இலங்கையர்கோன்

 

இலங்கையர்கோன் என்ற பெயரில் எழுதிய த. சிவஞானசுந்தரம், செப்டம்பர் 6, 1915 – அக்டோபர் 14, 1961) ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளுள் ஒருவர். தமிழில் சிறுகதை தோன்றி வளர்ந்த காலத்தில் அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு செய்தவர்களில் ஒருவர் என்று பாராட்டுப் பெற்றவர். இவர் விமர்சனம், நாடகம் ஆகிய துறைகளிலும் ஈடுபாடு காட்டினார்.

வாழ்க்கைச் சுருக்கம்

இலங்கையர்கோன் யாழ்ப்பாணம் ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஈழத்து சிறுகதைத்துறை முன்னோடிகளுள் இவருடைய உறவினரான சி. வயித்திலிங்கம், சம்பந்தன் ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள். சட்டக்கல்லூரியில் பயின்று, வழக்கறிஞராகவும், திருகோணமலையில் நிர்வாக சேவையில் காரியாதிகாரியாகவும் (DIVISIONAL REVENUE OFFICER) பணிபுரிந்தார். சமஸ்கிருதம், இலத்தீன், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இவர் ஆழ்ந்த பயிற்சி பெற்றார்.

சிறுகதைகள்

ilangaiyarkonபதினெட்டாவது வயதிலே இவரது முதற் கதையான ‘ மரிய மதலேனா’ 1938 ஆம் ஆண்டில் கலைமகள் இதழில் வெளியாகிற்று. இயேசுவின் விவிலிய நிகழ்வு அடிப்படையாகக் கொண்டு இதனை எழுதினார். ஆரம்ப காலத்தில் இவர் புராண இதிகாசம், இலங்கை வரலாற்று நிகழ்வுகள் போன்றவற்றைக் கதைகளாக எழுதினார். கடற்கோட்டை, சிகிரியா, அனுலா, மணப்பரிசு, யாழ்பாடி ஆகிய கதைகளை கலைமகளில் எழுதினார். மேனகை என்ற பெயரில் புராண வரலாற்றுக் கதை ஒன்றை மறுமலர்ச்சி இதழில் எழுதினார். கலைமகள் தவிர கிராம ஊழியன், சூறாவளி, பாரததேவி, கலாமோகினி ஆகிய தமிழக இதழ்களிலும் எழுதினார்.

1944 ஆம் ஆண்டில் ஈழகேசரியில் வெளியான வெள்ளிப்பாதரசம் என்ற சிறுகதை இலங்கையர்கோனை அடையாளப்படுத்தியது. தொடர்ந்து ஈழகேசரியில் துறவியின் துறவு, ஒரு நாள், தாய், ஓரிரவு, சக்கரவாகம், கடற்கரைக் கிளிஞ்சல், ஆகிய சிறுகதைகளும், பாரத தேவி இதழில் முதற் சம்பளம், வஞ்சம் போன்ற பல கதைகள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

முப்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியியுள்ளார். இவரது பதினைந்து சிறுகதைகள் அடங்கிய ‘வெள்ளிப்பாதசரம்’ என்ற ஒரே ஒரு தொகுதி 1962 ஆம் ஆண்டு வெளியாகிற்று. இவரது கதைகள் ‘ கதைக்கோவை’ போன்ற திரட்டுகளில் வெளியாகி உள்ளன.

பிறநாட்டுக் கதைகளையும் இவர் மொழிபெயர்த்திருக்கிறார். நூலாக இவான் துர்க்கனேவின் ‘முதற்காதல்’ மட்டும் வெளிவந்துள்ளது.

நாடகங்கள்

சேக்சுப்பியரின் எழுத்துகள் இவரைப் பெரிதும் கவர்ந்தது. இதன் விளைவாக நிறைய ஒற்றையங்க, தொடர் நாடங்களை எழுதினார். அவற்றுட் பல இலங்கை வானொலியில் நடிக்கப்பட்டு பெரும் ஆதரவைப் பெற்றன. ‘பச்சோந்திகள்’, ‘லண்டன் கந்தையா’, ‘விதானையார் வீட்டில்’ ‘மிஸ்டர் குகதாஸன்’ ஆகியன மேடை நாடகங்களாயும் வெற்றிபெற்றன.

‘மாதவி மடந்தை’, ‘ மிஸ்டர் குகதாஸன்’ என்ற நாடகங்களும் நூலுருப் பெற்றுள்ளன.

மறைவு

இலங்கையர்கோன் 1961 அக்டோபர் 14 இல் தனது 46வது அகவையில் அகால மரணம் அடைந்தார். அவரது இறப்பின் பின்னர் இலங்கையர்கோனின் 15 சிறுகதைகள் கொண்ட வெள்ளிப்ப்பாதரசம் தொகுதி 1962 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

வெளியான நூல்கள்

  • விதானையார் வீட்டில் (நாடகம்)
  • கொழும்பிலே கந்தையா (நாடகம்)
  • லண்டன் கந்தையா (நாடகம்)
  • வெள்ளிப்பாதசரம் (சிறுகதைத் தொகுப்பு)
  • மாதவி மடந்தை (மேடை நாடகம்)
  • மிஸ்டர் குகதாசன் (நகைச்சுவை நாடகம்)
  • முதற்காதல் (மொழிபெயர்ப்பு நாவல்)

மதிப்புரை – கி.வா.ஜகந்நாதன், சென்னை – 07.11.62

இலங்கையில் வாழும் எழுத்தாளர்களில் தமிழ்நாட்டினருக்கு முதல் முதலில் அறிமுகமானவர்களில் ‘இலங்கையர்கோனும்’ ஒருவர். அதற்குமுன் ஆறுமுகநாவலர் முதலிய பெருமக்கள் தம்முடைய இணையற்ற இலக்கிய, சமயத் தொண்டுகளால் இலங்கைக்கும் இந்தியத் தமிழ்நாட்டுக்கும் பாலம்போல நின்று நலம் செய்தார்கள். புதிய படைப்புகளும் தமிழில் தோன்றிவரும் இக்காலத்தில் ‘இலங்கையர்கோன்’ போன்ற சிறுகதை எழுத்தாளர்கள் தாய் நாட்டுக்கும் சேய் நாட்டுக்கும் உள்ள உறவைப் பின்னும் வலிவுறச் செய்தார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன் தமிழில் முதல் முதலாகச் சிறுகதைகள் தோன்றிப் பத்திரிகைகளில் வெளிவந்தபோது, பல சிறுகதைப் படைப்பாளர்களின் பெயர்களைத் தமிழர்கள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்கள். புது முயற்சியாதலின் அவர்கள் படைப்பு களைப் பாராட்டினார்கள். அப்படிப் பாராட்டுப் பெற்றவர்களில் ‘இலங்கையர்கோனும்’ ஒருவர். அக்காலத்தில் வெளியான கதைக்கோவையில் இலங்கையர்கோன் கதையும் இடம் பெற்றது.

பிற்காலத்தில் ‘இலங்கையர்கோன் நாடகங்களைப் படைப்பதிலும் ஈடுபட்டார். அவர் அரசாங்க அலுவலில் இருந்தாலும் எழுத்துத் துறையில் இருந்த காதலை மறக்காமல் வளர்த்து வந்தார். அதற்கு அவருடைய எழுத்துக்கள் சான்று.

இப்போது அவர் அமரர் ஆகிவிட்டார். அவரை நினைப்பதற்கு உறுகருவியாக அவருடைய எழுத்துக்களைத் தொகுத்து வெளி யிடுவது நல்லது. அவருடைய சிறுகதைகளைத் தொகுத்து வெளியிடும் இந்த முயற்சியை நான் வாழ்த்துகிறேன்; பாராட்டுகிறேன்.

வாழ்க்கையின் நுட்பமான உணர்ச்சிகளில் நுழைந்து நயம் காணும் ஆற்றல் அன்பர் இலங்கையர்கோனுக்கு உண்டு. பழைய சரித்திரத்திலும் இலக்கியங்களிலும் கண்ட செய்திகளை அழகு படுத்திக் கதையாக்கும் உத்தியிலும் அவர் கைவந்தவர். இந்த இயல்புகளை இப்புத்தகத்தில் உள்ள கதைகள் புலப்படுத்துகின்றன.

மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் உரையாடல்களையும் அப்படி அப்படியே எடுத்துக்காட்டும் ஆர்வம் உடையவர் இலங்கையர்கோன் என்பதற்கும் இவற்றில் உள்ள பல பகுதிகள் சான்று பகர்கின்றன. அரிய கருத்துக்களையும் வருணனை களையும் விரவச்செய்து எழுதுகிறார்.

“சதா மண்ணைக் கிண்டுபவனுக்கு மண்ணிற்குள் எத்தனையோ ரகஸ்யங்களும், மணங்களும், புதுமைகளும், மறைந்திருக்கும்; ஆனால் அவைகளை விட மேலான ரகஸ்யங் களும் மணங்களும் புதுமைகளும் வாழ்க்கையில் எத்தனை மறைந்து கிடக்கின்றன! ஓ! வாழ்வு எவ்வளவு அற்புதமானது!”

“ஆனால் என்றுமேதான் நாம் யாரையும் முற்றாக அறிந்து கொண்டோமா… மென்மையாகப் பேசுகின்ற பொருளாளியைக் கனவான் என்கிறோம். தன் குறைகளை மறைக்க அதிகாரத் தொனியுடன் பேசும் ஒருவனை ஆளப்பிறந்தவன் என்கிறோம். இரண்டொரு பத்திரிகைகளைப் படித்துவிட்டு ஒவ்வொரு சந்தர்ப் பத்துக்கும் மேற்கோள் கூறுபவனை அறிவாளி என்று கூறுவதற்குக் கூட நாங்கள் தயங்குவதில்லை…”

“மற்றவர்களைக் கண்டனம் செய்யும்பொழுது மட்டும் தாங்கள் நன்னடத்தையின் சித்திரங்கள் என்பதுவே அவர்களுடைய நினைப்பு. அதுதான் மனித இயற்கைபோலும்.” இத்தகைய மணிமணியான கருத்துக்களை இவர் அங்கங்கே கூறியிருக்கிறார்.

இந்த நாட்டின் கணவன் மனைவி உறவு ஓர் அற்புதமான தெய்வீக உறவு; ஆரவாரமற்று ஆழ்கடலின் அமைதியுடன் விளங்கும் உறவு.

இதனை நன்குணர்ந்த ஆசிரியர் ‘சக்கரவாகம்’ என்ற கதையில் ஒரு தம்பதியைக் காட்டுகிறார். அவர்கள் உறவைப் பற்றி அவர் எழுதியிருப்பது மிகமிக அருமையானது.

காதல் என்ற வார்த்தை அவர்களுக்குத் தெரியாது. விவாகரத்து, கர்ப்பத் தடை முதலியனவற்றைப் பற்றி அவர்கள் கேள்விப்பட்டதே இல்லை… ஆனால் வாழ்க்கை , கொடிய வறுமையிலும் செம்மையாய், பிணக்குகள், தடி அடிச் சண்டைகளுக்கிடையிலும் ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் கொண்டதாய்ப் பூவுலக மோட்சமாய்ப் பரிமளித்தது… நாற்பது வருஷம் – நாற்பது நாள்!’

இத்தகைய உயர்ந்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட கதைகளை எழுத வல்லவர் இலங்கையர்கோன் என்பது பெருமைப்படுவதற்குரியது. அவர் எழுத்து வாழ்க!

இரசிகமணி கனக.செந்திநாதன் – வெள்ளிப் பாதசரம், ஜனவரி 2008

இலங்கையர்கோன் பிற நாட்டு நல்ல சிறுகதைகளையும். நாடகங்களையும் மொழிபெயர்த்துத் தமிழ் வாசகர்களுக்கு உதவினார். இலங்கைச் சரித்திரக் கதைகளையும், பழங்காலப் புராணக் கதைகளையும் மெருகிட்டுப் புதிய சிறுகதைகளாக்கினார். சரித்திர நாடகங்களையும், இலக்கிய நாடகங்களையும் எழுதினார். நாடகங்களின் தன்மைக்கு ஏற்ப செய்யுள் நடையையும், சாதாரண வழக்கு நடையையுங் கையாண்ட புதுமையை இவரது எழுத்துக்களிலே காணலாம்.

காலத்திற்குக் காலம் வளர்ச்சித் தடத்திலே மிடுக்குடன் நடந்து, இறக்கும்வரை எழுதிக் கொண்டேயிருந்த பெருமை இலங்கையர்கோனைச் சாரும்.

‘வஞ்சம்’ அவரது நல்ல கதைகளுள் ஒன்றாகும். ‘தேசிய இலக்கியம்’, ‘மண்வளம்’ என்று பிற்காலத்தில் எழுப்பப்பட்ட ‘கோஷங்களுக்குப் பொருத்தமான சிறுகதையாகத் திகழும் வெள்ளிப் பாதசரத்தை 1942ஆம் ஆண்டிலேயே எழுதிவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *