கல்வித்தாய்!
கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 25, 2025
பார்வையிட்டோர்: 228

சிறுவயதில் வறுமையின் நிலையில் இருந்த போது ஊரும், உறவுகளும் கண்டு கொள்ளாமல் உதாசீனப்படுத்தியதை நினைத்துப்பார்க்கவே மனதில் வேதனை கூடியது சாரங்கனுக்கு.
எப்படியாவது பிறர் மதிக்கும் நிலைக்கு உயர்ந்து காட்ட வேண்டும் என்பதே லட்சியமானது.
பலரும் மதிக்கும் ஒருவனால் நிச்சயம் முன்னேற முடிவதில்லை, பிறரால் உதாசீனப்படுத்தப்படுபவர்களே உயரம் தொட முயல்கின்றனர் என்பதை பின்னர் தான் புரிந்து கொண்டான்.
தன்னையும், தன் குடும்பத்தினரான அப்பா, அம்மா, தங்கை என தன்னோடு சேர்த்து நான்கு பேரையும் முக்கிய விழாக்களிலும், உறவுகளின் வீட்டு விசேசங்களிலும் யாரும் மதித்துப்பேச முன் வராத போது, ஒதுங்கிச்செல்லும் போது வருத்தம் மேலோங்க கண்களில் கண்ணீர் அருவியாகக்கொண்டும்.
“நீ கவலப்படாத ராசா…. நல்லா படிச்சு கலெக்டராயி ஊருக்குள்ள வந்தீன்னு வெச்சுக்கோ எல்லாப்பயலுகளும் உன்ற பின்னாடி வருவாங்க” என்று நம்பிக்கையுடன் கூறிய தாய் இன்று உயிருடன் இல்லை என்பதை நினைக்கும் போது தற்போதைய நிலையின் மகிழ்ச்சிக்கு பதிலாக பழைய நினைவுகளால் மனதில் வேதனை மேலோங்கியது.
ஆட்சியருக்கான தேர்வில் நாட்டிலேயே முதல் மதிப்பெண் பெற்று தேர்வாகி யிருந்ததோடு, பக்கத்து மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் ஆட்சியராக பதவியேற்ற பின் முதலாக தனது பூர்வீக ஊரில் நடக்கப் போகிற பாராட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தான்.
ஊரே கலைகட்டியிருந்தது. சுற்று வட்டார ஊரைச் சேர்ந்தவர்களும் அங்கு கூடியிருந்ததால் கூட்டம் அதிகமாகவே இருந்தது. கூட்டம் வெறுமனே அரசியல் கூட்டம் போல் இல்லாமல் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்வது போன்ற உற்சாகத்துடன் மேடைக்கு முன் போடப்பட்டிருந்த மைதானத்தில் அமர்ந்திருந்தனர்.
தன்னுடன் முதல் வகுப்பில் துவக்கப்பள்ளியில் சேர்ந்து படிப்பை ஐந்தாவதுடன் நிறுத்தி விட்டு அவனது தாயுடன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ராயன் தற்போது கிராமத்து பஞ்சாயத்து தலைவராகி விழாத்தலைமையேற்று அமர்ந்திருந்தது வியப்பாக இருந்தது.
தங்களுக்கு இருந்த சிறிதளவு பூர்வீக விவசாய நிலத்துக்கு போகும் வழியைத் தடுத்து குறைந்த விலைக்கு மிரட்டி வாங்கி விட்டு ஊரை விட்டே தன் குடும்பம் போக காரணமாக இருந்த தன்னுடன் படித்த மாயாவின் தந்தை செல்லையன் ஊர் பெரிய மனிதராக வெள்ளையும், சொல்லையுமாக மேடையில் அமர்ந்திருந்ததோடு, சாரங்கனை நேருக்கு நேராக பார்க்க திராணியற்றவராக இருந்ததும் புரிந்தாலும் அனைவரையும் சமமாக மதிக்கத் தவறாமல் ஒவ்வொருவர் பெயரையும் மரியாதையாக எழுதிக்கொடுக்காமலேயே ஞாபகம் வைத்துக் கொண்டு சாரங்கன் பேசிய போது கூட்டத்திலிருந்து கைதட்டல் பலமாகக்கிடைத்தது.
தன்னுடன் எட்டாவது வகுப்பில் படித்தபோது தன்னை மிகவும் விரும்பிய வசதி மிக்க குடும்பத்தை சேர்ந்த மாயாவை அவளது தந்தை கட்டாயமாக வேறு பள்ளியில் கொண்டு போய் சேர்த்ததை நினைத்துப்பார்த்தான்.
இருந்த சிறிதளவு விவசாய பூமியை சிறிய தொகைக்கு செல்லையனுக்கு விற்றுச்சென்ற பணத்தில் நகரத்தில் சிறிய வீடு வாங்கி அதன் வாசலிலேயே இட்லி கடை வைத்து அம்மா வியாபாரம் செய்ததும், அப்பா அருகிலிருந்த மில்லுக்கு வேலைக்கு சென்றதும் தங்கையை கல்லூரிக்கு அனுப்பி படிக்கவைக்காமல் தன்னை மட்டுமே படிக்க வைத்ததும் வறுமையின் வலிகளாக கண்முன் வந்து போயின.
கல்லூரி படிப்பு முடிந்து வேலைக்கு முயலாமல் ஆட்சியர் வேலைக்கான தேர்வு எழுதும் பொருட்டு டெல்லி சென்று படிக்க விரும்பியவன், ஒரு பத்திரிக்கையில் உதவி கேட்டு விளம்பரம் கொடுத்ததில் ரம்யா எனும் பெண் தான் படிப்பு பயிற்ச்சிக்கான முழு செலவையும் ஏற்றுக்கொள்ள முன் வந்தபோது அளவற்ற மகிழ்ச்சியடைந்தவன் படித்து தேர்வாகி வந்தான்.
தலைநகரில் தேர்வுக்காக படித்த காலத்தில் தங்கை தான் விரும்பிய ஒருவரை திருமணம் செய்ததால் மனம் உடைந்துபோன பெற்றோர் உடல் பாதித்து ஒருவர் பின் ஒருவராக உயிரிழக்க நேர, மிகவும் மனம் உடைந்து போனான். அதையறிந்து ஆதரவாக வந்து படிப்பைத்தொடர மனதைத்தேற்றி கூடுதல் செலவையும் ஏற்ற ரம்யாவை முதலில் பேச அழைக்கச்சொன்னான் சாரங்கன்.
“ஆட்சியராகி காட்சி தருகின்ற சாரங்கன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவரது உதவி கேட்ட விளம்பரத்தை பார்த்து அவரது படிப்புக்கு உதவியது, அவரது பெற்றோர் இறப்பின் போது ஊருக்கு வந்து விட்டு மேலும் படிக்கச்செல்லாமல் மனமுடைந்து இருந்தபோது ஆறுதலாக இருந்தது நான் ஒருத்திதான் என்று தான் இதுவரை அவர் நினைத்துக்கொண்டிருக்கிறார். நான் அம்பு தான். சாரங்கன் மீது அன்பு கொண்டு அம்பு எய்தவரை அவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் அறிமுகப்படுத்த விரும்புகிறேன்” என ரம்யா சொன்ன மறுகணம் மேடை ஏறிய பெண்ணைக்கண்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனான் சாரங்கன்.
மாயா. எட்டாம் வகுப்பில் எட்டாக்கனியாக மாயமாய் மறைந்து போன சாரங்கனது மனதின் சிம்மாசனத்தில் நிரந்தரமாக அமர்ந்து விட்ட மகாராணி தான் மாயா. மாயாவின் மீது தனக்கு ஏற்பட்டிருந்தது காதல், உடல் ஈர்ப்பு என்பதை விட அதற்கு மேல் ஏதோ ஒன்று என்பதுதான் அவனது சிந்தையில் பதிந்திருந்தது.
‘இவ்வுலகில் அனைவரையும் அனைவருக்கும் பிடிப்பதில்லை. பிடித்தவர்கள் நிரந்தரமாக சேர்ந்து வாழ பொருளாதார ஏற்ற தாழ்வுகள், கல்வியின் அளவீடுகள் தடைக்கற்களாக உள்ளன. இவை மனித சமூகத்தின் மீதுள்ள சாபத்தீடுகள்’ என நினைத்துக்கவலை கொள்வான்.
ரம்யாவிடமிருந்து மைக்கை கையில் வாங்கிய மாயா, சாரங்கனைப்பார்த்து புன்னகைத்து விட்டு தயக்கமில்லாமல் பேச ஆரம்பித்தாள்.
“நம்ம ஊர்ல எங்க குடும்பம் நல்ல வசதியான குடும்பம். ஆனா எனக்கு சரியா படிப்பு வரவில்லை. படிக்க முடியாதவர்களுக்கு படிப்பவர்கள் மீது எப்போதுமே மரியாதையான காதல் ஏற்படும். அதுதான் சாரங்கன் மீது எனக்கும் ஏற்பட்டது. பள்ளியில் படிக்கும் போது எங்கள் வீட்டில் செய்யும் பலகாரங்களை கொண்டு போய் சாரங்கனுக்கு கொடுப்பேன். அதிகமாக பேசுவேன். அதை உடல் ஈர்ப்பின் காதலென தவறாகப்புரிந்தவர்கள் அந்த சிறு வயதிலேயே என்னை பிரித்து வைத்தனர்” என பேசியவள், அங்கே மேடையில் அமர்ந்திருந்த தனது தந்தை செல்லையனைப் பார்த்தாள்.
“வெளியூரில் பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் திருமணமாகி தற்போது எனக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வந்த தினசரி பத்திரிக்கையில் இருந்த வரி விளம்பரத்தில் ‘உதவி தேவை’ எனும் விளம்பரத்தை பார்த்து விசாரித்த போது என்னுடன் பள்ளியில் படித்த சாரங்கன் என்று தெரிந்ததும் எனது கணவரிடம் சொல்லி எங்களது அறக்கட்டளை மூலமாக வேண்டிய உதவியை செய்து கொடுக்குமாறு என்னுடைய உறவினர் பெண் ரம்யாவிடம் கூறினேன். நான் உதவியது அவர் மீது உள்ள காதலால் அல்ல. கல்வி மீது உள்ள காதலால். பணத்தை சம்பாதித்தால் வீட்டுக்கு மட்டும் பயன் படும். படிப்பை சம்பாதித்தால் நாட்டுக்கே பயன் படும் என்பதால் உதவினேன். நாம் போட்ட விதை மரமாகி காய்த்து நிற்பது போல் எனது சிறிய உதவியைப்பெற்று படித்த ஒருவர் பலருக்கு உதவி செய்யப்போகிறார் என்பதில் ரொம்பவே மகிழ்ச்சியடைகிறேன். இதில் ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை அடித்த மனநிறைவும் எனக்கு உண்டு” என மாயா சொன்னபோது அனைவரும் குழப்பமாக புரியாமல் அவளை ஏறிட்டனர்.
“எனது தந்தை சொத்தின் மீதுள்ள பேராசையால் அவரது குடும்பத்தினருக்கு இடையூறு செய்து வாங்கிய சாபம் நீங்கியது. என் மனதுக்கு பிடித்த ஒருவருக்கு உதவியது. கல்விக்காக உதவியது ” என மாயா பேசியதைக்கேட்டு தன்னைப்பெற்று உலகிற்கு கொடுத்த தாயைப்போல கல்வியைபெற உதவிய இன்னொரு தாயாக அவளைப்பார்த்து எழுந்து நின்று கைகூப்பி வணங்கினான் சாரங்கன்.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |
