காணாமல் போன பெட்டி






சென்னையில் பஸ் கிளம்பும் போது மணி பத்தை தாண்டி விட்டது. சுதாவுடன் பாலு ஊரில் நடக்க இருக்கும் ஒரு திருமணத்துக்காக கிளம்பி வந்தான். பஸ்சின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த சுதா சாரல் தாங்க முடியாமல் மாறி அமர்ந்து கொண்டாள். இரண்டு தோல் பைகளும் ஒரு சூட்கேசுமாக கிளம்பி இருந்தனர்.
பாலு நொடிக்கொரு தடவை மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சூட்கேஸ் மீது கவனம் வைத்திருந்தான். மணி அதிகாலை மூன்றை தொட்டது. கண் எரிச்சலுடன் நெளிந்தான்.
தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்ட் நெருங்கி விட்டதை நியான் விளக்குகளின் மின்மினி ஒளியில் இருந்து அறிய முடிந்தது.
“சுதா பஸ் ஸ்டாண்ட் நெருங்கிட்டுது” என்றான். “சரிங்கட” என்று சுதா தயாரானாள்.
சரியாக அதிகாலை 4 மணிக்கு அவர்கள் பயணம் செய்த விரைவு பேருந்து புதிய பஸ் நிலையத்துக்குள் நுழைந்தது. நிசப்தமாக இருந்தது. பஸ் நிலையம் வெளியூர் பஸ்கள் ஒவ்வொன்றாக உள்ளே வந்து கொண்டிருந்தது. பயணிகள்அவசர அவசரமாக மூட்டை முடிச்சுகளுடன் இறங்கினர்.
சுதாவும், பாலுவும் சூட்கேஸ், தோல் பைகளுடன் கீழே இறங்கினர்.”என்னங்க.. காபி வேணும்?” என்றாள் சுதா.”வா போகலாம்” என்று அருகில் இருந்த கடையில் தண்ணீரை வாங்கி முக கழுவினான் பாலு. சுதாவும் முகத்தை நன்றாக கழுவினாள். ஒரே தூக்க கலக்க வேறு. காபி என்ற பெயரில் கழுநீர் போல தந்ததை இருவரும் குடித்தனர். .
பாலு தஞ்சாவூரில் இருந்து வலங்கைமானுக்கு செல்ல வேண்டிய பஸ்சை தேடினான். இன்னும் அரை மணி நேரம் ஆகும் என்றனர். சற்று நேரம் இருவரும் அப்படியே பேசியவாறே அமர்ந்தனர். பஸ் வந்தது. இடம்பிடிக்க போட்டா போட்டி நடந்தது. சுதாவிடம் இருந்த சூட்கேசை வாங்கி மேல் பகுதியில் வைத்தான். இருவரும் உட்கார்ந்தனர். பஸ்சில் ஏக்கூட்டம் என்பதால் சூட்கேஸ் பத்திரமாக இருக்கிறதா என்பதை பார்த்துக்கொண்டான் பாலு.
“என்னங்க… இந்த பையை மேலே வைக்க முடியுமான்னு பாருங்க…” என்றாள் சுதா. மறுநொடி.. மேலே வைக்க இடம் தேடியவனுக்கு அதிர்ச்சி… அங்கு வைத்திருந்த சூட்கேசை காணவில்லை. நன்றாக தேடினான். இல்லை.
“சே.. என்ன ஒரு சோதனை.. வாழ்வில் இப்படி ஒரு இழப்பை சந்தித்ததே இல்லை. சூட்கேசில் 5 பவுன் சங்கிலி ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது. என்ன செய்வதென்றே புரியவில்லை”
மைக்கில்… டைம் கீப்பர் அறிவித்தனர். அறையில் இருந்து பஸ்கள் புறப்படும் நேரம் அதைக் கேட்ட பாலுவுக்கு திடீரென ஒரு யோசனை உதித்தது.
டைம் கீப்பர் அறைக்குள் நுழைந்தான். அடுத்த நிமிடம் மைக்கில். “சற்று முன் பஸ் நிலையத்தில் ஒரு பயணி வைத்திருந்த சூட்கேஸ் திருட்டு போய் விட்டது. அந்த சூட்கேசில் வெடிகுண்டுகள் இருப்பதாக தெரிகிறது. எனவே எடுத்தவர்கள்… திறக்க வேண்டாம்…” என்று அறிவிக்கப்பட்டது.
இதைக் கேட்டதும் பஸ் நிலையம் பரபரப்பானது. ஐந்து நிமிடம் கழிந்திருக்கும். ஒரு ஆசாமி டைம் கீப்பர் அறையை நோக்கி ஓடி வந்தான்.
“சார்.. கழிப்பறை பக்கமா ஒரு சூட்கேஸ் கிடக்கு” என்றான் பதட்டமாக.
கழிப்பறை அருகே பாலுவின் சூட்கேஸ் அனாதையாக கிடந்தது. பத்திரமாக எடுத்த டைம்-கீப்பர், “சார்… இந்தாங்க. உங்க சூட்கேஸ் உங்க ஐடியாவுக்கு பலன் கிடைச்சிட்டு..” என்றார்.
– மாலை மலர், தேன் மலர், 30-10-1999.