கண்ணாடி ஷோகேஸ் – காற்றில் உருகும் கனவுகள்
கதையாசிரியர்: சு.அப்துல் கரீம்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: November 4, 2025
பார்வையிட்டோர்: 152

“ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜெகமே ஆடிடுதே
ஆடிடுதே… விளையாடிடுதே…”
கண்டசாலாவின் குரல், ஒரு பழைய சின்ன எஃப்.எம். ரேடியோவின் கீறிய சத்தத்தில் பரவியது. அந்த சத்தமே, வராண்டாவின் பாழடைந்த அமைதிக்குள் ஒரு உயிர் நரம்பாய் ஒலித்தது. ஒவ்வொரு ஒசையும் சுந்தரத்தின் உள்ளத்தில் அடுக்கடுக்கான கதவுகளைத் தட்டியது.
சுந்தரத்தின் பழுப்பு நிறக் கைகள் ரேடியோவின் மூக்கைப் பிடித்தபடி இருந்தன. பிளாஸ்டிக் நாற்காலியில் சுருண்டு அமர்ந்திருந்தார் அவர் — உடல் நாற்காலியின் வளைவுகளோடு கலந்துபோய், ஒருவிதமான நினைவுச் சின்னமாக மாறியிருந்தது போல.
மாலை நேரம். மரங்கள் நீண்ட நிழல்களாக விரிந்தன. காற்று தன் வேலையை மறந்தது போல சோர்ந்து நின்றது.
வராண்டா முழுவதும் பரவியிருந்த அமைதி — அது அமைதியல்ல; வாழ்க்கையைக் குடித்துவிட்ட பாழ்மையின் பிம்பம்.
ரேடியோவின் அடுத்தடுத்தக் குரல்களாக பி.பி. ஸ்ரீனிவாஸ், சீர்காழி, T.M. சௌந்தரராஜன் — அந்த மூவரின் குரல்களும், சுந்தரத்தின் காலத்தையே உயிரோடு மீட்டன. அவர் கடந்துவிட்ட இளமை — “இன்னும் இங்கேயே இருக்கிறது” என்று சிரித்தபடி கத்தினது.
ஒவ்வொரு இசைக் குறியிலும் ஒரு காட்சி நுழைந்தது. சைக்கிளின் சங்கிலி கத்தும் சத்தம், திரையரங்க வாசலில் தள்ளுமுள்ளு,
“முதல் காட்சி”க்காக அடைந்த அடிகள், அடையாத டிக்கெட் — எல்லாம் ஒரே நேரத்தில் உயிர்த்தன.
டிக்கெட் கிடைக்காமல் நிற்கும் அவமானம் அப்போது அவமானம்தான். இன்று நினைவில் அது ஒரு இனிய தோல்வி.
பிளாக்கில் வாங்கிய டிக்கெட்டோ — அப்போது வெற்றிதான், இன்று நினைவில் சற்றே கேலிக்குரியது.
வாழ்க்கை அப்படித்தான். நடந்த தருணம் எதுவாக இருந்தாலும், காலம் அதைத் தலைகீழாகத் திருப்பி, நினைவுகளுக்கு மட்டும் சுவையூட்டி வழங்கும்.
பட்டாம்பூச்சி ஒன்று சுவற்றின் ஓட்டையில் நின்று அசையவில்லை. அது உயிரோடு இருக்கிறதா, இறந்துவிட்டதா என்றே தெரியவில்லை. சுந்தரமும் அதுபோலத்தான்.
ஆனால், ரேடியோவில் பழைய பாடல்கள் ஒலிக்கும் வரை — அவர் உயிரோடு இருப்பதாகத் தோன்றியது.
ஒலி ஒவ்வொரு நொடியிலும், மனதை தொடும் ஓசை போல, கடந்த காலத்தையும், மறந்த காதலையும், இளமைத் திமிரையும் ஒரே நேரத்தில் திரும்பக் கொண்டு வந்தது.
அந்த ஒலியும் ஒசையும் அவரது உள்ளத்தில் சின்ன, தனிமையான வெற்றிடத்தை மெதுவாக நிரப்பியது; மறைந்த நாட்களின் புன்னகையும் கண்ணீரும் ஒன்றாகக் கலந்து, உயிரின் ஏற்ற இறக்கங்களைக் கையொப்பமிடும் போல் உணர்ந்தது.
“உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா…”
— ரேடியோவின் கரகரத்துக்கிடையே அடுத்த பாடல் வழிந்தது.
கண்டசாலாவின் குரல் சுந்தரத்தின் காதுகளில் புகுந்த கணமே, வராண்டாவின் சுவர்களும், சாய்ந்த நாற்காலியின் பிளாஸ்டிக் எலும்புகளும் கரைந்துவிட்டன. அந்தப் புழுதியான இடம் திடீரென சினிமா அரங்க நாற்காலியாக உயிர்த்தது.
சிகரெட் புகை மூட்டத்திலே சிரித்த இளமை நண்பர்கள், “முதல் காட்சி”க்காக மண்டியிட்ட கூட்டம், காசில்லாமல் கதவுக்குப் பின் நின்ற சிரமமான அவமானம் — எல்லாம் அசைவோடு மீண்டும் முன் தோன்றின.
ஒரு நொடி, சுந்தரத்தின் கையில் உண்மையிலேயே மினுங்கியது போலத் தோன்றியது அந்த பிளாக் டிக்கெட். “வெற்றி — தோல்வி, எது வந்தாலும் அந்த நாட்கள் உயிரோடு இருந்தன…” என்று தன் மனதுக்குள் நசுங்கிப் பேசினார்.
ஆனால் அந்த நொடிகள் காற்றோடு கரைந்து மறைந்ததும், அங்கிருந்த அமைதி அவரை மீண்டும் விழுங்கியது. கண்களில் சுருக்கமாய் பிரகாசித்த அந்தச் சிறு வெளிச்சம், இன்னொரு பாடல் விழும் வரை உயிரின் கடைசி சான்றிதழாக மட்டுமே மீதமிருந்தது.
அவருடைய வாழ்க்கை பழைய காசுப்பட்டியல்போல்: காலைப் பிரார்த்தனை, அதன் பின் குளியல், சுவையற்ற உணவு, பழைய டிவிஎஸ் எக்ஸெலில் சந்தைச் சுற்று.
திடீரென பழைய பாடல் எங்கோ ரேடியோவில் விழுந்தால் — கண்கள் பளபளக்கும்.
மதிய உணவு, குட்டித் தூக்கம், மாலை டீ, ஒரு வடை; இரவில் சீரியல்களின் கத்தும் குரல்கள்; அவற்றுக்கிடையே வயிற்றுப் பிரச்னைகள், முழங்கால் வலிகள், மருத்துவர் நேரங்கள் — இவை அனைத்தும் நன்றாகத் திட்டமிடப்பட்ட சுழற்சியைப் போல ஓடியது.
சுழற்சி மட்டும் ஓயாமல் இருந்தது. ஆனால் வாழ்க்கை — மிக நீண்ட காலத்துக்கு முன்பே ஓய்ந்துவிட்டது.
சுந்தரம் அடுத்த சேனலைத் தட்டினார்…
சேனல் மாறினாலும், வருணணை மாறினாலும், அங்கிருந்த அமைதியும், ரேடியோவின் பழைய ஒலியும் — சுந்தரத்தின் உள்ளத்தில் மறைந்து போன உயிரின் அடையாளங்களை மெதுவாக மீண்டும் தந்தன.
“மோகன புன்னகை செய்திடும் நிலவே
மேகத்திலே நீ மறையாதே
பாகுடன் தேனுமே கலந்திடும் நேரம்
சாஹசமே நீ புரியாதே”
T.M. சௌந்தரராஜனும் P. சுசீலாவும் பாடத் தொடங்கினார்கள்.
அந்த ஒலி சுந்தரத்தின் மனதில் நெருக்கமான பிளவைத் தொட்டது. “மோகன புன்னகை” — சொற்கள் வெவ்வேறு வடிவில் பிரிந்து, அவரது நினைவுகளில் மெல்விசை போல நுழைந்தன.
மனைவியின் மென்மையான குரல், சிரிப்பின் ஆழம், அவள் பார்வையில் இருந்த அன்பின் ஒளி — அனைத்தும் ஒரே நேரத்தில் ஒளிர்ந்தது.
“நீங்க சிரிச்சா நடிகர் மோகன் மாதிரி இருக்கீங்க!” என்று அவள் சொன்ன நாட்கள் — இப்போது வீடெங்கும் காணாமல் போயிருந்தன; நினைவுகள் மட்டுமே அந்த வெற்றிடத்தை மெதுவாக நிரப்பின.
மண்ணில் புதைந்த வெற்றிடம் அந்தச் சத்தத்தின் வெப்பத்தில் மெல்ல மண்டியிடத் தொடங்கியது.
சுந்தரத்தின் தலை மீது அவள் கை மென்மையாக தொட்டது; “நான் இருக்கேன், நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க” என்ற அவளின் வார்த்தைகள் மனதில் ஒளிர்ந்தன.
இன்றைய தனிமையின் வெறுமையில் அந்த நினைவு ஒரு சிறிய வெப்பம் ஊற்றியது.
பாடல் ஒலி அவரை அந்த நிழல்மயமான காலத்துக்குள் மீண்டும் இழுத்தது — இரவு நேரம், இருவரும் மெல்ல பேசிச் சிரித்த அந்தக் காட்சிகள்; தொலைவில் குழந்தைகளின் சத்தம், அவள் அன்பும் கவலையும் — ஒவ்வொரு ஒசையும் மனதில் பழைய திரைப்படத் துளி போல உயிர்பெற்றது.
“அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
நண்பனே! நண்பனே! நண்பனே!
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
அது ஏன்? ஏன்? ஏன்? நண்பனே!…”
என்ற பழைய பாடல் ரேடியோவில் ஒலிக்க, அங்கே ஒரு வினோதமான நினைவுக் காற்று சூழ்ந்தது.
சுந்தரத்தின் முகத்தில் நிழல் ஒன்று மெதுவாக விழுந்தது. அந்த நேரத்தில் பக்கத்து வீட்டு காசிம் பாய் வராண்டாவுக்குள் நுழைந்தார்.
பழைய ரேடியோவைப் பார்த்ததும் கண்கள் சிரித்தன — அந்த சிரிப்பில் சின்ன கிண்டலும், உலகம் புரியாத ஓரளவு சிந்தனையும் ஒளிந்திருந்தது.
“என்ன சுந்தரம், இன்னும் இந்த பழைய ரேடியோவைதான் கையிலே பிடிச்சிக்கிட்டு இருக்கியா? உலகமே ஸ்மார்ட் போனும் கையுமா சுத்துது… நீ என்னடான்னா…”
சுந்தரம் சிரித்தார். ஆனால் அந்தச் சிரிப்பில் சோம்பல், ஒப்புதல், சற்று அசட்டுத்தனம் எல்லாம் கலந்து இருந்தது.
“அது எனக்கு தெரியாதா? ஆனா என்ன செய்ய? இவன்தான் எனக்கு இப்ப இருக்கிற துணை. இதிலிருந்து ரெண்டு பழைய பாட்டு கேட்டாதான், மூச்சு விடுறதுக்கே காரணம் இருக்கு போல தோணுது.”
காசிம் பாய் தலை ஆட்டி, நையாண்டி சிரிப்போடு சொன்னார்: “அது உண்மைதான்… இப்போல்லாம் பாட்டு ஏதாவது கேக்கற மாதிரியா இருக்கு? பாட்டுன்ற பேர்ல காட்டு கத்தலா கத்தறாங்க! ஆனா அதைத்தான் என் பேரன் சத்தமா வச்சு கேக்கிறான். உட்கார முடியல; அதனாலதான் தப்பிச்சு இங்க வந்துட்டேன்,” சொல்லிக்கொண்டே சிரித்தார்.
அந்த நேரத்தில், காசிம் பாயின் வீட்டிலிருந்து ஒரு புதிய பாடல் பீட் ஒலிக்கத் தொடங்கியது. பாடல் வரிகள் சுந்தரத்தின் காதுகளைத் தொடவே இல்லை, ஆனால் அதன் பீட் சத்தம் மட்டும் — அதிகாரமில்லாத ஒலி வெள்ளம் போல — அந்த கான்கிரீட் சுவர்களைத் தாண்டி வராண்டாவுக்குள் நுழைந்து, சுந்தரத்தின் மார்பில் திடீர் அதிர்வையும், ஒரு லேசான வலியையும் கிளறிவிட்டது.
காசிம் பாய் சற்று பார்வை செலுத்தினார்: “அது சரி, வீட்டுல என்ன ஒரே சத்தமா இருக்கு?” என்று கேட்டார்.
சுந்தரம் மெதுவாகக் கூறினார்: “வீடு சுத்தம் நடக்குதப்பா. தேவையில்லாத பழைய பொருட்கள் எல்லாம் வெளியே போட்டுக் கட்டிக்கிட்டிருக்காங்க.”
காசிம் பாய் சிறிது கிண்டலாகச் சிரித்தார்: “பலே ஆளப்பா நீ! வீட்டுக்குள்ள இருந்தா உன்னையும் அந்தப் பட்டியல்ல சேர்த்துடுவாங்கன்னு முன்னெச்சரிக்கையா இங்க வந்து ஒளிஞ்சிக்கிட்ட போல…”
சுந்தரம் சிரித்தார், ஆனாலும் அந்தச் சிரிப்பில் வேதனை மூடியிருந்தது: “அட… யாராப்பா நீ உலகம் தெரியாத ஆளா இருக்க… பழைய இரும்பு, பிளாஸ்டிக் கூட எடை போட்டு காசு தருவாங்க. நம்மள மாதிரி வயதானவங்களுக்கு ஒரு பைசா மதிப்பு இருக்குதா இந்த உலகத்துல?”
சிறிது நேரம் சொற்கள் மெல்ல மாறி ஓடியது; பிறகு காசிம் பாய் வெளியேறினார்.
அங்கே மீண்டும் ரேடியோவின் பழைய இசை ஒலிக்கையில், சுந்தரத்தின் உள்ளத்தில் மறைந்திருக்கும் காலங்கள், காதல்கள், இளமைச் சிரிப்புகள் மெதுவாக உயிர்த்தன.
அந்த அமைதியிலும், அந்த ஒசைகளிலும், வாழ்க்கையின் பாழ்மையும் நெஞ்சின் தனிமையும் ஒரே நேரத்தில் ஒளிந்திருந்தன.
“இது தான் உலகமா?
இது தான் வாழ்க்கையா?
இது வரை என் வாழ்வு
கானாற்று வெள்ளமா?”
பாடல் மென்மையாக ஒலித்தது.
சுந்தரம் வராண்டாவில் அமர்ந்தபடியே வீட்டின் பழைய ஷோகேஸை பார்த்தார். ஒரு காலத்தில் அது அவரது வாழ்வின் வரலாறாக இருந்தது — விருதுகள், பாராட்டு சான்றிதழ்கள், மேடைப் புகைப்படங்கள்; வெற்றியின் ஒளியால் கண்ணில் ஒளிர்ந்த காட்சிகள்.
இப்போது அந்த இடம் பேரக்குழந்தைகளின் கோப்பைகளாலும் சான்றிதழ்களாலும் நிரம்பி, அவர் வாழ்ந்த காலத்தின் ஒளியை மறைத்து விட்டது.
அவரது நினைவுகளும் ‘பொக்கிஷங்களும்’ ஒரு பழைய சூட்கேஸுக்குள் அடைக்கப்பட்டன. சில நேரங்களில் அந்த பெட்டியைத் திறந்து, “இப்படித்தான் ஒருகாலத்தில் நான் இருந்தேன்,” என்று சொன்னாலும், அந்தக் குரல் இனி கண்ணாடி ஷோகேஸுக்குள் ஒளிராது என்பதை அவர் நன்றாக அறிவார்.
வீட்டில் யாருக்கும் அவருடன் பேச நேரமில்லை. பேரக்குழந்தைகள் தங்களுக்கென ஒரு உலகம் — செல்போன், கணினி, டிவி; சுந்தரம் பேசினால், ஒரு “ஹா” அல்லது “ஹூம்” என்ற பதில் மட்டுமே.
அந்த அமைதிதான் அவரை அதிகமாகக் கொன்றது.
அந்தத் தனிமைக்கு துணை — பழைய சூட்கேஸும், அதிலிருக்கும் புகைப்படங்களும் சான்றிதழ்களும். நாப்தலின் வாசனையில் ஒரு பழுப்பு நிற பாராட்டுச் சான்றிதழ் கையில் சிக்கியது.
அதைக் கண்டபோது, தொழிற்சாலையில் ஒருகாலத்தில் செய்த அர்ப்பணிப்பின் நினைவு வந்தது: ஒரு பெரிய வாடிக்கையாளரின் முன் இயந்திரத்தை இயக்கி வெற்றியடைந்த நொடிகள், மேலாளரின் கைப்பட எழுதிய கையெழுத்தோடு கிடைத்த அந்த சான்றிதழ் — இப்போது கனவு போலத் தோன்றியது.
அந்தச் சான்றிதழ் — தங்கம், வைரத்துக்கு மேல் மதிப்பானது. அவர் கைகளில் அதனை பிடித்தபோது, காலத்தின் சாயல், சாதனைகளின் ஒளி, மறந்த மனித உறவுகள் — அனைத்தும் ஒரே நேரத்தில் மனதில் கலந்தெழுந்தன.
பழைய பாடல் இன்னும் பின்னணி காற்றில் ஒலித்துக்கொண்டே இருந்தது; அந்த ஒலி, அந்த நினைவுகள், சுந்தரத்தின் தனிமை, வாழ்க்கையின் சுழற்சியை அனைத்தையும் ஒரே நேரத்தில் உயிரோடு வைத்திருந்தன.
“அமைதியில்லா தென் மனமே…
என் மனமே
அமைதியில்லா தென் மனமே…
என் மனமே”
கண்டசாலாவின் குரல் ரேடியோவில் ஓடியது.
அது ஒருவித புளகாங்கிதம் தரும் இசையில்லை; மாறாக, சுந்தரத்தின் உள்ளே இருந்த வெற்றிடத்தை இன்னும் ஆழமாகக் கிளறிக்கொண்டிருந்தது.
அந்தச் சமயம், பழைய செல்போன் குரல். மறுமுனையில் — பாலுவின் மகன்.
“மாமா… அப்பா இனிமே இல்ல மாமா…”
அது ஒரு செய்தி அல்ல. ஒரு இடிமுழக்கம். அதற்குப் பிறகு உலகமே வெறுமை போல.
கையில் இருந்த தொலைபேசி கனமாகி, அது கூட விழுந்துவிடும் போலத் தோன்றியது. கண்களில் நீர் பாய்ந்தது; ஆனால் குரல் வாய் வரை வந்து, அங்கே சிக்கி நின்றது.
பாலு — அவரது உயிர்த்தோழன். அவர் வாழ்க்கையின் ஒவ்வொரு முடிவிலும், ஒவ்வொரு சிக்கலிலும், நிழல் போலச் சுற்றிக் கொண்டிருந்த மனிதன்.
ஒருகாலத்தில், பாலு காவேரி என்ற பெண்ணை காதலித்தான். அது இரண்டு குடும்பங்களுக்கும் இடையே புயலை கிளப்பியது — சண்டைகள், வாக்குவாதங்கள், உறவுகள் முறிந்தன.
அந்தச் சமயத்தில், நடுவில் நின்று சமாதானம் செய்து, அவர்களது திருமணத்தை நடத்தி வைத்தவர் சுந்தரம் தான்.
அந்தக் காலத்தில் — அவர் ஒரு வார்த்தை சொன்னால் போதும்; “சுந்தரம் சொன்னார்” என்பதே முடிவாக இருந்தது. அப்படி ஒரு நிலை, ஒரு மதிப்பு.
ஆனால் இன்று — அந்த நண்பனின் மறைவுச் செய்தி, அவரை இங்கே ஒரு மூலையில் சுருண்டு உட்காரச் செய்துவிட்டது.
நானூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஊருக்கு, போய் சேரவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் முழங்கால் வலியும், உடல் சோர்வும் அதை சாத்தியமில்லாத கனவாக்கியது.
“நண்பனை கடைசியாகக் கூட பார்க்க முடியாதோ?” என்ற வலி, மார்புக்குள் சிக்கிக்கொண்டு, உயிரையே கசக்கிக் கொண்டிருந்தது.
ரேடியோவில் இன்னும் அந்தப் பாடல் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் அது இனி ஒரு பாடல் இல்லை.
சுந்தரத்தின் தனிமை, வேதனை, குற்ற உணர்வு — அவைகளுக்கு இசையாக, மெளனமாகக் கண்ணீர் சிந்தும் குரலாய் அதே வரிகளைத் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது.
“பசுமை நிறைந்த நினைவுகளே…
பாடித்திரிந்த பறவைகளே…
பழகிக் கழித்த தோழர்களே…
பறந்து செல்கின்றோம்…”
பாலுவுடன் கடந்த இளமை நாட்கள்– பாசாங்கில்லாத, வறுமையோடும், ஆனந்தமோடும் கலந்த அந்தக் காலங்கள்– ஒரே சுழலில் பாய்ந்து வந்து நின்றன.
சுந்தரத்தின் நினைவுகள் பின்னோக்கி ஓடிக்கொண்டிருந்தது.
அன்றைக்கு முதலமைச்சராக இருந்த அண்ணாதுரை அவர்கள் மறைந்த தினம் அது.. ஊரிலிருந்து நண்பர்கள் குழுவாகச் சென்னைக்குச் சென்றார்கள். பல்லாயிரம் மக்கள் கூடிவிட்ட அந்த இறுதி ஊர்வலத்தில், சலசலப்பும் கோஷங்களும் வானைக் கிழித்தன.
அந்த கூட்டத்தில் திடீரென நண்பன் ஒருவன் காணாமல் போனான். “அவன் எங்கே போனான்?” என்ற பதட்டத்தில், மெரினா கடற்கரையோரம் அவனும் சுந்தரமும் அலைந்து திரிந்தார்கள்.
அலைகள் கரையை அடித்த சத்தமும், தொலைவில் கத்திக்கொண்டிருந்த பேரணிக் குரலும்– அப்போது சுந்தரத்தின் உள்ளத்தில் பிளந்த ஓசையாய் நின்றன.
பின்னர் தான் தெரிந்தது– காணாமல் போன நண்பன் எப்படியோ நேராக ஊருக்கே திரும்பிவிட்டான்!
ஆனால் அந்தத் தேடலும், அந்த அலைச்சலும் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத சின்னச் சாகசம்.
அந்தப் பயணத்தின் வேறு சுவாரஸ்யங்கள் — ஏவிஎம் ஸ்டூடியோ வாசலில் நின்று நடிகர்களைக் காண்பதற்காக மணிநேரங்கள் வீணாக்கியது, நடிகர் சந்திரபாபுவின் நடையைக் கண்டு சிரித்துக் கொண்டது, நடிகர் ஆனந்தனின் வீட்டில் ஒரு கப் தேநீருக்காகக் கூட்டமாக நுழைந்தது– அனைத்தும் அவரது இளமைக்காலத்தின் பிரம்மாண்ட நினைவுகள்.
பையில் இருந்த சில்லறையை எல்லாம் கலைத்துவிட்டு, திரும்ப ஊருக்குப் போக முடியாமல் தவித்தபோது, ஒரு லாரியின் பின்புறம் ஏறி இலவசமாக வந்த சாகசமும் — இன்று நினைவில் ஒரு இனிய காய்ச்சல் போலத் துடிக்கிறது.
ஆனால் இன்று? அதே சுந்தரம் — நானூறு கிலோமீட்டர் தொலைவில், உயிர்த்தோழனின் மறைவுச் செய்தியைத் தொலைபேசியில் கேட்டு நெஞ்சைத் துடிக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.
அங்கு போய் ஒருமுறை முகம் காண முடியாமல், பிளாஸ்டிக் நாற்காலியில் சுருண்டு அமர்ந்திருக்கிறார்.
மார்பின் சுமை அதிகமாய், வலி சிறிது தெளிவாக உணர முடிந்தது.
“சொன்னாலும் வெட்கமடா
சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல்
வாழுகிறேன் ஒரு பக்கமடா…”
T.M.S. பாடிக் கொண்டிருந்தார். அந்த குரல் காற்றை மென்மையாக குளிர்வித்தது.
பாட்டின் சிரிப்பு, சுந்தரத்தின் மனத்துக்குள் கண்ணீராகப் பாய்ந்தது. இருக்கையில் ஆழமாக சாய்ந்தபடி, தன் உயிரின் சுமையை அவர் எண்ணிக்கொண்டிருந்தார்.
இப்போது ஒரு புதிய பிரச்சனை. வீட்டிற்குள் நடந்த சிறிய கலந்துரையாடல், அவருக்குள் சொல்ல முடியாத வேதனையைக் கொடுத்தது.
மூத்த பேத்தியின் திருமணம் நிச்சயமானது — ஒரு பக்கம் மகிழ்ச்சி, மற்றொரு பக்கம் மௌனக் காயம்.
“அவங்களுக்கு தனி அறை வேணும்…” என்ற வாக்கியம், யாரும் நேரடியாக அவரை குறிக்காதபோதும், அவரது உள்ளத்தில் ஒரு நிழல் போல மாறியது — “நீங்க இல்லாம இருந்தா சுமையில்லாமல் இருக்கும்…” என்ற சொல்லாக.
“என் இருப்பே சுமையா?” அந்தக் கேள்வி அவரது நெஞ்சில் முள் போல் நின்றது.
இந்தக் காலம் — வசதிகளோடு சுமைகளையும் அதிகரிக்கிறது. அதில் குடும்பம் என்ன செய்ய முடியும்?
அவரது இருப்புக்காகவே இடமில்லாத நிலைமை — அதுவே வாழ்க்கையின் நிர்வாண உண்மை.
வீடு முழுவதும் பரவி வரும் குழப்பம், ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருக்கும் பழைய பாடல் — இவை இரண்டும் சுந்தரத்தின் கண்களைச் சிதறச் செய்தன.
ஆழ்ந்த மூச்சை எடுத்தார்; ஆனால் அந்த மூச்சே அவருக்கு எதிரியாக இருந்தது.
அவரது விரல்கள் ரேடியோ கருவியில் ஒரு பழைய பட்டையைத் தட்டின.
அந்தச் சத்தத்தோடு சேர்ந்து முழங்கால் வலியும், மார்பில் கடுமையான அழுத்தமும், மூச்சுத் திணறலும் — உயிரை நொடி நொடியாய் கவர்ந்தன.
அவர் எழுந்து வர முயன்றார். ஆனால் கால்கள் உடைந்த மரக்கிளை போல அசையவில்லை.
“அட…ஆ…ஆஹ்…” வாய் திறந்தது; ஆனால் சத்தம் வெளியில் வரவில்லை.
பார்வை மங்கியது. அருகிலிருந்த மரங்களும், சாய்ந்த சூரியனின் வெளிச்சமும் — அனைத்தும் கண்ணுக்குள் கலங்கிப் போன வண்ணங்கள் போலத் தோன்றின.
அடுத்த நொடி — மார்பு முழுவதும் அசாதாரண சுழற்சி. திடீர் திணறல். அவர் நின்றபடியே முழங்காலுடன் தரையில் விழுந்தார்.
வீடு முழுவதும் சத்தமாய் இருந்தது. சமையலறை பாத்திரங்களின் ஓசை, பேரக்குழந்தைகளின் தொலைபேசி குரல், மருமகளின் வேகமான நடைகள் — அனைத்தும் ஓடிக் கொண்டிருந்தன.
ஆனால் அந்த வெளியில், ஒரு உயிரின் மூச்சு மெதுவாகக் கசிந்து உலகத்தைக் கடந்தது யாருக்கும் தெரியவில்லை.
சுந்தரம் — ஒரு வாழ்க்கை முழுவதும் குடும்பத்திற்காகச் செய்த தியாகங்களோடு, தனிமையான, கேட்கப்படாத குரலோடு, இடமில்லாத இடமாக, வராண்டா தரையில் விழுந்த உடலாக மாறிப் போனார்.
“ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா…”
சீர்காழியின் சோகக் குரல் எங்கோ மெல்லக் கரைந்தது.
சுந்தரத்தின் மரணம் — குடும்பத்தினருக்குள் ஒரு கணம் வருத்தம் தந்தது. ஆனால் அதே நேரத்தில், நீண்ட நாட்களாகக் கசந்த சண்டைகளுக்கு ஒரு மறைமுக நிம்மதிப் பெருமூச்சாய் மாறியது.
இனி அறைக்கான வாக்குவாதம் இல்லை. இனி “எங்கே அவரை உறங்க வைப்பது..?” என்ற குழப்பம் இல்லை. வீட்டுக்குள் எங்கோ மறைந்திருந்த இலகுவான காற்று, மெல்ல வெளிப்பட்டு சுவாசிக்கத் தொடங்கியது.
சுத்தம் செய்யும் நாளில், அவரது பழைய சட்டைகள், வேஷ்டிகள், துண்டுகள் — பயன்பாடு இழந்த பொருட்களைப் போல, யாரும் திரும்பிப் பார்க்காமல் தூக்கி எறியப்பட்டன.
உயிரோடு காப்பாற்றிக் கொண்ட பாராட்டுச் சான்றிதழ்கள், மஞ்சள் படிந்த புகைப்படங்கள், ஒருகாலத்தில் ‘அவரே குடும்பத்தின் முதுகெலும்பு’ என்று சொன்ன ஆவணங்கள் — அனைத்தும் குப்பைக்கூடையின் அடியில் சிதறிப்போன கனவுகளாய் விழுந்தன.
காகிதங்கள் காற்றில் பறந்தன. அந்தக் காற்றோடு அவர் வாழ்ந்த பெருமைகளும் பறந்தன. அவற்றை யாரும் பிடித்து வைக்க நினைக்கவில்லை.
ஒருகாலத்தில் ‘அப்பா’, ‘மாமா’, ‘தாத்தா’ என்று கூவிய குரல்கள் — இன்று சோஃபாவின் மூலையில் கால்களை நீட்டி அமர்வதற்கான வசதியான இடத்தைப் பெற்றதில் மகிழ்ந்தன.
அதே வேளையில் — பேரக் குழந்தைகளின் புதிய கோப்பைகள், ஷோகேஸில் வெள்ளை விளக்கின் கீழ் மின்னின.
நேற்றைய பெருமைகள், நினைவுகள், மதிப்புகள் குப்பைத்தொட்டியில் கரைந்தபோது, நாளைய குப்பைகள் கண்ணாடிப் பெட்டிக்குள் புதிய பெருமைகளாய் மின்னிக் கொண்டிருந்தன.
வாழ்க்கை அலை போல வந்து சென்றது. நிமிர்ந்த நெற்றியுடன் நடந்த சுந்தரம் — இப்போது குப்பை மூட்டையின் வாசமாக மட்டுமே இருந்தார்.
“உலகே மாயம் வாழ்வே மாயம்
நிலையேது நாம் காணும் சுகமே மாயம்
காணும் சுகமே மாயம்…”
அந்த மாலை – தூரத்தில் மெதுவாக ஒலித்தது கண்டசாலாவின் குரல்.
அந்தப் பாடல், வீட்டில் யாரையும் நெகிழ்விக்கவில்லை. குழந்தைகள் டிவி சத்தத்தில் மூழ்கினர்; காய்கறி விலை, தங்கம் ஏற்றம் போன்ற மெய்யான விவாதங்கள் வீட்டிற்குள் தொடர்ந்தன.
ஆனால் அந்தப் பாடல் – அந்த வீட்டின் சுவர்களுக்குள், அமைதியாகக் கிடந்த சுந்தரத்தின் ஆன்மாவுக்கே மட்டும் ஒரு இறுதி கண்ணீராய் ஒலித்தது.
– சொல்வனம், இதழ் 352, அக்டோபர், 2025.
![]() |
சு.அப்துல் கரீம் (மே 1979) மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர். கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் கணிதம் படித்து, பின்னர் கணினி பயன்பாடுகளில் முதுநிலை பெற்றார். தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் மென்பொருள் நிபுணராகப் பணியாற்றி வருகிறார். தொழில், வாசிப்பு, எழுத்து என அனைத்தையும் ஒருங்கே இணைத்து மதுரையில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். சிறுவயதிலிருந்தே புத்தக வாசிப்பில் ஆர்வம் கொண்ட இவருக்கு, அந்த வாசிப்பு தமிழின் மீதான காதலாகவும், பின்னர் எழுத்தின் மீதான…மேலும் படிக்க... |
