கண்டிப்பு
கதையாசிரியர்: வல்லிக்கண்ணன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: January 9, 2026
பார்வையிட்டோர்: 376
(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
1
சாம்பசிவம் பிள்ளைக்கு தாது விழுந்துவிட்டது பாவம்! அவர்தான் என்ன செய்வார்? தன் மகனே வருங்கால வாழ்வின் நங்கூரம் என நம்பி இருந்த பிள்ளையாண்டான் – அப்படிச் செய்துவிட்டான் என்றால்..
அவர் மனம் கொதித்தது. கோபம் கோபமாக வந்தது. அடக்கமுடியாத ஆத்திரத்தை யார்மேல் கொட்டுவது?
அப்பொழுதுதான் ‘அப்பா’ என்று அன்பாக அழைத்தவண்ணம் அவர் அருகில் ஓடிவந்தான் ஐந்து வயதுப் பையன் ஒருவன். அவருக்கு வந்த ஆங்காரத்தை யெல்லாம் சேர்த்துவைத்து காரணமில்லாமல் அவனை இரண்டு அறை அறைந்தார் அவர்; பையன் ‘ஓ’ என்று கத்திக்கொண்டு வெளியே ஓடினான்.
‘சவம்….வாயைப் பாரு வாயை! பேய் சுத்துற மாதிரி’, என்று எரிந்து விழுந்தார் பிள்ளை.
‘அது என்ன செய்யும்? அதைப்போட்டு பேய் அடித்தாற்போல அறைந்தால்….’ என்று சமாதானம் கூறவந்தாள் அலமு – அவர் மனைவி. அது அவர் கோபத் தீயை அணைப்பதாயில்லை பெட்ரோல் ஊற்றி வளர்ப் பது போலாயிற்று.
‘மூதேவி! நீ பிள்ளை வளர்த்திருக்கிற லக்ஷணத்துக்குச் சிபார்சுக்கு வேறே வந்துட்டியாக்கும். வீட்டுச் சாமானை ஒழுங்காப் பாதுகாக்க வகையில்லே. பிள்ளையை அடக்கி ஒடுக்கி வளர்க்கத் துப்பில்லை. பேச வந்துட்டா!’, என்று அனல் கக்கினார் வார்த்தைகளிலே.
அவர் குணம் அவளுக்குத் தெரியும். ஆகவே அலமு பேசாமல் அடுப்பங்கரைக்குள் புகுந்துவிட்டாள். இருந்தாலும் பெண்மனம் சுலபமாக சாந்தி அடைந்துவிடுமா? முணுமுணுக்க ஆரம்பித்தாள்: ‘நான் என்ன செய்வேனாம்? கரிமுடிவான் இப்படி வந்துட்டான். பெட்டித் திறவுகோலை நானா வெளியே வச்சிட்டுப் போகச் சொன்னேன்? பணத்தைப் பெட் டியிலே வைத்துப் பூட்டிட்டு திறவுகோலை எங்கேயும் போட்டிட்டுப் போயிடறது. பிறகு இருக்கிறவங்க வாணாலை வாங்குகிறது…’
சாம்பசிவம் பிள்ளை அவசரம் அவசரமாக சட்டையை எடுத்து மாட்டினார். குளித்துவிட்டு வந்து இன்னும் தலைகூடச் சீவிவிடவில்லை. ஈரவேஷ்டி அப் படியே கொடியில் கிடந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. வாய்க்காலில் இருந்து வந்ததும் வராததுமாகவே தான் அந்தச் செய்தி காதில் விழுந்து விட்டதே!
அவரது மகன் அருணாசலம் எந்த ஊருக்கோ போகிறானாம். இருபத்தைந்து ரூபாய் வைத்திருக்கிறான். அவன் காரில் ஏறியதை அடுத்த வீட்டு அண்ணாச்சி ஆறுமுகம் பிள்ளையவர்கள் பார்த்தார்களாம். அதை குளித்துவிட்டு வரும் சாம்பசிவம் பிள்ளையிடம் கேட்டுவிட்டார்கள்: ‘ஏது ரூபா செழிப்புதானோ… பய ‘காம்ப்’ மேலே கிளம்பீட்டானே, இருபது இருபத்தஞ்சு ரூபாயோடே!’ என்று.
அதைக் கேட்டதும் சாம்பசிவம் பிள்ளைக்கு திடுக்கிட்டது. நேற்றுத்தான் அவர் சம்பளம் வாங்கி வந்து ரூபாய் இருபத்தைந்தையும் பெட்டியில் வைத்து பூட்டினார். அதை எடுத்துகொண்டுதான் பயல் ‘டபாய்த்து’ விட்டானோ?
அவர் மனம் வேகமாகத் துள்ள விரைவாக வீட்டில் நுழைந்து அவசரமாகப் பெட்டியைத் திறந்து பார்த்தார். அங்கே பணம் இல்லை. அப்படி என்றால் அவருக்கு ஆத்திரம் பொங்கி வடியாதா?
சாம்பசிவம் பிள்ளை ஒரு கடையிலே வேலை பார்க் கிறவர். எவ்வளவுதான் உழைத்தாலும் மாதம் இரு பத்தைந்து ரூபாய்தான் கிடைக்கும். அவர் குடும் பமோ பெரிது. எவ்வளவுதான் இறுக்கமாகப் பிடித் துப் பிடித்துச் செலவளித்தாலும் அந்தப் பொல்லாத பொருளாதாரம் இடம் கொடுப்பதே இல்லை. அவர் பாடு திண்டாட்டந்தான்!
இந்தக் கொள்ளையிலே அவரது மூத்தமகன் அருணாசலம் ‘தகல்பாஜி’ த்தனங்கள் எல்லாம் செய்ய ஆரம்பித்துவிட்டான். அவன் வளர்ந்து சமர்த்தாகி குடும்பத்தைப் பாதுகாப்பான் என்று கனவு கண்ட பிள்ளையவர்களின் சிந்தனைப் போக்கிலே இடிவிழும் படியாக இருந்தன அவன் செய்த காரியங்கள். அவன் பள்ளிக்கூடத்தில் படிப்பில் மண்டுகயாக இருந்ததற்கு மாறாக வீட்டிலே அவன் சரித்திரம் பத்தகத்தின் பக்கங்களைப் பின்னாலே புரட்டினால் பள்ளிக் கூடத்தற்கு ஒழித்து… அம்மையை அடிக்கப் போனது…. தம்பிமார்களின் புத்தகங்களை வீட்டுக்குத் தெரியாமல் விற்றது…வீட்டைவிட்டு ஓடிப்போனது…. பிச்சை எடுத்தது…. எங்கோ ஓர் இடத்தில் வேலைக்கமர்ந்தது…. வீடு திரும்பல்… மீண்டும் ஓட்டம்…. இப்படி சுவாரஸ்யமான சம்பவங்கள் சிதறிக் கிடக்கும்.
இப்பொழுதும் அத்தகைய திருவிளையாடல் ஒன்றைத்தான் புரிந்திருந்தான் அவன்.
2
சாம்பசிவம் பிள்ளை காரில் ஏறப்போகும் வேளையிலே ‘அண்ணாச்சி தூரமா?’ என்று கேட்டு வைத்தார் அவருக்குத் தெரிந்த ஒருவர்.
அவரைத் திரும்பி நோக்கிய பிள்ளை, ‘நம்ம பய அருணாசலம் இருக்கான்லே – அவனை வாரியலாலே – அடிக்க – வீட்டிலே இருந்த இருபத்தஞ்சு ரூபாயைத் தூக்கிக்கிட்டு எங்கேயோ கம்பி நீட்டிட்டான். பய எங்கே போவான்ங்கயே! இந்தப் பக்கம் தான் எங் காவது அவன் மாமா வீட்டுக்குப் போயிருப்பான்…’ என்று புலம்பி வைத்தார்.
‘அட, உங்க பய இவ்வளவுக்கு ஆளாயிட்டான்னு சொல்லுங்க! பார்த்தா எம்பிடுப்பய… இவன்….’ என்று அனுதாபம் கூறினார் அவர் நண்பர்.
கார் புறப்பட்டுவிட்டது. அவசரமாக உள்ளே ஏறிய பிள்ளை ‘இங்கே எங்கேயாவது உங்க கண்ணிலே பட்டால் அவனைப் புடிச்சு வைச்சிடுங்க, கையிலே இருக்கிற ரூபாயையும் வாங்கிடுங்க… நான் நாளைக்கு வந்திடுவேன்… அவ்வளவுமா செலவழிந்து போகும்? என்னமாவது பத்துப் பதினஞ்சு கையிலே இருக்கும்…’ என்று கூறி முடிப்பதற்குள் கார் ஓட ஆரம்பித்தது.
‘ஆகட்டும், ஆகட்டும்’ என்று தலையை யாட்டியபடி நின்ற நண்பரும் தம் வேலையை கவனிக்கப் போனார்.
அன்று மாலை மணி நான்கிருக்கும். நண்பர் தெரு வழியாக வரும்பொழுது ஒரு ஜவுளிக் கடையில் இருந்து வெளியேறிய அருணாசலம் அவர் பார்வையில் அகப்பட்டான். ‘ஏலே…. ஏ. அருணாசலம்’ என்று கர்ஜித்தார் அவர். அந்த கர்ஜனையைக் கேட்டுக் கதி கலங்கி நின்றுவிட்டான் பயல்.
‘ஏலே, இவ்வளவுக்கு வந்திட்டியா? வீட்லே இருந்து இருபத்தஞ்சு ரூபாயை அமுக்கிட்டு ஓடியாந்திட்டியாமலே உடம்புக்கு எப்படி வருது?’ என்று அதட்டினார்.
அருணாசலம் பயந்து போய்விட்டான். ஒன்றும் பதில் சொல்லாமல் மிரள மிரள விழித்தான். ‘என்னலே முழிக்கே, ரெண்டு ஆட்டிலே ஒரு ஆடு முழிச் சாப்பலே… முட்டாமூதி! ரூபாயை என்னவே செஞ்சே’ என்று உறுமி அவர் அவன் காதைத் திருகியதற்கும் பதில் வரவில்லை.
நண்பர் லேசில் விட்டுவிடும் ஆசாமியா! அவன் பையில் கைபோட்டு அள்ளினார். சில்லறையாகவும், ரூபாய்களாகவும் நோட்டாகவும் பணம் வந்தது. எண்ணிப் பார்த்தால் ரூபாய் ஐந்தரைதான் இருந்தது. மறுபடியும் அதட்டினார் அவர் ‘மீதியை எங்கேடா?” என்று.
அருணாசலம் கையில் வைத்திருந்த காகிதம் சுற்றிய கட்டு ஒன்றைச் சமர்ப்பித்தான். அதில் சட்டை, வேஸ்டி அவனுக்கு வேண்டிய சில புஸ்தகங்கள் எல்லாம் இருந்தன.
‘ஏலே அவ்வளவையுமா செலவழித்துப்போட்டே?’ என்று வியப்புடன் வினவவும், அருணாசலம் செலவு கணக்கை நீட்டினான்.
எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொண்டு “சரி சரி, நீ வீட்டுக்குப்போ. உங்க அப்பா உன்னைத் தேடிப்போயிருக்கா. நாளைக்குத்தான் திரும்புவா. உன்னைப் பார்த்தா இருக்கிற பணத்தை வாங்கிவைக்கச் சொல்லியிருக்கா. அதனாலே இவ்வளவையும் அவாள் வந்ததும் நானே கொடுத்திடுறேன்’ என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டார் அவர்.
3
மறுநாள் ஏமாற்றம் பிரதிபலிக்கும் முகத்துடன் திரும்பி வந்த சாம்பசிவம் பிள்ளையை நண்பர் சந்தித்ததும். உங்க பய பரவால்லேங்கேன்! பணத்தை விர யம் செய்தாலும் உபயோகமான வழியிலேதான் விரயம் பண்ணியிருக்கான்’ என்று வரவேற்றார். அவ ருக்கு விளங்கினால்தானே! ஒன்றும் புரியாமல் விழித்தார்.
நண்பர் விஷயத்தை எடுத்துச் சொல்லி, அருணாசலம் உடுத்திருந்த ஜவுளி தினுசுகளையும், பணத்தையும் அவரிடம் அளித்தார். அவருக்கு வயிறு பற்றி எரிவது போல் இருந்தது.
பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு ‘எழவை மூலையிலே போடுங்க! சேச்சே இனி முடியாது. சவத்தை வீட்டை விட்டு ஓட்டிவிடப் போறேன். இந்தத் தடவை கண்டிப்புத்தான். எத்தனை நாள் சார் பொ றுக்க முடியும்? அவனே வந்து உங்களிடம் இந்தச் சாமான்களை வாங்கிக்கொண்டு எங்கேயும் தொலையட்டும்’ என்றார் அலுப்புடன்.
நண்பர் பரிவாக ‘ஐய்யய்யோ! சின்னப்பயல் என்னமோ தெரியாமல் செய்துபோட்டான். என்ன இருந்தாலும் அவன் நம்ம பயதானே’ என்று பேசினார்.
ஆனாலும் சாம்பசிவம் பிள்ளையின் மனம் இரங்க வில்லை. ‘எப்படியும் நாசமாப் போகட்டும். வீட்டை விட்டுத் துரத்தவேண்டியதுதான். வேறு வழியில்லை’ என்று ஓங்கி அடித்தார் கண்டிப்பாக. அத்துடன் நண்பர் பேச்சைக் கேட்பதற்கு நில்லாமல் விர்ரென்று நடையைக் கட்டினார்.
வழியெல்லாம் கண்டிப்பு மிக்க அவரது மனம் முணுமுணுத்துக்கொண்டே இருந்தது. ‘இந்தச் சனியனோடே எத்தனை நாள் எழவெடுக்கிறது. ஒரே நாளில் இருபது ரூபா காலிபண்ணிவிட்டானே. இந்த மாதம் எப்படிக் கழியும்?…. சேச்சே. ஒரு தடவையா இரண்டு தடவையா? இது எத்தனாவது முறை! அவள் அழுதாலும் அடிச்சாலும் இந்தத் தடவை முடியாது. பயலை வெளியே தள்ளவேண்டியதுதா…. கண்டிப்புத்தான்!’
அதற்குத் தக்கபடி கால்செருப்பு பின்னணி பாட ‘விர்’ ‘விர்’ரென்று நடந்து வீட்டைந்தார் பிள்ளை. அங்கே ஒரே அமைதியாக இருந்தது. திண்ணையில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயதுப் பயல் ‘அப்பா வந்துட்டா….அப்பா வந்துட்டா!’ என்று கட்டியம் இயம்பிக்கொண்டே உள்ளே ஓடினான்.
அலமு மெதுவாக வந்து நின்றாள்.
தன் கண்டிப்பை எல்லாம் செயலிலேயே காட்டுகிறவர் போல ‘டாக் டீக்’கென்று செருப்பைக் கழற்றி மூலையில் எறிந்து விட்டு, சட்டையை விரைவாகக் கழற்றி ஸ்டாண்டிலே வீசினார். ‘அலமு இந்தத் தடவை கண்டிப்புத் தான். அந்தப் பயல் இனிமேல் ஒரு க்ஷணம் இந்த வீட்டிலே இருக்கப்படாது. வெளியே அனுப்பிவிடு’ என்று சீறினார்.
அவர் குணத்தை அறிந்த அலமு மெளனமாகவே நின்றாள்.
பிள்ளை பொரிந்து தள்ளினார்: ‘ஆமா, நானும் பார்த்தாச்சு, எத்தனை தடவை! அது உருப்படுற கழுதையா? கெட்டமூதி இனி அவன் வீட்டிலே இருக் கப்படாது; படாது என்றால் படாதுதான்’, கண்டிப்பாக.
அவர் பேசி முடியுமட்டும் வாய்திறவாமல் நின்ற அலமு பக்கத்து அறைய நோக்கினாள். இதுவரை அங்கே பதுங்கி இருந்த அருணாசலம் மெதுவாக வந்து தந்தையின் காலில் விழுந்தான். தரையில் கிடந்து வணங்கினான். கோபத்தில் முகத்தைத் திருப்பிக் கொண்டார் அவர்.
தாய் மகனுக்காக வேண்டினாள்: ‘இந்த தடவை போகட்டும். தெரியாமல் செய்துவிட்டான். மன்னித்திடுங்க.’
அருணாசலம் தந்தையின் பாதங்களில் கண்ணீர் வடித்தபடி ‘நெடுஞ்சாண்கிடையாக’க் கீழே கிடந்தான். அந்தக் கண்ணீரின் சூடு கண்டிப்பான தந்தையின் கல் மனதையும் கரைத்துவிட்டதா? அவர் மனம் போராட்டத்திலே தத்தளிக்கிறது என்பதை அவர் முகமே காட்டியது. என்ன இருந்தாலும் இரத்த பாசம் இல்லையா? பெற்ற மனம் இளக ஆரம்பித்தது.
தாயின் கனிந்த வேண்டுகோளும் அவர் செவியிலே பட்டது. அலமு கெஞ்சி நின்றாள்: ‘அவனை மன்னித்து விடுங்கள், தெரியாமல் செய்துவிவிட்டான்’ என்று.
இவற்றை எதிர்த்து நிற்க முடியாமல் கண்டிப்பு காற்றிலே பறந்தது. தணிந்த குரலில் ‘எழுந்திரடா முட்டாள் மூதி! இனியாவது புத்தியாப் பிழை…சரி, போ! போயி அவரிடம் இருக்கிற சட்டை வேஷ்டியை எல்லாம் வாங்கி வந்து தொலை!’ என்றார்.
எழுந்து நின்ற அருணாசலம் கண்ணீரைத் துடைத்த வண்ணம் வெளியேறினான்.
– இந்தப் புத்தகத்தில் உள்ள கதைகளில் சில 1942ம் வருஷம் எழுதப்பட்டவை, 1943ல் சிலவும், 44, 45ல் மற்றவையும் உருவானவை.
– நாட்டியக்காரி, முதல் பதிப்பு: 1964, கவிக்குயில் நிலையம், தென் திருவிதாங்கூர்.