கன்றல்





(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவர்கள் பஸ்ஸில் ஏறி தங்கள் இடத்தில் அமர்ந்த போது அவர்களுக்கு முன்னராக பஸ்ஸில் இருவரே இருந்தனர். எதிர் சீட்: ஐரோப்பிய ஜோடி.
கவனத்தை உடனே ஈர்த்தது அம்மாதின் தலைமயிர். அந்தப் பிசுபிசு அடர்த்தி மட்டுமன்று; சாயத்தில் தோய்த்து எடுத்தாற் போன்ற அதன் சிவப்பு. அம்மாதிரி கெட்டிச் சிவப்பு, கூந்தலில் அவன் பார்த்திருக்கமாட்டான்.
அவளோடு இருந்த ஆடவனின் தலைமயிர் பழுப்பு. சருமத்தின் செக்கலோடு இழைந்த செம்பட்டையில் பென்சில் கோடு மீசை எடுப்பாய்த் தெரியவில்லை. புருவம் செம்பட்டை. கண் ரப்பை மயிர்கூட செம்பட்டை.
பொறுமையிழந்தவனாய், அவ்வப்போது கைக்கடியா ரத்தை அவன் பார்த்துக்கொண்டிருந்தான். அந்தச் சைகையே இவன் பார்வையை அவன் கைக்கடியாரத்துக்கு இழுத்தது. பொறாமை நெஞ்சைப் பிராண்டிற்று. அந்தக் கடியாரத்துக்கு ஆசைப்படவே அந்தஸ்து வேண்டும். தீபாவளிக்கு எச்.எம்.டி. போடுவதாகப் பேச்சு. தலை தீபாவளி இன்னும் எங்கேயோ இருக்கிறது. அப்படியே இருந்தாலும், இந்தக் கடியாரம் மாதிரி கனவில்கூட நினைக்க முடியாது. தன்னை அறியாது ஒரு ‘உஸ்’ அவனிட மிருந்து கிளம்பிற்று.
பக்கத்தில் அவள்மேல் திரும்பிய அவன் பார்வையின் அணைப்பில், அதன் ரகசியச் செய்திகளில் சுமதி தலை குனிந்தாள் வெட்கத்தில், மகிழ்ச்சியில், வெற்றியில்.
மஞ்ச உறவின் மர்மமே இதுதான். இந்த விளையாட்டில் கெலிப்பு இருவருக்குமே. அவர்களுள் தனித்தனி நினைப்பு. கலியாண ஒருவருக்கொருவர் ‘உளம் கவர்ந்த கள்வர். தம்பதிகள் என்கிற நினைப்பே அப்புறம்தான்.
அவர்கள் உட்கார்ந்துகொண்டதும், வெள்ளைக்காரி யின் கண் நீலம் வரவேற்யில் கடலாகியது. கூடவே சங்கோஜம். அவர்களைப் பார்த்துக்கொண்டே,புன்னகை யுடன் அவள் துணையின் காதில் கிசுகிசுத்தாள்.
“My wife says-”
உடன் இருந்தவரை அவர்கள் சம்பாஷணை ஆங்கிலத் தில்தான் நடைபெற்றது. சுமதிக்கு பேச்சுப் புரிந்தது. ஆனால் பங்கு கொள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு அவளிடம் தில்” இல்லை, பாஷையுமில்லை. எஸ்.எஸ். எல்.சி.யில் கோட் அடித்ததும், ‘ட்யுடோரியலி’ல் சேரவோ, தொடர்ந்து படிக்கவோ மறுத்துவிட்டாள். அவள் ‘மக்கு’ இல்லை ஆனால் வணங்கவில்லை. அப்பா வுக்குக் கோபம்,ஏமாற்றம், வருத்தம். படிப்பு முடித்து ஒரு குட்டெழுத்தும், தட்டெழுத்தும் தேறி, எங்கேனும் ஒரு கம்பெனியில் சேர்ந்தால் கலியாணத்துக்கு எவர்சில்வர் ‘சீருக்’ கேனும் சம்பாதித்துக்கொள்ள மாட்டாளா என்கிற சபலம். இந்த நாளில் கலியாணம் எங்கே சுருக்க ஆகிறது?
ஆனால் சுமதி ‘ஜக்க’வில்லை. ஆனால் கலியாணமும் அவளுக்கு சுருக்கவே கூடிவிட்டது. ப்ரபுவுக்கும் அவன் பார்த்த முதல் பெண்ணும் அவளே, கடைசிப் பெண்ணும் அவளே. பிள்ளை வீட்டாரும் செலவு விஷயத்தில் ரொம்ப சிரமப்படுத்தவில்லை. “சுமதி அதிர்ஷ்டக்காரி. – வீட்டிலும் சுற்றுப்புறத்திலும் அப்படித்தான் பேச்சு.
“என் மனைவி சொல்கிறாள் – லேடி’யின் ஸாரி, பின்னல், மலர்கள், வளையல், மிக்க சொக்க அடிக்கின்றன -(My wife says-the lady’s sari, plait, flowers, and bangles are simply bewitching!)
“தாங்க் யூ. நாங்கள் எங்கள் தேனிலவில் இருக் கிறோம்.”ப்ரபுவுக்கும் பெருமையில் முகம் ஒளி வீசிற்று.
“ஓ ஹௌ ஒண்டர்ஃபுல். என்ன நேர்த்தியான ஜோடி!” அவள் தன் உள்ளங்கைகளை ஒன்றுடனொன்று சேர்த்து அழுத்திக்கொண்டு சிரித்தாள். சிரிப்பு ‘கோல்கேட். ஆனால் மிகமிக இயல்பு. குரல் ‘கோலா’ குளுகுளு .
“எங்கள் பாராட்டுக்கள்.”
“தாங்க் யூ.”
நாலுபேர் வண்டியில் சேர்ந்தாற்போல் ஏறிக்கொண் டார்கள். அடுத்தடுத்து அவர்கள் பளுவில் வண்டி தழைந்து அசைந்து கொடுத்தது.
ஐரோப்பியன் மீண்டும் கைக்கடியாரத்தைப் பார்த்துக் கொண்டான். நேற்று ‘ஸீட்’ புக் பண்ணினபோது டூரிஸ்ட் ஆபீஸ் சிப்பந்தி சொன்னாள் ..7.30a.m. ஷார்ப். இப்போது மணி எட்டு.”
“எங்கள் பங்க்ச்சுவாலிட்டி பேர் போனதாச்சே!”
உளுத்துப்போன ஜோக். ஆனால் எல்லோரும் சேர்ந்து சிரிக்க ஒரு சாக்கு. அதனாலேயே ‘மூட்’ நிரவலாகி, சங்கோஜம் குறைந்து, பேச்சுக்கு இடம் தாராளமாயிற்று.
“ஓ, இவள் மேரி, நான் வில்லியம்ஸ்.”
“என் மனைவி பெயர் சுமதி. என் பெயர் ப்ரபாகர்.”
“நமஷ்கார்” இருவரும் கை கூப்பினார்கள். அவள் சிரிக்கும்போது மூக்குத் தண்டு சுருங்கிற்று.
ப்ரபாகர்: “எல்லா இடங்களும் ரிசெர்வ்டுதானே! அதனால் முன்னே பின்னே வரலாமே! பஸ்கூட நிரம்பிவிடும். ஆனால் இந்த உலாவை நடத்தும் கைடு வராமல் என்ன செய்வது? அதுதான் நியூஸென்ஸ்.”
“யெஸ், ஃபன்னி!” என்றாள்.
“எனக்கு ஃபன்னியாகப் படவில்லை”. அவன் சிடு சிடுத்தான்.
“ஆ கம் ஆன் பில், டேக் இ ஈஸி. நாம் விடுமுறையை சந்தோஷமாக அனுபவிக்க வந்திருக்கிறோம். ரோமுக்கு வந்தால் ரோமர்கள்போல் செய்வதுதான் முறை. அது தான் உண்மையான சந்தோஷம்.”
“மேரி வேலைக்குப் போனால் தானே, அவளுக்கு நேரத்தின் அருமை தெரியப்போகிறது”. அவனுடைய புன்னகையில், சலுகையுடன் சிறிது ஏளனமும் கலந்திருந்தது.
ப்ரபாகர், சுமதியை ஓரக்கண்ணால் பார்த்தபடியே, “என் மனைவி வேலைக்குப் போகவேண்டிய தேவை இல்லை” என்றான்.
“நாங்கள் அவ்வளவு திர்ஷடசாலியில்லையே. அப்படி சொல்லிக்கொள்ள முடியாதே!”
ஜோடிகளும் சேர்ந்தாற்போல் சிரித்தார்கள்.
“இதோ கைடு வந்தாச்சு! நாம் அதிர்ஷ்டசாலிகள்!”
பஸ் எப்படி பரபரப்புடன் அத்தனை சுருக்கில் நிறைந்து விட்டது ஏன்று தெரியவில்லை.
பஸ் புறப்பட்டது. காம்பவுண்டு நிழல் தாண்டி, வெளியே வந்து சாலையில் இடது பக்கம் திரும்பி ஊர்தியுள் சூரியன் பட்டு, அவள் தலைமயிரின் சுருள் குவியலை ஊடுருவியதும், ப்ரபு பிரமித்துப்போனான். திடீரெனப் பற்றிக் கொண்டாற்போல் அவள் கேசம் ஜ்வாலை சிவப்பில் திகு திகுத்தது. அதுவே அவனுக்கு -ஏன், பஸ்ஸில் அருகாமையில் இருந்தவர்களுக்குத்தான் – ஒரு காட்சியாயிருந்தது. ரொட்டி அடுப்பின் உட்புறத்தின் கணகணப்பின் சிவப்பு.
அவன் கண்களுக்கு எழாமல் அவன் வீணே அடக்க முயன்ற திடீர் மாறுதலைக் கண்டு அவள் புன்னகை புரிந் தாள். ‘ஆமாம், நான்தான் ஒரிஜினல் சிவப்புத்தலை’ என்றாள். இதுவே தங்க நிறமாயிருந்தால், என் ஜனங் களுக்கிடையே எனக்கு மவுசு கூடியிருக்கும். ஆனால் என் கணவர் என்னை மணந்ததே என் சிவப்புத் தலைக்குத் தான்.இல்லையா பில்?”
“லேடீஸ் அண்ட் ஜெண்டில்மென். கைடு தொண்டையைக் கனைத்துக்கொண்டு ஆரம்பித்தான் “என்னைப் பரிச்சயம் செய்துகொள்கிறேன். என் பெயர் மதுகர். மைசூர் சர்வகலாசாலையில் ஆய்வு மாணவன். இது எனக்குப் பார்ட் டைம். சிரித்தான். கஷ்டப்பட்டு சிரிப்பு. நாம் இன்று, ஆம். நான் உள்படத்தான், மைசூரிலிருக்க ரொம்ப பாக்யசாலிகள். மைசூர் சரித்திரப்புகழ் பெற்ற ஸ்தலம். மைசூர் எனும் அரண்மனை நகரம்-”
ஒரு நாளா,இரண்டு நாளா? சொன்னதையே சொல்லிச் சொல்லி, தானே ஆக்கிக்கொண்ட கட்டங்களில் அதே சிரிப்பைச் சிரித்துக்கொண்டு, அதே ஆச்சரியங்களைப் பட்டுக்கொண்டு, பாஷையில் அதே தப்புக்களைப் பண்ணிக் கொண்டு – வாய்ப்பாடு ஒப்பிப்பது போன்ற அவன் வர்ணனை, உற்சாகம், உயிர், உப்புசப்பு அற்று – பிரயாணிகள் அவன் சொல்வதற்குச் செவிமடுக்கிறார்களா என்கிற ஆவல்கூட இல்லாமல், ஏதேதோ தகவல்கள், வருடங்கள், வருடங்களில் சம்பவங்கள் அவன் வாயினின்று ஆங்காங்கே உதிர்கையில் அவனுடைய சொற்கூடு சீக்கிரமே அலுப்புத் தட்டிவிட்டது. ஆனால் சாதாரணமாகவே கைடு சொல்வ தற்குக் கவனம் தந்து, சிரத்தையுடன் யார் கேட்கிறார்கள்? வெகு சீக்கிரமே பிரயாணிகள் சிறுசிறு தனித்தனிக் கொத் துக்களாகப் பிரிந்து ஆங்காங்கே தங்கித் தயங்கி, அவரவர் வழியில் காட்சி காண ஆரம்பித்து விட்டார்கள்.
மற்ற மூவர்களின் பேச்சில் அவர்கள் அளவுக்கு சுலப மாக அவளால் பங்குகொள்ள முடியாவிட்டாலும் (ஆமாம், இதென்ன மைசூர், ரஸத்தில் தெளிவு தேடல் வேண்டிக் கிடக்கு?) – அவள் பங்கு அனேகமாக ஊமைச் சிரிப்புத்தான். சுமதிக்கு அந்தக் கலகலப்பு இன்பமாய்த்தானிருந்தது. அவர் களுடைய பேச்சு சுவாரஸ்யத்தில் அவள் தனியாக விடப் பட்டது அவளுடைய சொந்தக் கனவுகளில் திளைப்பதற்குச் சௌகரியமாயிருந்தது. அவளுடைய புருஷன் அவர்களுக்குச் சரியாகப் பேச்சிலும், பேசும் விஷயத்திலும் ஈடுகொடுப்பது அவளுக்குப் பெருமையாக இருந்தது. தண்ணொளிக் கண்களுடன் சொத்துரிமையுடன், கணவனைப் பார்த்துக் கொண்டாள்.
கலியாணத்தில் மணப்பலகையில் அவர்களிருவரையும் சேர்ந்து பார்த்தவர்கள் அனைவரும், அவள் காதுபட சுமதி ப்ரைஸ் அடித்தாள்!” என்று சந்தோஷத்திலிருந்து பொறாமை வரை பலரகப்பட்ட ணர்ச்சிகளில் பேசிக் கொள்கையில் சுமதிக்கு உவகை பொங்கிற்று. இப்பவும்தான் பாரேன், இந்த வெள்ளைக் கொய்யாக்களின் நிறத்துக்கு மட்டாவே அவர் இல்லை. பார்க்கப்போனால், ஒசந்த பஞ்சாப் கோதுமையின் அந்தப் பொன்னிற மேனி, மைதீட்டி னாற்போல அடர்ந்த கரிய புருவங்களினடியில், கருவண்டு போல் பளபளக்கும் விழிகள் அந்த மோவாய் குழியைப் பார்க்கும்போதெல்லாம் நெஞ்சை அள்ளுகிறது. முகத்தில் புது சவரத்தின் வழவழப்பான லைட் ப்ளூ.
பெண்ணைப் பார்த்துவிட்டுப் பிள்ளை வீட்டார் போனதும் அன்றிரவு, தாயும் பெண்ணும் தனிமையிலே, “இவரையே நிச்சயம் பண்ணிவிட அப்பாவிடம் சொல்லம்மா” என்று மகள், தாயிடம் கொஞ்சியபோது, அம்மா, “ஏண்டி, உன் மனசை நீ வெளிப்படுத்திட்டே. அவன் பண்ணிக்கத் தயாராயிருக்க வேண்டாமா?” என்ற சந்தேகத்தை எழுப்பியதும், அதற்கேற்றபடி அடுத்து நாலு நாட்கள் கிணற்றில் கல்லைப் போட்டாற்போல் அந்த இடத்திலிருந்து எந்தத் தகவலுமில்லை. அவளுக்கு உள்ளே ‘திக்திக்’. அடுத்து என்ன சமாதானமென்று மனம் சொந்த மாக வழி தேடிக்கொண்டிருக்கையில், ஐந்தாம் நாள் சேதி அவள் மனம்போல மாங்கல்யமாக முடிந்தது. அப்படியும் மனதில் ஏதோ அநிச்சயம், பயம், மணவறையின் இருட்டில் அவர் கை தேடி வந்து அவள் கையை முரடாகப் பிடித்த அதற்கே அப்பவே, ‘அப்பாடா, நல்லபடியா முடிஞ்சுது என்று ஒரு தனி மூச்சு தன்னிடமிருந்து வெளிப்பட்டதும் – அத்தனையும் கெலிடாஸ்கோப்.
தற்செயலில் மேலாக்குக்கு வெளியே வந்துவிட்ட மாங்கல்யத்தை அவள் கை நெருடிக் கொண்டது. நடந்த தெல்லாம் கனவல்ல, இப்போது பங்களூர்-மைசூர் வேடிக்கை பார்க்க டூரிஸ்ட் பஸ்ஸில் இடித்துக்கொண்டு, உட்கார்ந்திருப்பது, இடித்துக்கொண்டே காட்சி பார்க்க நடப்பதும் பொய் அன்று. என்பதற்கும் இதைவிட சாட்சி வேறு என்ன வேண்டும்? உள்ளே அலை பொங்கிற்று.
இந்த கைடு என்ன தொணப்பிண்டேயிருக்கான்? இவன் பேச்சும் விளக்கமும் யாருக்கு வேண்டிக் கிடக்கு. இந்த அரண்மனையில் என் இளவரசும் நானும் நுழைந்து சுற்றிவர இவன் உத்தரவு தேவையா? சந்தோஷம் மிகை யானாலே, தனியாக ஒரு அசடு வழிகிறது தனக்கே தெரி கிறது. ஆனால் அதுபற்றி வெட்கமாயில்லேயே! என் மனத்தின் எழுச்சியை பங்கிட்டுக்கொள்ள மனம் தவிக்கிறது. ஆனால் அதன் அந்தரங்கங்களில் சில இவருடன் சொல்லிக் கொள்ளக்கூட சாத்தியமில்லை. கன்னத்தில் ரத்தம் பாயறது எனக்கே தெரியறது. என் வெட்கம், என் பெருமை எனக்கே சொந்தம். இப்படியும் ஒரு பித்து நிலை உண்டோடி?
ப்ரபுவின் குரல் அவளுடைய மிதப்பலிலிருந்து அவளைக் கீழே இழுத்துக் கொணர்ந்தது. அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான்: “யு ஸீ, இன்றிரவு ரயிலில் நாங்கள் மதறாஸ் திரும்ப வேண்டும். நாளை நான் ட்யூட்டியில் சேர வேண்டும். டில்லியிலிருந்து இங்கே வரை இந்த இருபது நாட்களில் ரங்கராட்டினம் சுற்றினமாதிரியிருக்கிறதே யொழிய, எங்கேயும் எதையும் ஆற அமரத் தங்கி அனுபவிக்க முடியவில்லை. ரயில் சார்ஜ் வரை பேங்க் கொடுக்கிறது இன்றிலிருந்து மூன்று வருஷங்கள் கழித்துத்தான் மறுபடியும். இந்த வாய்ப்பு…”
“நீங்கள் அப்போது டில்லிக்குப் போயிருக்கிறீர்களா?”
“ஆம், மாம்.”
“ஆக்ரா? தாஜ்மஹால்?”
“ஆம், மாம்!”
“தாஜ்மஹால், அதுவே ஒரு அழகிய கனவல்லவா?”
உள்ளங்கைகளை ஒன்றோடொன்று அழுத்திக்கொண்டு, அந்த நினைப்பில் அவள் கண்கள் ஒளிர்கையில் அவைகளில் நீலம் பெருகுவது பிரமையா? அசலா?
அவளை அழகி என்று சொல்வதற்கில்லை; ஆனால் நிச்சயமாக வசீகரம். கூடவே தலைமயிரின் செங்கானல். அவளைச் சிந்திப்பதில் ஒரு கணம் தன்னை இழந்த ப்ரபு சட்டென சமாளித்துக்கொண்டு மீண்டான்.
ஆமாம், தாஜ்மஹால் அழகுதான். மிகமிக அழகு. சலவையில் கவிதை. காதலுக்கு நினைவுச் சின்னம். நிஜமும், கட்டுக்கதையுமாக விஷயங்கள் அதைச் சூழ்ந்துகொண்டு, காவிய பரிமளம் கமழ்கிறது. ஆனால்…” என்று இழுத்தான். மற்ற இருவரும் கைகளைக் கட்டிக் கொண்டு அவன் சொல்லப் போவதற்கு ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர்.
ஆனால் கட்டடத்தின் உள்ளும் வெளியிலும் சுற்றிப் பார்த்துக்கொண்டே வருகையில் என் மனதில் பட்டதென்ன தெரியுமா? முதலில் னம் தெரியாதொரு பெரிய விசனத் தேக்கம். அதை இனம் தெரியாது என்று முற்றிலும் சொல்வ தற்கில்லை. எப்படியும் அது ஒரு கல்லறைதானே!
பிறகு, “பார்க்கப்போனால் ஒரு மனிதப் பிறவி இறந்து போனதற்கு இவ்வளவு மகத்தான பாடா கட்டிடமா? இதற்குச் செலவாகியிருக்கும் சிரமத்துக்கும் காலத்துக்கும் பணத்துக்கும் பொருளுக்கும், நம் பக்கத்தில் ஒரு கோவிலைக் கட்டியிருந்தால், தெய்வ வழிபாடுக்கும் அதன் விளைவால் மன அமைதி ஆறுதலுக்கும், ஆன்ம வளர்ச்சிக்கும், எத்தனை பேருக்குக் காலா காலத்துக்கும் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றாமல் இல்லை- விட்டுச் சொல்லி விட்டேன்.”
சிறிது நேரம் எல்லாரும் மௌனமாயிருந்தனர். பிறகு மேரி, அங்கு நான் வேறுபடுகிறேன்” என்றாள். “எல்லாவற்றையுமே பயன் தேடும் நோட்டத்துடன் பார்த்தால், வாழ்க்கையில் பிறகு என்னதான் இருக்கிறது? தாஜ்மஹால் காதலுக்குக் காணிக்கை என்று அலட்சியமாகத் தள்ளிவிட முடியாது. அப்படி எதைப் புறக்கணிக்கிறீர்கள்? தாஜ் மஹாலையா, காதலையா? கடவுள்மேல் காதலுக்கும் ஒரு ஆண், பெண் இருவருக்குமிடையே நேரும் காதலுக்கும் என்ன வித்தியாசம்? உங்களுடைய காளிதாசனின் சகுந்தலா, துஷ்யந்தா, எங்கள் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் வித்தியாசமானவர்களா? நான் சொல்வதில் இயக்க வார்த்தை கடவுளுமில்லை, மனிதனுமில்லை – காதல்”.
சுமதிக்கு வாதம் முழுக்கப் புரியவில்லை. ஆனால் தன்னை அறியாமலே தன்னுள் ஒரு நெகிழ்ச்சி உணர்ந்தாள்
சகுந்தலை – துஷ்யந்தன்
ரோமியோ – ஜூலியட்
மும்தாஜ் – ஷாஜஹான்
சுமதி – ப்ரபு.
அப்படித் தோன்றியதும் ஆச்சரியமாயிருந்தது. அற்புத மாயிருந்தது.
சற்றுத் தயக்கத்துக்குப்பின்,
மேரி – வில்லியம்ஸ்.
ஊஹும், ஒவ்வி வரவில்லை. இந்தக் கூட்டத்தில் சேர்க்கும் பருவத்தை இவர்கள் தாண்டியாச்சு. மேரி நிச்சய மாக இவரைவிட மூத்தவள். மேரியின் கணவன் அவளை விட நிறைய வயது வித்தியாசமானவனாகத்தான் இருக்கணும்.
மேரி மேலும் சொல்லிக் கொண்டிருந்தாள். “உங்கள் வயதுக்கு நீங்கள் வெளியிட்ட அபிப்ராயம் மூதாயிருக்கிறது. அதுவும் புதுக் கலியாண ஜோடி!
சுமதியைப் பார்த்து சிரித்தாள்.
வில்லியம்ஸ் எதுவும் பேசவில்லை. இத்தனைக்கும் ஒரு புன்னகையுடன் சரி. சலுகைப் புன்னகை. சிறிசுகள். மேரியையும் சேர்த்து.
மார்மேல் கைகளைக் கட்டியபடி, யோசனையில் ஆழ்ந்த வண்ணம் மேரி நடந்தாள். சிறிதுநேரம் நால்வருமே பேச வில்லை. அவளுடைய கண்ட சதைகள் மொழு மொழுப் பாயும், மழமழவென்றும் இருப்பதை சுமதி கவனித்தாள். அங்கங்கே பொன் ரோமச் சுருள்கள்.
சாலையோரம் உள்ளே தள்ளி, ஒதுக்கமாக, ஒரு சோலை நடுவே ஒரு ஹோட்டலுக்கெதிரே வண்டி நின்றது. “இங்கே, காலைச் சிற்றுண்டிக்குப் பதினைந்து நிமிஷம் தங்கும் என்று கைடு சொல்லிவிட்டு ஹோட்டலில் மானேஜர் அறையுள் மறைந்துவிட்டான். இங்கே வியாபாரமே இது போன்ற உலா வண்டிகளை நம்பித்தான். பண்டங்கள் ருசி யாக இருந்தன என்று சொல்வதற்கில்லை. அந்த அவசியமு மில்லை.
ஆனால் அந்த ஐரோப்பிய தம்பதிகள் ரசித்துச் சாப் பிட்டார்கள். நுனிவிரலால் தோசையை விள்ள அவர்கள் முயற்சி சிரிப்பு மூட்டியது. தோசை விள்ளல் ஒன்று சாம்பார் ஈரத்துடன் வில்லியம்ஸின் சொக்காயில் பொத்தான் பட்டை மீது பட்டுத் தெறித்துப் பாண்டிலும் விழுந்துவிட்டது. கைக் குட்டையால் துடைக்க முயன்று திட்டு பரவலாய்ப் படர்ந்தது. வில்லியம்ஸ்க்கு முகம் சுளித்தது
ஆனால் மேரி ‘குஷி’யிலிருந்தாள். ஓ, திஸ் இஸ் நைஸ். இதை எப்படிச் செய்வது, சொல்வீர்களா?சுமதி யைப் பார்த்துக் கேட்டாள்.
சுமதியை அவ்வப்போது கலந்துகொண்டு ஆட்டுக்கல், குழவி, அரிசி, உளுந்து, தோசைக்கல், தோசைத் திருப்பி என்று ப்ரபு அடுக்கிக்கொண்டே போனதும், அவள் சிரித்துக் கொண்டே, வியர்த்தத்தில் இரு கைகளையும் விரித்து விட்டாள்.
“ஓ,எனக்கு அப்பாற்பட்ட சமாச்சாரம். இதற்காகவே நான் லண்டனில் இந்தியர்களை சினேகம் பிடிக்கவேண்டும். எனக்குத் தோசா வேண்டுமானால் வெட்கம் பார்த்து முடியாது”. சிரித்தாள்.
காப்பி வாயில் வைக்க வழங்கவில்லை. ஆனால் அவர்கள் விரும்பிக் குடித்தார்கள்
ப்ரபாகர் பீடா வாங்கி வழங்கினான். வில்லியம்ஸ் மறுத்துவிட்டார். மேரி அதை மென்றவுடனேயே அவள் உதடுகள் ரத்தப் பூவாகிவிட்டன. அந்தத் தனிச்சிவப்பு அவள் முகத்துக்குப் பாந்தமாக இல்லை சற்றுநேரம் கழித்துத் துப்பிவிட்டாள்.
வில்லியம்ஸ் சிகரெட்கூட புகைக்கவில்லை. தனக்காகப் பார்க்கிறான் என்று நினைத்துக்கொள்வதில் சுமதி பெருமை கொண்டாள். வில்லியம்ஸ் பேரில் அவளுக்கு மதிப்பு கூடிற்று.
ஒன்று பட்டது. வில்லியம்ஸுக்கு ‘போரிங் காக இருந்ததோ? எனக்கு அப்படித்தானிருக்கு. இருபது நாட்களாக ஓய்ச்சல் ஒழிவில்லாமல் பிரயாணம். இதென்ன தேனிலவு? இதெல்லாம் நமக்கு சரிப்படாது. வீடு போய்ச் சேர்ந்து, நம் வீடு என்கிற சொந்தத்தில் வீட்டுக்காரியங் களைப் பார்த்துண்டிருப்பதில் இருக்கும் நிம்மதிக்கும் நிறை வுக்கும் ஈடாகுமா? வீடு போய் இறங்கின அன்றிரவே சுண்டச் சுண்ட சுண்டைக்காய் வற்றல் குழம்பும், பருப்புத் துவையலும் காண்போமான்னு ஆயிடுத்து.
ஆமாம். கலியாணத்துக்கு முன்னரே கையோடு கையாகக் குடித்தனத்துக்கு வீடு பார்த்தாயிற்று. இன்னும் வீட்டை அவள் பார்க்கவில்லை. அப்பாதான் பார்த்தார். அப்பாவுக்கு இதிலெல்லாம் கொஞ்சம் செல்வாக்கு உண்டு. நுங்கம்பாக்கத்தில் ஒரு சைடு போர்ஷன். வீட்டுக்காராளும் அவர்களும் மட்டும்தான். வாடகை சற்றே சூடுதான் ஆனால் கிடைச்சதே பெரிசு என்கிற காலமாயிருக்கே!
அப்பா வீட்டை விவரிச்சதிலிருந்து, அவளுக்குக் கிடைத்த ஐடியாப்படி, கூடத்தில் காட்ரெஜ் பீரோவுக்கும் ஸோபா செட்டுக்கும் அவள் இடத்தைத் தீர்மானம் பண்ணி யாச்சு. ஆனால் அப்பா சொல்றதைப் பார்த்தால் படுக்கை அறை கட்டிலே கொள்ளாது போலிருக்கே! அப்போ ட்ரஸ்ஸிங் டேபிளுக்கு என்ன வழி? இதுபற்றி அவரை யோசனை கேட்டால்,
‘நமக்கு இந்த இடமே அதிகம். டபுள் பெட் எதுக்கு. ஒண்ணே அதிகப்படி’ன்னு சொல்லிட்டு, கண்ணையும் சிமிட்டி. என்னை சங்கடத்தில் மாட்டிவிடுவார். இந்த இருபது நாள் பழக்கத்திலேயே தெரியறதே, ஆள் பேச்சில் கொஞ்சம் எடக்கன்தான்.
கைச்சிற்ப தொழில் எம்போரியத்தில் அரைமணி நேரம் புகுந்து விளையாட பிரயாணிகளை அனுமதித்துவிட்டு கைடு ட்ரைவருடன் அரட்டை அடிக்க வண்டியிலேயே தங்கி விட்டான்.
அவர்கள் தந்தத்தில் ஒரு நடராஜ விக்கிரகம் வாங்கி னார்கள். ஒரு முஷ்டி உயரம் கூட இல்லை. அவளுக்கும் ஆசையாகத்தானிருந்தது. ஆனால் விலையைக் கேட்டதுமே உண்மையிலேயே மிரண்டுபோனாள். நல்லவேளை அவள் வாயைத் திறக்கவில்லை. அவர்கள் கேட்டார்கள். அவர்கள் வாங்கிக்கொண்டார்கள். அதற்கு ஆசைப்படவே ஒரு அந்தஸ்து வேண்டும்.
அவள் இரண்டு ஊதுவத்திக் கட்டுக்கள் வாங்கினாள். அதாவது அவர் வாங்கித்தந்தார். கூடவே அவர் வெள்ளைக் கல்லில் ஒரு குட்டித் தாஜ்மஹால் வாங்கினார். இதற்கு டம் நிச்சயம் பண்ணணும். அவளுக்கு இப்பவே வீட்டுக்குப் போகவேண்டும் என்று தோன்றிவிட்டது.
பஸ் புறப்பட்டதும், கைடு பிரயாணிகளைப் பார்த்து நின்று கொண்டு…அவன் குரலே வேறு மாதிரி ஆகிவிட்டது. அதுவும் நடிப்புத்தான்.
லேடீஸ் அண்டு ஜெண்டில்மென், இப்போது உலாவின் கடைசி கட்டத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். இதுவரை நீங்கள் பார்த்த காட்சிகளுக்கே சிகரம், பூலோக சுவர்க்கம். இந்திரலோகத்தில் நடமாடப் போகிறீர்கள். உலகத்தில் ஒன்பதாவது அதிசயத்தோடு இழையப் போகிறீர் கள். வயதானவர்கள் வயதை மறந்துவிடுவார்கள். இங்கே வயதானவர், ஆகாதவர் என்பதே இல்லை. எல்லோரும் வயதுக்கு வந்தவர்களாகி விடுவார்கள். என் வழிகாட்டலும் வர்ணனைகளும் விளக்கங்களும் இங்கே தோற்றுவிடுகின்றன. அத்தனையும் அதிகப்பிரசங்கம். அவரவர் தமக்கே கண்டு கொள்வார்கள். இதோ பிருந்தாவனம் பாருங்கள்.
சொல்லி முடிப்பதற்கும் பஸ் உள்ளே நுழைந்து குதிரையை லகான் பிடித்தமாதிரி பின்னுக்குத் தள்ளிக் கொண்டு சட்டென்று நின்று சமைவதற்கும் சரியாயிருந்தது. பிரயாணிகள் இறங்கிக் கலைந்தார்கள்.
“இதுதானா பிருந்தாவனம்? நன்னாயிருக்கு. செடி, பூ, புதர்கள், ஃபவுண்டன்கள் எல்லாம் சுத்தமா. ஒழுங்கா, நல்ல பராமரிப்பில், விளக்குப்போட்டு–அழகாயிருக்கு என் கிறதைத் தவிர தனிப்பட்ட முறையில் ஆஹா ஓஹோன்னு எனக்கு ரசிக்கத் தெரியல்லேன்னா, எனக்குத் தெரிஞ்சது ஊரெல்லாம் அவ்வளவு தான்னு நான் நினைச்சுக்கணும், சுத்திட்டு, உடம்பும் மனசும் களைச்சுப்போய், அப்பாடா எங்கானும் சாய்வோமான்னு இருக்கற நிலைக்கு முன்னால், காலையிலேயே இது முதல் ப்ரோக்ராம்மா இருந்திருந்தால், மனசு வேறேமாதிரி இருந்திருக்குமோ என்னவோ. இதைத் தான் அடிக்கடி சினிமாவில் பார்த்துடறோமே! இந்தச் செடி, பாத்திகள் நடுவே லவர்ஸ் ஓடி ஒளிஞ்சு, ஒருத்தரை யொருத்தர் பாத்துண்டு, மேலாக்கைப் பிடிச்சு இழுத்துண்டு ஆடிண்டு, பாடிண்டு, கும்மாளம் அடிச்சுண்டு, நடப்புக்கும் அவாளுக்கும் சம்பந்தமேயில்லாமே…
சுமதிக்கு சினிமா மோகம் கிடையாது.கிழம், கட்டை கள்கூடப் பித்தாய்ப் பிடித்து அலையும் இந்நாளில் சுமதி அவள் வயசுக்கு அதிசயப்பிறவி, வக்ரம்னுகூட கருதப்பட்டாள், அதற்கென்ன, கட்டிப் பிடித்து இழுத்துப் போனால் மாட்டேன் என மாட்டாள். வலுக்கட்டாயமாக டி.வி. எதிரில் உட்கார்த்தி வைத்தால். கண்ணை மூடிக் கொள்ளமாட்டாள். ஆனால், வீட்டுக் காரியங்களைக் கவனித்துக்கொண்டு, அப்பப்போ வீட்டை சுத்தம் பார்த்து, சாமான்களைத் தூசி தட்டியோ, தேய்த்துத் துடைத்து, அடுக்கி அழகு பார்த்துக்கொண்டு – அதுக்கு சமானம் ஆகுமா? நான் அசல் நாட்டுப்புறம் இல்லை. ஆனால் கிராமத்து வாசனை என்னிடம் வீசினால், காரணம் என் பூர்வீகம்தான் இருக்க முடியும்.
சுமதிக்குக் கால்கள் கெஞ்சின. மற்ற மூவரும் ஆங்காங்கே தங்கித் தயங்கி ஆற அமரதாவர இயலையே அவர்களுக்குள் சுவாரஸ்யமாக அலசுவதைப் பார்த்து எரிச்சலாக வந்தது. அவள் கணவனுக்கு இத்தனை விஷயங்கள் தெரிந்திருப்பது அவளுக்குப் பெருமையாயிருந்தது, ஆச்சர்யமாயிருந்தது, பயமாக இருந்தது. இதைப் பார்த்தால் இவர் என்னிடம் என்னென்ன எதிர்பார்ப்பாரோ தெரியல்லியே! நான் இவருக்கு ஏமாற்றம் ஆகாமல் இருக்கணுமே!
உடன் நடந்துகொண்டே, ஆனால் அங்கு இல்லாமல் எண்ணங்கள் சம்பந்தமில்லாதது (இல்லை, சம்பந்தம் உண்டா?) பிறந்த வீட்டைப்பற்றி ஓடின.
ஒரே நாளில் புகுந்த வீட்டு மனுஷியா, இவாளுடைய ஹை சர்க்கிளுக்குச் சரியா மாறிவிட முடியாது. ஆமாம், நம்மைக் காட்டிலும் பசை உள்ள குடும்பமாத்தான் தோணறது. கரிசனம் பாக்கற மாதிரி தெரியல்லை. ஆனால் நாங்கள் பார்க்சாமல் முடியாது. இரண்டு தங்கைகள் கலியாணத்துக்குக் காத்திண்டிருக்கா. அப்பா என் செல்வி லிருந்து சுதாரிச்சுக்கறதுக்குள், மீனா தயாராகிவிடுவாள்.
அண்ணா சி.ஏ.படிக்கிறான். நன்னாப் படிக்கிறான். தினம் சந்தியாவந்தனம் பண்றான். குடும்பம் அவனைத் தான் நம்பிண்டிருக்கு. ஆச்சு, பல்லைக் கடிச்சுண்டு இன்னும் ஒரு வருஷம் தான். இப்பவே பெண்ணைக் கொடுக்க மேலே வந்து விழறா. பையனுக்கு வயசாகல்லேன்னா, கல்யாணத்தை சௌகரியப்படி வெச்சுப்போம். இப்ப தாம்பூலத்தை மாத்திண்டுடுவோமேன்னு சொல்றவாளுமிருக்கா. என்ன வோ சந்தையிலே மாடு பிடிக்கற கதையா ஆயிடுத்தே. என் அதிர்ஷ்டம், வீட்டுக்கு அதிக சிரமம் வைக்காமல் எனக்குத் தாலி பாக்யம் வந்துடுத்து. என்னால் முடிஞ்சது அவ்வளவு தான். அட. முடிஞ்சுபோச்சா என்ன?
ஆச்சரியமாயிருந்தது, சந்தோஷமாயிருந்தது, பஸ்ஸில் ஏறிக்கொள்ள –
வழியிலேயே அவரவர்க்குச் சௌகரியமான இடங்களில் பிரயாணிகள், தனித்தனியாகவும், கொத்துக் கொத்தாகவும் சுழன்றுகொண்டனர். இவர்களையும் கேட்ட இடத்தில் இறக்கிவிட்டு பஸ் பறந்தது.
நால்வரும் ப்ளாட்ஃபாரத்தில் நின்றனர். சுற்றிலும் பல வகை ஊர்திகள் பறந்தன. விளக்குகள் பட்டை வீறி இரவைப் பகலாக்கின. கட்டடங்கள் உயர்ந்து மேல் இருள் கீழே இறங்காமல் தாங்கிக்கொண்டன. முட்டின பானர்கள் சினிமாப் படங்களையும், விளம்பரங்களையும் காட்டின. மக்கள் நெரிந்தனர்.
“ஸோ, இட் இஸ் ஓவர்.”
“என் ஹோட்டலுக்கு வருகிறீர்களா, பக்கா ஸௌத் இண்டியன் மீல் சாப்பிடுவோம்” என்றான் ப்ரபு.
“தாங்க்யூ. நோ டைம்.” வில்லியம்ஸ் கைக்கடியாரத் தைப் பார்த்துக்கொண்டான். இன்னும் ஒரு மணி நேரத் தில் நாங்கள் பாக் பண்ணிக்கொண்டு பாம்பேக்கு இரவு ஃப்ளைட் பிடித்து,நாளைக் காலை லண்டனுக்கு -”
“டிட்டோ இங்கே. நாளை நான் மதராஸில் ட்யூடிக்கு ட்யூ.”
“இன்று எங்களுடைய இத்தனை சந்தோஷமான நேரத் துக்கு உங்களுக்கு எங்களுடைய மிக்க மிக்க நன்றி”. காலி யாகக் கடந்த ஒரு டாக்ஸியைப் பார்த்து விரலைச் சொடுக்கி விட்டு, குலுக்கக் கை நீட்டினான் கை குலுக்கினர். அவளும் கை நீட்டினாள்.
சடக்கென ப்ரபுவின் கழுத்தைச் சுற்றித் தன் கையை வளைத்து இழுத்துக்கொண்டு அவன் கன்னத்தில் ஒரு முத்தம் பொறித்தாள்.
ஷாக்.
டாக்ஸி உராய்ந்தாற்போல் வந்து நின்றது.
“குட்பை. ஸோ லாங்!” இருவரும் ஏறிக்கொண்டார்கள். வண்டி நகர்ந்து வேகமெடுத்தது.
ப்ரபுவும் சுமதியும் ப்ளாட்ஃபாரத்தில் – ஸ்தம்பித்தபடி நின்றார்கள்.
ஷாக்.
வண்டி போய்க்கொண்டேயிருந்த சில நிமிடங்களுக்குப் பின் கேட்டான்
“ஏன்-?”
ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டிருந்த அவள் மூகம் திரும்பாமலே, “அவன் பாபை நினைவு மூட்டினான்”.
ஓ, ஆமாம்,பாப். போன வருடம் ஹாவாய் அருகே. பசிஃபிக்கில் ஹெலிகாப்டரில் தனியாகக் காணாமல் போய் விட்டான்.
அவள் தம்பி.
வண்டி வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தது. குளிரைத் தடுக்க இறக்கிய ஜன்னல் கண்ணாடிமேல் அவள் முழங்கால் களைக் கட்டியபடி மூலையில் சாய்ந்துகொண்டிருந்தாள் கண்ணீர் தாரை பெருகிய வண்ணம்.
ஜன்னலுக்கு வெளியே உடைந்த மேகப் பாறைகளி னிடையே பாதி நிலவு கூடவே வந்துகொண்டிருந்தது. முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு தானும் கூட வருவ தால் அவளைத் தேற்ற முயன்றது. அதற்குத் தெரிந்த வழி அது.
எதிர் மூலையில் அவன் உட்கார்ந்து கொண்டிருந்தான். அவளைத் தேற்ற அவன் முன்வரவில்லை. அவன் பார்வை எங்கேயோ வெறித்திருந்தது.
நெருப்புச் சுட்டுக் கன்றிப் போனதுபோல், கன்னத்தில் அந்த இடத்தை கை அவ்வப்போது தொட்டுத் தடவிப் பார்த்துக் கொண்டிருந்தது.
– குங்குமம்
– என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு… (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1992, வானதி பதிப்பகம், சென்னை.
![]() |
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க... |