கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா?
“மத்தியானம் அலுவலகம் மும்முர வேலையில் இருந்தது. கம்பெனி ஜிஎம்மின் பிஏ பாலு அவசரமாய் ஏதோ ஸ்டேட்மென்ட் தயாரிப்பதில் இருந்தான்.
“ சார்! உங்களைப் பாக்க ஒரு பெரியவர் வந்திருக்கிறார்.” ஆபிஸ் ஊழியர் சொல்லி விட்டுப் போனார்.
வேலை நேரத்தில் தொந்தரவு கொடுப்பதை விரும்பாத பாலு கொஞ்சம் எரிச்சலோடு வெளியே வந்தான். வந்தவரைப் பார்த்ததும் ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டான்.
ஊரில் பெரும்புள்ளியும் கோடீஸ்வரரும் தன் காதலி சாந்தியின் அப்பாவுமான சுந்தரேஸ்வரர் நின்று கொண்டிருந்தார். பாலுவைப் பார்த்ததும்,
“தம்பி வாங்க” என்று முகம்மலர அழைத்தார்.
“ வாங்கய்யா இவ்வளவு தூரம் நீங்க?”
இந்தக்கேள்வியை கேட்டதும் சுந்தரேஸ்வரர் முகம் சற்று வாடலோடு
“ உன்னப் பாக்கணும்னுதான் முக்கியமா வந்தேன்.”
“நல்லதுங்க ஒரு சின்ன விண்ணப்பம். ஆபிஸ்லே ஒரு அவசரவேலை இப்ப மணி மூணாகுது. இன்னும் ஒரு மணி நேரத்திலே முடிஞ்சுடும். நீங்க தயவுசெஞ்சு போயிட்டு நாலு மணிக்கு வந்தா எதப்பத்தி வேண்ணாலும் பேசலாம்.”
“பரவால்ல தம்பி நீங்க உங்க வேலையப் பாருங்க நா அப்புறமா வர்றேன்.” புறப்பட்டார்.
*****
சாந்தி பெரும் பணக்காரி என்பதற்காக பாலு காதலிக்கவில்லை. மனிதாபிமானவளாயிருக்கிறாள். கர்வம் என்பதே எள்ளளவு கூட இல்லாததே அவனுக்குப் பிடித்திருந்தது. பணக்காரி என்பதற்காக பகட்டாக இல்லாமல் அடக்கத்தோடு அவள் பல நல்ல காரியங்களுக்கு துணை நிற்பது பிடித்தமானதாகயிருந்தது. முதல்முதலாக சந்தித்ததே ஒரு நற்பணி மன்ற சேவையின் தேவைக்காகவே. அவள் அப்பா இருக்க வேண்டிய இடத்தில் அவள் இருந்தாள். அவன் எதிர்பார்த்ததைவிட பெரும் உதவி கிடைத்தது.
அவனுடைய நண்பர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். சுந்தரேஸவரரிடமிருந்து ஒரு பெரும் தொகை கிடைத்ததை அதிசயப்பட்டார்கள். பைசாகூட தராது ஆண்டுதோறும் அவமதித்தனுப்பும் அவருக்கு இப்படி ஒரு மகளா என வியந்தனர்.
அன்றிலிருந்துதான் சாந்தி பாலு காதல்கனி கனியத் துவங்கியிருந்தது.
பாலுவின் ஒவ்வொரு செயலுக்கும் சாந்தி துணை நின்றாள். முடிவாக பெற்றோர் சம்மதத்தோடு இருவரும் வாழ்க்கையில் இணையத் துணிந்தனர். பாலுவின் பெற்றோர் சம்மதம் சுலபமாய் கிடைத்தது.
சாந்தியும் அவளுடைய அப்பாவிடம் சொல்லியிருக்க வேண்டும்.அதுதான் அவர் நேராக வந்துவிட்டார்.
அலுவலகத்தை விட்டு வெளியே வந்தவன் மறுபடியும் அவர் காத்திருப்பதைக் கண்டான்.
“உங்கள ரொம்பநேரம் காக்க வச்சுட்டேன். மன்னிக்கணும்.”
“பரவாயில்லே நாம வெளியே போய் பேசலாமா?”
“போலாங்க”
இருவரும் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார்கள். போக்குவரத்துகள் அதிகமாகத் துவங்கியிருந்தன. தெரு முனையிலிருந்த பூங்காவிற்குள் இருந்த சிமெண்ட் பெஞ்சில் இருவரும் அமர்ந்து கொண்டார்கள்.
“தம்பி நீங்க என் பொண்ணை விரும்பறதா கேள்விப்பட்டேன். சந்தோசம் அவ ஒரே மகள்ங்கறதும் உங்களுக்குத் தெரியும் நீஙக நல்லவராக இருக்கறதாலே ஒரு உண்மையை மறைக்க விரும்பல்லே.”
“சும்மா சொல்லுங்க எதுவானாலும் தைரியமா சொல்லுங்க.”
‘ஆமா தம்பி சாந்திக்கி…”
“சொல்லுங்க சாந்திக்கு என்ன?”
“ப்ளட்கேன்சர் இருக்கு” முகமெல்லாம் வியர்க்கச் சொன்னார்.
அவர் சொன்னதைக்கேட்டு கொஞ்சமும் அதிர்ச்சி அடையாமல், “அப்படியா. மிஸ்டர் சுந்தரேஸ்வரர். நீங்க பணக்காரர்ங்கங்கற ஒரே காரணத்துக்காக உங்க பணம் பறிபோயிடுமேங்கற கவலையிலே உங்களுடைய கற்பனையை அவிழ்த்து விடுவது சரியில்லை. ஒரு நல்லாயிருக்கற பெண்ணை எதற்காக நோயாளியாக்கறீங்க. நீங்க சொல்றது முழுப்பொய்ங்கறது எனக்கு நன்றாகவே தெரியும். ஏன்னா ரெண்டு நாளைக்கு முன்னாடி எங்க நற்பணி மன்றம் ஏற்பாடு செய்திருந்த ரத்த தான முகாம்லே சாந்தியும் கலந்துகிட்டா அவளுக்கு ப்ளட்கேன்சர்ன்னா அவளுடைய ரத்தம் பயன்படாம போயிருக்கும் இதுக்கு மேலேயும் உங்ககூட பேச நா விரும்பலே.
இன்னொன்னையும் தெரிஞ்சுகங்க. நா விரும்பறது உங்க பொண் சாந்திய மட்டும்தான். உங்க பணத்தையோ அந்தஸ்த்தையோ அல்ல நீங்க விரும்பினாலும் விரும்பாட்டாலும் நாங்க திருமணம் செஞ்சுக்கப் போறது நிச்சயம்.ஏன்னா நாங்க மேஜர் யாராலும் எதுவும் செய்யமுடியாது.” என்று கூறிவிட்டு வேகமாய் நகர்ந்து போனான்.
சுந்தரேஸ்வரர் மாப்பிள்ளையாய் வருகிறவனை ஆழம் பார்க்கப் போய் தானே சிக்கிக் கொண்ட சங்கதியை வெளியே சொல்ல முடியாமல் கல்யாண ஏற்பாடுகளை செய்யப் புறப்பட்டார்.