பாவேந்தர் பாரதிதாசன்

 

பாவலர் வாழ்க்கை பயன்மரம், ஊருணி.
யாவரும் கொள்வீர் இனிது.

பாவேந்தர் வாழ்க்கைக் குறிப்புகள் – மன்னர் மன்னன்

1891-

ஏப்ரல் 29, புதன் இரவு 10-15 மணிக்குப் புதுவையில் சுப்புரத்தினம் பிறந்தார். தந்தை கனகசபை, தாய் இலக்குமி, உடன் பிறந்தோர் : தமையன் சுப்பராயன், தமக்கை சிவகாமசுந்தரி, தங்கை இராசாம்பாள்.

1895-

ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் தொடக்கக்கல்வி. இளம் வயதிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றார். பாட்டிசைப்பதிலும் நடிப்பதிலும் ஊரில் நற்பெயர் பெற்றார். பத்தாம் வயதிலேயே சுப்பு ரத்தினத்தைப் பெற்றதால் புகழ்பெற்றது புதுவை.

1908-

புதுவை அருகில் உள்ள சாரம்முதுபெரும் புலவர்(மகா வித்துவான்) பு. அ. பெரியசாமியிடமும், பின்னர், பெரும்புலவர் பங்காரு பத்தரிடமும், தமிழ் இலக்கண-இலக்கியங்களையும், சித்தாந்த-வேதாந்தப் பாடங்களையும் கசடறக் கற்றார். மாநிலத்திலேயே முதல் மாணவராகச் சிறப்புற்றார். புலவர் சுப்புரத்தினத்தை, வேணு(வல்லூறு) நாயகர் வீட்டுத் திருமணத்தில் பாரதியார் காணும் பேறு பெற்றார். பாரதியாரின் தேர்வுத் ‘தராசி’ல் நின்றார்; வென்றார். நட்பு முற்றியது; பாரதியாரின் எளிய தமிழ், புலமை மிடுக்கேறிய சுப்புரத்தினத்தைப் பற்றியது.

1909-

கல்வி அதிகாரி கையார் உதவியால், காரைக்கால் சார்ந்த நிரவியில் ஆசிரியப்பணி ஏற்றல்.

1910-

வ. உ. சி. யின் நாட்டு விடுதலை ஆர்வத்தால் கனிந்திருந்த புலவர்-பாரதியார், வ. வே. சு. , டாக்டர். வரதராசுலு, அரவிந்தர் போன்றோர்க்குப் புகலிடம் அளித்தல், தம் பெற்றோர்க்குத் தெரியாமல் மேல்துண்டில், வடித்த சோறு கொடுத்தல். ஓரோர் அமையங்களில் செலவுக்குப் பணம் தருதல் காவல் நாய்களின் வேட்டையிலிருந்து தப்ப உதவல். பாரதியாரின் ‘இந்தியா’ ஏட்டை மறைமுகமாகப் பதிப்பித்துத் தருதல் ஆஷ் கலெக்டரைச் சுட்ட துப்பாக்கி பாவேந்தர் அனுப்பியதே.

1916-

தந்தையார் (23-1-16) இயற்கை எய்தல்.

1918-

பாரதியாருடன் நெருங்கிப் பழகிய பழக்கத்தால் சாதி, மதம் கருதாத தெளிந்த உறுதியான கருத்துகளால் ஈர்ப்புற்றுப் புலமைச் செருக்கும் மிடுக்கும் மிகுந்த நடையில் எழுதும் தேசிய, தெய்வப் பாடல்களைப் பழகு தமிழில் எழுதுதல். புதுவை, தமிழக ஏடுகளில், புதுவை. கே. எஸ். ஆர்; K. S. R. , கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல் காரன். கே. எஸ். பாரதிதாஸன் என்ற பெயர்களில் பாடல், கட்டுரை, கதை, மடல்கள் எழுதுதல், 10 ஆண்டுக்காலம் பாரதியார்க்கு உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் தோழனாய் இருந்தார்.

1919-

திருபுவனையில் ஆசிரியராக இருக்கையில் பிரெஞ்சு அரசுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று குற்றம்சாட்டி 1ரு ஆண்டு சிறை பிடித்த அரசு, தவறுணர்ந்து விடுதலை செய்தது. வேலை நீக்க, வழக்கில் புலவர் வென்று மீண்டும் பணியில் சேர்தல்.

1920-

இந்திய விடுதலை அறப்போராட்டத்தில் பங்கேற்றல், புவனகிரி பெருமாத்தூர் பரதேசியார் மகன் பழனி அம்மையை மணத்தல். தம் தோளில் கதர்த்துணியைச் சுமந்து தெருத்தெருவாய் விற்றல்.

1921-

செப்டம்பர் 19-தலைமகள் சரசுவதி பிறப்பு (12-11-21) பாரதியார் மறைவு.

1922-

K. S. பாரதிதாஸன் என்ற புனைபெயரைத் தொடர்ந்து பயன்படுத்தி, தேச சேவகன்; ‘துய்ய ளேச்சு’, ‘புதுவை கலைமகள்’, ‘தேசோபகாரி’, ‘தேச பக்தன்’, ‘ஆனந்தபோதினி’, ‘சுதேசமித்திரன்’ இதழ்களில் தொடர்ந்து பாடல், கட்டுரை, கதைகள் எழுதுதல்.

1924-

சோவியத்நாட்டு மாவீரர் இலெனின் இழப்பிற்குப் பாடல்.

1926-

ஸ்ரீ மயிலம் சுப்ரமணியர் துதியமுது-நூலால் சிந்துக்குத் தந்தையாதல்.

1928-

நவம்பர்-3, கோபதி (மன்னர்மன்னன்) பிறப்பு, தன்மான (சுயமரியாதை) இயக்கத்தில் பெரியார் ஈ. வெ. ராவுடன் இணைதல். தாமும் தம் குடும்பமும் பகுத்தறிவுக் கொள்கையை மேற்கொள்ளல். குடும்பத் திருமணங்களில் தாலியைத் தவிர்த்தல்.

1929-

‘குடியரசு’, ‘பகுத்தறிவு’ ஏடுகளில் பாடல், கட்டுரை, கதை எழுதுதல்; குடும்பக் கட்டுப் பாடு பற்றி இந்தியாவிலே முதன்முதல் பாட்டெழுதிய முதல் பாவலர் என்ற சிறப்புப் பெறல்.

1930-

பாரதி, புதுவை வருகைக்கு முன்னும் பின்னும் பாடிய, சிறுவர் சிறுமியர் தேசிய கீதம்; தொண்டர் நடைப்பாட்டு; கதர் இராட்டினப்பாட்டு நூல் வடிவில் வெளியிடப்பட்டன. தொடர்ந்து சஞ்சீவி பர்வதத்தின் சாரல் : தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு நூல்களை ம. நோயேல் வெளியிடல். டிசம்பர் 10-ல் ‘புதுவை முரசு’ கிழமை ஏட்டின் ஆசிரியர் பொறுப்பேற்றல்.

1931-

‘புதுவை முரசு’ (5-1-31) ஏட்டில் செவ்வாய் உலக யாத்திரை – கட்டுரை வரைதல். சுயமரியாதைச்சுடர் என்ற 10 பாடல்களைக் கொண்ட நூலைக் ‘கிண்டற்காரன்’ என்ற பெயரில் வெளியிடல். (குத்தூசி குருசாமிக்கு இந்நூல் படைப்பு) 18-8-31 இரண்டாம் மகள் வசந்தா (வேனில்) பிறப்பு. பள்ளி ஆண்டு விழாவில் ‘சிந்தாமணி’ என்ற முத்தமிழ் நாடகம் எழுதி இயக்குதல்.

1932-

வாரிவயலார் வரலாறு அல்லது கெடுவான் கேடு நினைப்பான் – புதினம் வெளியிடல். வெளியார் நாடகங்கட்கும், தன்மான, பொதுவுடைமைக் கூட்டங்களுக்கும் பாட்டெழுதித் தருதல்.

1933-

ம. சிங்காரவேலர் தலைமையில் சென்னை ஒயிட்சு நினைவுக் கட்டடத்தில் (31-1-33) நடந்த நாத்திகர் மாநாட்டில் கலந்துகொண்டு வருகைப் பதிவேட்டில் ‘நான் ஒரு நிரந்தரமான நாத்திகன்’ என்று எழுதிக் கையெழுத்திடல்.

1933-

மூன்றாம் மகள் ரமணி பிறப்பு

1934-

மாமல்லபுரத்திற்கு முழுநிலா இரவில் தோழர் ப. ஜீவானந்தம், குருசாமி, குஞ்சிதம், நயினா சுப்பிரமணியம், மயிலை. சீனி. வேங்கடசாமி, மாயூரம் நடராசன், சாமி சிதம்பரனார், எஸ். வி. இலிங்கம், நாரண துரைக்கண்ணனுடன் படகில் செல்லல்; ‘மாவலிபுரச் செலவு, -பாடல் பிறந்தது. 9-9-34-ல் இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகம் பெரியார் தலைமையில் நடைபெறல். (குருசாமி இரணியன் – திருவாசகமணி கே. எம். பாலசுப்பிரமணியம் – பிரகலாதன்)

1935-

இந்தியாவின் முதல் பாட்டேடான – ‘ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்’ தொடக்கம். இதற்கு உறுதுணையாக இருந்தவர். எஸ். ஆர். சுப்பிரமணியம் (சர்வோதயத் தலைவர். )

1936-

பெங்களூரில் பதினான்கு நாள் தங்கி (1-4-36) ‘தேசிங்குராஜன்’ வரலாற்றை அட்கின்சு குழுமத்தார்க்கு ‘இஸ் மாஸ்டர் வாய்ஸ்’ இசைத்தட்டுகளில் பதித்தல்.

1937-

புரட்சிக்கவி – குறுங்காவியம் வெளியிடல். ‘பாலாமணி அல்லது பக்காத்திருடன்’ திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். இதில் நடித்தவர்கள் : தி. க. சண்முகம் உடன் பிறந்தோர் அனைவரும்.

1938-

பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதியைக் குத்தூசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி வெளியிட்டனர். பொருளுதவி செய்தவர் கடலூர் தி. கி. நாராயணசாமி (நாயுடு). தமிழிலக்கியத்திலேயே பெரும் புரட்சியை உண்டாக்கியதால், பெரியார், “தன்மான இயக்கத்தின் ஒப்பற்ற பாவலர்” என்று பாராட்டினார். டாக்டர். மாசிலாமணியார் நடத்திய ‘தமிழரசு’ இதழில் தொடர்ந்து எழுதுதல். தமிழுக்கு அமுதென்று பேர் என்ற பாடலை அச்சுக் கோத்தவர் பின்னாளில் சிறப்புற்ற எழுத்தாளர் ‘விந்தன்’.

1939-

‘கவி காளமேகம்’- திரைப்படத்திற்குக் கதை – உரையாடல் பாடல் எழுதுதல். இரணியன் அல்லது இணையற்ற வீரன் நூல் வடிவில் வருதல்.

1941-

எதிர்பாராத முத்தம் – காவியம். காஞ்சி பொன்னப்பாவால் வானம்பாடி நூற்பதிப்புக் கழகத்தில் வெளியிடல். இதற்கு மேலட்டை ஓவியம் இராய் சௌத்திரி.

1942-

குடும்பவிளக்கு வெளிடல். இந்தியப் போராட்ட எழுச்சியை மறைமுகமாக ஊக்குவித்தல். இரண்டாம் உலகப்போரை – இட்லரை எதிர்த்தல். பல ஏடுகட்கும் எழுதுதல்.

1943-

பாண்டியன் பரிசு – காவியம் வெளியிடல்.

1944-

பெரியார் முன்னிலையில் தலைமகள் சரசுவதி திருமணம். மணமகன் புலவர் கண்ணப்பர். ‘இன்ப இரவு’ (புரட்சிக்கவி) முத்தமிழ் நிகழ்ச்சி அரங்கேற்றம். இருண்ட வீடு, காதல் நினைவுகள், நல்ல தீர்ப்பு, (நாடகம்) அழகின் சிரிப்பு ஆகிய நூல்கள் ஒன்றன்பின் ஒன்றாய் வெளியிடல். ‘சதிசுலோசனா’ என்ற திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாட்டு எழுதுதல். குடும்ப விளக்கு II வெளியிடல், செட்டி நாடு முழுதும் இலக்கியச் சொற்பொழிவு நடத்திப் பகுத்தறிவு இயக்கத்தைக் காலூன்றச் செய்தல். கலைவாணர் என். எஸ். கே. வுக்காக ‘எதிர்பாராத முத்தம்’ – நாடகமாகத் தீட்டித் தருதல். ‘கற்கண்டு’ ‘பொறுமை கடலினும் பெரிது’ இணைத்து எள்ளல் நூல் வெளியிடல்.

1945-

புதுவை, 95, பெருமாள் கோயில் தெரு வீட்டை வாங்குதல். தமிழியக்கம் (ஒரே இரவில் எழுதியது), ‘எது இசை’ நூல்கள் வெளியிடல்.

1946-

‘முல்லை’ இதழ் தொடங்கப்பட்டது. அமைதி – ஊமை நாடகம் வெளியிடல். (29-7-46) பாவேந்தர் ‘புரட்சிக்கவி’ என்று போற்றப்பட்டு ரூ. 25000- கொண்ட பொற்கிழியை, நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் பொன்னாடை போர்த்தி, அறிஞர் அண்ணா திரட்டித் தந்தார். தமிழகப் பேரறிஞர்கள் அனைவரும் வாழ்த்திப் பேசினர். 8-11-46-ல் முப்பத்தேழாண்டு தமிழாசிரியர் பணிக்குப் பின் பள்ளியிலிருந்து ஓய்வு பெறுதல்.

1947-

புதுக்கோட்டையிலிருந்து குயில் 1, 2 மாத வெளியீடு. ‘சௌமியன்’ நாடக நூல், பாரதிதாசன் ஆத்திசூடி வெளியிடுதல், சென்னையில் ‘குயில்’ இதழ். ‘ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி’ திரைப்படக் கதை, உரையாடல், பாட்டு தீட்டல். இசையமுது வெளியிடல், புதுவையிலிருந்து ‘குயில்’ ஆசிரியர் – வெளியிடுபவர். ‘கவிஞர் பேசுகிறார்’ சொற்பொழிவு நூல்.

1948-

காதலா கடமையா? காவியம்; முல்லைக்காடு, இந்தி எதிர்ப்புப் பாடல்கள், படித்த பெண்கள் (உரை நாடகம்) கடல்மேற் குமிழிகள் காவியம்; குடும்ப விளக்கு திராவிடர் திருப்பாடல், அகத்தியன் விட்ட கரடி நூல் வெளியிடல். ‘குயில்’ மாத ஏட்டிற்குத் தடை; நாளேடாக்கல். கருஞ் சிறுத்தை உருவாதல்.

1949-

பாரதிதாசன் கவிதைகள் 2ஆம் தொகுதி; சேர தாண்டவம் (முத்தமிழ் நாடகம்); தமிழச்சியின் கத்தி காவியம், ஏற்றப்பாட்டு வெளியிடல்.

1950-

குடும்ப விளக்கு குடும்ப விளக்கு V வெளியிடல்.

1951-

செப்டம்பர் 15-ல் வேனில் (வசந்தா தண்டபாணி) திருமணம் அ. பொன்னம்பலனார் தலைமையில் நடந்தது. அமிழ்து எது; கழைக் கூத்தியின் காதல் – வெளியிடல்.

அறுபதாண்டு மணிவிழா – திருச்சியில் நிகழ்வுறல் :

1952-

‘வளையாபதி’ திரைப்படம் கதை, உரையாடல், பாட்டு. இசையமுது இரண்டாம் தொகுதி வெளியிடல்.

1954-

பொங்கல் வாழ்த்துக் குவியல்; கவிஞர் பேசுகிறார் சொற்பொழிவு நூல் வெளிவரல், குளித்தலையில் ஆட்சிமொழிக் குழுவிற்குத் தலைமை ஏற்றல்.

1954-

7-2-1954 மூன்றாம் மகள் ரமணி – சிவசுப்ரமணியம் திருமணம் இராசாக்கண்ணனார் தலைமையில் நடந்தது.

1955-

புதுவைச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியுற்று அவைத் தலைமை ஏற்றல். சூன் 26-ல் மன்னர் மன்னன் – மைசூர் வீ. சாவித்திரி திருமணம். கோவை. அ. அய்யாமுத்து தலைமை. பாரதிதாசன் கதைகள், பாரதிதாசன் கவிதைகள் – மூன்றாம் தொகுதி வெளியிடல்.

1956-

தேனருவி – இசைப்பாடல்கள் வெளியிடல்.

1958-

தாயின்மேல் ஆணை : இளைஞர் இலக்கியம் வெளியிடல். தமிழகப் புலவர் குழுவின் சிறப்புறுப்பினராதல். ‘குயில்’ கிழமை ஏடாக வெளிவருதல்.

1959-

பாரதிதாசன் நாடகங்கள் : குறிஞ்சித் திட்டு காவியம் வெளியிடல்; பிசிராந்தையார் முத்தமிழ் நாடகம் தொடர்தல்; 1-11-59 முதல் திருக்குறளுக்கு வள்ளுவர் உள்ளம் என்ற உரை விளக்கம் எழுதுதல்.

1961-

சென்னைக்குக் குடிபெயர்தல். பாண்டியன் பரிசு – திரைப்படம் எடுக்கத் திட்டமிடல். செக் நாட்டு அறிஞர் பேரா. கமில்சுலபில் செக் மொழியில் பெயர்த்த பாவேந்தரின் பாடல்களைக் கொண்ட நூலைப் பெறுதல். ஜஸ்டிஸ். எஸ். மகராசன் நட்புறவு.

1962-

சென்னையில் மீண்டும் ‘குயில்’ கிழமை ஏடு. (15-4-62) அனைத்துலகக் கவிஞர் மன்றத் தோற்றம், கண்ணகி புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா. வெளியிடல். தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் இராசாசி பொன்னாடை அணிவித்துக் கேடயம் வழங்கல்.

1963-

தோழர் ப. ஜீவானந்தம் மறைவு குறித்துப் ‘புகழ் உடம்பிற்குப் புகழ்மாலை’ பாடல் எழுதுதல். சீனப் படையெடுப்பை எதிர்த்து அனைத்திந்திய மக்களை வீறு கொண்டெழப் பாடல்கள் எழுதுதல், பன்மணித்திரள் நூல் வெளியீடு. 72-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா. வழக்கறிஞர் வி. பி. இராமன் தலைமையில் நடைபெற்றது. ‘பாரதியார் வரலாறு’ திரைப்படம் எடுக்கத் திட்டமிட்டு எழுதி முடித்தல். இராசிபுரத்தில் புலவர் அரங்கசாமி கூட்டிய கவிஞர்கள் மாநாட்டில் தலைமை ஏற்றல்.

1964-

பாரதியார் வரலாற்றுத் திரைப்படத்திற்குத் தீவிர முயற்சி. சென்னை பொது மருத்துவமனையில் ஏப்ரல் 21-ல் இயற்கை எய்தல். மறுநாள் புதுவை கடற்கரையில் உடல் அடக்கம். வாழ்ந்த காலம் 72 ஆண்டு 11 மாதம் 28 நாள்.

1965-

ஏப்ரல் 21. புதுவை கடற்கரை சார்ந்த பாப்பம்மா கோயில் இடுகாட்டில் பாரதிதாசன் நினைவு மண்டபம், புதுவை நகராட்சியினரால் எழுப்பப் பட்டது.

1968-

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது சென்னை கடற்கரையில் பாவேந்தர் உருவம் நாட்டப் பெறல்.

1970-

மார்ச், கவிஞரின் ‘பிசிராந்தையார்’ நாடக நூலுக்கு சாகித்ய அகாதமி ரூ. 5000 பரிசு வழங்கியது.

1970-

சனவரி – ரமணி மறைவு.

1971-

ஏப்ரல் 29 பாவேந்தரின் பிறந்தநாள் விழா புதுவை அரசு விழாவாகக் கொண்டாடப் பெற்றது. ஒவ்வோராண்டும் அரசு விழா நிகழ்கிறது. பாவேந்தர் வாழ்ந்த பெருமாள் கோயில் தெரு 95ஆம் எண் இல்லம் அரசுடைமையாயிற்று. அங்கே புரட்சிக்கவிஞர் நினைவு நூலகம் – காட்சிக் கூடம் நடந்து வருகிறது.

1972-

ஏப்ரல் 29, பாவேந்தரின் முழு உருவச்சிலை புதுவை அரசினரால் திறந்து வைக்கப்பெற்றது.

1979-

‘கடல்மேற் குமிழிகள்’ காப்பியத்தின் பிரஞ்சு மொழியாக்கம் வெளியிடப்பெறல்.

சிரிக்கச் சிரிக்க…- மன்னர் மன்னன்

18. 4. 79

சின்ன குழந்தைக்கும்கூட மிகுந்த சுவையான கதைகளைச் சொல்லிச் சிரிக்க வைத்து விடுவார் பாவேந்தர்.

குழந்தையோடு குழந்தையாகிவிடும் உளப்பாங்கு அவருக்கு உண்டு.

துடுக்குத்தனம் செய்யும் குழந்தையை மெச்சிப் பேசுவார். சுட்டியான பிள்ளையைத் தட்டிக் கொடுப்பார்.

மக்கு-உம்மென்று இருக்கும் குழந்தையை அவருக்குப் பிடிக்காது.

சீற்றம் வந்து விட்டால், தொப்பென்று தம் நிலையினின்று நேர்மாறான போக்கில் சென்றுவிடுவார்.

புரட்சிப் பாக்கள் இயற்றுவதிலும், கனிச்சுவைக் கவிதைகள் எழுதுவதிலும் பேராற்றல் படைத்திருந்த நம் கவிஞர், உரைநடையில் தமக்கெனப் புதுவழி ஒன்றினை நாட்டியவர்.

சிறுசிறு சொற்றொடர்கள், சில நேரங்களில் முற்றுப் பெறாதனபோல் தோன்றும் புதிய உத்திகள்.

ஆனாலும்-

தமது ஆழமான சிந்தனையை-சமுதாயத்துக்குத் தாம் சொல்லிக் காட்ட விழையும் கருத்தை-மிக அருமையாகச் சொல்லி விடுவார். நளினமாகக் கூறவேண்டுமே என்ற சுற்றுவழி பாவேந்தருக்கு ஒத்து வராது. நறுக்குத் தெறித்தாற்போல் எதையும் சொல்லவேண்டும். இதுதான் உரைநடை உத்தி அவருக்கு!
இங்கே-

நீண்ட நாட்களுக்கு முன் எழுதிய கதைகளை-சொல்லோவியங்களைத் தொகுத்தளிக்கிறோம்.

பகுத்தறிவு முரசாக 1930ஆம் ஆண்டில் விளங்கி ‘புதுவை முரசு’ இதழிலும் வேறு பல ஏடுகளிலும் வெளிவந்தவை.

காலத்தால் முற்பட்டவை. கருத்துத் தெளிவில் என்றுமே புதுச்சுவை வழங்குவன.

ஏழைகளின் சிரிப்பு உங்களை எட்டுதற்கு உதவிய பூம்புகார் பிரசுரத்தார்க்கும் இந்நூலைத் தொகுத்தளித்த டாக்டர் ச. சு. இளங்கோ அவர்களுக்கும் உங்கள் சார்பில் நன்றி கூறுகிறோம்.

அணிந்துரை -டாக்டர் ச. சு. இளங்கோ

பாடல் படைப்பில் மட்டுமல்லாமல், சிறுகதை ஆக்கத்தாலும் ஒரு மதிக்கத்தக்க வேந்தராகப் பாரதிதாசன் விளங்குகிறார் என்பதற்கு ‘ஏழைகள் சிரிக்கிறார்கள்’ என்ற இந்நூல் சான்றாகிறது.

1930-32ஆம் ஆண்டுகளுக்கிடையில் வெளிவந்த ‘புதுவை முரசு’ இதழ்களிலும், பின்னர் நடத்தப்பட்ட ‘குயில்’ இதழ்களிலும் மாசிலாமணி (முதலியார்) நடத்திய ‘தமிழரசு’ இதழ்களிலும், பி. எஸ். செட்டியார் நடத்திய ‘சினிமா உலகம்’ இதழ்களிலும், காஞ்சி மணி மொழியார் நடத்திய ‘போர்வாள்’ இதழ்களிலும் இடம் பெற்ற பாரதிதாசனின் கதைகள் இந்நூலில் தொகுக்கப் பட்டுள்ளன.

சுயமரியாதைத் தந்தை பெரியார் ஈ. வெ. ரா. அவர்களின் ‘புரட்சி’ இதழில் முதன்முதல் வெளிவந்த ‘ஏழைகள் சிரிக்கிறார்கள்’ என்ற கதையின் தலைப்பே இத்தொகுப்பு நூலுக்குப் பெயராக வைக்கப்பட்டுள்ளது. துன்ப துயரங்களைச் சுமக்கின்ற அவலம் குறைவதற்காக ஏழைகள் சிரிக் கிறார்கள். ஆயினும், அவர்கள் உணர்வும் அறிவும் பெற்றெழுந்துவிட்டால் ஆதிக்கமேடுகளின் எலும்புகள் எண்ணப்பட்டு விடுவதோடு, அவை தகர்க்கவும் பட்டுவிடும் என்ற அருகதையைத் தெரிவிப்பவை இக்கதைகள் ஆகும்.

பாரதிதாசனின் படைப்புத்துறைகள் பரந்துபட்டவை; அவற்றுள் உரைநடை சார்ந்த கதைப்படைப்புகள் தனித்து எடுத்து ஆராயத்தக்க தகுதிபடைத்தவை என்பதை இந்நூல் தெளிவு படுத்துகிறது.

சிறுகதைகளும் எழுதியுள்ளார் பாரதிதாசன் என்ற செய்தி பலருக்கு வியப்பூட்டுகிற உண்மையாகத் திகழ்கிறது. கதைகளைப் பாட்டு வடிவத்தில் கூறுவதில் தொடக்கப்காலப் பாரதிதாசனுக்கு இருந்த அக்கறை, அதே அளவிற்குக் குறையாமல் உரைவடிவத்தில் கூறுவதிலும் இருந்தது.

அரசியல், இலக்கியம், சமூகம் பற்றிய நோக்கிலான வார, மாத இதழ்களில் எழுதுவது பாரதிதாசனுக்கு ஒர் இன்றியமையாத பணியாக அமைந்த பிறகு, அவற்றில் வெளிவரத்தக்க உரைவடிவப் படைப்புகளையும் செய்ய நேரிட்டது. பாட்டின் வேந்தர் என்றே அவர் சிறப்பிக்கக்பட்டதாலும், அவருடைய உரைநடைகளைத் தொகுக்கிற முயற்சியில்லாததாலும் பாரதிதாசனின் உரைநடைப் படைப்புகள் அச்சேறாமல் முடங்கிக் கிடந்தன. புரட்சிக்கவிஞரின் சிறப்புத்தன்மைகள் பாட்டில் போலவே உரைநடையிலும் ஒளிருவதால் உரைப்படைப்புகளையும் ஏற்று பாரதிதாசன் ஆராயப்படுதல் வேண்டியுள்ளது.

கதை என்பது ‘கதா’ என்ற வடசொல்லின் திரிபு எனக் கூறும் கருத்தினைப் பாரதிதாசன் ஏற்கவில்லை. “கதுவல்-பற்றுவது; தொழிற்பெயர். கது என்பது முதனிலைத் தொழிற்பெயர். இதுவே முதனிலை திரிந்த தொழிற் பெயராய்க் காது என வரும். காது-ஒலியைப் பற்றுவது. இது கது-‘ஐ’ என்ற தொழிற்பெயர் இறுதிநிலை பெற்று கதை என்றாகும். ‘கதை’ அனைத்தையும் ஒரு முதனிலையாகக் கொண்டு கதைத்தல் என்றும் குறிக்கலாம். கதை-நடந்த கேட்கப்பட்ட கருத்தைப் பற்றுவது என்று பொருள் கொள்க” (குயில், குரல்-2, இசை 12; 29. 9. 1959). கதை என்பது தூய தமிழ்க்காரணப்பெயர் என்றும் அது வடசொல் அன்று என்றும் இத்தமிழ்ச்சொல்லையே வடவர் எடுத்தாண்டு கொண்டனர் என்றும் பாரதிதாசன் சொல் விளக்கம் செய்துள்ளார்.

பாரதிதாசன் சிறுகதைகள் மட்டுமல்லாமல் நெடுங்கதைகளும் எழுதியுள்ளார். ‘கெடுவான் கேடு நினைப்பான்’

அல்லது ‘வாரி வயலார் விருந்து’ என்ற தலைப்பில் ‘புதுவை முரசு’ இதழில் பாரதிதாசன் ஒரு நெடுங்கதை எழுதி யிருப்பது அறிய முடிகிறது. எனினும் இக்கதை நமக்கு இதுவரை கிடைக்கவில்லை. ‘எல்லோரும் உறவினர்கள்’ என்ற தலைப்பிலும் ஒரு முடிவுறாத தொடர்கதையைக் ‘குயில்’ இதழில் எழுதியிருப்பதும் ஈண்டு கருதத்தகும்.

எல்லாப் படைப்புத் துறைகளையும் கருத்துகளை வெளியிடுவதற்கு உரிய கருவிகளாகவே பாரதிதாசன் கருதியுள்ளார். இந்நூலிலுள்ள சிறுகதைகளும் ஒளிவு மறைவின்றிப் பாரதிதாசனின் புரட்சிக் கருத்துகளைச் சமுதாயம் முழுவதற்கும் பயன்படும் முறையில் வற்புறுத்திக் கூறுகின்றன.

“இருக்கும்நிலை மாற்றஒரு புரட்சிமனப் பான்மை
ஏற்படுத்தல், பிறர்க்குழைத்தல் எழுத்தாளர் கடன்”

(தொகுதி 2. பக்-109)

என்று மற்ற எழுத்தாளர்களுக்கு ஆற்றுப்படுத்தியதற்குப் பொருந்தவே, அதற்குத் தானும் ஒர் எடுத்துக்காட்டாகப் பாரதிதாசன் இச்சிறுகதைப் படைப்புகளால் விளங்குகிறார். இத்தொகுப்பில் முப்பத்திரண்டு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

பாரதிதாசன் முறையாகத் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்று அவற்றைப் பிறர்க்குக் கற்பிக்கின்ற தமிழாசிரியர் தொழில் செய்தவர். அதனால் அவர் கதைகளில் தமிழாசிரியரின் தன்மைக்கு ஏற்ற முறையில் பல பாடல்களுக்கு உரை விளக்கமும் செய்துள்ளார். ‘பாலனைப் பழித்தல்’, ‘தமிழ்ப்பெண் மனப்பான்மை’ என்ற கதைகளில் இவ்வாறான உரை விளக்கங்கள் நிறைந்துள்ளன.

பாரதிதாசன் படித்த புலவராக மட்டுமல்லாமல் உணர்ச்சி பொங்குதலால் எழுச்சிபெறப் படைக்கும் கவிஞராகவும் இலங்கியமையால் சில கதைகளை வருணனை நயம் விரிவாகத் தோன்ற எழுதிச்

பாரதிதாசனின் தொடக்ககாலச் சிறுகதைகளும் பிற்காலச் சிறுகதைகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இதனால் பாரதிதாசனின் நடைவளர்ச்சியை அறிவதற்கும் இத்தொகுதி சிறப்பாகப் பயன்படுகிறது.

பாரதிதாசனின் மாணவர் கவிஞர் புதுவை சிவப்பிரகாசம் ‘பாரதிதாசன் கதைகள்’ என்ற பெயரில் புதுச்சேரி ஞாயிறு நூற்பதிப்பகச் சார்பில் 1955ஆம் ஆண்டு மே மாதம் முதற்பதிப்பினை வெளியிட்டுள்ளார். அந்நூலில் இடம்பெறாத சிறுகதைகள் பல இந்நூலில் இடம்பெற்றுள்ளமை இத்தொகுப்பின் தனித்தன்மையைச் சிறப்பிக்கும் தகுதியாகும்.

– ஏழைகள் சிரிக்கிறார்கள், பாவேந்தர் பாரதிதாசன், பூம்புகார் பிரசுரம் பிரஸ், சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *