தி.ம.பொன்னுச்சாமிப் பிள்ளை

 

தி.ம.பொன்னுச்சாமிப்பிள்ளை தமிழில் எழுதிய தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர். சைவசித்தாந்தக் கருத்துக்களை நாவலில் புகுத்தி எழுதியவர். கமலாக்ஷி என்னும் அவருடைய முதல் நாவல் 1903-ல் வெளிவந்தது.

தி.ம.பொன்னுச்சாமிப்பிள்ளை திரிசிரபுரம் தன் சொந்த ஊர் என்று குறிப்பிடுகிறார்.இரங்கூனில் பிரிட்டிஷ் அரசுக்காக பணிபுரிந்திருக்கிறார். இவர் நாவலில் வரும் சாற்றுகவியில் இருந்து இவர் ரங்கூனில் சுஜனரஞ்சனி சபா, சுகிர்த நாடக சபா போன்ற அமைப்புக்களை உருவாக்கி நாடகங்கள் அரங்கேற்றியிருக்கிறர் என்று தெரிகிறது.

தி.ம.பொன்னுச்சாமிப் பிள்ளையின் நாவல்கள் விவரணைகள் குறைவாக, நாடகம்போல உரையாடல்கள் வழியாகவே முன்னகர்பவை.தன் ஒவ்வொரு நாவலின் பத்தொன்பதாம் அத்தியாயத்திலும் ஒரு பிரசங்கியாரைக்கொண்டு நீண்ட சைவசித்தாந்தச் சொற்பொழிவை நிகழ்த்துவது இவருடைய வழக்கம். 1900-களில் ஜெ.எம்.நல்லுச்சாமிப்பிள்ளை போன்றவர்களின் முயற்சியால் சைவம் மறுமலர்ச்சி அடைந்தபோது அதில் பங்குபெற்றவர் என்று தி.ம.பொன்னுச்சாமி பிள்ளையைச் சொல்லமுடியும்.

நாவல்கள்

  • கமலாக்ஷி
  • ஞானாம்பிகை
  • சிவஞானம்
  • விஜயசுந்தரம்
  • ஞானசம்பந்தம்
  • ஞானப்பிரகாசம்

முகவுரை – கமலாக்ஷி சரித்திரம் (நாவல்), இரண்டாம் பதிப்பு: 1910, தாம்ஸன் அண்ட் கம்பெனி, மினர்வா அச்சுக்கூடத்தில் பதிப்பித்தது, சென்னை.

“முத்தமிழு நான்மறையு மானான் கண்டாய்” என்று சைவ சமயாசாரியர்களி லொருவராகிய திருநாவுக்கரசு சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய அருந்தமிழ் வேதவாக்கியப்படி சிவசொரூபமா யிருக்கத்தக்க இயலிசை நாடகமென்னும் முத்தமிழ்த் துறைகளை முழுதுணர்ந்த உத்தமப் புலவர்கட்கு யான் சொல்லுவதொன்றுண்டு. 

உலகத்தில் மானிடர் நன்மை தீமை இன்னவையென்றும் அவற்றால் விளையும் இன்ப துன்பங்கள் இன்னவையென்றும் தெரிந்துகொள்வதற்குத் தமிழில் உத்தரவேதமாகிய திருக்குற ளென்னும் முப்பா னூல் முதலாக அளவிறந்த நூல்க ளிருக்கினும், அவை யாவும் செய்யுள் நடையிலிருக்கின்றமையாலும், பன்னிரண்டு மந்திரிக் கதைகள் பஞ்சதந்திரக் கதைகள் முதலிய வசன நூல்கள் நீதி புகட்டத்தக்கவையா யிருந்தும், அஃறிணைப்பொருள்கள் ஒன்றோடொன்று உரையாடல் முதலிய அசம்பாவிதமான கற்பனா விஷயங்கள் அவற்றில் பொதிந்து கிடக்கின்றமையாலும், நாடகச சாயலாக ஆங்கிலேய பாஷையில் நவநவமான கதைகளை யியற்றி யாவர்க்கும் மகிழ்ச்சியை விளைவித்து நற்புத்தி புகட்டும் ரெனால்ட்ஸ் முதலிய அபிநவகதாக் கிரந்தகர்த்தர்களுடைய கோட்பாட்டை யனு சரித்து, கமலாக்ஷிசரித்திரம் என்னும் இதனை எழுதி வெளிப்படு த்தலானேன். இஃது பண்டிதபாமர ரஞ்சிதமா யிருத்தல் வேண்டு மென்றும், இல்லறத்துக் குரிய காரியங்களைச் செய்து முடித்தபின் அன்றாடம் வேலையற்றிருக்குங் காலத்து இதனை நமமாதரும் பொழு துபோக்காக எளிதில் வாசித்துக் களிப்படைதல் வேண்டுமென றும் யான் உத்தேசித்தவ னாதலின், அனாவசியமாகப் பாஷைநடை யைக் கடினமாக்காமல் கூடியவரையில் முழுவதுமே சம்பா ரூபமாகக் கருத்தை வெளியிட்டிருக்கின்றேன். ஆங்காங்கு அவ்வவர்களுடைய நற்குணங்களினாலும் துர்க்குணங்களினாலும் இகத்திலேயே உண்டாகக்கூடிய சுகதுக்கங்களை வாசிப்போர் கண்டறிந்து, 

“ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்க 
முயிரினு மோம்பப் படும்.” 

என்னும் தெய்வப்புலவரது கட்டளைக் கிலக்காக அனைவரும் நல்லொழுக்க முடையவராகி, 

“பரவை வெண்டிரை வடகடற் படுநுகத் துளையுட் 
டிரைசெய் தென்கட லிட்டதோர் நோன்கழி சிவணி
யரச வத்துளை யகவயிற் செறிந்தென வரிதாற் 
பெரிய யோனிகள் பிழைத்திவண் மானிடம் பெறலே.” 
(ஜீவகசிந்தாமணி) 

என்றபடி, அரிதாகக் கிடைத்த மானிடப்பிறவியா லடையவேண்டிய அறம் பொருளின்பம் வீடென்னும் புருஷார்த்தங்களை இதை வாசிப்போர் அடைவரெனச் சிவபெருமான் திருவருளைச் சிந்தித்து, இந்நூலைத் தமிழ்ச்செல்வர்களாகிய இருபாலார்க்கும் வினயத்துடன் அர்ப்பணஞ்செய்கிறேன். இந்நூலில் வழுக்க ளிருத்தல்கூடும். 

“நெல்லுக் குமியுண்டு நீர்க்கு நுரையுண்டு 
புல்லிதழ் பூவிற்கு முண்டு.” 

ஆதலின், அறிஞர் குற்றங்களை நீக்கிக் குணத்தையே கொள்வாராக.

இந்நூலின் தன்மை இஃதென அனைவர்க்கும் உபயபாஷைகளிலும் சூசியை வாயிலாக எடுத்துக்காட்டிய எனது ஆப்தர், உபயபாஷாவிற்பனராகவும், சென்னைக் கவர்ன்மென்ட் தமிழ் ட்ரான்ஸ்லேட்டர் முனிஷியாராகவும், சென்னைச் சர்வகலாசங்கத்துத் தமிழ்ப் பரீக்ஷகராகவும் விளங்கும் ஸ்ரீமான்-தண்டலம்-பால சுந்தரமுதலியாரவர்களுக்கும், சிறப்புப்பாயிரம தந்த எனது நண்பர் அருமபுலமை வாய்ந்த ஸ்ரீமான் – முத்துகிருஷ்ணபிள்ளையவர்களுக்கும், இந்நூலைப்பற்றி அபிப்பிராயம தநத வித்துவசம்பன்னர் ஸ்ரீமான்- அனவரதவிநாயகம்பிள்ளை, M.A. &.L.T. அவர்களுக்கும் மன மொழி மெய்களினால் வந்தன மளிக்கின்றேன். 

-தி.ம.பொ. 

இரண்டாம்பதிப்பின் முகவுரை

கமலாக்ஷி முதற் பதிப்பில் அச்சிட்டிருந்த பிரதிகளெல்லாம் செலவாய்விட்டன. ஆயிரம் பிரதிகளே முதற்பதிப்பில் அச்சிட் டிருந்தமையால், அவைகளை விரும்பிய அநேகர்க்குப் பிரதிகள் அனுப்பித் திருப்திசெய்ய முடியவில்லை. புத்தகம் எழுதும் பிரயாசையைவிட அதனை அச்சிடுவதில் உள்ள பிரயாசையின் மிகுதியாலும், எனக்குள்ள உத்தியோகத் தொந்தரவினாலும், இரண்டாம் பதிப்பு அச்சிட எண்ணமில்லாம லிருந்தேன்.இருந்தும், அடிக் கடி என்னைத் தூண்டியும் எனக்கெழுதியும் வந்த சிநேகிதர்களுடைய விருப்பத்தைப் பூர்த்திசெய்வதான கடப்பாடு உண்டாயிற்று. அதுவும் ஒரு நன்மையையே தந்த தெனலாம். முதற் பதிப்பை அச்சிடுங் காலத்திலேயே, கதை நிகழ்ச்சிக் கேற்ற சில படங்களை அத்துடன் சேர்க்கவேண்டு மென்று நான் எண்ணி யிருந்த துண்டு. அது செய்யக் கொஞ்சகாலம் நீடிக்குமென்று தெரிந்ததாலும், எழுதியதை விரைவில் உலகிற்குப் பயன் படுத்த வேண்டுமென்னும் விருப்பந துரிதப்படுத்தியதாலும், அப்பொழுது அவ்வாறு செய்ய முடிந்திலது. இவ்விரண்டாம் பதிப்பு அந்தக் கருத்துக்கு அநுகூலத்தை விளைத்தது ஒரு விசேஷமே. ஆதலின், கமலாக்ஷி இரண்டாம் பதிப்பாகிய இதில் சமயோசிதமான அனேக படங்களைப் பெருந்தொகைச் செலவில் தயாரித்துச் சேர்த்திருக் கிறேன். முதற் பதிப்பில் கண்டிருக்குங் கதையின் விவரங்களும், சொற்சுவை பொருட்சுவைகளும, விவேகிகள் பலராலும் நன்கு மதிக்கப்பெற் றிருப்பதால், வேறு நூதன விஷயங்களைக் கூட்ட வாவது புதுப்பிக்கவாவது செய்யவில்லை. இவ்விரண்டாம் பதிப்பை அச்சிடுவதில் எனக்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்து உதவி புரிந்த என் ஆப்த நண்பர் சென்னை பேபர் கறென்ஸி ஆபீஸ் பொக் கிஷதாரர் ஸ்ரீமான் ராய்சாயிப் T.T.கந்தசாமி முதலியாரவர் களுக்கு என் நன்றியறிதலும் வந்தனமும் உரியவை. 

இரங்கூன்,
1910 ஜூன்மீ 15௨. 
தி.ம.பொ