வெலிகம ரிம்ஸா முஹம்மத்

வெலிகம ரிம்ஸா முஹம்மத்
 

ரிம்ஸா, முஹம்மத் (1978.04.20 – ) மாத்தறை, வெலிகமவைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர். இவரது தந்தை முஹம்மத்; தாய் லரீபா. இவர் வரகாப்பொலை பாபுல் ஹஸன் மத்திய மகா வித்தியாலயம், வெலிகம அறபா தேசியப் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்று கணக்கீட்டுத் துறையில் MAAT, MIAB ஆகிய பட்டங்களைப் பெற்றதுடன் தனியார் கம்பனியில் உதவிக் கணக்காளராகத் தொழில் புரிந்து வந்துள்ளார். கவிதாயினி வெலிகம ரிம்ஸா, வெலிகம கவிக்குயில், வெலிகம நிலாக்குயில் ஆகிய புனைபெயர்களில் எழுதிவருகின்றார்.

இவர் 1998 ஆம் ஆண்டிலிருந்து இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்டுள்ளார். இவரது முதலாவது ஆக்கமான ‘சமாதானமே வா’ சூரியன் FM இல் இடம்பெற்றதிலிருந்து 180 இற்கும் மேற்பட்ட கவிதைகளையும் 25 இற்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது நேர்காணல்கள், ஆக்கங்கள் மித்திரன் வாரமலர், நேத்ரா அலைவரிசையில் உதய தரிசனம், எங்கள் தேசம், தினகரன் வாரமஞ்சரியில் செந்தூரம் இதழ், மித்திரன், மெட்ரோ நியூஸ், சுடர்ஒளி போன்ற இந்திய, இலங்கைப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன. இலங்கை வானொலி முஸ்லிம் சேவை மற்றும் நேத்ரா அலைவரிசையில் கவிதை கூறியுள்ளார். சுமார் ஒன்றரை ஆண்டு காலமாக (2004 – 2005) இலங்கை வானொலி முஸ்லிம் சேவை மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சியில் பிரதிகள் தயாரித்தும் நேரடியாக குரல் கொடுத்துமுள்ளார். DAN தொலைக்காட்சியில் 2011.03.23 அன்று இவரது நேர்காணல் இடம் பெற்றது.

இவர் வங்கிக் கணக்கிணக்கக் கூற்று, கணக்கீட்டுச் சுருக்கம், கணக்கீட்டின் தெளிவு, தென்றலின் வேகம் (கவிதைத் தொகுப்பு) போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார். தற்போது BEST QUEEN FOUNDATION என்ற இலக்கிய அமைப்பின் தலைவராக இருக்கும் இவர் ‘பூங்காவனம்’ காலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் சேவையாற்றி வருகின்றார். இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணி, இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் ஆகிய இலக்கிய அமைப்புக்களில் அங்கம் வகிக்கின்றார்.

இவருக்கு இவரது சமூக சேவை, கலை இலக்கியப் பணிகளைப் பாராட்டி அகில இன நல்லுறவு ஒன்றியம் சாமஸ்ரீ கலாபதி என்ற பட்டத்தை வழங்கியுள்ளது.


தென்றல், காற்று : 07 சுகந்தம் : 25 (சித்திரை-ஆனி) 2014

தென்றலின் தேடல் – க.கிருபாகரன்

வெலிகம ரிம்ஸா முஹம்மத் 

வெலிகம ரிம்ஸா முஹம்மத் பற்றிய தகவல்கள் இலங்கையின் அனைத்து தேசியப் பத்திரிகைகள், இலங்கை, இந்திய சஞ்சிகைகள், வலைத்தளங்கள் பலவற்றிலும் தன்வலைப் பூக்களிலும்  எழுதி வரும் படைப்பாளி வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்கள் கவிதை. சிறுகதை. விமர்சனம், சிறுவர் இலக்கியம், மெல்லிசைப்பாடல் என தனது ஆளுமையை வெளிப்படுத்தி வருகிறார். இவர் தற்போது பூங்காவனம் கலை இலக்கிய வட்டத்தின் தலைவராகவும் “பூங்காவனம்” என்ற காலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் விளங்குகின்றார். இவரை “தென்றலின் தேடல்” வாயிலாக வெளிக்கொணர்வதில் “தென்றல்” பேருவகை அடைகிறது. 

வாழ்க்கைக் குறிப்பு 

தென் மாகாணம், மாத்தறை மாவட்டம், வெலிகம தேர்தல் தொகுதியைச் சேர்ந்த கவிதாயினி வெலிகம ரிம்ஸா முஹம்மத் – லரீபா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியாவார். 

வெலிகம அறபா தேசிய பாடசாலை மற்றும் வரக்காப்பொல பாபுல் ஹஸன் மத்திய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியாவார். கணக்கீட்டுத் துறையில் MAAT, MIAB ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ள இவர், தனியார் நிறுவனத்தில் உதவிக் கணக்காளராக கடமையாற்றி வருகிறார். 

இலக்கிய ஈடுபாடு 

இவர் வெலிகம ரிம்ஸா மும்மத் என்ற சொந்தப் பெயரிலும், வெலிகம கவிக்குயில், வெலிகம நிலாக்குயில் என்ற புனைப் பெயர்களிலும் எழுதி வருவதுண்டு. 2004 இல் தினமுரசு பத்திரிகையில் ‘நிர்மூலம்’ என்ற கவிதையை எழுதியதை யடுத்து இதுவரை சுமார் 300க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 10 க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 60க்கும் மேற்பட்ட நூல் விமர்சனங்களையும், சிறுவர்களுக்கான கதை, பாடல்களையும் எழுதியுள்ளார். 

இதழியல் துறை 

தற்போது பூங்காவனம் இலக்கிய வட்டம் என்ற இலக்கிய அமைப்பின் தலைவராகவும், பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் சேவையாற்றி வருகிறார். 

2013 இல் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா கற்கை நெறியை பூரணப்படுத்தியுள்ளார். 

ஊடகத்துறை 

• 1997 – 1998 ஆம் ஆண்டுகளில் சூரியன் எப்.எம், சக்தி எப்.எம். போன்ற அலைவரிசைகளில் இவரது ஏராளமான கவிதைகள் ஒலிபரப்பப்பட்டுள்ளன. சுமார் ஒன்றரை வருட காலங்களாக (2004 – 2005) இலங்கை வானொலி முஸ்லிம் சேவை மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சியில் பிரதிகள் தயாரித்தும் நேரடியாக குரல் கொடுத்துமுள்ளார். 

• 2008 டிசம்பர் 09 இல் நேத்ரா அலைவரிசையில் ஹஜ் பெருநாள் கவியரங்கத்தில் பாலகரே துஆக் கேளுங்கள் என்ற தலைப்பில் கவிதை கூறியிருக்கிறார். 

• 2009 ஜூன் 29 இல் நேத்ரா அலைவரிசையில் முஸ்லிம் நிகழ்ச்சியில் நாளும் நடப்போம் நல்வழியில் என்ற தலைப்பில் கவிதை கூறியிருக்கிறார். 

• 2011 பெப்ரவரி 13 இல் கவிஞர் திரு. சடாகோபன் அவர்களின் தலைமையில் சக்தி எப்.எம் அலைவரிசையில் கவிராத்திரி நிகழ்ச்சியில் “மெல்லக் கதவுள் மிடுக்காய் ஒளிந்தாள்” என்ற தலைப்பில் கவிதை கூறியிருக்கிறார். 

• 2012 ஆகஸ்ட் 19 ஊவா சமூக வானொலி அலைவரிசையின் விசேட நோன்புப் பெருநாள் முஸ்லிம் நிகழ்ச்சியில் “உயிர் செய்” என்ற கவிதை கூறியிருக்கிறார். 

• 2013 ஜூலை 14 இல் நேத்ரா அலைவரிசையில் முஸ்லிம் நிகழ்ச்சியில் இறையோன் தந்த மாதம் என்ற கவிதை கூறியிருக்கிறார். 

• 2013 ஆகஸ்ட் 09 இல் ஊவா சமூக வானொலி அலைவரிசையின் விசேட நோன்புப் பெருநாள் முஸ்லிம் நிகழ்ச்சியில் கவிதை கூறியிருக்கிறார். 

• 2013 ஆகஸ்ட் 09 இல் நேத்ரா அலைவரிசையின் விசேட நோன்புப் பெருநாள் முஸ்லிம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற இலங்கையின் பிரபல இசையமைப்பாளரான ஜனாப். டோனி ஹஸன் அவர்கள் இசையமைத்து, பிரபல பாடகரான ஜனாப். எம்.எம். கபூர் அவர்கள் பாடிய “வல்லோனின் ஆணை வரமாய் நினைத்தே தினமும்” என்ற இஸ்லாமிய மெல்லிசைப் பாடலை எழுதியிருக்கிறார். 

இதுவரை வெளியிடப்பட்ட நூல் வெளியீடுகள் 

  1. வங்கிக் கணக்கிணக்கக் கூற்று (கணக்கீடு) 2004 – சுஹா பப்ளிகேஷன்
  2. கணக்கீட்டுச் சுருக்கம் (கணக்கீடு) 2008 – காயத்திரி பப்ளிகேஷன் 
  3. கணக்கீட்டின் தெளிவு (கணக்கீடு) 2009 – இஸ்லாமிக் புக் ஹவுஸ் 
  4. தென்றலின் வேகம் (கவிதை) 2010 – முற்போக்கு கலை இலக்கிய மன்றம் 05. ஆடம்பரக் கூடு (சிறுவர் கதை) 2012 – ரூம் டு ரீட் 
  5. என்ன கொடுப்போம்? (சிறுவர் கதை) 2012 – ரூம் டு ரீட் 
  6. பாடல் கேட்ட குமார் (சிறுவர் கதை) 2013 – ரூம் டு ரீட் 
  7. கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை (விமர்சனம்) 2013 – கொடகே வெளியீடு 

வெளிவர இருக்கும் நூல்கள் 

  1. எரிந்த சிறகுகள் (கவிதை) 
  2. வண்ணாத்திப் பூச்சி (சிறுவர் பாடல்) 

இவரது கவிதைகளின் பாடுபொருள்கள் 

காதல், பெண்ணியம், சமூக அவலம், சீதனக்கொடுமை, போர்ச்சூழல், மானிட நேயம் என்பன இவரது பாடுபொருள்களாக காணப்படுகின்றன. 

இவர் பற்றிய குறிப்புக்கள் 

• 2004ம் ஜூலை 04 செந்தூரம் 

• 2007 பெப்ரவரியில் கலாபூஷணம் புன்னியாமீன் அவர்கள் வெளியிட்ட இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 07ல் 175 ஆவது நபராக இவரைப்பற்றிய விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

• 2007 ஜூன் இதழ் ஞானம் 

• 2008 பெப்ரவரி 3 – 9 சுடர் ஒளி பத்திரிகையின் உணர்வுகள் பகுதி 

• 2008 ஜூலை இதழ் செங்கதிர் 

• 2008 ஜூலை 20 நவமணி பத்திரிகையில் வெளியான “இலங்கை திசை பரத்தி” 

• 2009 நவம்பர் 08 (அமரர் ஸ்ரீதர் பிச்சையப்பா) மித்திரன் கலாவானம் 

• 2010 ஏப்ரல் 18 (க. கோகிலவாணி) மித்திரன் கலாவானம் 

• 2011 ஜனவரி 23 தினகரன் கதம்பம் 

• 2012 ஜனவரி, பெப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான இதழ் கவிஞன் சஞ்சிகையின் அட்டைப் படத்தில் இவரது புகைப்படத்தை பிரசுரித்து, இவர் பற்றிய தகவல்களை வெளியிட்டு கௌரவித்திருந்தது. 

• முத்துக்கமலம் இணையத்தளம் 

• விக்கிப்பீடியா வலைத்தளம் 

• காற்றுவெளி இணைய இதழ் 

இவரது படைப்புக்கள் இடம்பெற்றுள்ள பிற நூல்கள் 

• இந்தியாவில் வெளியிடப்பட்ட முள்ளிவாய்க்காலுக்குப் பின் என்ற கவிதைத் தொகுப்பில் இவரது கவிதை இடம்பெற்றுள்ளது. 

• 2011 ஜூன் மாதம் லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க் அமைப்பினால் வெளியிடப்பட்ட உன்னை நினைப்பதற்கு என்ற கவிதைத் தொகுப்பில் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. 

நேர்காணல்கள் 

• 2009 நவம்பர் 22 மித்திரன் வாரமலர் 

• 2010 ஜனவரி 20 நேத்ரா அலைவரிசை உதய தரிசனம் சிறப்பு அதிதி நேர்காணல் 

• 2010 ஆகஸ்ட் 01 – 14 எங்கள் தேசம் 

• 2011 மார்ச் 13 தினகரன் வாரமஞ்சரி செந்தூரம் இதழின் அட்டைப்படத்தில் இவரது புகைப்படத்தை பிரசுரித்து, நேர்காணல் செய்து கௌரவித்திருந்தது 

• 2011 மார்ச் 23 டேன் அலைவரிசை இன்றைய பிரமுகர் சிறப்பதிதி நேர்காணல் 

• 2013 மார்ச் இதழ் தினமகுடி சஞ்சிகையில் இவரது புகைப்படத்தை பிரசுரித்து நேர்காணல் செய்து கௌரவித்திருந்தது. 

விருதுகள், பரிசுகள் 

• 2007 இல் அகில இன நல்லுறவு ஒன்றியம் இவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி “சாமஸ்ரீ கலாபதி” என்ற பட்டத்தை கொடுத்து கெளரவித்துள்ளது. 

• 2008 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியாக மூதூர் கலை இலக்கிய ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். 

2011 இல் அல்ஹஸனாத் சஞ்சிகை நாடளாவிய ரீதியில் நடாத்திய பேனாக்கள் பேசட்டும் என்ற கவிதைப் போட்டியில் பாராட்டுப் பத்திரம் பெற்றுள்ளார். 

•2012 இல் கொழுந்து சஞ்சிகையினால் சர்வதேச மகளிர் தின விழாவில் இதழியல் துறையில் ஆற்றிவரும் பணிக்காக இவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி “சாதனைக்குரிய மகளிர் விருது” பட்டத்தை கொடுத்து கௌரவித்துள்ளது. இப்பப் 

• 2013 அரச கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கொழும்பு மாவட்ட செயலகம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த திறந்த கவிதைப் போட்டியில் முதலாம் இடம் பெற்றுள்ளார். 

• 2013 கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் தெஹிவலைப் பிரதேச செயலகம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த திறந்த கவிதைப் போட்டியில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார். 

• தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் ‘வியர்வையின் ஓவியம் உழைக்கும் மக்கள் கலைவிழா 2013 தேசிய ரீதியில் நடத்திய இலக்கியப் போட்டிகளில் பாடல் இயற்றும் போட்டியில் ‘வெயில் நிறத்து தோல் கொண்டு என்ற பாடலுக்காக மூன்றாம் இடம் பெற்றுள்ளார். 

• 2013 இன ஒற்றுமைக்கான அகில இலங்கை தேசிய கவிஞர்களின் சம்மேளனம் “காவிய பிரதீப பட்டத்தை கொடுத்து கௌரவித்துள்ளது. ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகை வருடாந்தம் நடாத்தும் 2013 அமரர் செம்பியன் செல்வன் (ஆ. இராஜகோபால்) ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் “பணம் பந்தியிலே” என்ற இவரது சிறுகதைக்காக பரிசுச் சான்றிதழ் பெற்றுள்ளார். 

இவரது ஆக்கங்கள் வெளிவந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள், சர்வதேச வானொலி 

• வீரகேசரி, தினகரன், தினக்குரல், மித்திரன், மெட்ரோ நியூஸ், சுடர்ஒளி, நவமணி, விடிவெள்ளி, எங்கள் தேசம், இருக்கிறம், வேகம், ஜனனி போன்ற இலங்கையின் முன்னோடிப் பத்திரிகைகள். 

• ஓசை, மரங்கொத்தி, ஜீவநதி, செங்கதிர், படிகள், அல்லஜ்னா, அலஹஸனாத், அஸ்ஸகீனஹ், தூது, ஞானம், நீங்களும் எழுதலாம், மல்லிகை, பேனா, மொழி, கவிஞன், தென்றல் மற்றும் இந்திய இதழான இனிய நந்தவனம் போன்ற சஞ்சிகைகள். 

• வார்ப்பு, முத்துக்கமலம், கீற்று, தமிழ் ஆதர்ஸ், பதிவுகள், ஊடறு, திண்ணை, தேனீ, இத்தியாதி… ஆகிய இணையத்தளங்கள். 

• லண்டன் தமிழ் வானொலி 

இவ்வாறாக இலக்கிய உலகில் சாதனைகள் பல புரிந்து வரும் “ரிம்சா முஹம்மத்தின்” சாதனைகள் இன்னும்- இன்னும் தொடர வேண்டுமெனத் “தென்றல்” மனதார வாழ்த்துகிறது.