவுக்கு வேறு ஒருவர் இதைச் சொல்லியும் காட்ட வேண்டுமா என்ன ?
சாவைப்பற்றிய சிந்தனைகள் சதா அவன் உள்ளத்தைப் பாதித்தன.ஆனால் ஏதாவது ஒரு மகத்தான காரியத்தைச் சாதித்து விட்டுத்தான் சாக வேண்டுமென்று அவன் தீர்மானித்திருந்தான். தற் கொலை செய்து கொள்வதானால்கூட அதை வீரமரணமாக மனிதர்கள் அங்கீகரிக்கும்படிச் செய்து விட வேண்டும் என்று அவன் விரும்பினான். அவன் பேராசைக்காரனும் அல்ல ; கர்வியும் அல்ல. ஆனால் இந்த விஷயத்தில் மட்டும் அந்தரங்கத்தில் அவனுக்கு அளவு கடந்த ஆசை இருந்தது. தன்னுடைய வீர மரணத்தைப்பற்றி அவன் பகற் கனவுகள் காண்பது தினசரிக் காரியம் தான்.
தான் யாராவது ஒரு பணக்கார அழகியையோ கல்யாணமான ஒரு கலை ராணியையோ காதலிப்ப தாக அவன் கனவு காணுவான். அவளும் அவனையே காதலிப்பாள். ஆனால் எத்தனையோ இடையூறுகள் குறுக்கிடும். காதல் பூர்த்தியாகாமல் அவன் தற் கொலை செய்துகொள்ளுவான். இவ்வளவும், சொல்ல வேண்டுமா, கனவில்தான். முடிவாகத் தன் காத லுக்குத் தற்கொலை என்ற முத்தாய்ப்பு வைக்க அவன் உண்மையிலேயே தயாராக இருந்தான். ஆனால் காத லிக்கக் கூடிய அழகியைத்தான் காணவில்லை. என்ன பண்ணுவது?
கவிதை நிறைந்த தன் கனவுகள் வெறும் கனவு களே என்றும் பலிக்காதவை என்றும் ஸெரா வினோ அறிவான். ஏழைகளின் அதிர்ஷ்டம் அவ்வளவு தான். அவர்களுடைய சாவிலேகூடக் கவிதைக்கு இடம் கிடைக்காது. பட்டினி கிடந்தோ, மனம் உடைந்தோதான் அவர்கள் இறக்கலாம். வேறு வித மான வீர மரணம் அவர்களுக்கு இல்லை. இந்த ஞாபகம் ஸெராவினோவை இன்னும் அதிக துக்கத் தில் ஆழ்த்தியது.
நோய் வாய்ப்பட்டுத் தேறி பலஹீனமாய்ப் படுக்கையில் கிடக்கும்போது மனிதனுக்கு எல்லை யற்ற இன்பகரமான கனவுகள் தோன்றும். சாவைப் பற்றி ஸெராவினோவின் கனவுகள் அத்தன்மையன வாக இருந்தன. அன்று மாலை வழக்கத்தையும் விட அதிகமாகவே கவிதைக் கனவுகள் நிறைந்த சோகத் தில் அவன் ஆழ்ந்து கிடந்தான். இடம், பொருள், பொழுது எல்லாம் அவனுடைய துக்க மயமான சிந்தனைகளைத் தூண்டி கோபத்தை அதிகப்படுத்துவ தற்கு உதவின.
அந்த மலைத்தீவில் அவன் வந்து சேர்ந்து ஒரு வாரம் ஆகிறது. கட்டாய ராணுவ சேவை காலத்தை அந்த பாசறையில்தான் அவன் கழித்தாக வேண்டும். அந்தப் பாசறையை ஒட்டித் தீவின் உச்சியிலே ஒரு சிறைச்சாலையும் இருந்தது. சிறைச்சாலையின் வெள்ளை யடித்த சுவர்கள் எல்லாவற்றிற்கும் மேலாகச் சிகரம் போல உயர்ந்து நின்றன – ஸெராவினோவின் சிந்தனைகளில் சாவு என்ற ஞாபகம் உயர்ந்து நின் றதுபோல. நாலாபக்கத்திலும் அழகிய கடல். அற் புதமான சோக நாடகத்துக்கு இதைவிடச் சிறந்த பின்னணிப் படுதா எங்கு கிடைக்கும்?
இடம் இப்படி. காலம் ? இலையுதிர் காலத்தில் மாலை நேரம். மாலை வெய்யிலில் கடல் தங்கமும் நீலமுமாகப் பளபளத்தது. அதுவும் குளிரால் நடுங்கு வதுபோல இருந்தது. அந்தி மயங்கும் நேரத்தில் நெடுக எல்லாம் கண்ணில் பட்டதே தவிர ஒன்றும் பளிச்சென்று படவில்லை. தீவைச் சுற்றிலும் கட லோரத்தில் வளர்ந்திருந்த தாழையும் நாணலும் காற் றில் சலசலத்தன. யாரோ தூரத்தில் அழுது புலம்புவதுபோல இருந்தது அந்த ஓசை. பாசறையிலும் அதற்கப்பாலும் கேட்ட அந்தச் சலசலப்பு சோல்ஜர் களின் உள்ளங்களில் எவ்வளவோ துக்க சிந்தனைகளை எழுப்பிற்று. முடிவற்ற துயரத்தின் கீதங்களை இலை யுதிர்காலக் காற்றே இசைக்க வல்லது!
மலைமேலிருந்த பாசறையின் அகண்ட வாசலில் நின்றுகொண்டிருந்தான் ஸெராவினோ. அடிவாரத் துக்குச் செல்லும் சரியான பாதையைப் பார்த்துக் கொண்டு நின்றான். அடிவாரத்தில் பாதையின் கோடியில் கிலமான சத்திரம் ஒன்று தெரிந்தது. மேல் மூச்சு வாங்க ஒரு கிழ மதகுரு பாதையில்ஏறி வந்து கொண்டிருந்தார். பாசறையின் வாசலை அணுகிய தும் அவர் “சிறை அதிகாரி இருக்கிறாரா?” என்று கேட்டார்.
“இருக்கிறார்” என்று குள்ள சோல்ஜர் மரியாதையாகவே பதில் அளித்தான்.
“சிறையில் யாரோ ஒரு கைதி சாகக்கிடக்கிறா னாமே! யார் அது? காலையில் யாருக்கும் ஒன்றும் இல்லையே?”
“ஆமாம். திடீரென்று ஏதோ வலிப்பு மாதிரி வந்து விட்டது.”
“போகிறேன்” என்று சொல்லிவிட்டு மத குரு சிறைச்சாலையை நோக்கிப் பாதையில் மேலே நடந்தார்.
ஸெராவினோவுடன் நின்றுகொண்டிருந்த நண்பன் – அவன் ஒரு சங்கீதப் பித்தன் – ஒரு விவாதத்தைத் தொடங்கினான். ஸெராவினோ கேட்டான்: “தீராத நோய்வாய்ப்பட்டவர்களும், ஆயுள் கைதிகளும் ஏன் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது? இறப்பதுதான் தங்கள் கடமை என்று ஏன் அவர் களுக்குத் தெரிவதில்லை?”
“சிறைவாசம் முடிந்துவிடும், நோய் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் தான் அவர்கள் உயிர் வாழ் கிறார்கள் எவ்வளவுதான் சிரமமான வாழ்க்கை நடத்தினாலும், வாழ்க்கை அழகு நிறைந்ததுதான். வாழ்வதே ஒரு வெற்றி. வியாதி அதிகரிக்க அதிகரிக்க, சிறையின் கெடுபிடிகள் நெருக்க நெருக்க மனிதனுக்கு. வாழ்க்கையில் ஈடுபாடும் ‘உற்சாகமும்’ பிடிப்பும் அதிகரிக்கின்றன. இதுகூடத் தெரியாதா உனக்கு ? ” என்று சங்கீதப் பித்தன் சொன்னான். அவன் கண்கள் ஏதோ ஆனந்தத்தைக் கண்டனபோல ஜ்வலித்தன.
“நீ சொல்வதெல்லாம் வீண் வார்த்தைகள், வெறும் வார்த்தைகள். செல்வமின்றி, தேக சுக மின்றி, சுதந்திரமின்றி வாழ்வதும் வாழ்வாகுமா? இறக்கை ஒடிந்த பின்னும் பறவை என்று சொல்ல லாமா?” என்று கவிதை நிறைந்த வார்த்தைகளால் ஆட்சேபித்தான் ஸெராவினே.
மற்றவன் சொன்னான்: “எனக்கு தேக சௌக் * கியம் இல்லை. ஊரையும் உற்றாரையும் விட்டு வந் திருக்கிறேன். கட்டாய ராணுவ சேவை என்கிற நிர்ப்பந்தத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறேன். இப்படி யெல்லாம் இருந்தும் எனக்குத் திருப்திதான். திருப்தி யற்றவர்கள் வாழ்க்கையில் அதிகமாகக் கஷ்டப்பட வேண்டியதுதான்.”
“உனக்கு மனுஷ்ய உணர்ச்சிகளே குறைவு!”
இந்த விவாதம் திடீரென்று முடிவடைய நேர்ந்தது. மாலைக்கடன்களுக்காகப் பாசறை அதிகாரி சோல்ஜர்களைக் கூப்பிட்டுக்கொண்டிருந்தான். வீட்டுக் கூரைமேல் நின்று கூவும் கோழியின் குரல் போல அவன் குரல் கணீரென்று ஒலித்தது.
நிழல்கள் நீண்டன. துரிதமாகவே இருட்ட ஆரம்பித்துவிட்டது. மேலே வானம் இரும்புத் தகட் டைப்போல ஒரு வர்ணமற்ற நிறத்தை காட்டிற்று. காற்றில் நடுங்கி ஆடிய தாழைகளுக்கப்பால் கடல் புதியதோர் ஊதா வர்ணம் காட்டிற்று. அடிவா ரத்தில் பாழடைந்த சத்திரத்துக்குள்ளே மங்கிய விளக்கொளி தெரிந்தது. காற்று அடித்துச் சற்று ஓய்ந்தது; தூரத்துச் சல சலப்பும் சற்றே ஓய்ந்திருந் தது. சோல்ஜர்களின் பெயர்களை அதிகாரி சொல் வதும் அவர்கள் “பிரஸெண்டு ” சொல்லுவதும் தவிர சிறிது நேரம் .அங்கு வேறு ஒரு சப்தமும் இல்லை. சில சோல்ஜர்களின் குரல் கணீரென்று ஒலித்தது; சிலருடையது கசந்து அலுப்புத் தட்டிய வர்களின் குரல் போல ஒலித்தது. சங்கீதப் பித்தன் கிறீச்சிட்டான். ஸெராவினோவின் குரலோவெனில் எங்கேயோ தூரத்தில் காற்றுக்கும் அப்பாலிருந்து ஒலிப்பதுபோல ஒலித்தது.
அதிகாரி போனபின் சோல்ஜர்களின் ஆட்ட மும் பாட்டும் மறுபடியும் ஆரம்பித்துவிட்டன. அவர்களுடைய பேச்சிலும் காரியத்திலும் வாழ்க்கை யில் அவர்களுக்கிருந்த கசப்பும் அலுப்பும் தொனித் தன குற்றவாளிகளுக்கென்று ஏற்பட்டிருந்த அச் சிறையில் தாங்களும் வந்து மாட்டிக்கொள்ள நேர்ந் ததைப்பற்றி அவர்களுக்கு எழுந்த ஆத்திரத்தையும் வருத்தத்தையும் மறக்க விரும்பியவர்களாக அவர் கள் சப்தம் போட்டு ஏதேதோ பிதற்றிக் கொண் டிருந்தார்கள். துயரம் மட்டும் அல்ல ; அவர்களுக்கு விதியினிடமே கோபம் கோபமாக வந்தது. அன்று இரவு சிறைக்காவலுக்கென்று தேர்ந்தெடுக்கப்பட் டிருந்த சோல்ஜர்கள்தான் மற்றவர்கள் எல்லோரை யும்விட அதிகமாகச் சப்தம் போட்டுக் கொண்டிருந் தார்கள். அவர்களுள் ஸெராவினோ ஒருவன்தான் மௌனமாக இருந்தான்.
அன்று நள்ளிரவில் கடலுக்குமேல் செங்குத் தாக நிமிர்ந்து நின்ற ஒரு கற்பாறைமேல் ஸெரா வினோ காவல்காத்து நின்றான்.
காற்று ஒய்ந்துவிட்டது. வானத்தில் நக்ஷத் திரங்கள் நிறைந்திருந்தன. கடல் மணம் கமழ்ந்த குளிர்காற்று வசந்தத்தின் இனிய இரவுகளை ஞாபக மூட்டியது. தீவில் நடப்பதை யெல்லாம் கண் காணிப்பதுபோல மலை உச்சியில் பச்சை விளக்கு ஒன்று – ராக்ஷஸக் கண்போல எரிந்துகொண்டிருந் தது. பச்சை வெளிச்சம் கடலில் ஓர்அகண்ட விசிறி யாக விழுந்தது. இரவில் அந்த வெளிச்சம் விழுந்த இடத்தில் கடல் ஒரு விசித்திரமான வர்ணம் காட் டிற்று.
ஒரு செம்படவனின் படகு கடலில் மிதந்து கொண்டிருந்தது. அவன் இரவில் அத்தீவுக்கருகே மீன் பிடிக்க சர்க்கார் அனுமதி பெற்றவனாக இருப் பான்; ‘ஆய்ஸ்டர்’கள் பிடிக்க வந்திருப்பான். பட கில் ஒரு ‘காஸ்லைட்’ எரிந்துகொண்டிருந்தது. சிவப்பு ஆடை அணிந்த செம்படவன் அவ்வெளிச்சத்தில் நின்று கொண்டிருந்தது யாரோ மந்திரவாதி மந்திர உபாசனை செய்துகொண்டிருப்பதுபோல இருந்தது.
தீவின்பல மூலைகளில் மினுக் மினுக்கென்று பல விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன.
காவல் ‘ட்யூடி’யில் அகப்பட்டுக் கொண்ட போதெல்லாம் ஸெராவினோவுக்கு ஆத்திரம் பொங் கும். அவன் டால்ஸ்டாயின் கட்டுரைகளைப் படித்த வன். தனி மனிதர்களின் உரிமைகளைப் பற்றிச் சிந் தித்துப் பார்க்கப் பழகியவன். யாருக்காக, ஏன், அவன் அப்படிஇரவில் கண்விழித்துக் காவல் காத்து நின்று கஷ்டப்படவேண்டும் ? அர்த்தமற்ற ராக்ஷஸ சக்தி ஒன்று அது அவன் கட்மை என்று நிர்ணயித்து அதைச்செய்ய அவனை ஏவியிருந்தது. தன்னைவிடச் சகலவிதங்களிலும் கேவலமான அல்பமான மனிதர்க ளால் இயங்குவது இந்த ராக்ஷஸ சக்தி என்று ஸெரா வினோ எண்ணிப் புழுங்கினான். அங்கு ஆதிக்கம் செலுத்திய அந்த ராணுவ அதிகாரியும் மற்ற அதி காரிகளும் தன்னைவிட எந்த விதத்தில் சிறந்தவர்கள் என்று அவன் யோசித்துப் பார்த்தான். ‘கார்ப்பொ ரல்’ ஒரு குடியானவன்; ‘ஸார்ஜெண்டு’ ஒரு அம்பட் 1ன் இவர்கள்தான் அவனுக்கு வேலை ஏவினார்கள். அவர்களும்தான் என்ன? சுயஞானம் அற்றவர்கள்; தானாக எதையும் செய்யும் சக்தியை இழந்தவர்கள். அவர்களைத்தான் எஜமானர்களாக அவன் அங்கீகரிக்க வேண்டியிருந்தது. உச்சிப் பாறையில் எரிந்து கொண்டிருந்த பச்சை விளக்கைப் போலவே அவர் களும் ஜடமாகத்தான் இருந்தார்கள். பாறைகளில் மோதி உடையும் அலைகளைப்போல இதெல்லாம் வியர்த்தம் தானே என்று எண்ணினான்ஸெராவினோ.
அவனுடைய துன்பமயமான வாழ்க்கையிலேஅவ னுக்கிருந்தது தூக்கம் என்கிற ஒரே ஒரு ஆறுதல் தான். அதையும் பிடுங்கிக்கொள்ள யாரோ வந்து முளைத்துவிட்டார்கள் என்றால் அவனுக்குக் கோபம் வராதா? அதுமட்டும் அல்லவே. சவக்குழியில் உயிருடன் அடக்கம் செய்யப்பட்டவர்கள் போல்
வாழும் இந்தக் கைதிகளை அவன் ஏன் காவல் காத்து நிற்கவேண்டும்? அவர்களில் யாருமே அவனுக்குத் தீங்கிழைத்தவர்கள் அல்ல ; தீங்கிழைக்க நினைத்தவர் களும் அல்ல. இந்த அர்த்தமற்ற காரியத்துக்கு என்ன காரணம் என்று யாருக்குத்தான் தெரியும்? காதலற்ற, வீரமற்ற, வீண்வாழ்வு வாழ அவனைக் கட்டாயப்படுத்திய அதே சக்திதான் இதற்கும் காரணமாக இருக்குமோ? அப்படித்தான் இருக்கும். கீழே கடல் அலைகள் ஒன்றன்பின் ஒன்றாய் கற்பாறை மேல் மோதிச் சிதறிக்கொண்டிருந்தன. அதேபோல அவன் வாழ்நாட்களும் ஒன்றன்பின் ஒன்றாக சூன் யம் என்கிற கற்பாறையில் மோதிக் கழிந்து கொண்டிருந்தன.
செம்படவன் படகைச் செலுத்திக்கொண்டு போய் ஒரு மூலை திரும்பி மறைந்து விட்டான். கண் ணுக்கெட்டியவரையில் பச்சையும் நீலமும் கலந்த ஒரே இருட்டு. வானத்தில் மின்னிய பொறிகள் அந்த இருட்டை அதிகப்படுத்திக்காட்டின.
ஸெராவினோவுக்கு தூக்கம் கண்ணைச் சுழட்டி யது. சோகச் சிந்தனைகள் அவனுக்குத் தாலாட்டுப் பாடின. அலைகடலின் ஓயாத அழுகையும் அவன் சிந்தனைகளுடன் லயித்து இசைந்தது. மாலையில் அந் தக் குள்ள ஸோல்ஜர் பாடிய பாட்டின் வார்த்தைகளை முணுமுணுத்துக் கொண்டு அவன் நின்றான். தன்னை உத்தேசித்தே அந்தப் பாட்டு அமைந்திருந் தது என்று ஸெராவினோ நினைத்தான். அந்தப் பாட் டின் பாவம்தான் எவ்வளவு அழகாயிருந்தது. பள்ளி யில் சேர்ந்து படிக்க ஆரம்பித்த காலத்தில் அவன் கனவுகளுக்குப் பின்னணியாக இருந்துகொண்டு உற் சாக மூட்டிய கீதங்களை ஞாபகமூட்டியது அது.
இரவு நிச்சலமாக, நக்ஷத்திரங்கள் நிறைந்ததாக இருந்தது. ஆனால் மாலைப்பொழுதைப்போல இன்ப மானதாக – கனவுகள் நிறைந்ததாக இல்லை. ஸெரா வினோவின் மனதில் சாவு என்பதைத் தவிர வேறு ஒரு கனவும் இல்லை. சாவு என்ற காதலியின் வர வைத்தான் அவன் எதிர்பார்த்துக் காத்திருந்தான். அவள் தன் அருகில் வந்து நிற்பதுபோல அவன் இதற்குமுன் எவ்வளவோ சந்தர்ப்பங்களில் உணர்ந்த துண்டு. இன்றும் இரவுக் காற்றில் அவள் வருகிறாள் என்னும் அறிக்கை மிதந்து வருவதை அவன் உணர்ந் தான். அது ஓர் உணர்ச்சியே தவிர வேறு அல்ல. அலை யாக அடிக்கவில்லை அது; காற்றாக மோதவில்லை வாசனையாக வீசவில்லை; இசையாக ஒலிக்கவில்லை. ஆனால் சாவின் வாசனை, அசைவு, கீதம் எல்லாம் காற்றிலே மிதந்து வருவது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவள் வந்து விட்டாள், வந்து விட்டாள் என்று அவனுடைய உடம்பில் ஒவ்வொரு நரம்பும் நாட்டியமாடித் துடித்தது. துன்பத் துடிப்பா அது ? அல்ல. இன்பத்தின்சாரமே அவ்வுணர்ச்சி. வார்த் தைகளுக்கு, ஏன், உணர்ச்சிகளுக்குமே எட்டாத ஒரு பாவம் அது. சாவின் மூச்சே அவன்மேல் படுவது போல இருந்தது. அழகிய மிருதுவான கைகள் கொண்டு மெய் புளகிக்க அவனை ஸ்பர்சித்தாள் அவள். அவளுடைய கறுப்பு ஆடை தன் மேலே பட்ட தில் அவன் எல்லையற்ற ஆனந்தம் கொண்டான். அவனை ஒருதரம் அணைத்து முத்தமிட்டு விட்டு அவள் மேலே சென்று விட்டாள்.
“மாலையில் மதகுரு சொன்னாரே, அந்தக் கைதி யை நாடி சாவு செல்லுகிறாள். போகும் வழியில் தன் பக்தனான என்னையும் ஓர் அணைப்பு அணைத்துவிட்டுப் போகிறாள்.ஆமாம்; எனக்கு நன்றாக ஞாபகம் இருக் கிறது. என் அம்மாவை அழைக்க வந்த சாவு என்னை அன்று லேசாகத் தீண்டி விட்டுத்தானே சென்றாள். அவள் ஸ்பர்சத்தின் இனிமையை என்ன என்று சொல்வது ?”
கற்பாறையின் ஓரத்திலிருந்து பாதை வரையில் அவன் ஒருதரம் நடந்தான். தூக்கம் கண்ணைச் சுழட் டிற்று. அவனால் மேலே ஓர் அடி கூட எடுத்துவைக்க முடியவில்லை. காலைத்தொங்கவிட்டுக்கொண்டு ஒரு பாறையின் மேல் உட்கார்ந்து விட்டான். துப்பாக் கியை மடியில் போட்டுக்கொண்டான். அமானுஷ்ய மானதோர் சக்தி அவன் கண்களை மூடிவிட்டது.
கண்கள் முடியிருந்த போதிலும் முதலில் சில வினாடிகள், திரைக்கப்பால் இருப்பதெல்லாம் மந்திரத் தால் தெரிவதுபோல, எல்லாம் தெளிவாகத் தெரிந் தது – வர்ணமற்ற கடல்; மங்கிய மஞ்சள்விளக்கு கள் ; நக்ஷத்திரங்கள்; கலங்கரை விளக்கம்போல உச்சியில் எரிந்த விளக்கு. அவன் காலடியில் அலை கடல் வெப்பமான ஆழ்ந்த பெருமூச்சு விட்டுக்கொண் டிருந்தது. ஒரு மந்திர வீணை, மாயத்தால் கட்டுண்டு இன்பகீதத்தை எழுப்புவதற்குப் பதிலாக துன்பத்தை அள்ளி விசிறிக்கொண் டிருப்பது போல இருந்தது.
தூக்கம்! தூக்கம்! தூக்கமாக வந்தது. தீராத தூக்க வேட்கையின் அவதியை அவன் அப்போது உணர்ந்தான். அண்டையில் யாரோ திருட்டுத்தன மாக அடிமேல் அடிவைத்து நடப்பதுபோலச் சப்தம் கேட்டது. ஸெராவினோவின் சிந்தனைகள் திரும்பத் திரும்ப சிறையில் சாகக்கிடந்த கைதியின் பக்கம் சென்று மீண்டன. அவன் செத்துவிட்டானோ என் னவோ ! மற்றது எது எப்படியானால் என்ன? அவன் தூங்கிவிட்டான் கவலையற்று ஆழ்ந்து உறங்கிவிட்டான். அவனையாரும் இனி எழுப்பித் தொந்திரவு கொடுக்கமுடியாது. அந்தக் கைதியை ஸெராவினோவுக்கும் தெரியும். கல் உடைக்கும்போது அவனை அடிக்கடி பார்த்திருந்தான். சற்று உயரமான வன், மெலிந்தவன்; கூனலாகவும் இருப்பான். சதா அவன் முகத்திலே புன்னகை குடிகொண்டிருக்கும். சிறையில் இருந்தவர்களில் அவனைச்சற்று நல்லவ னாகவே மதிக்கலாம்.
யாரோ பதுங்கிப் பதுங்கி நடப்பதுபோல இருந் தது. ஸெராவினோ கண்ணைத் திறந்துபார்த்தான். தூக்கம் கலையத் தன் தலையை ஒருதரம் உலுக்கிக் கொண்டான். சிறையிலிருந்து தப்பி ஓடிய கைதி களைப்பற்றி வழங்கும் கதைகள் பல அவன் ஞாபகத் துக்கு வந்தன. சில மாதங்களுக்குமுன் அதே சிறை யில் நடந்த சம்பவத்தைப்பற்றிப் பிறர் சொல்லி அவன் கேட்டிருந்தான். எழுபது வயதிருக்கும் ஒரு கிழக்கைதியும், இன்னும் நால்வரும் வெகு தந்திரமா கச் சிறையிலிருந்து தப்பி, ஒரு செம்படவனின் உதவி யால் தீவை விட்டு வெளியேறி விட்டனர். ஒளிந்து கொள்ள இடம் இல்லாமல் வேறு ஒரு தீவில் ஏழெட்டு நாட்கள் சுற்றித்திரிந்தார்கள். மிருகங்களை வேட்டையாடுவதைப்போல அவர்களை வேட்டையாடி ராணுவ அதிகாரிகள் பிடித்துக்கொண்டு வந்து மறு படியும் அடைத்துப் போட்டு விட்டார்களாம்.
கனவா அது? அல்லது உண்மையே தானோ ? காலடிச் சப்தம் கேட்டதே! பாதையில் சுவர் ஓர மாகப் பதுங்கிப் பதுங்கி யாரோ ஒருவன் போய்க் கொண்டிருந்தான்; சந்தேகத்துக்கு இடமேயில்லை.
“யார் அங்கே?”
ஸெராவினோவினுடைய குரல் வழக்கத்துக்கு விரோதமாகத் தெளிவாகவும் ‘கணீரென்றும் ஒலித் தது. சிறிது நேரம் அங்கு மறுபடியும் மௌனம் நில வியது. யாரோ ஆள் போகிறான் என்று தான் நினைத்தது தவறோ என்று அவன் சந்தேகப்பட்டான். ஆனால் அதே வினாடி ஒரு மனிதன் பாதையில் இறங் கித் தன்னை நோக்கி வருவதை அவன் கண்டான்.
“யார்? யார் அங்கே?”
ஸெராவினோ எதற்கும் தயாராகத்தான் இருந் தான், எனினும் அவனுக்கு நடுக்கலெடுத்து விட்டது.
“சப்தம் போடாதே!” என்று மெதுவாகச் சொல்லிக்கொண்டே அந்த உருவம் அவனை நெருங் கிற்று. அதற்குத்தான் என்ன தைரியம் ! தன்மேல் விழ இருந்த அடியைத் தடுக்க விரும்பியதுபோல அந்த உருவத்தின் கரங்கள் நீண்டு நின்றன. அல்லது எதையாவது கெஞ்சிக்கேட்டு அப்படித்தன்கைகளை நீட்டியதோ? அவ்வுருவம் ஸெராவினோவுக்கு வெகு சமீபத்தில் வந்து நின்றது.
ஸெராவினோவின் பயம் அடுத்த வினாடி ஆச்சரியமாக மாறியது. சிறைக்குள் சாகக்கிடப்பதாகச் சொல்லப்பட்ட அந்தக் கிழக் கைதி தன் முன் நிற்பதை அறிந்தான்.
“நில்லு, இல்லாவிட்டால் சுட்டு விடுவேன்.” நீட்டிய கைகளை மடக்காமல் அந்தக் கைதி ஸெராவினோவின் காலடியில் மண்டியிட்டு வணங்கினான்.
“எங்கே கிளம்பினாய்?” என்று ஸெராவினோ உரக்க அதட்டிக் கேட்டான்.
தாழ்ந்த ஆனால் திடமான குரலில், கெஞ்சுத லாகப்பதில் அளித்தான் கைதி: “உரக்கப்பேசாதே! என்னை வேண்டுமானால் கட்டிப் போட்டுவிடு. யாரை யும் அழைத்து என்னை ஒப்புவித்துவிடாதே. நீயும் கிறிஸ்தவன் தானே ? கொல்லாதே என்னும் கிறிஸ் துவின் உபதேசம் உனக்குத்தெரியாதா? நான் கிழ வன். உன் அனுமதி இல்லாமல் போகமாட்டேன். சந் தேகமிருந்தால் என் கைகளைக் கட்டிப்போட்டு விடு.”
“பிதற்றாதே ! எங்கே கிளம்பினாய் ? சொல்லு” என்று மிகவும் கண்டிப்பான குரலில் அதட்டினான் ஸெராவினோ.
கிழவன் தூக்கிய கைகளைத் தாழ்த்திவிட்டு மிக வும் சாந்தமாகவே “சிறையிலிருந்து தப்பி ஓடக் கிளம்பினேன் ” என்றான். கண்டிப்பு, கடுமை எல் லாம் சரிதான். ஆனால் காவல் காத்து நின்றவனும் ஒரு கிறிஸ்தவன்தான் என்ற நம்பிக்கையுடன் அவன் மேலும் சொன்னான்: “என்னை விட்டுவிடு. நான் தப்பிச் சென்றது இவ்வழியாகத்தான் என்று யாருக்குமே தெரிய வராது.”
“சும்மா கிட. இல்லாவிட்டால் உன்னைச் சுட்டு வீழ்த்தி விடுவேன் நான். அதிகாரிகளிடம் உன்னை இப்போதே ஒப்புவித்து விடுகிறேன்.”
அந்தக் கிழவன் இதைக் கேட்டதும் மண்டி யிட்டபடியே ஸெராவினோவை இன்னும் நெருங்கி இன்னும் தாழ்ந்து வணங்கினான். அடிக்குப் பயந்த நாய்க்குட்டி தன் எஜமானின் காலைச் சுற்றிக் கொள் வதுபோல இருந்தது கிழவனின் இச்செய்கை.
“மகனே ! கிறிஸ்தவ சகோதரனே ! அதிகாரி களைக் கூப்பிடாதே. வேண்டாம்” என்று கெஞ்சினான்.
ஸெராவினோ உடனே ஒன்றும் செய்துவிடாமல் மௌனமாக நிற்பதைக் கண்டதும் கிழவனுக்குச் சற்றுத் தைரியம் பிறத்தது. எழுந்து பின்வருமாறு சொன்னான்: “யாரையும் கூப்பிடாதே! நான் சொல்வதை முழுவதும் கேள். சிறையிலிருந்து தப்ப வேறு வழி காணாமல் நான் சீக்காளி வேஷம் போட்டு ஏமாற்றிவிட்டுக் கிளம்பிவிட்டேன். நான் வருவேன் வருவேன் என்று வெளியே ஒரு ஸ்திரீ எனக்காக இருபது வருஷங்களாகக் காத்திருக்கிறாள். என் மனைவி அவள்: தான் சாகக் கிடப்பதாகவும், சாகுமுன் என்னை ஒரு தரம் பார்க்க விரும்புவதாக வும் அவள் கடிதம் எழுதியிருக்கிறாள். அவளைத் திருப்தி செய்ய நான் விரும்புகிறேன். என்னை மணந்து வாழ்நாள் முழுவதும் அவதியே பட்டவள் அவள். இந்தத் துளி இன்பம்கூட அவளுக்குக் கிடைக்காமல் போய்விடக் கூடாது என்பதுதான் என் ஆசை. அவள் மரணப் படுக்கையில் என்னை எதிர்பார்த்து உயிர் வைத்துக்கொண்டு காத்திருக்கிறாள். நான் போகாவிட்டால் அவள் மனம் உடைந்து விடும். என்னிடம் நீ கருணை காட்டத்தான் வேண்டும். இல்லாவிட்டால் என் கதி என்ன ? சகோதரனே ! கிறிஸ்தவனே ! உன் காடியில் விழுந்து நான் உன் கருணையை வேண்டுகிறேன். எனக்காக இல்லாவிட்டாலும், துர்ப்பாக்கியவதி யான அந்தக் கிழவியை உத்தேசித்தாவது என்னைப் போக விடு. அவள் சாகக்கிடக்கிறாள்; வாழ்க்கையில் அவள் பட்டுள்ள கஷ்டங்கள் அனந்த கோடியாகும். இம்மாதிரியான சங்கடத்தில் மாட்டிக்கொண்டது உன் தகப்பனாராக இருந்தால் நீ என்ன செய்வாய்? என்னைப் போக விடு. நீ என் சகோதரனே போல. பின்னர் ஒரு காலத்தில் என் நன்றி உனக்கு உதவும். உனக்காக என்னால் ஆனதைச் செய்வேன்.”
ஸெராவினோவின் மௌனத்தால் அதிக தைரி யம் கொண்டவனாக கிழவன் மேலும் வற்புறுத் திக் கெஞ்சினான் ; ‘இதோ பார், இப்படி இறங்கி நான் மறைந்து விடுவேன். என் காலடிச் சுவடுகூட இந்தக் கற்பாறையில் தெரியாது, நான் போன வழியைக் காட்ட. என்னைக் காணவே இல்லை என்று நீ சாதித்து விடலாம். கிழவனிடம் கருணை காட்டியதற்காகக் கடவுள் உனக்கு அருளுவார்.”
எல்லாம் ஏதோ கனவில் நடப்பதுபோல் இருந் தது. அதிகாரிகளை எழுப்பிக் கைதியை அவர்களிடம் ஒப்படைப்பது தன் கடமையென்று அவன் உணர்ந் தான். ஆனால் அதைச் செய்ய அவனுக்கு மனம் வரவில்லை. கனவுகளில் ஏற்படுமே அதுபோல அவன் அசையவும் சக்தி இல்லாமல், மாயத்தால கட்டுண்ட வனைப் போல நின்றான். கைதியினுடைய வார்த்தைகளும் கெஞ்சுதலும் அவன் உள்ளத்தை நெகிழச் செய்தன – கருணைப் பெருக்கெடுத்தது அவன் உள் ளத்தில்.வயதாகியும் இவ்வளவு கஷ்டப்பட்டும் அந்தக் கிழவன் வாழ்க்கையில் இன்னமும் நம்பிக்கை வைத்திருந்தான் என்பது ஸெராவினோவுக்கு ஆச்சரியமாக இருந்தது. துக்க சாகரத்தில் அழுந்திவிடாமல் அந்தக் கிழவன் நீந்திச்சமாளித்துக்கொள்ள முயன்றானே!
இவ்வளவு நாளாகத் தான் கண்டுகொண்டிருந்த கனவுகளெல்லாம் பலிதமாகும் நாள் வந்துவிட்டது என்று ஸெராவினோ அப்பொழுது எண்ணினான். எதற்கு மதிப்பு அதிகம் – தன் உயிருக்கா, அல்லது இந்தக் கிழவனுடையதற்கா என்று அவன் விசா ரிக்கத் தாமதிக்கவில்லை. தான் வருந்தி அழைத்த வீர மரண சந்தர்ப்பம் இப்பொழுது கிடைத்து விட்டதென்று அவன் எண்ணினான். அவன் அங்கு இறந்து கிடந்தால், கைதி தப்பி ஓடிவிட்டதையும் ஞாபகம் வைத்துக்கொண்டு, அவன் தன் கடமையை நிறைவேற்றுவதில் மாண்டு போனான் என்று ஜனங் கள் முடிவு கட்டிவிடுவார்கள். அவனைப் பாராட்டு வார்கள். வீரமரணத்துக்கு ஏற்ற சந்தர்ப்பம் வேறு வாய்க்காது என்று ஸெராவினோ எண்ணினான்.
“போ. போய்விடு… ஓடு” என்றான் ஸெராவினோ.
போகுமுன் அந்தக் கிழவன் மறுபடியும் ஒருதரம் அவனை வணங்கினான். பிறகு நிமிர்ந்து நின்று இரு கைகளையும் தூக்கி அவனை ஆசீர்வதித்தான்: “என் மகனே ! ஆனந்தமும் ஐசுவரியமும் தாமே உன்னைத் தேடி வந்து அடையும்! உன் கருணையைப் போலவே உன் அதிர்ஷ்டமும் எல்லையற்றதாக இருக்கும்!”
ஸெராவினோவின் கண்கள் நிறைந்தன. கிழவன் பாறைமேல் ஏறி அப்பால் இறங்கி மறைந்தான். கூழாங் கற்கள் சில உருண்டு புரண்டு கடலில் விழும் சப்தம் கேட்டது.
ஸெராவினோ யோசனையில் ஆழ்ந்தான். “ஆனந்தமும் அதிர்ஷ்டமுமா? எனக்கா? அதெல்லாம் நடக்காது. என்னைவிட அதிர்ஷ்டஹீனன், துக்கத்தால் பீடிக்கப்பட்டவன் இவ்வுலகில் யாருமே இருக்க மாட்டான்!” என்று அவன் சிந்தித்தான்.
அவனுடைய வாழ்க்கையின் சிகரம்போன்ற அந்த வினாடியில் அவனுடைய மனத்தில் மேன்மை யான சிந்தனைகள் எதுவும் தோன்றவில்லை; நேர்த்தி யான ஞாபகங்கள் எதுவும் எழவில்லை. நல்ல இனி மையான தின்பண்டங்கள் எதையுமே தான் தின்ற தில்லையே என்று எண்ணி வருந்தினான். மலிவான செருப்புகளை எவ்வளவு நாள் அதிகமாக உபயோகிக்க முடியும் என்று அவன் பட்ட பாடுகள் கறுப்பு அங்கி ஒன்று வேண்டும் என்கிற அவனுடைய நிறைவேறாத நீண்டகால ஆசை – மாரிக்காலத்துக்கு உதவக் கம்பளிச் சட்டைகள் வாங்க அவன் தினம் தினம் சிரமப்பட்டு மீதம் பிடிப்பது – இதுபோன்ற அற்ப விஷயங்கள் தான் அப்போது அவனுக்கு ஞாப கம் வந்தன. துயரத்தின் சாரமே இது; சோகத்தின் எல்லை இதுதான். அவனிடம் இருந்த உடமைகள் எல்லாம் பழையவைதான்; மலினமானவை தான்; உபயோகப் பருவம் கடந்தவைதான். அவனுடைய ஆத்மாவும் அப்படியே தானோ? என்னவோ யார் சொல்ல முடியும்?
ஆனால் அதெல்லாம் எப்படியானால் என்ன இப்பொழுது?. எல்லாம் ஒருவழியாக முடிந்துவிட் டது. விதியுடன் அவனுடைய போராட்டம் முடி வுறும் வினாடி நெருங்கிக் கொண்டிருந்தது. விதியின் கைகளிலிருந்து அவன் ஒரே அடியில் இரண்டு ஆத் மாக்களை மீட்டு விட்டான் தன்னையும், தப்பி ஒடிவிட்ட கிழக் கைதியையும். வாழ்க்கை என்னும் சவக் குழியினின்றும் தப்பிக் கிளம்பி ஓடும் வினாடி நெருங்கி விட்டது என்று ஸெராவினோ உணர்ந்தான்.
துப்பாக்கியைத் தன் மார்புக் கெதிரே நீட்டிப் பிடித்துக்கொண்டு நின்றான் அவன். தன் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக நின்றான்.
அவன் வாழ்க்கையில் காதல் இடம் பெறவில்லை; நம்பிக்கை இல்லை. வேறு எதுவுமே இல்லை. ஆனால் அவன் சாவிலே கருணை இருந்தது. கருணை என்னும் ஒரு மாயவெள்ளம் அவன் உள்ளத்தை நிறைத்தது.
அவன் செத்ததை எண்ணி யாரும் அழமாட் டார்கள். ஆனால் உலகில் பிறந்து கஷ்டப்படுகிறவர் கள் எல்லோருடைய துயரங்களையும் மனத்தில்வைத் துக்கொண்டு, ஏசு கிறிஸ்துவைப்போல, அவர்கள் சார்பாக அழுதுகொண்டே அவன் உயிர் துறப்பான்.
“போய்விடுகிறேன்! ”
நக்ஷத்திரங்களின் ஒளி அவன் கண்ணில் படவில்லை; கடலின் ஓலம் அவன் காதில் விழவில்லை. சாவு எனும் திரைநடுவே விழுந்து எல்லாவற்றையும் மறைத்துக் கொண்டது.
“போய் விடுகிறேன்!”
துப்பாக்கியின் குதிரையைத் தட்ட அவன் முயன் றபோது அது கை வழுக்கிக் கீழே விழுந்து விட்டது. பாறைமேல் அது விழுந்த சப்தம் கடகட வென்று ஒரு வினாடி இரவின் அமைதியைக் கெடுத்தது.
அந்த சப்தம் கேட்டுத்தான் ஸெராவினோ விழித் துக் கொண்டான். அவனுக்கு நடுக்கல் எடுத்தது. மேலே நக்ஷத்திரங்கள் மினுமினுத்தன ; கீழே அலை கள் முணுமுணுத்தன. அவன் துப்பாக்கி உண்மை யிலேயே கற்பாறைமேல் விழுந்துகிடந்தது. சில வினாடிகள் அவனால் அசையவே முடியவில்லை. கனவு தான் என்றாலும் அந்தக் கனவின் வேகமும் பாவ மும் அவனைக் கட்டிப் போட்டு விட்டதுபோல் இருந்தது.
தான் இந்தக் கனவுகண்டு கொண்டிருந்த அதே வினாடியில் சீக்காய்ப் படுத்திருந்த கிழக்கைதி மனிதர் கள் கையிலிருந்து தப்பிப் போய்விட்டான்-இறந்து விட்டான்-என்று ஸெராவினோ மறுநாள் கேள்விப் பட்டான்.
சாயங்கால வேளை. பட்டுப்படுதாக்கள் காற் றில் அலைவதுபோல தாழையும் நாலும் தூரத்தில் சலசலத்துக் கொண்டிருந்தன. ரோஜா நிறமான மேகங்கள் ஆகாயத்தில் வரிசை வரிசையாக மிதந்து சென்று கொண்டிருந்தன. சிவப்புக்கலந்த தங்க மாகப் பளபளத்த கடல் அலைகள் லேசாக விசிறி அடித்துக் கொண்டிருந்த காற்றில் எழமறுத்தன.
சோல்ஜர்களுக்கு ஒரு மணி நேரம் ‘ட்யூடி’ ஒன்றும் கிடையாது. கட்டிப் போடப்பட்ட நாய் கள்போல அவர்கள் வெளி முற்றத்தில் நின்று கொண்டு ஊளையிட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த ஓய்வு நேரத்தை ஸெராவினோ பாசறை வாசலில் நின்றபடியே சாவைப்பற்றிய சிந்தனைகளில் கழிப் பது வழக்கம். ஆனால் வழக்கத்துக்கு விரோதமாக அவன் இன்று தன் அறையில் உட்கார்ந்து ஏதோ கதை எழுதிக்கொண்டிருந்தான்.
சோல்ஜர்களின் கூச்சல் லேசாகத்தான் அவன் காதில்பட்டது. பட்டதும் கூச்சலாகப் படவில்லை. ஏதோ மிகவும் துக்ககரமான இசை போலப்பட்டது. எழுதிக் கொண்டிருக்கையில் அவன் மனத்தில் சொல்லவொண்ணாத உணர்ச்சிகள் கொந்தளித்தன. ஏதோ கைக்கு எட்டாத ஒன்றைக் குறித்துக் கடவு ளைப் பிரார்த்தித்துக் கெஞ்சிக் கேட்கவேண்டும் என்று அவனுக்குத் தோன்றிற்று. யாரையாவது சபித்து அழித்து விட்டால் தேவலை என்றிருந்தது. வாய்விட்டு அலறி அழுதால் தேவலை போல இருங் தது. சாதாரணமான அற்ப விஷயங்கள் கூட அப்பொழுது ஏதோ ஒரு மாயத்தால் வீசுவ ரூபம் எடுத்துவிட்டன போல இருந்தது. அவன் எதிரே மேஜைமேல் கிடந்த ஒருதுளித் தண்ணீர் பிரபஞ் சத்தையே விழுங்கிவிடக் கூடிய பரந்த கடலாக மாறிக் காக்ஷி அளித்தது. அத்துளியில் பட்டுப் பளபளத்த சூரிய ரச்மி உலகையே எரித்துவிடக் கூடிய அளவுக்கு நெருப்பையும் வெளிச்சத்தையும் கக்குவதுபோல இருந்தது.
மேஜைமேல் ஒரு கறுப்புப்பூனை உட்கார்ந்திருந்தது. அதனுடைய மஞ்சள் நிறமான கண்கள் எழு திக்கொண்டிருந்த ஸோல்ஜரையே உற்றுக் கவனித் துக்கொண்டிருந்தன. ஒவ்வொரு சமயம் அது தன் னுடைய முன்னங்காலை நீட்டி அவன் கையிலிருந்த பேனாவைப் பிடுங்க முயற்சித்தது.
சில சமயம் ஸெராவினோவின் நண்பனான அந்த சங்கீதப் பித்தனும் அதே மேஜையில் வந்து உட் கார்ந்து ஒரு கவிதைக் கதையின் பகுதிகளை எழுது வான் ; பூனை அவனிடமும் அதே விளையாட்டைத் தொடங்கும். ஆனால் அவன் “ஷ், ஷ்” என்று அதை விரட்டி விடுவான்.
ஸெராவினோ எழுதினான் — பல நாட்கள் மாலை நேரத்தில் மேஐை யண்டை உட்கார்ந்து எழுதினான் கடைசியில் ஒருநாள் எழுதி முடித்து விட்டுக் கடை சிப்பக்கத்தில் கையெழுத்திட்டான்.
இதைக் கவனித்த சங்கீதப்பித்தன் கேட்டான்: “வாசிக்கலாமா?”
“வேண்டாமே… என்னால்…” என்று ஸெரா வினோ இழுத்தான். ஆனால் நண்பன் வற்புறுத்திக் கேட்டதன் பேரில் கொடுத்துவிட்டான்.
கதை ஒரு தினசரிக் குறிப்பு உருவத்தில் எழுதப் பட்டிருந்தது. நிஸிடாத்தீவில், சிறைச்சாலையில் காவல்புரிந்த ஒரு சோல்ஜர் ஒரு கைதியிடம் கருணை காட்டுகிறான்.நாளுக்குநாள் அக்கருணை வளருகிறது. தான் சிறையை விட்டுத் தப்பிப் போக அவன் உதவி செய்யவேண்டும் என்று கைதி அவனைக் கேட்கிறான். அந்தக் கைதி ஒரு கொத்தன். சிறைச் சாலைக்கு வெளியே சில கட்டிடங்களை எழுப்ப அதிகாரிகளால் அவன் ஏவப்படுகிறான். தப்பி ஓட சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. கருணை காட்டும் சோல்ஜருடன் பேசிப் பேசி அவன் மனத்தை இளக் கவும் நிறையச் சந்தர்ப்பங்கள் வாய்க்கின்றன. தான் வாழ்க்கையில், அநியாயமாய், துரதிர்ஷ்ட வசமாகப் பட்ட துன்பங்களை எல்லாம் கைதி உருக்கமாக விவரிக்கிறான். சோல்ஜருக்குக் கடமை என்ற ஞாப கம் இருக்கிறது. கடமை தவறக்கூடாது என்ற சிந்தனையுடன் கருணை என்ற சிந்தனை போராடுகிறது. முடிவில் கருணையே வெற்றி பெறுகிறது. ஓர் இரவு தான் காவல் காத்து நிற்கும்போது அக் கைதியைத் தப்பி ஓடவிட்டு விடுகிறான். கடமை தவறியதற்காகத் தன்னையும் சுட்டுக் கொண்டு இறந்து விடுகிறான்.
இந்தக் கதை அற்புதமான, மனுஷ்யத்வம் நிறைந்த கதையாக சங்கீதப் பித்தனுக்குத் தோன்றிற்று. அவன் உள்ளத்தை உருக்கிற்று. நல்ல கதைகளைப்பற்றி வழக்கமாகச் சொல்வதுபோல, “ரஷ்யக் கதை மாதிரி இருக்கிறது இது ” என்று அவன் சொன்னான்.
ஸெராவினோவுக்குக் கோபம் வந்தது. “ஏன்? இத்தாலியக்கதை என்று சொல்லக்கூடாதா ? இம் மாதிரி ஒரு சம்பவம் என் வாழ்க்கையிலேயே நேர்ந் தாக வைத்துக் கொள்ளேன்” என்றான்.
“நீ இன்னும் உயிருடன் இருக்கிறாயே?”
“உண்மையில் நேர்ந்ததுதான் இது. ஆனால் கனவில் நடந்தது.”
“கனவிலா?”
“ஆமாம், கனவிலேதான். அதாவது நம் வாழ்க்கையில் ஒரு பகுதியை நாம் கனவு என்று ஒதுக்கி விடுகிறோமே – அப்பகுதியில் நேர்ந்தது. மனுஷ்ய வாழ்க்கையில் கனவுகள் தான் முக்கியமான பகுதிகளோ என்னவோ, யார் சொல்ல முடியும் ? உண்மை மயங்கிக் கனவாக மாறும் தருணம் நமக்குக் தெரியவா செய்கிறது?”
“இப்பொழுது நான் தூங்குகிறேனா? விழித் திருக்கிறேனா?” என்றான் சங்கீதப்பித்தன் கேலியாக.
இதை வைத்து அவர்களிடையே வழக்கம்போல முடிவற்ற விவாதம் மூண்டது. விவாத விஷயத் தைப்பற்றி அவர்கள் ஒத்துப்போகவில்லை. ஆனால் முடிவில் ஒரு விஷயம் நிச்சயமாயிற்று. ஸெராவி னோவினுடைய வசன கதையையும், சங்கீதப் பித்த னுடைய கவிதைக் கதையையும் தனித்தனியாகத் தபால் செலவு செய்து அனுப்புவதைவிட ஒரே தபா லில் சேர்த்து அனுப்பிவிடலாம் என்று தீர்மானமா யிற்று ; மிலன் நகரில் இருந்த ஒரு பத்திரிகைக்கு இரண்டையும் அப்படியே அனுப்பி வைத்தார்கள்.
அந்தப் பத்திரிகையின் ஆசிரியரிட மிருந்து ஏதா வது பதில் வரும் என்று அவர்கள் வெகு நாள் எதிர். பார்த்துக் காத்திருந்தார்கள். ஒரு பதிலும் வரவில்லை.
கிலமாகிக் கொண்டிருந்த ஒரு பழைய வீட்டில் இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு அவற்றில் ஸெராவினோ வசித்து வந்தான். ஒரு காலத்தில் யாரோ பெரிய மனிதர்கள் வாழ்ந்து அதற்குமேல் வாழ லாயக்கில்லை என்று விட்டு விட் டுப்போன வீடு. வீட்டின் மாடிக்குச் செல்ல சாந்து பூசாத மாடிப்படி இருந்தது. படியில் கணக்கற்ற பல்லிகளும் சிலந்திப் பூச்சிகளும் நிரந்தரமாகக் குடியிருந்தன. அந்தப் பல்லிகளும் சிலந்திப்பூச்சி களும் போல ஸெராவினோவும் அவ்வீட்டில் வசித்து வந்தான். தன் வாழ்க்கையும் அந்தப் பாழடைந்த வீட்டைப்போலத் தான் இருந்தது என்று அவனால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. கூரையில்லாமல் நின்ற அந்த வீட்டுக்கும் அவனுக்கும் என்ன வித்தி யாசம்? காரண காரியம் ஏதுமே இல்லாமல் அவனுக் கும் அந்த வீட்டுக்கும் ஒரே மாதிரியாக வயசாகிக் கொண்டிருந்தது.
வீட்டுக்குப் பின்னால் மலையும் காடும்தான் இருந் தன். வசந்தத்தின் இரவுகளில் காட்டு மரங்களின் வாசனை வீசும். அவனுடைய வீட்டுக்கும் பள்ளிக் கூடத்துக்கும் இடையே ஒரு பழத்தோட்டம் இருந் தது. தோட்டத்தைக் கவனிப்பவரின்றி வீணாகிக் கொண்டிருந்தது. தனிமையை விரும்புவோருக்கு இதைவிடச் சிறந்த இடம் கிடைக்காது; அங்கு காற்றிலேயே துக்கமயமான சிந்தனைகள் மிதந்து வரு வதுபோல் இருக்கும். விசேஷமாக இலை யுதிர் காலத் தில் இந்தத் தனிமையும் துக்கபாவமும் அதிகரித்து ஆளையே அமுக்கிவிட முயலுவதுபோல இருக்கும்.
இப்படிப்பட்ட இலை யுதிர் காலத்தில் ஒருநாள் உலகமெல்லாம் கறுப்புப் போர்வை போர்த்துத் துக் கத்தில் ஆழ்ந்து கிடந்தது. தனது வாழ்க்கையின் சூன் யம் எல்லாம் பரிபூர்ணமாகத் திரண்டு அன்று தன் முன் நின்றது என்று ஸெராவினோ எண்ணினான்.
ஹாலந்து தேசத்து தபால் முத்திரையுடன் ஸெராவினோவுக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. தன் கையிலிருந்த அந்த நீல உறையை வெகுநேரம் பிரிக்காமல் ஆச்சரியத்துடன் அவன் பார்த்துக்கொண்டே நின்றான். மேல் விலாஸம் முத்துமுத்தாக அழகாக. எழுதப்பட்டிருந்தது. அந்த எழுத்தை அவன் அதற்கு முன் எங்கேயோ கண்டிருந்தான்? எங்கே? யோசித் துப்பார்த்தான். சட்டென்று ஞாபகம் வரவில்லை.
வாலிபப் பருவத்தின் கனவுகள் ஞாபகம் வந்தன. தான் கதைகள் எழுதுவதாகவும், அவற்றைப் பத்திரி கைகள் ஆனந்தத்துடன் அங்கீகரித்துப் பிரசுரிப்ப தாகவும், அவற்றைப் படித்துவிட்டு அன்பர்கள் பாராட்டிக் கடிதங்கள் எழுதுவதாகவும் அவன் கனவுகள் காண்பது அந்தக் காலத்தில் சகஜம். தன் பெயர் அன்பர்களின் கடிதங்களின்மேல் முத்துமுத் தாக இந்த மாதிரி அழகாக எழுதியிருக்கும் என்று அவன் கனவு கண்டதுண்டு.
ஆத்திரத்துடன், உள்ளம் கொள்ளாத ஒரு உணர்ச்சியுடன் உறையைப் பிரித்து ஸெராவினோ கடிதத்தைப் பார்த்தான்.
ஐயா,
மிலன் ரெவ்யூ என்கிற பத்திரிகையில் ‘கருணை’ என்னும் தங்களுடைய அதியற்புதமான கதையை நான் வாசித்தேன். அதனுடைய ஜெர்மன், டச்சு பாஷை உரிமைகளைத் தாங்கள் இன்னும் விற்கவில்லை யானால், அதை நான் அந்த இரண்டு பாஷைகளிலும் வெளியிட விரும்புகிறேன். ஜெர்மன் மொழி பெயர்ப்பை வியன்னாவில் சிறந்த பத்திரிகையான டீ ஜீட்டில் வெளியிட ஏற்பாடு செய்வேன். நான் ஜெர் மனி தேசத்தவள் தான். ஆனால் என்னுடைய தாயின் பெற்றோர்கள் டச்சுக்காரர்கள். நானும் ஹாலந்தில் தான் வசிக்கிறேன்; அதனால் எனக்கு டச்சு பாஷை யும் நன்றாகவரும். இத்தாலி தேசத்திலும் பிரயா ணம் செய்திருக்கிறேன்; கொஞ்சகாலம் வசித்திருக் கிறேன். இத்தாலிய பாஷையும் எனக்கு நன்றாகத் தெரியும். உங்கள் கதையை நான் நன்றாக மொழி பெயர்ப்பேன்; அதைப்பற்றித் தாங்கள் சந்தேகப் பட வேண்டியதில்லை.
நேபிள்ஸ் நகரில் எனக்கு நண்பர்கள் இருக்கி றார்கள். வருஷா வருஷம் நான் கோடையில் அவர் களுடன் தங்குவதுண்டு. சென்ற வருஷம் அப்படித் தங்கி யிருக்கும்போது தாங்கள் கதையில் வர்ணித் திருக்கும் நிஸிடாத் தீவுக்கும் போயிருக்கிறேன். இதனாலேயும் தங்கள் கதை எனக்குப் பிடித்திருந்தது.
சன்மான விஷயமாகத் தாங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. டீஜீட் அளிக்கும் சன்மானம் முழு வதையும் நேரில் தங்களுக்கே. அனுப்பச்சொல்லி விடுகிறேன்.
இதைத் தவிர தாங்கள் வேறு கதைகள் எழுதி யிருந்தால் அவைபற்றிய விவரங்களையும் வேண்டு கிறேன். தங்கள் ஜீவியக் குறிப்புகளும் அனுப்பினால் உபயோகிக்கலாம்; மொழிபெயர்ப்புடன் சேர்க்க உதவும்.
தங்களுடைய அன்பார்ந்த பதிலைச் சீக்கிரமே எதிர்பார்க்கிறேன். கதையைப்பற்றி என் மனங் கனிந்த பாராட்டுதலை ஏற்றுக் கொள்ளுவீர்கள் என்று நம்புகிறேன்.
எலிஸபெத் கெர்க்கர்.
பெயரும் புகழும் அதிர்ஷ்டமும் வரும்போது அளவு கடந்த ஆனந்தத்தையே கொண்டுவரும் என்று ஸெராவினோ எண்ணி யிருந்தான். அப்படி இருக்க இந்தக் கடிதம் ஏன் அவனுக்குக் பயங்கரமானதோர் உணர்ச்சியைத் தந்தது?
கடிதத்தை இரண்டாவது முறை படித்துப்பார்க் கக்கூட அவனுக்குத் தைரியம் வரவில்லை. இதெல் லாம் வெறும் கனவோ ? மிரௗமிரள சுற்றுமுற்றும் விழித்துப் பார்த்தான். தூக்கம் இல்லையே யென்று தன்னையே கிள்ளிப்பார்த்துக் கொண்டான். கடைசி யில் அந்தக் கடிதத்தை மறுபடியும் ஒருமுறை படித் துப்பார்த்தான். தனக்கு விரோதமான அசுர சக்தி ஒன்று பாய்ந்துவந்து அந்த ஐசுவரியத்தைப் பிடுங்கிக்கொண்டு போய்விடுமோ என்று பயந்தவன் போல யார் கண்ணிலும் படாமல் அதை ஒளித்து வைத்துக் கொண்டான்.
பெயரும் புகழும் கிடைத்துவிட்டது என்று எண் ணியவுடனே அவனுக்கு வேறு ஓர் எண்ணமும் உதித்தது.பொறாமை கொண்ட சாதாரண மக்கள் அவன் சந்தோஷத்தைக் கெடுக்க முயலுவார்களே ! வழக்கமாக அவனுக்கு வாழ்க்கையில் உள்ள கசப்பு திடீரென்று மறைந்து விட்டது. பிறரைப்பற்றி,
இவ்வளவு நாளாக இல்லாத புதுமையாக, அவன் அன்புடனும் இரக்கத்துடனும் சிந்திக்கத் தலைப்பட் டான். தன்னிடம் பொறாமை கொள்ளக் கூடிய ஜனங்களிடம்கூட அவனையும் அறியாமலே னுக்கு அநுதாபம் பிறந்துவிட்டது. சந்தோஷம் இல்லாமையே அவர்களுடைய பொறாமைக்குக் காரணம் என்று அவன் எண்ணினான். முடிவில் மற்றது எல்லாவற்றையும் மறந்துவிட்டு அவன் ஆனந்தசாகரத்தில் மூழ்கினான். ஆனால் அதிலும் ஒரு துளி துக்கம் கலந்திருந்தது, இந்த ஆனந்தம் நீடித்து நிற்கவேண்டுமே என்று !
ஜன்னல் கதவுகளை எல்லாம் திறந்துவிட்டு அவன் மேஜையண்டை போய் உட்கார்ந்தான். இலை யுதிர்காலம். பிரபஞ்சமெல்லாம் வர்ணமற்று துக்கத் தில் ஆழ்ந்திருந்தது. ஆனால் அவன் கண்ணில் இந்த வர்ண மின்மையும் துக்கமும் படவேயில்லை. அடி வானத்துக்கப்பால் கோடி சூரியப் பிரகாசம் உடைய தாய் எல்லையற்றதாய் இன்பமே மூச்சானதாய் இருந்த ஒரு பிரதேசம்தான் அவன் கண்ணில் பட் டது. இலையுதிர் காலத்தின் துன்பமயமான ஓசைகள் அவன் காதில் விழவேயில்லை. பிரபஞ்சத்தின் ஆனந்த கீதம்தான் அவன் காதில் ஒலித்தது.
அந்த அற்புதமான, ஆனந்தமான, முடிவில்லாத நாழிகையை அவன் தன் ஆயுள் உள்ள அளவும் மறக்கவில்லை.
அன்புமிக்க அம்மணி,
தாங்கள் வேண்டும் மொழிபெயர்ப்பு உரிமை களை நான் நன்றியுடன் தங்களுக்கு அளிக்கிறேன். உங்கள் கடிதத்தின் வரவால் என் வாழ்க்கையில் ஏற் பட்டுள்ள மாறுதல்களை என்னால் விவரிக்க முடி யாது. தாங்களே ஊகித்து அறிந்துகொள்ள வேண்டியதுதான்.
நான் ஓர் எழுத்தாளனே அல்ல. என்னைப் பற்றிய முழு விவரங்களையும் தாங்கள் அறிய விரும்பு கிறபடியால், சொல்லியே விடுகிறேன். நான் ஓர் ஆரம்பப் பள்ளிக்கூட ஆசிரியன். ஏழ்மை என்ற சிறைப்பட்டவன். எங்கேயோ கண்காணாத பிரதேசத்தில் ஒரு தாழ்ந்த ஆசிரியனாகக் காலம் தள்ளி வருகிறேன். இவ்வுலகிலேயே நான் தனி மனிதன். என் தனிமையை நான் எப்படித் தாங்கள் அறியும் படிச் சொல்வது? வெகு தூரத்துக்கு அப்பாலி ருந்து வரும் தங்களுடைய அன்புக்குரல் என் தனிமை யில் எனக்குப் புதுத்தெம்பையும், உற்சாகத்தையும், நம்பிக்கையையும் தரப்போதியதாக இருக்கிறது என்றால் அதிலிருந்தே தாங்கள் என் தனிமையின் தரத்தை ஒருவாறு அறிந்துகொள்ளலாம் அல்லவா? நான் நம்பிக்கை இழந்து உயிர் வாழ இனி அவசியம் இல்லை என்று சிந்தித்துக் கொண்டிருந்த காலத்தில் தங்கள் கடிதம் வந்து எனக்குப் புத்துயிர் அளித்தது.
உண்மையில் தங்கள் கடிதம் வரும் வரையில் என் ‘கருணை’ மிலன் ரெவ்யூவில் பிரசுரமாகி யிருந்த விஷயம் கூட எனக்குத் தெரியாது. என் வாழ்க்கையி லேயே மிகவும் துக்ககரமான ஒரு காலத்தில்தான் அதை எழுதினேன். அதில் உண்மையான உணர்ச்சி பாவம் நிறைந்திருப்பதால்தான் அது தங்களுக்குப் பிடித்திருக்கிறது என்று எண்ணுகிறேன். கதையில் விவரித்திருப்பதுபோன்ற சந்தர்ப்பத்தில் நான் மாட்டிக் கொண்டிருந்தால் அப்படியே கைதியிடம் கருணை காட்டியிருப்பேன் என்ற உணர்ச்சியுடன் தான் நான் எழுதினேன். இன்னும் ஒன்றும் சொல்லி விடுகிறேன். அந்தக் கதை பூறாவும் என் கனவிலே நடந்ததுதான்.
அந்தக் கனவின் பாவ வேகத்தை நான் என்ன வென்று சொல்லுவேன் ? கண்ணுக்கு முன் நடந்தது போல எல்லாம் என் மனத்தில் அப்படியே ஆழ்ந்து பதிந்துவிட்டது. அந்தக் கிழக் கைதியின் முகம் இன் னும் என் கண்முன் நிற்கிறது. அவன் முகபாவத்தை என்னால் என்றுமே மறக்க முடியாது. அதற்கப்புறம் நான் துக்கத்தில் அழும்போதும், மனக்கசப்புடன் வாழ்க்கையைப்பற்றிச் சிந்திக்கும்போதும் அவனுடைய கடைசி வார்த்தைகள் எனக்கு ஞாபகம் வரும். விதி என்னைக் கேலி செய்து கைகொட்டிப் பரிகசிப் பதுபோல் இருக்கும். கனவில் அன்று நான் அக் கைதிக்கும் : காட்டிய கருணை வீணாகி விடவில்லை என்று எனக்கு இன்று தோன்றுகிறது.
ஓர் ஆயுள் காலத்தில் எவ்வளவோ தினுசான நாழிகைகள் இருக்கும். என் ஆயுளில் ஆனந்தம் என்ற நாழிகை வந்துவிட்டது. தங்கள் கடிதம் என் கையில் வந்து சேர்ந்ததுமுதல் நான் வாழ ஆரம்பித்து விட்டேன். முடிவற்ற தூக்கம் தூங்கி இன்று விழித் தெழுந்து விட்டவனைப்போல நான் இருக்கிறேன். இவ்வளவு நாள் என்னுள் கட்டுண்டு கிடந்த வித விதமான சக்திகள் இப்பொழுது சீறிக்கொண்டு வெளிக் கிளம்புகின்றன. எனக்குத் தோழர்களே கிடையாது கிடைக்க மாட்டார்கள் என்று நான் எண்ணியிருந்தேன். யாருடைய நட்பும் அன்பும் இல்லாமலேதான் வாழ்க்கை பூறாவும் பாலைவனப் பாதையிலே நடக்க வேண்டியவன் நான் என்று எண்ணியிருந்தேன். என் உள்ளத்தின் குரல் எவ்வளவோ தூரம் பாய்ந்து எட்டியிருக்கிறது. என்று இப்பொழுது அறிகிறேன். என்னை ஒத்த ஆத்மாக்கள் என் குரலுக்கும் எதிரொலியாக எழுந்து ஒலிக்கின்றன என்று நான் தங்கள் கடிதம் மூலம் அறிகிறேன். என் கதையைப் பலர் படிப்பார்கள் ; எனக்குப் பெயரும் புகழும்வரும் என்று நான் இப்பொழுது சந்தோஷப்படவில்லை. எனக்குப் பெயரும் புகழும் தேவையே இல்லை. என்னைப்போன்ற ஆத்மாக்களும் உலகில் இருக்கின்றன ; என் குரல் அவர்களை எட்டுகிறது என்ற அறிவு. எனக்கு எல்லையற்ற இன்பத்தைத் தருகிறது. வாழ்க் கையிலே ஒரு புது உற்சாகமும் ஆர்வமும் தோன்ற போதாதா?
மறுபடியும் ஒரு தரம் தங்களுக்கு என் நன்றி யைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். கணக்கில் அகப் படாத நன்மையைத் தங்கள் கடிதம் எனக்கு அளித் திருக்கிறது. நான் என்றும் மறக்கமாட்டேன். நன்றி யுள்ள,
ஸெராவினோ ராஸி
ஐயா,
தங்கள் கடிதம் கிடைத்தது. என்னிடம் மதிப்பு வைத்துத் தாங்கள் எழுதியுள்ள விஷயங்களுக்கு வந்த னம். தங்களுடைய உயர்ந்த மனோபாவம் கடிதத்தில் நன்கு பிரகாசிக்கிறது. தங்களுடைய நட்பு எனக்குக் கிடைத்ததுபற்றி நான் வெகுவாகச் சந்தோஷப்படு கிறேன். முதல் கடிதத்தைப்போலவே உணர்ச்சியும் உண்மையும் கலந்து திகழும் பல கடிதங்களை நான் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். தாங்கள் வயது அதிகம் ஆகாதவர் என்று தெரிகிறது. தங்களைவிட நான் வயதானவள் என்று எண்ணுகிறேன். தங்களு டைய நூல்களை மொழி பெயர்ப்பவளாக மட்டுமல்லாமல் என்னைத் தங்களுடைய சிநேகிதையாகவும் அங்கீ கரிக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறேன்.
தங்கள் கதையைப் போலவே தங்கள் கடிதமும் என் உள்ளத்தைக் கவர்ந்தது. ஏதோ ஓர் அழகிய நாவலில் ஓர் அத்தியாயம்போல இருந்தது தங்கள் கடிதம்.
‘கருணை’ என்ற கதை ஒரு விசேஷ காரணத் தினால் என் மனத்தை வெகுவாகக் கவர்ந்தது. அதில் உள்ள உண்மையான உணர்ச்சி என் உள்ளத்தை சற்று அதிகமாகவே தாக்கியது.
என் தகப்பனாருக்கு நண்பர் ஒருவர் இருந்தார். அவரை நான் என் தகப்பனாரைப்போலவே நேசித் திருந்தேன். அவருடைய இரண்டாவது மனைவி யாருடனோ சோரம் போனாள் என்று அவளை அவர் கொன்று விட்டார். அதற்காக அவரைப் பிடித்துச் சிறையிலிட்டு விட்டார்கள். சிறையிலிருந்து அவர் தப்பி ஓட முயற்சித்தார். அப்பொழுது அவர் சிறைக் காவலாளி ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய வரலாற்றை அறிந்த எனக்குத் தங்கள் கதை பிடித்திருந்ததைப்பற்றி ஆச்சரியம் என்ன ? தவிரவும் தங்கள் எழுத்தில் உண்மை ஒளியும், தெளி வும் கூடித் திகழுகின்றன. தாங்கள் மேலும் மேலும் இம்மாதிரிக் கதைகள் எழுதிப் பிரசுரிக்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ளுகிறேன்.
நானும் சில கதைகள் எழுதியிருக்கிறேன். இத் தாலிய கவிகள், கதைகள் சிலவற்றை மொழிபெயர்த் திருக்கிறேன். ஹாலந்தில் வசிக்கும்போது — அதா வது வருஷத்தில் பாதி நாளுக்கு மேல் – நானும் ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடம் நடத்துகிறேன். நம் இருவருடைய வாழ்க்கையும் ஓரளவு ஒத்தே இருக்கிறது. ஆனால் தங்களுக்கிருப்பதைவிட எனக்கு வாழ்க்கை யில் நம்பிக்கை ஜாஸ்தி. அதனால் நான் தங்களுக்குச் சொல்லுவது என்னவென்றால், வாழ்க்கையில் தாங் கள் அதைரியப்படவேண்டிய அவசியமே கிடையாது. சில சமயம் ஏழ்மையைக்கூட ஓர் ஐசுவரியம் என்றே சொல்லவேண்டி இருக்கிறது. ஏழையின் ஆயுட் காலம் வீணாகிவிடாது. ஆத்ம பூர்வமான உண்மை வாழ்வு வாழ ஏழையினால்தான் முடியும். கஷ்டமோ, நஷ்டமோ, சுகமோ சௌகரியமோ எதுவுமே ஏழை தானாகவே செய்துகொள்கிறான். பிறரை நம்பி அவன் வாழ்க்கை நடத்துவதில்லை. திறமை மட்டு மிருக்குமானால் அவன் ஒரு லக்ஷியத்தைக்கொண்டு சிறப்பாக வாழலாம். மனிதர்களுக்கு உள்ள வியாதி களிலே ஏழ்மை என்பது அவ்வளவு கொடியது அல்ல என்றே நான் நினைக்கிறேன். மற்றபடி எல்லாம் விதியைப் பொறுத்தது. மனிதர்களிடமிருந்து மறை த்து மறைத்து வைத்திருக்கும் ஆஸ்திகளை எல்லாம் அவள் தானாகவே ஒரே வினாடியில் கொடுத்தாலும் கொடுப்பாள். யார் சொல்ல முடியும் ?
நான் சொல்ல விரும்பியதைத் தெளிவாகச் சொல்லவில்லை என்பதுபற்றித் தங்கள் மன்னிப்பை வேண்டுகிறேன். இதைவிடத் தெளிவாகச் சொல்ல எனக்குத் தெரியவில்லை. தங்களுடையதைப்போல அழகான உணர்ச்சி ததும்பும் நடையைக் கையாள எனக்கும் ஆசைதான். ஆனால் அந்த நடையின் ரகசியம் எனக்குத் தெரியவில்லை.
நமது நட்பு முற்றி நாம் ஒருவரை யொருவர் நன்கு அறிந்து கொள்ளும் நாளை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் இத்யாதி… இத்யாதி
இத்யாதிகள் நிறையவே இருந்தன. ஆனால் அவற்றில் உண்மை தொனிக்கவில்லை – ஸெராவினோவுக்கு.
“அவள் பணக்காரியாக இருப்பாள். தங்கபிரேம் போட்ட மூக்குக் கண்ணாடி அணிந்திருப்பாள். ஏழ் மைத்தனத்தின் அல்லல்களை நேரில் பட்டறியாது ஏழ்மையே சொர்க்கம் என்று பேசிக்கொண்டிருக்கும் கோஷ்டியைச் சேர்ந்தவள்போல் இருக்கிறது” என்று அவன் எண்ணினான்.
அது எப்படியானால்தான் என்ன ? அவன் அவ ளுக்கு அடிக்கடி கடிதம் எழுதினான். கடிதங்கள் மட்டுமல்ல; பத்திரிகைகளுக்கு கதைகளும் எழுதினான். எழுதுவதில் பயிற்சி ஏற்பட்டது; இன்பமும் ஏற்பட் டது. தன்னுடைய வீட்டையும் மாணவர்களையும் சுற்றுப்புறத்தையும் விவரிப்பதில் அவனுக்கு அலாதி யான திருப்தி ஏற்பட்டது. வாழ்க்கையில் அவனுக்கு இதுகாறும் இருந்துவந்த அலுப்பு சலிப்பெல்லாம் மறைந்துவிட்டது.
காதற் கதையின் முதல் அத்தியாயமாக இரு வருக்கும் இடையே கடிதங்கள் சென்று வந்தன. அவை காதற் கடிதங்கள் அல்ல. இலக்கிய விசார மும் நட்பும் ஆதரவும் நிறைந்த கடிதங்கள். எழுத ஆரம்பிக்கிற புதிதில் இம்மாதிரிக் கடிதங்கள் ஆசிரி யர்களுக்கும், ஆசிரியைகளுக்கும் வருவது சகஜம் தானே! அந்தக் கடிதங்களை இங்கு விவரமாகத் தரவேண்டிய அவசியம் இல்லை.
அந்தக் கடிதப் போக்கு வரவு பதினெட்டு மாதங்கள் நடந்தன.
இலையுதிர்காலம் இரண்டு – மழை பெய்து ஈரமாகவும், குளிராகவும் இருந்தன. உஷ்ணம் அதிகமா யிருந்த ஒரு வசந்தகாலம். சகிக்க முடியாத வெய்யில் காய்ந்த ஒரு கோடை. வசந்தத்தைப் போலப் புழுக்க மாக இருந்த இரண்டு மாரிக்காலங்கள் – இப்படியாக ஒன்றரை வருஷம் சென்றது.
அவ்வளவு நாள் அவன் வாழ்ந்து கடந்துவிட்ட ருதுக்கள் எதையும்பற்றி ஸெராவினோவுக்கு ஞாப கமே இருந்ததில்லை. ஆனால் இந்த ஆறு ருதுக்களில் ஒவ்வொரு நாளும் எப்படி இருந்தது என்பதை அவன் அறிவான். வசந்தத்தின் வெப்பத்தையும், மாரிக் காலத்தின் சுகத்தையும் அவன் அறிந்து அனுபவித்தான்.
இன்பத்திற்கு இடையே துன்பம் கலந்தே தான் இருந்தது. கிராமத்தில் எல்லோரும் அவனைப் புகழ் தந்து பாராட்டத் தலைப்பட்டார்கள். டீஜீட் பத்திரிகை ஆசிரியர் அவனுடைய கதை வெளியான இதழில் பத் துப் பிரதிகள் அனுப்பிவைத்தார். தபால் மூலம் எழுபது பிளாரின்கள் சன்மானமும் அனுப்பினார். தன் கதை பிரசுரமாகி யிருப்பதை ஸெராவினோ தானாக யாரிடமும் சொல்லியே இருக்கமாட்டான். ஆனால் அது தபாலாபீஸ் மூலம் வெளி வந்துவிட்டது.
கிராமத்து அழகி அவனை அன்பு நிறைந்து ததும் பும் கண்களுடன் பார்க்கத் தலைப்பட்டாள். ஆனால் அவனோ அதைக் கவனிக்கவே இல்லை.
மாரிக்காலம் குளிராகவும் துன்பம் தருவதாக வும் இருந்திருந்தால் கூட அவன் அந்தக் குளிரையும் துன்பத்தையும் லக்ஷியம் செய்தே இருக்கமாட்டான்.
அவனுடைய சுற்றுப் புறமெல்லாம் இப்பொழுது அழகாகவும் ஒளி நிறைந்தும் இருப்பதாக அவன் உணர்ந்தான். அன்பு என்னும் அழகு அவன் வாழ்க் கையில் புகுந்துகொண்டு விட்டது. தன்னை ஒரு. சகோதர ஆத்மா காதலிக்கிறது என்று அவன் உணர்ந்தான். அவன் உள்ளத்திலும் காதல் பிறந்தது. அவனைக் காதலிப்பதாக அறிவுறுத்தி எலிஸபெத் இதுவரையில் ஒரு வரிகூட எழுதவில்லை: அவனும் அதைப்பற்றி ஒன்றும் எழுதவில்லை. சில விஷயங்கள் யாரும் வாயைத் திறந்து எதுவும் சொல்லாமலே தெள்ளென விளங்கிவிடும். இந்தக் காதல் விஷயமும் அப்படித்தான்.
முன் ஒரு காலத்தில் ஸெராவினோ லக்ஷியக் காத லைப்பற்றிக் கனவு காண்பதுண்டு. அதே போலத் தான் இப்பொழுதும் அவன் காதலித்தான். தன் காதல் பூர்த்தியாகும் என்று அவன் நம்பவும் இல்லை; எதிர்பார்க்கவும் இல்லை. காதல் பூர்த்தியை அவன் வேண்டவும் இல்லை. காதல் என்ற லக்ஷியத்துக்காக அவன் காதலிக்கத் தயாராக இருந்தான். எலிஸ பெத் பணப்பெருமையும் குலப்பெருமையும் படைத் த் தவளாக இருப்பாள் என்று ஸெராவினே எண்ணி னான். அவள் எல்லா விஷயங்களிலுமே தனக்கு எட்டாதவளாக இருப்பாள் என்று எண்ணிப் பார்ப் பதில் அவனுக்கு ஒரு திருப்தி.
எலிஸபெத் ஒரு கடிதத்தில் பின்வருமாறு எழுதி யிருந்தாள்: “எனக்கும் என்னைக் காதலிப்பதாக ஒரு நாள் சொல்ல உத்தேசித்திருக்கும் ஆடவனுக்கும் இடையே கடக்க முடியாத ஒரு சிறு இடைஞ்சல் இருப்பது பற்றி எனக்குச் சந்தோஷமே! அந்த இடைஞ்சல் ஆழ்ந்தது; ஆத்மார்த்தமானது. பலரால் அதைத் தாண்டி என்னை நெருங்கி அணுக முடியாது.”
அது என்ன இடைஞ்சல் என்று ஸெராவினோ கேட்கவில்லை. அவள் தன்னுடைய இளவயதில் ஏதாவது தவறு செய்திருக்கலாம். இதெல்லாம்பற்றி அவன் யோசிப்பானேன் ? கவலைப்படுவானேன்? அவன் அவளுடைய காதலை நாடித் தேடப் போவ தில்லை; அவளை வேண்டப் போவதில்லை.
காதல் என்ற கனவு வாழ்க்கையில் பரிணமித்த பின் அவன் சாவைப்பற்றிச் சிந்திப்பதையே விட்டு விட்டான்.
இரண்டாவது வசந்தமும் வந்தது. அவன் வசித்த வீட்டின் வெளிச் சுவர்களின்மேல் செடிகளும் கொடி களும் படர்ந்து பூத்துக் குலுங்கின. மலைக்காட்டி லிருந்து ரகம் புரிபடாத இன்பமான வாசனைகள் வீசின.
ஈஸ்டர் விடுமுறையில் ஸெராவினோ நேபிள்ஸ் நகருக்குச் சென்றான். அங்கு கடையில் ஒரு பட்டுச் சொக்காய் வாங்கி அணிந்து கொண்டான். கடையி லிருந்த நிலைக்கண்ணாடி முன் நின்று அதைப் போட் டுக் கொள்ளும்போது அது தனக்கு ஏற்றதாகவே இருந்தது என்றும், தான் உண்மையிலேயே அழகன் தான் என்றும் அவன் எண்ணினான். முதல் நாள் பத்திரிகையில் படித்த ஒரு விஷயம் அவனுக்கு ஞாப கம் வந்தது. பணக்கார அமெரிக்க சீமாட்டி ஒருத்தி பார்க்க அழகாய் இருந்தான் என்பதற்காக ஒரு கூலி யாளை மணந்துகொண்டாள் என்று முந்திய தினம் தான் பத்திரிகைகளில் பிரசுரம் ஆகியிருந்தது.
கடையிலிருந்து நேரே அவன் கவூர் ஹோட்ட லுக்குக் கிளம்பினான். அவனை எதிர் நோக்கி அங்கே தான் எலிஸபெத் காத்திருந்தாள்.
அந்தப் பணக்கார அன்னிய ஸ்திரீக்கு எதிரே தான் அமைதியை இழக்கக்கூடாது, ஏதோ கௌரவ மாகப் பார்த்துப் பேசிவிட்டுத் திரும்பிவிடவேண்டும் என்று ஸெராவினோ தீர்மானித்திருந்தான். கடையை விட்டுக் கிளம்பும்போது சாவதானமாக நிம்மதியாகத் தான் கிளம்பினான்.ஆனால் இன்னும் பாதி வழி இருக்கையிலே அவன் உள்ளம் துடித்தது, படபடத்தது. என்ன தீர்மானித்தாலும் அமைதியாயிருப்பது சாத்தியமாக இல்லை. கடைத்தெருவில் சிறிதுநேரம் நின்று நிதானப்படுத்திக்கொள்ள முயன்றான்.
கடைத்தெருவில் கூட்டம் சற்று அதிகம் தான் பலவிதமான வர்ண ஆடைகள் அணிந்திருந்த ஆண் களும் பெண்களும் குறுக்கும் நெடுக்கும் போய்க் கொண்டிருந்தார்கள். காற்று லேசாக அடித்துக் கொண்டிருந்தது. வெண்மையான சிறு மேகங்கள் வான வீதியில் மிதந்துகொண்டிருந்தன. ஏதோ பிர சங்கம் கேட்கப்போகும் மனிதர்கள்போல அவை ஒரே திசை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன.
பூக்கடையில் அன்று நின்று அவன் ஒரு ரோஜாச் செண்டு வாங்கினான். அந்தக் கடையில் ஓர் அழகிய வாலிபன் நாகரிகமான ஆடை அணிந்துகொண்டு நின் றான். ஸெராவினோவால் தன்னை அவனுடன் ஒப் பிட்டுப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. சற்றுமுன் பணக்கார அமெரிக்கச் சீமாட்டியையும் கூலியாளை யும் பற்றித் தான் எண்ணியதுபற்றி ஸெராவினோ நாணம் அடைந்தான்.
இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு அவனும் அழகி எலிஸபெத் கெர்க்கரும் கடற்கரை ஓரத்தில் நிஸிடாத் தீவைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள்.
இத்தாலி தேசத்துப் பெண்ணே போல எலிஸ பெத் அழகாக இருந்தாள். அவள் மூக்குக் கண்ணாடி அணிந்திருக்கவில்லை. அவளுடைய தலைமயிரும் கண் களும் இருண்ட கருப்பாக இருந்தன. மங்கிய தங்கம் போன்ற நிறம். அழகிய சிவந்த உதடுகள். முத்துப் போன்ற பற்கள். வாயில் சுலபமாக நுழையாத பெரிய இத்தாலிய வார்த்தைகளை அவள் உச்சரிக்க முயலும்போது அவள் வாய் கோணிற்று. அவள் முகத்தில் அது ஒன்றுதான் ஸெராவினோவுக்குப் பிடிக்கவில்லை.
அவள் சொன்னாள்; “நீல நுரை தெரிக்கும் இந்த அலைகடலைப்பார். ஜெர்மன் பாஷையில் ‘கிடைக்காத கடிதங்கள் ‘ என்று ஓர் அற்புதமான நூல் உண்டு. எனக்கு அதில் இரண்டொரு வாக்கி யங்கள் ஞாபகம் வருகின்றன.” அவள் ஜெர்மன் பாஷையில் அந்த நூலிலிருந்து இரண்டு வாக்கியங் களைச் சொன்னாள். “கடல் கண்ணாடி போலத் தெளி வான பரப்பாகப் பரந்திருந்தது. மேலே எட்டாத உயரத்தில் அதன்மேல் கவிழ்ந்திருந்தது வானம். கரை ஓரத்திலே காதலர் இருவர் உட்கார்ந்திருந்தனர். வாலிபம், காதல், இதுபோன்ற இன்னும் பல மாயங் களால் கட்டுண்டவர்கள் அவர்கள்.”
ஸெராவினோவுக்கு ஜெர்மன் பாஷை தெரியாது. அவள் சொன்ன வாக்கியங்களின் அர்த்தத்தை அவன் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் இத்தாலிய பாஷை பேசும்போது கோணிய அவளுடைய வாய், தாய் பாஷையைப் பேசும்போது எவ்வளவு அழகாக இருக் கிறது என்று எண்ணியவனாய் அவள் வாயைப் பார்த் துக்கொண்டே நின்றான். தாகத்தால் வருந்தும் ஒருவன் கனிந்த பழத்தைப் பார்ப்பது போலப் பார்த்துக் கொண்டு நின்றான். அவன் பார்வையைக்கண்ட எலிஸபெத் மேலேபேசாமல் நின்றாள், வெகுவாகக் கஷ்டப்பட்டுத் தன் கண்களை ஸெராவினே அப்பால். திருப்பிக்கொண்டான். தன் மனத்தில் இருந்ததைக் காட்டிக்கொள்ள அவன் விரும்பவில்லை. ஏழை என்றா. லும் கௌரவத்தை இழக்காதவன் என்ற வேஷத்தை அவள்முன் சரிவரப்போட்டுக்காட்ட அவன் முயன்றான்.
“நீ இப்பொழுது சொன்னதின் அர்த்தம் என்ன?”
எலிஸபெத் மொழிபெயர்த்துச் சொன்னாள்.
அந்த வினாடி முதல் தன்னுடைய அமைதியை இழக்க ஆரம்பித்து விட்டான் ஸெராவினே. தன்னு டைய கெளரவத்தைப் பற்றிய சிந்தனையைக் காற்றில் பறக்க விட்டுவிட்டான். அவள் சொன்னதன் அர்த்தம் என்ன? அவள் தன்னைக் காதலித்தாள் என்பது மட்டுமல்ல. அவள் தன் காதலை வேண்டி னாள் என்றும் ஸெராவினோவுக்குப்பட்டது. இந்த சந். தர்ப்பத்தைச் சரியானபடி பயன் படுத்திக்கொள்ள அவன் விரும்பினான். ஆனால் எப்படி ஆரம்பிப்பது, என்ன சொல்வது என்றுதான் அவனுக்குத் தெரிய வில்லை. தன்னம்பிக்கையும் போதவில்லை.
எலிஸபெத் யார்? அவள் எங்கிருந்து வந்தவள்? கல்யாணம் ஆகாதவள் தானா? நல்லவளா? பரிசுத்தமானவளா? ஓர் இடைஞ்சலைப்பற்றி முன்பு ஒரு தரம் எழுதியிருந்தாளே, அது என்ன ?
அவர்கள் இருவரும் அன்று காலைப்பொழுது முழுவதையும் கடற்கரை ஓரத்திலிருந்த பானொலி என்ற கிராமத்திலேயே கழித்து விட்டார்கள். அங் கிருந்த ஒரு சின்ன ஹோட்டலின் தோட்டத்தில் தங்கள் பகல் போஜனத்தை முடித்துக் கொண்டார் கள். ஹோட்டல்காரக் கிழவனும் மற்றவர்களும் அவர்கள் புதிதாகக் கல்யாணமான தம்பதிகள் என்று எண்ணி அவர்களை அப்படியே வரவேற்று அன்புடன் உபசரித்தார்கள்.
சாப்பாடானதும் வாடகைக்கு ஒரு படகு பேசிக் கொண்டு அவர்கள் இருவரும் நிஸிடாத் தீவுக்குப் போகக் கிளம்பினார்கள். வசந்தத்தின் மிருதுவான காற்று கடலின் மேல் படிந்து வீசிக் கொண்டிருந் தது. தங்கமும் நீலமுமான புஷ்பங்களால் தொடுக் கப்பட்ட பிரும்மாண்டமான மாலைகள் போலக் கடல் அலைகள் காட்சி அளித்தன. பச்சை மலைகளுக்கும், நீலத்தீவுகளுக்கும் உச்சியில் மேகங்கள் தங்க முடி சூட்டின. எலிஸபெத்தின் மெல்லிய அழகிய உரு வம் நீலக் கடலில் பிரதிபலித்துத் தெரிந்தது. ஆனால் அந்தப் பொழுதின் இன்பத்தை அவள் அனுபவித்த தாகத் தெரியவில்லை. அவள் சிந்தனைகள் எங்கேயோ சென்று லயித்திருந்தன. அழகிய அவளுடைய முகம் இருண்டு கிடந்தது. தன்னுடன் ஸெராவினோ வந்திருந்ததைக் கூட மறந்து விட்டவள்போல அவள் உட்கார்ந்திருந்தாள்.
நிஸிடாத் தீவு நெருங்கிற்று. வர்ணம் தீட்டப் பட்ட வீடுகளும், நீலக் கற்பாறைகளும், செங்குத்தான மலைகளும் எல்லா வற்றிற்கும் உச்சியில் வெள்ளை அடிக்கப்பட்ட சிறைச்சாலை என்னும் சவக் குழியின் சுவர்களும் தெளிவாகத் தெரிந்தன.
எலிஸபெத் நிமிர்ந்து பார்த்தாள். தீவை அடைந்து கரையில் இறங்கும்போது ஸெராவினோ வின் கையில் தன் கையைக் கோர்த்துக் கொண்டு இறங்கினாள். இறங்கித்தெருவில் நடக்கையில் அவள் சொன்னாள்: ‘பழையகாலத்துக் காதற் கதைகளி லெல்லாம் ஓர் அத்தியாயம் வரும். அதில் காதலர்கள் இருவரும் ஏதாவது ஒரு பழைய கோட்டையையோ கோயிலையோ அல்லது காட்டையோ சுற்றி ஆனந்த மாகத் திரிந்துவிட்டு வரக் கிளம்புவார்கள். இந்த அத்தியாயத்தில் ஆசிரியன் தன்னுடைய சரித்திர ஞானத்தையும் இயற்கை வியப்பையும் மத உணர்ச்சி யையும் காட்டி வாசகர்களை மயக்குவான். இடை யில் காதலர்கள் இருவரும் கருத்தொருமித்துத் தங் கள் உள்ளங்களைத் திறந்து காட்டிக் கொள்ளுவார் கள். நம்முடைய விஷயமோ என்றால் அலாதியான தாக இருக்கிறது. நம்மைப்போல இதற்குமுன் எந்த ஜோடியும் பொழுது போக்காக ஒரு சிறைச்சாலை யைப் பார்க்க வந்திருக்கமாட்டார்கள் என்பது நிச்சயம்.”
“உண்மைதான்” என்றான் ஸெராவினோ.
அவன்குரல் நடுங்கிற்று. அவன் உள்ளம் துடித்தது. எலிஸபெத் என்ன சொல்லிக் கொண்டிருந் தாள் ? எதை உத்தேசித்து அவள் இப்படி யெல்லாம் பேசினாள் ? தன் உள்ளத்தையும் திறந்து காட்ட வேண்டிய வேளை நெருங்கி விட்டதா ?
ஸெராவினோ கையை நீட்டினால் போதும் அவளை மார்புடன் சேர்த்து இறுக அணைத்துக் கொண்டு விடலாம். அவன் செய்ய விரும்பியது என்னவோ, அதுதான். ஆனால் தைரியம் வரவில்லை. எலிஸபெத் தன்னுடன் சும்மா விளையாடினாளே தவிர வேறு ஒன்றும் இல்லை என்று அவன் எண்ணினான். அவள் அவனைக் காதலிப்பதும் சாத்தியமான விஷயமா என்ன? ஏழை ஆரம்பப் பள்ளிக்கூட ஆசிரியன் அவன், அவளுடைய பட்டாடையின் சர சரப்பைக்கண்டு அஞ்சினான். பயங்கொள்ளி என்ற பட்டத்துக்கும் இடம் வைத்துக்கொண்டு விடக் கூடாது என்று அவன் எண்ணினான்.
பாதையின் இரண்டு பக்கங்களிலும் நெடுகச் சுவர் எழுப்பப்பட்டிருந்தது. சுவரில் இருந்த கதவு களின் மூலம் அருகில் பச்சையும் அப்பால் கடலின் நீலமும் தெரிந்தன. பாதையில் அவர்கள் இருவரை யும் தவிர வேறு யாருமே இல்லை.
திடீரென்று அவர்கள் பாதையில் ஒரு திருப்பம் திரும்பினார்கள். எதிரே ஒரு பாறை தென்பட்டது. அதன்மேல் ஏறினார்கள். கடலுக்குமேல் அப்பாறை செங்குத்தாக உயர்ந்து நின்றது. பாறையின் கீழ்ப் பாகத்தில் அலைகடல் மோதி முணுமுணுத்தது.
திடீரென்று எலிஸபெத் கேட்டாள். “இது மாதிரி இடம் தானே?”
“ஆமாம்.”
கனவில்போல இருந்தது ஸெராவினோவுக்கு. தன்னுடைய சென்ற கால வாழ்க்கை எல்லாம் எப் படித் திடீரென்று நினைவுக்கு வந்தது என்று எண்ணி அவன் ஆச்சரியப்பட்டான். சென்றதெல்லாம் போக, இப்பொழுதோ ? இப்பொழுது அவன் அங்கு நின்றான் – காதலனாக – காதலிக்கப்பட்டவனாகவும் தானோ? அவன் பக்கத்தில் நின்றவள் அழகி : அறிவு உள்ளவள். பக்ஷிகளையும் மேகங்களையும் அலைகளையும் போல எங்கிருந்தோ எவ்வளவோ தூரத்திலிருந்து வந்து அவன் பக்கத்தில் நின்றாள். அவன் ஒரு வார்த்தை சொன்னால் போதும். தன்னுடைய ஐசுவரியத்தையும் அழகையும் அவனிடம் ஒப்புவிக்க அவள் தயாராக இருந்தாள்.
திடீரென்று எழுந்த தைரியம் பறந்து ஓடிப் போகுமுன் அவன் ஓர் அசாதாரணமான வேகத் துடன் அவள் பக்கம் திரும்பி அவளைக் கட்டி அணைத் துக் கொண்டான்.
எலிஸபெத் அவனைத் தடுக்கவில்லை. தலை நிமிர்ந்து பெருமையுடன் அவனைப் பார்த்தாள். அவள் கண்கள் நிறைந்திருப்பதை அவன் கண்டான்.
கெஞ்சுதலாக அன்பு ததும்பும் குரலில் ஸெரா வினோ கேட்டான். “ஏன் ? அழுகிறாயே? என்னை மன்னித்து விடு. நான் பைத்தியக்காரன். ஆனால் நான் உன்னிடம் வேண்டுவது ஒரே ஒரு வார்த்தை தான்.நீ என்னை நேசிப்பதாகச் சொல்லிவிடு – அது போதும். அதற்குப் பிறகு நான் உன்முன் வரவே மாட்டேன் – நீ என்னைக் காணவே வேண்டிய தில்லை – வேண்டியதில்லை ” என்று குழந்தைபோலத் திரும்பத் திரும்பச் சொன்னான். அவள் முகத்தில் படர்ந்திருந்த சோக பாவம் அவனை மீளாத் துயரத் தில் ஆழ்த்தியது.
அவன் துயருற்றதைக் கண்டு எலிஸபெத் தன் கண்களைத் துடைத்துக்கொண்டாள். மனத்தையும் தேற்றிக்கொள்ள முயன்றாள். அவன் முகத்தோடு முகம் வைத்து முத்த மிட்டாள். ” அதற்காக இல்லை” என்றாள். “நான் உன்னையேதான் காதலிக்கிறேன். என் கண்கள் நிறைந்ததற்கு வேறு காரணம் உண்டு. அதை.யாரிடமும் சொல்லவேண்டாம் என்றுதான் நான் எண்ணி இருந்தேன். ஆனால் அதை இப் பொழுது உன்னிடம் சொல்லியேவிடுகிறேன். பின்னர் சொல்லத் தைரியம் வராது. எழுதியிருந்தேனே. உனக்கு ஞாபகம் இருக்கிறதா? ஏன் தகப்பனாரின் நண்பர் ஒருவர் சிறையிலிருந்து தப்பி ஓட முயன்ற தாகவும் அவரை ஒரு காவலாளி சுட்டுக்கொன்று விட்டதாகவும் எழுதியிருந்தேனே? என் தகப்பனா ரின் அந்த நண்பர் வேறு யாரும் இல்லை. என் தகப்பனாரே தான்…”
“எலிஸபெத், எலிஸபெத்!”
அவன் முகம் சட்டென்று வெளுத்தது. உதடு கள் துடித்தன. அவனால் வேறு ஒரு வார்த்தையும் பேசமுடியவில்லை.
எலிஸபெத் மேலும் சொன்னாள். “உன் குரல் வெகு தூரத்துக்கு அப்பாலிருந்த என்னைக் கட்டி இழுத்தது இதனால்தான். நீ அன்று காவல் ‘டியூடி’ யில் இருந்திருந்தாயானால் என் தகப்பனாரிடம் அநு தாபம் கொண்டு கருணை காட்டி அவரைத் தப்பிப் போக விட்டிருப்பாய். அதே போல என்னிடமும் நீ இப்போது கருணை கொள்ளவேண்டும்…”
ஆனால் முடிவில் அவள் தான் அவனிடம் கருணை காட்டவேண்டி நேர்ந்தது. அவள் தன்னை விட்டுப் பிரிந்து போய்விடுவாளோ என்ற பயத்துடன் குழந்தைபோல நடுநடுங்கிக்கொண்டு நின்ற ஸெராவினோவைப் பார்த்து அவள் புன்னகை புரிந்தாள் – கண்ணில் ஈரம் காயுமுன், தலையைச் சாய்த்துக்கொண்டு அவனை அணைத்து அவன் உதடுகளில் முத்தமிட்டாள்.
– காதற்கதை, சர்வ தேசக் கதை மலர் -1, இத்தாலி, எழுதியவர்: கிரேஸியா டெலடா, மொழிபெயர்த்தவர்: க.நா.சுப்ரமண்யம், முதற் பதிப்பு: ஜனவரி 1944, ஜோதி நிலையம், திருவல்லிக்கேணி, சென்னை.