கஸ்தூரியின் கடிதம்
(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கதைத் தலைப்பைப் பார்த்ததும் ஒரு பெண்ணின் காதலைப் பற்றி விவரிக்கப் போகிறது கதை என்று எண்ணினேன்.

கஸ்தூரி – ஓர் ஆணின் பெயர். அவன் ஓர் இளம் பெண்ணிடம் அன்புடன் பழகுகிறான். அது மற்றவர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப் படுகிறது பேசப்படுகிறது. ஆனால், கஸ்தூரிக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே நிலவுவது சகோதர – சகோதரிப் பாசமே.
அவள் ஒருநாள் திருமணமாகிச் செல்கிறாள். அதன்பிறகு கஸ்தூரி அவளுக்குக் கடிதங்கள் எழுதுகிறான். அதில் அவளை ‘அக்கா’ என்றே குறிப்பிடுகிறான். அவளுடைய கணவன் பெருந்தன்மையோடு நடந்து கொள்கிறான். மனைவிக்கு எவனோ ஒருவன் கடிதம் எழுதுகிறானே என்று வீண் சந்தேகம் கொள்ளவில்லை. மாறாக அவன் தன் மனைவியிடம், ‘இப்போது உன் கஸ்தூரி எப்படி இருக்கிறாள்… என்ன தகவல் வந்தது?’ என்று விகற்பமில்லாமல் வினவுகிற மனம் கொண்டவனாக இருக்கிறான்.
இதுதான் கதையின் மைய இழையாகப் புலப்படுகிறது. ஆனால், இந்த இழையில் விக்கிரமன் அவர்கள் அற்புதமான சம்பவ மணிகள் பலவற்றைக் கோத்தளித்து விடுகிறார். சமுதாயத்தின் ஒரு கால கட்டத்தை – அதன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல புரட்சி நிகழ்ச்சிகளை அருமையாகப் படம்பிடித்துக் காட்டிவிடுகிறார். காந்திய யுகத்தின் கனவுகளை இலட்சியங்களை – செயற்பாடுகளை இந்தக் கதை மிகுந்த இலக்கியத் தரம் வாய்ந்த உத்திகளோடு பிரதிபலிக்கிறது.
கதைச் சொல்லும் பாங்கில் ஒரு புதுமை மிளிர்கிறது. சிக்கலில்லாமல், தெளிந்த நீரோடை போல் செல்லும் கதைப் போக்கு. ஏராளமான சம்பவங்களை உள்ளடக்கியிருந்தபோதும் குழப்பமில்லாமல் செல்லும் பாங்கு ரசிக்கவும் பாராட்டவும் தக்கது. சுமார் ஐம்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்னால் இதை விக்கிரமன் எழுதியுள்ளார் என்பதை எண்ணுகையில் பிரமிப்பு தோன்றுகிறது.
– கௌதம நீலாம்பரன்
கஸ்தூரியின் கடிதம்
கஸ்தூரி எனக்குக் கடிதம் எழுதிப் பல மாதங்களாகி விட்டன. முன்பெல்லாம் அவனது கடிதத்தை எதிர்பார்ப்பேன். தபால்காரன் என் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டதும், சரி கஸ்தூரியின் கடிதம் எது என்பதைத் தெரிந்து கொண்டு விடுவேன். எனக்கு வரும் கடிதங்களைப் பிரித்துப் பார்க்கும் வழக்கம் என் கணவருக்கில்லை. நானாகக் கடிதத்தைப் பற்றி கூறினாலன்றி அவர் இந்த விஷயங்களிலெல்லாம் தலையிடுவதில்லை. அற்பத்துக்கெல்லாம் மற்ற கணவன்மார்களைப் போல் என்மீது சந்தேகப்படுவதில்லை.
கஸ்தூரி என்றால் எனக்கு உயிர். அவனை நேரிடையே சந்தித்து ஆறு வருஷங்களுக்கு மேலாகிவிட்டன. எனக்குக் கல்யாணம் ஆகாததற்கு முன்பு நான் கல்லுப்பட்டி கிராமத்தில் இரண்டு வருடங்கள் இருந்தேன். என் தந்தை இறந்தபிறகு என் தாயார் என்னையும் அழைத்துக் கொண்டு தன் தம்பியின் வீட்டிற்கு வரும்படியாயிற்று. என் மாமாவும் மிகக் கஷ்டப்பட்டுக் குடித்தனம் நடத்தி வந்தார். என் தாயார் அப்பாவைத்துப் போன சொத்தின் உதவியால் எப்படியோ என்னை வைத்துக் கொண்டு காலம்தள்ளி வந்தாள். நான் ரொம்பவும் பிடிவாதக்காரி என்று எல்லாரும் சொல்வதனால் ‘என்னை’ என்று குறிப்பிட்டேன். பிடிவாதம் மட்டும் இல்லையாம். ‘வேளைக்கு வேளை தலைவாரிக் கொள்ள வேண்டும்; விதவிதமான உடை உடுத்திக் கொள்ள வேண்டும்’ என்று அடம் பிடிப்பேனாம். என் தகப்பனார் முகத்துக்குப் பவுடர், தலைக்கு வாசனை எண்ணெய் இப்படியாக வாங்கிக் கொடுத்து வழக்கப்படுத்தி விட்டார். கல்லுப்பட்டி கிராமத்தில் இதெல்லாம் கிடைக்குமா?
இது விஷயமாகத்தான் எனக்கு கஸ்தூரி சிநேகமானான். நாங்கள் இருந்த வீட்டிற்கு எதிர் வீட்டிலிருந்த முன்சீப் சுந்தரராஜ ஐயரின் மகன் அவன். நான் எப்படித் தாயாருக்கு ஒரே புதல்வியோ, அவனுக்கு அவன் தந்தைக்கு ஒரே பிள்ளை. குறுகுறுவென்று பார்ப்பதற்குத் துடியாக இருப்பான். தலையில் கிராம வழக்கத்துக்கு விரோதமாகக் கிராப் வைத்துக் கொண்டிருந்தான். முதலில் நாங்கள் கிராமத்தில் வந்த அன்றே மாட்டு வண்டியிலிருந்து சாமான்களை இறக்கும்போது கூட மாட ஒத்தாசை செய்தான். அப்பொழுதே அவன்மீது எனக்கு வாஞ்சை ஏற்பட்டது.
என்தாயாருக்கு அவனைக்கண்டால் பிரியம் என்று சொல்வதற்கில்லை என்றாலும் வெறுப்பில்லை. சில வேளைகளில், “ஆண்பிள்ளையோடு என்னடி விளையாட்டு?” என்று கண்டிப்பாள். “கல்யாணமாகிற வயசாச்சு உனக்கு. கொஞ்சம்கூடப் புத்தி தெரியலையே” என்பாள் என் மாமி.
‘ஆண்பிள்ளை! பாவம், சிறு பையன்! அக்கா – தம்பி எண்ணத்தில் பழகுகிறவன். ஐயோ பழமைவாதிகளே!’ என்று தலையில் அடித்துக் கொள்வேன் நான்.
பொழுது விடிந்தவுடன் எங்கள் வீட்டிற்கு ஓடி வந்துவிடுவான் கஸ்தூரி.
‘ஏன் அக்கா… கல்கத்தாவிலே இருந்தீர்களாமே…’ என்று சில சமயம் சந்தேகத்தைக் கேட்பான். அந்தச் சமயத்தில் அந்தச் சிறுவனனுடைய உள்ளத்தில் எழும் எண்ண அலைகளைப் பற்றி நான் மனத்தில் எண்ணி வியப்பேன். சோப்பு, பவுடர் முதலியவற்றைப் பணம் கொடுத்து வாங்கி வரச் சொல்வேன். பள்ளிக்கூடம் போய்த் திரும்பி வரும்பொழுது வாங்கி வருவான்.
நான் கல்லுப்பட்டிக்கு வந்த இரண்டு வருஷங்களாயின. என் மாமா என் கல்யாணத்திற்கு வரன் தேடியலைந்தார்.
“அக்கா! கல்யாணமாகிப் புருஷன் வீடு போனாலும், என்னை நினைவு வைத்து கொள்வீர்களா?” என்று ஒருநாள் திடீரென்று கஸ்தூரி என்னைக் கேட்டான்.
அப்பொழுது அவனுக்குப் பதினைந்து வயது. “கஸ்தூரி! நான் சின்னக் குழந்தையா மறந்துபோவதற்கு? நீதான் மறந்து போவாய்” என்றேன்.
“அப்படி எல்லாம் நினைக்காதீர்கள். கடுதாசி போடத் தவற மாட்டேன்” என்றான்.
அதைச் செயலிலும் நிறைவேற்றினான். எனக்குக் கல்யாணமாகியது. என் கணவர் சென்னையில் குடித்தனம் வைத்தார். ஊருக்குப் போகும் பொழுது கஸ்தூரியும் ஸ்டேஷனுக்கு வந்திருந்தான். ‘சொந்த அக்காவிடம் கூட இவ்வளவு அன்பாக இருக்க மாட்டார்களே!’ என்று சொன்னார் என் கணவர்.
சென்னைக்கு வந்தது முதல் கஸ்தூரி தவறாமல் கடிதம் எழுதி அத்தான், என் தாயாரிடமிருந்தும், மாமாவிடமிருந்தும்கூடக் கடிதம் இராமல் இருக்கும். ஆனால், அவன் கடிதம் சொல்லி வைத்தாற்போல் நாதம் முதல் வாரத்தில் வந்துவிடும். மணி மணியாய் அழகான இதயெழுத்து. தன் மனத்தில் தோன்றுவது, தன் குடும்பத்தில் நடப்பது இல்லாவற்றையும் கடிதத்தில் எழுதி விடுவான்.
ஒருமுறை கிறிஸ்துமஸ் லீவில் சென்னைக்கு வந்தான். இரண்டு உரங்கள் எங்கள் வீட்டில் இருந்தான். நன்றாக வளர்ந்திருந்தான். அந்த வருஷம் ஸ்கூல் பைனல் பரீட்சைக்குச் செல்லப் போவதாகப் பெருமையுடன் சொன்னான்.
அப்பொழுது பார்த்ததுதான். பின்னர் கடிதங்கள்தான் வந்து கொண்டிருந்தன. “நான் ஸ்கூல் பைனல் பாஸ் செய்து விட்டேன் அக்கா! மேலே படிக்கப் போவதில்லை. ‘ஊரிலேயே இருந்து நிலபுலன்களைப் பார்த்துக் கொள்’ என்கிறார் அப்பா. ‘படித்தது எதற்காக? நாலு காசு சம்பாதிக்கட்டும்’ என்கிறாள் அம்மா. நீங்களே சொல்லுங்கள் அக்கா! படித்தாலும் சொந்த நிலத்தைச் செவ்வையாகக் கவனித்து வாழுவது போல் வருமா?” என்று எழுதியிருந்தான் ஒரு கடிதத்தில்.
இந்தக் காலத்துப் பிள்ளைகள்போல் நாலு எழுத்து இங்கிலீஷ் படித்து விட்டுக் கிராமத்தை விட்டுச் சென்று முப்பது ரூபாயில் கம்பெனி வேலை செய்ய அவன் ஆசைப்படவில்லை. இது விஷயத்தில் எங்கள் வீட்டில் அவருக்கும் எனக்கும்கூடக் கருத்து வேற்றுமை.
”அக்கா! அப்பாவும் அம்மாவும் எனக்குக் கல்யாணம் செய்யப் பெண் பார்த்து வைத்திருக்கிறார்கள். இரண்டாயிரம் ரூபாய் வரதட்சணையாம்! சீர் செனத்தி உண்டாம். எனக்குப் பிடிக்கவில்லை. என் மாமா பெண் சுமலாவைத்தான் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. உள்ளதைச் சொல்கின்றேன்! அக்கா, கமலாவுக்குக்கூட என்னைப் பிடித்திருக்கிறது. நான் அப்பாவிடம் இந்த விஷயத்தைச் சொன்னேன். அவர் அந்தப் பெண் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். நான் என்ன சொல்வது?” என்று எழுதியிருந்தான் கஸ்தூரி.
நான் என்னையே ஒருமுறை பார்த்துக் கொண்டேன். என்னிடம் ஒரு மாறுதலுமில்லை. இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி சிறு மூப்பு நட்டியதைத் தவிர பழைய குழந்தைத்தனம் இன்றும் இருக்கிறது. ஆனால், கஸ்தூரியோ அன்று மாதிரி சின்னப் பையன் இல்லை. இன்று பெரியவனாகிவிட்டான்.
பின்னர் இரண்டு மாதத்துக்குக் கடிதமே காணோம். அதுவரை அவனிடமிருந்து முப்பது கடிதங்களுக்கு மேல் வந்திருக்கின்றன இப்பொழுதெல்லாம் கஸ்தூரியின் கடிதங்களை எடுத்து வைத்துக் கொண்டு திருப்பித் திருப்பிப் பார்ப்பேன். ‘சரியானதம்பி கிடைச்சாண்டி உனக்கு’ என்று என் கணவர் கேலி செய்திருக்கிறார். அவன் யாரோ, நான் யாரோ என்ற பேத எண்ணமே எனக்குத் தோன்றவில்லை.
“அக்கா! ஒரு பெரிய காரியம் செய்துவிட்டேன்” என்ற பீடிகையுடன் கஸ்தூரி ஒரு கடிதமெழுதியிருந்தான். “அப்பாவின் கல்யாணத் தொந்தரவு அதிகமாய்ப் போச்சு. இரண்டாயிரம் ரூபாய் வரதட்சணை பெண்ணைத்தான் முடித்துவிட வேண்டும் என்று தலைகீழாய் நிற்கிறார். அந்தப் பெண் வீட்டாருக்குப் பக்கத்தூர்தான். ஒரு தந்திரம் செய்தேன். என் ஜாதகத்தை பெண் வீட்டார் எந்த ஜோசியரிடம் பொருத்தம் பார்க்கக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன். ராத்திரியோடு ராத்திரியாய்ச் சென்று அந்த ஜோசியருக்கு ஐந்து ரூபாய் கொடுத்தேன். அவர் வாயெல்லாம் பல்லாகிவிட்டது. ‘ஜாதகப் பொருத்தமில்லை. பெண் கல்யாணமாகி மூன்றாவது மாதம் மாப்பிள்ளை இறந்துவிடுவார்’ என்று சொல்ல சொல்லிவிட்டு வந்தேன். அப்படியே அவரும் சொல்லிவிட்டார். என் தந்திரம் பலித்தது. பெண் வீட்டார் இந்த உண்மையை என் தந்தையிடம் கூறாமல் ஏதேதோ கூறி, கல்யாணப் பேச்சை நிறுத்திவிட்டார்கள். என் தந்தையின் முகத்தில் ஈயாடவில்லை. இரண்டாயிரம் போச்சு என்று எண்ணியிருந்தார். செய்து கொண்டால்கமலாவைக்கல்யாணம் செய்து கொள்வது;இல்லாவிட்டால் பிரம்மச்சாரியாகக் காலம் கழிப்பது என்று உறுதி செய்து கொண்டேன். என் பக்கம் ஜெயமாகலாம்” என்ற விவரமாக எழுதியிருந்தான்.
இந்தக் கடிதத்தைப் பார்த்தவுடன் எனக்கு ஆச்சர்யம், பயம் இரண்டும் கலந்து தோன்றின. நம்ம கஸ்தூரியா இவ்வளவு துணிவுடன் எழுதியிருந்தான் என்று எண்ணி ஆச்சர்யப்பட்டேன். வேறு எவ்விதத் தொந்தரவும் கவலையுமில்லாத எனக்கு, கஸ்தூரியின் கடிதங்கள் சிறந்த பொழுதுபோக்காகவும், சிந்தனைக்குகந்தததாகவும் இருந்து வந்தன.
அவர்கூட எப்பொழுதாவது ஒரு சமயம், “உன் கஸ்தூரி எப்படி இருக்கான்?” என்று கேட்பார். இன்னொருவராயிருந்தால் ஏதாவது வித்தியாசமாக நினைத்துக் கொள்வார்கள். எனக்கென்னவோ என் உடன் பிறந்தவன் போன்ற இயற்கை நிலையே இன்னும் இருக்கிறது. ஊரிலிருந்து யாராவது வந்தால்கூட, “கஸ்தூரி சௌக்கியமா?” என்று நான் விசாரிக்கத் தவறுவதில்லை.
என் தாயார் வந்தாள். “அம்மா! கஸ்தூரி சௌக்கியமா?” என்று கேட்டேன். “ஏண்டி பெண்ணே! என்னடி அவன்மேல் உனக்குக் இரிசனம்? அவன் யாரோ, நீ யாரோ? அந்தப் பிள்ளை தன் மாமா இபண்ணையே கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லி அலையறான். அவன் சகவாசமே ஊராருக்குக் கட்டோடு பிடிக்கல்லை. இதைக் கனடி; நம்ப ஊர் சிவன் கோயிலை ஹரிஜனங்களுக்குத் திறந்து விட வேண்டும் என்று நம்ப ஊரிலேயே ஒரு மீட்டிங் போட்டார்கள். பிறகு பெரிய மனுஷாளெல்லாம் அந்த வேலை மட்டும் செய்யாதேன்னு ரவ்வளவோ சொன்னா” என்று பெரிய ராமாயணமாய் அம்மா சொன்னாள். இன்னும் சொல்ல மாட்டாளா என்றுதான் இருந்தது. குறுக்குக் கேள்வி எல்லாம் போட்டு முழு விவரத்தையும் அறிந்து கொண்டேன்.
வருஷம் இரண்டு கழிந்தது. கஸ்தூரியிடமிருந்து கடிதமே வருவ இல்லை. எனக்கு எதையோ இழந்ததைப் போலிருந்தது. பெண்களின் மறுப்போக்கைப் பற்றி எழுதுவதென்பது ஆகாத காரியம். சொந்தத் தம்பியிடமிருந்து கடிதம் வராததை எண்ணி வருந்தினேன்.
என் தாயார் கூறியதிலிருந்து கஸ்தூரியைப் பற்றி என் உள்ளத்தில் ஒரே மகிழ்ச்சிதான். தேசத்துக்காகப் பாடுபடும் ஒரு ஸ்தாபனத்தில் தொண்டனாக இருந்து உழைக்கிறான் என்பதில் எனக்குப் பரம சந்தோஷம். கள்ளங்கபடமற்ற குழந்தை கஸ்தூரியாகவே என்றுமிருக்க முடியுமா அவன்? அவன் என்ன ஆனான்? அவன் யாரைக் கல்யாணம் செய்து கொண்டான்? என்று அறிந்து கொள்ள ஆவலாயிருந்தேன்.
என் அம்மா ஊரிலிருந்து வந்துபோகும்தெல்லாம் ஏதாவது சமாசாரம் கூறிக் கொண்டிருப்பாள். அம்மாவும் வந்து ஆறு மாதங்களுக்கு மேலாகி விட்டன. நானே கஸ்தூரிக்கு ஒரு கடிதம் எழுதினேன். பதிலைத்தான் காணோம். என் கடிதத்தில் அவனைச் சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்ளுமாறு தூண்டி இருந்தேன். அவனுடைய தேசத் தொண்டையும் மெச்சியிருந்தேன். வாரமும் மாதமும்தான் ஓடின.
ஒருநாள் காலை பரபரப்புடன் என் கணவர் வந்தார். அவரது பாபரப்பையும் கையில் அன்றைய செய்தித் தாளையும் கண்ட நான் ஒன்றும் புரியாமல் நின்றேன். “இதோ பார்… உன்கஸ்தூரியின் கதியை” என்று தழுதழுக்கக் கூறினார். பேசிவரும்போதே அவர் கண்களில் நீர் தளும்பியது.
ஒன்றும் புரியாதவளாய் பரபரப்புடன் அவர் காட்டிய இடத்தைப் படித்தேன். ‘கல்லுப்பட்டியில் நடந்த விவசாயத் தகராறில் போலீஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது 12 பேர் காயமடைந்தனர். 3 பேர் ஸ்தலத்திலேயே மாண்டனர். உள்ளூர் பிரபல முன்சீப் பிள்ளை கஸ்தூரியும் இறந்து போனவர்களில் ஒருவன்’ என்னும் செய்தியைப் படித்து முடித்தவுடன் என் தலை சுழன்றது. அவ்வளவுதான் தெரியும் என் கணவர் என்னைத் தன் மடியில் கிடத்தியிருந்தார். கஸ்தூரியை நினைத்துப் புலம்பினேள்.
செய்தியை என்னால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அதை நினைத்து நினைத்து உள்ளம் வருந்திக் கொண்டிருந்த சமயம், தபாலில் ஒரு கடிதம் வந்தது. அதை ஆவலாய்ப் படித்தேன். கடிதத்தைப் படித்து முடித்தபோது என்உள்ளமே வெடித்து விட்டதென்று கூறலாம். மூன்று நாள் வரை உன்மத்தம் பிடித்தவள் போலிருந்தேன். அந்தக் கடிதத்தைத் திருப்பித் திருப்பிப் படித்துப் பெருமூச்சு விட்டேன், நீங்களும்தான் படியுங்களேன்.
“அன்புள்ள அக்கா!
உங்கள் கடிதம் கிடைத்தது. நான் என்னத்தைக் கூறி மன்னிப்புக் கேட்பது? வழக்கம்போல் கடிதம் எழுதத் தவறியதற்குக் காரணம் என்னவென்று உங்களுக்குக் கூறுவது?
நானே மாறிவிட்டேன் என்றுதான் கூற வேண்டும். நாட்டுத் தொண்டு – அதுவும் சொந்தக் கிராமத் தொண்டு – எனக்கு மிகவும் பிடித்து விட்டது. ஊரைச் சீர்திருத்தம் செய்ய, கல்லுப்பட்டியிலுள்ள நான்கைந்து பேர் கங்கணம் கட்டிக் கொண்டு விட்டோம். கல்யாணமாகாதது மிகவும் நல்லதாய்ப் போய்விட்டது. பீஷ்மரைப் போலவும், காமராசரைப் போலவும் நான் பிரம்மசாரியாகக் காலம் கழித்துக் கடமையைச் செய்யச் சபதம் செய்துள்ளேன்.
கல்லுப்பட்டியில் மிராசுதார்கள் இருக்கிறார்களே… சரியான முறையில் உழவர்களுக்குக் கூலி கொடுப்பதில்லை. அவர்களுடைய கஷ்டத்தை நான் கடிதத்தின் மூலமாகச் சொன்னாலும் புரியாது. என் தகப்பனார்கூடத்தான் – அவருக்கு இருக்கிற நிலபுலன்களுக்கு – அதைப் பொன் விளையும் பூமியாக்கிய குடியானவர்களுக்கு வாரத்தை அதிகமாக்கினால்தான் என்ன? குடியானவர்களோ நெற்றி வியர்வை மண்ணில் விழ உழைத்தும் கூலி உயர்வு கேட்கப் பயப்பட்டார்கள்.
நானும் என் நண்பர்களும் இந்தத் தொல்லைத் தீர்த்து, உழவர்களுக்கு நன்மை செய்து விட வேண்டும் என்று தீவிரமாக முடிவு செய்தோம். உழவர் சங்கம் ஒன்றை ஆரம்பித்தோம். இதன் நடுவில் என் தந்தை திருமணத்திற்கு வற்புறுத்த ஆரம்பித்துவிட்டார். நான் ஜோசியருடன் சேர்ந்து செய்த சதி அவருக்குத் தெரிந்து விட்டது. அவருக்குக் கட்டுக் கடங்காத கோபம். ‘என் சொத்தில் ஒரு காலணாகூட உனக்குச் சேராமல் இசல்கிறேன் பாரடா!’ என்று சபதம் செய்து விட்டார். எனக்கெதற்குச் சொத்து?
‘சரி வேண்டாம்’ என்று கூறி விட்டேன். வீட்டில்கூடச் சாப்பிடுவது கிடையாது. பொங்கல் அறுவடைக்குப் பிறகு கூலி உயர்வு கொடுப்பதாகக் கலெக்டர் முன்னிலையில் ஊர் மிராசுதார்கள் வாக்களித்தார்கள். உழைப்பாளர் சங்கப் பிரதிநிதிகளாக நாங்களும் – நான் ஒரு பக்கம் என் அப்பா ஒரு பக்கம் – ஒப்புக் கொண்டோம். பொங்கல் போய் மாதம் ஒன்றாகிறது. இன்றும் வாரத்தை அதிகப் படுத்தவில்லை. பொறு கிளியே பொறு. பழம் பழுக்கும் என்றால் முடியுமா? குடியானவர்கள் இந்தத் தொழிலே வேண்டாம். வேறு வேலைக்கு – பட்டணத்துக்கு – மில்லுக்குச் சென்று விடுவதாகக் கூறுகிறார்கள். நீயே நினைத்துப் பார். அவர்கள் சென்று விட்டால் சித்திரை அறுவடையின் கதியென்ன? அதற்காகத்தான் நான் அரும் பாடுபட்டு வருகிறேன்.
வயலிலே கதிர்கள் தலை சாய்ந்துவிட்டன. அறுவடைக்கு இன்னும் ஊர்க் குடியானவர்கள் செல்லவில்லை. ஊரே கலவரப்படுகிறது. பண்ணையார் எல்லாம் – என் தந்தை கூட – இந்தக் கஸ்தூரியால் தான் இவ்வளவும் என்கிறார்கள். நான் என்ன, திருடவும் கொள்ளையடிக்கவுமா தூண்டுகிறேன்?
நீங்களே சொல்லுங்கள் அக்கா! உலகமே சம்பள உயர்வு, பஞ்சப்படி கேட்கும்போது, குடியானவர்கள் கேட்பதில் என்ன தப்பு?
இருக்கட்டும்; இன்னும் ஒரு வாரத்தில் நிலைமை சரியாகிவிடும் என்று நம்புகிறோம். உள்ளூர் ஆளில்லாமல் அறுவடை எப்படி முடியும் பார்க்கலாம். வேறு ஊர் ஆள் காலை வைக்க முடியுமா?
அடிக்கடி கடிதம் எழுதாததற்கு இந்த வேலைகளே காரணம். என்னை மன்னித்து விடுங்கள்.
அன்புள்ள கஸ்தூரி”
ஆறு நாள் தாமதமாய் எனக்குக் கிடைத்த கஸ்தூரியின் கடைசிக் கடிதத்தைப் படித்து முடித்தேன். என் கண்களிலிருந்து விழுந்த கண்ணீர்த் துளி அந்தக் கடிதத்தின் எழுத்துகளை அழித்தன.
– 1946, வெள்ளிமணி.
– செவ்வந்திப்பூ சிங்காரி, கலைமாமணி விக்கிரமன் எழுதிய சமூகச் சிறுகதைகள், தொகுதி-1, முதல் பதிப்பு: 2010, யாழினி பதிப்பகம், சென்னை.