ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன் என்னும் ஜ.ரா.சுந்தரேசன் (பி:சூன் 1, 1932) பிரபல தமிழ் எழுத்தாளர் ஆவார். தமது தாயார் மற்றும் தந்தையார் பெயர்களை இணைத்து பாக்கியம் ராமசாமி என்னும் புனைபெயரில் நகைச்சுவைக் கதைகள் மற்றும் தொடர் புதினங்களுக்காக மிகவும் புகழ் பெற்றார். இவர் பத்மஸ்ரீ விருது பெற்ற ஜ.ரா.கிருஷ்ணமூர்த்தியின் சகோதரன். சேலத்தைச் சேர்ந்த ஜலகண்டாபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர்.
நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகாசிரியர், கட்டுரையாளர் என்ற அறிமுகத்தைவிட, அப்புசாமி, சீதாப்பாட்டி நகைச்சுவைப் பாத்திரங்களை சிருஷ்டித்த பாக்கியம் ராமசாமி என்றால் திரு. ஜ.ரா. சுந்தரேசனைச் சட்டென்று வாசக உலகுக்குப் புரியும். தாயார் பெயரையும், தந்தை பெயரையும் இணைத்து பாக்கியம் ராமசாமி என்ற புனைப்பெயர் தரித்துக் கொண்டிருக்கும் சொந்த ஊர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜலகண்டபுரம்.
1. அவர் சிருஷ்டித்த அப்புசாமி, சீதாப்பாட்டி கதாபாத்திரங்களுக்கு வயது 48. (நாற்பத்தெட்டு வருடங்களாக கதாபாத்திரங்களைக் கையாண்டு நகைச்சுவைக் கதைகள் எழுதி வருகிறார். முதல் அப்புசாமி கதை குமுதத்தில் வெளிவந்த ஆண்டு 1963.)
2. ஸ்கூல் பைனலை முடித்துக் கொண்டு தனது 16’வயதில் பத்திரிகையில் எழுதத் தொடங்கினார்.
3. 37 ஆண்டுகள் குமுதம் பத்திரிகையில் உதவி ஆசிரியர், துணை ஆசிரியர் ஆகிய பதவிகளை வகித்துவிட்டு 1990’ம் ஆண்டு ஓய்வுபெற்றார். சிறந்த நகைச்சுவைப் பிரியர். இவர் எழுதிய அப்புசாமி, சீதாப்பாட்டி நகைச்சுவை நாவல்களில் ‘அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்’, ‘மாணவர் தலைவர் அப்புசாமி’, ‘அப்புசாமியும் 1001 இரவுகளும்’ ஆகியவை பிரபலமானவை. ”நகைச்சுவைச் சிறுகதைவிட நகைச்சுவைத் தொடர்கதை எழுதுவது கடினமான முயற்சி” என்ற கருத்துள்ளவர்.
4. எஸ்.வி.வி., கல்கி, தேவன், துமிலன், கொனஷ்டை, நாடோடி, பரதன் ஆகிய எழுத்தாளர்கள் எழுதிய நகைச்சுவைக் கட்டுரைகளால் சிறுவயது முதலே ஈர்க்கப்பட்டவர்.
5. ஜ.ரா. சுந்தரேசன் என்ற அசல் பெயரில் நிறைய நாவல்கள் எழுதியுள்ளார். ‘பூங்காற்று, குங்குமம், மனஸ், கதம்பாவின் எதிரி, நெருங்கி நெருங்கி வருகிறாள்’ போன்ற நாவல்களுக்கு (humour articles) எழுதியுள்ளார். ஆங்கில நகைச்சுவை எழுத்தாளர்களில் வுட்ஹவுஸ், ஜெரோம் கே ஜெரோம், டான் காமிலோ புகழ் கிவானி காரெஷி ஆகியோரின் எழுத்துக்களில் இவருக்கு ஈடுபாடு உண்டு.
6. இவரது புனைப் பெயர்கள் அனேகம்… அப்புசாமி கதைகளுக்கு பாக்கியம் ராமசாமி என்ற பெயரையே பயன்படுத்துகிறார். மற்ற புனைப் பெயர்களில் குறிப்பிடத்தக்கவை: யோகேஷ், வனமாலி, செல்வமணி, மிருணாளினி, சிவதணல், ஜ்வாலாமாலினி.
7. சிறந்த நகைச்சுவைப் பேச்சாளர் என்று பாராட்டுப்பெற்றவர். அனேக அரிமா சங்கங்களிலும், ரோட்டரி கிளப்புகளிலும், ஹ்யூமர் கிளப்புகளிலும், தனியார் இலக்கிய கூட்டங்களிலும,் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் நிறையத் தடவைகள்பேசியிருக்கிறார். தமிழ் எழுத்தாளர் சங்கம், இலக்கிய சிந்தனை போன்ற பல அமைப்புககளில் இவரது எழுத்துக்களுக்குப் பாராட்டு கிடைத்திருக்கின்றன. ‘ஞானபாரதி’ ‘எழுத்துச் செம்மல்’ போன்ற பாராட்டுக்களைப் பெற்றவர். நகைச்சுவை என்றாலும் ஆன்மீகத்தில் ஆழமான நாட்டம் கொண்டவர். இரு ரிக் ஷாக்காரர்கள் பேசிக் கொள்வது போன்ற பாணியில் ‘பாமரகீதை’ என்னும் சிறு நூலை பகவத் கீதையின் கருத்துக்களாக ஜராசு என்ற பெயரில் எழுதியுள்ளார்.
8. சிறுவர்களுக்காக வால்ட் டிஸ்னி தயாரித்த அலாவுதீனும் அற்புத விளக்கும் கார்ட்டூன் படத்துக்குத் தமிழில் வசனம் எழுதியுள்ளார்.
9. நகைச்சுவையை தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் பரப்ப வேண்டும் என்ற நோக்கில் ‘அப்புசாமி டாட் காம்’ என்ற வலைத் தள பத்திரிகை நடத்தி வருகிறார்.
10. நலிவுற்ற நகைச்சுவை எழுத்தாளர்களின் மேம்பாட்டுக்கும், அனைவரது நகைச்சுவையையும் தொகுக்கும் பணிக்காகவும் ‘அப்புசாமி – சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை’ என்ற அமைப்பையும், அனைத்து எழுத்தாளர்களையும் வாசக ரசிகர்களையும், பொது வாழ்வில் பிரமுகர்களாக இருப்பவர்களையும் அறிமுகப்படுத்தும் ‘அக்கறை’ என்ற அமைப்பையும் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். மனைவி பெயர் : எஸ். விஜயலட்சுமி, மூன்று மகன்கள் படித்துத் திருமணமாகி உத்தியோகங்களில் உள்ளனர்.
11. வாழ்க்கையில் இசை என்பது இனிமையையும், ஒருங்கிணைப்பையும்செய்யவல்லது என்பது இவரது அசைக்க முடியாத நம்பிக்கை. சிறந்த இசைக் கலைஞர்களை கொண்டு ‘அப்புசாமி – சீதாப்பாட்டி இசைக் கூடல்’ என்ற அமைப்பை சமீபத்தில் துவங்கி நடத்தி வருகிறார்.