காக்கும் தெய்வம்




(உலக மக்களை கோரோனா நோய் தொற்றில் இருந்து காக்கும் தெய்வங்களான அனைத்து நிலை மருத்துவப் பணியாளர்களுக்கும் இந்த கதை சமர்ப்பணம் )
“என்னங்க…என்னங்க…!தேத்தண்ணி கலக்கி வச்சிருக்கேன் வந்து குடிங்க” பாபாத்தியம்மாள் அவளது கணவனை உறக்க அழைத்தாள். “இதோ வந்துட்டேன் பாப்பா.. ” என்று சொல்லியபடியே வீட்டின் கொள்ளைபுறத்தில் சற்று வேளையாக இருந்த ராமசாமி வீட்டு முன்புறத்தை நோக்கி நடந்தார்.
அவர்கள் வீட்டில் மாலை மணி ஐந்தானால் இந்த காட்சி தவறாமல் நடக்கும். கணவன் மனைவி இருவருமாக அமர்ந்து தேநீர் அருந்திக் கோண்டே தங்கள் மகனைப் பற்றியும், அண்டை அயலார் பற்றியும் நாட்டு நடப்பு குறித்தும் பேசிக்கொள்வார்கள். இந்த பேச்சினூடே தேநீரும் உப்புரொட்டியும் தீர்ந்துவிடும்.
ராமசாமி பணி ஓய்வு பெற்ற மருத்துவமனை பணியாளர் ஆவார். தஞ்சோங் காராங் மருத்துவமனையில்தான் அவர் பணியாற்றினார். பிறருக்கு உதவும் மனம் கொண்ட நல்ல மனிதர்.
அவரது ஒரே மகன் துரைசாமி. அவர் ஒருத்தர் வருமானத்திலும் பாப்பாத்தியம்மாளின் சிக்கனமான குடும்ப நிர்வாகத்திலும் துரைசாமி மருத்துவரானான்.
35 வருடகாலம் ராமசாமி பணிசெய்த அதே தஞ்சோங் காராங் ஆஸ்பத்திரியில் தன் மகன் மருத்துவராக இருப்பது அவருக்கும் அவரது மனைவிக்கும் அவ்வளவு பெருமிதம். இருவரும் மகன் மீது உயிரையே வைத்திருந்தனர்.
இந்தோனேசியா பாலியில் தனது மருத்துவக்கல்வியை முடித்த துரைசாமி அவன் பிறந்து வளர்ந்த ஊரிலேயே மருத்துவராக இருப்பதில் அவனுக்கும் மிகுந்த மகிழ்ச்சி.
துரைசாமி வேலைக்கு சேர்ந்து மூன்று வருடம் ஆகிறது. மருத்துவமனைக்கு வரும் பெரும்பாலோர் துரைசாமி டாக்டரை பார்க்க வேண்டும் என்றே வருவார்கள். கைராசிக்கார டாக்டராக பெயரெடுத்திருந்தார் துரைசாமி. அவரது பேச்சிலேயே பாதி நோய் குணமாகிப்போகும் என பலர் பேசிக் கொள்வார்கள்.
“அப்பா..! அம்மா.. நீங்க ரெண்டு பேரும் ரொம்ப கவனமா இருக்கனும். இனிமே இந்த செனித்தைசரை பயன்படுத்தி கைகளை சுத்தமா வைச்சுக்க மறக்காதிங்க” அன்போடு வேண்டுகோள் விடுத்தான் ராமசமி.
“ஏண்டா இது ஆஸ்பத்திரியில நீங்க பயன்படுத்துர கைகழுவுர மருந்துதானே” அப்பாவியாக கேட்டாள் பாப்பாத்தி.
“ஆமாம்மா அதேதான்.. ஆனா அது மருந்து இல்லமா. அத பயன்படுத்தி கையில தேச்சிக்கிட்டா கிருமிகள் நம்மகிட்ட அண்டாது.” விளக்கினான் துரைசாமி.
“அதாண்டா கேக்குறேன் ஏன் வீட்டுல பாவிக்கச் சொல்ற? நான் வீட்ட சுத்தமாதானே வெச்சிருக்கேன், அப்புறம் எப்படி கிருமி வந்துரும்..” ஆதங்கத்துடன் கேட்டார் டாக்டரம்மா.
“அது இல்ல பாப்பா, இப்போ உலகம் முழுவதும் கொரோனான்ற கிருமி ரொம்ப வேகமா பரவிகிட்டு வருது. அது ரொம்ப பயங்கரமான கிருமி. சீன நாட்டில உருவாகி அங்க பல ஆயிரம் உயிர்களை காவு வாங்கிருச்சி. அதோட மட்டுமில்ல பாப்பா, இத்தாலி, இரான், அமெரிக்கா, பிராண்சு, ஸ்பேய்ன் போன்ற பெரும்பாலான உலக நாடுகள்ல இது கோரத் தாண்டவம் ஆடுது” தான் தவறாமல் தமிழ் நாழிதல் வாசிப்பவர் என்பதை கொரோனா தகவல் மூலம் உறுதி செய்தார்.
தன் பெற்றோர் மீதுள்ள பாசத்தின் வெளிப்பாடாக அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொறுமையாக விளக்கிவிட்டு வேலைக்கு விரைந்தான் துரைசாமி.
மாலை மணி ஐந்தாகியது. அந்த வீட்டின் சுப்ரபாதம் ஒலித்தது. “என்னாங்க…என்னாங்க..தேத்தண்ணி கலக்கி வச்சிருக்கேன் வந்து குடிங்க. அதோட மகன் சொன்னமாதிரியே கைய சுத்தமா கழுவிட்டு வாங்க தண்ணி ஆறிடப் போவுது” பாப்பாத்தியம்மாளின் குரல் சற்று ஓங்கியிருந்தது.
எப்பொழுதும் போல ராமசாமி வீட்டின் முன்னிருந்த பிராஞ்சாவில் வந்து அமர்ந்தார்.
” என்னாங்க..! மகன் சொன்னமாதிரியே கைய சுத்தமா கழுவிட்டிங்கலா?” பாப்பாத்தி கேட்டு முடிக்கும் முன்னே “கழுவிட்டேன்..கழுவிட்டேன் டாக்டர் அம்மா” சற்று நையாண்டியாக பதிலளித்தார் ராமசாமி.
இருவரும் பிராஞ்சாவில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொணடிருக்கும் போது “ ஆமாங்க முதல்ல நீங்களும் பையன் சொன்ன மாதிரி அது என்னங்க நோயி? உலகமெல்லாம் பரவிகிட்டு இருக்குன்னு சொன்னிங்க, கேக்கவே பயமா இருக்குங்க” என ஆரம்பித்தாள் பாபாத்தி.
“உண்மைதான் பாப்பா பையன் சொன்ன மதிரி இன்னிக்கி உலக நிலவரமே இந்த கிருமி தொற்றால தலைகீழா மாறிக் கெடக்குது. இந்த நோய கட்டுப்படுத்த பல நாடுகள் ‘லொக்டவுன்’ என்று சொல்லக்கூடிய நடமாட்டக் கட்டுப்பாடு, ஊரடங்கு போன்ற பல நடவடிக்கைகள எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. மேலும் வானொலி, தொலைகாட்சி, செய்தித்தாள், முகநூல், வாட்சாப்னு இப்படி எல்லாத் தகவல் ஊடகத்திலயும் இந்த நோய் குறித்த செய்திதான் வந்துகிட்டே இருக்கு.” சற்று இனம்புரியாத கலக்கத்துடன் விளக்கினார் பாப்பாத்தியம்மாளின் கனவர்.
“அப்படினா நம்ம நாட்டுலயும் இந்த நோய் வந்துருச்சாங்க? எத்தனை பேருக்கு வந்திருக்கு?” பதபதைப்புடன் கேட்டாள் பாப்பாத்தி. சற்று நிறுத்தி மேலும் தொடர்ந்தாள். “நம் நாட்டு அரசாங்கம் என்னாங்க நடவடிக்கை எடுத்தாங்க? நம்ம நாட்டுலயும் ஊரடங்கு எல்லாம் போடுவாங்களா? என்று பதற்றத்துடன் தன் கனவரை நோக்கி கேள்விக்கணைகளை தொடுத்தாள்.
“அத ஏன் கேக்குர பாப்பாத்தி, நம்ம நாட்டு அரசாங்கமே இப்ப அந்தரத்திலே தொங்குது.. நடப்பு அரசாங்கப் பிரதமர் டாக்டர்.துன்.மகாதீர் தனது பதவியை ராஜினாமா பண்ணிட்டாரு. அதனால யாரு அடுத்த பிரதமரா வரப்போராங்க; எந்த கட்சி ஆட்சி அமைக்கப் போவுதுன்னு ஒரே குழ்ப்பமா இருக்கு. இவங்க ஆட்சி அமைச்சி நடவடிக்கை எடுக்கறதுக்குள்ள இந்த கிருமி ரொம்ப பரவி ஆபத்தை விளைவிக்குமோனு ஒரே கவலையா இருக்கு. என ஆதங்கப்பட்டார் ராமசாமி.
“அப்படின்னா..! நம்ம பையன் வேலைசெய்யுற ஆஸ்பத்திரியில நிலவரம் எப்படிங்க இருக்கு? நம்ம பையன கவனமா இருக்கச் சொல்லுங்க.. இப்பவே போன் போடுங்க அவன்கிட்ட நான் பேசனும்” என்று கவலை தோய்ந்த குரலில் பேசத் தொடங்கினாள் பாப்பாத்தி.
“அப்படி உடனே போன் போட்டு கவனமா இருக்கச் சொல்றதுக்க உன் பையன் என்ன சிறுபிள்ளையா? அவன் ஒரு டாக்டர் பாப்பா. மேலும் நோயாளிங்களுக்கு சிகிச்சை செஞ்சிகிட்டிருக்கிற நேரத்துல நாம சும்மா அழைச்சு தொந்தரவு செய்யக் கூடாது. கவலைப்படாத.! நம்ம பையன் மட்டுமல்ல மருத்துவதுறையில இருக்கிற எல்லாரும் இந்த மாதிரி காலகட்டத்துல ரொம்ப கவனமாவும் பாதுகாப்பாவும் இருப்பாங்க. என சற்று அறுதல் தரும் பதிலை சொல்லி சமாளித்தார் ராமசாமி.
மகிழ்ச்சியோடு தேநீர் அருந்திய இருவரும் ஏதோ ஒரு இனம்புரியாத மனபாரத்துடன் எழுந்து மற்ற வேலைகளை கவனித்தனர். பாப்பாத்தி அம்மாள் இரவு உணவை தயாரிப்பதில் மும்முரமானாள். ராமசாமியோ குளித்துவிட்டு பூஜையறையில் சகஜத்தைவிட சற்று அதிக நேரம் இறைவழிபாட்டில் ஈடுபட்டார். நாடும் நாட்டு மக்களும் கொரோனா தொற்றில் பாதிக்காமலிருக்க அவர் இறைவனிடம் வேண்டினார்.
தனது மகன் டாக்டர் துரைசாமி வேலை முடிந்து சற்று தாமதமாகவே வீட்டுக்கு வந்தான். மகனின் முகம் சற்று களைப்போடும் வாட்டத்தொடும் இருப்பதை கவனித்த பாப்பாத்தி என்ன ஏது என்று பாசத்தோடு விசாரித்தாள். “இப்பதான் பையன் வேலை முடிஞ்சி வந்திருக்கான், அவன் முதல்ல குளிச்சுட்டு சாப்பிடட்டும்” என சற்று அதட்டினார்.
இரவு உணவை முடித்தபிறகு மூவரும் பேசிக்கொண்டிருந்தனர். பாப்பாத்தி மெல்ல ஆரம்பித்தார் “ துரை என்னய்யா இன்னிக்கு கொஞ்சம் வாட்டமா இருக்க ஒடம்புக்கு ஏதும் முடியலையாப்பா? ஒடம்புக்கு ஒன்னும் இல்லம்மா இப்ப பரவிககிட்டு இருக்கிற கொரோனாவை நினைச்சாதாம்மா ரொம்ப வருத்தமா இருக்கு.” என்று அலுத்துக் கொண்டான் துரைசாமி.
“என்னப்பா ஆச்சி” என்று பாப்பாத்தியும் ராமசாமியும் ஒருமித்தக் குரளில் கேட்டனர். கொரோனா கிருமியால பாதிக்கப் பட்ட நோயாளிங்க எண்ணிக்கை அதிகமாயிட்டே வருதுமா. கிருமியால பாதிக்கப்பட்ட நோயாளிங்க படுகிற அவஸ்த்தைய பார்த்தா பரிதாபமா இருக்கு. இன்னிக்கு மட்டுமே நம்ம மருத்துவனையில எட்டு பேருக்கு இந்த நோயை உறுதி படுத்தினோம். அதவிட கொடுமை என்னன்னா அவங்கள குடும்பத்தினர் யாரும் சென்று காண அனுமதி இல்லை. குடும்பதினர் எல்லாம் எப்படி தவிச்சு போவாங்க” என்று தனது வாட்டத்துக்கான காரணத்தை கூறினான் துரைசாமி.
“டேய் துரை நீ எதுக்கும் வருத்தப்படாதே, இறைவன் அருளால் எல்லாம் நல்லதா முடியும். உன்னால முடிஞ்ச வரைக்கும் அந்த நோயாளிங்களை காப்பாத்த என்ன செய்ய முடியுமோ அத சிறப்பா செய்யுடா. எதுக்கும் நீ கவலை படாத” என்று தன் மகனுக்கு ஊக்கமளித்தார் ராமசாமி.
அஸ்ட்ரோ தமிழ்ச் செய்தியில் புதிய அரசாங்கத்தின் பிரதமர் அவர்கள் அமைச்சர்களை தேர்ந்டுத்துவிட்டார் எனவும் அரசாங்கம் இனி முழுமையாக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்தச் செயதியைக் கேட்டதும் துரைசாமி சற்று மகிழ்ச்சி அடைந்தான் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் அமைச்சர் நியமனத்தால் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் இனி விரைவில் எடுக்கப்படும் என மகிழ்ந்தார் டாக்டர் துரைசாமி.
கொரோனா கிருமியின் உக்கிரத் தாண்டவம் அதிகமானதால் நாடு தழுவிய நிலையில் அதில் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே போனது. இதன் காரணமாக டாக்டர் துரைசாமியின் வேலை நேரமும் கூடிக்கொண்டே போனது.
மகனின் நேரம் காலம் பாராத மருத்துவ சேவையில் பெருமை கொண்டாலும் உள்ளூர மகனை நினத்து பெற்றோர் இருவரும் களங்கினர். கொரோன நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு காணவே உலகின் பல நாடுகளைப் போல் நம் நட்டிலும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பிரப்பிக்கப்பட்டது. அதை நம் நாட்டின் புதிய பிரதமர் நேரலையில் அறிவித்தார்.
“என்னாங்க அப்படின்னா ரெண்டு வாரத்துக்கு யாரும் வெளிய போக முடியாதா?” என சற்று பதட்டத்துடன் கேட்டார் பாப்பாத்தி. “ ஆமாம் பாப்பா அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் வெளிய போகலாம். மத்த நேரத்தில யாரும் வெளிய போகக்கூடாது.” என்று கூறி மனைவியின் அச்சத்தைப் போக்கினார் ராமசாமி.
கடந்த சில நாட்களாகவே தனது மகன் தாமதமாகவும் சோர்வாகவும் வருவது இருவருக்கும் சற்று கவலையாகவே இருந்தது. இருந்த போதும் மகன் வீட்டுக்கு வரும் நேரம் அவனுக்கு தேவையானவற்றை பார்த்து பார்த்து செய்தனர். ஒரே மகன் அல்லவா இருக்கத்தானே செய்யும்.
நாட்டின் கொரோனா கிருமி தொற்று கண்டவர்கள் எண்ணிக்கை தினமும் உயர்ந்து கொண்டே போனது. அதோடு மரண எண்ணிக்கையும் அதிகரிக்கவே நாட்டில் பதற்றம் நீடித்தது. மரணமுற்றவர்களில் ஒரு சிலர் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.
அதுவும் டாக்டர் துரைசாமி பணியாற்றும் மருத்துவமனையில் பணிபுரிந்தவர்கள் இரண்டு பேர் என்பதால் அங்குள்ளவர்களிடையேயும் பதற்றம் தொற்றியது. அவர்களும் மனிதர்கள்தானே. அந்த மருத்துவ மனையில் மரண ஓலங்கள் தினசரி ஒலிக்க ஆரம்பித்தன.
டாக்டர் துரைசாமியும் அவர் தலைமயிலான பிற மருத்துவர்களும் மற்ற பணியாளர்களும் இரவுபகல் பாராமல் ஊண் உறக்கமில்லாமல் நோயுற்றவர்களின் உயிர் காக்க போராடினர். அப்படி இருந்தும் கிருமி தொற்று கண்ட நோயாளிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போனது. ஒரு சில கட்டங்களில் நோயாளிகள் மரணமடையும் போது பல மருத்துவ பணியாளர்கள் மன உளைச்சளுக்கு ஆளானார்கள்.
பரபரப்போடும் பதற்றத்தோடும் நாட்கள் நகர்ந்தன. திடீரென ஒரு நாள் டாக்டர் துரைசாமிக்கும் கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. சக மருத்துவர்கள் மிகவும் பதற்றத்தோடும் பயத்தோடும் அவரது இரத்த மாதிரிகளை பரிசோதனைக் கூடத்ததிற்கு அனுப்பி வைத்தனர். பல ஆய்வுகளுக்கும் பல பரிசோதனைகளுக்கும பிறகு மருத்துவமனையின் தலைம மருத்துவர் டாக்டர் துரைசாமிக்கு கொரோன தொற்று இருப்பதை உறுதி படுத்தினார்.
எந்த நோயை விரட்டுவதற்காக அல்லும் பகலும் பாடுபட்டாரோ;எந்த நோயாளிகள் உயிர் காப்பதற்காக போரடினாரோ, எந்த வார்டுகளில் சிகிச்சையளிக்க நடையாய் நடந்தாரோ அதே நோயால் பாதிக்கப்பட்டு அதே நோயளிகளோடு நொயாளியாய் அவர் நடையாய் நடந்து பலரைக் காப்பாற்றிய அதே வார்டில் உள்ள கட்டிலில் படுத்திருந்தார் கைராசிக்கார டாக்டர் துரைசாமி.
தனது மகனுக்கு கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்ட தகவல் ராமசாமி காதுகளில் இடியாய் பாய்ந்தது. சொல்லொன்னாத துயரத்தில் ஆழ்ந்தார் ராமசாமி. அடுத்த கனம் இதை மனைவி பாப்பாதியிடம் எப்படி சொல்வதென நினத்து மேலும் கலங்கினார்.
நோயில் சிக்குண்டவர்கள் குறித்தும் அவர்கள் படும் துண்பங்கள்; துயரங்கள் குறித்தும் தன் மகன் சொல்லும் போதே கலங்கிய பாப்பாத்தி தன் மகனுக்கு இந்த தொற்று கண்டிருப்பதை எப்படி தாங்குவாள்? என நினைத்து தத்தலித்தார் ராமசாமி.
தனது வேதனையையும் சோகத்தையும் அடக்கி கொண்டு தன் மகனின் நிலைமயை பாப்பாத்தியிடம் தன்மையுடன் எடுத்துக் கூறினார். “ என்னாங்க..சொல்றிங்க என் பையனுக்கு கொரோனாவா..! ஆண்டவா..என் மகன காப்பாத்து” என கதறினார். கறிவேப்பிள்ளை கொத்தாக ஒரெ பிள்ளையாயிற்றே. தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளையாயிற்றெ.
“அவன் எப்படிங்க இருக்கான்..? என் பையன் ரொம்ப துடிச்சி போயிருப்பானேங்க. சின்னதா கய்ச்சல் வந்தாலே தாங்க மாட்டானேங்க; மத்தவங்க படர அவஸ்த்தைய பார்த்தே கலங்கி நின்னவன்; இப்ப இவனுக்கே வந்திருக்கே..! எப்படிங்க தாங்குவான்..” தன் கனவனிடம் அழுகையுடன் புலம்பினால் பாப்பாத்தி.
தன் மனைவி படும் வேதனையை பார்த்து ராமசாமியும் சற்று நொறுங்கிதான் போனார். இருந்தும் தன் துனைவியிடம் அதைக் காட்டிக் கொள்ளாமல் “ அழுவாத பாப்பாத்தி, நாம வணக்குற தெய்வமும் நம்ம குலசாமியும் நிச்சயம் நம்மல கைவிடமாட்டாங்க. நீ வேணுன்னா பாரு சீக்கிரம் நம்ம பையனுக்கு நல்லாயிரிச்சினு தகவல் வரத்தான் போகுது.” என்று சொல்லி பாப்பாத்தியை ஆசுவாசப்படுத்தினார் இராமசாமி.
“நான் என் பையன பார்க்கனுங்க; வாங்க உடனே போயி நம்ம பையன பார்க்கலாம், அவன் எப்படி இருக்கானோ” என்று அழுகையும் நடையுமாக பதறினாள் டாக்டர் துரைசாமியின் அன்புத் தாய்.
“அது முடியாது பாப்பா, கொரோனா தொற்றால பாதிக்கப்பட்டவங்க யாரையும் குடும்ப உறுப்பினர்களா இதருந்தாலும் சரி உறவினர்கள், நண்பர்களா இருந்தாலும் சரி யாருக்கு அனுமதி தரமாட்டாங்க பாப்பா” நீ எதுக்கும் கவலைப் படாத பாப்பா. நம்ம பையனுக்கு ஒன்னும் ஆகாது என்று தன் மனைவியை சமாதானப் படுத்தினர் இராமசாமி.
தன் மகனைப் பற்றிய தகவல் வந்தவுடனேயே மருத்துவமனக்குச் சென்றார் இராமசாமி. நோயுற்று வார்டில் இருக்கும் தன் மகனைப் பார்க்க எவ்வளவோ முயற்சித்தார் இருந்தும் அவருக்கு அனுமதி மறுக்கப் பட்டது. கொரோனா தொற்று மிகவும் வேகமாக் பரவி வருவதால் நோய் கண்டவர்களை சென்று கான குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதி இல்லை என்று தன் மகனே ஒரு முறை வீட்டில் சொல்லி வருத்தப்பட்டது இராமசாமியின் நினைவுக்கு வந்துபோனது.
“என் பையன் இப்படி இருக்கிறான் ஆனா அவன போயி பார்க்கக் கூட முடியலயே ஆண்டவா..! என்னையா இது சோதனை” என்று ஆண்டவனிடம் உரிமையுடன் சொல்லி அழுதார் பாப்பாத்தியம்மாள்.
இப்படியே மனபாரத்துடன் இருந்ததால் வீட்டு வேலைகள் எதுவும் ஓடவில்லை. மாலை மணி ஐந்தாகியது. அந்த வீட்டின் தேநீர் நேரம். என்னங்க..! என்ற சுப்ரபாதம் ஒலிக்கவில்லை. வீட்டின் முன் பிராஞ்சாவில் அமர்ந்திருந்தார் இராமசாமி. பாப்பாத்தி தேநீருடன் அங்கு வந்து தன் கனவருக்கு கொடுத்தார். அவர் மட்டுமே தேநீர் அருந்தினார். பாப்பாதியை அவரால் வற்புறுத்த மனமில்லை. இருவரும் பல விசயங்களை பகிர்ந்து கொண்டு தெநீர் அருந்தும் நாளாக அன்றைய தினம் அமைய வில்லை. அங்கே மௌனமே வியாபித்திருந்தது.
இரவு உணவைக் கூட உண்ண மனமில்லாமல் இருவரும் தவிர்த்தனர். கனவனும் மனைவியும் பூஜையறையில் அமர்ந்து தன் மகன் விரைவில் நலம் பெற மனதார உருகி வேண்டினர். பாப்பாத்தியை அந்த நிலையில் பார்ப்பதற்கே அவர் வெதனை அடைந்தார் இராமசாமி. உறக்கம் வராமால் மகனை நினைத்து தவித்த இருவரும் வெகெநேரம் கழித்து தூங்கிப் போயினர்.
துரைசாமி பணிபுரியும் மருத்துவமனை பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. கோரோனாவின் பிடியில் அகப்பட்டவர் எண்ணிக்கை அந்த முருத்துவமணயில் கூடிக்கொண்டே போனது. நாட்டின் நிலவரமும் அதையே பிரதிபலித்தது. ஒவ்வொரு நாளும் சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் நாட்டின் கோரோனா நிலவரம் குறித்த தகவல்களை நெரலையில் வந்து பதிவு செய்தார். நாட்டு மக்கள் அனைவருமே பதற்றத்துடன் எதிர்பார்க்கும் ஒரு முக்கிய நிகழ்வாக அவரின் நெரலை தகவல் விளங்கின.
துரைசாமிக்கு சிகிச்சையளித்த தலைமை மருத்துவர் சகமருத்துவர்களை அழைத்து டாக்டர் துரைசாமியின் நிலைமை மோசமடந்து வருவதால் அவரை உடனே அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்ற வேண்டுமென பணித்தார். அவசர சிகிச்சை பிரிவின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார் துரைசாமி. துரைசாமியை எப்படியாவது காப்பாற்றிட ஒட்டுமொத்த மருத்துவமனயே பாடுபட்டது.
அந்த மருத்துவமனயிலேய கைராசிக்காரர் என பெயரெடுத்தவராயிற்றே. அதோடு வேலை செய்யும் சக மருத்துவ பணியாளர்களிடமும் மிகவும் தன்மையுடனும் மரியாதையுடனும் நடந்து கொண்ட நல்ல மனிதர். அப்படிப்பட்ட நல்ல மருத்துவர் எப்படியாவது கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீண்டுவிட வேண்டுமென்று இன மத பெதமின்றி அனைவரும் இறைவனிடமும் மன்றாடத் தவறவில்லை.
பொதுவாக நல்லவர்களை இறைவன் சீக்கிரம் தன்னிடம் அழைத்து கொள்வார் என பலர் சொல்வதைக் கேட்டிருப்போம். ஆம் அதுதான் டாக்டர் துரைசாமி வாழ்விலும் உண்மையாகிப் போனது. தீவிர அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள மருத்துவர்கள் எவ்வளவு முயன்றும் கைராசிக்கார மருத்துவர் துரைசாமியை காப்பாற்ற கையாலாகமல் போனார்கள். அன்றைய தினம் அந்த மருத்துவமனையே கண்ணீரில் மிதந்தது. தலைமை மருத்துவரிலிருந்து கடைநிலை ஊழியர்வரை அனைவரும் அவரின் பிரிவை தாங்காமல் கண்ணீர் சிந்தினர்.
மருத்துவர் துரைசாமியின் மரணச் செய்தி அவர்களின் பெற்றோர் செவிகளில் இடியாய்ப் பாய்ந்தன. எது நடந்துவிடக் கூடாது என நினைத்தார்களோ அது நடந்து விட்டது. பாவம் இராமசாமியும் பாப்பாத்தியம்மாளும், தவமாய் தவமிருந்து பெற்று, சீராட்டி பாராட்டி வளர்த்த ஒரே பிள்ளையை பரிகொடுத்து சொல்லொன்னா துயரத்தில் ஆழ்ந்திருந்தனர்.
செய்தி கேட்டு மருத்துவமனைக்கு விரைந்தார் இராமசாமி. மருத்துவமனை வாயிலைக் கடந்ததும் தன் மகன் பிறந்த செய்தி கேட்டு ஓடோடி வந்த நினைவும் இன்று அதே மகன் இறந்த செய்தி கேட்டு ஒடோடி வரும் சூழலும் அவரை நிலை தடுமாற வைத்தன. இறுதியாக தன் மகனின் முகத்தை பார்த்துவிட வேண்டும் என்ற தவிப்பும் இயலாத ஒன்றாகி விட்டது. நொய் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் பார்க்க அணுமதி மறுக்கப் பட்டது.
கோரோனா காவு வாங்கியவர்களின் பட்டியலில் மருத்துவர் துரைசாமியும் சேர்க்கப்பட்டார். நடமாட்ட கட்டுப்பாட்டு காலத்தில் கிருமிதொற்றால் உயிரிழந்த துரைசாமி குறித்த செய்திகள் எல்லாத் தகவல் ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாக வந்தது.
துரைசாமியின் இறுதி காரியங்கள் அனைத்தும் நெருங்கிய உறவினர்களின் உதவியுடணும் மருத்துவமனையின் வழிகாட்டுதலோடும் நடந்து முடிந்தன.
பாப்பாத்தியம்மாள் தன் மகனின் பிரிவால் தினமும் அழுது கொண்டிருந்தார். தன் மனைவிக்கு ஆறுதல் சொல்லி இறுதியில் இராமசாமியும் கண்கலங்கி நிற்பார். துயரத்துடனேயே நாட்கள் சில கடந்தன.
அப்பொழுதுதான் மருத்துவமனைகளில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாக அரசாங்கம் அறிவித்தது. அதை அறிந்த இராமசாமி தன் மகன் பணியாற்றிய அதே மருத்துவமனையில் தன்னார்வ பணியாளராக எந்த ஒரு ஊதியமும் வாங்காமல் தனது செவையை துவங்கினார் இராமசாமி. தனது மகன் எந்த நோயாளிகளின் உயிர் காக்க தன்னுயிரை தியாகம் செய்தானோ அந்த நோயாளிகள் உயிர்காக்க பம்பரமாய் சுழன்றார் இராமசாமி.
‘காக்கும் தெய்வம்’ கதை அருமை. உலகை உலுக்கி வரும் கொரோனாவை கதைக்களமாக்கி கதையை நகர்த்திய விதம் நன்று.