மூதறிஞர் ராஜாஜி

 
C_Rajagopalachari_1944

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக 1948 முதல் 1950 வரை பொறுப்பில் இருந்தவரும், 1952 முதல் 1954 வரை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவரும், 1955-ம் ஆண்டில் பாரத ரத்னா விருதுபெற்ற முதல் இந்தியருமான மூதறிஞர் ராஜாஜியை, ஒரு சிறுகதை எழுத்தாளராக இலக்கிய உலகம் போற்றுவதில்லை. அறிஞர் அண்ணாவுக்கு நேர்ந்த கதிதான் மூதறிஞருக்கும் ஏற்பட்டது.

டிசம்பர் 1921 முதல் மார்ச் 1922 வரை மூன்று மாதங்கள் சிறையில் அடைப்பட்டுக்கிடந்த ராஜாஜி, வெளியே வந்ததும் `சிறையில் தவம்’ எனும் நூலை எழுதி எழுத்தாளரும் நூலாசிரியரும் ஆனார்.

தமிழிலும் ஆங்கிலத்திலும் 40 நூல்கள் எழுதியுள்ளார். கவிதை, கதை, நாவல் என எல்லா வடிவங்களிலும் எழுதினார். சமய, இதிகாச, தத்துவ எழுத்தில் ஒரு புதிய பாணியைப் படைத்தார்.

ஏராளமான சிறுகதைகள் எழுதிய ராஜாஜிக்கு, கதைக்கொள்கையைப் பொறுத்தவரையில் தெளிவான சிந்தனையும் கோட்பாடும் உண்டு. சிறுகதை வேறு, நாவல் வேறு என்பதையும் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தையும் அவர் மிகக் கச்சிதமாக அறிந்துவைத்திருந்தார். 1948-ம் ஆண்டில் கோலாலம்பூரிலிருந்து வெளியான `தமிழ்ச் சுடர்’ மாத இதழில், சிறுகதைப் பண்பு குறித்து ராஜாஜி எழுதிய கட்டுரை வந்தது.

`நீண்ட கதை எழுதுவதற்குவேண்டிய பொறுமையும் அவகாசமும் இல்லாமல் சுருக்கமாக எழுதப்பட்ட கதை சிறுகதை ஆகும் என்று யாராவது எண்ணினால், அது தவறாகும். சிறுகதை வேறு, பெருங்கதை வேறு. அளவு வித்தியாசம் மட்டுமல்ல, வகையே வேறு. ஆலமரம், புளியமரம் முதலிய மரங்கள் ஒரு சாதி, கிளைகளின்றி ஒரே தண்டாக வளரும் தென்னை, பனை, கமுகு முதலிய மரங்கள் வேறு சாதி. அதைப்போல் சிறுகதை வேறு, பெருங்கதை வேறு.

சிறுகதை நெடுங்கதையைப்போல் நீடித்த ஒரு காலப்போக்கையோ அல்லது ஒரு கதாநாயகனுடைய வாழ்க்கை முழுவதையுமோ சித்திரிக்காது. தனிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தை மட்டிலும் எடுத்துக்கொண்டு சித்திரிப்பது சிறுகதை. சிறுகதையில் நிகழ்ச்சிச் செறிவு அதிகமாகக் காணப்பட மாட்டாது. சம்பவங்கள் குறைந்த எண்ணிக்கையாய்த்தான் இருக்கும். ஆனால், கதைக்கட்டு சாமர்த்தியமாகப் பதிந்திருக்கும். பாத்திரங்கள் பளிச்செனத் தூக்கிக்காட்டும் குண விசேஷங்களுடன் இருக்கும். நல்ல சிறுகதைக்கு அடையாளம் ஒன்றே. அதைப் படித்து முடிக்கும்போது நல்லவர்களுடைய மனதில் மகிழ்ச்சி தோன்றி உள்ளம் பூரிக்கும்.’

மதுவிலக்குப் பிரசாரம், தீண்டாமை ஒழிப்பு போன்ற அன்றைய காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளுக்குத் துணையாகப் பிரசாரம் செய்யும் நோக்குடன் நிறைய கதைகள் எழுதியவர் ராஜாஜி. அவர் எப்போதுமே ஓர் ஒழுக்கவாதி. ஆகவே, சிறுகதை உள்ளிட்ட எந்தப் படைப்பானாலும் அவசியம் ஒரு நீதி இருக்க வேண்டும் என்பதை அவர் வற்புறுத்துவார். அதனால் அவருடைய கதைகளில் பிரசார தொனி சற்றுத் தூக்கி நிற்கும். ஆனால், `சபேசன் காபி’போல அத்தகைய பிரசாரம் ஏதுமில்லாத வாழ்க்கைக் கதைகளையும் அவர் சுவைபட எழுதியிருக்கிறார்.

“ரகுராம அய்யருக்குச் சின்ன வயதிலிருந்தே திருட்டுப் பழக்கம் உண்டு. ஒருமுறை ரயில் பயணத்தில் அரசு அதிகாரியின் சட்டைப் பையிலிருந்தே களவு எடுக்கும் அளவுக்குத் திருட்டுப்புத்தி. இத்தனைக்கும் அவர் வக்கீலுக்குப் படித்தவர். ஆனால், திருட்டுப் பழக்கம் எப்படியோ ஒட்டிக்கொண்டுவிட்டது.

வாழ்க்கையில் அவர் படிப்படியாக உயர்ந்து வருகிறார். ஒருநாள், அவருடைய சட்டையைச் சலவைக்குக் கொடுக்கிறார். அதில் மறதியாக சட்டைப்பையில் பத்து ரூபாய் இருந்துவிடுகிறது. சலவை செய்து கொண்டுவரும்போது சலவைத் தொழிலாளியான சின்னசாமி அந்தப் பத்து ரூபாயை அய்யரிடம் திருப்பித் தந்துவிட்டுச் சொல்கிறார், (ராஜாஜி `சொல்கிறான்’ என்று அக்கால வழமைப்படிதான் எழுதியிருக்கிறார்) “பாடுபட்டுச் சம்பாதிக்கலாம். இன்னொருத்தர் சொத்து நமக்கு என்னத்துக்குங்க சாமி? திருட்டுச் சொத்து நிக்குமா?” இதுகாறும் தவறு செய்துவந்த ரகுராம அய்யர், சின்னச்சாமியின் செய்கையால் மனம் திருந்துவதாக கதை முடிகிறது. ராஜாஜியின் `வண்ணான் சின்னசாமி’ கதையின் சாரம் இது. அவருடைய நீதி சொல்லும் சிறுகதைகளுக்கு, இது ஓர் உதாரணம். `குப்பையிலே குருக்கத்தி’, `ஜெயராமையர்’ போன்றவையும் இந்த வகையிலான கதைகள். ராஜாஜி வக்கீலாக இருந்ததாலோ என்னவோ, அவருடைய பெரும்பாலான கதைகளில் ஒரு வக்கீல் வந்து நின்றுவிடுகிறார்.

மடத்துக்கு அடுத்து இருக்கும் ஒரு வீட்டில் அழுகின்ற ஒரு நாயின் துயரத்தைத் தன் மனதில் ஏற்றுக்கொண்டு, அதன் துயரத்தைத் தீர்க்கும் வழி தெரியாமல் தத்தளிக்கும் மனிதராக வேங்கடேச சாஸ்திரியையும், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், புத்தக ஞானமே பெரிது என வாழும் இன்னொரு சீடரான சர்மாவையும் படைத்து இவர்களுக்கிடையிலான உணர்வுபூர்வமான வேறுபாடுகளை மையமாகக்கொண்டு உயிராபிமானத்தைச் சொல்லும் கதையாக `அத்துவைத ஆராய்ச்சி’யை எழுதியிருக்கிறார்.

`ராஜாஜி கதைகள்’, `பாற்கடல்’, `பிள்ளையார் காப்பாற்றினார்’, `நிரந்தரச் செல்வம்’ ஆகிய தொகுதிகளிலும் தனியாகவும் என 60-க்கு மேற்பட்ட சிறுகதைகளை ராஜாஜி எழுதியிருக்கிறார். மணிக்கொடியும், ஆனந்த விகடனும் சிறுகதைக்கு இடம் கொடுக்கத் தொடங்கும் முன்னரே ராஜாஜி கதை எழுதத் தொடங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 1929-ம் ஆண்டில் மதுவிலக்குப் பிரசாரத்துக்காகவே அவர் தொடங்கிய `விமோசனம்’ இதழில் அவர் கதைகள் எழுதினார். பத்து இதழ்கள் வந்தன. அதில் அவரும் தி.ஜ.ர., கல்கி, சதாசிவம், நாமகிரி போன்றோரும் கதைகள் எழுதினர்.

`தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும்’ என்ற நூலில் `தமிழில் சிறுகதை என்ற புதிய கலை வடிவம் தோன்றி சில ஆண்டுகளே ஆகியிருந்த அந்தத் தொடக்க நாள்களிலேயே அந்தப் புதிய கலை வடிவத்தை ஆளத் தொடங்கி, அதுவரையிலும் சிறுகதை எழுதிய யாரும் சிந்திக்காத புதிய துறைகளில் சிந்தனையைச் செலுத்தி கதைகளை எழுதியவர் ராஜாஜி. இதனால்தான் `சிறுகதைப் பொருள் விரிவுக்குச் சேவை செய்தவர்’ என்றும், `அரசியல் கொள்கைகளை மக்களிடையே பரப்பும் ஆக்க இலக்கியத்தைச் சிருஷ்டித்த சமீப கால எழுத்தாளர்களில் முக்கியமானவர்’ என்று சிட்டியும் சிவபாதசுந்தரமும் குறிப்பிடுகின்றனர்.

மார்க்ஸிய அறிஞரான இலங்கைப் பேராசிரியர் கா.சிவத்தம்பி, தன்னுடைய `தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற நூலில்,

`ஆரம்ப காலத்தில் எழுதப்பட்ட கதைகள், பிற்காலத்தில் எழுதப்பட்ட கதைகளிலும் பார்க்க உருவ அமைதிச் சிறப்புக்கொண்டவையாக விளங்குகின்றன. ஆரம்ப காலத்துக் கதைகளில், சம்பவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து லட்சியத்தை வற்புறுத்திவந்தார். ஆனால், பிற்காலப் பிரிவில் எழுதிய கதைகளில் கருத்தையே பிரதானமாகக்கொண்டு எழுதினார். எனவே, அவரது பிற்காலக் கதைகள் அளவால் குறுகியனவாகவே உள்ளன. கருத்தையே முக்கியமானதாகக்கொண்டதால் கதை கூறும் முறைமையிலும் மாற்றம் ஏற்பட்டது. கதைகளில் சம்பவ வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கருத்தையே கதையின் பிரதான அம்சமாகக்கொண்டு ராஜாஜி எழுதியதால், அவர் கையாளும் உரைநடை உணர்ச்சிப் புலப்பாட்டைக் காட்டாது தர்க்கரீதியான அமைப்பைக்கொண்டதாக விளங்கும்.

ராஜாஜியின் அறிவு முதிர்ச்சிக்கு மக்களிடத்தில் இருந்த செல்வாக்கே அவரது எழுத்துகளுக்கு மதிப்பைக்கொடுத்தது. அரசியலில் இருந்த புகழால் இலக்கியத் துறையில் பெரும்பெயர் பெற்ற ராஜாஜி, தமது எழுத்துத்திறனால் இலக்கியத் துறையிலும் தமக்கு நிரந்தரமான ஓர் இடத்தைப் பெற்றுக்கொண்டார். `சமீபகால இலக்கிய வரலாற்றில், அரசியலை இலக்கியத்துக்குள் கலந்தோருள் ராஜாஜி முதன்மையானவர்’ என்று சரியாகக் குறிப்பிடுகிறார்.

தன்னுடைய கதைகள் பற்றி ராஜாஜியே சொன்ன வாசகங்கள், இந்த இடத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. “இந்தச் சிறுகதைகளிலே, பெரியவருக்காக எழுதியவை சிறியவருக்காக எழுதியவை இரண்டு வகைக் கதைகளிலுமே கலையம்சம் குறைவாக இருக்கலாம். எனது சிறுகதை உத்தியில் இலக்கிய மதிப்பீட்டாளர்கள் குறைகூடச் சொல்லலாம். ஆனால், அந்தக் குற்றச்சாட்டை நான் பொருட்படுத்தவில்லை. ஏனென்றால், இந்தக் கதைகளெல்லாம் நான் வெறும் பொழுதுபோக்காக எழுதவில்லை. என் நாட்டு மக்களுக்கு என்னுடைய எந்தக் கருத்து நன்மைபயக்குமோ, மக்களின் முன்னேற்றத்துக்கு எந்த அனுபவ உண்மை பயன்படுமோ அதைக் கதைபோலச் சொல்ல வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். வெறும் கதையழகு, கலையழகுக்காக நான் இவற்றை எழுதவில்லை. என் அனுபவத்தில் நான் கண்ட சில உண்மைகளை என் நாட்டு மக்களுக்குச் சொல்கிறேன், அவ்வளவே.”

ஆனால், இந்த வாதம் எனக்கு ஏற்புடையதாக இல்லை. கலையழகோடு கருத்தைச் சொன்னால் இன்னும் ஆழமாக வாசக மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதானே உண்மை. கருத்தையும் கலையமைதி/கலையழகு இரண்டையும் எதிரெதிராக நிறுத்துவது எந்த வகையிலும் நியாயமல்ல. உயிரைப் பிழிந்து கதை எழுதிய கு.ப.ரா-வின் கதைகளை வெறும் ஒழுக்க மீறல் கதைகளாகப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர் ராஜாஜி என்பதும் இங்கே குறிப்பிடவேண்டிய செய்தி. `சொல்வதை’விடவும் `உணர்த்துவதே’ அவர் சொல்லும் `பயன்பாட்டுக்கும்’ பொருத்தமானது. அன்று முதல் இன்று வரை மதுவிலக்குப் பிரசாரக் கதைகள் எத்தனை வந்துவிட்டன? குடிப்பழக்கம் அதனால் குறைந்துவிட்டதா என்ன? அத்தகைய கதைகள் எவர் மனதைத் தொட்டன?

ஆச்சர்யம் என்னவெனில், அந்தக் காலத்தில் ராஜாஜியின் உயிர்த்தோழராக விளங்கிய கல்கியை, பரம வைரியாக பாவித்துத் தன் கட்டுரைகளில் சாகும் பரியந்தம் உரித்தெடுத்த புதுமைப்பித்தன் ராஜாஜியின் எழுத்துகள் மீது மென்மையான அணுகுமுறையும் பார்வையும்கொண்டிருந்தார் என்பதுதான்.

“எனக்கு ஒரு சப்-ரெஜிஸ்தாரைக் கண்டால் எப்போதும் பயம். அவருக்கு வயதும் அனுபவ முதிர்ச்சியின் எல்லையைக் காண்பிப்பது. அவர் `காம்பு’ செய்யும் இடங்களில் எல்லாம் தமது ரெஜிஸ்திரார் உத்தியோகத்தின் செல்வாக்கை உபயோகித்து, கம்பராமாயணப் பிரசங்கம் செய்துவருவார். அந்த நண்பரின் பிரசங்கங்களைக் கேட்கும் அனுபவம் எனக்கு உண்டு. அதிலிருந்துதான் எப்போதும் இந்த பயம்.

அதிலிருந்து குறிப்பிட்ட ஒரு துறையில் பிரபலமோ அதிகாரமோ பெற்றிருக்கும் ஒருவர், வேறு ஒன்றில் ஈடுபட்டு நமது மதிப்பைப் பெற வேண்டும் என்று முயன்றால், அவரைவிட்டு ஒரு காத வழி விலகிச் செல்வதே எனது பழக்கம்.

அதற்கு ஒரு விதிவிலக்கு, ஸ்ரீ சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்.

“ராஜாஜியின் கதைகளைப் பொறுத்தவரையில், அவை யாவும் பிரசாரக் கதைகள் என்று ஒரேயடியாகச் சொல்லிவிடலாம். ஆனால், பிரசாரப் போக்கினால் அவற்றின் நயம் சிறிதும் குறைந்துவிடவில்லை. நான் சொல்வதற்கு விதிவிலக்காக, இரண்டோர் உதாரணங்களும் இருக்கின்றன. ஆனால், பொதுவாக அவரது கதைநயம் பிரசாரத்தினால் சுவை குறைந்திடவில்லை” என்கிற புதுமைப்பித்தனின் கருத்து, கவனமாகச் செதுக்கப்பட்டது என்பது தெரிகிறது. இதே புதுமைப்பித்தன் “12.2.1946-ம் ஆண்டில் மீ.ப.சோமசுந்தரத்துக்கு எழுதிய கடிதத்தில் தமது `பத்திய வஸ்துக்கள்’ என்ற பட்டியலில் ரவா உப்புமா, போண்டா சாம்பாரோடு ராஜாஜி கதைகளையும் சேர்த்து எழுதியுள்ளார். இவற்றை அனுபவித்தால் நோய்தான்” என்கிறார். தனிமனிதர்களை அனுசரித்து புதுமைப்பித்தனின் அளவுகோல் மாறுபடுவதை ஆய்வாளர் ராஜ்கௌதமன் சரியாகச் சுட்டிக்காட்டுகிறார் (புதுமைப்பித்தன் எனும் பிரம்ம ராச்சஷ் நூல் – ராஜ்கௌதமன்.)

மேலும், ராஜ்கௌதமன் குறிப்பிடுவது, “ராஜாஜியின் ஏனைய கதைகள் குடியின் கேடு, அந்நியப்பொருள் மோகம், சூதின் கேடு, உள்நாட்டுக் கைத்தறி நெசவின் வீழ்ச்சி, கைராட்டை நூல், கைத்தறித் துணி, கதராடை ஆகியவற்றின் பெருமை, தீண்டாமை ஒழிப்பு, அரிஜன ஆலயப் பிரவேசம் ஆகிய காந்தியக் கருத்துகளின் விவரிப்புகளே. பிரசாரத்தை நீக்கிவிட்டுப் பார்த்தால், ராஜாஜி கதைகளில் குறிப்பிடத்தக்கது அவற்றின் கதை அம்சமே. புதுமைப்பித்தனும் சில கதைகளில் காந்தியக் கருத்துகளைக் கையாள்கிறார். ராஜாஜி கதைகளில் கருத்துக்கள் பாத்திரங்களை நடத்திச் செல்கின்றன. .புதுமைப்பித்தன் கதைகளில் கருத்துக்கள் கலாபூர்வமாக விவாதிக்கப்படுகின்றன.மனிதமயமாக்கப்படுகின்றன.”

ராஜாஜி தொடர்ந்து சிறுகதைகள் எழுதவில்லை.

1954-ம் ஆண்டில் சென்னை முதலமைச்சர் பதவி காமராஜிடம் கைமாறியபோது, ராஜாஜிக்கு வயது 76. அதன் பிறகு ராமாயணத்துக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் இறங்கினார். `பெரியார் ராமாயணத்தைக் கிழி கிழி எனக் கிழித்துக்கொண்டிருந்த காலத்தில், அதற்கு எதிர்வினையாகவே ராஜாஜி இதைச் செய்தார்’ என்ற கருத்து உண்டு. `கல்கி’ வார இதழில் 23 மே 1954 முதல் 6 நவம்பர் 1955 வரை `சக்கரவர்த்தித் திருமகன்’ எனும் பெயரில் ராமாயணச் சுருக்கத்தைத் தொடராக எழுதினார். ராஜாஜியின் தந்தை பெயர் சக்கரவர்த்தி வேங்கடார்யா ஐயங்கார். ஆகவே, `சக்கரவர்த்தித் திருமகன்’ எனும் தலைப்பு ஒருவகையில் ராஜாஜிக்கேகூடப் பொருத்தமானதுதான் என்றெல்லாம், அவரது அன்பர்கள் பேசினர். அந்தத் தொடர் மலிவுப் பதிப்பாக 1956 மார்ச் மாதம் ஒரு ரூபாய் விலையில் நூலாக வந்தபோது, தொடர்ந்து 33 பதிப்புகள் கண்டு லட்சக்கணக்கான பிரதிகள் விற்றுத் தமிழ்ப் புத்தக விற்பனையில் சரித்திரம் படைத்தது. அதுமட்டுமன்று, அதற்கு சாகித்திய அகாடமி பரிசும் 1958-ம் ஆண்டில் கிடைத்தது. `பழைய இதிகாசம் ஒன்றைச் சுருக்கி எழுதியதற்கு, பரிசா?!’ என்று இலக்கியவாதிகள் வெகுண்டனர். அகாடமியின் போக்கைக் கண்டித்து விஜயபாஸ்கரன் நடத்திய இடதுசாரி இதழான `சரஸ்வதி’ இதழில் க.நா.சுப்பிரமணியம், தொ.மு.சி.ரகுநாதன், டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன் முதலானோர் எழுதினர். சாகித்திய அகாடமியின் விருது வரிசையில் மூன்றாவதாகப் பரிசு வாங்கியவர் ராஜாஜி. முதல் விருது 1955-ம் ஆண்டில் ரா.பி.சேதுப்பிள்ளையின் `தமிழின்பம்’ கட்டுரைத் தொகுப்புக்குக் கிடைத்தபோதே சலசலப்பு எழுந்தது. இரண்டாவது விருது, ராஜாஜியின் சீடர் கல்கி கிருஷ்ணமூர்த்திக்கு 1956-ம் ஆண்டில் `அலை ஓசை’ நாவலுக்காக வழங்கப்பட்டது.

`குழந்தைகளுக்கான கதைகளும் எழுதினார் ராஜாஜி. சிறுவர்களை ஒன்றும் அறியாதவர்கள், அவர்களுக்குப் பெரியவர்களின் உபதேசம் தேவை என்ற எண்ணத்தை, முற்றிலும் இந்தக் கதைகளில் உடைத்துவிட்டார் ராஜாஜி. நன்கு புரிந்துகொள்ளக்கூடிய பக்குவமுடையவர்களை வைத்துக்கொண்டே கதைகளைச் சொல்லியிருக்கிறார்’ என்று ராஜாஜியைப் பற்றி இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் நூல் எழுதிய ஆர்.வெங்கடேஷ் குறிப்பிடுகிறார்.

ராஜாஜி-கல்கி-சதாசிவம்-எம்.எஸ்.சுப்புலட்சுமி-ரசிகமணி ஆகியோர் நட்சத்திர நண்பர்களாக அன்றைய நாள்களில் மதிக்கப்பட்டவர்கள்.
ராஜாஜி கவிஞர் அல்லர். ஆனால், சில பாடல்களை எழுதியுள்ளார். அவர் எழுதி இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடி உலகெங்கும் புகழ்பெற்ற ஒரு பாடல் `குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா…’ என்ற பக்திப்பாடல்.
ராஜாஜி புனைந்த அந்தப் பக்திப்பாடலின் பின்னணியில், சோகமான ஒரு முரணைக் குறிப்பிடுவர் சிலர். ராஜாஜி, தம் 37-ம் வயதில் மனைவி அலர்மேல்மங்கையை இழந்தார். அப்போது அவருடைய கடைக்குட்டி லட்சுமிக்கு மூன்று வயது. மூத்த மருமகன் வரதாச்சாரி இறந்தபோது, மகள் நாமகிரிக்கு 26 வயது. இளைய மருமகன் தேவதாஸ் காந்தி மறைந்தபோது, மகள் லட்சுமிக்கு 45 வயது. காந்திஜியின் மகன்தான் தேவதாஸ். இத்தகைய இழப்புகளையும் வாழ்க்கையில் பல இடர்களையும் சோதனைகளையும் சந்தித்தவண்ணம் இருந்த அவரால், `குறை ஒன்றும் இல்லை…’ என்று எப்படிப் பாட முடிந்தது என்பதை அதிசயமாகப் பார்த்தவர் பலர்.

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா…
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா…
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா கண்ணா திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா – உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா – உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

யாதும் மறைக்காத மலையப்பா
யாதும் மறைக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்குன்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

10-12-1878-ம் ஆண்டில் பிறந்த ராஜாஜி, 25-12-1972-ம் ஆண்டில் காலமானார்.

– 17 Mar 2018 – ‘அரசியல்வாதி’ ராஜாஜி தெரியும்… ‘எழுத்தாளர்’ ராஜாஜியிடம் என்ன விசேஷம்?! கதைசொல்லிகளின் கதை – பாகம்-16 – ச.தமிழ்ச்செல்வன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *