கரையும் நிமிடங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 6, 2025
பார்வையிட்டோர்: 2,700 
 
 

அப்போதுதான் அந்த போன் வந்தது சேஷனுக்கு.

“டேய்! என்னால ரொம்ப முடியலை! உடனே கிளம்பி வா!” அக்கா ரங்கம்மாள். உடலிலிருந்த அயர்ச்சி, குரலைத் தடுத்தது; வார்த்தைகள் தடுமாறின.

திருச்சியிலிருந்து கிளம்பி மன்னார்குடிக்குப் பக்கத்தில் இருந்த ஒரு குக் கிராமத்தில் போய்ச் சேர ரொம்ப சிரமம். அதுவும் ராத்திரி வேளை!

சேர்ந்தாச்சு! அக்கா கண்டிஷன்தான் ரொம்ப சீரியஸ்.

“ஏன் கவலைப் படறே? நான், சொர்ணம் எல்லாரும் வந்துட்டோமில்ல? பாத்துக்கறோம்”

அக்காவுக்கு குழந்தைகள் கிடையாது. அத்திம்பேர் போய் பன்னிரண்டு வருஷம் ஆச்சு. தனியாக ராஜ்ய பரிபாலனம் பண்ணிக் கொண்டு அங்கேயேதான் இருப்பேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இப்போது கோவிட்டுக்கும் தப்பி வந்த சுவாசக் கோளாறு.

எம்பளத்துஐந்து வயசில், இழுத்துக் கொண்டிருந்தாள். ஆனால், கண்ணும் காதும் கூர்மையாக தத்தம் வேலைகளை செய்து கொண்டிருந்தன.

“சொர்ணம்! செயின் எங்கே? வைரத் தோடு எங்கே?” சாடையில் கேட்டுவிட்டாள். பதிலும் சொர்ணத்தின் கண்ணீரிலிருந்து கிடைத்து விட்டது.

ஏழைக் கணவன் அதையும் விட்டு வைக்கவில்லை என்று அவள் எப்படி சொல்வாள்?

அவளால் அதிகம் இரும முடிந்தது! பேச முடியவில்லை. வழக்கமாக தைக்கும் அவளுடைய கிண்டல், கேலி எல்லாம் எங்கோ ஒளிந்து கொண்டு விட்டன. நல்ல வேளை.

ஜாடையாக அவள் சொன்னதில் புரிந்தது : “ நிறையப் பண்ணினேன்! ஆனால் ஒருத்தரும் வந்து எட்டிக் கூட பார்க்கவில்லை. நன்றி கெட்ட ஜென்மங்கள்” ஊர்க் காரர்களைச் சொன்னாள் போலும்.

அக்கம்பக்கத்தில் சொந்தக் காரர்களும் இருந்தார்கள் அந்த கிராமத்தில்.

அவர்கள் நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள் என்று சவால் விட்டதில், அக்கா மன்னார்குடியை ஹெட் குவார்டர்ஸ் ஆகத் தக்க வைத்துக் கொண்டாள். எங்களுடன் திருச்சி வர அறவே நிராகரித்து விட்டாள்.

சொத்து பத்து கிடையாத, கிடைக்காத பிராணி சேஷன். ரங்கம்மாளின் ஒரே தம்பி. அல்ப சொல்பமாய் ஏதோ ஒரு வேலையில் வயிற்றைக் கழுவி குடும்ப மானத்தைக் காயப் போட்டுக் கொண்டிருந்தான் திருச்சியில். ஒண்டுக் குடித்தனம்- ஸ்டோரில்.

“இந்த ஆத்திலதான் என் பிராணன் போகும்னு அத்திம்பேரிடம் வாக்கு குடுத்திட்டேன்! உங்காத்தில, அந்த ஸ்டோர்ல வந்து எப்படி தங்கறது? நீ இங்கே வந்து தங்கி பாத்துக்கோ. வீடு, பணவசதி, ஆள் அம்பு நிறைய கிடக்கு”

பக்கத்தில் இருந்த மருந்து சீட்டு தென்பட்டது. அத்துடன் இருந்த அன்பு ஆஸ்பிடல் ஃபைலில் கத்தை கத்தையாக ரிபோர்ட்டுகள்…..

“டாக்டர் என்ன சொன்னார்?”

முக சாடையில் அவள் மேலே கடவுள் போட்டோவைக் காண்பித்தாள். “கடவுள் தான் வழி காட்டுவார். ஈஸ்வரோ ரக்ஷது” அந்த இரவிலும் அவளுடைய மங்கி வரும் கண்களில் வழிந்த கண்ணீர் தெளிவாகத் தெரிந்தது.

சேஷனுக்குக் கண்களில் நீர் தளும்பியது. என்ன இருந்தாலும் சொந்த அக்காதானே. ரத்த பாசம் விடுமா? என்னதான் தைத்தாலும் வதைத்தாலும் அவனோ, சொர்ணமோ எப்பவும் அக்காவை விட்டுக் கொடுத்ததில்லை.

கடிகாரம் . 2.30 மணி என்று காட்டியது. நள்ளிரவையும் தாண்டியாகி விட்டது!.

எப்படி முடியும்? என்ன ஆகும்?

மனப் போரட்டத்தில் சேஷன். தூக்கமே வரத் தயாராயில்லை.

“யூ டியூப்ல விஷ்ணு சஹஸ்ர நாமம் போடுங்களேன்!” அவாளுக்கு காதுல விழுந்தா நல்லதுன்னு சொல்லுவாளே!”

சேஷன் முறைத்தான்.

“ஏன்ன்னா, காசுக்கு என்ன பண்ணுவேள்? ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டாமா?”

“ஏய்! இப்பவே என்னடி அவசரம்? இன்னும் பிராணன் இழுத்துண்டுதானே இருக்கு! முடியும் போது பாக்கலாமே!”

“சரி! யாருக்கெல்லாம் தகவல் சொல்லணுமோ சொல்லிடுங்கோ- காலம்பற வேளைல. நாளான்னிக்கு அமாவாசை! இந்த மாதிரி இருந்தா, அதுவரை தாக்குப் பிடிக்கலாம்னு சொல்லுவா! எதுக்கும் பஞ்சாங்கம் பாத்து வச்சுக்கலாம்”

“சரி! காரியத்துக்கு சீனு சாஸ்திரி வாண்டாம்! சொத்தை எழுதி வச்சாத்தான் அவருக்கு தக்ஷிணை கொடுக்க முடியும். தானத்துக்கு அவர் அம்பானி அளவு லிஸ்ட் போட்டுடுவார். அவ்ளோ காஸ்ட்லி!”

“அப்போ உங்க ஊர் கண்ணன் சாஸ்திரிக்கு சொல்லிடு! அதானி ரேட்ல முடிச்சுடலாம்!”

சொர்ணம் சும்மா ஆனாள்.

“ஏன்னா! கொஞ்சம் அக்காவிடம் கேட்டு கையெழுத்து வாங்கி வச்சுக்கங்கோ! பேங்க் பணம், லாக்கர், சொத்து டாகுமென்ட் இத்யாதி! நாளைக்கு யாருக்குமில்லாம வேத்து மனுஷன் கைல போயிடும்! நம்ம ரெண்டு

பசங்களும் கொஞ்சமாவது முன்னேற வாண்டாமா?” சொர்ணம் சொரூபத்தைக் காட்டினாள்.

“ஏன்னடி! முடிவே கட்டிட்டியா?”

“அப்போ சமையலுக்கு….” சொர்ணம் ஆரம்பித்தாள்.

சேஷன் சினந்தான்.

“நாமதான் எல்லாத்துக்கும் பொறுப்பா செய்யணும்னு நீங்க சொல்வேளே?”

“வெறுப்பா இருக்கு! இந்த நிலமைல”

பல்லிகள் ஆங்காங்கே தங்கள் பாஷைகளில் டிக் டிக் சொல்லிக் கொண்டிருந்த வேளையில் அனைவரும் கண்ணயர்ந்தனர்.


சொர்ணம் சொல்லிவந்த அமாவாசை தாண்டி இரண்டு நாட்களானது.

அந்த கிராமமே அல்லோலகல்லோலப் பட்டது- ஒரு அதிகாலையில்!

ஊரில் செய்தி பரவியது தீயென!

பெண்கள் கோலம் போடுவதை நிறுத்திவிட்டு ரங்கம்மாள் வீட்டை நோக்கிப் புறப்படத் தயாராயினர்.

சீனு சாஸ்திரி தானே முன்வந்து அப்பாயின்ட்மென்ட் செய்து கொண்டு அவருடைய ஆட்களுக்கு உத்தரவுகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஊர்ப் பஞ்சாயத்து லெவலில் குழுமி சில விஷயங்களைப் பேசிக் கொண்டும் விவாதித்துக் கொண்டும் இருந்தனர். சட்ட பூர்வமான சில தாள்கள் உருவாக்கப் பட்டன.

ஏற்பாடுகள் அனைத்தும் ஓவர்!

வீட்டுக்கு வெளியே கூடியிருந்த சிலர்,

“யாராவது வராளா?”

“சேஷன் பசங்க ரெண்டு பேரும் பைக்ல வந்துண்டு இருக்காங்க”

“பாவம்! ரொம்ப வருத்தமாயிருக்கு!”

“அக்கா ரொம்பப் பாவம்!”

“என்னதான் இருந்தாலும், இது பெரிய இழப்புதான்”

கீழே தரையில் புரண்டு அழுது அரற்றிக் கொண்டிருந்தாள் சொர்ணம்.

“அக்காவைப் பாத்துக்கன்னு வந்தவன் இப்படி போவான்னு யார் நினைச்சிருக்க முடியும்?” சீனு சாஸ்திரிகள் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார்.

“பசங்க வந்தது ஆரம்பிச்சுடலாமே!”

ஹாலின் நடுவில் கையில் வாக்கரைப் பிடித்துக் கொண்டு, தலைவிரி கோலமாக நின்றிருந்தாள் ரங்கம்மாள்.

ஏற்றிய விளக்கின் நுனியில் ஏதையும் லட்சியம் செய்யாமல் தரையில் கிடந்தது சேஷனின் உயிரற்ற உடல்!

என்.சந்திரசேகரன் சந்திரசேகரன் (நரசிம்மன்) அவர்கள் புகழ்பெற்ற தென்னிந்திய இந்து பிராமண வழக்கறிஞர்கள் குடும்பத்தில் அரியலூரில் பிறந்தார். மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம்(1976) பெற்று சமூக விஞ்ஞானி ஆவதற்குத் தொடர்ந்தார். கல்லூரியின் சிறந்த ஆல்ரவுண்ட் மாணவருக்கான டாக்டர்.எம்.நஞ்சுண்டராவ் தங்கப் பதக்கம் வென்றார். பார்வை: நான் என்னை ஒரு தலைவர், வழிகாட்டி, ஆலோசகர், வழி கண்டுபிடிப்பாளர், பிரச்சனை தீர்வு காண்பவர், பேச்சுவார்த்தை நடத்துபவர், ஆராய்ச்சியாளர், பொருளாதார…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *