கண்காட்சி
கதையாசிரியர்: இ.நாகராஜன்
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: November 15, 2025
பார்வையிட்டோர்: 43
(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

யாழ்ப்பாணம் பண்ணைத் துறையையும், அல்லைப்பிட்டி பழைய துறையையும் இணைத்துக் கொண்ட புதிய பாலம் அப்போது மனித ஜீவன்களைத் தன் மீது நடந்து செல்ல விடாது கரும்பாம்பு போன்ற தார்ப்போர்வையிலே பரிதியின் வெப்பத்தைத் தேக்கி வைத்திருந்தது. தெற்கின் இரு முனைகளிலும் எதேச்சையாக வளர்ந்து விட்ட தாழை, ஈந்து ஆவரசு ஆகிய செடிகள். வடக்கே யாரோ பரோபகாரி எப்போது நாட்டி வைத்தானோ ஒரு சில பூவரச மரங்கள் உப்பாங் காற்றைச் சுவாசித்து சுவாசித்து டி.பி. நோயாளிபோல் பண்ணை ஆஸ்பத்திரிக்குச் செல்லும் நோயாளிகளுக்குப் போட்டியாகச் செழிப்பும் பசுமையும் அற்றுக் கரைகளில் நின்றன. உச்சியை நெருங்கும் கதிரவனின் அக்கினியைச் சகிக்காத கோட்டை வெளியில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் சில அந்த பூவர மரங்களின் நிழலில் இனிமைகாண முனைந்து நிற்கின்றன.
அந்தவேளையில் அவசரப்பட்ட பிரயாணிகளையும், மூட்டைமுடிச்சுகளையும் தன்னுள் ஜீரணித்துக்கொண்டு பலன் கருதாத கர்மயோகி போல் ஒடிக்கொண்டிருக்கிறது கடகடத்துப்போன இ. போ. ச. வண்டி இதன் இரைச்சலும், புழுதியும் அடங்கிய பின் அங்கு பேயமைதி குடிகொள்கிறது.
சுமார் ஒன்றரை மைல் நீளத்திற்கு வடக்குத் தெற்காக நீண்டு கிடக்கும் பாலத்தின் இருமருங்கும் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில வள்ளங்கள் நங்கூரமிடப்பட்டிருந்தன. அவற்றின் சொந்தக்காரர்கள் வேக்காட்டின் கொடுமையை கடலில் கூடச் சகிக்கமுடியாது. எங்கோ அகன்றுவிட்டனர். ஆனால் பாலத்தின் மேற்றிசையின் விளிம்பில் உட்கார்ந்திருந்தான் வல்லிக்குட்டி.
உருண்டு ஓடி, நெளிந்து வளைந்து சிதைந்து செல்லும் அலை, பாலத்து விளிம்பில் மோத நேர்ந்த இசைக்கலைஞன் சுருதி குன்றாமல் மெள்ள மெள்ள ‘முணுமுணு’க்கும் பிரமையை ஊட்டுகிறது. அதை ரசித்தானோ என்னவோ, மேற்கே முகத்தை வைத்துக் கொண்டிருக்கும். அவனது எண்ணெய் கண்டறியாத சிகையில் படும் கதிரொளி அவன் நிழலை அவன் மீது கவிழ்த்துவிட்டிருந்தது. வரண்டு குழிந்த கன்னங்கள் கருமையும் வெண்மையும் கைலாகு கொடுக்கும் உரோமங்கள், செறிந்த மார்பு, உப்பு நீரின் உவைச்சலும், புழுதியின் தேக்கமும், எப்போதோ உள்ள வெண்மையை போக்கடித்து விட்ட வேட்டி, அதே வண்ண நலமுண்டுத் துண்டை முண்டாசாகத் தலையில் சுற்றியிருந்தான். அவன் குந்தியிருக்கும் விதம் தாயின் கர்ப்பத்துள் குழந்தை இருப்பது போல தெரிந்தது. ஆட்டம், அசைவு, எதுவுமின்றிய அவனது சலனமற்ற தோற்றம் துாரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஒரு காவிக்கல் பாலத்தில் கிடப்பதுபோலவே தோற்றும்.
கூடார நுனிபோல் கடல் மட்டத்துக்கு மேலே நிமிர்ந்து நிற்கும் கல்லில் கொக்கொன்று பாரத காலத்து பார்த்தனின் தவநிலையை அறிவுறுத்துவது போல் ஒற்றைக்காலில் நிற்கும் அந்தக் கொக்கின் சாதனை…. வீழ்த்திவிடுபவன் போல் வல்லிக்கட்டியும் நீண்ட நேரம் அங்கே இருக்கிறான்.
கையில் நூலிலை அருகால் செல்பவர்களுக்கு கூட இலகுவில் புலனாகாத மெல்லிய தங்கூசி என்னும் அந்த நூலின் அந்தத்தில் துண்டில் முள்.
பரிதியின் உக்கிரம் அதிகமாக அதிகமாக கடலில் இழைந்து வரும் காற்றின் வேகத்தில் விழுக்காடு ஓடி நெளிந்த கடலின் அலைகள் துடுக்கடங்கிய சிறு குழந்தைபோல் ஆகிவிட்டன. “இழவு பிடித்த காற்று ஒரேடியாக நிண்டுபோச்சே” வாய் வார்த்தைகளைப் பொரிந்து தள்ள, நெற்றிப் பொட்டில் வந்து உறுத்தும் கிரணக்கற்றைகளைச் சிறிய கைகளினால் தட்டிவிடுபவன் போல் விரித்து நெற்றிக்கு முன் வளையைப் பிடித்துக் கொள்கிறார். கண்கள் பரிவட்டம் கடலில் தெரிகின்றனவா என்று நோட்டம் விட்டபோது அணுப்பிரமாண இடத்தில் குமிழிகள் தோன்றுகின்றன.
வரண்ட முகத்தின் வாய்ப்பகுதி பாளைபோல் வெடித்துக்கொள்ள காவிப்பற்கள் வெளியே தெரிகின்றன. இடுப்பில் சொருகியிருந்த பனையோலை கொட்டைப் பெட்டியை எடுத்து அதனுள் திணித்திருந்த புகையிலையில் கிள்ளியெடுத்துக் கொடுப்புக்குள் வைத்துத் திணித்தான்.
துாரத்தில் நீர்ப்பரப்பின் மீது முகிழ்ந்த நீர்க்குமிழிகள் தெரிவிப்பது மீன்கள் அந்த இடத்தில் உலாவுகின்றன. என்பதைத்தான். பாய்விரித்துக் கொண்டு வடக்கிலிருந்து வருகின்றது சிறு படகொன்று.
“கோதாரி விழுவான்கள் இந்தப் பக்கத்துக்கா தோணியைச் செலுத்த வேண்டும்? கொஞ்சம் அகலவிட்டாலென்ன?”
படகு வந்த வேகத்தில் ஏற்கனவே தோன்றிய குமிழிகள் அள்ளுண்டு போய்விட்டனவா? வசவு வார்த்தைகள் ‘ஐந்தாம் வேத’மாகி வெடித்த ஆத்திர உணர்ச்சியை வெளிக்காட்டின. மீண்டும் மௌனம் அந்த இடத்தில் குலவுகிறது. தெற்குத் திசையிலிருந்து குழை ஏற்றிய வண்டிகள் ‘டொக் டொக்’ என்று ஆமை நடைபோடும் ஒலியைத் தொடர்ந்து வடக்குப் பக்கதிலிருந்து இரண்டொரு டாக்ஸிகள் ரகளைப்படுத்தி ஓடுகின்றன.
இந்த அரவங்கள் எதுவும் அவன் செவியில் விழுந்தனவோ என்னவோ, தூண்டில் முனையில் கண்ணைச் செலுத்திக் கொண்டிருந்தான். மிதப்புக்கட்டை ஏன் அசைகிறது? தூண்டிலைக் கட்டி இழுத்தான். சிறிது கனமாகக் கையில் தெரிகிறது. அப்படியே இழுத்து வலித்து வெளியே தூண்டிலை எடுத்த போது…. சாதாளை கொழுவிக் கொண்டு தொங்குகிறது! வெறுப்பில் உதடுகளைக் கவ்வின பற்கள். காலடியில் கிடந்த தகரப்பேணிக்குள் கடலின் கரை மண்ணைக் கிண்டியெடுத்த நாக்கிளிப் பூச்சிகள். அவற்றுள் ஒன்றைத் தூண்டிலில் கொழுவிய பின் தூண்டிலைச் சுழற்றித் திரும்பவும் வீசிவிட்டான்.
பொழுதில் ஒரு சரிவு-உச்சியிலிருந்து கொண்டு உலகை ஆட்டிப்படைத்த ஆதவனின் கொட்டம் குறைந்து வருகிறது. ஆனால் இபோது வல்லிக்குட்டியினால் சரியாகக் கடலைப் பார்க்க முடியவில்லை. சுள்ளென்று தெறிக்கும் சிரணக் கற்றைகள். அவன் கண்ணையே உறுத்துகின்றன. ஒருக்கழித்துச் சாய்ந்து சரிந்து முகத்தில் அவ்வொளி படாதவாறு தடுக்க முயன்று அதில் தோல்வி கண்டு- முடிவில் இருக்கையாக உபயோகித்த உமலை இடதுகையால் எடுத்துத் தலையில் பிடித்துக் கொள்கிறாள். ஒருவாறு நிலைமை ஒழுங்குபட்டது.
மிதப்புக்கட்டையில் பரவுகின்றன கண்கள். வலுவிழந்து கிடக்கும் அந்தக் கட்டையை சிறுகச் சிறுக எழுந்த சோழகக் காற்று அசைக்கிறது.
அந்த உண்மையை அவன் உணர்வான். ஏற்கனவே மீனின் வருகையைத் தடைப்படுத்திய படகொன்று பாய் விரித்தபடி துாரத்தில் ஓடுவது தெரிகின்றது. “நாசமத்துப் போவான்களால் தானே இவ்வளவு கரைச்சல். இல்லாட்டி இந்தமட்டும் ஏதாவது பூச்சி கவ்வியிருக்குமே…” முணுமுணுப்போடு பெருமூச்சொன்று எழுகிறது. குந்தியிருந்த அவன் எழுந்து நேரே பார்த்த பார்வையைச் சற்று இரு பக்கங்களுக்கும் செலுத்துகிறான். முதிர்ந்துவிட்டாலும் அனுபவ ஞானத்தில் மீனின் வருகைக் குறியை இலகுவில் புரிந்து கொள்ளக்கூடியவன் அவன்.
எட்ட இருக்கின்ற இடத்துக்குத் தென்கிழக்கே மீன் மூச்சுக் குமிழிகள் தென்படவே தூண்டிலை வலித்து இழுத்து அதனை அத்திசை நோக்கி வீசுகின்றான்.
சூரியனின் சரிவு சற்றுத் துரிதமாகியது, அதை எதிர் பார்த்ததுபோல் சோழகக் காற்றின் வேகம் அதிகரித்துக் கொள்ளவே அரபுக் கதைகளில் வரும் மாயக்கம்பளம் போன்று உருண்டு உருண்டு சுருண்டு கொள்கின்றன கடல் அலைகள். துாக்கநிலை மாறி எழுச்சி கடலை ஆக்கிரமிக்கின்ற போது அதன் வேகத்தில் தலையில் பிடித்துக்கொண்டிருந்த உமல் எட்டப் பறந்தது.
நாசம் விழுந்த கடல் ஒரே மாதிரி இருந்து தொலைந்தாலென்ன இந்த அலைக்குள்ளே எப்படிக் கண்ணால் பார்க்கிறது. இன்றைக்கு எவன் கண்ணில் முழிச்சேனோ ஒரே மாச்சல்”. முகத்தில் சரங்கட்டிய வியர்வைத் துளிகளை அழுத்தித் துடைத்துக்கொண்ட பின் மீண்டும் சருகான புகையிலையையும், வெற்றிலையையும், பாக்கையும் வாய்க்குள் அதக்கினான். சுரந்த உழிழ்நீரை எதிரே துப்ப அது மீண்டும் அவன் முகத்திலேயே வந்து வீழ்ந்தது. முண்டாசாகக் கட்டிய நலமுண்டுத் துண்டால் அழுத்தித் துடைத்துக் கொண்டான்.
ஆயாசம் தீராதநிலை காலை ஒன்பது மணிக்குத் தொடங்கிய தொழிலில் என்றைக்குமில்லாத மந்தநிலை நீளுகிறது. எழுந்து போய்விட்டால்….? உள்ளம் நினைப்பதைச் செய்து விட்டால் வயிறு?
சோழகத்தின் வேகம் துரிதகதியில் இயங்க ஆரம்பித்து விட்டது.
யாழ்ப்பாணப் பட்டினமும் கடந்த இரண்டொரு மணிவரை சோம்பிக்கிடந்து இப்போது உற்சாகம் பெற்றுவிட்டதை நினைவுறுத்தும் அரவம் எழுந்தது. மென்னி பிதுங்கி வழிய இராட்சத ஓலமிட்டுக்கொண்டு பஸ்வண்டிகள், வான்கள், மோட்டார்கள் என்பன வரிசைக்கிரமமாக பண்ணைப் பாலத்தின் குழிவிழுந்த தெருவில் புழுதி வாரிக் கொட்டிக் கொண்டு ஓடுகின்றன. அடங்கிக் கிடந்த பிரதேசத்துக்கு உயிர் வந்துவிட்டது போல!
மேலே வானவிளிம்பினை சிறுகச் சிறுக தொடுகின்றான். கதிரவன் அவனது நடையில் கிழட்டு மனிதனின் பலவீனம், ஆனால் அந்த விழுங்கிழவனின் ஒளியில் மட்டும் எத்தனை கவர்ச்சி! வானம் தேர்ந்த இரச வாதியின் கையிற்பட்ட தகடாகிய பலவர்ண உலோக வர்ணங்களைக் காட்டுகின்றது. மனிதன் இளமையிலும், நடுத்தர பருவத்திலும் தான் கவர்ச்சியுடன் விளங்குகின்றான். ஆனால் இயற்கையோ அந்தியின் விருத்தாப்பிய தசையிலும் வனப்பில் புரளுகிறதே!
எண்ணத்தைக் கிறங்க வைக்கும் மேகத்திலோ,அந்த வனப்பை தனதாக்கிப் புரளும் கடல் அலையிலோ வல்லிக்கட்டியின் புலன் சொல்லவில்லை. அவன் கண்கள் மிதப்புக் கட்டையில்…
பகல் முழுதும் நகர நாற்றத்தைச் சகித்து வாழ்வுச் சக்கரத்தை உருட்டியவர்கள் நல்ல காற்றுப் பெறுவதற்கு ஆங்காங்கு வரத் தொடங்கினர். அன்னாரின் அணிபணிகள்தான் எத்தனை ரகம்! ஒரு சிலரின் உடையை சுதந்திர வெறியோடு வீசும் காற்று தட்டிப் புரளி செய்கையில் அந்தக் காற்றைக் கடிந்து மானத்தைக் காக்க முனையும் ஒரு சிலரை வேறு சிலர் பார்த்து நகைக்கின்றனர். பாலத்தின் இரு புறமும் அதுவரை காணாத கூட்டம்.
காலையில் தெய்வி கொடுத்த பழைய சோறும், சுட்ட கருவாடும், வயிற்றின் சுருக்கங்களை நிமிர்த்தி – ஓணான் நிலையை பேத்தையாக்கியிருந்தது. இப்போது மீண்டும் ஓணான் நிலை நீண்ட நேரத்து வெயில் உடலை வரட்டி விட்டதன் பேறாக முகம் வறுத்தோடாக, அதனகத்தேயமைந்த உதடுகள் காய்ந்து நீரின் இன்மையை நுகரமுனைகின்றன.
எழுந்து எப்படிப் போவது? இரண்டு பண்ணைக்கும் மையமான இடத்தில் எந்தக் கடைத் தெருவுமில்லை.
அந்த எண்ணத்தையும், உணர்வையும் அப்போதைக்கு நிறத்திய அவன் கண்கள் மிதப்புக் கட்டையில் பரவின. அது அசைகிற பாடாகவில்லை.
சாடையாகத் திருப்பினான். அவனுக்கு நூறுயார் தொலைவில் முழுக்காற்சட்டை போட்ட இளவல் ஒருவன். அவனைச் சுற்றி இரண்டொருவர். கையிலுள்ள சக்கரம் போன்ற கருவியை இன்னொரு கையாற் சுழற்றுகின்றான். நீண்ட நுாலிழை அப்பால் அகலத்துக்குப் போகின்றது. அடுத்த ஓரத்தில் கரையைப் பார்த்துக்கொண்டு நின்ற ஒருத்தி அந்த இடத்துக்கு வந்து சக்கரம் வைத்திருந்தவன் தோளில் கையைப் போட்டுக் கடலைப்பார்க்கிறாள்.
“இதென்ன இது றோட்டிலை இப்படியா ஆண்பிள்ளையின் தோளில் கையைப் போடுவது?” இப்படி நினைத்துக் கொள்கிறது. வல்லிக்குட்டியின் மனம்.
மனதின் இசைவுகளுக்கு அள்ளுண்டு செல்வதில்லையே பசி உணர்வு! புறக்காட்சிகளில் இலயித்து அதன் தன்மைகளை எடை போட முடியாத தடையாக அது அமையுமானால் வல்லிக்குட்டி அதில் எப்படித் தோய முடியும்?
மிதப்புக்கட்டை இப்போது அசைகிறது. அந்த அசைவின் விதம்?
ஓங்கித்திரும்பிக் கையை அசைத்துத் தூண்டிலை வலித்து இழுத்தான். இரைக்காக கொளுவப்பட்ட நாக்கிளிப் புழுவின் ஒரு பகுதி மீன் ஒன்றினால் பட்சிக்கப்பட்டிருக்கும் உண்மை அங்கு தெரிகிறது.
“அட! இந்த வெட்டைக் கூடத் தட்டிப்போட்டு! சரி சரி பார்ப்போம் சாமான் எங்க போகப்போகுது?” தகரப்பேணிக்குள்ளிருந்து இன்னொரு புழுவை எடுத்து துாண்டிலிலே தெரியாதபடி கொளுவி நூலைக் கடலுள் இறக்கினான்.
ஏற்கனவே இரைப்பகுதி பறிபோன இடத்திலேயே தூண்டல் அடைந்தது. வெளியுலகத்தின் சிந்தனைகளை கிள்ளியெறிந்து விட்டு மிதப்பிலேயே கண்ணைப் புதைத்திருந்தான்.
காரிய யோகம் செய்துகொண்டிருந்த கொக்கொன்று சிறகடித்துப் பறக்கின்றது. அதன் நீண்ட அலகுகளில் துடித்து துவள்கிறது உறுமீன் ஒன்று. இலேசாக தெரிந்த காட்சியை நீடித்துப் பார்க்காது கண்களைத் தூண்டல் இழையோடு பொருத்திக்கொண்டிருந்தான்.
மிதப்புக்கட்டை அங்கும் இங்கும் அசைகிறது. அந்த அசைவுக்கு அனுசரணையாக ஆட்டிக் கொண்டு அதனை வெட்டி, களுவாகச் சுண்டி இழுத்தான்….
தூண்டிலுடன் இழுபட்டு வருவது பெரிய மீன் ஒன்று… அதனை இழுத்து கரையில் போட்டான்.
“அம்மா அதோ மீன் ஒன்று” அதுவரை அவனது செயலைப் பார்த்துக் கொண்டு வந்த சிறுவன் தாயின் கைகளைத் தட்டிக் கொண்டு அந்த இடத்துக்கோடினான்… அவன் மீனைச் சுண்டியிழுக்கின்றதை நுணுக்கமாக – மாலைக்காட்சிகளை நன்றாகப் படமெடுத்து தனது அல்பத்துக்குள் ஒட்ட முனைந்த ஒருவர் ‘கிளிக் கிளிக்’ கமறாவைத் தட்டிக்கொண்ட ஒலி அந்தக் கிழவனின் கூடப்பாட்டுக்குள் ஐக்கியமாகிறது.
சோழக்காற்று தட்டிவிட்ட உமலை மெதுவாக எடுத்துவந்த வல்லிக்குட்டி மீனை அதற்குள் திணித்துக் கொண்டான்.
“அப்பா! இன்றைக்கு இவ்வளவாச்சும் கிடைச்சுதே! நல்ல முழுவிசளம்.வாய் முணுமுணுத்துக் கொள்ள உமலைக் கக்கத்துக்குள் வைத்துக்கொண்டு விறுவிறென நடக்கிறான்.
வேடிக்கை பார்த்த மனிதர்களைப் பின்னால் விட்டு காத்திருக்கும் தெய்விக்கும் தனக்கும் வாழ்வுதந்த மீனை சந்தையில் விலையாக்க துரிதமாக நடக்கிறான் வல்லிக்குட்டி.
“அம்மா, அம்மா மிச்சம் பெரியமீன். இல்லையாம்மா?” இது சிறுவனின் ஒலி.
“அருமையான காட்சி! அவன் துாண்டிலை வெட்டி இழுக்கிற போதே ‘டக்’கென்று பிடிச்சுட்டேன். படம் நல்லா அமையும்” இது புகைப்படக்காரர் நண்பனுக்குச் சொன்ன வார்த்தை அவை யெல்லாம் அவனுக்குக் கேட்டிருக்க நியாயமில்லை.
இ.நாகராஜன்
ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் நிச்சயம் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டியவர்களில் ஒருவர் அமரர் இ. நாகராஜன் ஆவார். அவர் கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ளார். அவரது சிறுகதைகளில் யாழ்ப்பாணமாந்தர்களின் வாழ்க்கையின் உணர்வு நிலைகள் உருக்கமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும். ஈழநாடு இதழில் மர்மம், ஆத்மா, கண்காட்சி, நியதி, தத்துவங்கள் என ஐந்து சிறு கதைகள் எழுதியுள்ளார். நிறைநிலா இவரது சிறுகதைத் தொகுதியாகும்.
– 12.05.1963
– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.