கா.சங்கையா

 

அமரர் கா.சங்கையா 1950இல் சிங்கப்பூரில் பிறந்தார். கலைமகள் பாடசாலையில் தனது ஆரம்பப் பள்ளி வாழ்க்கையைத் தொடங்கி அதன் பின்னர் உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியில் பயின்று தமிழ்மொழியில் தேர்ச்சி பெற்றார்.

மாணவ பருவத்திலேயே தம் தூவலைத் தூரிகையாக்கித் தாளில் தடம் பதித்தவர். 1965இலிருந்து வானொலியிலும், தொலைக்காட்சியிலும் இவருடைய படைப்புகளுக்கு வரவேற்பு இருந்தன. சிறுவர் நிகழ்ச்சிகளிலும் சிறு வயதிலேயே சிறகடித்தவர். சிறுவர் இலக்கியத்திற்கு இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமிழ் மலர், தமிழ்முரசு, தமிழ்நேசன் போன்ற இதழ்கள் இவருடைய படைப்புகளுக்குப் பட்டுக் கம்பளம் விரித்துப் பல்லாண்டு பாடியவை.

சொற்றிறம் மேலோங்க நற்றமிழில் வாசகர் நாவினை அசைத்துக் காட்டும் ஆற்றல் பெற்றவை இவரது படைப்புகள். எழில் கொஞ்சும் இயற்றமிழ் நடை நலம் வாசகர்களை உடன் உள்ளிழுத்துக் கைகோர்த்துக் கூட்டிச் செல்லும் ஆற்றலைப் பெற்றிருக்கிறது.

இவர் ஒரு சிறந்த நடிகர். வானொலி, தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளார். இவர் கராப்பான் பூச்சி, பல்லி, நாய் போன்ற அஃறிணைகளைக் கதைமாந்தர்களாகக் கொண்டு கதை எழுதுவதில் வல்லவர். அமரர் கா.சங்கையா கிட்டத்தட்ட 300 சிறுகதைகளுக்கு மேல் எழுதியுள்ளார்.

சங்கையா சில ஆண்டுகளுக்கு முன் இயற்கை எய்தினார்.

பெற்றபரிசுகள் / விருதுகள்

  • தங்கமுனை பேனா விருது 2001
  • 2005ஆம் ஆண்டு சிங்கப்பூர் எழுத்தாளர் வாரத்தின்போது முன்னிலைப்படுத்தப்பட்டார்.

எழுதிவெளியிட்டுள்ள நூல்கள்:

  • விடுதலை – 1993
  • மனித நேயம் – 2011

அமைப்புகளில் வகித்த / வகிக்கும் பொறுப்புகள்:

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், வெண்ணிலா நாடகக் குழு ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *