கருச்சிதைவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 30, 2025
பார்வையிட்டோர்: 149 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஏழு மணியிருக்கும். போன் அடித்தது.

உறவினர் மகள் தர்மினி தான்….

மாமா! செய்தி கேட்டியளே…

‘இல்லை’ என்றான் சுந்தரேசன்

‘உங்கள் மருமகள் கிருத்திகாவுக்கு அபோர்ஷனாம்’

திகைப்பு ஏற்படவில்லை.

‘அப்படியா’ என்றான் அமைதியாக…

தர்மினிக்கும் சுந்தரேசன் அமைதியாக ஒற்றைச் சொல்லில் பதில்தந்தது ஏமாற்றமாக இருந்தாலும் எதிர்பார்த்ததுதான்.

சுந்தரேசன் தன் மூன்று தங்கைகளின் வாழ்விற்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்தவன். பெற்றோர்கள்கூடித்தான் தங்கைக்கும் திருமணம் நடந்தது. சுந்தரேசனின் தகப்பனும் ‘மூத்தபெண்பிள்ளை’ என்று கூடிவந்த சம்மந்தத்தை சந்தோஷமாக ஏற்று… தன் சக்திக்கு மீறியதாக நடாத்தி முடித்தார். தனிமையாக தன் இயலாமையை எண்ணி சுந்தரேசனின் தகப்பன் அழுததை இப்போது நினைத்தாலும் வலித்தது. ஊரார் மெய்ச்சினர்.. நல்ல மருமகன்…ரஜனிகாந் மாதிரி….

சுந்தரேசனின் தந்தையார் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் கடமைபுரிந்து இளைப்பாறிய போது கிடைத்த பணத்துடன் சிங்கராயர் வளவில் இருந்த நாலு பரப்புக் காணியையும் விற்று இராப்பகலாக மிகவும் சிரமப்பட்டுக் கட்டிய இருந்த வீட்டையும் சீவிய உருத்து வைக்காமல் கேட்டபோது மறுவார்த்தை பேசாமல் திருமணத்தைச் செய்து வைத்தாலும்.. மற்ற இரண்டு குமர்களும் தயாராய் நிற்பதைக் காணும் போதெல்லாம் அவருக்குக் கண்ணீர் வரும்.

தந்தையின் அழுகை….அடிக்கடி தொட்டதற்கெல்லாம் மாமனார் வீட்டை எதிர்பார்த்தபடி நிற்கும் மருமகன்….. கிருத்திகாவும் பிறந்த பின்னர்… எல்லாமே தாய்மாமன் பார்க்க வேண்டும் என்ற தோரணையில். அப்பாவும் பாவம்…. வரும் மாப்பிள்ளை நல்லாயிருந்தால்…. உதவியாக இருக்கும் என நம்பியவருக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. பெண்பிள்ளையைப் பெற்றவர்களெல்லாம் கூனிக் குறுகிப் போகவேணுமா?….

காலம் கரைந்தன. தங்கையின் மகள் கிருத்திகாவும் வளர்ந்தாள். சாமத்தியச் சடங்கும் தடபுடலாய் தாய் மாமனாக சுந்தரேசன் தான் நடாத்தி முடித்தான். இப்படி எத்தனை நாளைக்கு தாய்மாமனாய் நடந்து கொள்ளப் போகிறீர்கள் சுந்தரேசனின் மனைவி கேட்காமலில்லை.

பார்ப்போம்… பிரச்சினை செய்ய வேண்டாம். முதலியார் வளவு மாமாவின் குடும்பம்… எப்படிப்பட்ட குடும்பம்.. இப்ப இப்படி எண்டு சனம் சொல்லக்கூடாது.’ என்பதில் கவனமாக இருந்தான்.

நான் மனைவிக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுத்திருக்கிறேன். அவளும் எவ்வளவு தூரம் எனக்காக விட்டுத்தந்திருக்கிறாள். திருமணமாகிய பின்பும் என் அம்மா அப்பா சகோதரர் என்று காசு அனுப்பவும் வழிவிட்டிருந்தாள் தானே. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போவதுதானே வாழ்க்கை. அத்துடன் அன்பாகவும் இருந்தால் தான் அது ஒரு நல்ல குடும்பத்திற்கு அழகு. அப்பதானே தாம்பத்தியமும் சிறப்பாக இருக்கும். ஆனால் உந்தச் சனம் ஏன் மாறுதில்லை. சுந்தரேசன் அலுத்துக் கொண்டபடி கட்டிலுக்குச் சென்று சரிந்தபடி நினைவுகளை மீட்டிப்பார்த்தான்.

மூன்று சகோதரிகளுக்கும் திருமணம் முடிந்த பின்பும் வீட்டிற்கு வந்த மருமக்களின் சுரண்டல்கள் போட்டி போட்டுக்கொண்டு தொடர்ந்தன… ஒற்றுமையாக சகோதரங்கள் இருக்க வேண்டும் என்பதற்காகவே தனது பெரிய முதலியார் வளவுக் காணியை பிள்ளைகளுக்கு சமமாகப் பிரித்து வீடுகளும் அருகருகாகக் கட்டிச் சீதனமாக கொடுத்தார். வயதுபோக அப்பாவின் இயலாமை… ஆஸ்த்துமா நோயின் கொடூரம்… ஏனைய நோய்களும் கூட்டுச் சேர்ந்துகொள்ள அம்மாவும் மனதளவில் நோயாளியாகிவிட்டாள். அதைவிட மருமகன்களின் தொல்லை சுந்தரேசனின் திருமணத்தில் ஒருவரும் அக்கறைப்படாததால் அதைப்பற்றி மற்றவர்களோடு கதைக்கவும் முடியாமல் சிரமப்பட்டாள். சுந்தரேசனின் உழைப்பை உறிஞ்சுபவர்களுக்கு அவனது திருமணமும் தள்ளிப் போவது சந்தோஷமே. பின்பு ஒருவாறு முதிர் கன்னிபோல் திருமணம் முடிந்தாலும் குடும்பத்தை அளவுக்கதிகமாகச் சுமந்ததாலோ என்னவோ திரு மணத்தின் பின்பும் பாதிக்கதிகமாகச் சுந்தரேசன் சுமக்கவே செய்தான். இலங்கையின் வடபகுதி நாட்டுநிலைமை காரணமாக தன் நாட்டையும் தந்தை தாயையும் விட்டு பொருளாதார அகதியாக புலம் பெயரவேண்டிய கட்டாயத்தால் லண்டனுக்கு குடும்பத்துடன் புலம்பெயர்ந்தான்.

தந்தையார் கூறுவது போல் ‘பாம்பு தின்னும் ஊரில் நடுமுறி எனக்கு’ என்று சுந்தரேசனும் பாம்பு தின்று பழக்கப் பட்டவன்போல நடித்து வாழப்பழக வேண்டிய சூழ்நிலை. தன்மானத்தை இழந்து ஒரு வேலை. குளிர் நாட்டிற்கு ஏற்றது போன்ற பழக்கப்படாத உடைகளையும் சுமந்தபடி காசு மரமானான்…!!! சரியான தூக்கம் என்பது மறந்தேவிட்டது. சந்தோஷமான உணவு கிடையவே கிடையாது. குளிரில் கைவெடிக்க நாரிப்பிடிப்புடன் நிலக்கீழ் புகையிரதத்தில் (ரியூப்பில்) வேலை வேலை என அலைந்தான். கடைசியில் காசு மரத்தில் காசும் மிஞ்சவில்லை. கிரடிட்கா….லோன் வட்டிக்குக் கடன் சுமைக்கு மேல் சுமை ஈற்றில் இருதயநோயாளி இது மட்டும் அவன் சொந்த சின்னக் குடும்பத்திற்கு மாத்திரம். பலன் அனுபவித்தவர்கள் பாவம் என ஒதுக்கிவிட்டதுமல்லாமல் முடிவில் பெரிய ஞானிபோல் அவர்களுக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என ஒரு அருள் வாக்கு.

சுந்தரேசனுக்கு கடைசியில் ஞானம் வந்தபோது தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது. இனி சாண் போனால் என்ன முழம் போனால் என்ன? படைச்சவன் படி அளப்பான் தானே பொறுமையில் அப்படி ஒரு பொறுமை.

அப்பா கிணறு வெட்டி மோட்டர் போட்டுத் தருவதாக திருமணத்தின் முன்பு கூறியதாக ஒரு தங்கையின் கணவர். அந்த வேலையும் செய்யச் சொல்லி பணம் உண்டியலில் பறந்தது. வருத்தக்காரியைக் கட்டிப் பேய்க்காட்டியதுமல்லாமல் வீட்கட்டித் தரவில்லை என இன்னொரு தங்கையின் கணவர். வீடு கட்டச் சொல்லி அதற்குப் பெறுமதியாக காணி அப்பா கொடுத்தது தெரிந்தும் பரவாயில்லை அந்தத் தங்கை நல்லாக இருந்தால் சரி என்று வீடும் கட்டிக் கொடுத்தாகிவிட்டது. பின்பு கடை போட என பணமும் கொடுத்தாகிவிட்டது.

மூத்த தங்கையின் கணவர் எல்லோரும் வெளிநாடு போய் நல்லாயிருக்கிறான்கள் நாங்கள் போனால் நல்லாய் வந்திடுவம் என்ற எரிச்சலில் உன்ரை அண்ணை காசுதர மாட்டாரோ என திட்டுகிறார் என்று கண்ணைக் கசக்கிய தங்கைக்கும் ஆறுதல் கூறி அவரை தான்போகமுன்பு வெளிநாடு அனுப்பியும் சுவரில் எறிந்த பந்தாக ஒவ்வொரு நாடாகச் சென்று திரும்பிவிடுவார். வந்தால் சண்டைதான். முடிவில் தங்கையிடம் இதுதான் கடைசித்தடவையாக என்னால் பணம் கட்டுவது என்று சுந்தரேசன் கடுமையாகச் சொல்லிவிட இறுதியாக லண்டன் சென்றார். அங்கும் விசாவில்லை அதனால் காசு அனுப்பமுடியாது என ஒதுங்கிவிட அந்தத் தங்கையின் குடும்பத்தையும் அப்பா அம்மாவுடன் சேர்த்துச் சுமந்தான் சுந்தரேசன். அந்தத் தங்கையின் மகள்தான் கிருத்திகா. அவளுக்கு இரண்டு தம்பிகள். தந்தையின் பாசம் கிடைக்காததால் மாமா அம்மப்பா அம்மம்மாவில்தான் அவர்களுக்கும் பிரியம் அதிகம். சுந்தரேசனுக்கும் அப்படியே. தன் மூத்த பிள்ளை கிருத்திகா என அடிக்கடி கூறிக்கொள்வான். அன்பும் மற்ற மருமக்களைவிட அதிகமே.

இதனால் எல்லோரும் வெளிநாட்டில் இருந்து ஆயிரக் கணக்கில் காசு அனுப்பும்போது சுந்தரேசன் மட்டும் இலட்சக்கணக்கில் காசு அனுப்பினான். அண்ணாவாக இருந்தும் சுந்தரேசனுக்கு வயது கடந்த பின்பு திருமணமாகியதாலும் தங்கையாக இருந்தாலும் உரியகாலத்தில் திருமணமாகியதால் சுந்தரேசனின் மூத்த மகளுக்கு ஒரு வயதாகும் முன்னரே தங்கை மகள் கிருத்திகாவுக்குச் சாமர்த்தியச் சடங்கு முடிந்துவிட்டது. வரிசையாக ஏனைய தங்கைகளின் மகள்மாருக்கும் நடந்தேறியது சுந்தரேசனின் செலவில்..ாய்மாமன் என்ற போர்வையில்….

காலப்போக்கில் சுந்தரேசனின் தந்தையார் காலமாகியதும் நாட்டு நிலைமை, விசா கிடைக்காத காரணங்களால் தமிழருக்குக் கிடைத்த இன்னொரு சாபக்கேட்டையும் மரணவீடுக்கும் போகமுடியாது வேதனைப்பட்டு அனுபவித்துத் தீர்த்தான். ஈற்றில் தனக்குப் பிறந்த இரண்டாவது பிள்ளையான மகனில் தந்தையை பார்த்து ஓரளவுக்காவது ஆறுதல் பட்டதும் உண்டு. அப்போதெல்லாம் கடவுளும் சின்னசின்ன ஆறுதல் படுத்துவதால் தான் மனிதன் இன்னும் நம்பிக்கையுடன் உயிர் வாழ்கிறான் என நினைத்துக் கொள்வான்.

தந்தையின் மரணவீடு…அந்தியட்டி… ஆண்டுத் திவசம் என நாட்களும் நகர தங்கையுடன் இருந்த அம்மாவும் நோயாளியானாள். பல வருடமாகச் சுந்தரேசனைப் பார்க்கவில்லை என்ற கவலை அவளுக்கு. மகன் வயிற்றுப் பேரப் பிள்ளைகளைப் பார்க்கும் ஆர்வம் கூடவே.

கிருத்திகாவும் திருமணவயதை அடைந்தாள். சுந்தரேசனும் மாப்பிள்ளை தேடும் படலத்தை ஆரம்பித்தான். திருமண விளம்பரங்கள் மூலமும் தேடிக்கொண்டிருக்கும் வேளையில் தங்கையின் தொலைபேசி வந்தது. தனது கணவருக்கு தன் அக்காவின் மகனைச்செய்வதுதான் இஸ்டமாம் அல்லாவிட்டால் தான் ஒதுங்கி விடுவாராம். சுந்தரேசன் தனக்குள் சிரித்துக் கொண்டான். இதுவரை பெயரளவில் மாப்பிள்ளையாக இருந்தவர் குடும்பத்தில் எந்த ஒரு பொறுப்பும் எடுக்காதவர் ஏறக்குறைய தன் தங்கை திருமணமாகியும் வாழாவெட்டியாக வாழ்ந்து கொண்டிருக்கும் போதும் முடிவெடுப்பது தானே என்ற வழமையான வெருட்டலுடன் வருவது சுந்தரேசனுக்குப் பிடிக்கவில்லை.

தங்கை மாதிரியில்லாமல் கிருத்திகா ஆவது நல்லாயிருக்க வேண்டும் என்ற மனப்பான்மையில் மறுத்து முடிவைப் பரிசீலிக்கும்படி வற்புறுத்தினான். அப்பாவை எவ்வளவு கவலைப் படுத்தினார்கள். கடைசியில் உங்களையும் நல்லா வைத்திருக்க வில்லை அந்தக் குடும்பத்தில் போனால் கிருத்திகாவும் கஸ்டப்படவேண்டும். இனியும் பணிந்துகொண்டேயிருக்க என்னால் முடியாது. முடிவு சந்தரேசனின் கருத்து எடுபடவில்லை. இரத்த அழுத்தம் யோசித்தமையால் அதிகரித்ததுதான் மிச்சம்.

இந்தியாவில் திருமணம். கிருத்திகாவுக்கும் அதீக விருப்பமாம். சிறு வயதிலேயே பகிடி பண்ணுவதால் மனதளவில் ஆசையை வளர்த்து விட்டாளாம். அந்தப்பக்கம் சுந்தரேசனுக்குப் புரியவில்லை. பொறுப்புகளைச் சுமந்தமையாலோ அல்லது அவர்களின் குணம் புரிந்தமையால் தீர்க்கதரிசனமாக முடிவெடுத்ததாகவும் இருக்கலாம். தங்கைக்கும் கிருத்திகா வுக்கும் லண்டன் மாப்பிள்ளை அப்பாவுடன் இனியாவது குடும்பம் சேரலாம். மாமாவும் அங்கிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. ஏற்கனவே தெரிந்த மச்சான். அழகும்கூட அத்துடன் கிருத்திகாவின் தம்பிகளையும் தான் பார்த்துக் கொள்வதாகவும் சீதனம் வேண்டாம் திருமணச்செலவைமட்டும் சுந்தரேசன் பொறுப்பெடுத்தால் சரி. தங்கை குடும்பத்தினர் வானத்தில் பறந்தனர். இந்த சந்தோஷத்தால் சுந்தரேசனையும் தாயையும் ஏனைய இரு தங்கை குடும்பத்தவரையும் மதியாமல் பல சமயங்களில் புறக்கணித்தனர். சுந்தரேசன் குடும்பத்தவர் இந்த விடயத்தில் கூடியளவில் ஒதுங்கினர்.

அதனையும்விட தனது உறவினர் மூலம் சுந்தரேசன் அறிந்த செய்தி மனதை நெருடியது. கூடவே யோசிக்கவும் வைத்தது. கிருத்திகா மணம் முடிக்க தீர்மானிக்கும் தங்கை கணவரின் அக்கா மகன் நிரோஜன் ஏற்கனவே ஒரு பெண்ணைக் காதலித்ததாவும் அந்தப் பெண் அழகாயிருந்தும் ஏழை என்பதால் நிரோஜனின் தாயாரால் புறக்கணிக் கப்பட்டுவிட்டதாகவும் அறிந்தான்.

நிரோஜன் வீட்டில் பெண் சகோதரிகளோ பணக்கஸ்டமோ பெரிதாக இல்லை. அப்படி இருந்தும் அவர்களுக்கு சீதனத்தில்தான் குறியாக இருந்தமையால் சுந்தரேசனின் தந்தையால் சீதனமாக கொடுத்த வீடு யாழ்ப்பாணத்தில் மெயின்ரோட்டில் உள்ளதால் நல்ல விலைக்குப் போகும் என்பதால் அதில் கண் வைத்துவிட்டனர். எப்படியும் ஒரு பெண் பிள்ளையாகிய கிருத்திகாவுக்குத்தான் அந்த வீடு கொடுப்பார்கள். அத்துடன் தாய் மாமனான சுந்தரேசனிடம் தனது தம்பியாரை வைத்துக் கறந்ததுபோல் சீதனக்காசாகவும் நிறையக் கறக்க வேண்டும் என தீர்மானித்தனர். முதலில் தங்கையையும் கிருத்திகாவையும் கைக்குள் போட்டனர். அவர்களும் நிரோஜன் முதலில் இன்னொரு பெண்ணைக் காதலிப்பது தெரிந்தும் தலையாட்டி விட்டனர். தங்கைக்கு அது வயதுக் கோளாறு என்று புரியவைக்கப் பட்டதாக சுந்தரேசன் அறிந்தான்.

சுந்தரேசன் அனுப்பும் பணத்தில் இருந்து கிருத்திகாவுக்கென நகைகள் ஏற்கனவே செய்யப்பட்டன. மரகதப்பதக்கம்… அட்டிய… ஆரம்…முத்துச்சங்கிலி… வளையல்கள் என பெண்ணுக்குத் தேவையான திருமண நகைகள் தயாராக இருப்பதை அறிந்தும் அறியாததுபோல் கிருத்திகாவிடமும் தங்கையிடமும் நகை வேண்ட வேண்டும். இருக்கும் நகையுடன் சிங்கப்பூர் நகைகளாக வாங்கிவிட்டால் நெடுக பாவிக்கலாம். தனது மகனிடம் சுந்தரேசன் காசை லண்டனில் கொடுத்தால் நல்லம். நிரோஜன் நன்றாக செலக்ட் பண்ணிவிடுவான். சுந்தரேசன் பாவம். வேலையுடன் அலையத் தேவையில்லை. என்ன பெருந்தன்மை. இத்தனைக்கும் தனது தம்பியான கிருத்திகாவின் அப்பாவிடம் காசு கேட்கச் சொல்லவில்லை. இடையிடையே கிருத்திகாவின் அப்பா வருத்தக்காரன் அவனுக்கு குளிருக்குள் வேலைக்கு போக முடியாமல் நாரிப்பிடிப்பால் கஸ்டப்படுகிறானாம். முடிந்தால் சுந்தரேசனிடம் உதவிய செய்யச்சொல்லும் படி உத்தரவுகளும் போடப்பட்டது.

அன்று தலைசுற்றுவதாக கூறி சுந்தரேசன் படுத்திருந்தான். அப்போது நிரோஜனின் தம்பியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்திருந்தது. சுந்தரேசனின் மனைவி தொபேசியை எடுத்தபோது கிருத்திகாவின் திருமண நகைக்கும் இந்தியாவில் நடக்கும் திருமணத்திற்கும் செலவு காசு தந்தால் போதும் என்று பெருந்தன்மையாக கதைத்துவிட்டு இரண்டாயிரம் பவுன்ஸ் நகைக்கு மட்டும் ஆயத்தப்படுத்தும் படி கேட்டுக்கொண்டான். அவர்களைப்பற்றி ஏற்கனவே சுந்தரேசன் மூலம் அறிந்தமையால் உடனடியாகவே நீர் சின்னப்பின்னை ஏற்கனவே அதற்குரிய பணம் அனுப்பப்பட்டு நகையும் கிருத்திகாவுக்குப் பிடித்தமாதிரி செய்தாகிவிட்டது. கிருத்திகாதான் நகை போடப் போகின்றா ஆகவே நீரும் நிரோஜனும் ஏனைய வேலைகளைக் கவனிக்கும் படி அவர்கள் பாஷையிலே தந்திரமாகவும் நகைச்சுவையாகவும் பதில் கொடுத்து வைத்து விட்டாள். இதனைக் கேட்டுக் கொண்டு படுத்திருந்த சுந்தரேசனுக்குக் கோபம் வந்துவிட்டது. குட்டக்குட்ட குனியமுடியாது என்ற முடிவுடன் எழுந்து கீழே வந்தான்.

சுந்தரேசன் தங்கைக்காகவும் கிருத்திகாவின் மேலுள்ள அன்பினாலும் சரி இன்னும் இரண்டு இலட்சம் அனுப்பினால் போதும் கிருத்திகாவின் திருமணம் முடிந்தால் அம்மாவை எப்படியும் என்னுடன் அழைத்து வைத்திருக்க வேண்டும். இது வரை தனது குடும்பத்திற்கு என எதுவும் செய்யவில்லை. அதன் பின்பாவது நிம்மதியாக இருக்கலாம் எனப்பலவாறு சிந்தித்த வண்ணம் ஷோபாவில் அமர்ந்தான்.

அடுத்த நாள் இந்தியாவிற்கு திருமணத்திற்காக செல்வதற்கான விசா ஆயத்தங்களைச் செய்ய கொழும்புக்கு வந்திருந்த தங்கையோடு தொலைபேசியில் கதைத்து திருமணச் செலவுக்கான பணத்தையும் அனுப்பி வைத்தான். தன்னால் திருமணத்திற்கு இந்தியா வரமுடியாததையும் கூறி விட்டான். தங்கைக்கு அவனின் பணநெருக்கடியோ கஸ்டமோ விளங்கியிருந்தால் இந்தியாவில் திருமணம் செய்யவோ அல்லது அந்தத் திருமணத்தையோ தற்போது நடாத்தவோ யோசித் திருக்கலாம். ஆனால் சுந்தரேசன் மாதிரி அண்ணாக்கள் இருக்கும் மட்டும் தங்கைகள் எங்கே யோசிக்கப் போகிறார்கள்.

மறுநாள் வேலைக்குப் போகவென சுந்தரேசன் அவசரமாக வெளிக்கிடும் போது மீண்டும் நிரோஜனின் தம்பி தொலைபேசியில்… இம்முறை சுந்தரேசன் தான்போனை எடுத்தான். அவன் நேரடியாக விடயத்திற்கு வந்தான். மாமா இந்தியாவிற்கு நாங்கள் லண்டனில் இருந்து போகவும் ஊரில் இருந்து எனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இந்தியா செல்லவும் அங்கு தங்கும் ஹொட்டல் செலவு உட்பட திருமணச்செலவும் சேர்த்து நாற்பத்து ஐந்து இலட்சம் வரும். முதலே கணக்குச் சொல்லிவிடும்படி அம்மா கூறியதாகவும் ஆணித்தரமாகவும் நிதானமாகவும் கூறிக்கொண்டே போனான். சுந்தரேசனுக்கு தலைக்கு மேல் கோபம் வந்து விட்டது. ‘நீர் யார் என்னுடன் சீதனத்தைப் பற்றி கதைக்க ஒன்றில் உமது அம்மா என்னுடன் கதைக்க வேண்டும். அல்லது வேறு பெரியவர்கள் கதைக்க வேண்டும். தயவு செய்து போனை வைக்கவும் ரோங் நம்பர்…’ என்று சற்றுக் கடுமையாகக் கூறி போனை அடித்து வைத்தே விட்டான். அது வரைஅவன் அப்படி முகம் சிவக்க கோபப்பட்டு பார்த்திராத மனைவி பிள்ளைகள் பயந்தே விட்டானர். சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்பார்களே. அது இதுதான் போலும்….இத்தனைக்கும் கிருத்திகாவின் அப்பா தனக்கும் கிருத்திகாவின் திருமணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லாதவர் போல் எந்தப் பொறுப்பும் எடுக்கவும் இல்லை. தூண்டி விட்டுவிட்டு ஒதுங்கிக் கொண்டார் வழமைபோல்….

இந்தியாவிற்கு திருமணத்திற்கு சுந்தரேசன் வரவில்லை என்பதையும் அதனால் அங்கு காசு உரிக்க முடியாமையையும் செலவு என்ற போர்வையில் நாற்பத்தைந்து இலட்சம் கறக்க முடியவில்லை என்ற ஆதங்கத்தையும் வேறுவழியில் கறந்துவிடத் தீர்மானித்தனர். சீதனம் வேண்டாம் என்றவர்கள் எமக்காக இல்லை வேறுநல்ல பெண்கள் நிறைய சீதனத்துடன் வந்தும் நிரோஜனின் அப்பா கவலைப்படக் கூடாது என்று என்பதற்காக என்ற போர்வையில் வீட்டையும் தம்பிமாருக்கு என வைத்திருந்த காணியையும் சேர்த்து இந்தியா போகமுன் எழுதி வாங்கினார்கள். ரொக்கமாகத்தர வேண்டும் என்பதால் சுந்தரேசன் மற்ற இரு தங்கைகளுக்கு அனுப்பி வங்கியில் இருந்த பணத்துடன் வட்டிக்கு கடன் வாங்கி தென்னம்பிள்ளைக் காணியை விற்று என ரொக்கமாகவும் பணம்கைமாறியது. வேண்டக் கூடிய இரத்த உறவுகளிடமும் கிருத்திகாவின் திருமணம் முடிந்தால் காணும் என பல்லுக்காட்டியாகி விட்டது. இவ்வளவும் சுந்தரேசனுக்குத் தெரியாது.

திருமணத்திற்காக மகள்பட்ட பாட்டையும் அவரசப்பட்டு எல்லாரையும் பகைத்துக் கடைசியில் கிருத்திகாவின் வாழ்க்கையும் வீணாகப் போவதை அனுபவத்தால் உணர்ந்த சுந்தரேசனின் தாயார் படுக்கையில் விழுந்து அப்படியே இறந்தார். சுந்தரேசனின் பெற்ற தாய்க்கு கொள்ளிவைக்க கடவுள் மன மிரங்கினார். இருந்தும் தன்னோடு தாயாரை வைக்திருக்க முடியாமல் போனதற்கும் தன் பிள்ளைகளைப் பார்க்காமல் தாயார் போய்விட்டதாலும் நிரோஜன் குடும்பத்தின் மேல் சுந்தரேசனுக்கு ஆத்திரம் அதிகமாகியது.

கிருத்திகாவும் திருமணம் முடிந்து லண்டனும் வந்தாகிவிட்டது. நிரோஜனுக்கு தாம் கேட்ட பணம் சுந்தரேசன் தரவில்லை என்பதால் கிருத்திகாவை சுந்தரேசனிடம் அழைத்துச் செல்வில்லை. தொடர் வேதனைகளால் சுந்தரேசனும் இருதய நோய் காரணமாக உயிர் போக இருந்தும் கடவுள் கிருபையால் சத்திர சிகிச்சையின் பின்பு காப்பாற்றப்பட்டான். அப்பவும் கூட கிருத்திகாவை சுந்தரேசனைப் பார்க்க நிரோஜனால் அனுமதிக்கப்படவில்லை.

கிருத்திகாவும் லண்டனில் வேலைக்குப் போவதாகக் கேள்விப்பட்டனர். நிரோஜன் சரியான கஞ்சத்தனம் என்றும் சாப்பாட்டுச் சாமான்கள் வாங்கவே யோசித்துத்தான் செலவுசெய்வானாம். கிருத்திகாவின் சம்பளப் பணத்தையே உடனே வாங்கிவிடுவானாம் மற்றப்படி தொடர்பு இல்லை. லண்டனில் வீடு வாங்க வேண்டும் ஆகவே பணவரவு தடைப்பட்டு விடும் என்பதால் குழந்தை பெறுவதையும் நிரோஜன் இரண்டு வருடங்களாகத் தள்ளிப் போட்டதும் தற்போது கிருத்திகா ஐந்து மாதமாக கர்ப்பமாக இருப்பதாகவும் ஸ்கானிங்கில் அதுவும் பெண்குழந்தை என்பதை அறிந்ததும் கிருத்திகாவைத் தள்ளிவிட்டிருக்கிறான். அப்போது கீழே விழுந்து வயிற்றில் அடிபட்டதால் கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டதாம். இதனைக் கூட கிருத்திகாவின் தந்தைக்குக் கூட அறிவிக்கவில்லையாம்.

யாரோ உறவினர் மூலம் கிருத்திகா வைத்தியசாலையில் இருப்பதையறிந்த கிருத்திகாவின் தந்தை அங்கு சென்று பார்த்தபோது, திலீபன் உண்ணாவிரதம் இருந்த கடைசி நாட்களில் தோற்றமளித்தது போல் மெலிந்து கிருத்திகா காணப்பட்ட தாகவும் கொழும்பில் இருந்த தங்கை மூலம் அறிந்து கொண்டான் சுந்தரேசன். அப்போது சிட்டுப்போல யாழ்ப்பாணத்தில் அழகாக சைக்கிளில் பறந்து திரிந்த கிருத்திகாவை நினைவுபடுத்திப் பார்த்தான் சுந்தரேசன்.

சுந்தரேசன் எழுந்து துவாயை எடுத்துக் கொண்டு முகம் கழுவி முகத்தை அழுத்தித் துடைத்தான். ‘உவன் பொம்பிளைப் பிள்ளை என்பதால் நசிச்சுகிசுச்சுப் போட்டானோ?’ சீ அப்டிபிடிஇருக்காது குழந்தை யெண்டால் ஆருக்கும் விருப்பம்தானே. குழந்தை என்றால் பெண் என்ன? ஆண் என்ன? ஆனால் மூத்த வாரிசு பெண் என்றால் அங்கை தானே பிரச்சினை? தங்கையின் கணவரும் கிருத்திகா பிறந்ததும் பிரச்சினை எடுத்தவர் தானே? அவன் தலைமுறையில் மூத்ததுகள் எல்லாம் ஆண் பிள்ளை தானே? சீ சீ ஏன் தப்புத்தப்பாய் மனது நினைக்கத் தோன்றுகிறது?

தங்கை அவசரப்பட்டு திருமணம் செய்து விட்டுத் தற்போது அண்ணாவின் சொல் கேட்காமல் போனோமே என்று கவலைப்படுவது தெரிந்தும் சுந்தரேசன் அலட்டிக் கொள்ளவில்லை. நிரோஜன் கிருத்திகாவின் தாயோடு கூடக் கிருத்திகாவைப் போனிலும் கதைக்க விடுவதில்லை. தாய் போன் எடுத்தாலும் தானே கதைத்து கிருத்திகா குனிசிக்குள் அலுவலாக இருப்பதாகக் கூறி போனைவைத்து விடுவானாம். அப்படிப் பெருந் தன்மையில்லாதவனை ஏன் தன் தங்கையால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. கிருத்திகாவின் சொந்த மாமனாக இருந்தாலும் ஆரம்பத்தில் வர அனுமதித்தாலும் தற்போது அவருக்கும் தடை போட்டாகிவிட்டது. கிருத்திகாவின் அம்மாவும் தம்பிமாரும் கூட லண்டன் வரமுடியவில்லை. அப்போது கூட சுந்தரேசன் குடும்பத்தை நான் பாடுபடுத்தினேனே அதனால் தான் என் மகளுக்கு இப்படி நடக்கிறது என்று கிருத்திகாவின் தந்தை உணரவில்லை. எந்த அளவுகளால் அளக்கிறீர்களோ அந்த அளவுகளினால் உங்களுக்கும் அளக்கப்படும்’ என்று யேசுநாதர் கூறியது சுயநலவாதியான அவருக்கெங்கே புரியப்போகிறது.

தானும் விரும்பி ஏற்றுக் கொண்டதாலும் தன் மாமா அம்மா தெரிந்தால் கவலைப்படுவார்கள் என்பதாலும் ஊரில் உள்ள உறவினர் நண்பர்கள் பகிடி பண்ணுவார்கள் என்பதாலும் கிருத்திகா போன்றவர்கள் என்ன கஸ்டம் வந்தாலும் சகித்துக் கொள்வார்களே ஒளிய காட்டிக் கொடுக்கவோ வெளியே வரவோ விரும்பமாட்டார்கள்.

சொந்த மச்சானாக இருந்து கிருத்திகாவின் சீர்வரிசைகளையும் உழைப்பையும் உறிஞ்சும் நிரோஜன் போன்றவர்கள் தன் மனைவியை சாதாரண பெண்ணாகவே நடாத்தாத போது பெண் விடுதலை பேசுபவர்களும் பெண்ணியம் பற்றி மேடையில் முழக்குபவர்களும் கிருத்திகா போன்றவர்களை எப்படிக் காப்பாற்றப் போகிறார்கள்?? பாரதிராஜாவின் கறுத்தம்மாவில் ஆவது சிசு பிறந்தபின் கள்ளிப்பால் கொடுத்து வேறு ஒருவர் மூலம் கொல்லப்பட்டது. ஆனால் விஞ்ஞான வளர்ச்சியினால் நிரோஜன் போன்ற தந்தையே உலகுக்கு தெரியாமல் கருவில் பெண் என்பதையறிந்து கருச்சிதைவு செய்யதால்?…

(யாவும் கற்பனை)

– ஞானம் – கலை இலக்கிய சஞ்சிகை – ஜூலை 2007.

MullaiAmudhan எழுத்தாளர் முல்லை அமுதன் கல்லியங்காடு, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். முல்லைஅமுதன் எனும் பேயரில் 80களில் இருந்து எழுதி வருகிறார். அவர் திருகோணமலை பெருந்தெரு தமிழ்க் கலவன் பாடசாலை, யாழ்/செங்குந்தா இந்துக் கல்லூரி, கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி, ஆகியவற்றில் தன் கல்வியைத் தொடர்ந்தார்.புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசித்து வருகிறார். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் எனப் பல தளங்களிலும் கால் பதித்தவர். வருடந்தோரும் இங்கிலாந்தில் ஈழத்து எழுத்தாளர்களின்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *