கண்டெடுத்த கர்ணகி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 11, 2025
பார்வையிட்டோர்: 193 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல – ஒரு வாணிபச் செட்டியாரு இருந்தாரு. அவருக்கு ரெண்டு மூணு மகங்க. மூத்தவ் கொஞ்சம் தில்லவாரி! கண்டபடி வாந்துகிட்டிருந்தா. கல்யாணத்த முடுச்சு வச்சா, திருந்துவாண்ட்டு, கல்யாணத்த செஞ்சு வச்சாங்க. திருந்தல. கூடப் பெறந்தவங்க மொனங்க ஆரம்பிச்சுட்டாங்க. குடும்பத்ல கோவுச்சுக்கிட்டு புருசனும் பொஞ்சாதியும் மருதைக்கு வாராங்க. 

மருதைக்குள்ள ஆரயுமே தெரியாது. திக்குத் தெரியாம முளுச்சுக்கிட்டு நிக்கிறாங்க. அப்ப, அங்கிட்டிருந்து, கொடப்புடுச்சு ஒரு ஆளு வந்தாரு. வரயில, இந்த வாணிபச்செட்டியாரு மகன், கிட்டப் போயி, ஐயா! இந்த ஊருக்கு நா புதுசு, எனக்கு இந்த ஊர்ல ஒரு வேல வேணும்ண்டு கேட்டாரு. கேக்கவும், அந்தப் புண்ணியவான் இரக்கப்பட்டு, என்னா வேல செய்வேண்டு கேட்டாரு. எண்ணெவிப்பேண்டு சொல்றர். சொல்லவும், பக்கத்துக் கடக்கிக் கூட்டிட்டுப் போயி, இவருக்கு தெனமும் பத்துப்படி எண்ண குடுத்திருங்க. அவரு வித்துட்டு வந்து, எண்ணைக்கான காச ஒங்களுக்குக் குடுத்திட்டு, லாபத்ல அவரு பொளச்சுக்குவாருண்டு சாமியங் குடுத்தாரு. கடக்காரனும் தெனமும் பத்துப்படி எண்ண தரேண்டு சொல்லிட்டா. 

அந்தப் படி போயி, பத்துப்படி எண்ணெய வாங்குறது- விக்கிறது, வீட்டுக்கு வர்றதுமா சந்தோசமா, புருசனும், பொண்டாட்டியும் இருக்காங்க. இருக்கயில, ஒருநா, எண்ணெய வாங்கிக்கிட்டு நடந்து போறா. போற வழில, ஒரு காளி கோயிலு இருக்கு. அந்தக் காளி கோயிலு கிட்டப் போகயில, ‘அம்மா!! காளீஸ்வரி!! இந்த எண்ணெ சீக்கிரமா வித்துப் போச்சுண்டா ஒனக்கு வெளக்குப் போடுறே. எங்குல தெய்வமா . ஏத்துப்பேண்டு’ சொல்லி கும்பிட்டுட்டுப் போறர். 

ஊருக்குள்ள போயும் – போகங்குள்ள, பொம்பளைக கூப்புட்டுக் கூப்புட்டு எண்ணெய வாங்குறாங்க. எண்ணெயும் சீக்கிரமாத் தீந்து போச்சு. திரும்பி வாரா. வார வழியில, காளியப் பாத்து, நேந்து கொண்டபடி கதவாலத் தொறந்து, அங்கிட்டு கத்தாளக்குள்ள கெடந்த குளியாஞ்சட்டியத் தேடிப் பெறக்கி எண்ணெய ஊத்தி, வெளக்கேத்தி வரிசயா வைக்கிறா. காளி கோயில்ல வெளக்கு எரியுறதப் பாத்ததும், ஓட்டமா ஓடியாந்து காவக்காரங்க புடுச்சுக்கிட்டாங்க. அடப்பாவி!! யாரு வௌக்கேத்தக் கூடாதுண்டு பாண்டியன் உத்தரவப்பா! உத்தரவ மீறி, நீ வெளக்கேத்தலாமாண்டு புடுச்சுக்கிட்டாங்க. ஐயா! நானு வெளியூரு, எனக்குத் தெரியாதுண்டு சொல்றா. இல்லப்பா, மீறி வெளக்கு வச்சவங்கள், நாங்களா விடக்கூடாது. விட்டாப் பாண்டியன் எங்கள் கோவிப்பாரு. வாப்பா! பாண்டியங்கிட்டப் போவோம்ண்டு கூட்டிட்டுப் போறாங்க. ‘காளி கோயில்ல வெளக்கேத்தினா, விசாரண இல்லாம் வெட்டிப் போடணும்ண்றது பாண்டியன் உத்தரவு’. காளி கோயில்ல வெளக்குப் போட்டாண்டு சொல்லவும், கொலக்களத்ல கொண்டு போயி வெட்டிப் போடுங்கண்டு, பாண்டியன் சொல்லிட்டு, அந்தப் பொறத்துக்குள்ள போயிட்டா. கொலயாளிக வாணிபச் செட்டியாரு மகன, வெட்டிப் போட்டுட்டாங்க. 

“பாண்டியனோட குல தெய்வந்தா காளி. பாண்டியனுக்கு வாரிசு இல்லாததனால ரொம்ப வருந்தி, மனைவிக்குப் பிள்ளப்பேறு வேணும்ண்டு வேண்டிக்கிட்டா”. நாட்கள் கடந்தனவே தவிர, பிள்ளப் பேறு கிட்டவில்ல. மிகவும் வெறுப்படைந்த பாண்டியன் காளிக்கு வழிபாடு செய்வத நிறுத்திக் கொண்டதுடன், யாரும் வழிபடக் கூடாதுண்டு தட விதித்தா. காளியச் சுற்றி வேலியிட்டர். கதவயும் பூட்டி விட்டா. தடயை மீறியதால் வாணிபச் செட்டியாரு மகனுக்கு கொலத் தண்டன கெடைத்தது.

அப்ப, வாணிபச் செட்டியாரு மகன் தங்கி இருக்கிற ஊர்ல, விழாக் கொண்டாடுராங்க. பொண்டாட்டியானவ புருசனோட வரவ எதிர்பாத்துக் காத்துக்கிட்டிருக்கா. வரல, உசுரோட இருந்தாத்தான வருவர். ரெண்டுநா – மூணுநா ஆச்சு வரல. நாளாக – ஆக, கை கால் வீங்கிச் செத்துப் போயிட்டா. வகுத்துக்குள்ள இருந்த பிள்ளயும் செத்துப் போச்சு. 

சாகவும், துர்க்கக்கி கோவம் வந்திருச்சு. தன்ன வழிபட்டதுக்காக, வாணிபச் செட்டியாரு மகன கொல செஞ்சிட்டர். அவ் பொண்டாட்டியும் பிள்ளத்தாய்ச்சியா இருந்தாவ, புருசஞ் செத்த ஏக்கத்ல செத்துப் போயிட்டா. பழிக்குப் பழி வாங்கணும்ண்ட்டு துக்கயே, பாண்டியனுக்கு மகளா வந்து பெறக்குறா. 

பெறந்தது பொம்பளப் பிள்ள. பெறக்கயிலேயே காலுல செலம்பு, நாக்குல சூலாயுதம் இருந்திச்சு. இதப் பாத்ததும், பாண்டியன் பயந்துபோயி, அரமணச் சோதிடக்காரங்களக் கூப்பிட்டுக் கேட்டர். பாண்டியனே!! இந்தக் கொழந்த பெறந்ததுனால, நமக்கு நசுட்டமே தவிர லாபமில்ல. இந்தக் கொழந்த பெரியவளாகிறபோது, அழுதால் அரமண தீப்பிடிக்கும், சிரிச்சா அரமண இடிஞ்சு வி ழுகும். வளர வளர வாரிசு இல்லாமப் போயிரும்ண்டு சொல்லிட்டாங்க. 

பிள்ள இல்லாட்டியும் பரவாயில்லப்பா. இந்தப் பிள்ள வேணாம்ண்டு, அரமணக் காவக்காரங்களக் கூப்பிட்டு, இந்தப் பிள்ளய எடுத்திட்டுப் போயி, வரட்டாத்துல பொதச்சிட்டு வந்திருங்கண்டு பாண்டியன் சொல்லிட்டா. மன்னன் பேச்ச மீற முடியுமா? அதனால், 

அடக்கமாப் பொட்டி செஞ்சு, பொட்டிக்குள்ள வச்சு மூடி, வரட்டாத்துல கொண்டு போயி பொதச்சிட்டாங்க, அப்ப, துர்க்கயம்மா, வருண பகவான வேண்டுறா. எப்டிண்டா: வருண பகவானே!! பாண்டியனப் பழி வாங்கலாமண்டு, அவனுக்கு மகளாப் பெறந்தே. என்னயக் கொண்டு வந்து மழ தண்ணி பெய்யாத எடத்ல பொதச்சு வச்சிட்டா. என்னய மீண்டும் எழுப்புறது, ஒம் பொறுப்புண்டு வேண்டுனா. 

துர்க்கயோட வேண்டுதலக் கேட்ட வருண பகவான், மழயாப் பேஞ்சு, எண்ணக்கிமே வெள்ளம் வராத வரட்டாத்ல, அக்கா வெள்ளம் – தங்கச்சி வெள்ளமாப் புறப்பட்டு, பெட்டியக் குத்தி வெளியேத்தி, இழுத்துக்கிட்டு வருது. அந்தச் சமயத்துல, மாசாத்துவானும் – மாநாய்கானும் பழம பேசிக்கிட்டு, ஆத்தங்கர வழியா வாராங்க. வரயில, பொட்டி மெதந்து வாரதப் பாக்குறாங்க. மாசாத்துவான், மாநாய்க்கனப் பாத்து, மச்சுனா ஆத்துல பொட்டி ஒண்ணு மெதந்து வருதுண்டு சொல்றாரு. அப்ப, மாநாய்க்கன், மச்சுனா!! பொட்டிக்குள்ள இருக்கது என்னதுண்டு சொல்றாரு. சொல்லிக்கிட்டிருக்கயில, பொட்டி கிட்டத்ல வந்திருச்சு. எடுத்துப் பாத்தாங்க. பொண் கொழந்த. கொழந்தய மாநாய்கன் தூக்கி வச்சுக்கிட்டாரு. மச்சுனா! இண்ணக்கி சொல்லுறதர். இதுதா பொண்ணு. உம் பையந்தர் மாப்பிள்ளண்டு. ரெண்டு பேரும் பேசிக்கிட்டு, கண்டெடுத்த கர்ணகிண்டு பேரு வச்சு, பேசி சிரிச்சுக்கிட்டுப் போறாங்க. 

துர்க்கா, பாண்டியனுக்கு மகளாப் பெறக்கயில, கொல செய்யப்பட்ட வாணிபச் செட்டியாரு மகன், மாசாத்துவானுக்கு மகனாப் பெறந்து வளர்ரா. அவனோட மனைவி, திருக்கடயூர், தேரோடும் வீ தி இருபத்திரெண்டாம் நம்பர் வீட்ல மாதவி யாப் பெறந்து வளர்ரா. அவளோட வகுத்தப் பிள்ள, மாதவி கை மாலயா வெளங்குறா. 

மாசாத்துவன் மகன் கோவலனுக்கும், மாநாய்க்கன் மகள் கண்டெடுத்த கர்ணகிக்கும், கல்யாண பேசுறாங்க. கோவலனுக்கும் கண்டெடுத்த கர்ணகிக்கும் கல்யாணஞ் சீறோடுஞ் சிறப்போடும். எல்லாரும் மெச்சும்படி கல்யாணம் நடக்குது. 

கல்யாணம் முடுஞ்சு காலைல மாநாய்கன் செட்டியாரு, ஆத்துப் பக்கம் போறாரு. போகயில, அங்கிட்டு ரெண்டு பேரு பேசிக்கிட்டிருக்காங்க. எப்டி பேசுறாங்கண்டா: என்னடா கல்யாண முடிச்சாங்க. பெரிய பணக்காரங்க ஆட்டம் பாட்டு எதுவுமே இல்லயே! அவங்க குடுத்த, அந்த விருந்த நம்ம குடுக்க மாட்டமா? பணக்காரங்கண்டுதா பேரு, என்னத்த செஞ்சுபிட்டாங்கண்டு பேசுனாங்க. 

இதக் கேட்ட மாநாய்க்கன், நேரா வீட்டுக்குப் போனாரு. போயி, மாசாத்துவாங்கிட்டச் சொன்னாரு. சொல்லவும், அவருக்கு கோவம் வந்திருச்சு. நம்மளப் பாத்து இப்டி பேசிப்பிட்டாங்களாண்ட்டு, மொத்தமா ஒக்காந்து பேசுறாங்க. பேசயில, இந்த ஒலகத்ல செய்யாத அளவுக்கு செய்யணும்ண்டு, நல்லா ஆடுறவ எங்க இருக்காண்டு மாசாத்துவான் கேட்டாரு. அதுல ஒருத்தரு சொன்னாரு. “கும்பகோணம் தாசியக் கொண்டு வந்தா கொணமா ஆடுவா. மாயவரந் தாசியக் கொண்டுவந்தா மயக்க – மயக்க ஆடுவா ஆனா, இப்ப மருதையில திருக்கடயூர், தேரோடும் வீதி, இருபத்திரெண்டாம் நம்பர் வீட்ல, மாதவிங்கிற தாசி இருக்கா. அவளக்கொண்டு வந்தா, சிறப்பா ஆடுவாண்டு சொன்னாரு”. 

இதக் கேட்டதும், மாசாத்துவான் செட்டியாரு நேரா மருதைக்குப் புறப்பட்டு போனாரு. போயி, மாதவி வீட்டக் கண்டுபுடிச்சு, எங்க வீட்டுக் கல்யாணத்துல ஆடவரணும்ண்டு கேட்டாரு. அப்ப மாதவி சொல்றா, நீர் ஆட வர்றே. ஆனா ஒண்ணு, எங்கையில இருக்கிற மாலய வீ சி எறிவே, அது போயி ஆரு கழுத்ல விழுகுதோ, அவரு எங்கூட வரணும்ண்டு சொன்னா. மாசாத்துவானும் சரித்தேண்டு சொல்லிட்டாரு. 

மாதவியும் வாரா. கோவலனும் – கண்டெடுத்த கர்ணகியும் பாத்து ரசிக்கும்படி, கலைக்கி நாந்தர் பெறந்தேங்கிறதப் போல மாதவி ஆடுறா. 

ஆடிக்கிட்டிருக்கும்போது, தங் கழுத்துல கெடக்குற மாலயக் கழத்தி, வீசி எறிஞ்சா. அது ஆட்டம் பாத்துக்கிட்டிருந்த கோவலப் பெருமாளு கழுத்துல போயி விழுந்திச்சு. மால விழுகவும், கோவலன, மாதவி, கூட வரும்படி கூப்பிடுறா. அப்ப, அங்க இருந்தவங்களெல்லாம் என்ன சொல்றாங்கண்டா” நீயோ நட்டுவச்சி, அவனோ வாணிபச் செட்டியாரு, எப்டியம்மா ஒங்கூட அனுப்புறது? எவ்வளவு பணம் வேணும்ணடாலும் வாங்கிக்கண்டு சொல்றாங்க.

மாதவி கேக்கமாட்டேங்குறா. “கோவலன எங்கூட அனுப்புங்க. இல்லேண்டா, அவங் கழுத்துல கெடக்குகுற மாலயக் கழத்திக் குடுத்திறுங்கண்டு” சொல்றா.

அப்ப,மாதவிக்கு எடுபிடி வேல செய்யிற ‘டாப்பர் மாமா, “ஏம்மா! மாதவி!! எதுக்கு கசுட்டப்படுற, மலயாளத்து மைய எடுத்து, தாம்பூலத்துல தடவிக் குடும்மா. கோவலரு தானாக வந்திருவாருண்டு” சொல்றா. யாரு? டாப்பர் மாமா. 

மாசாத்துவாஞ் செட்டியாரு கெஞ்சுறாரு. எவ்வளவு பணம் வேணும்ணடாலும் தரேன். எஞ் சொத்துப் பூராத்தயும் தரேண்டு சொல்றாரு. சொத்தும் வேணாம், சொகமும் வேணாம். நா குடுக்குற தாம்பூலத்தப் போட்டாப் போதும். நா போறேண்டு மாதவி சொல்றா. 

வெத்தலதான போடச் சொல்றாண்ட்டு, வெத்தலய வாங்கிக் குடுத்தாங்க. கோவலரு போட்டாரு. மயங்கிப்போயிட்டாரு. மயங்கிப் போயிறவும், ஏழு ரூம்புக்கு, அங்கிட்டு இருக்ற ஏழாவது ரூம்புக்குள்ள போட்டு அடச்சு வச்சுட்டாங்க. 

மயக்கம் தெளிஞ்சு, மாதவியைத் தேடிக்கிட்டு மருதைக்குப் போறா. வீதி வழியாப் போகயில, திருக்கடயூர், தேரோடும் வீதி, இருப்பத்திரெண்டாம் நம்பர் வீடு, பொன்னிங்கிற தாசிக்குப் பெறந்த மாதவி வீடு இதுதானாண்டு கேட்டர். இதுதாண்டு சொன்னாங்க. சொல்லவும், கோவலரு உள்ள போனாரு. அங்க ‘டாப்பர் மாமா’ இருக்கா. கோவலா!! வாப்பா! இப்பத்தர் வழி தெரிஞ்சதா? அம்மா மாதவி! கோவலரு வந்துட்டாரும்மாண்டு மாதவியக் கூப்பிட்டுச் சொல்றர். 

மாதவி வெளிய வாரா. வந்து, கோவலரு முன்னால் ஆடுறா. பாடுறா. ஆட்டத்திலும் பாட்டத்திலும் கோவலன் மயங்கிப் போயிட்டர். அந்த மயக்கத்துல அங்கயே தங்கிப்போயிட்டா. 

கொஞ்ச நாளாச்சு. பணம் வேணும்ண்டு மாதவி கேட்டா. கேக்கவும் தந்தைக்கு கோவலன் லிகிதம் எழுதுறா. எப்டி எழுதுறா: “எனக்கு ஒரு கப்பல் நெறயா பணம் அனுப்பணும் இல்லயெனில் செத்து மடிவே – ண்டு எழுதுறா. 

லிகிதத்தப் பாத்து, அப்பப்பா! ஒத்த மகந்தான எனக்கு, அவ எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும்ண்ட்டு, ஒரு கப்பல் நெறயா பணத்த அனுப்புனாரு. அப்ப, கர்ணகிக்குப் பதினாறு வயசு ஆகுது. 

ஒருநா, நந்தவனத்துல பூப் பறிச்சுக்கிட்டிருக்கயில, எங் கழுத்துல தாலி கெடக்கே. புருச் எங்கேண்டு தோழிகிட்டக் கர்ணகி கேட்டா. 

இல்லேம்மா, ஒம் புருச் கோவலரு, ஒங்க கழுத்துல தாலி கட்டின நாளிலிருந்து, மருதயில மாதவி கிட்ட இருக்காருண்டு சொன்னாங்க. 

அவர வரவக்கிறதுக்கு என்னா செய்யணும்ண்டு கர்ணகி கேக்குறா. கேக்கவும், ஒரே வழிதாம்மா இருக்கு. “கோவலன் மனைவி கர்ணகி, நந்தவனத்ல, பூப் பறிக்கயில, பாம்பு கடிச்சுச் செத்துப் போயிட்டாண்டு லிகிதம்’ எழுதம்மாண்டு சொல்றாங்க. 

அப்டியே கர்ணகியும் எழுதிட்டா. லிகிதத்தப் பாத்தவுடனே கோவலன் புறப்படுறா. மாதவி, போக விட மாட்டேங்குறா. 

உன்னப் போல தங்கத்ல செல செஞ்சு வச்சிட்டுப் போண்டு சொல்றா. என்னப் போல தங்கச் செலக்கி எங்க போறதுண்டு சொல்றாரு. மாதவி போக விட மாட்டேங்குறா. போக விடாம இருக்கயில, கர்ணகிய நெனச்சு, 

வஞ்சக மில்லாதவளே, அம்மா!
மாநாய்க்கன் செட்டியார் மகளே!! 
வஞ்சகமில்லாத இந்த வேளயிலே 
வந்து காக்கவேண்டும் என்னயே – ண்டு 

பாட்டுப் பாடுனாரு. பாடவும் ஒரு தங்கச் செல வந்திச்சு. அதக் கொண்டு போயிக் குடுத்தாரு. அத வாங்கி வச்சுக்கிட்டு. 

கோவலரே! செல மட்டும் போதாது. அந்தச் செல பேசணும்ண்டு மாதவி சொல்றா. கர்ணகிய நெனச்சர். செல பேசுச்சு. பேசவும், கோவலனப் போகச் சொல்லுறா. 

வேகமா வெளியேறிப் போறாரு. போகயில, கர்ணகி நெனக்கிறா. தன்னப் போல செல செஞ்சு வச்சிட்டு வாராரோண்டு ஞானத்ல பாக்குறா கர்ணகி. ஒடனே, செல் தீப்புடிச்சி எறிஞ்சு போச்சு. 

மாதவி, டாப்பர் மாமாகிட்ட வந்து, கோவலன் வச்சிட்டுப் போன செல, தீப்பிடிச்சு எரிஞ்சு போச்சுண்டு சொல்றா. 

அப்ப டாப்பர் மாமா, கோவலன் ஊருக்குள்ள போறதுக்குள்ள கூப்பிட்டு வரணும் “பூப் பறிக்கயில, பூ நாகந் தீண்டி மாதவி இறந்துவிட்டாண்டு லிகிதம் எழுதம்மாண்டு சொல்றா. ஒரு எளந்தாரிப் பயகிட்டக் குடுத்து, கோவலங்கிட்டச் சேக்குறதுக்கு வழி சொல்றர். அவ், சொன்ன மாதிரி லிகிதம் எழுதிக் குடுத்தா. ஒரு எளந்தாரி, அதக் கொண்டுகிட்டு வேகமா ஓடி, கோவலன எடயில புடுச்சு லிகிதத்தக் குடுத்தர். 

குடுக்கவும், கோவலனுக்கு அங்கிட்டுப் போக மனசில்ல. திரும்பி வர்றா. வீட்டுல வந்து பாத்தர், மாதவி படுத்துக் கெடக்கா. மாதவி!! நீ, பூ நாகந் தீண்டி செத்து போனதாக லிகிதம் வந்திருக்கேண்டு சொன்னர். சொல்லவும் ஆமா! நாந்தர் எழுதினே. நீ வச்சிட்டுப் போன செல இருக்காண்டு பாரு.இல்ல. தீப்புடிச்ச எறிஞ்சு போச்சு. அதர் திருப்பிக் கூட்டிட்டு வரச் சொன்னேண்டு சொல்றா. 

மனைவி இறந்துகூட, சண்டாளன் வரலயேண்டு எஞ்சாதி சனம் சொல்லும். பேருக்கு மட்டும் போயிட்டு வர்ரே. திரும்பி வந்து, உன் காலுக்கடியிலே கெடக்குறேண்டு கோவலன் சொன்னா. 

நீ போகக்கூடாது. அப்டிப் போகணும்ண்டா, பதினாராயிரம் பொன்ன இப்பவே வைக்கணும் பட்டுப் பீதாம்பரங்கள அவுத்துப் போட்டுட்டு, ஆத்தி நாரக் கோவணமா கட்டிக்கிட்டுதா, போகணும்ண்டு சொல்லிட்டா. 

சரிண்டு சொல்லிட்டு, வீட்டுக்கு வாரர். வரவும், ஓடியாந்து கோவலன, கர்ணகி வாங்கண்டு சொல்றா.

மாதவி கிட்ட கடன்பட்டு வந்திருக்கே. பதினாராயிரம் பொன் குடுக்கணும் எங்கிட்ட பதினாராயிரம் பொன் இல்லண்டு சொல்றா. 

அம்மா கர்ணகி தன் காற்சிலம்ப வித்து, அந்த பதினாராயிரம் பொன்ன மாதவிக்குக் குடுத்திட்டு வந்திருங்கண்டு சொல்றா. 

சொல்லவும், செலம்ப வாங்கிக்கிட்டு, க மருதைக்குப் போறா. அப்ப, கர்ணகியும் கூட வரேண்டு சொல்றா. சரிண்ட்டு கட்டுச் சாதங் கட்டிக்கிட்டு, ரெண்டு பேரும் மருதைக்கு வாராங்க. 

மருதயில, கர்ணகிய, மொட்டப் பெராமணத்தி வீட்ல அடைக்கலங் குடுத்திட்டு, செலம்ப எடுத்துக்கிட்டு, மருதைக்குள்ள போறர். போகயில, ஓங்களுக்கு ஏதாவது ஆபத்துண்டா தெரியுறதுக்கு அடயாளம் வேணும்ண்டு கேக்குறா. கேக்கவும் தீண்டா மணி விளக்கு, செம்பு நெறயா ஜலம், மல்லிகப் பூ, தேங்கா இந்த நாலயும் குடுக்கிறர். குடுத்திட்டு, எனக்கு ஆபத்துண்டா, தீண்டா மணி வௌக்கு அணஞ்சு போகும். செம்பு ஜலம் வத்திப் போகும். மல்லிகப் பூ வாடிப் போகும். தோங்க அழுகிப் போகும்ண்டு சொல்லிட்டுப் போறா. 

மருத வீ தியில் செலம்போ! செலம்புண்டு சத்தம் போட்டுக்கிட்டு போறா. வஞ்சிப் பொத்தன் மகன் ஓடியாந்து, அப்பா! அப்பா! யாரோ ஒரு ஆளு, செலம்பு வித்துக்கிட்டு வாராம்ப்பாண்டு சொல்றா. 

பாண்டிமா தேவிக்கு செஞ்ச கால் செலம்பத் தொலச்சிட்டு நாளக்கி சாகப் போறோமேண்டு படுத்துக் கெடக்குறர் வஞ்சிப் பொத்தன். 

பாண்டியன் ஆணப்படி, அழகான செலம்பொன்று செஞ்சு, எசக்கி – எச முத்துக்களப் பதிச்சு, சூரிய வெளிச்சத்துக்காக அவரப் பந்தல்ல வச்சிருக்கா. ஒரு கருடன் அந்தச் செலம்பத் தூக்கிட்டுப் போயி, கூட்டுல வச்சுக்கிருச்சு. 

ஏ…ண்டா, வஞ்சிப்பத்தன் வீட்டு வாசல்ல, ஒரு வில்ல மரம் இருந்திச்சு. அந்த வில்ல மரத்ல, ஒரு கருடன், கூடுகட்டி குஞ்சு பொறிச்சிருந்திச்சு. அந்தக் குஞ்சுகள, இந்த வஞ்சிப்பத்தனோட மகன் எடுத்துக், காலுல கயத்தக் கட்டி அங்கிட்டும் – இங்கிட்டும் இழுத்து வெள்ளாடவும் கடசில குஞ்சு செத்துப் போச்சு. அதத் தூக்கிக் குப்பமேட்ல போட்டுட்டர். கருடன் வந்து பாத்துச்சு. குப்பமேட்டுல செத்துக் கெடக்குதுக. ஆகா! படுபாவிப்பய! நம்ம பிள்ளைகள் இப்டிச் சாகடிச்சுட்டானே. இவன பழிக்குப் பழி வாங்கணும்ண்டு நெனச்சுக்கிட்டிருக்கயில, வஞ்சிப்பத்தன், செலம்புகள் சூரிய ஒளிக்காக அவரப்பந்தல்ல கொண்டு வந்து வச்சர். இதர் சமயம்ண்டு, ரெண்டு செலம்பயும் எடுத்துட்டுப் போயி, கூட்டுல வச்சுக்கிருச்சு. பாண்டியங்கிட்ட செலம்பங் குடுக்க முடியல. குடுக்க முடியாததுனால பாண்டியன், சிரச்சேதஞ் செய்ய உத்தரவிட்டுட்டர். விடிஞ்சா வெட்டப் போறாங்க. அந்த வருத்தத்துல படுத்துக் கெடக்கா. 

அந்தச் சமயத்ல, கோவலன் வீதி வழியா செலம்போ செலம்புண்டு சத்தம் போட்டுக்கிட்டு, வரதுக்கும் வஞ்சிப்பத்தன் மக வந்து சொல்றதுக்கும் சரியா இருந்திச்சு. 

மக சொல்லவும், வஞ்சிப்பத்தன் வெளிய எந்திருச்சு வந்தர். அப்ப கோவலன், செலம்பக் கையில புடுச்சு வர்ரர். 

அப்ப: வஞ்சிப்பத்தன், கோவலன் முன்னால வந்து, ஐயா! எந்த ஊரு? என்ன வம்சம்? இந்த வெயில்ல, வெல மதிக்க முடியாத செலம்பக் கையில புடுச்சு வித்து வாரங்கண்டு கேட்டா. 

அதுக்குக் கோவலன், நர் காவிரிப்பூம்பட்டிணம். எம் பேரு கோவலப் பெருமாளு. மாசாத்துவாஞ் செட்டியாரோட ஒரே மக். இது, ஏ.. மனைவி யோட செலம்பு. இத விக்கிறதுக்கு மருதைக்கி வந்திருக்கேண்டு சொல்றா. 

அடடா! மாசாத்துவாஞ் செட்டியாரு மகனா நீங்க. ஒங்க பாட்டனும் எங்க பாட்டனும் எவ்வளவு சினேகிதருங்க. அதோட அவங்க சினேகிதம் நிண்டு போகல. ஒங்கள, எங்கிட்டக் கொண்டு வந்து சேத்திருக்கு. நமக்குள்ள எவ்வளவு ஒத்தும பாத்தீங்களாண்டு, வாய்க்கு வந்தபடி புகழுறா. 

புகழ்ந்திட்டு, இந்தச் செலம்ப, குடிமக்க வாங்க முடியுமா? அரமணப் பாண்டியந்தான் வாங்க முடியும். எங்க கூட வாங்க, பாண்டியங்கிட்டச் சொல்லி, வித்துத் தாரேண்டு சொன்னர். 

கோவலப் பெருமாளு சரிண்ட்டாரு. அரமணக்கிக் கூட்டிக்கிட்டுப் போறா. வாசப்படில ஒக்கார வச்சிட்டு, நா கூப்பிட்டாத்தான் வரணும்ண்ட்டு உள்ள போயிட்டா. யாரு? வஞ்சிப்பத்தன்.

பாண்டியங்கிட்டப் போயி, அரசே! அரசிக்கு செஞ்ச செலம்ப திருடினவனக் கையுங் களவுமா பிடிச்சுக் கொண்டு வந்திருக்கே. நீங்க பாத்து அவனுக்கு என்ன தண்டன குடுக்க முடியுமோ குடுங்க அரசேண்டு தாந் தப்பிகிறதுக்காகப் பாசாங்கு பண்ணிப் பேசுறா. 

முங்கோபக்காரப் பாண்டியன், கோவலப் பெருமாள கொண்டு வரச்சொன்னர். கோவலப் பெருமாளக் கூட்டிட்டுப் போயி, குற்றவாளிக் கூட்டுல நிறுத்தி விசாரிக்குறாங்க. 

விசாரிக்கயில், அரசே! திருட்டுங்கறது எங்க பரம்பரயில கூட இல்ல. இது ஏ…ம் மனைவி யோட செலம்பு. விக்கிறதுக்கு வந்தேண்டு கோவலப் பெருமாளு சொல்றாரு. சொல்றதக் கேக்காம, செலம்ப வாங்கிக்கிட்டு, இவனக் கொண்டுபோயி கொலக் களத்துல வெட்டிப் போடுங்கண்டு சொல்லிட்டாரு. 

அப்ப, ஒரு மந்திரி, அரசே! நம்ம ஆச்சி செய்ற தர்ம நீதி அழிஞ்சு போகக்கூடாது. எப்பவும், நம்ம குத்தங் கண்டுபிடிக்க என்னா செய்வோமோ, அது மாதிரி முக்குறுணி நெய்ய நல்லாக் காச்சி, அதுக்குள்ள செலம்பப் போட்டு, கைய விட்டு எடுத்துத் தரச் சொல்லுவோம்ண்டு சொல்றாரு. 

அப்டித்தர் முக்குறுணி நெய்யக் காய வச்சாங்க. அதுக்குள்ள அந்தச் செலம்பப் போட்டாங்க. போட்டுட்டு, கைய விட்டு எடுத்துத் தரச் சொன்னாங்க. அப்ப, கோவலன் பயப்படல், பயப்படாம மனவிய நெனச்சு, இப்டிப் பாடுறா, 

வஞ்சகம் இல்லாதவளே, அம்மா!! 

மாநாய்க்கான் செட்டியார் மகளே!! 

வஞ்சகமில்லாத என்னை இந்த வஞ்சிப்பத்தன் 

வஞ்சித்தானம்மா 

வந்து காக்க வேணும் இந்த வேளை – ண்டு 

பாடிட்டு, நெய்யுக்குள்ள கைய விட்டு எடுத்துக் குடுத்திட்டா. 

அப்ப வஞ்சிப்பத்தன், அரசே!! அக்கினிக்கட்டு கட்டுற வம்சம் அரசே!! இவ் அக்கினிக்கட்டு கட்டித்தர் நெய்யுக்குள்ள கைய விட்டு, அவனால எடுக்க முடிஞ்சது. இத நம்பக் கூடாதுண்டு சொல்றா. 

சரிண்ட்டு, நம்ம பதினாறடி வேங்கயப் பட்டினியாப் போட்டு, அது முன்னால செலம்பப் போட்டு எடுத்துத்தரச் சொல்லலாம்ண்டு, இன்னொருத்தரு சொன்னாரு.

சொல்லவும், பதினாறடி வேங்கயக் கொண்டு வந்து நிறுத்துனாங்க. முன்னால செலம்பப் போட்டாங்க. தன் மனவிய நெனச்சுக்கிட்டுப் போயி, எடுத்திட்டு வந்து குடுத்திட்டா. 

அரசே!! இத உம்மண்டு நெனச்சுறாதீங்க. பறக்கப்பட்ட பன்னீராயிரத்துக்கும், எரக்கப்பட்ட எண்ணாயிரத்துக்கும் வாய்க்கட்டுக் கட்டுவான் அரசே! புலிக்கு வாய்க்கட்டு கட்டித்தான் எடுத்திருக்க முடியும். இத நம்பக் கூடாதுண்டு வஞ்சிப்பத்த சொல்றா. 

பெறகென்னா செய்யலாம்ண்டு பாண்டியங் கேக்குறர். கேக்கவும், நம்ம அரமணச் சர்ப்பம் முன்னால செலம்பப் போட்டு, எடுத்து தரச் சொல்வோம்ண்டு வஞ்சிப்பத்தன் சொன்னா. அதுவும் சரித்தேண்ட்டு சர்ப்பங்கிட்டப் போறாங்க. போகயில, சர்ப்பம் பயங்கரமா படமெடுத்துக்கிட்டிருக்கு. அப்ப, அது முன்னால செலம்பப் போட்டாங்க. போட்டுட்டு, கோவலப் பெருமாள, போயி எடுத்திட்டு வரச் சொன்னாங்க. 

மனவிய நெனச்சுக்கிட்டு, கருநாகத்துக்கிட்டப் போனர். கருநாகம் அப்டியே பொட்டிப் பாம்பா சுருண்டுகிருச்சு. ஒண்ணுஞ் செய்யல. கைய விட்டுச் செலம்ப எடுத்துக்கிட்டு வந்து குடுத்திட்டா. 

குடுக்ககவும், வஞ்சிப்பத்தன் அலறுறா. அரசே!! நாகதாளி வேரக் கையில வச்சுக்கிட்டு, கருநாகத்த மயக்கிப்பிட்டான் அரசே! இதுவும் பொய்தானரசே! இத நம்பக் கூடாது. பயங்கரமான திருட்டுக் கும்பலச் சேந்தவனரசேண்டு வஞ்சிப்பொத்தன் வாய் கூசாமச் சொல்றா. 

அப்டிச் சொல்லவும், அரசன் வஞ்சிப்பத்தன் பேச்சுக்கு மதிப்பு குடுக்குறா. 

கடசில நிய்யி எப்டிப்பட்ட ஆளா இருந்தா மருதயிலயே செலம்பத் திருடி, மருத வீ தியிலேயே வெல கூறி வந்திருப்ப. உன்னயச் சும்மாவிட மாட்டோம்ண்டு சொல்லிட்டு, ஏவலர்களுக்குக் கட்டளயிட்டர். ஏவலர்களே!! இவனக் கொண்டுபோயி கொலக்களத்ல வச்சு, சிரச்சேதம் செய்யச் சொல்லிட்டா. 

காவலாளிங்க புடுச்சுட்டுப் போறாங்க. புடிச்சுட்டுப் போயி, கொலக்களத்ல வச்சு வெட்டிப் போட்டாங்க. வெட்டிப் போடவும், கர்ணகிகிட்ட குடுத்திருந்த அடயாளங்க தெரியுது. எப்டிண்டா: 

“தீண்டா மணிவௌக்கு அணஞ்சு போச்சு 
செம்புல இருந்த ஜலம் வத்திப் போச்சு 
மல்லிகப் பூ வாடிப் போச்சு 
தேங்கா அழுகிப் போச்சு” 

குடுத்த அடயாளக் குறி, கோவலன் சொன்னது மாதிரி ஆகவும், அம்மா கர்ணகிக்கு, தங் கணவனுக்கு ஆபத்ண்டு தெரிஞ்சு போச்சு. 

இப்பவே போயி, கணவனப் பாக்கணும்ண்டு வெளியேறுறா. அப்ப, மொட்டப் பிராமணத்தி வேண்டாம்மா, மருதயோ போக்கிரிப் பய ஊரு, தனியாப் போறது ஆபத்துமாண்டு, மொட்டப் பாப்பாத்தி சொல்றா. சொல்லவும், 

இல்ல நா போயி, இப்பவே பாக்கணும்ங்றா. பாத்தே ஆகணும்ண்ட்டு வெளியேறித் தெருவுல மளமளண்டு நடந்து போறா. தெருவுல போகயில, ஆளுங்க பேசுறது கர்ணகிக்குக் கேக்குது. என்னா பேசுறாங்கண்டா “யாரோ ஒருத்தன், பாண்டிமாதேவிக்குச் செஞ்சு வச்ச செலம்பக் கழவாண்டுபிட்டானாம். களவாண்டதுக்காக, இப்பத்தான் கொண்டுபோயி, வெட்டி எறிஞ்சிட்டு வாராங்கண்டு பேசுறாங்க. 

அழுது பொலம்பிக்கிட்டு கொலக்களத்துக்கு வாரா. வந்து பாக்கயில, கோவலப் பெருமாளு வெட்டப்பட்டுக் கெடக்குறர். அப்ப, கர்ணகி நெனச்சுப் பாத்தா. அடடா! போன பெறப்பில வெட்டுப்பட்டு இறந்திருக்கர். எனக்கு பெயருக்குத்தர் கணவன். ஆனா மாதவிக்குத்தான் நீ உம்மயான கணவன்டு சொல்லிக்கிட்டே, தங்க ஊசில வெள்ளி நூலக் கோத்து, தலயத் தச்சு எழுப்பினா. 

கோவலன் எந்திருக்கும்போது, மாதவிண்டா மடிமேல வா. கர்ணகிண்டா தூரப் போயிருண்டு சொல்லிக்கிட்டே எந்திரிச்சாரு. அம்மா காணகி ஒதுங்கிக்கிருச்சு. பாண்டியன சும்மா விடக்கூடாதுண்ட்டு நேரா அரமணய நோக்கி நீதி கேக்கணும்ண்ட்டு அரமணக்கி வர்ரா. வர்ரயில, காவக்காரங்க தடுக்குறாங்க. விசும்பிட்டு உள்ள போயிட்டா. 

உள்ள போகவும், பாண்டியன் பாத்திட்டு, ஆடு தூக்குற கள்ளனுக்கு, ஆக்கி வக்கிற கள்ளி மாதிரி வர்றியே, நீ ஆருண்டு கேக்குறாரு. 

எங் கணவன கள்ளண்டு சொல்லி, சிரச்சேதம் செஞ்சயே, அதுக்கு நீதி கேட்டு வந்திருக்கேண்டு சொல்றா. 

சொல்லிக்கிட்டே, தங் கையிலுள்ள செலம்பக் காட்டி, இது என்னோட செலம்பு, மாணிக்கத்தாலானதுண்டு சொன்னா. சொல்லவும், பாண்டியன் என்னோட செலம்புல இருக்றது அத்தனயும் முத்துண்டு சொன்னர். சொல்லிட்டு, செலம்பக் கொண்டுட்டு வாங்கண்டு சொன்னர். கொண்டுட்டு வந்தாங்க. 

கர்ணகி, செலம்ப எடுத்து ஒடச்சா. ஓடைக்கவும் வைரமும் வைடூரியமும் செதறி ஓடுது. வஞ்சிப்பத்தன் செஞ்ச செலம்பக் கொண்டு வரச் சொல்லி, கருடங்கிட்டச் சொன்னா. கருடன் செலம்புகளக் கொண்டுவந்து போட்டுச்சு. போடவும், கர்ணகிக்கு அளவு கடந்த கோவம் வந்திருச்சு. வந்த கோவத்துல, 

நீ அரசனா? உனக்கு ஏஞ் செங்கோல்ண்டு பாண்டியனப் பாத்துக் கேட்டா. பாண்டியனும் தல குனுஞ்சிட்டர். பெருமழ பேஞ்சு, வெள்ளக்காடாகி மருதயே அழியுது. அழியயில, 

சிவன் பாத்தாரு. சத்திய, சமாதானப்படுத்தி, தன்னோடு சிவ பார்வதி இணயவும் மழ நிண்டு போச்சு. வெள்ளம் வத்திப் போச்சு. மக்க நல்லா இருந்தாங்களாம். 

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், சமய மரபு தழுவிய கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *