காட்டுக் கோழி
கதையாசிரியர்: த.சண்முகசுந்தரம்
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: January 6, 2026
பார்வையிட்டோர்: 544
(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அலுவலக வேலை முடிந்ததும் வெளியே வந்தேன். புறாக்கூடு போன்ற உயர்ந்த மாடிக் கட்டிடத்தில் எட்டு மணிநேரம் அடைபட்டுக் கிடந்ததினால் ஏற்பட்ட அலுப்பு ஒரு புறம். தட்டச்சுடன் மாரடித்ததினால் ஏற்பட்ட சோர்வு மறுபுறம். நானோ கமக்காரனின் மகன். சுமாராகப் படிப்பேன். தந்தையாரின் விருப்பப்படி காற்சட்டை போடுகின்ற உத்தியோகத்தை பார்த்து வருகின்றேன். இருந்தும் என்னுள்ளம் யாழ்ப்பாணத்திலுள்ள புலம், பற்றைக்காடு, பனந்தோப்பு, என்பவற்றையே நாடியிருந்தது. உண்மையைச் சொன்னால் அப்பு – அதாவது அப்பா தான் என்னை இன்றும் பார்க்கிறார். மனைவியும் ஒரு பிள்ளையும் ஊரிலே. நான் கொழும்பிலே. வீட்டிற்கு ஒரு சதமும் அனுப்புவதில்லை. “உன் உழைப்பு, உனக்கு. தங்கச்சியையும், குழந்தையையும் நான் பார்க்கிறேன்” என்பார் அப்பு. தோட்டச் செய்கையால் அவருக்கு ஆண்டு தோறும் பத்தாயிரம், பதினையாயிரம் என்று தேறும். ஆய்ச்சியின் சில்லறை வியாபார வரும்படி வேறு. எனக்குக் குறையில்லை. இராசாவாக இருந்தேன். பெயரும் சிவராசாதான்.
நடைபாதையால் விரைந்து வந்தேன். “இயற்கை விஞ்ஞானக் கழகத்தின்” இன்றைய நிகழ்ச்சி நிரலில் கண்ணைச் செலுத்தினேன். “பேச்சு இலங்கைக் காட்டுக்கோழி பேராசிரியர் பேரம்பலம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனக்கும் பேராசரியர் பேரம்பலத்திற்கும் நெருங்கிய தொடர்பிருந்தது ! நான் அவருக்கு ஒழுங்காக ஓய்வு நேரத்தில் தட்டெழுத்துத் திருப்பணி செய்து என் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வேன். கல்விப் பொதுத் தராதர உயர்தரத் தேர்வில் உயிரியல் பிரிவிலே கற்று நான்கு பாடங்களிலும் சிறப்புச் சித்தி பெற்றவன் தான் பல்கலைக்கழகம் என்னும் வெட்டியான் தரப்படுத்தல் பெயரில் என் மேற்படிப்பு ஆசையைச் சிரச்சேதம் செய்தது. இது தரப்படுத்தல் என்னும் தர்மத்தில் சேரும். இதனால் பேராசிரியர் பேரம்பலத்தின் கட்டுரைகளைப் பொருள் விளங்கித் தட்டச்சில் பொறித்துக் கொடுக்கின்ற திறமை எனக்கிருந்தது. இந்தப் பேச்சையும் நான்தான் சீராகக் கொடுத்துப் பேராசிரியர் பேரம்பலத்தின் பாராட்டையும் பெற்றிருந்தேன்.
இயற்கை விஞ்ஞானக் கழகத்தின் இந்த வனவிலங்கு பாதுகாப்புக் கூட்டம் சிறப்பாக நடைபெறும் கூட்டத்திற்குச் செல்லும் நோக்கத்துடன் நேரத்தைப் பார்த்தேன். மணிக்கூடு என்னுடையது இல்லை. அம்மான் அதாவது மாமா வாங்கித் தந்தது. என் அறைக்குச் சென்று என்ன செய்யலாம் போய் திரும்ப கூட்டத்திற்கு வரப் பேரூந்துத் சத்தம் என்னிடமில்லை. ஆகவே நேராக விஞ்ஞானக் கழக மண்டபத்திற்குள் புகுந்தேன். பேராசிரியர் கண்ணிலே பட வேண்டும். பேச்சு முடிந்ததும் இறுக்கி கைதட்டி அவரின் பாராட்டைப் பெறவேண்டும். இதுவும் என் நோக்கம். கடலை வடையையும் வெறும் சாயத்தையும் குடிக்கலாம். என்றால் அதற்கும் எனக்குப் பொருளாதார நெருக்கடி இருந்தது. நேரே மண்டபத்துள் புகுந்தேன்.
“அழைப்புப் பெற்றவர்களுக்கு மட்டும் பிரவேசம்” எனப் பல்கலைக் கழகத்து விரிவுரையாளர் ஒருவர் சொன்னார். “சரிதான் போகலாம்” என உள்ளுக்குள் நினைத்துக் கொண்டு ‘நன்றி’ என உரத்து அந்த விரிவுரையாளரைப் பார்த்து பல்லைக் காட்டினேன். என் குரல் பேரம்பலத்திற்கு கேட்டுவிட்டது.
“மகனே ! இவர் என் பகுதி நேரத் தட்டெழுத்தாள நண்பன். வரவிடுங்கள் அழைக்கவிருந்தேன். பின்னர் ஏதோ மறதி” என்று அந்த விரிவுரையாளரை பார்த்து ஆங்கிலத்திலே கூறினார். பின்னர் என்னைப் பார்த்து “இராசா மன்னிக்க வேண்டும் மறந்துவிட்டேன்” என்றார்.
“அதனால், ஒன்றுமில்லை ஐயா !” என்றேன். மகேஸ் தேனீர் விருந்திற்கு ஆயத்தமோ” இராசாவும் வாருங்கள்” என்றார். கடலை வடையும் வெறும் சாயமும் என் கண் முன்னே தோன்றின. தோன்றி மறைந்தன. தேனீர் விருந்து மிகவும் சிறப்பாக நடந்தது. என் வயிறு வெடிக்கும் போலாகிவிட்டது. பேராசிரியரின் மகள் என்னிடம் வந்து “மாமா” இன்று ஒன்று துண்டு கேக்” என்று நீட்டினாள். இரவு கடைச்சாப்பாட்டிற்கு கொட்ட வேண்டி பணம் மிச்சமாகும். என்ற நினைவில் எல்லாச் சிற்றுண்டி வகைகளிலும் இரண்டு பிடி” பிடித்தேன். அப்படி உண்பதில் எனக்கு ஆறுதல். கூட்டத்திற்கு அலுவல் விளங்கியவரும் வந்திருந்தனர். அலுவல் விளங்காதவர்களும் வந்திருந்தனர். கனவான்களோ தமது உடை, கழுத்துப் பட்டி, மோட்டார் வண்டி, தொலைக்காட்சிப் பெட்டி என்று பேசினர். அரிவையரோ சேலை, சேலைத் தலைப்பு, சருகை, குளிர் சாதனப் பெட்டி எனப் பேசினர். இந்தப் பேச்சிலே கலந்து கொள்ள கமக்காரனின் மகனாகிய எனக்குத் தகுதியில்லை. இது வெளிப்படை, ஆனால் காட்டுக் கோழி பற்றி எனக்கு நிறையத் தெரியும்? தேநீர் விருந்து முடிந்தது. சரியாக ஆறுமணிக்கு கூட்டம் தொடங்கியது. பேராசிரியரின் ஆய்வுரை விளங்காத பெரியார் பலருமல்லாத்திவிட்ட ஆமை போல கதிரையில் கிடந்து விட்டனர். பேராரிசிரியரின் குரல் இனிமையானது. அதில் மிடுக்குக் கலந்திருக்கும். பேச்சு வழக்கு சொல்லுக்குச் சொல் தெரியும். எனக்கு அது பற்றிய விளக்கமும் கூடுதலாக இருந்தது.
இறுதியாக பேராசிரியர் தன் தொகுப்புரையை நடாத்தினார். இலங்கைக் காட்டுக் கோழி உயிரியல் அடிப்படையில் மிகவும் பழமையானது. என்பதை அவர் கூறினார். மனிதன் இன்று பரந்த காட்டை அழித்துத் தோட்டமாக்குகிறான். ஆகவே காட்டுக் கோழி உயிரியல் அடிப்படையில் மிகவும் பழமையானது என்பதை அவர் கூறினார். மனிதன் இன்று பரந்த காட்டை அழித்து தோட்டமாக்குகிறான். ஆகவே காட்டுக் கோழி தன் இயற்கைச் சூழ்நிலையில் வாழ முடியாமல் அழியும் நிலையில் இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் அது ஒரு முறையில் இரண்டு, மூன்று முட்டையை இட்டு அடைகாத்துக் குஞ்சு பொரிக்கும். ஆகவே அதன் இனவிருத்தி வேகம் குறைவு எனவும் அவர் சுட்டிக்காட்டினார். போதாக்குறைக்கு வேட்டைக்காரர் கண்டபடி காட்டுக் கோழியை சுட்டுத் தள்ளுகின்றனர் எனவும் பேராசிரியர் வருத்தத்துடன் தெரிவித்தார். இதனை விட காட்டுக் கோழிக்குப் பருந்து, வல்லூறு, பாம்பு, கீரி, குள்ளநரி போன்ற இயற்கை எதிரிகளும் இருக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டு தன் பேச்சை முடித்தார். அதற்கு முன்னர் ஒரு குறிப்பையும் சொன்னார். ‘காட்டுக் கோழியை பாதுகாப்பது எமது கடமை என்றார். ‘காட்டுக் கோழிச் சேவல் மிகவும் ஆண்மை நிரம்பியது. மிகவும் வீரம் உள்ளது. சண்டை வந்தால் விட்டுப் போகாது. கடைசிவரையும் போராடும். அது பற்றைக்குள் இருக்கும். வேறு சேவல் வந்து சிறகடித்தால், கூவினால் மறைவிலிருந்து வந்து கொத்துப்படும்.
எமது மத்தியில் பெருந்தன்மையில்லாத வேட்டைக்காரர் இருக்கின்றனர். இவர்கள் பற்றைக்கு முன்னால் நின்று லேசாகக் கை தட்டுவர். பின்னர் சேவல்கள் போல கூவுவர். மறைவிலிருக்கும் சேவல் செட்டையை அடித்துக் கொண்டு சண்டைக்கு வந்துவிடும். இது கெளரவமற்ற வேட்டை என அழாக்குறையாக பேரம்பலம் கூறினார். பலரும் பேராசிரியரை பாராட்டினர். குறிப்புரை கூறினர். நன்றியுரையும் கூறப்பட்டது.
கூட்டம் முடிந்தது. பேராசிரியர்கள் அழைப்பின் பெயரில் அவரின் மோட்டார் வண்டியில் ஏறினேன். என் அறையும் பேராசிரியரின் பங்களாவும் கிட்டக்கிட்டத்தான் இருந்தன. போகும் பொழுது பேராசிரியரின் உச்சி குளிரப் பேசினேன். இதனாலோ என்னவோ தெரியாது பேராசிரியர் என்னைப் பார்த்துப் பேசினார்.
“இராசா! எனது அடுத்த பேச்சு காட்டுப் பன்றி பற்றியது. வீட்டிற்கு வாருங்கள். கையெழுத்துப் பிரதி இருக்கின்றது. அதனை எடுத்துத் தட்டச்சில் போட்டுத் தாரும் வீட்டிலே இராச்சாப்பாடும் இன்று என்னுடன்தான்.
‘நல்லது ஐயா!’ என்றேன். பேராசிரியர் இரா விருந்து பெயர் போனது. அடுத்த பேச்சை அடித்துக் கொடுத்தால் மேலும் ஐம்பதோ நுாறோ தேறும். இப்படி யோசிக்க முன்னர் பேராசிரியரின் அந்தச் சொகுசு வண்டி அவர் வீட்டின் முகப்பிலேயே போய் நின்றது. நான் மிகவும் பணிவுடன் இறங்கி மோட்டார் வண்டியின் கதவைத் திறந்து விட்டேன். மிகவும் மிடுக்காக அவர் இறங்கினார். இறங்கியதும் அங்கிருந்த ஒருவனைக் கண்டுவிட்டார்.
‘என்ன பழனி? மீண்டும் வந்துவிட்டாய்?’ என்றார்.
‘ஆம் சாமி துரை, தங்களோடு பேசவேண்டும்’.
‘சரி, இரு போய் உடுப்பு மாற்றிவிட்டு வருகிறேன்’ என்று கூறிய பேராசிரியர் உள்ளே போனார். அங்கிருந்த உருவத்தைச் சற்றுக் கவனித்தேன். ஆறு அடி உயரமுள்ள அந்தக் கிழவன் சற்றுக் கூனியிருந்தான். அந்தக் கூனலில் அடக்கமும், ஏமாற்றமும், வறுமையும் பிரதிபலித்திருந்தன. அடங்கி அடங்கி வாழ்ந்து அடக்கப்பட்ட ஒரு சமுதாயத்தின் பிரதிநிதி அவன். வறுமை, கடின உழைப்பு, அகால மூப்பு இவற்றால் கூனல் ஏற்பட்டதோ அல்லது அடங்கி ஒடுங்கி வாழ்ந்ததினால் கூனல் விழுந்ததோ என நான் ஆராய்ச்சி செய்தேன்.
உள்ளே போன பேராசிரியர் உடையை மாற்றிவிட்டு ‘ஒன்றிரண்டைப் போட்டுக் கொண்டு’ வெண் சுருட்டுடன் வந்தார்.
‘சரி பழனி! சொல் உன் கதையை’ என்றார். அதில் ஏளனம் பிரதிபலித்தது. பழனி பேசத் தொடங்கினான்.
“ஐயா! சாமி! துரை, வணக்கம். உங்கள் உப்பைத் தின்று வாழ்பவன் நான். என் குடும்பமும் அப்படியே. உங்கள் வவுனியாத் தோட்டத்தில் இருவது வரியம் வாழ்ந்து வருகிறேன். என் உழைப்பெல்லாம் உங்களுக்குத்தான், சம்சாரம் முத்துக்குட்டிதான் என்னை இங்கு போகச் சொன்னாள். குடிசை ஒழுகுகிறது. மேய வேண்டும். மழை பெய்தால் இருக்க முடியாது. அந்த ஓட்டை வாடியில் படுத்து எழும்ப முடியாது. என் பெண் குழந்தை ஒன்று மழையில் நனைந்து சன்னி வந்து இறந்து விட்டது. கடும் மழை, மழையோடு போட்டி போட்டுக் கண்ணீர் விட்டுத் தோட்டத்து மூலையிலைதான் சவத்தைப் புதைத்தேன். பழனி விம்மினான்.
‘எத்தனை குழந்தை’ என்றார் பேரம்பலம்.
‘எட்டுச்சாமி. ஒன்று இறந்துவிட்டது. இப்பொழுது ஏழு மூத்தது தங்கள் வீட்டில்’ என்றான் பழனி, பழனி தொடர்ந்து பேசினான்.
‘வேலியடைக்க வேண்டும். இரவிலே காட்டுப் பன்றியின் தொல்லை வேறு. இராமுழுவதும் மாறி மாறிக் காவல் காத்துத் தோட்டா முடிந்துவிட்டது. இரவிலே துாங்குவது கூடப் பயம்தான் சாமி ! துரை ! நான் சம்சாரம், பிள்ளைகள் ஆறும் உங்கள் தோட்டத்தில் இராப்பகலாக உழைக்கின்றோம். ஏதாவது கூட்டிக் கொடுங்கள். பஞ்சம் பசி சாமி. விலைவாசி விசம்போல ஏறுகிறது எனப் பழனி சிணிங்கினான்.
‘நல்லது பார்த்துச் செய்வோம்’, என்றார் பேராசிரியர்.
‘சாமி! அத்துடன் நல்ல செய்தி. என் மூத்தவளுக்கு உங்களோடு இருக்கிற மீனாவிற்குக் கலியாணப் பேச்சு. என் அக்கா மகன்தான் மாப்பிள்ளை. வெறுமனே மீனாவைத் தந்தால் போதும் என்கிறான் என்றான் பழனி பின்னர் சிரித்தான்,
‘மீனா! மீனா இங்கு வா!’ என்றார் பேராசிரியர். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த அழகிய பணிப்பெண் மீனா வந்தாள். பழனியின் மகள் மீனா என்று சொல்லவே முடியவில்லை. நல்ல கறுப்பி வாட்டசாட்டமான உடல். துப்புரவான உடுப்பு. பேராசிரியர் வீட்டிலே கொட்டிச் சிந்துவதை உண்பதினால் மீனாவின் உடல் வளர்ந்தது. பேராசிரியரின் மகள் கழித்து விடுகின்ற உடுப்பு அவளின் உடலை அழகுபடுத்தியது. மீனா நான் பேராசிரியரின் வீட்டு வேலைக்காாரி. தந்தை பழனியும் மகள் மீனாவும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். பார்த்துப் பேசினர் பார்வை மூலம்.
‘மீனா உனக்குக் கலியாணப் பேச்சு’ என்றான் பழனி. மீனாவின் அழகிய உருவம் நாணிக் கோணியது. பேராசிரியர் செருமினார்.
‘இப்போது மீனாவை விட முடியாது. உன் இரண்டாவது மகளை இங்கே கொண்டு வந்து விடு. அவள் வேலை பழகியதும், மீனாவை மூன்று மாதம் செல்ல அழைத்துப் போய்க் கலியாணம் செய்’ என்றார் பேரம்பலம்.
‘நல்லது சாமி எங்களுக்கு ஏதாவது சம்பளம் கூடப் போட்டுத்தாருங்கள். மீனாவுக்கு ஏதாவது இனாம் துரை உங்களோடு ஏழு வரியம் நின்றது சாமி’ எனப் பழனி இரந்தான்.
ஒன்றுமே தரமுடியாது. நீங்கள் வேண்டுமானால் தோட்டத்தை விட்டு எழும்புங்கள். மீனாவையும் உடனே அழைத்துச் செல்லுங்கள்’ என்று பேரம்பலம் எந்த உணர்ச்சியையும் இல்லாமற் பேசினார். பழனி எதுவும் பேசவில்லை. எதனையும் எதிர்க்கக் கூடிய வலு அவனுக்கில்லை. அவன் இயல்பே அப்படி. சில நிமிடங்கள் மௌனம் நிலவியது. காட்டுக் கோழி பற்றிய பேராசிரியர் பேரம்பலத்தின் பேச்சு என் காதில் ஒலித்தது. பின்னர் மீனா பேசினாள். தன் தகப்பனைப் பார்த்து. ஐயா ! எங்கள் எசமான் சொல்லுகிறபடி கேளுங்கள். தோட்டத்தை விட்டு விலகினால் எமக்கு கதியேது? இதற்கு மேல் அவளால் பேசமுடியவில்லை. பேராசிரியரி அல்செசன் நாய் இராமன் வந்தது. இராமனுக்குச் சாப்பாடு போடுவது மீனாதான். குளிக்க வார்ப்பது, உலாத்தக் கொண்டு போவது மீனாதான். அலுவலை விளங்கியது போல இராமன் வந்து மீனாவைப் பார்த்து வாலை ஆட்டியது ! அவளை நக்கியது. பல முறை வந்து போகின்ற பழனியை இராமனுக்குத் தெரியும். பழனியைப் பார்த்து இராமன் உறுமியது.
‘பழனி! இரவிற்கு இங்கு நில். திரும்பிப் போக இருபது ரூபா இது இனாம் இல்லை. சம்பள முற்காசு. பின்னர் கழிக்கலாம்’ என்றார் பேரம்பலம். அடக்கமாகப் பழனி கையை நீட்டினான். பழனியின் சமுதாயம் விழிப்புணர்ச்சி பெற சேவல் கூவாதோ?
த.சண்முகசுந்தரம்
ஈழத்து நாடகத்துறையில் ஆர்வம் உள்ளவர் ஆசிரியர். காட்டுக்கோழி போன்ற நல்ல சிறுகதைகளை இடையிடையே பத்திரிகைகளில் எழுதியுள்ளார். மாருதப்புரவீகவல்லி அவரது நாடகநூல்.
– 03.02.1980, ஈழநாடு.
– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.