கல்வி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 6, 2022
பார்வையிட்டோர்: 5,492
சரண்யா கண் விழித்துப் பார்கிறாள்,அருகில் அமர்ந்திருந்தான் கார்த்திக்.வீட்டுக்குப் போவோம் என்றாள் அவள்,சரி போவோம் டாக்டர் வந்து பார்த்தப் பிறகு போகலாம் என்று அவளின் தலையை தடவினான் அவன்,இதையே எத்தனை தடவை தான் சொல்லுவீங்கள் என்று எரிச்சல் பட்டாள் சரண்யா,சரி போகலாம் இப்ப சாப்பிடுறீயா? என்று அவன் கேட்டான்,எனக்கு சாப்பாடு வேண்டாம்,நான் வீட்டுக்குப் போகவேண்டும் என்று அடம் பிடித்தாள் சரண்யா.சரி,சரி இன்னைக்கு மாலையில் போய்விடலாம்,இப்ப சாப்பிடு என்று அவன் சொன்னதும் உண்மையாகவா!என்று கேட்டாள் அவள்.ஆமா நீ அடம் பிடிக்காமல் இப்போது சாப்பிட்டால் என்றான்,சரி என்றாள் அவள்,கார்த்திக் வெளியில் வாங்கிவந்த சாப்பாட்டை ஒரு தட்டில் போட்டு அவள் கையில் கொடுத்தான்
சிறிதளவு சாப்பிட்ட சரண்யாவிற்கு மேலும் சாப்பிடமுடியவில்லை,போதும் என்றாள்,இன்னும் கொஞ்சம் சாப்பிடு என்றான் கார்த்திக்,வேண்டாம் என்று மறுத்தாள்,அதன் பிறகு அவன் அவளை வற்புறுத்தவில்லை.மிகுதி உணவை அவன் தட்டில் போட்டு சாப்பிட்டுவிட்டு தட்டை கழுவி வைத்தான் கார்த்திக்,அவளுக்கு கொடுக்கவேண்டிய மருந்தை அந்த மருத்துவமனையில் வேலை செய்யும் தாதி,அவள் அருகில் வைத்துவிட்டுப்போனாள்,அதை எடுத்துக் கொடுத்து தண்ணியும் கொடுத்து குடி என்றான் கார்த்திக்.என்னங்க இந்த வில்லையைப் போட்டால் எனக்கு தூக்கமாக வருது,வேண்டாமே என்றாள் சரண்யா,போடு தூங்கி எழும்பி வீட்டுக்குப் போய்விடலாம் என்றான் அவன்,சரியென்று வில்லையை வாங்கி போட்டுக் கொண்டாள்,கட்டிலை விட்டு எழுந்து பாத்ரூம் போய்வந்தாள் சரண்யா.
அகிலேஷ் ஏன் வரவில்லை,அவன் சாப்பாட்டுக்கு என்னப் பன்னுவான் என்றாள் சரண்யா?அது ஒரு பிரச்சினையும் இல்லை அவன் வெளியில் சாப்பிடுவான்,காலேஜ் போவதால் உன்னைப் பார்க்க வருவதற்கு நேரம் இல்லை அவனுக்கு,நீ அதைப் பற்றி யோசிக்காதே இப்ப படுத்து தூங்கு என்று அவளை படுக்கவைத்தான் கார்த்திக்.அவள் படுத்து சற்று நேரத்தில் தூங்கிப் போனாள்.அவளைப் பார்க்க பாவமாக இருந்தது கார்த்திக்கு,பிள்ளைக்காக வாழ்ந்தவள்,இன்று மன உளைச்சல் என்று,ஒரு வாரமாக தனியார் மருத்துவமனையில் படுத்துக்கிடக்கிறாள்.இதை சற்றும் எதிர்பார்கவில்லை கார்த்திக்.
அவளின் உலகமே அகிலேஷ் தான்.திருமணம் செய்து ஒரு வாரத்தில் கார்த்திக்கோடு வெளியூர் வந்தவள் சரண்யா. அவளுக்குப் பெரிதாகப் பிடிக்கவில்லை இந்த ஊர்,காரணம் அவள் ஊரில் தமிழில் படித்தவள்,இங்கு சரளமாகப் பேசும் ஆங்கிலம் அவளுக்கு எதுவும் புரியவில்லை,வெளியில் போகவே பயப்பிடுவாள்,எதற்கெடுத்தாலும் கார்த்திக்கை அழைப்பாள், தனியாகப் எங்கும் போகமாட்டாள்,ஊரில் சுதந்திரமாகத் சுத்தி திரிந்தவள்,இங்கு வீட்டில் அடைந்து இருப்பதாக தோனுது,தன்னம்பிக்கை இல்லாமல் போகுது,எனக்கு எதுவும் தனியாக செய்து கொள்ளமுடியவில்லை,என்று அடிக்கடி கார்த்திக்கிடம் கூறி வருத்தப்படுவாள் சரண்யா,ஊருக்கே போய்விடுவோம் என்பாள்,அவன் அதை பெரிதுப்படுத்தவில்லை,இப்ப தானே வந்திருக்க போக போக எல்லாம் சரியாகிவிடும் என்றான்.
வருடம் ஒரு முறை ஊருக்குப் போய் வருவார்கள் இருவரும். போகும் போது சந்தோஷமாக இருக்கும் சரண்யா,வரும்போது விமானநிலையம் எல்லாம் அழுதுக் கொண்டே வருவாள், கார்த்திக் எவ்வளவு ஆறுதல் சொன்னாலும்,ஐந்து,ஆறு நாட்கள் போகும் அவள் வழமைக்கு திரும்புவதற்கு.இரண்டு வருடங்களுக்குப் பிறகு தாய்மை அடைந்தாள்,அதுவும் மனதில் ஆயிரம் பயம்,ஒவ்வொரு மாதமும் கிளினிக் போக,கார்த்திக்கை எதிர்பார்ப்பாள்,அவனுக்கு வேலை என்றாலும், விடுப்பு எடுத்துக் கொண்டு வருவான்.பத்து மாதத்தில் அகிலேஷை பெற்றெடுத்தாள்.தனிமையாக இருந்த அவளுக்கு அகிலேஷ் ஒரு பொக்கிஷம் அவளைப் பொறுத்தமட்டில்,அவனும் வேகமாக வளர்ந்தான்.அவன் கையைப் பிடித்துக் கொண்டு அருகில் உள்ள கடைகளுக்கும்,விளையாட்டு மைதானத்திற்கும் போக ஆரம்பித்தாள் சரண்யா,வெளி உலகமே தெரியாமல் இருந்த அவளுக்கு,அகிலேஷ் மூலம் பல்விடயங்களை தெரிந்துக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது.ஒரு சில நண்பர்களும் கிடைத்தார்கள்.
அகிலேஷ் பள்ளி செல்ல ஆரம்பித்தான்,சிறு வயதில் அம்மா கையைப் பிடித்திக்கொண்டு ஆனந்தமாக பள்ளி செல்லும் அவன் நாளாக,நாளாக அம்மா உனக்கு இங்கிலிஷ் தெரியாதா?என் நண்பர்களின் அம்மா எல்லோரும்,வகுப்பு ஆசிரியரிடம் நன்றாகப் கதைப்பார்கள்,நீ தான் ஒன்னும் பேச மாட்ட என்று வருத்தப் படுவான் அகிலேஷ்,அது இல்லை கண்ணா,அம்மா உன் மாதிரி இங்கிலிஷ் சின்னதிலிருந்து படிக்கவில்லை,உன் தாத்தா பாட்டி என்னை தமிழ் தான் படிக்க வைத்தார்கள்,அதனால் தான் அம்மாவிற்கு தரவாக பேசமுடிய மாட்டேங்குது என்பாள்,சரி சரி நான் உனக்கு படித்து தருகிறேன்,என்று அவளை கட்டிப் பிடித்துக் கொள்வான் அவன் பிஞ்சு கரங்களில்,அவளுக்கு உலகமே மறந்துப் போகும்.அதே அகிலேஷ்,அம்மா நீ பாடசாலைக்கு வரவேண்டாம், நான் தனியாகப் போகிறேன் என்று கூறுவதற்கு நாள் ஆகவில்லை.
அவன் வளர வளர பல மாற்றங்கள் அவனிடம்,ஒரு வருடத்திற்கு ஒரு தடவையாவது ஊருக்குப் போய்வந்தவர்கள் தற்போது போவதையே விட்டுவிட்டார்கள்.அகிலேஷ் பிடிவாதமாகப் மறுப்பான்.எனக்கு வரமுடியாது,தண்ணி சரியில்லை என்பான், என்னிடம் இங்கிலிஷ் பேச நண்பர்கள் இல்லை என்பான்,இப்படி ஏதாவது காரணம் கூறுவான்.அவனை தனியாக விடமுடியாது என்பதால் இவர்களும் ஊருக்குப் போவதை குறைத்துக் கொண்டார்கள்.தமிழ் பாடங்களில் ஏதும் சந்தேகம் என்றாள் மட்டும் அகிலேஷ் அம்மாவிடம் கேட்ப்பான்,அதுவும் போக போக குறைந்தது.அம்மாவுடன் எங்கும் வருவதற்கே தயக்கம் காட்டினான் அகிலேஷ்,பாடசாலையில் ஏதாவது நிகழ்ச்சி என்றால் அப்பாவை மட்டும் அழைத்துப் போவான்.உனக்குத் தான் ஒன்னும் புரியாதே, நீ அங்கு வந்து என்ன செய்யப்போற? என்று அவன் கூறும் போது,அது அவளுக்கு வலிக்கும்,ஆனால் அதை வெளிக்காட்டாமல் சிரித்து சமாளித்து விடுவாள்.
நாள் போக்கில் அகிலேஷின் புண்படும் பேச்சிகள் அவளுக்கு பழக்கமாகிவிட்டது.கார்த்தியிடம் ஏதும் சொன்னால்,நீ தானே செல்லம் கொடுத்து வளர்த்த என்பான்,அதனால் அவனிடமும் அகிலேஷைப் பற்றி குறை கூறமாட்டாள் சரண்யா,காலேஜ் போக ஆரம்பித்த அகிலேஷ்,வீட்டில் இருக்கும் நேரங்களில் அறையை விட்டு வெளியில் வரமாட்டான்.எந்த நேரமும் லெப்டொப்பில் உட்கார்ந்து இருப்பான்.சாப்பிட கதவை தட்டினாலும் கதவை திறக்காமலே பதில் மட்டும் வரும் பிறகு சாப்பிடுறேன் என்று, அவளும் அவனுக்காக காத்திருப்பாள்.அவனுடைய அறையை சுத்தம் செய்யவே அவள் தயங்குவாள்.ஏதாவது பொருட்களையோ, புத்தகங்களையோ காணாவில்லை என்றால் மேலும் கீழும் குதிப்பான்,உனக்கு படிக்கத் தெரியுமா? தூக்கி வீசிட்டியா? உன்னை யார் என் அறையை சுத்தம் செய்ய சொன்னது என்று கத்துவான்.அதனாலையே அவனுடைய அறைக்குப் போவதையே குறைத்துக் கொண்டாள் சரண்யா.
மறுப்படியும் அவளுக்கு தனிமையாக இருப்பது போல் தோன்றியது,எனக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்ற கவலை ஒருப்பக்கம்,அகிலேஷ் அவளிடமிருந்து ஒதுங்குவது,ஊருக்குப் போகாத ஏக்கம் இப்படி பலவற்றையும் யோசித்த அவள் எதிலும் ஒரு ஈடுப்பாடு இல்லாமல் இருந்தாள்,பல இரவுகள் பலவற்றையும் நினைத்து தூங்காமல் அழுதிருக்கிறாள்.இவளின் எந்த மாற்றத்தையும் கார்த்திக்,அகிலேஷ் கவனிக்கத் தவறியதால்,இன்று மன உளைச்சலுக்கு ஆளாகி மருத்துவமனையில் படுத்திருக்கிறாள் சரண்யா.