கணபதி துணை




(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நூற்றி முப்பது டிக்ரி வெய்யில். ஆனால் பறக்கும் பறவைகள் சுருண்டு செத்து கருகி விழவில்லை. ஒரு வேளை டிக்ரி கணக்கு தப்பாக இருக்கலாம். அல்லது உயிர் இந்த டிக்ரியில் வாழும் வல்லமையைப் பெற்றிருக்கலாம்.

எனக்கென்னவோ டிரங்க்பெட்டி மூடியைத் திறந்தது போல் மண்டை வெடித்துப் போய்விட்டது. பயணத்தை நிழலின் இடையீடின்றி தொடர முடியாதென்று பட்டு விட்டது. நல்ல வேளையாகப் பிள்ளையார் கைகொடுத்தார். ரொம்ப இடியாத பிள்ளையார் கோவிலும் முன்னால் முளைத்திருந்த செவ்வரளிச் செடிகளும் ஆதரவாய் அழைத்தன.
அம்மாடி! எவ்வளவு மிருதுவான மயிலிறகு தடவு கிறது. டிரங்க்பெட்டி மூடிக்கொண்டு விட்டது. கண்கூட மூடி உள்ளே ஆழ்ந்து கனலில் வெந்தவனுக்கு ஆறுத லளித்து விசிறிக்கொண்டிருந்தது.
‘அடே பையா?’
‘ஏன்?’
‘உன்னை இல்லேடா. ஏய் உன்னைத்தாண்டா!’
பிள்ளையார் காது அசைந்தது, ‘இதோ பார்த்தாயா. அவனை. கோழி கிளறிப் பார்ப்பதுபோல வேலிக் காலில் எதையோ தேடுகிறானே – அவனை.’
‘ஊம். பார்த்து விட்டேன்.’
‘அவன் தாயார் வந்திருந்தாள். பழுத்தபழம். அவள் புருஷன்கூட காம்பில் சுழன்று சுழன்று சுழன்று கொண்டிருக் கிறானாம். அவர்கள் மகன் தான் இந்தப் பயல். பயல் என்றால் பன்னிரண்டிருக்கும் என்று நினைத்து விடாதே. இருபத்தி ஐந்து வயதிருக்கும், கூழைப் பாம்பு. கறட்டு ஓணான். அவனுக்கு ஒரு வேலை வேணுமாம். இத்தனை நாளாய் அவர்கள் சம்பாதித்துப் பொழுதை ஓட்டிவிட்டார்கள் இனி இவன் சம்பாதிக்காவிட்டால் பட்டினி தானாம். கூலி வேலை திருட்டு புரட்டிலே, வண்டி இனிமே ஓடாதென்று சத்யம் வைத்துவிட்டாள். அவன் காலைப் பார்த்தாயா ஈர்க்குச்சி மாதிரி – பிறவி அப்படி, இவனுக்கு யாரும் வேலை தரமாட்டேன்கராங்களாம். நீதான் கதி என்று வந்து கழுத்தைக் கட்டிக்கொண்டு விட்டாள். காலைப் பிடித்தா லாவது உதறிவிட்டுப் போகலாம். முத்தம் கொடுக்க வருகிறாப்போல கழுத்தைக் கட்டிக்கொண்டால்? இந்தப் பழம் வந்து கொஞ்சினது நசநசவென்று ஈ மொய்க்கிறது போல் இருந்தது. இவனுக்கு ஏதாவது வேலை பார்த்துக் கொடு. இல்லாதபோனால் என்னை முத்தமிடாமல் விட மாட்டாள்.’
‘சரி அப்பா.’
‘நிச்சயமாய்’…
‘அசையாதவன் பொய் ஏனப்பா சொல்லப் போகிறான்? அசைந்தால் இசைய வைக்கவேண்டிவரும். இசையவைக்கப் போனால்தான் பசைவேணும்.’
‘அப்பொழுது சரி’…
யார் எங்கிருந்து பேசினதென்று எனக்குத் தெரியவில்லை. என்னை இல்லை என்று அதட்டி விட்டதால் பிள்ளை யார் பதில் சொன்னார் போலிருந்தது. அவருக்குத்தான் என்றும் உடனே நிச்சயமாகிவிட்டது.
கண்ணைக் கசக்கிக்கொண்டு அகல விரித்துப் பார்த்தேன். எதிரே குட்டி யானை ஒன்று குச்சியைத் துதிக்கையில் வைத்துக்கொண்டு நின்றது தெரிந்தது. பக்கத்தில் கிருதா மீசை மாவுத்தன் நின்றுகொண்டிருந்தான். யானைக்கு அரளிச்செடி நிழல் வேணுமா, போதுமா? ஆனால் மாவுத் தனுக்கு வேணும். அப்போதுதான் கறட்டு – ஓணான் மாவுத்தன் கண்ணில் பட்டான்.
‘தம்பி இங்கே வா.’
அவன் கால்களைத் தயங்கித் தயங்கி வைத்துக்கொண்டு அருகில் வந்தான்.
‘என்ன பண்றே அங்கே?’
‘தேடறேன்’
‘எதை ?”
‘ஏதாவது கிடைக்குமா இன்னுட்டுத்தான்.’
‘சரி யார் நீ ?’
‘நான் வெறும் பயல், தெரு முனைத் திண்ணையிலே இருக்காங்களே அவுங்க மவன். ஒலகத்திலேயே எனக்கு வேலை இல்லேன்னுட்டாங்க. இங்கே தேடறேன்.’
‘ஒன்னை மாதிரி ஆளைத்தான் நானும் தேடிக்கிட்டு வர்றேன். நீ வந்து எங்கூட இருந்துக்க. நீ ஒண்ணும் செய்யவேணாம். கூப்பிட்ட குரலுக்கு ஹும்ன்னு போதும். நான் யானையோடெ போனா கூட வா. குளுப்பாட்டினா கரையிலே நில்லு. நாணலை கீணலை புரட்டிப்போடு, தெரிஞ்சுதா?’
‘சம்பளம்?’
‘சம்பள மில்லாமெயா? ஒனக்கு அவுங்களுக்கு மூணு பட்டை சோறு மூணுவேளை தாரேன். இன்னம் என்ன வேணும்?’
‘சின்னதா இருக்குமா பெரிசா இருக்குமா ?’
‘பாரேன் தெரியுது…’
ஆடிக்கொண்டிருந்த யானைக்குட்டி கால்கடுப்புக்கு அறிகுறியாக நகர ஆரம்பித்து விட்டது. யானையின் மனம் அறிந்த மாவுத்தன் வாடா என்று கிளம்பிவிட்டான். யானைக் குட்டிக்கு மாத்திரம் என்றில்லாத பொது அழைப்பு. சம்பள நிபந்தனையும் பரவாயில்லை. கறட்டு ஓணானும் கிளம்பிவிட்டான்.
வழியிலே சின்ன தென்னந்தோப்பு. தோப்பைக் கண்டதும் யானை நிழலுக்கு நின்று விட்டதென்று மாவுத்தன் நினைத்தான். தோப்பில் யானைக்குட்டி வந்து நின்றதைப் பார்த்த வள்ளி குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவசரமாக வெளியே வந்தாள். குழந்தைக்கு யானையைக் காட்டிக்கொண்டே குடிசைக்குள் குரல் கொடுத்தாள். ‘இந்தா, யானைக்குட்டி வந்திருக்கு, இளநீர் பறிச்சுப்போடு.’
சோம்பல் முறித்துக்கொண்டு முருகன் வெளியே வந்தான். ‘நம்ப யானை! என்ன மாவுத்தரே சொகமா? பிள்ளையாரு ருசிகண்டுக்கிட்டாரு. சித்ரா பௌர்ணமிக்கு போகக்குள்ளே இந்த தோப்பிலே வந்து நின்னீங்களே நான் இளநீர் பறிச்சுப் போட்டேனே நெனைப்பு இருக்குங். களா? உங்களுக்கில்லாட்டியும் யானைக் குட்டிக்கு இருக்குது. பாருங்களேன் கையை வளைச்சு எப்படிக் கேக்குது…ஒரு வருஷம் இருக்குமா குட்டி?’
‘இருக்கும்.’
“மவனுக்கும் சரியா ஒரு வருசமானது. என்னமா பாக்கிறான் பாருங்க.”
முருகன் அலக்காலே இரண்டு இளநீரை லாகவமாகப் பறித்துத் தென்னை போர்மீது தள்ளினான். பெரிய யானையாய் இருந்தால் அப்படியே கொடுத்து விடலாம், குழந்தை. மட்டையை உரித்து தேங்காயை யானைக்குட்டி இடம் கொடுத்தான். யானை தேங்காயைத் தின்ற பிறகு மாவுத் தன் கிளம்பினான்.
“ஏன் மாவுத்தரே மணியைக் காணோம்?”
“இதோ இருக்கு பார்” என்று யானை மேலிருந்த பையிலிருந்து மணியை எடுத்து யானையின் இருபுறமும் தொங்கப் போட்டான். வீட்டுக்குள் கோட்டும் தலைப்பா கையுமா உட்காரலாமா? அதிகாரம் நடத்தும்போது அங்கம் வேண்டும். மாவுத்தன் நியமத்தை மீறுவதில்லை, வெய்யில் தாழ்ந்துவிட்டதால் அதிகார கோலம் பூணவேண்டியது தானே !
கறட்டு ஓணான் இதுவும் ஒரு அதிசயமா என்று பார்த்துக் கொண்டிருந்தான். ஆரம்ப பாடமெல்லாம் பிரமிப்பாய், பயமாய், அதிசயமாய், புதுசாக இருக்கத் தானே செய்யும்.
தெரு வந்து விட்டது. தெரு வருவதற்குள் மணி ஓசை போய் விட்டபடியால் வீடுகளிலிருந்து பெண்களும் குழந் தைகளும் வெளியே உருண்டோடி வந்தனர்.
முதல் வீட்டுக்குப் போனதும் யானைக்குட்டி தானாகவே நின்று விட்டது. வாடிக்கை வீடு! நெற்றியில் விபூதியும் முகத்தில் மஞ்சளுமாக ஒரு பெண் சின்னக் கூடையில் அரிசியும் வெல்லமும் பத்து மிளகுடன் கலந்து எதிரே வைத்தாள். யானைக்குட்டி கூடை விளிம்பைத் தொட்டுப் பார்த்துவிட்டு கையை உள்ளே விட்டது.
“ஏன் மாமா? மொளவு எதுக்கு?”
“வெறும் அரிசி உடம்புக்காகாது?”
“யானைக்குக் கூடவா?”
“ஒங்க தாத்தாவுக்குக்கூட.”
அவனுக்கு ஒரு மாதிரியாகி விட்டது. தெரியாததை தெரிந்துகொள்ள விரும்பினால் பரிகாசமா? இருக்கட்டும்.
“என்ன மாவுத்தரே- அந்தப் பையன் யாரு?”
“புச்சு. எனக்கும் யானைக்கும் துணை. குளுப்பாட்ட தேய்க்க மேய்க்க.”
“ஆனா மேய்ப்பீங்களா?”
“அதொரு வார்த்தைக்கு. எவ்வளவோ சொல்றோம். செய்யறோம்களா? அது ஒரு இது”…
இப்படி ஆரம்பித்த உத்யோகம் வேளை தவறாமல் கோவில் பிரசாதத்தைக் கொண்டுவந்து சேர்த்தது. அவர்கள் மூவருக்கும் போதும், இப்பொழுது விடிந்து விட்டது. அவனும் அப்பன் ஆயிக்கு சோறு போட்டு விட்டான். ஆறுமாதத்திற்குப் பிறகு சம்பாதிக்கவே ஆரம்பித்து விட்டான்…
“இதப்பாரம்மா. வாயப்பயம் கொடுத்தா வாங்கித் திங்குதே. இந்தா காசு மாவுத்தரே!”
“அது கிட்டவே குடு பாப்பா.”
“மாட்டேன் மாட்டேன். அது துண்ணூடும், தொண் டையிலே அப்புறம் சிக்கிக்கும்.”
“சும்மா குடு. திங்காது”
குழந்தை கொடுத்த காசை வாங்கிக்கொண்டு சலாம் வைத்துவிட்டு, காசை மாவுத்தனிடம் கொடுத்து விட்டது. அவன் வாங்கி மடியில் கட்டிக்கொண்ட பொழுது சில்லரை புரளும் ஓசை கேட்டது.
“பாத்தியா அம்மா. எவ்வளவு கெட்டிக்கார யானைக் குட்டி, என்னைப் போல மண்ணெண்னைக்குக் குடுத்த காசை வழியிலே போட்டுட்டுத் தேடாமெ. அதுக்கு எல்லாம் நல்லாத் தெரியுதே.”
“அது பிள்ளையாரில்லே”
பிறகு குழந்தையின் தாயார் ஒரு பொட்டுக் கூடையில் அரிசி கொண்டுவந்து யானையின் முன்வைத்து விட்டு ஏதோ மறந்தாப்போல உள்ளே போய்த் திரும்பினாள்.
“அம்மா, அந்தக் கறட்டு ஓணான் இருக்கு பாரு. அரிசியைத் துணியிலே எடுத்து மடியிலே கட்டிக்கிட்டுது. வவுத்தே பாரு பிள்ளையார் மாதிரி.’
“ஏண்டா யானைக்கு அரிசி வச்சால் நீ எடுத்துக்கிட்டே?”
“இல்லீங்க அம்மா. வூடுவூடா தின்னுக்கிட்டு வருதே. இதையும் தின்னா பச்சிலையைத் தேடிக்கிட்டுப் போறவன் நானல்ல”
“இதை நீ எடுத்துப்பியா?”
“நான் ஏன் தொடறேன்?”
“கோவில்லே இதுக்கு காலை ஒரு வேளை, மாலை ஒரு வேளை அரிசி பருப்பு வெல்லம் மிளகு. பாக்கி வேளைங்களிலே – இதை வப்போம்.”
“பொய் சொல்லாதே.”
“பொய் சொன்னா நாக்கு புழுத்துப் போவாது?…”
“இன்னிக்கு ரெண்டு பிடியாடா?”
“பின்னெ”
மாவுத்தன் கண்டுக்கிடமாட்டான்?’
“அவன் ஏன் மூச்சு காட்றான்? எனக்கொரு நாள். அவனுக்கு ஒரு நாள். தினம் அவனுக்குக் காசு வேறெ, எனக்கு அதிலே பங்கா தர்றான்? இன்னம் என்ன கொள்ளை என்னை அவன் சொன்னா அவனைப் போய் தர்மகர்த்தா கிட்டே சொல்லி தொலைச்சிட மாட்டேன்?”
“அப்பொ ரெண்டு பேருமா விபூதி போடற யானைக்கு நாமம் சாத்துறீங்க?”
“நல்லாச் சொன்னே. அதான் கடவுள் ரகசியம். இதெல்லாம் ஒங்களுக்குப் புரியாது. அது பிள்ளையாரு அல்ல. தெருவிலே போனா அதுக்கு வவுறு நிறைஞ்சு போவுது. எங்களுக்கும் சம்பாராதனை ஆவுது. ஒரு கல்லுல ஒன்பது காயை அடிக்க மனுசனாலே முடியுமா? சாமி அல்ல. பிள்ளையார். பிள்ளையாருக்கு நாமம் போட நம்மாலே ஆவுமா? புரியுதா?”
நல்லாப் புரியுது என்றார்கள் பெற்றோர்கள். அது கிண்டலாக அவனுக்குப் படவில்லை. காதைப் பிடித்துக் கொண்டு இரண்டு தோப்புக்கரணம் போட்டு தன் விசுவாசத்தைக் காட்டினான்..
அப்பொழுது யானைக் குட்டி வீறிட்டுக் கத்திற்று. யானைப் பாகன் என்ன செய்தானோ!
இந்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு உருண்டேன்…
இப்பொழுது 104 டிக்ரிவெய்யில் இருக்கும். பிள்ளையார் தான் இருக்கிறார். நானும்தான் இருக்கிறேன். பயணம் புறப்பட இன்னம் கொஞ்சம் வெய்யில் இறங்கணும். அது வரைவில் இங்கேயேதான்.
அரளி மலரின் வாசனை லேசாக வீசிற்று.
என் கால் ஈர்க்குச்சிபோல் தோன்றுகிறது. ஆனால் நான் மாவுத்தன் என்ற சந்தேகம் மட்டும் விடவில்லை.