கண்ணுச்சாமி பாடியபோது…




பகுதி-1 | பகுதி-2
ஐந்து வாரங்களுக்கு முன்னர்….

அன்று காலை எட்டரை மணிக்கே காவல்துறை வண்டி வந்து விட்டது. சேகர், ஜெகன்னாத் இவர்களுடன் தடயவியல் நிபுணர் தேவிகாவும் வந்திருந்தனர். நாகராஜ் அவர்களை வரவேற்று உபசரித்தான். பிறகு அவர்கள் ” சார், நாங்க அந்த சம்பவம் நடந்த இடத்திற்கு மறுபடியும் போய் பாத்துட்டு அப்படியே இன்னும் சிலரை விசாரிப்பதற்கு வந்திருக்கோம். தேவையானால் உங்களை கூப்பிடறோம் நீங்க வாங்க. இப்போ வேற எங்கயும் போகவேண்டாம் ” என்றார் சேகர். ” சரி சார், வீட்ல தான் இருப்பேன். சாயந்திரந்தான் தலைவரைப் பார்க்கப் போகணும் ” என்றான் நாகராஜ். ” சார், அவருதான் பயங்கர ப்ரஷர் போடறாரு, கேஸை சீக்கிரம் முடிக்கச்சொல்லி” என்று சிரித்தபடியே கூறிவிட்டு வண்டியில் ஏறினார் சேகர்.
அப்போது, நாகராஜின் ஒன்று விட்ட சகோதரன் ராஜேந்திரன் அவனுடைய நண்பர்களான ஜானகிராமன், செழியன் இருவருடனும் தன் காரில் வந்து இறங்கினான்.ராஜேந்திரன் கத்தரியூரிலிருந்து நூற்றைம்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சங்கரனூர் நகரத்தில் உள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் மேலாளராக இருக்கிறான். இன்னும் மணமாகவில்லை. மிகவும் கலகலப்பாக எல்லோருடனும் பழகுவான் வயது வித்தியாசம் பார்க்காமல் கேலி கிண்டல் செய்து அரட்டை அடிப்பான். காஞ்சனாவை ஓயாமல் வம்புக்கிழுப்பான்.சமீபத்தில் இறந்த இந்திராணியும் ராஜேந்திரன் கேலிப்பேச்சில் மாட்டிக்கொண்ட நிகழ்வுகளும் உண்டு. அவர்களும் அவனுக்கு ஈடாக அரட்டை அடிப்பார்கள்.
இந்திராணி மறைவதற்கு நான்கு நாட்கள் முன்னதாக கத்தரியூருக்கு ‘ லீவு பாக்கியை எடுக்காவிட்டால் லாப்ஸ் ஆகும்.அதனால் ஒரு வாரம் லீவில் வந்தேன் ‘ என்று வந்தவன், போகும்போது இந்திராணியின் அப்படிப்பட்ட இறப்பை நினைத்து அழுகையுடன் திரும்பினான். அவனுடன் ஜானகிராமன் அடிக்கடி வருவது உண்டு. ஓரிரு முறை செழியன் வந்திருக்கிறான்.
ராஜேந்திரனுக்கு ஐந்து வயது இருக்கும்போது அவன் பெற்றோர்கள் அதாவது நாகராஜின் பெரியப்பா, பெரியம்மா ஒரு பேருந்து விபத்தில் இறந்து விட்டனர். அப்போது அவனை கத்தரியூரில் நாகராஜ் வீட்டில் விட்டுச் சென்றிருந்தார்கள். இப்படி ஒரு துக்க சம்பவம் நடந்தவுடன் நாகராஜ் பெற்றோர்கள் முருகேசன்,தங்கம் தம்பதியினர் ராஜேந்திரனை தங்கள் பிள்ளையாக எண்ணி வளர்த்து ஆளாக்கினர். அவன் சொந்த ஊரான நெல்லியனூரில் இருந்த வீட்டை விற்று அவன் பெயரில் வங்கியில் இட்டு சேமித்து வைத்தனர்.நாகராஜுக்கும் அவனுக்கும் ஏழு வயது வித்தியாசம். நாகராஜ் படிப்பில் சுமார். விவசாயத்தில் புத்திசாலி. ராஜேந்திரன் படிப்பில் மிகவும் தேர்ந்தவன். மேல் நிலை பட்டப்படிப்பு முடித்துள்ளான்.நல்ல வேலையிலும் இருக்கிறான். விடுமுறை என்றால் ராஜேந்திரன் முதலில் கத்தரியூர் வந்து எல்லா கிராமங்களுக்கும் போவது, அங்குள்ளவர்கள் அனைவரையும் சந்திப்பது, பெண்களிடம் அரட்டை, கிண்டல் செய்வது இதெல்லாம் வழக்கமாகக் கொண்டிருந்தான்.
சேகர், ஜெகன்னாத் இருவரும் அவர்களைப் பார்த்தவுடன், நாகராஜிடம் ‘அவர்கள் யார்’ என்று கேட்டுத் தெரிந்து கொண்டு மாங்கனூர் நோக்கி சென்றனர். முதலில் பழனிவேல் வீட்டிற்கு சென்று, இந்திராணி அன்றைய தினம் எங்கெல்லாம் சென்றாள், அவளுடைய தினசரி நடவடிக்கை, அவளுக்கு நெருக்கமான நண்பர்கள் யார், என்பது பற்றி கேட்டனர். ” மறுபடியும் இதையே கேக்கறேனேன்னு நினைக்காதே, பழனிவேல். உனக்கு தெரிந்ததை சொல்லு. மத்தவங்க யாருக்காவது ஏதாவது தெரிஞ்சாலும் சொல்லச்சொல்லு. சின்ன விஷயம் கூட எங்களுக்கு உதவியா இருக்கும்.” என்றார்.
அந்த நேரத்தில் அங்கு வந்த தங்கராசு, ” நான் தங்கராசு சார். இவன் கட்டையன். இந்திராணி எங்களோட தங்கச்சி மாதிரி சார். அந்த பொண்ணு அன்னிக்கு உச்சிக்கு கத்தரியூருக்கு போச்சுங்க. நான் கேட்டப்ப, அப்படியே டவுனுக்கு போய்ட்டு வருவேன்னு சொல்லிச்சுங்க. தனியாகத்தான் போச்சு” என்றான்.
அருகில் இருந்த கட்டையன் “என் பேர் கட்டையன் சார்.நான் அன்னிக்கு பஸ்ஸில முல்லைப்புரத்திலேருந்து ஊருக்கு வந்திட்டிருந்தேன். வாரச்சந்தைங்கறதால பஸ்ல கூட்டம் சார். ஒரு இடத்தில பஸ் திரும்பும்போது இந்திராணி பொண்ணு ஒரு பைக்ல உக்காந்து நம்ப ஊர் பக்கம் வந்த மாதிரி இருந்துச்சுங்க. நான் மறுபடியும் பாக்கறதுக்குள்ள பஸ் திரும்பிடுச்சு. கூட்டத்தினால வேற ஒண்ணும் தெரில சார். இங்க வந்து தங்கராசுட்ட கேட்டப்ப, அவனுக்கும் எதுவும் தெரியாதுன்னான். அப்புறம் நான் அன்னிக்கே தாழக்குடி கட்டிட வேலைக்கு போய்ட்டேன் சார் .நான் அந்த வேலைதான் செய்றேன் சார்.” என்றான்.
ஜெகன்னாத் உடனே பழனிவேலைப்பார்த்து ” உங்களுக்கு ஏதாச்சும் தெரியுமா அதைப்பத்தி? யாரு பைக்ல உங்க பொண்ணு வந்தா, ஏதாச்சும் சொன்னாளா?” என்று கேட்டார்.
“‘இல்லே சார், அன்னைக்கு காலைல நான் அவளைப் பாத்ததுதான். பணம் 200ரூபாய் கேட்டா. கொடுத்தேன். முல்லைப்புரம் போய் ஏதோ வாங்கணும்னு சொன்னா சார். அவ ரவிக்கை எல்லாம் தச்சுக்கொடுப்பா. இந்த ஊர்ல, தாழக்குடில நிறைய பேரு அவகிட்ட கொடுப்பாங்க. மூணு, நாலு கஸ்டமர் டவுன்ல கூட இருக்காங்க.ஆனால் அன்னைக்கு சாயந்திரம் அவ திரும்பல சார்.” என்று கண்ணீருடன் பழனிவேல் சொன்னான்.
பக்கத்தில் இருந்த பழனிவேல் மனைவி பவளம் அழுதுகொண்டே” இன்னும் ரெண்டு வாரத்தில ஒரு பெரிய ரெடிமேட் துணி கம்பெனி அவளை வேலைக்கு சேத்துக்கறதா சொல்லிருக்காங்கன்னு சந்தோஷமா சொல்லிட்டு போனா சார்.ஆனால் எந்த பாவியோ என் குழந்தைய நாசம் செஞ்சு அழிச்சுட்டான் சார்.” என்றாள்.
சேகர் கேட்டார். ” அந்த கம்பெனி பேரு தெரியுமா?”.
பவளம் சொன்னாள்.” சரியா தெரியல சார். முல்லைப்புரத்தில வடக்குத்தெருவில ஏதோ மணி, மெனின்னு ஏதோ சொன்னா சார். சரியா புரியல சார்.”
ஜெகன்னாத் அவளைக் கேட்டார். ” மெணிஷான்னு சொன்னாளா?”
” அது போலத்தான் காதுல விழுந்த மாதிரி இருந்தது சார்.எப்படியாவது அந்த நாசக்காரனை கண்டு பிடிச்சு தூக்குல போடுங்க சார்” என்று கோபமும் அழுகையும் கலந்த குரலுடன் பேசினாள் பவளம்.
சேகர் சொன்னார்.” நிச்சயமா அம்மா. அதுக்குதான் தீவிரமாக முயற்சி செஞ்சிட்டிருக்கோம். சீக்கிரமே பிடிச்சுடுவோம்.”
தேவிகா, ஜெகன்னாத் இருவரும் கேட்டார்கள்.” உங்க பொண்ணு உபயோகிச்ச பை, மேசை, பீரோ, பெட்டி ஏதாவது இருக்கா? நாங்க பாக்கணுமே!”
பவளம் அவர்களை வீட்டினுள் அழைத்துச் சென்று, இந்திராணியின் பொருட்களை காண்பித்தாள். தேவிகா இந்திராணியின் உடைகள் இருந்த பெட்டி, சிறிய ஷெல்ஃப், சாய்வு மேஜை இவைகளை ஆராய்ந்து பார்த்தாள். ஜெகன்னாத் அங்கிருந்த புத்தகங்கள், துணிப்பை, தையல் எந்திரம் அருகில் இருந்த டப்பாக்கள் இவைகளை சோதனை செய்தார். அதில் இருந்த துணிக்கடை பில் ஒன்றை எடுத்து பையில் வைத்துக் கொண்டார். பிறகு இருவரும் வெளியே வந்தவுடன் மூவரும் இந்திராணியின் உடல் கிடந்த இடத்திற்கு சென்றார்கள். அவ்விடத்தை சுற்றி வைக்கப்பட்டிருந்த தடுப்பைத்தாண்டி சென்று தேவிகா, ஜெகன்னாத் இருவரும் தரையில்
ஏதாவது தென்படுகிறதா என்று தேடிப் பார்த்தனர். அதேபோல் அதன் வெளிப்பக்கம் சேகர் தரையில் பார்த்து தேடினார். அவர் கண்ணில் ஏதோ பட்டது. உடனே அவர்களை அழைத்து ” தேவிகா, இங்கே பாருங்க. இது என்னதுன்னு? ” என்றார்.
தேவிகா அந்த தகடு போன்ற கூர்மையான ஒரு பொருளை எடுத்தாள். அது உடைந்த அல்லது வளைந்த சிறிய செவ்வக வடிவில் இருந்தது. ரத்தக் கறை படிந்த நிலையில் இருந்தது. “இது ஏதோ கழுத்து செயினிலே மாட்டும் பெண்டன்ட் மாதிரி இருக்கு. பிடிச்சு இழுத்ததிலே அறுந்தது போல் இருக்கு. லேப்ல போய் செக் பண்ணுவோம்.” என்று எடுத்து வைத்தாள்.
இதன் பின்னர் இவர்கள் மூவரும் அரளிக்காடு குளத்தினருகே சென்று, மணிமேகலை தண்ணீரில் மிதந்த இடத்திற்கு சென்றனர். அங்கே ஏதாவது தென்படுகிறதா என்று தேடிப் பார்த்தனர்.
ஜெகன்னாத் சட்டையை கழற்றி விட்டு தண்ணீரில் வெறும் காலுடன் இறங்கிப்பார்த்தார். கால்களால் மண்ணைத் துழாவி ஏதாவது தட்டுப் படுகிறதா என்று பார்த்தார். எதுவோ உரசியது போல் இருந்தது. உள்ளே முழுகி அதை எடுத்தார். அது சிகரெட் லைட்டர் என்று தெரிந்தது. கொஞ்ச தூரம் தள்ளி கரையோரம் ஒரு துணி ஒதுங்கி இருந்ததையும் எடுத்துப் பார்த்தார். தேவிகா அதைப் பார்த்து ” கைக்குட்டை போல் இருக்கு. ஆனால் ரத்தக்கறை திட்டாக படிஞ்சிருக்கு. இதையும் எவிடென்ஸ் பையில போடுங்க.” என்றவள், ” ட்ரெஸ் ஃபுல்லா நனைஞ்சிடுச்சே” என்றாள். ” எப்பவும் நம்ப பேக்ல இன்னொரு செட் இருக்கும். நான் சேஞ்ச் பண்ணிட்டு வரேன் ” என்று சொல்லி ஜீப் அருகே சென்றார் ஜெகன்னாத்.
பிறகு கரையில் இருந்த ஈச்சை மரங்கள் அருகே சோதனை செய்து பார்த்தனர். ஒரு ஓரத்தில் சிறிய அளவில் ஒரு உணவகம் பில் போன்ற பேப்பர், துணி ஒன்று அரைகுறையாக கிழிந்த படி இருந்தது. ” சட்டையிலிருந்து கிழிந்த பை மாதிரி இருக்கு.இதுலேர்ந்து ஏதோ சந்தன வாசனையும் வருது பாருங்க” என்றாள் தேவிகா.பக்கத்தில் இருந்த புற்களுக்குள் கைவிட்டு சேகர் சாவி ஒன்றை எடுத்தார். ” ஏதோ பீரோ சாவி மாதிரி இருக்கு. எடுத்து வைக்க. சோதனை பண்ணி பாக்கலாம் ” என்றவர் ” அது எந்த ஹோட்டல், அங்கே போய் விசாரிக்கலாம்.” என்றார்.
இதற்குப் பின் மூவரும் எலந்தனூர் சென்று அங்கே கலியமூர்த்தி, அவன் மனைவி பவானி இருவரையும் சந்தித்து விசாரணை செய்ததில், மணிமேகலை கல்லூரி படிப்பு முடித்து விட்டு, இயன் முறை கல்வி பயின்றவள். இன்னும் இரண்டு வாரங்களில் அவளை ஒரு மருத்துவமனையில் வேலை வாங்கித் தர தலைவர் தனநாதன் உறுதியளித்தார் என நாகராஜ் மணிமேகலையிடம் கூறினாராம்.
கலியமூர்த்திக்கு உதவியாக இருக்கும் ராசு சொன்னான்.” ஐயா, அன்னிக்கும் அஞ்சு மணிக்கு மேல் மணிமேகலை தலைவர பாக்க கிளம்பிட்டு இருந்தா. என்ன இப்ப கிளம்பி போறே, மத்தியானம் போகலாம்ல அப்டின்னதுக்கு, பஞ்சாயத்து தலைவர் அய்யா அழைச்சிட்டு போய் தலைவர்ட்ட உக்கார்ந்து எனக்கு வேலைய உறுதி செய்றேன்னு சொல்லிருக்காரு. அரளிக்காடு போற வழில தூங்குமூஞ்சி மரத்துகிட்டே நிக்கச்சொன்னாரு. அங்கேர்ந்து குறுக்கே போய் கருவேலனூர் வழியா டவுனுக்கு போகலாம்னு சொல்லிருக்காரு அப்படின்னு சொல்லிட்டு நடந்தா ஐயா” என்றான்.
இதையெல்லாம் குறித்துக் கொண்டு மூன்று அதிகாரிகளும் கிளம்பி வரும் வழியில் பேசிக் கொண்டனர். ” நாம நாகராஜையும் விசாரிக்க வேண்டி வரும் “என்று. தேவிகா சொன்னாள். ” சார், அந்த கிழிஞ்ச சட்டைப்பையிலயும், அந்த சாவி மேலயும் லைட்டா சந்தனம் வாசனை வருது.நாம அது எந்த பீரோவோட சாவின்னு கண்டுபிடிச்சோம்னா ஈஸியா மத்ததையும் பிடிச்சுடலாம்.”
மூவரும் திரும்ப கத்தரியூர் வந்தவுடன் நாகராஜ் இவர்களை பஞ்சாயத்து அலுவலகம் அழைத்துச் சென்றான். சேகர் அவனிடம் ” உங்க ஊர் கோவில் பூஜை, திருவிழா இதெல்லாம் முடியட்டும். ரெண்டு நாள் கழிச்சு வருவோம். எல்லாரையும் வரவழைங்க. மறுபடியும் சில கேள்விகள் கேக்கணும்.
ஐயா, இந்த மணிமேகலை பொண்ணு சொல்லிருக்கு அங்கே, நீங்க முல்லைப்புரம் அழைச்சிட்டு போனீங்க அப்படீன்னு, உண்மையா?” என்று கேட்டார். நாகராஜ் ” சொல்லிருந்தேன். ஆனால் வேற வேலையால போக முடியலே சார்!” என்றவன் அலைபேசியில்” வேலாயுதம், அதை எடுத்துட்டு வாங்க ” என்றான். வேலாயுதம் மூன்று தினசரி நாள்காட்டிகளோடு வந்தான். ” சார், எங்க பஞ்சாயத்துல முதல் முறையா இந்த வருஷம் காலண்டர் போட்டிருக்கோம். ” என்று அவர்களிடம் கொடுத்தான். பிறகு மூவரும் கிளம்பினார்கள். வேலாயுதம் அருகில் சந்தன வாடை வருவதையும், காலண்டர்களிலும் அது இருப்பதையும் மூவரும் உணர்ந்தனர். ஜெகன்னாத் வேலாயுதம் சட்டையை கூர்ந்து நோக்கினார்.
கத்தரியூர் ‘குளிர்ந்த அம்மன்’ கோவில் பூஜைகள், அபிஷேகங்கள் நேர்த்தியாக தொடங்கி காலையிலிருந்து மிக விமரிசையாக நடைபெற்றன. மார்கழி மாதம் ஆதலால் மாலை ஐந்தரைக்கே லேசாக இருட்ட ஆரம்பித்து விட்டது.ஆறு மணியளவில் நாகராஜ் குடும்பத்தார் பெயருக்கு அர்ச்சனை செய்ய ஆரம்பித்தார் கணேசன் குருக்கள். அப்போது காஞ்சனா தன் அம்மாவிடம் சொல்லி விட்டு அவள் தோழிகள் வீட்டுக்குப் போய் மறு நாளுக்கு வேண்டிய மாலைகள் தயார் செய்யவும், பாயசம் எடுத்து வரவும் கிளம்பினாள்.
” நீ போய்ட்டு இரு. அஞ்சு நிமிஷத்துல நான் வந்துடறேன். முதலியார் தோட்டம் வழியாத்தானே போற, டார்ச் வேணா எடுத்துட்டு போ பொண்ணு. ஒரே மேகமூட்டமா இருக்கு “என்றான் கண்ணுச்சாமி.
“அந்த வழியாதான் போறேன்.டார்ச் எல்லாம் வேண்டாம்.வேகமா நடந்து போய்டுவேன்” என்று கூறி ஓடிச் சென்றாள் காஞ்சனா.
எப்போதும் போல் திருவிழாவிற்கு வந்திருந்த ராஜேந்திரன் கோவில் வெளியே வந்த காஞ்சனாவிடம்” நாங்க வேணும்னா துணைக்கு வரவா, அழகான பெண்கள்லாம் இருட்டும் போது தனியா போகக்கூடாதே.” என்றான். ” எனக்கு ஒண்ணும் பயம் இல்லே. ஆனால் வாலிபர் எல்லாம் கோவில் வேலைக்கு உதவியா இருக்கலாமே.அக்கறையை அங்க காட்றீங்களா?” என்று காஞ்சனா கூறியதைக் கேட்டு சிரித்து விட்டு அவன் நண்பர்களிடம் ” வாங்கடா, கொஞ்ச நேரம் கழிச்சு வரலாம். குளத்தங்கரை பக்கம் போய் சிகரெட் பிடிச்சிட்டு வரலாம்” என்று நடந்தான் நண்பர்களுடன்.
நாகராஜ் ‘ தலைவரைப் பாத்துட்டு வந்துடறேன்’ என்று சொல்லி விட்டு கோவிலை விட்டு இறங்கி நடந்தார்.
வேலாயுதம் கண்ணுச்சாமியிடம் “‘கண்ணு, எனக்கு வயிறு சரியில்லை. வீட்டுக்கு போறேன். அவங்க கேட்டா சொல்லிடு” என்று கலாவதியை கைகாட்டி விட்டு வேகமாக நடந்தான். கண்ணுச்சாமி ” நீங்க போங்க, நான் சொல்லிடறேன்.” என்றான்.
அம்மன் பூஜைகள், அர்ச்சனைகள், ஆரத்திகள் மிகவும் நல்லபடியாக முடிந்தன. நல்ல கூட்டம். பிரசாதம் விநியோகம் ஆரம்பமாகி அரைமணி நேரமாகப் போய்க்கொண்டிருக்கிறது. வரிசைகளில் மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். மணி ஏழரைக்கு மேல் ஆகிவிட்டது.
“பக்தர்கள் எல்லாருக்கும் பாயசம் நைவேத்யம் கொடுப்போம். வாங்கிண்டு போங்கோ. அதை எடுத்துட்டு வரத்தான் போனா அவா ரெண்டு பேரும்.ஏன் இப்ப வரைக்கும் வரலை?” என்று கண்ணுச்சாமி, காஞ்சனா பற்றி கணேசன் குருக்கள் சத்தம் போட்டு கேட்டார்.
“ஆமாம் ஐயா, அவங்க போய் ஒண்ணரை மணி நேரத்துக்கு மேல் ஆயிடுச்சு ஆனால் இவ்வளவு நேரமா அவங்க ஏன் வரலே, எனக்கு கவலையா இருக்கு. இந்த சமயத்தில் இவருக்கு வேற அர்ஜண்டா ஊர் பயணம் வந்துட்டுது. நாளைக்கு மத்தியானந்தான் வருவாரு.” மரகதம் கவலையுற்றாள்.
“இருங்க, நான் கூப்பிடுறேன்” என்று கூறி கலாவதி அலைபேசியில் காஞ்சனாவை தொடர்பு கொள்ள, எந்த பதிலும் இல்லாமல் அழைப்பு போய்க்கொண்டே இருந்தது. இரண்டு மூன்று தடவை கலாவதி முயற்சி செய்தும் பலனில்லை.
அப்போது பாயசம் பாத்திரத்தையும், மாலையையும் எடுத்துக்கொண்டு பாக்கியமும் செண்பகமும் ஒரு கட்டை வண்டியிலிருந்து இறங்கி கோவில் உள்ளே வந்தனர். கணேசன் குருக்கள் அதை வாங்கிக் கொண்டு ” காஞ்சனாவும், கண்ணுச்சாமியும் எங்கேம்மா” என்று கேட்டார்.
“காஞ்சனாவுக்கு ஃபோன் பண்ணேன். வந்திட்டிருக்கேன்னா. கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் கூப்டேன். ஆனா கால் போகலை. இதுவரை அவளுக்காக வெயிட் பண்ணிட்டு அவ வராததாலே இந்த பக்கம் வந்த வண்டில ஏறி இதை எடுத்து வந்துட்டோம்.எங்க போயிருக்கா?” என்றனர் அப்பெண்கள். ” அங்கதான வந்தா, பின்னாடியே கண்ணுச்சாமியும் வந்தானே. நான் இப்ப கால் பண்ணதும் போகலை. என்னன்னு தெரிலயே “கவலையோடு சொன்னாள் கலாவதி.” என்ன ஆச்சுன்னு தெரியலையே, ரெண்டு பேரையும் காணுமே.நாம போய் பாக்கலாமா?” என்று மரகதம் பதட்டத்துடன் கேட்டாள்.
அப்போது தெருவிலிருந்து ” எல்லோரும் இங்கே வாங்க, சீக்கிரம் வாங்க, இதை பாருங்க, இந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு, ஏன் இப்படி இருக்கு, சீக்கிரம் யாராவது டாக்டர் கிட்ட கூப்பிட்டு போங்க” பல கூக்குரல்கள் அலறல் சத்தமாக ஒலித்தன. கலாவதி, மரகதம், இன்னும் பலரும் தெருவிற்கு வந்து பார்க்க, அங்கே ராஜேந்திரன், தலையிலிருந்து ரத்தம் கொட்டியபடி மயங்கி இருந்த காஞ்சானாவை அவன் நண்பர்கள் உதவியுடன் கையில் தூக்கியபடி நாகராஜ் காரை நோக்கி நடந்து செல்வதைக் காண முடிந்தது. ” அய்யோ, அய்யோ” என்று அலறியபடி தலையில் அடித்துக்கொண்டே மரகதமும், கலாவதியும் ஓடினார்கள். எல்லோரும் கவலையுடன் அவர்கள் பின்னால் அழுதபடி சென்றனர்.
” காஞ்சனாவுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. நாங்க சிகரெட் பிடிச்சிட்டு குளக்கரைல அரட்டை அடிச்சிட்டு இருந்தோம். அப்போ அந்த பக்கம் குளக்கரையில என்னமோ விசித்திரமான சத்தம் கேட்டது. இருட்டா இருந்ததால ஒண்ணும் தெரியலே.கொஞ்ச நேரம் போய் யாரோ
குளத்துப்பக்கம் உருண்டு விழுந்த மாதிரி லேசா தெரிஞ்சுது. நாங்க மூணு பேரும் சுத்தி அந்த பக்கம் போய் பாக்கும்போது முதலியார் தோட்டத்துக்குள்ள இருக்கற பம்பு செட் கொட்டகைக்கு பக்கத்தில் கொஞ்ச தூரத்தில் கல்லுல அடிபட்டு காஞ்சனா கிடந்தா. அவளுக்கு நினைவே இல்லாமல் இருந்தது. தண்ணி தெளிச்சு பாத்து ஒண்ணும் சரியா ஆகலே.குளத்துப்பக்கம் யார் விழுந்தாங்கன்னும் தெரியலே.நாங்க காஞ்சனாவை எங்க கார்ல டாக்டர்கிட்ட அழைச்சிட்டு போறோம். அண்ணன் வந்தவுடனே விஷயத்தை சொல்லி வரச்சொல்லிடுங்க. மரகதம் அம்மா, கவலைப்படாதீங்க, நீங்க இப்ப அலைய வேண்டாம். நாங்க பாத்துக்கறோம். அப்பப்ப ஃபோன் பண்ணி நிலமைய சொல்றோம்.” என்று கூறி ராஜேந்திரன், ஜானகிராமன், செழியன் மூவரும் காரில் காஞ்சனாவை கவனமாக படுக்கவைத்து, விரைவாகச் சென்றனர்.
மரகதம் அரை மனதுடன் அவர்களைப்போக அனுமதித்து தரையில் விழுந்து கதறினாள்.கலாவதி மற்றும் அந்த ஊர் மக்கள் அனைவரும் கவலை தோய்ந்த முகத்தோடு அழுகைக்குரலுடன் அம்மனிடம் காஞ்சனா நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்கள். அது மட்டுமல்லாமல் அனைவரும் கண்ணுச்சாமிக்கு என்னவாயிற்று என்று புலம்பித் தவித்தார்கள். சிலர் குளம் போய் தேடி விட்டு ‘அங்கு எதுவும் இல்லை ‘ எனத்திரும்பினர்.
அந்த நேரத்தில் வேலாயுதம் எங்கிருந்தோ வந்து வண்டியை நிறுத்தி விட்டு இறங்கியவன் கால் விந்தியபடி நடந்து வந்தான். அவனுடன் ராசுவும் வந்தான்.சட்டையில் ஒரு பக்கம் சேறு போல் கறை இருந்தது. அந்த கூட்டத்தில் இருந்த சாந்தா அருகில் போய் ” தாழக்குடி டாக்டர் கிட்ட போய்ட்டு வரும்போது பைக் சறுக்கி விழுந்துட்டேன்.நல்ல வேளை மணல் பாங்கான இடமா இருந்ததால பொழைச்சேன். கையில கால்ல கொஞ்சம் ஸ்க்ராட்ச் ஆயிருச்சு. நம்ப ராசு அந்த பக்கம் வந்தவன் ஹெல்ப் பண்ணான்.சட்டையெல்லாம் அழுக்கு. வீட்டு சாவியை கொடு. நான் போய் குளிக்கணும். இங்க என்ன ஆச்சு? ஏன் எல்லாரும் அழுதுட்டு இருக்கீங்க?” என்று கேட்டான். சாவியை அவனிடம் கொடுத்தபடி சாந்தா விவரங்கள் கூறினாள். வேலாயுதம் அதிர்ச்சியுடன் தன் வீட்டை நோக்கிப் போனான்.
முல்லைப்புரத்தில் உள்ள மிக நல்ல மருத்துவ மனையான ” முகுந்த் ஹாஸ்பிடல்” போவதற்கு முன் ராஜேந்திரன் காவல் துறை அதிகாரி சேகரைப் பார்த்து விவரங்கள் கூறிவிட்டு, காஞ்சனா தற்போது இருக்கும் நிலையைக் காட்டி, உடனடி சிகிச்சை முக்கியம் என்பதையும் கூறியதும், சேகர் ரத்தக் காயங்களுடன் நினைவிழந்து கிடந்த காஞ்சனாவை பார்த்து விட்டு சம்மதம் தந்தார். உடனே மருத்துவமனையில் சேர்த்து விட ஏற்பாடுகளையும் செய்தார் சேகர்.
முகுந்த் ஹாஸ்பிடல் மருத்துவர்கள் காஞ்சனாவை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தபின், ராஜேந்திரனிடம் ” மிகவும் வேகமாக தலை கல்லில் மோதியதால் தற்போதைக்கு நினைவு வருவது கடினம். ஒரு மாதிரியான ஸெமி கோமா நிலையில்தான் இருக்கிறாள். இடுப்பு பக்கம் அடிபட்டிருக்கிறது. குணமாகி விடுவாள். ஆனால் எவ்வளவு நாட்களில் நினைவு திரும்பும் என்பதை இப்போது சொல்ல இயலாது.” என்று கூறினார்கள்.
ராஜேந்திரன் இவைகளை அலைபேசி மூலம் கலாவதியை தொடர்பு கொண்டு விளக்கமாக கூறும்போது நள்ளிரவு ஆகிவிட்டது.கலாவதி எல்லாவற்றையும் கேட்டபின் ” சரி, நீங்க இன்னிக்கு நைட்டு அங்க இருந்து பாத்துக்கங்க, உங்க அண்ணன் இப்பதான் வந்தாரு. தலைவரோட தேர்தல் சம்மந்தமா மீட்டிங் போய்ட்டு ஒரே டயர்டா இருக்காரு.அங்க எங்கேயோ விழுந்து கால் சுளுக்குன்னு வேற. காலைல இங்கேருந்து மரகதம், மாரியப்பன் நாங்க எல்லாம் வரோம்.” என்றாள்.அருகிலேயே கண்ணீருடன் அரற்றிக்கொண்டிருந்த மரகதத்தை சமாதானப் படுத்தி வீட்டில் விட்டு வந்தாள்.
அங்கே ராஜேந்திரன்,சேகரிடம் நடந்தவைகளை ஒன்று விடாமல் சொல்லிவிட்டு, “இதை எப்படியாவது உடனே கண்டுபிடிக்க வேண்டும் என்றும் வேண்டினான்.
” கவலைப்படாதீங்க, ராஜேந்திரன், ஜஸ்ட் ஸீ, வித்தின் எ வீக்” என்றார் சேகர்.
இந்த சம்பவங்கள் நடந்து இரண்டு நாட்கள் ஆனது. ஆனால் கண்ணுச்சாமி காணவில்லை. ஊர் மக்கள் தேடி அலைந்தது வீணாகிப் போனது. ஊர் மக்கள் உதவியுடன் மரகதமும், மாரியப்பனும் மருத்துவ மனையிலிருந்த காஞ்சனாவை கவனித்துக் கொண்டனர்.
அந்த இரண்டு நாட்களில் காவல் ஆய்வாளர் சேகர், ஜெகன்னாத், தேவிகா மூவரும் பலமுறை கத்தரியூருக்கு வந்த வண்ணம் இருந்தனர். எல்லோரையும் தனித்தனியாக விசாரணை செய்தனர்.
முதலியார் தோட்டத்தில் காஞ்சனா விழுந்து கிடந்த இடத்தில் அவர்கள் பார்வையில் பட்ட அத்தனை தடயங்களையும் திரட்டினர்.குளத்துப்பக்கம் யாரோ உருண்டது போல் இருந்தது என்று ராஜேந்திரன் கூறியதால் ஜெகன்னாத் அங்கே சென்று சோதனை செய்தார். அங்கு ஒரு சிறிய குப்பி போன்ற ஒன்றை பார்த்து எடுத்து வைத்துக் கொண்டார். மேலே ஏறும் வழியில் ஒரு தாயத்து போன்ற பொருளைக் கண்டு அதையும் சேகரித்தார்.
பிறகு சேகரும், ஜெகன்னாத்தும் தங்கராசு, கட்டையன் மற்றும் ராசு இவர்களுடன் இருபது நிமிடங்கள் விசாரணை செய்து விட்டு திரும்பிச் சென்றனர்.
மூன்றாம் நாள் காலையில் கத்தரியூர் முதல் தெரு மக்கள் அதிர்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும், தெருவில் நடந்து வந்த கண்ணுச்சாமியை பார்த்தனர். தலையில் கட்டு, கையில் கட்டு, கால் பாதத்தில் சிறிய கட்டு இப்படி ஒரு கோலத்தில் அவனைப் பார்த்து ” என்னப்பா ஆச்சு, ஏன் இப்படி, கண்ணுச்சாமி உன்னை யாரு என்ன செஞ்சாங்க? மூணு நாளா எங்க இருந்தே? ஏதாவது சொல்லுப்பா” என்று எல்லோரும் மாறி மாறி கேட்டனர். கண்ணுச்சாமி எதுவும் சொல்லாமல் தன் வீட்டுக்குள் போய் கதவை தாளிட்டு கொண்டான்.
அந்த நாள் மட்டுமல்லாமல் அடுத்த நாள், அதற்கடுத்த நாள் என்று கண்ணுச்சாமி யாரிடமும் பேசாமலேயே இருந்தான். தன் பூக்கடைக்கு வருவது, பிறகு வீட்டுக்குள்ளேயே இருப்பது இப்படி இருந்தான்.யாரிடமும் எதுவும் பேசுவதில்லை. பாட்டுக்கள் பாடுவதில்லை. யாராவது ‘என்ன நடந்தது’ என்று கேட்டால் உடனே அந்த இடத்தை விட்டு போய்விடுவான்.கத்தரியூர் மக்களுக்கு புதிராக இருந்தது. இப்படி ஒரு கண்ணுச்சாமியை அவர்கள் பார்த்ததே இல்லை. வருத்தமாகவும் இருந்தது.அவன் இருக்கும் நிலையைப் பற்றி கவலையோடு பேசிக்கொண்டிருந்தனர்.
கண்ணுச்சாமி திரும்ப வந்த செய்தி கேட்டு சேகர், ஜெகன்னாத் இருவரும் வந்து அவனை விசாரித்தனர். அவன் மௌனமாகவே நின்றிருந்தான்.” கண்ணுச்சாமி, எங்களுக்கு தெரியும், ஏதோ உனக்கு தப்பா நடந்திருக்கு, இல்லே வேற யாருக்கோ, குறிப்பாக, நாங்க என்ன நினைக்கிறோம்னா, காஞ்சனா பொண்ணுக்கு ஏதோ நடந்ததை பாத்துட்டு இப்படி ஆகிட்டியோ அப்படின்னு. எதுவாக இருந்தாலும் எங்களை சகோதரன் மாதிரி நினைச்சு பேசு.சொல்லுப்பா.அப்பதான் இனிமேல் இங்கே தப்பு நடக்காதபடி குற்றவாளிய கண்டு பிடிச்சு ஜெயிலுக்கு அனுப்பலாம்” என்று அன்புடன் ஜெகன்னாத் கூறினார்.
அவர் கையைப் பிடித்துக் கொண்டு கண்ணுச்சாமி கண்ணீர் விட்டான். ஆனால் எதுவும் சொல்லவில்லை.
அந்த நேரத்தில் நீலாயுதாட்சி வேகமாக வந்து ” கண்ணுச்சாமி அண்ணே, தியாகிக்கு மறுபடியும் உடம்பு சரியில்லை. உன்னைப் பத்தி சொன்னேன். உடனே பாக்கணும்னாரு” என்றாள். கண்ணுச்சாமி சேகரைப் பார்த்தான். அவர் ” போய்ப்பாருப்பா” என்றார். அவனுடன் சேகர், ஜெகன்னாத், நாகராஜ், ராஜேந்திரன்
கலாவதி, சாந்தா எல்லோரும் சென்று தியாகி வீட்டுக்கு வெளியே நின்று அவனை மட்டும் உள்ளே போக விட்டனர்.
தியாகி சிவநேசன் மெல்லிய புன்னகையுடன் கண்ணுச்சாமியை வரவேற்றார். மெலிதான குரலில் ” என்னடா கோலம் இது? ஊர் முழுக்க உன்னைப் பத்திதான் பேசுதுடா. ஏதாக இருந்தாலும் எங்கிட்ட சொல்லு. பாடியே சொல்லு. சுதந்திரத்தை வாங்க போராடும் போது இப்படி நான் பேசாம இருந்திருந்தா வேலை நடந்திருக்குமா? எங்கிட்ட நீ வச்சிருக்கற அன்பு உண்மையா இருந்தா பாருடா, நீ என் பையன் மாதிரிடா” என்று கண்ணீர் மல்க பேசினார்.
கண்ணுச்சாமி சிறிது நேரம் கண்ணீர் விட்டான். பிறகு தொண்டையை கனைத்து கொண்டு, தியாகி சிவநேசன் கைகளை பிடித்தபடி, கணீர் குரலில் பாட ஆரம்பித்தான் .
” வாங்க சார் உள்ளே போகலாம்” என்று சேகர், ஜெகன்னாத் இவர்களைப் பார்த்து கூறினான் நாகராஜ் . ” வேண்டாம், நாம் இந்த திண்ணையிலேயே இருப்போம்.அவன் பாடி முடித்ததும் போகலாம்” என்றனர் இருவரும்.
“ஊரிலே நல்லவன் என்பார் அவன் சுயரூபம் பார்த்துவிட்டேன்.அய்யா
மாரியம்மன் சத்தியமா அவன் மனசெல்லாம் வஞ்சகந்தான்.
பாரிலே பகல் வேஷம் போட்டு புத்தன் போல் நடந்து கொள்வான்.அவன்
நீரினடி மறைந்திருக்கும் நெடியதொரு விஷ ஜந்து.. அய்யா
இவன் உண்மை குணம் அறியாமல் ஏமாந்த பலரும் உண்டு.. இங்கே
அவன் வஞ்சகப்பேச்சை கேட்டு வஞ்சிகளும் சிதைந்தனரே.
அவமானம் எனக்கு அய்யா, நானும்தான் நம்பி இருந்தேன்.
எவனையும் நான் பழித்ததில்லை.ஆனால் இவனை விடப்போவதில்லை.
ஆசையாக பேச்சுகள் பேசி இளம்பெண்களுக்கு வலை விரித்தான்.
நேசமாக நடித்து இவனும் அவர்களை நாசமும் செய்து விட்டான்.
பாசமுள்ள வாரிசுகள், பண்பான மனைவி இவன் பாதகன் எனவறியார். அய்யா
நீசபுத்தி உள்ளவனின் பெயரிலேயே நாகம் உண்டு.
கெட்ட எண்ணம் தலைதூக்கி கயவன் அன்று என் பெண்ணை
திட்டம் போட்டு சீரழிக்க திருவிழா நாள் தேர்ந்தெடுத்தான்.
கட்டிப்பிடித்தவனை தட்டிவிட்டாள் தரையினிலே தற்காப்பு கற்றவளும்
குட்டு வெளிப்பட்டதென குழந்தையை கூர் கல்லால் அடித்து விட்டான்.
பின்னே போன நானும் இந்த மிருகத்தை தாக்கிவிட
பின்தலையில் அடித்தென்னை இவன் குளக்கரையில் உருட்டி விட்டான்.
என் நினைவு இழந்து விட்டேன். எழுந்து பார்க்கையிலே இது கிடைக்க
உண்மை முகம் அறிந்தேன் உள்ளம் ஊமையாக மாறியது.(சட்டை பையில் இருந்து ஒரு பர்ஸ் போன்ற ஒன்றை அவரிடம் காட்டினான்)
இப்போது நீங்க சொல்லுங்க அய்யா இவனுக்கென்ன தண்டனை?
தப்பாக நடப்பவன் ஏன் தலைவனாக இருக்கவேண்டும்?
அப்பாவி மக்களுக்கு இந்த நாகத்தை அறிய வைப்பேன். நான்
சிப்பாய் போல் நின்றிவனை சுட்டுத்தள்ள துடிக்கின்றேன்”.
ஆறாக வழிந்த கண்ணீரோடு கண்ணுச்சாமி பாடி முடிக்க, அவன் கைகளைப் பற்றி சிவநேசன் அவனை சமாதானப் படுத்தினார்.
அதே நேரத்தில் சேகரும், ஜெகன்னாத்தும் ” என்ன நாகராஜ், அவன் என்ன சொல்றான்னு ஏதாவது தெரிஞ்சுதா?” என்று நாகராஜை கேட்டனர். ” இவன் யாரையோ பாத்து ஏதோ உளறரான் சார்! அவனையே கூப்பிட்டு கேளுங்க” என்றான் நாகராஜ்.
“அவன் என்ன வேணும்னாலும் சொல்லட்டும். நாங்க இப்போ சொல்லணும்னு முடிவெடுத்து விட்டோம். பரவாயில்லை மக்கள் எல்லாரும் இங்கதான் இருக்காங்க. கேக்கட்டும் அவங்களும்.” என்றார் சேகர்.
மிஸ்டர் நாகராஜ், நீங்க நல்லாவே வேஷம் போட்டிருக்கீங்க. அட் ஃபர்ஸ்ட் எங்களுக்கு தனநாதன், வேலாயுதம் இவங்க பேர்லதான் சந்தேகம் வந்தது.அதுபடி ஃபாலோ பண்ணி போகும்போது, வேற சில தகவல்கள், சிசிடிவி காட்சிகள் இதெல்லாம் பாத்த போதுதான் தனநாதன் சம்மந்தம் இல்லைன்னு முடிவெடுத்தோம்.ஆனால் அப்போ உங்களை லிஸ்ட்ல சேர்த்தோம்.
நீங்க இந்திராணி, மணிமேகலை, காஞ்சனா இவங்க கிட்ட காட்டின அக்கறை எல்லாம் ஒரு கெட்ட எண்ணத்தை மனசுல வச்சுத்தான்னு நல்லா புரிய வந்தது எங்களுக்கு.
மூணு வருஷத்துக்கு முன்னாடி ஒரு கட்சில இருந்தப்போ முல்லைப்புரத்தில் மூன் மெடிக்கல் ஸ்டோர் பெண், கட்சி ஆஃபீஸ் அக்கவுண்ட் வேலை பார்க்கும் பெண், அங்கே உள்ள ஒரு அரசு பள்ளி ஸ்கூல் டீச்சர் இவங்க கிட்டேருந்து நிறைய கம்ப்ளைன்ட் போனதாலயும், வார்னிங் கொடுத்தும் நீங்க மாறாததால உங்களை வெளியேத்த ப்ளான் பண்ணது தெரிஞ்சு அதுக்கு முன்னாடி விலகி இப்போ உள்ள கட்சில சேர்ந்திருக்கீங்க.
இந்த ஊர்ல உங்களுக்கு இருக்கற செல்வாக்கையும், அவங்க வச்சிருக்கிற நம்பிக்கையையும் பயன்படுத்தி இந்த பெண்களுக்கு நல்லது செய்யறது போல பேசி வந்திருக்கீங்க.
உண்மையில் அந்த மெனிஷா ரெடிமேட் ஓனரை பாத்து நீங்க எதுவும் பேசவில்லை.அந்த பெண் இந்திராணிய அழைச்சிட்டு போய் அவளுக்கு புது ட்ரெஸ் வாங்கி கொடுத்திருக்கீங்க. அந்த பில் எங்க கிட்ட இருக்கு.அந்த ஓனர் அடுத்த வாரம் வரச்சொன்னார்னு பொய் சொல்லிட்டிங்க.
இதே போல மணிமேகலை கிட்டேயும் ஒரு பொய்யைச் சொல்லி நாடகமாடி இருக்கீங்க.இது எல்லாத்துக்கும் மேல இவங்களை பைக்ல அழைச்சிட்டு போக நினைச்சப்பல்லாம் உங்க பைக் ரிப்பேர்னு சொல்லிட்டு வேலாயுதம் வண்டியை வாங்கிட்டு போயிருக்கீங்க.
வேலாயுதம் போட்டிருக்கும் டிசைன்ல, கலர்ல சட்டை போட்டுட்டு போயிருக்கீங்க.இங்க சிசிடிவி இல்லேன்னாலும் இங்கேருந்து முல்லைப்புரம் போகும் வழில இருக்கற சிசிடிவி, ஜவுளிக்கடை, ஹோட்டல் சிசிடிவி இதெல்லாத்தையும் செக் பண்ணிட்டுதான் சொல்றோம். நீங்க சந்தன ஆயில் வாங்கறதையும், வாசனை எண்ணெய் வாங்கறதையும் சிசிடிவி காண்பிச்சிடுச்சு.
அஞ்சு வாரத்துக்கு முன்பு நாங்க இங்க வந்த போதே கட்டையன், தங்கராசு, ராசு இவங்களை வச்சு முதல்ல வேலாயுதத்தை கண்காணிக்க சொன்னோம். ஏன்னா அவர் கிட்டேருந்து சந்தன ஆயில் ஸ்மெல் வந்ததால. ஆனால் அவர் நடவடிக்கைகள் சரியா இருந்தது.
நாங்க அப்புறம் யோசிச்சு உங்க மேல பார்வையை திருப்பினபோதுதான் தெரிஞ்சுது. நீங்கதான் இதையெல்லாம் செஞ்சிருக்கீங்கன்னு.
இந்த பெண்களை பைக்ல அழைச்சிட்டு போகும்போதெல்லாம் வேற கருவேலனூர் குறுக்கு வழிய யூஸ் பண்ணிருக்கீங்க. இங்கே யாருக்கும் அதைப்பத்தி தெரியாது.அவங்க உங்க எண்ணத்துக்கு சம்மதிக்கலை. அதனால் கற்பழிச்சு கொன்னுட்டீங்க.
இந்திராணியை பலாத்காரம் செய்யும்போது ஏற்பட்ட போராட்டத்தில உங்களோட செயின் டாலர் அறுந்து விழுந்திடுச்சு. நீங்க சீனுப்பிள்ளை கிட்ட போய் புதுசு செஞ்சிருக்கீங்க. சட்டை பாக்கெட் கிழிஞ்சு விழுந்ததையும் செக் பண்ணிட்டோம்.
அதேபோல் மணிமேகலையை தண்ணீரில் அழுத்தியபோது உங்க லைட்டர் குளத்துக்குள் விழுந்ததை நாங்க எடுத்து வச்சிருக்கோம். கரையில் அங்கேயும் சட்டைப்பை கிழிசல், ஹோட்டல் பில். அதில் இருந்த உணவை அன்று மணிமேகலை சாப்பிட்டதற்கான ப்ரூஃப் பிரேத பரிசோதனையில் தெரிந்தது.
அங்கே ரத்தக்கறையுடன் இருந்த கைக்குட்டை, தாயத்து இதெல்லாம் உங்களுடையது என்று உறுதி செய்தோம். ஆஃபீஸ் பீரோ சாவி தொலைந்து போயிடுச்சுன்னு போன மாசம் டூப்ளிகேட் செஞ்சு போட்டதை கண்டு பிடிச்சோம்.ஏன்னா ஒரிஜினல் எங்க கிட்ட இருக்கு.
காஞ்சனா கிட்ட ஏற்கனவே ரெண்டு முறை, உங்க பசங்களுக்கு அவ ட்யூஷன் சொல்லி கொடுக்க வந்த போது, உங்க வேலையை காட்ட நினைச்சிருக்கீங்க. அவ உங்களை எச்சரிச்சிருக்கா. உங்க மனைவி கிட்ட சொல்லப்போறதா சொல்லிருக்கா. உங்க வேலையாள் கந்தப்பன் வெளில சுத்தம் செஞ்சிட்டிருந்தபோது கேட்டதை எங்க கிட்ட சொன்னான்.
உங்க மனைவி கிட்ட தலைவனைப் பாக்கப்போறேன்னு கடந்த மூணு மாசமா நீங்க சொன்ன போதெல்லாம் பொய் சொல்லிருக்கீங்க. தனநாதன் நீங்க கடந்த மூணு மாசத்தில் மூணு தடவைதான் வந்திருந்தீங்கன்னு சொல்லிருக்கார். அதுதவிர, உங்க உடம்புல இருந்த காயம், கீறல்களுக்கு வெவ்வேறு பொய்யான காரணங்களை சொல்லிருக்கீங்க.
அம்மன் கோவில் வேலை இருந்ததால அன்னிக்கு மட்டும் உங்களை நாங்க நியமிச்ச ஆளுங்க ஃபாலோ பண்ணாம விட்டது தப்பாகிடுச்சு.
ஆனால் காஞ்சனாவை கொஞ்சம் லேசா எடை போட்டு, அந்த பொண்ணு கிட்ட தவறா நடக்க திட்டம் போட்டு முதலியார் தோட்டத்தில் பதுங்கி இருந்திருக்கீங்க. நீங்க ரெடியா வச்சிருந்த மயக்க மருந்து கலந்த சந்தன ஆயில் குப்பியை காஞ்சனாவை பிடிச்சு மூக்குல வைக்க முயற்சி செஞ்சிருக்கீங்க.அவள் தற்காப்பு கலையை நல்லா பயிற்சி செஞ்சவ. அதனால அவ உங்களை தாக்கி கீழே தள்ளிவிட்ட கோபத்தில் நீங்க அவளை கருங்கல் வச்சு அடிச்சிருக்கீங்க. அந்த குப்பி எங்க கிட்ட இருக்கு. உங்களோட கார்டுகள் இருந்த சின்ன பர்ஸ் கண்ணுச்சாமி கையில மாட்டிடுச்சு. அவரு அன்னிக்கு இருந்த கருமேகம் சூழ்ந்த இருட்டில் யாருன்னு தெரியாமலேயே உங்களோட மோதிருக்காரு. அவரோட வலது காது பக்கம் பின் பக்கமா தாக்கி குளத்து பக்கம் உருட்டி விட்டுட்டு, ராஜேந்திரன் தன் நண்பர்களுடன் ஓடி வருவதை பார்த்து நீங்க வேகமா ரோட்டுக்கு போய் பைக் எடுத்துட்டு பின் வழியா உங்க வீட்டுக்கு போய் ட்ரஸ் மாத்திட்டு டவுனுக்கு போகல. தாழக்குடி டாக்டர் கிட்ட போயிருக்கீங்க.காஞ்சனா உங்க அடிவயித்தில பலமா உதைச்சதுல ஏற்பட்ட வலிக்கும், கையில உள்ள காயத்துக்கும் வைத்தியம் பாத்துக்க. அதுக்கப்புறம் நீங்க முல்லைப்புரம் போய் ‘ரூபி’ ஹோட்டலில் தங்கிட்டு மிட்நைட்டுக்கு மேல் வந்திருக்கீங்க. இந்த ஊர் போஸ்ட் மாஸ்டர் ஜுரமா இருந்ததுன்னு அதே டாக்டர் கிட்ட காட்டி மருந்து வாங்கிட்டு தன் வண்டில கிளம்பின நேரத்தில இன்னொரு கேட் வழியா நீங்க வரதை பாத்திருக்காரு.
ஸோ, நீங்க எதையும் மறைக்க வழியில்லை இனிமேல். உங்களை கைது செய்து அழைச்சிட்டு போகத்தான் நாங்களே வந்தோம். கண்ணுச்சாமி இன்னும் விளக்கமா சொல்லிட்டாரு பாட்டுல”. என்று பேசி முடித்தார் சேகர்.
அப்போது வெளியே வந்த கண்ணுச்சாமி தன் கையிலிருந்த விசிட்டிங் கார்டு பாக்கெட் ஃபோல்டரை சேகரிடம் தந்துவிட்டு, நாகராஜை பார்த்து காரித்துப்பினான். அவனை கோபத்துடன் அடிக்கவும் பாய்ந்த போது ஜெகன்னாத் இழுத்து கட்டிப்பிடித்து அமைதியாக்கினார்.
நாகராஜ் எல்லாவற்றையும் அனைவர் முன்னிலையில் ஒப்புக்கொண்டான். கலாவதி கண்கள் நெருப்பை கக்கியது. பூபதியும், பானுமதியும் மிகவும் கோபமாக அவனைப் பார்த்து திட்ட ஆரம்பித்தனர். அவர்களை பார்க்க திராணியின்றி திரும்பிக் கொண்டான். அவன் கையில் விலங்கை மாட்டி ஜீப்பில் உட்கார வைத்தார் சேகர். ஊர் மக்கள் நாகராஜை உரத்த குரல்களில் சபித்தனர். ஜீப் கிளம்பியது.
சில வாரங்கள் சென்றபின்…
காலையில் வீட்டு வாசலில் சாணி தெளித்து பெருக்கி விட்டு கோலம் போட ஆரம்பித்தாள் காஞ்சனா.
காஞ்சனா பெண்ணே உனக்கு இந்த மாசியிலே கல்யாணம்
வாஞ்சையாய் சொல்லுறேன் நான் வாழ்வாங்கு வாழ்ந்திடுவாய்!
தேஞ்சு போச்சு தீமைகள் எல்லாம் தீயிலே இட்டுவிட்டோம்.
ஊஞ்சலிட்டு அமர்ந்து அம்மன் உன்னை என்றும் காத்திடுவாள்!
கண்ணுச்சாமி தேநீர் அருந்திய படி பாடினான். காஞ்சனா வெட்கத்துடன் புன்னகைத்தாள்.
(முற்றும்)