கல்யாணப் பெண் சரோஜா




(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அடடே! என்னம்மா நீங்களே வந்திட்டீங்க” என்று திடுக்கிட்டார் வீரபத்திர ஆசாரி. “அடேய் அருணாசலம், அந்தத் தடுக்கைக் கொண்டு வந்து போடுடா இப்படி! குந்துங்கம்மா” என்று உபசரித்தார், கையிலிருந்த பச்சைக் கல் மோதிரத்தை நாய்த் தோலில் துடைத்தபடி.
சரோஜா உட்காரவில்லை. “உபசாரமெல்லாம் இருக்கட் டும். சங்கிலி எந்த மட்டில் இருக்கிறது? அதைச் சொல்லுங் கள் முதலில். உபசாரத்தையெல்லாம் அப்புறம் வாங்கிக் கொள்கிறேன்” என்றாள்.
“பொடி ஊதலீங்க இன்னும்” என்று வீரபத்திர ஆசாரி தலையைச் சொறிந்தார்.
“நீங்கள் பொடி ஊதுவதற்குள்ளே அங்கே நாயனம் ஊதிவிடுவான். கல்யாணத்துக்குச் சரியாய் ஐந்து நாள் கூட இல்லை. நீங்கள் செய்வது நியாயமாயிருக்கிறதா?”
“என்ன பண்ணட்டுங்க நான்! இதோ பாருங்க, இத்தனையும் கல்யாண வேலைதான். சீசன் பாருங்க. எப்படியும் நாளைக்குள்ளாற முடிச்சு அனுப்பிடறேன். கல்யாணப் பொண்ணு நீங்களே வந்து கேட்டப்புறம் தயக்கம் செய்யலாமுங்களா?” என்ற ஆசாரி சிரிக்க முயன்றார்.
”நாளைக்குச் சங்கிலி வரவில்லையென்றால் நான் வர மாட்டேன். மாப்பிள்ளையையே அனுப்பி வைப்பேன்’ என்று கூறிவிட்டுச் சரோஜா விடைபெற்றுக் கொண்டாள்.
‘விரட்டுகிறபடி விரட்டினால் காரியம் நடக்கிறது. அப் பாவுக்குச் சாமர்த்தியமே கிடையாது. அம்மா ஒரு இது’ என்று மனதுள் எண்ணியவாறு நடந்தபோது, “சரோஜா!” என்று தூரல் கேட்டது.
கல்யாணராமன் ரிக்ஷாவிலே வந்து கொண்டிருந்தார், தெருவின் மறு சாரியில். “வருகிறேன். இருங்கள் அப்பா’ என்று பதில் சொல்லி விட்டு, சைக்கிள்களையும், பஸ் களையும் பழக்கூடைக்காரர்களையும் விலக்கி நீந்திக் கொண்டு ரிக்ஷாவை அடைந்தாள் சரோஜா.
“ஆசாரி என்ன சொன்னார் அம்மா? எனக்கு ஒன்றுமே புரியவில்லை” என்று ரிக்ஷாவை விட்டு இறங்காமலே வினவினார் கல்யாணராமன்.
“ஒன்றும் புரிய வேண்டாம். எல்லாம் தன்னாலே வந்து சேரும். எங்கே போய்விட்டு வருகிறீர்கள் இப்போது!” என் றாள் சரோஜா. தெருவில் போவார் வருவார் தன்னுடைய களை மிகுந்த முகத்தில் வியர்வை முத்திட்டிருக்கும் அழ கைக் கண்டு தயங்கி நடப்பதைக் கவனிக்கவில்லை அவள்.
“போனேன் மண்ணாங்கட்டிக்கு!” என்று அலுத்துக் கொண்டார் கல்யாணராமன். “ரிசப்ஷனுக்கு நாற்காலிகள் ஏற்பாடு பண்ண வேண்டாமா! சங்கரன் தனக்குத் தெரிந்த பர்னிச்சர் கடைக்கு அழைத்துக் கொண்டு போவதாய்ச் சொன்னான். போய்ப் பார்த்தால் ஆளையே காணோம்.’
“சங்கர மாமாதானே! நான் ஒரு நடை போய் பார்த்து விட்டு வருகிறேன். நீங்கள் முன்னால் போங்கள்” என்று சொல்லிவிட்டு தெற்குப்புறத் தெருவில் திரும்பி நடந்தாள் சரோஜா.
சங்கரன் அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்து கொண் டிருந்தார்.அப்பா சொன்ன தகவலைத் தெரிவித்து விட்டு, “தயவு பண்ணி நீங்களே போய் ஏற்பாடு பண்ணிவிடுங்கள் மாமா. அப்பாவை எதிர்பார்க்க வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டாள்.
“அதற்கென்னம்மா? செய்கிறேன். பாவம், நீயேதான் எல்லாவற்றுக்கும் அலைய வேண்டியிருக்கிறது” என்று அனுதாபப்பட்டார் சங்கரன்.
உள்ளேயிருந்து வந்த சங்கரனின் மனைவி. “கொஞ்சம் உட்கார்ந்து விட்டுப் போயேன் சரோஜா. கல்யாணப் பெண் இப்படி அலைந்து உடம்பைக் கெடுத்துக் கொள்ளலாமா?” என்றாள் பரிவுடன்.
“இல்லை, மாமி, நான் அப்புறம் வருகிறேன்” என்று சரோஜா புறப்பட்டு விட்டாள்.
‘கல்யாணப் பெண் அலையலாமா, கல்யாணப் பெண் அலையலாமா?’ – இதே கேள்வியைத்தான் எல்லோரும் கேட்கிறார்கள்.
என்ன ஜனங்களோ! கல்யாணப் பெண் என்றால் கல்லுப் பிள்ளையார் போல் உட்கார்ந்திருக்க வேண்டும் என்று அர்த்தமா என்ன? அவள் கல்யாணப் பெண் அல்ல; வீட்டுக்குப் பெரிய பெண். மற்றவர்களுக்கு அது கல்யாண நாளாயிருக்கலாம். அவளுக்கு அது ஒரு பொறுப்பான நாள்.
வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக எல்லார் வேலை யையும் தானே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய வேண்டிய நாள்.
“என்னடி சரோஜா இப்படிப் போய் விட்டாய் எங்கேயோ!” என்று அவள் தலையைக் கண்டதுமே அம்மா முனக ஆரம்பித்து விட்டாள்.
“பத்தர் கடைக்குப் போய் விட்டு வருகிறேன் என்று சொல்லிக் கொண்டுதானே அம்மா போனேன்” என்று சரோஜா, கூடத்திலிருந்த நபரைக் கண்டதும், “ஏன் மாமா, உங்களுக்கு இப்போதுதான் வர ஒழிந்ததா! நீங்கள் இனிமேல் எப்போது மளிகை லிஸ்டு கொடுத்து எப்போது கடைக்குப் போய் வாங்கி வருவது?” என்று கடிந்து கொண்டாள்.
“அரைமணியாய் காத்துக் கொண்டிருக்கிறார். அவரைக் கவனி முதலில், எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓட வில்லை” என்று அம்மா எழுந்து கொண்டாள்.
“டிகாக்ஷன் வைத்திருக்கிறேன் மூக்கு டம்ளரில் பாலைக் கலந்து கொண்டு சாப்பிடு. எல்லாம் ஓடும்” என் றாள். அம்மா சாதாரண நாளில் முக்குபவள். நாள் கிழமை என்றால் திணறியே விடுவாள்.
சரோஜா தனது பெரிய கணக்கு நோட்டைப் பிரித்து வைத்துக் கொண்டதும் சமையற்காரர், ‘சர்க்கரை ஆறு மணங்கு” என்று ஆரம்பித்தார்.
‘ஐந்து மணங்கு போதும். காப்பி, பட்சணங்களுக்கு நாலு மணங்கு வைத்துக் கொண்டால் கூட, மணையில் வைப்பதற்கும் வருகிறவர்களுக்குக் காட்டவும் ஒரு மணங்கு இருக்கிறதே” என்று சரோஜா திருத்தம் கூறினாள்.
சமையற்காரர் சொல்லச் சொல்ல, திருத்தங்கள் குறைவு கள் கூட்டல்கள் என்று ஐந்து பக்கங்களுக்கு நோட்டு நிரம்பி விட்டது.
”அவ்வளவுதான் அம்மா…” என்று முடித்தார் சமையல்காரர்.
“கெட்டிக்கார மாமாதான். ஆனால் முந்திரிப் பருப்பை விட்டு விட்டீர்கள்” என்று சரோஜா சிரித்தாள்.
“பார்த்தாயா அம்மா! வயசாகிறது… மறதி” என்று அவ ரும் சிரித்தார்.
நோட்டுப் புத்தகத்தை மூடும் போது ‘சில்லறை ஐட் டங்கள்’ என்ற தனி ஜாபிதா கண்ணில்பட்டது. ஊரி லிருந்து வருகிற விருந்தாளிகளுக்கு என்னென்ன தேவைப் படும் என்று நினைத்து நினைத்துச் சரோஜா குறித்து வைத்த அம்சங்கள் அவை! ‘நாலு பிளாஸ்டிக் சீப்பு, ஒரு ஹேர் ஆயில் புட்டி’ என்று கடைசியாக நினைவு வந்தவற்றைக் குறித்து விட்டு, சமையற்காரரிடம் கொடுத்தாள்.
அவரை வழியனுப்புவதற்காக வாசலுக்குச் சென்ற போது, எதிர் வீட்டுச் செல்லம் ஓடி வந்தாள். தாவணியில், மார்புப் புறத்துக்குள் அவள் எதையோ மறைத்துக் கொண் டிருப்பது நன்றாய்த் தெரிந்தது.
“காட்ட மாட்டேன், காட்ட மாட்டேன்! காட்டினால் என்ன தருவாய், சொல்லு” என்று நடுத்தெருவில் குதித்தாள் செல்லம்.
“ஐயே, என்ன பெண்!” என்று எண்ணிக் கொண்ட சரோஜா “நீ எது காட்டினாலும் நான் பார்க்கத் தயாரா யில்லை! வேலை தலைக்கு மேலே கிடக்கிறது” என்று வீட்டுக்குள் திரும்பப் போனாள்.
“ஆய்! அப்படித்தான் சொல்லுவாய். இங்கே பார்” என்று தாவணி மறைப்பிலிருந்து எடுத்தாள் செல்லம்.
சரோஜா சிறிது வியப்புடன் நின்றாள். செல்லம் காட்டியது ஒரு ‘குரூப் போட்டோ’!
“உன் புருஷன் இதிலே இருக்கிறார். கண்டுபிடி பார்க் கலாம். எங்கள் அப்பாவோடு காலேஜில் எடுத்துக் கொண்டார்களாம் இதை” என்று செல்லம் படத்தை நீட்டினாள். அவள் தந்தை கல்லூரியில் ரசாயன உதவி விரி வுரையாளர்.
மேலோட்டமாக அதைப் பார்வையிட்டாள் சரோஜா. ‘அவரை’க் கண்டுபிடிக்க முடியவில்லை. பெண் பார்த்த தினத்தன்று, ஒரே நிமிட நேரம், விழியைக் காலங்குலம் D யர்த்தித் தெரிந்து வைத்துக் கொண்ட முகம் நினைவில் நிற்கவில்லை. இத்தனைக்கும் அடுத்த தெருவிலேதான் வசிக்கிறாராம். கடைக்கும் மார்க்கெட்டுக்கும் போகும் வழி தான். எத்தனையோ தடவை அவரைப் பார்த்திருக்க முடி யும். ஆனால் பார்த்ததாய் நினைவில்லை சரோஜாவுக்கு.
“ஹேய்யா… கண்டுபிடிக்க முடியவில்லையே! இதோ இவர்தான்!” என்று செல்லம் சுட்டிக்காட்டிய உருவத்தைக் கண்ணால் வாங்கி கருத்தில் பதித்துக் கொள்ளுமுன், “சரோஜா! சரோஜா!” என்று அப்பா கூச்சல் போட்டார்.
“இந்தா! எங்கேயும் போட்டு உடைத்து விடாமல் வீட் டில் கொண்டு போய் மாட்டி விடு” என்று செல்லத்தை அனுப்பி விட்டு உள்ளே விரைந்தாள் சரோஜா. பிள்ளை
கொஞ்சம் குண்டுதான். ஆனால் நேரில் பார்த்தபோது அப்ப டித் தோன்றவில்லையே!
“சதாசிவம் வந்தானோ! இவள் என்னைக் கொல்லுகி றாளே! ஆபீஸிலிருந்து ஒரு சமாசாரமும் தெரியவில்லை. ஏண்டா லீவு போட்டோம் என்றாகி விட்டது” என்று கல்யா ணராமன் தலையில் அடித்துக் கொள்ளப் போனவர், சுப காரியங்களில் அப்படிச் செய்யக் கூடாதென்று நினைத்துக் கொண்டவர் போல நிறுத்திக் கொண்டார்.
”நல்ல ஆபீஸ் அப்பா! பிராவிடென்ட் பணத்தில் கடன் மனுப் போட்டு ஒரு மாதம் ஆகப் போகிறதே! சதாசிவமும் வரவில்லை. கிதாசிவமும் வரவில்லை” என்று சரோஜா பதிலளித்தாள். சதாசிவம் அப்பாவின் கீழே வேலை பார்க் கும் இளைஞன்.
“வந்து தகவல் சொல்லுடா என்று சொல்லியிருந்தேன்” என்று ஆரம்பித்த கணவனைக் குறுக்கிட்டு, சரோஜா வின் அம்மா,”ஏன்! முகூர்த்தக் கால் வைத்த பிறகுதான் இதைப் பற்றி மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டுமா! முன்னதாய் வாங்கி வைத்துக் கொண்டால் காசு ஊசியா போய்விடும்” என்று சீறினாள்.
“சரி, இதிலே எதற்கம்மா சண்டை! ஏனப்பா, உங்கள் மானேஜர் ராயப்பேட்டையிலேதானே இருக்கிறார்? நேரே பார்த்து ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வாருங்களேன்” என் றாள் சரோஜா.
“ஐயோ, அந்த மனுஷனையா! நானா? கண்டாலே குத றியெடுத்து விடுவான் என்னை?” என்று நடுங்கினார் கல்யாணராமன்.
“அழகுதான்! என்ன பிச்சையா கேட்கிறீர்கள்! சரி, விலா சம் சொல்லுங்கள். நான் விசாரித்து விட்டு வருகிறேன்”.
“நீயா! ஊம்… வந்து…”
“பரவாயில்லை. பூதமா, பிசாசா அவர்? என்னை விழுங்கியா விடுவார்?” என்றாள் சரோஜா விடாமல்.
“சின்னத்தம்பித் தெரு. போலீஸ் ஸ்டேஷனுக்குப் பக் கத்தில்தான். ‘கோகுலம்’ என்று பங்களா வாசலில் போட்டிருக்கும். இப்போது ஆபீஸ் போயிருப்பார். பகலுக்கு மேல் போ’ என்றார் கல்யாணராமன்.
“என்ன வெட்கக்கேடோ இதெல்லாம்! அவர் சிரிக்கப் போகிறார். என்னவோ பண்ணிக் கொள்ளுங்கள் அப்பாவும், பெண்ணுமாய்! நீ உள்ளே போய் இலையைப் போட்டுக் கொண்டு உட்காரடி சரோஜா! சாப்பிட்டு விட்டுக் கொஞ்ச நேரம் படுத்துக் கொள்” என்றாள் தாய்.
சரோஜா சாப்பிட்டாள். ஆனால் வாய் சோற்றை அசை போடும்போதே, நிறைவேறாமல் பாக்கியுள்ள காரியங்களை மனம் அசை போட்டது. சாப்பாடு முடிந்த பிறகு அம்மா சொன்னபடி படுக்கவில்லை. கறிகாய் கடைக்காரன் வந் தான். மொத்தமாக ஆர்டர் கொடுக்க வேண்டியிருந்தது. கல் யாண அழைப்பிதழுக்கு ‘ப்ரூஃப்’ வந்தது. அப்பா, மூக்குக் கண்ணாடியை எங்கோ வைத்து விட்டுத் தேடிக் கொண்டி ருந்ததால் தானே படித்துக் கொடுத்தனுப்பினாள். கடையிலி ருந்து வந்த புதுப் பாத்திரங்களை சரிபார்த்த கையோடு, ஜவுளிக் கடைக்காரர் மூட்டையுடன் வந்தார். அப்படி இப் படியென்று மணி நாலாகி விட்டது.
அப்பாவிடம் சொல்லிக் கொண்டு ராயப்பேட் டைக்குப் புறப்பட்டவள் தெருவைத் தாண்டுவதற்குள், சமையல்காரர் கையில் கித்தான் பையுடன் மகா கோபமாக வருவதைக் கவனித்தாள்.
”பெரிய மோசடியாயிருக்கிறதம்மா உங்கள் மளிகைக் கடை! சாமான்களெல்லாம் வந்ததும் பிரித்து டின்னில் கொட்டினேன். கடலை மாவு பொட்டலத்தைப் பிரிக் கிறேன். ஒரேயடியாய் உளுத்து, புழுத்து, குப்பையும் செத்தையுமாக இருக்கிறது. கொண்டு போய்க் கொடுத்தால், என் கடையில் வாங்கினதாயிருக்காது என்கிறார்” என்றார் சமையல்காரர்.
“வாருங்கள் சொல்கிறேன்” என்று சரோஜா வந்த வரைத் திரும்ப அழைத்துக் கொண்டு புறப்பட்டாள்.
வாசலில் கூட்டமாக இருந்த நாலைந்து பேர்களை விலக்கி முன்னேறிக் கொண்டு, “என்ன கரீம் சாகேப்? வியா பாரம் ரொம்பப் பெருகி விட்டாற் போலேயா?” என்று குரல் கொடுத்தாள்.
குங்குமப் பூவை வெகு ஜாக்கிரதையாக ஜவ்வுக் காகி தத்தில் மடித்துக் கொண்டிருந்த கடைக்காரர் திகைப்புடன் தலை நிமிர்ந்தார். “என்ன சின்னம்மா! என்ன நடந்தது?”
“உளுத்துப் போன கடலை மாவை என் கல்யாணத்திலேதான் தள்ளி விடணும்னு காத்திருந்தீர்களா?”
“அட நம்ம வீட்டுக் கம்ப்ளைண்டு தானுங்களா அது? கொண்டாங்க சொல்றேன். வேறே எங்கே வாங்கியிருந்தீங் கன்னாலும் சரி, நான் எடுத்துக்கறேன். சரிதானே!” என்று கரீம் சாகிப் சிரித்தார்.
“அந்தப் பேச்சுதானே வேண்டாம். காலையிலே வாங் கின இருநூற்றைம்பது ரூபாய் சரக்கு மறந்து விட்டதா? இன்னும் இருநூறு ரூபாய்க்கு வாங்க வேண்டும். உங்க கடை எனக்கு மறந்து விடும்” என்று எச்சரித்து விட்டு, பஸ்ஸைப் பிடிக்க ஓடினாள் சரோஜா.
“காஷியர் கல்யாணராமனின் பெண் நான். பிராவி டெண்ட் ஃபண்டு லோன் விஷயமாய் விசாரித்து விட்டு
வரச் சொன்னார் அப்பா” என்று கூறிக் கொண்டு தன் முன்னே நிற்கும் யுவதியை ஏற இறங்கப் பார்த்தார் மானேஜர். காரிலிருந்து அப்போதுதான் இறங்கிக் கொண்டிருந்தார் அவர்.
“ஓ! கல்யாணப் பெண்ணின் தங்கையா நீ?”
“இல்லை கல்யாணப் பெண்ணேதான்!”
மானேஜர் தன்னை நிதானித்துக் கொள்ளச் சிறிது நேரம் பிடித்தது.”ஊம்… சந்தோஷம். உன்னைப் பார்த்ததில்லை. சதாசிவம் சாயந்திரம்தான் வாங்கிக் கொண்டு போயிருக் கிறான். உன் அப்பா ரொக்கமாகவே கேட்டாராமே! இந் நேரம் கிடைத்திருக்கும்” என்றார்.
“ரொம்ப நன்றி” என்று கைகுவித்து விட்டு திரும்பினாள் சரோஜா.
வாசலில் என்ன இரைச்சல்! ஏன் நாலைந்து பேரின் கூட்டம்? கல்யாணத் தரகர் வெங்கிட்டா எதற்காக கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறார்?
சரோஜா எட்டி நடந்தாள்.
“அயோக்கிய ராஸ்கல்! இவன் திமிரையெல்லாம் என் னிடமா காட்டுகிறான்? நாலு நாள் இல்லை முகூர்த்தத்துக்கு. நிறுத்துவதாமே நிறுத்துவது!” – அப்பாவின் கூச்சல்.
திக்கென்றது.
“என்னப்பா…!”
“திமிரடி, திமிர்! போக்கிரித்தனம்! பெண் பிடிக்கவில்லையாம்! உன்னை ஆசாரிக் கடையிலே பார்த்தானாம். மளிகைக் கடையில் பார்த்தானாம். வம்பு பண்ணுகிறாயாம். ஊர் சுற்றுகிறாயாம். ஆண் பிள்ளைகளுக்குச் சரியாய் வாயாடுகிறாயாம். முன்னால் தெரியாமல் போச்சாம். இப்போதுதான் மூளை வந்ததாம். பெண் வேண்டாமாம்…”
“பண நஷ்டம் எதுவும் ஆகாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று புலம்பினார் தரகர் வெங்கிட்டா.
”சரோஜா! போய்க் கையோடு சங்கரனைக் கூப்பிட்டுக் கொண்டு வா. என்னென்ன பணத்தை எப்படி எப்படி வசூல் பண்ண வேண்டுமென்று அவன்தான் சொல்வான்” என்ற கல்யாணராமன், “நீர் போமென் ஐயா! அந்த மாப்பிள்ளையைப் பற்றி இனிமேல் இங்கே பேச்சு எடுத்தீரோ நான் ரொம்பப் பொல்லாதவனாகி விடுவேன்” என்று தரகர் மீது சீறினார்.
“சங்கர மாமாவிடம் சொல்லி விட்டு அப்படியே ப்ரஸ் ஸிலேயும் சொல்லி விட்டு வருகிறேன் அப்பா! அநாவசியமாய்ப் பத்திரிகை அடித்துவிடப் போகிறார்கள்.” சரோஜா புறப்பட்டாள்.
“கல்யாணமாமே சரோஜா!” என்று விசாரித்தவர்களுக்குப் பதில் சொன்னது போய், இனி “நின்று விட்ட தாமே சரோஜா” என்று கேட்கிறவர்களுக்குப் பதில் சொல்லி யாக வேண்டும். கல்யாணத்துக்காக வாங்கியதில் எந்தெந்தப் பொருளை வைத்துக் கொள்ளலாம்? எதையெதை எங்கே திருப்பி விடலாம் என்று பார்க்க வேண்டும்…
வேலை தலைக்கு மேல் கிடக்கிறது. சரோஜா வேகமாய் நடந்தாள்.
– குடும்பக் கதைகள், முதற் பதிப்பு: 2007, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.