கனவின் நிறம்




காலம் மாறும்போது கனவின் நிறம் மாறுவது இயற்கையின் பரிணாமம், நியதியும் கூட.
இதை மாற்ற மனித இனதுக்கு இதுவரை இயலவில்லை. இனியும் இயலாது.
முதுமை –
“அடடே…நீங்க இந்தியா போறதா சொன்னாங்க…”
“நான் போகலென்னாகூட என்னை போக வைச்சுடுவாங்க போல…” வாசுவிடமிருந்து பதில் வந்தது. குதர்க்கம் நிறைந்த பதில்தான்.
“நான் கேட்டது தப்புன்னா…” சுந்தரம் தலையை சொறிந்தார்.
“சுந்தரம், நீங்க கேள்வி பட்டது உண்மைதான். அடுத்த மாசம் போறேன்…உங்க அடுத்த கேள்விக்கும் இதோ பதில்… நான் ரெண்டு வருஷம் இந்தியாவுல தங்கப் போறேன்…”
அதற்குமேல் எதுவும் பேசினால் வாசு ஏடாகுடமாக பதில் சொல்வார். சுந்தரம் விரைந்து நழுவினார்.

நாற்பது ஆண்டு காலமாக அமெரிக்க வாழ்க்கை, வேலை, குடும்பம்…வர வர மோசமாகிவரும் அர்த்தமில்லாத அரசியல் நிலை… உலகிலேயே மிக பணக்கார நாடு, படிப்பும் பண்பும் நிறைந்த நாடு, உதவிக்கரம் நீட்டும் நாடு என்றெல்லாம் ‘புகழ்’ பரவியிருக்கும் அமெரிக்காவில் சட்டமும் நீதியும் தடுமாறி நிற்கிறது. அரசியல் மோகம் அமைதியை குலைக்கும் அளவு தலை தூக்கி ஆடுகிறது. இதை எல்லாமே பார்த்த வாசுவுக்கு, அடுத்து என்ன என்ற கேள்விக்கு உடனே பதில் தெரியவில்லை.
ஆனால் கனவு – ஒரு வண்ணக்கனவே தோன்றியது. இந்தியா போய் ஆரவாரம் இல்லாத, ஓரளவு வசதியுடைய ஊரில்… வசதியிலேயே வாழ்ந்திட்ட பழக்கக் கொடுமை…மனதை கட்டுப்படுத்த முடியாத நிலை…ஒரு வருஷமாவது இருக்கணும். இன்னொரு வருஷம் இந்தியாவுல பாக்காத இடங்களை பாக்கணும்.
இதை புதுவிதமான கனவு என்று யாரும் சொல்லமுடியாது. ஆனால் வாசுவுக்கு புதுசுதான். இத்தனை வருஷமாக தோன்றாத கனவு.
தான் அமெரிக்கா வருமுன் கண்ட கனவை ஒருமுறை நினைக்காமல் இருக்கமுடியவில்லை… அந்த பழைய கனவின் நிறமே வேறாகத்தான் இருந்தது.
இளமை –
வாசுவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவனுடைய காலேஜ் புரோபெஸர் பேச்சு வாக்கிலே ‘வாசு நீ முயற்சி செஞ்சா நிச்சயம் பாஸ்டன்ல இடம் கிடைக்கும்’ என்றார்.
“எப்படி சார் நான்…?”
“நீ ஏன் அமெரிக்கா போக முடியதுன்னு நினைக்கிற?”
“இதுவரைக்கும் எப்படியோ தட்டு தடுமாறி, சில பேருங்க உதவியாலே எம். எஸ்ஸி. படிச்சிட்டேன். வேலைக்கி போயி, இருக்கற கடனை அடைக்கணும். அப்பாவால இனிமே முடியாது…நான் எப்படி அமெரிக்கா போறது?”
“உனக்கு நிச்சயம் பாஸ்டன்ல ஸ்காலர்ஷிப் கிடைக்கும். நானும் இன்னும் இரண்டு புரோபசர்களும் உனக்கு ஸ்ட்ராங்கா ரெக்கமென்டேஷன் கொடுக்க தயாரா இருக்கோம்.”
முடவனுக்கு கொம்புத்தேன். வாசுவுக்கு அமெரிக்கா! “ஸ்கோலர்ஷிப் இருக்கட்டும்…ரெக்கமென்டேஷன் ப்ளைட்டுக்கு பணம் கொடுக்குமா சார்? மற்ற செலவுங்க…நான் எங்க போறது?” இதை சொல்லி முடிப்பதற்குள் வாசுவுக்கு தலை சுற்ற ஆரம்பித்தது.
“இப்போ இருக்கறதை உன் குடும்ப நிலையை மாத்தணும்னு நீ நினைச்சா எப்படியாவது அமெரிக்கா போக முடியும்…”
புரோபெஸ்ஸர் அழுத்தமாக சொன்ன ஒவ்வொரு சொல்லும் இளம் வாசுவின் அன்றைய கனவின் வித்தாக மனதில் ஆழமாக விழுந்தது. வழிக்கு ஒளி காட்டும் சொற்கள். மணிக்கணக்காக ‘இன்ஸ்பிரேஷன் லேக்சர்’ கேட்டாகூட வராத அளவு வாசுவுக்கு மனதில் உற்சாகம் ஏற்பட்டது.
அடுத்த சில மாதங்களில் அவன் அமெரிக்கா புறப்பட்டான். ‘அந்த காலத்தில்’ அய்யாயிரம் ரூபாய் மிகப் பெரிய தொகை. எப்படியோ அவன் அப்பா பணத்தை திரட்டி வாசுவுக்கு மீண்டும் வழிகாட்டிவிட்டார். அவன் கனவு சரித்திரமானது எனலாம்.
இளமைக் கனவின் நிறம் துளிர் பச்சை என்றால், முதுமைக் கனவின் நிறம் மங்கிய பழுப்பு.
காலம் மாறும்போது கனவின் நிறம் மாறுவது இயற்கையின் பரிணாமம், நியதியும் கூட.
இதை மாற்ற மனித இனதுக்கு இதுவரை இயலவில்லை. இனியும் இயலாது.