கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 17, 2025
பார்வையிட்டோர்: 251 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பக்கத்து வீட்டில் குடி கூட வந்தாகிவிட்டது. அட்டை தொங்குமுன் ‘காலி’ மோப்பம் எப்படித்தான் எட்டுகிறதோ? 

இவ்வீட்டையும் அடுத்த அகத்தையும் இணைத்து இரவும் திறந்தபடியிருந்த கதவை அடைத்தாகிவிட்டது. முதன் முதலில் திறந்து வைத்ததுகூட மறந்து போக, திறந்தேயிருந்த கதவு, ஒரு நாள் மூடிவிடும், மூடியே விட்டது. அதற்குத்தான் கதவே, எனும் உண்மையின் உணர்விலேயே முதுகுத் தண்டு சில்லிடுகிறது. நெஞ்சில் இருள் திரள்கிறது. சே, இனி இங்கிருக்க இயலாது. நானும் வேறு இடம் பார்க்க வேண்டியதுதான். 

போய் எட்டு நாள் ஆகிவிட்டது. ஆனால், கஸ்தூரி மணம் விடாது இன்னும் வீட்டில் கமழ்கிறது, எதைச் சாக்கிட்டேனும். 

குழந்தை ஊமையடி பட்டவனாய் தாழ்வாரத்துத் தூண்களைச் சுற்றிச் சுற்றி வருகிறான். 

“கச்சூவி மாமா எங்கேப்பா?” 

வருவாரம் சதாபிஷேகத்துக்குக் காத்திருக்கும் எதிர் வீட்டுப் பட்டு சாஸ்திரிகளிடமிருந்து சாவித்ரிக்கு இனிப் பிறக்கப்போகும் பாப்பாவரை யாருக்கும் கஸ்தூரியான தால், கஸ்தூரிக்குக் கௌரவம் குறைந்து விடவில்லை. பெருமை இன்னும் கூடத்தான். பொறாமையைக் கிளறாது, பிரியத்தையே கூட்டும் அதிசயம் வெகு சிலருக்கே தனியாக வாய்ந்த வரம், அவர்கள் ஆத்ம சக்தி தூவும் சொக்குப் பொடி. அடே கஸ்தூரி, உனக்கு அமைந்த பேரடா! 

நம் ஒற்றுமையைத் தெருவின் கண்ணே சுட்டுவிட்ட தடா நெருப்பில் நல்ல நெருப்பு. பொல்லா நெருப்பு இரண்டுமே சுடுநெருப்புத்தானே! 

நாமிருவரும் ஆபிஸுக்குப் போம்போது எத்தனை முறை சிவப்புத்தலைப்பா எச்சரித்திருக்கிறது! “இந்த மாதிரி பக்கத்தில் பக்கத்தில் தோளைத் தொட்டுக்கிட்டுத் தெருவை அடைச்சுக்கிட்டு சைக்கிள் விடாதீங்க ஸார்! ஆனால், கேட்டோமோ? ஆனால், ஒரு தரமேனும் கேஸ் எழுத 344க்கு மனமில்லை. திருப்பத்தில் நாம் வரும்போதே பாராதுபோல், சிரிப்பையடக்கிக் கொண்டே திரும்பிக்கொள்வான். 

ஒரு தடவை நினைவிருக்கிறதா? பேச்சு ஸ்வாரஸ் யத்தில் தராசு பிசகி, ஸைகிளோடு ஸைகிள் மோதி முடிந்துகொண்டு, நாம் நடுவில் விழுந்து மாட்டிக் கொண்டு, பின்னால் *பூம்! பூம் !!” ப்ரேக்குகளின் க்றீச் – என்னை எப்படியடா அப்படியொரு குண்டுக் கட்டாய்த் தூக்கிக் கொண்டு ப்ளாட்பாரத்திற்கு ஒரு தாவு தாவினாய்? 

பிறகு அதைப்பற்றிப் பாராட்டாய் ஒரு வார்த் தைக்குக் கூட யாருக்கும் நீ இடம் விடவில்லை. சாவித்ரி கண்கலங்கினபோது அவள் வாய் பேசாள், மனந்தாங்காள் “என்ன மன்னி? உ உன் அகமுடை யானைப் பத்திரமாய் உன்னிடம் சேர்த்தபின் ஏன் அழுகை? சேர்த்தேனே என்றா?” என்று கேலி பண்ணினாய். 

“அந்த மாதிரி சமயங்களில், மனிதன், தான் கதா நாயகனாகத் திட்டமிட்டா காரியம் செய்கிறான்? அப்போ நான் நானாவாயிருந்தேன்? எனக்கு என் உயிர் வெல்லமாயிருந்தது. கீர்த்திக்கு ஆயுசு கெட்டியா யிருந்தது அவ்வளவுதான். வேளை சரியாயிருந்தால் எல்லாம் சரி. எல்லாம் உன்னாலும் என்னாலும் நம்மாலுமில்லை என்று எப்போத்தான் தெரிந்து கொள்வோமோ?” 


அதே போல் கார்த்திகையன்று கிட்டுவின் சொக்காய் அகல் சுடரில் பற்றிக் கொண்டபோது இப்போ நினைத் தால்கூட உடல் பறக்கிறது. 

உடல் பறக்கிறது. நிமிஷத்தில் குழந்தை அப்படியே ஜோதியாகவே அன்றோ மாறிவிட்டான்! நானும் பெற்றவன் அவளும் பெற்றவள்தான். ஆனால் ஓலமிட்டபடி சுற்றிச்சுற்றி வருவதுதவிர என்ன தெரி கிறது? ஆனால் குறுக்குச் சுவரின் வாசல் வழி நீ தாய்ப் பசுப்போல் பாய்ந்து வந்தது இமைச் சிமிழில் மையாகி எடுத்தெடுத்து இட்டுக் கொள்ள இன்னும் அலுக்கவில்லையடா! இடுப்பு வேட்டியை அவிழ்த்து கிட்டு மேல் போட்டு மூடி கெட்டியாய்க் கட்டிக்கொண்டு நீ தரையில் உருண்ட காட்சியை, பயமுறைந்து கல்லாய்ப் போன எங்கள் மனத்தில் உளியால் எழுதி விட்டாய். 

எனக்கு அழுகை வந்துவிட்டது. 

“கஸ்தூரி, நீ எங்கள் தெய்வண்டா !” என்று ஏதோ குழறிக்கொண்டு விரித்த கையுடன் நான் உன்னிடம் ஓடி வந்தபோது, உனக்கு மெய்யாகவே கோபம் வந்து விட்டது. என் கையை உதறினாய். 

“ஏன், உன் உயிர்தான் உசத்தியோ? குழந்தை உயிர் கொசுரா? கணக்கில்லையா?” 

திருப்ப முடியாக் கடன்களாகிவிட்ட செயல்களை அலட்சியமாய்ப் பந்தாடி, மணம் வீசும் பேச்சுக்களால் எங்கள் மனதுக்கினியவனாகிவிட்டாய். 

முகராசி என்பது தனிதாண்டா! நான் உத்யோகத் திலமர எவ்வளவு அலைந்திருப்பேன்! ‘பார்க்கலாம், நாளை வாரும், இன்று நேரமில்லை இன்னொரு நாள்’- இப்படியே அலுக்காத மழுப்பல்களுக்கு நானும் தளராது மிரளாது எத்தனை தரம் படிமிதித்திருப்பேன் ! ஆனால் அதே ஆபீஸில் அதே துரையிடம் நான் உன்னைக் கொண்டுபோய் நிறுத்தினதும் அவர் அப்படி யாயிருந்தார்? இத்தனைக்கும் நான் உனக்காக சிப்பக் கட்டு கட்டவில்லை, உள்ளதைத்தானே சொன்னேன்! 

“ஸார், இன்று காலை இவர் தன் மனைவி சகிதம் என் வீட்டுக்கு வந்தார். (உன் பெயர்கூட அப்போது நான் அறியேன்.) “நேரே ரயிலடியிலிருந்து வருகிறோம். எங்கள் கட்டு சாதத்தைச் சாப்பிட இடமும் இலையும் ஜலமும் வேணும்” என்று கேட்டார். பிறகு பேச்சு வாக்கில் வேலை தேடும் படலமாய்ப் பட்டணம் வந்திருக்கிறார் என்று தெரிந்து, நம் ஆபீஸில் காலியிருக்கிறதே, அதற்குத் தேவையான படிப்பும் யோக்யதையும் தனக்கு உண்டென்று சொல்கிறாரே என்று உங்களிடம் கொண்டு வந்தேன். உங்களிஷ்டம் உங்கள் பொறுப்பு. இன்று காலைமுன் இவர் ஒருவர் உண்டு என்றுகூட எனக்குத் தெரியாது. 

உன்னை அவன் பண்ணினது உண்மையில் பரீட்சையா? 

அது விஷயத்தில் எனக்குக்கூட மனத்தாங்கல்தான். துரையை ஒரு சமயம் கேட்டும் விட்டேன்: “ஏன் சார், என்னை இவ்வளவு சுலபமாய் விட்டீர்களா? ஆனால் அவனும் லேசுப்பட்டவனா? “அதனால்தானே கீர்த்தி இப்போ நீங்கள் இட்டது சட்டமாயிருக்கிறது!” என மழுப்பிவிட்டான். 

இப்போது பின்னோக்குகையில், வேலை மென்று என்னை நீ கேட்கக்கூடவில்லை. ஆனால் அன்று மாலை வந்ததும் உன் மனைவியிடம் நீ சொன்னதை மறக்க முடியாது. 

“மங்கை, இவர் பெயர் சத்யகீர்த்தி. மன்னி பேர் சாவித்ரி. இவர்கள் பேரும் உறவும் சேர்ந்த இடத்தில் சத்யம் வாசம் பண்ணுவதால்தான் இந்த வாசல் மிதித்த துமே நமக்கு வேளை வந்துவிட்டது.” 

நீ சொன்னதில் முகத்துடைப்பில்லை. வெறும் வாய்ச் சாலக்கில்லை. நன்றி அறிவிப்பு என்றுமில்லை, ஆவேசம் வந்தாற்போல் உன் முகம் குங்குமமாகிவிட்டது. வெறும் பேரின் வாய்ப்பிலேயே சொல்லுக்கு வல்லமை தந்து பேரை மந்திரமாக்கி, அதைச் சத்தியத்தின் உக்கிர மாய் வரவழைத்து அவ்வுக்கிரத்தைத் தாங்கிக்கொண்ட ருத்ரமூர்த்தியாய் அந்நிமிஷம் உன்னை நான் கண்டதும் எனக்கு உடல் முழுவதும் புல்லரித்துப் பிழிந்த மாதிரி யாகிவிட்டது. பேரளவில் சொல்லளவில், சத்யகீர்த்தி யென்றதால்,செயலாகி விடுவேனோ? ஆனால் திடீரென சொல்லுக்கும் செயலுக்கும் இடைக்கோடு உன் ருத்திரத் தில் அழிந்ததும் ப்ரளயம் புரண்டெழுந்து ஒரு கணம் என்மேல் மூடி உடல் கிடுகிடுத்துத் தலை ‘கிர்ர்’ரிட்டது. 

எனக்கு நினைவு வந்தபோது, நீ என்னைத் தாங்கிக் கொண்டிருந்தாய்; என் விரலால் உன் முகம் தொட்டேன். உன் முகம் தழல் தணிந்து நிழலுக்குத் திரும்பிவிட்டது. 

என்ன நேர்ந்தது கஸ்தூரி? 

நீ எனக்கு என்ன செய்துவிட்டாய்? சமயங்களில் நீ புரிவதில்லை; ஆனால் உன் பேச்சில் லாகிரி இருக்கிறது. 


உனக்கு வேலை கிடைத்தவிதம் பற்றிப் பேச்செழும் போதெல்லாம் நீ பெருமை கொள்வாய்.”என்ன மங்கை, நான் சொன்னது நிஜமாச்சு பார்த்தையா? நீ மூக்கால் அழும்போதெல்லாம் ‘ஆண்டவன் நம்மைக் கைவிட மாட்டான், கைவிடமாட்டான்’ என்று எத்தனை தரம் படித்திருப்பேன்! நீயே பார்த்துக்கொள். தெரியாவிட் டால் இப்போ தெரிஞ்சுக்கோ; அவனை விட்டால் நமக்குக் கதியில்லை, நம்மை விட்டால் அவனுக்கு வழியில்லை. எதற்கும் வேளை வரனும். வேளையேதான் தெய்வம். வேளை வந்தால் தெய்வம் வந்தது. தெய்வம் வந்தால் வேளை வந்தது. வேளை வந்து வேலை கொடுப்பதை யார் தடுக்க முடியும்? காலத்தின் விளிம்பில் வேளை எப்பவும் துளும்பி நிற்கிறது – ” 

அவன் அப்படிச் சொன்னதும் நக்ஷத்ரம் உதிர்ந்தது. 

இரவு முதிர்ந்த வேளையில், வாசற்குறட்டில் உரு விளங்கா மையிருளில், ‘கணகணவெனும் அவன் குரலும், மார்தட்டலும் தமக்கெனத் தனி உயிர்கொண்டு என்னை எட்டிப் பற்றுகையில், வியப்புறுவேன். 

இந்தச் சின்ன வயதில் ஆண்டவன் மேல் இவ்வளவு பற்றுதலா? இதென்ன பக்தி மீறிய பரவசமா? பரவச மீறலில் உரிமையாய் வந்த சலுகையில் ஆண்டவனை நையாண்டியா? வெற்றி வெறியா? சொற் சீண்டலா? சொல்லில் பல்லாங்குழியாடி, புதையல் பொத்துகிறானா? 

மங்கை, நீ ஏன் வாய் திறப்பதேயில்லை? ‘ஊம்! ஊஹாம்’ கூடக்கிடையாதா? படமாடத் திரையோ சுவரோ தேவைபோல், அவன் விரித்தாடும் தோகைக்கு நீ அரங்கா? நீங்கள் வந்த புதிதில் நீ ஊமையோ என்று நீ கூட நாங்கள் ஐயுற்றதுண்டு. அதற்காகக் கஸ்தூரிக்கு இரங்கினதுமுண்டு. 

ஏண்டா கஸ்தூரி, என் மனம் உனக்குக் கண்ணாடியா? எப்படி-? அப்படியேதான் இருக்கட்டுமே. உள்ளும் புறமும் கிடையாதா? அல்ல உனக்கு இல்லை யென்பதன் விளம்பரமா? 

“கீர்த்தி, என் பெண்டாட்டி லேசுப்பட்டவள் என்று எண்ணாதே. குரல் தூக்காமல் ஏதாவது குழிபறித்துக் கொண்டிருப்பாள். இன்று என்ன செய்தாள் தெரியுமா? நடுக்கதவை இரவிலாவது அடைத்தாகணுமாம். ஏன். கூரை வழியாகத் திருடன் இறங்கிவந்து கிட்டுவின் பாலாடையை அழுத்திவிடுவானா? இல்லை, மூலைப் பழையதை முழுங்கிவிடுவானா? மங்களத்தம்மாள் சந்தேகங்கள், பயங்கள், எல்லாமே தனி!” 

“நேக்குப் பாலாடை மாணாம் நானே தமத்தா குச்சூடுவேன்-” 

“கதவை நாங்களா திறந்து வைத்தோம்? ஏற்கெனவே திறந்திருந்ததுதானே ! தாழ்ப்பாள் எங்கள் பக்கமாயிருக் கிறது? திறப்பதும் மூடுவதும் உங்கள் இஷ்டமா, இவள் இஷ்டமா?” 

“பட்டணத்தில் ராத்திருட்டு ஏது ? எல்லாம் பகலி லேயே, கண்ணெதிரில், கண்ணில் மண்ணைத் தூவுவது தான் இங்கைய வழி!” 

சாவித்திரியின் குரல் எப்படி எப்பவுமே வெல்வெட் போல் இதமாய் செவியில் அமுங்குகிறது! தர்க்கத்தை வளர்க்காமல், சமாதானம் பண்ணுவதாய், அதே சமயத் தில் எதிலும் பட்டுக்கொள்ளாமல் வழுக்குகிறது. 

“ஹா, இரவு பகல் இது வேறே! கண்ணை மூடினால் இருட்டு, திறந்தால் வெளிச்சம். உண்மை தான் ஒளிந்து கொள்ள ஏற்படுத்திக் கொண்ட தோற்றங்கள், புளுகு களில் ஒன்று-இல்லை இரண்டா? அல்ல ஒன்றே இரண்டான ஒன்றா?” 

“பட்டப்பகலில் கண் அவிஞ்சாலோ? அது என்ன?” 

மங்கையின் குரல் இருட்டில் வெடுக்கென சொடுக்கிற்று. 

“பார்த்தாயா. பார்த்தாயா கீர்த்தி, மங்கைக்கு வாயில்லை என்றாயே ! ‘ராபணா’ என்கிறாள் பார்!” 

என்னின்று சிரிப்பு பீறிட்டுத் தெறித்தது. மின்னலில் மின்னேரம் இரவு பகலாவதுபோல், நினைவில் மின்னிட்டு உடனே மறைந்த பளிச்சில், என் சிரிப்பு சரம்போல் கேள்வியில் வளைந்து அதன் கொக்கியினடியில் துளித்த சொட்டு தடுத்து இடையில் அறுந்து தொங்கிற்று. 

மங்கையின் குரலில் ஏன் இவ்வளவு கோபம்?

சாவித்திரி, “நேரமாச்சு,உள்ளே போவோமா?” என்றாள். 

பேச்சு இம்சையடைந்து, அந்த அவஸ்தையில் அடங்கின பிறகுதான் நேரம் போனது தெரிகிறது. 

வெளிக் கதவைத் தாளிட்டுக்கொண்டு உள்ளே வந்ததும் சாவித்திரி உடம்பை சிலிர்த்துக் கொண்டாள். 

“என்ன சாவித்திரி?” 

சில்லென்றாற் போலிருந்தது. 

காற்று நடு வாசற்படியிலிருந்து மோதிற்று. 

அங்கு சென்றேன். 

“என்ன, கதவை மூடுகிறாயா?” 

அப்பாலிருந்து அவன் குரல் வந்தது. அதில் சிந்திய கேலி சுருக்கென்றது, 

“என் கதவு எப்பவும் திறந்திருக்கும்” என்றேன். 

“எனக்குத் தெரியும்.” 

என் தோள்மேல் அவன் கை விழுந்து தங்கி, அழுந்திற்று. அவன் விரல் நுனிகள் வழி அவன் மன நெகிழ்ச்சி என்னுள் இறங்கி என் ரத்த ஓட்டத்தில் கலப்பது தெரிந்தது. 

ஒரு தரமேனும் எது சாக்கிட்டேனும் அவனைத் தொடாமல் இருக்க முடியவில்லை. யதேச்சை போலேனும் அவன் மேல் பட்டாகனும். இதென்ன சபலமோ? 

சாவித்திரிகூட சொல்வாள். தெருவில் யாரேனும் ஒருத்தி, கூடுமானவரை இலக்கணத்துக்குக் கிட்டிய உடலமைப்புடன், சுருக்கங்கள் கசங்கல்கள் இல்லாமல் உருவிவிட்டாற்போல் உடலோடு ஒட்டி ஒழுங்காய் உடுத் திக் கொண்டு போனால், தனக்கு அவளைத் தழுவிக் கொள்ளணும் போலிருக்கும் என்பாள். “அப்படித் தோன்றுவது தவறு என்று எனக்குப்படவில்லை. நம்மிடம் இல்லாத நிறைவுகளைப் பிறரிடமாவது கண்டு ஈடுசெய்து கொள்ளும் மகிழ்ச்சியில் ஆத்மிகம் கூட இருக்கிறது” என்பாள். 

அப்படிப் பார்த்தால் கஸ்தூரி உன்னிடமிருப்பது எதுவுமே என்னிடத்தில் இல்லை. ஒப்பிடலுக்கிடமிருந் தால்தானே பொறாமைக்கிடம்! ஈடேயில்லாததனால் தானோ உன்மேல் எனக்குப் பாலாய் வழிகிறது? 


நாங்கள் ‘லஞ்சி’லிருந்து வந்தோம். ஒரு கையால் அவன் கழுத்தையிறுக்கியபடி அவன்மேல் தொங்கிக் கொண்டே வந்தேன். 

மானேஜர் எங்களைக் கண்டதும் எழுந்து கையில் பேனாக் கத்தியுடன் எங்களை நோக்கி வந்தார். 

“எந்த இடத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள்? அந்தச் சதையை அறுத்துவிடுகிறேன்-கஸ்தூரி! துரை உன்னைக் கூப்பிட்டானப்பா”. 

மேஜை நாற்காலிகளுக்கிடையில் வீச்சு நடையில் உயரமாய், துரையின் அறை நோக்கி அவன் செல்கையில் வேங்கை போலிருந்தான். 

போனான் போனான் ஆளை வெகு நேரம் காணோம். எனக்கு வியப்பாயிருந்தது. 

அறையினின்று வெளிப்பட்டதும் குனிந்த தலையோடு சீட்டியடித்தபடி தன்னிடம் வந்து அமர்ந்தான். முகம் லேசாய் வெளிறிட்டிருந்தது. மேஜைமேல் கோர்த்த தன் கைகளை வெறித்தபடி உட்கார்ந்திருந்தான். இந்தக் கஸ்தூரி எனக்குப் புதிது. 

அவனையே உற்று நோக்கிக் கொண்டிருந்த மானேஜர் முகத்தில் ளநகை படர்ந்தது. 

“என்ன ஸையமிஸ் ட்வின்ஸ்களை துரை தனிப்படுத்தி விட்டானா?” 

“எனக்கு இந்தூருக்கு மாற்றலப்பா!” 

மேஜைகளும் நாற்காலிகளும் என்னைச் சுற்றிச் சுழன்றன. தலையை உதறிக்கொண்டு நாற்காலியைப் பின்னால் தள்ளிக் கொண்டு வேகமாய் எழுந்தேன். 

“கீர்த்தி!” 

எனக்குக் காது கேட்கவில்லை. விடுவிடென துரையின் அறையுள் நுழைந்தேன். என்னைப் பார்த் ததும் அவன் கண்ணாடியைக் கழற்றி மேஜைமேல் வைத்தான். 

“ஹல்லோ!” 

“ஸார், கஸ்தூரி -” 

“ஆ, கஸ்தூரி. கஸ்தூரியும் நீங்களும் நெருங்கிய நண்பர்கள் அல்லவா?” 

கேள்வியில் கேலியில்லை. ஆனால் பரிவுமில்லை. நான் மௌனமாய்த் தலையசைத்தேன். என் முகத்தில் ரத்தம் குழம்பிய வேகத்தில் கன்னங்கள் குறுகுறுத்தன.

“மிஸ்டர் கீர்த்தி, இது பாங்க்; ஒரு வியாபார பாங்க் மிகப்பெரிய ஸ்தலம், அதிலும் நம்முடைய வியாபார ஸ்தலம். வியாபாரஸ்தலத்தில் வியாபாரத்தைத் தவிர சொந்த உணர்ச்சிகளுக்கு இடமில்லை. என்னை எடுத்துக் கொள்ளுங்கள். மூவாயிரம் மைல் தூரத்தி லிருந்து என் உற்றார் உறவினரைப் பிரிந்து வந்திருக் கிறேன். ஐந்து வருஷங்களுக்கு ஒரு முறைதான் என் பெண்டுபிள்ளைகளிடம் நான் போக முடியும். இடையில் எனக்கோ அவர்களுக்கோ என்ன நேர்ந்தாலும் கடவுளுக்குத்தான் புண்ணியம். நாம் எல்லாரும் பாங்க் ஊழியர்கள் என்ற முறையில் ஒரே குடும்பம் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் ஒரு குடும்பமாய் பாங்கின் நன்மை எனும் ஒரே குறிக்கோளுக்குத்தான் உழைப்பவர்கள். தவிர மிஸ்டர் கீர்த்தி – இது உத்யோக முறையில் அல்ல… சொந்தமாய் நம்மிடையில் – யாரிடமும் அன்பாயிருங்கள், நட்பை வளருங்கள். கூடப்பிறந்தவர் களாயிருந்தால் ரத்தத்தின் ஒட்டுதலைக் கொண் டாடுங்கள். ஆனால் எவரிடமும் பாசத்துக்கு இடம் கொடுக்காதீர்கள். அது காலைப் பின்னி, கையைக் கட்டி, கழுத்தையிறுக்கி, கடமையை அழித்து, ஆளை அவமானத்தில் ஆழ்த்திவிடும். இதற்குப் பின்னும் ஏதாவது கேள்வி உண்டா?” 

நான் அடைத்தவாயுடன் திரும்பினேன். 

“என்ன, திக் விஜயம் பண்ணி வந்தாச்சா?” 

கஸ்தூரி இல்லாமல் இனி எப்படி இருக்கப் போகிறோம்? முதலில் என் பையனுக்கு யார் பதில் சொல்வது? 

பக்கத்து நாற்காலியிலிருந்து ஒன்றிருவர் வந்தனர். 

“என்னப்பா கஸ்தூரி, “அவுட்”டா? போ, அங்கெல்லாம் சப்பாத்தி கிழங்குதான். காய்ந்த ரொட்டிப்போல் ஒட்டி உலர்ந்திருக்கேயே, அங்கே போய் ஆட்டாவைத் தின்னு தின்னு இடுப்பு செக்குமாதிரி ஆகிவிடப் போகிறது.” 

“அங்கெல்லாம் வெற்றிலைக்குப் பஞ்சம் தெரியு மோன்னோ? தழை குதப்பறதெல்லாம் இனிமேல் வேகாது அப்பேன் ! வெற்றிலையைக் கடிதாசில் வரைந்து, கண்ணால் பார்த்துக் கொண்டே வெறும் வாயை மெல்ல வேண்டியதுதான்.” 

“என்னப்பா கீர்த்தி, இடிஞ்சு போய் உட்கார்ந் துட்டியே! மாற்றல் உனக்கா, அவனுக்கா ?” விழிகள் உறுத்தின. எனக்குமிருந்தால் நல்லதே, அவனோடு சேர்ந்து. 

கஸ்தூரி என் முதுகில் பளார் என்று அறைந்தான்: 

“சமாளி ப்ரதர் சமாளி. வேளை வந்துவிட்டது. சேர ஒருவேளை. பிரிய ஒருவேளை. பிளேட்டைத் திருப்பிப்போடு. ஆட்டம் முடிந்தது. சீட்டைக் கலை புதிதாய் வெட்டு. ஹஹ்ஹாஹஹாஹ்ஹா-!” 

‘ஆட்டம் முடிந்தது’ என்றதும் முந்தின இரவு ஞாபகம் வந்தது. 


நாங்கள் சொக்கட்டானாடினோம். சாவித்ரியும் கஸ்தூரியும் ஒரு கட்சி. நானும் மங்கையும் இன்னொரு கட்சி. ‘இதென்ன விளையாட்டு, ‘போர்’ இதுவும் ஒரு விளையாட்டா என்று முனகல், ஆக்ஷேபணைகளுடன் தான் ஆட்டம் தொடங்கிற்று. ஆனால் பொழுது போக வில்லை. சினிமாவுக்கு நேரமாகிவிட்டது. தூக்கமும் வரவில்லை. 

என் கட்சி இரண்டு பழங்கள் ஏறிவிட்டது. அவர் களை நாங்கள் இதுவரை ஒரு பழம்கூட ஏறவிட வில்லை. எங்கள் காய்கள் துரத்தித்துரத்தி எதிர்க். காய்களை வெட்டின. மங்கைக்குக் கண்கள் ஜ்வலித்தன; இதன்மூலம் வெகு நாளைய, வெவ்வேறு பழிகளைத் தீர்த்துக் கொள்வதுபோல். 

ஆனால் கஸ்தூரிக்குத் திடீரெனத் தொகை பெருகிற்று. வெறும் தாயக் ‘கட்டைகள்’ தாம். ஆனால் அவைகளுக்கும்தான் வெறிபிடிக்கிறது! 

“தாயம் பன்னிரண்டு ஐந்து-” 

“இருபன்னிரண்டு ஒரு தாயம் ஆறு ஈரைந்து-” 

“இரு பன்னிரண்டு ஒரு தாயம் ஈராறு ஈரைந்து-” 

மந்திரம் சொல்வது போல், ராகமாய்த் தொகையை உருப்படுத்திக் கொண்டே கஸ்தூரி கட்டைகளை வீசி உருட்டினான். தொகை பறந்தது. 

“ஈராறு ஒரு தாயம் மூவைந்து இரு பன்னிரண்டு. சாவித்ரி களிப்பில் கைகொட்டினாள். மங்கை அவளை வெறித்தாள். மங்கையின் கண்கள் கலப்பற்ற தூய பகையைக் கக்கின. 

“முப்பன்னிரெண்டு, மூவைந்து, இருதாயம் ஈராறு-“

“ஒரு நிமிஷம் ” – 

கண்களில் வினாவுடன் தலை நிமிர்ந்தான். புருவங்கள் கம்பளிப் பூச்சிகள் போல் நெளிந்தன. உள் பரபரப்பில் லேசாய்த் திறந்தவாய். கண்களில் தனி பளபளப்பு. கால்களை மண்டியிட்டு ஒரு கையைத் தரையில் ஊன்றி, இன்னொரு கையில் பாய்ச்சிகையுடன் என் வார்த்தைக்குக் காத்திருக்கையில், பாய்ச்சலில் பதுங்கிய விலங்கு போலிருந்தான். எதை வேட்டை யாடுகிறான்? அவனின்று காந்தம் விறுவிறுத்தது. அது என்னைக் கவ்வி விடாதபடி என் ப்ரக்ஞையை என்னில் ஊன்றிக் கொண்டேன். 

“நீ இதுவரை ஒரு தாயந்தான் போட்டிருக்கிறாய். ஆனால் இரு தாயமாய்க் கூட்டுகிறாய்” என்றேன். 

“இல்லை இருதாயம் விழுந்தது.” 

“இல்லை ஒரு தாயம்தான். வேணுமானால் மங்கை யைக் கேள்.” 

“ஓஹோ உன் கட்சி ஆளையே சாட்சி வைக்கிறாயா?” அவன் அப்படிக் கேட்டது எனக்குக் கொஞ்சம் ரோசமாய்த்தானிருந்தது. 

“தம்பி, இந்த சமயத்துக்கு உன் பெண்டாட்டியைத் தான் சாட்சிக்குக் கூப்பிடுகிறேன் கட்சியை, அல்ல.” 

“ஹும்! அவளுக்கென்ன தெரியும் ? விழுந்த தொகையைத் திருப்பிச் சொல்லத் தெரியுமா?” 

“என்னால் கூடத்தான் முடியாது. அதனால் நான் பைத்தியக்காரனா? இல்லை நீ இரு தாயம் போட்ட வனாகி விடுவாயா?” 

“அப்போ என்னைப் பொய்யன் என்கிறாயா?” அவன் பற்கள் ஒளி வீசின. 

“அது எனக்குத் தெரியாது; விழுந்தது ஒரு தாயம் தான் என்கிறேன். கூரை மேலிருந்து கூவுகிறேன்.” 

எல்லாருக்கும் ஒரே சமயத்தில் சட்டெனவாயடைத்துவிட்டது. இம்சையான மௌனம் அங்கு தேங்கிற்று. 

இடை வாசற் சந்திலிருந்து காற்று சில்லென கூடத் துள் சீறிற்று. விளக்கு மிதந்தது. சுவர்களில் எங்கள் நிழல்கள் எங்களைவிட மிகப் பெரிதாய் ஆடின. 

“இதென்ன பச்சைக் குழந்தைகள் மாதிரி !” மெத் தென்று சாவித்திரியின் குரல்தான் அந்த நிலையை நிதானத்துக்குத் திருப்பிற்று. அவள் சொல் கேட்டதுமே, கோல்பட்ட மாதிரி கஸ்தூரி படமொடுங்கிப் போனான். மிகவும் பணிவான குரலில், “மன்னி சொன்னால் சரி என்றான். 

சாவித்திரி இடதுகை வளையல்களை வலது கையால் நெகிழ்த்துக் கொண்டாள். மடிமேல் படிந்த கைகளின் மேல் அவள் தலை குனிந்தது.அதன் கருமை விளக்கொளி யில் பளபளத்தது. கூந்தலின் சிற்றலைகளைப் பிளந்து கொண்டு வகிடு நடு பிறழாமல் ‘விர்’ரென ஓடிற்று. மேனி உள்செழிப்பில் மினுமினுத்தது. நான்கு மாதங்களாக ஸ்நானம் பண்ணவில்லை. 

“இரு தாயந்தான் அவள் பேச்சு மூச்சுக்கு மேல் எழவில்லை. 

எனக்கு ஆச்சரியமாயிருந்தது. இதென்ன கட்சியை விட்டுக் கொடுக்காமல் ‘குஞ்சர’ வா? 

கூடவே எனக்குச் சந்தேகமும் குழப்பமும் வந்து விட்டன. நான்தான் முட்டாளோ? நிஜமாவே இரு தாயந்தானா? 

மங்கையின் பார்வை எங்கள் மூவர்மேலும் மாறி மாறி நிலைக்க இடங்கொள்ளாது தவித்தது. அவள் புருவங்கள் நெறிந்தன. மோவாயும் உதடுகளும் நடுங் கின. கையை வீசி காய்களைக் கலைத்துவிட்டு, சரே லென எழுந்து இடை வாசல் வழி ஓடினாள். 

நட்சத்திரச் சுடர் போலும், காலும் கையும் அகலப் பரப்பித் தூங்கிக்கொண்டிருந்த கிட்டுவைச் சாவித்ரி தூக்கித் தோள்மேல் சாத்திக்கொண்டு மாடி ஏறினாள். 

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. 

“ஏம்பா இவர்கள் இப்படியிருக்கிறார்கள்?” 

“யார் கண்டது? பெண்களை யாரால் புரிந்து கொள்ள முடிகிறது?” 

வீடு என்பது கூட மறந்து அவன் உதடுகளில் ஒரு சிகரெட் ஆடிற்று. குவிந்த கரங்களுள் சுடரையணைத்துச் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டிருந்தான். பசு நாக்குப்போல் முன்மயிர் அடையாய் நெற்றியில் சரிந்தது. விழிகளின் மேல் இமைகள் கவிந்து முகத்தில் இரு நீண்ட கீறல்களாயின. 


“அப்பா பச்சீக்கதப்பா” என முனகிக்கொண்டு வந்து கிட்டு மடியில் விழுந்தான். 

அவனைத் தூக்கிக் கொண்டு எழுந்து சமையலறை யில் எட்டிப் பார்த்தேன். 

அடுப்பெதிரே முழங்காலைக் கட்டிக்கொண்டு அவள் உருவம் அறையின் பாதியிருளில் மங்கலாய்ப் பிதுங்கிற்று. அடுப்பு தூங்கிற்று. உட்கார்ந்தபடியே அவளும் தூங்கு கிறாளா? இன்று காலையிலிருந்தே அசதியாய்த் தானிருக்கிறாள். இடுப்பு இப்பவே அகல ஆரம்பித்து விட்டது. 

ஆனால் இன்று ஞாயிற்றுக்கிழமைதான். 

“கிட்டு, உனக்கு இட்லி பிடிக்குமோ?” 

“ஓ இக்கிலி புக்குமே !- இக்கிலி, தட்டணி, அளுவா எல்லாம் புக்குமே!” 

“ஹோட்டலுக்கு வரையா?” 

*நான் வரேம்பா! நான் வரேன் !! பூனிலே குத்திக் குத்தித் தாப்படலாமாப்பா?” 

“அது யாருடா சொல்லிக் கொடுத்தது?”

“கச்சூவி மாமா சொல்லிக்குத்தாளே!” 


நாங்கள் கிளம்பினோம். மேகங்கள் ஒன்றன்மேல் ஒன்றாய்த் தம்மையடுக்கியிழைந்து ஒன்றாய்க் குழுமிக்கொண்டிருந்தன, மழை எட்டு ஊருக்குக் காத் திருந்தது. கொஞ்சம் வேகமாய் மிதித்தால் பொட்டலத் துடன் திரும்பிவிடலாம். சாவித்ரிக்கும் சேர்த்துத்தான். சமையல் ஏறத்தாழ ஆகலாமே ! இன்று ஞாயிற்றுக் கிழமை தான். 

சாவித்ரி ருந்த இடத்தைவிட்டு நகரவில்லை அவளுக்கே இந்தத் தடவை இப்பவே தள்ளவில்லை. பிறந்த வீட்டுக்கு அனுப்பலாமா என்றால் அவள் அண்ணனுக்கு நாலு குழந்தைகள். அவள் மன்னி மறுபடியும் உண்டாயிருப்பதாகக் கேள்வி. அவள் அங்கு போகமாட்டாள். ஏற்கெனவே பேச்சுவாக்கில் ஒரு சமயம் சொல்லியிருக்கிறாள்; பெற்றவர்கள் போனபின் பிறந்த வீடு ஏது?” 

சாவித்ரி பேசினால் கல் பேசின மாதிரி. 

எங்களுக்கு மணமாகி முதன்முதலாய் அவள் பேசிய வார்த்தைகளே போதும். நான் ஊருக்கு கிளம்புகையில், வாசற்கதவு மூலையிருட்டில், தாழ்ப்பாள் மேல் தங்கிய என் கைமேல் அவள் கை பொத்திற்று. அவள் மூச்சு என் கன்னத்தின் மேல் அனல் கக்கிற்று. 

“என்னை எப்போ கூட்டிக்கப் போறேள்?” 

அந்த மூர்க்கம் ஒன்றே போதும். நான் அவளைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியது ஒன்றுமில்லை. நான் கேட்டதுமில்லை. 

கிட்டு பிறந்த ஒரு மாதத்திலேயே திரும்பிவிட்டாள். பிறகு இன்னும் பிறந்தகம் போகப் போகிறாள். 

ஊஹும்! அவளுக்கு அங்கு திக்கில்லை. 

கஸ்தூரியின் எதிர்பாராத மாற்றல் இல்லாவிடில், சாவித்திரியின் பிள்ளைப்பேறுக்கு மங்கையை நம்பியிருந் தேன். “மங்கையை நிறுத்தி வைத்துக் கொள்கிறேனே” என்றுகூட கஸ்தூரியிடம் பிரஸ்தாபித்ததற்கு, “எங்கேப்பா, அவ்வளவு தூரத்திலிருந்து நான் திரும்பி வந்து இவளைக் கூட்டிப் போவது, அல்லது நீ கொண்டுவந்து விடுவ தெல்லாம் லேசாயிருக்கிறதா? அவளும் கிராமத்துப் பெண் ஏற்றிவிட்டால் வந்து சேர்வாள் என்ற தைரியமுமில்லை. நாங்கள் எப்படி வந்தோமோ அப்படியே போய்விடு கிறோம்.” 

அவன் அப்படிச் சொல்கையில் எனக்கு நெஞ்சை யடைத்தது. அவன் சொன்னதும் வாஸ்தவந்தான். 

பாதையின் இரு பக்கமும் மைதானம் அகன்று விரிந்தது. வானவிளிம்பில் தோப்புகளின் பச்சை, மேகங் களுடன் இழைந்த இடத்தில், இடி, துணி திணித்த வாய் போல்’ எட்டக் குமுறிற்று. 

வாழையிலைமேல் அல்வாத் துண்டுபோல் ஸைகிள் வழுக்கிக்கொண்டு போயிற்று. 

“அப்பா?’ 

“என்ன?” 

“நேக்கு ஐக்கிரிம் வாங்கித் தரையாப்பா?” 

“அது சரி, ஐஸ் க்ரீமுக்கு இதாண்டா சரியான வேளை!” 

“கச்சூவி மாமா வாங்கித் தவ்வாளே! பூனுலே நக்கி நக்கித் திம்பேனே, தொப்பைக்குள்ளே சில்லுனு போகுமே! நல்லாயிருக்குமே!” 

“ஒஹ்ஹோ, அப்படியா அது? கிட்டு, உனக்கு யார் மேலே ஆசை?” 

“அப்பா மேலே ஆச்சை. அம்மா மேலே ஆச்சை. கச்சூவி மாமாமேலே ஆச்சை. கச்சூவி மாமா எல்லாம் வாங்கித்தவ்வாளே! சாக்கேட்டு, கேக்கு!-” 

“அப்படியா?” 

“அன்னிக்குக்கூட வாங்கித் தந்தாளே!” 

“என்னிக்கு!* 

*நாளைக்கு – நீ கூட ஆபீசிலிருந்து லாத்திரி வந்தையே!” நீ வரத்துக்குள்ளே நான் கூடத் தூங்கிப் போயிட்டேனே!” 

“எப்போ?” 

“தாங்காலமா கட்டில்லே அம்மா மடிலே நான் தாச்சிண்டிருந்தேனே! ‘கிட்டு, என் கையிலே என்ன பாரு’ன்னு கக்சூவி மாமா எட்டிப் பார்த்து, கையிலே ரவுண்டு பப்புட்டு வெச்சுண்டு காமிச்சாளே! நான் ஏந்து ஓடிவந்தேன். என் கையிலே நெண்டு பப்புட்டு தந்தாப்பா! தந்து என்னை “ஜம்மு”னு தூக்கி வெளியிலே வெச்சுக் கதவைத் தாத்திண்டுட்டாளே! அப்புறம் நான் அம்மாகிட்டப் போணும்னு அயிதாக்கூடத் திறக்கல் லேப்பா!”

அப்பவே இலை உதிர்ந்த பிரம்மாண்டமான மரம் போல் ஒரு ராக்ஷஸ மின்னல் கிளைபிரிந்து வானத்தில் முறிந்து விழுந்தது. என் கண்கள் இறுக மூடிக் கொண்டன. ஆனால் அதற்கு முன்னேயே அது என் இமையுள் புகுந்துவிட்டது. உள்மண்டையை மூன்று விரியாய்ப் பிளந்தது. என் கீழ் சைக்கிள் நிலைதடுமாறித் தத்திற்று. என்னிடமிருந்து புதுக் குரலில் ஒரு வீறல் கிளம்பிற்று. 

“கஸ்தூரி!” 

ஒரு பேரிடி வானின்று விடுபட்டு உருண்டு உடைந்து நொறுங்கிற்று. கல்மாரி என பெருந்துளிகளில் மழை சரசரவென எங்கள் மேல் இறங்கிவிட்டது. 

– கங்கா (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1962, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.

லா.ச.ரா லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *