கடைசி வினாடிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 18, 2025
பார்வையிட்டோர்: 271 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஸ்விட்சை ஆஃப் செய்ததும் மின்சார விசிறியின் இறக் கைகளில் மெல்ல மெல்லச் சுழற்சி குறைகிற மாதிரி, அம் மாவின் உயிர் சிறிது சிறிதாக அடங்கிக் கொண்டிருந்தது. நடராஜ் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தான். கொஞ்சம் முன்னால் இடுப்புக்கு மேலே அசைவு இருந்தது. இப்போது அங்கெல்லாம் ஓய்ந்து, இடது தொடை மட்டும் புல்லாங் குழல் வித்வான் தாளம் போட்டுக் கொள்கிற மாதிரி படக் படக்கென்று தரையைத் தட்டிக் கொண்டிருந்தது.

அண்டை அயலார், உறவினர் சினேகிதர் யாருமில்லாமல் நடராஜ் தன்னந்தனியே உட்கார்ந்திருந்தான். முன்கட்டுக் குடித்தனக்காரர்கள், அவர்கள்தான் அவனுக்குத் தந்தி கொடுத்தவர்கள். காலையில் கொண்டு வந்து வைத்துவிட் டுப் போன காப்பி டம்ளரை நோக்கி எறும்புச் சாரி ஊர்ந்து கொண்டிருந்தது. கிழவி எந்த நிமிடத்திலும் இறக்கக்கூடும் என்பதால் அவர்கள் வீட்டில் சாப்பாட்டைச் சட்டுப்புட் டென்று முடித்துக் கொண்டிருந்தார்கள். மணி ஏழு இருக்கும். பெட்ரூம் விளக்கின் சுடர், அவனைக் கொட்டக் கொட்டப் பார்க்கிற மாதிரி அசையாமல் நின்றது.

பகல் வண்டியில் அவன் வந்து சேர்ந்தபோது அம்மாவுக்கு நினைவில்லை.

நினைவு இருந்தால், அந்தச் சுருங்கி இடுங்கிய கண் களால் அவனைப் பார்த்து, சொல்ல நினைக்கும் வார்த்தை கள் நெஞ்சுக்குள்ளேயே தடுமாற, கன்னங்களில் கண்ணீர் வழியத் தவித்திருப்பாளோ என்னவோ. கைக்குட்டையினால் அந்தக் கண்ணீரைத் துடைக்கையில், அவளுடைய நினைவு மேலும் தெளிவுபட்டிருக்குமோ என்னவோ. வருடம் வருடமாகப் புதைத்து வைத்துக் கொண்டிருந்த தாபங்களைக் கொட்டியிருப்பாளோ என்னவோ.

நினைப்பதற்கே கஷ்டமாய் இருந்தது நடராஜுக்கு. வாழ்க்கையென்பது ஒரு துணியானால் அதன் கடைசி இழைகள் இதோ பிய்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் அவளுக்குப் பிரக்ஞை இருக்குமானால், மகனைப் பார்த்து என்னென்ன சொல்வாளோ, அவளுடைய சாபத்தின் சூட்டில் தன் வாழ்க்கை எப்படியெல்லாம் கருகிப் போகுமோ என்று நினைக்கையில் அவனுக்கு அச்சம் ஏற்பட்டது.

நடராஜினால் சும்மா உட்கார்ந்திருக்க முடியவில்லை. சிமினி விளக்கைப் பிடித்துக் கொண்டு இருண்டு கிடந்த அலமாரிகளைத் துழாவினான். அம்மா உபயோகித்த நசுங்கிய அலுமினிய டம்ளர்களும், உடைந்த பிளாஸ்டிக் குவளைகளும் அங்கே கிடந்தன.

ஒரு பழைய ரயில்வே கைடு அகப்பட்டது. அம்மா வைப்போல சுருண்டு முடங்கியிருந்த அதன் பக்கங்களை நீவிக் கொண்டிருக்கையில், முன் போர்ஷனில் யாரோ தோத் திரப் பாடல்கள் பாடிக் கொண்டிருப்பது கேட்டது. முதிர்ச்சியான ஆண் குரல். சாகப் போகிற கிழவியின் காதில் விழுந்த மாதிரியும் இருக்கட்டுமே என்று இரைந்து பாடுகிறார்கள் போலும்.

‘ஈயென்று நானொருவரிடம் நின்று கேளாத இயல்பும்…’

“டேய் கடாமாடு! இறக்கேண்டா சீட்டை!” என்றான் ராமு. அவனுடைய வீட்டின் கொல்லைப்புறத்தில், ஓடு போட்ட குட்டி அறையில்தான் நடராஜும் அவன் சினேகிதர்களும் சீட்டு ஆடிக் கொண்டிருந்தார்கள்.

“யாரோ வருகிற மாதிரி சத்தம் கேட்டது. உன் அப்பா வாயிருக்கப் போகிறதே?” என்றபடி சிகரெட்டை மறைத்து வைத்துக் கொண்டான் நடராஜ்.

ராமு எட்டிப் பார்த்து, “என் அப்பா இல்லை. எங்கள் வீட்டை வாங்கியிருக்கிறவர் வருகிறார், ரிப்பேர்களைப் பார்வையிடுவதற்காக” என்றான்.

அதற்குள் அந்த மனிதர் உள்ளே வந்து விட்டார். நடராஜைக் கண்டதும், “அட! நீ சங்கரனோட பிள்ளை இல்லே?” என்று அவனை ஏற இறங்கப் பார்த்து, அணைத்துக் கொண்டார். “என்ன, காசு வைத்தா, சும்மாவா!” என்றார், சிரித்துக் கொண்டே தரையிலே கிடக்கிற சீட்டுக்களைப் பார்த்து.

“சும்மாதான்…”

“சும்மா ஆடுவதிலே என்ன சுவாரசியம்? ஏன், பணமில்லையா?” பாக்கெட்டில் கைவிட்டார். “இந்தா வைத்துக் கொள்.”

நடராஜ் ஆச்சரியத்துடன் பார்த்தான். ஐந்து ரூபாய் நோட்டு.

”உன் அப்பாவும் நானும் உயிர்த் தோழர்களாக இருந்தவர்கள், தம்பி. அந்த நாளில் எனக்கு எவ்வளவு கொடுத்திருப்பான் தெரியுமா?” என்று பெருமூச்சு விட்டவர், “எப்ப பணம் வேணுமானாலும் என்னை வந்து பார்” என்று வரம் வேறு கொடுத்துவிட்டுச் சென்றார்.

அதற்கப்புறம் நாலைந்து முறை அவரைச் சந்தித்துப் பணம் வாங்கி விட்டான் நடராஜ். மொத்தம் ஐம்பது ரூபாய்க்கு மேலிருக்கும்.

அப்புறம்தான் ஒருநாள் அம்மா அவனிடம் மெதுவாய், ”ஏன் தம்பி, அந்த ஜானகிராமன்கிட்டே அடிக்கடி பணம் வாங்குகிறாயா?” என்று கேட்டாள்.

“இல்லா விட்டால், நீயா கேட்டவுடனே அளப்பாய்?” என்று அவன் சீறினான்.

“அதற்கில்லை, தம்பி. ஒரு தடவை உன் அப்பாவிடம் அவர் ஏதோ மானக்கேடாய்ப் பேசி விட்டார். அதற்குப் பிறகு, சாகிறவரை அந்தப் பக்கம் தலை வைத்தும் படுத்ததில்லை உன் அப்பா. நேற்று என்னைக் கடைத் தெருவில் அந்த ஜானகிராமன் பார்த்து, ‘உன் புருஷன் பிரமாதமாய் வீம்பு பாராட்டினானே? அவன் பிள்ளை தினம் என் வீட்டு வாசலில் பிச்சைக்கு வந்து நிற்கிறான்’ என்றார். வேண்டாம் தம்பி, அவனோட பணம் நமக்கு…” என்றாள்.

“நாய் விற்ற காசு குரைக்காது, அம்மா. வாயை மூடிக் கொண்டு கிட” என்றான் நடராஜ்.

‘என்னிடம் ஒருவர் ஈது இடுவென்ற போதவர்க்கு இல்லையென்று சொல்லாமல் இடுகின்ற திறமும்…’

தி. நகர் ரங்கநாதன் தெருவில், லாட்ஜில் மாடிப்படி வழியே நடராஜ் இறங்கிக் கொண்டிருந்தான். ஒருவர் ஏறி னால் மற்றவர் இறங்க வேண்டும். அவ்வளவு குறுகலான படிகள். பாதி இறங்குகையில் மேலே தபால்காரர் ஏறி வந்து கொண்டிருந்தார். “உங்களுக்குத்தான் சார் லெட்டர். பாதி நடையை மிச்சப்படுத்தி விட்டீர்கள்” என்று இன்லண்ட் கவரைத் தந்தார்.

பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது, ஊரிலிருந்து அம்மாதான் எழுதியிருக்கிறாள் என்று. வேறென்ன, ‘பணம் அனுப்பு கஷ்டப்படுகிறேன்’ பல்லவியாகத்தான் இருக்கும்.

மெட்றாசுக்கு வந்த இரண்டு மாதத்துக்குள் ஆறு கடிதமா கிவிட்டது. இது ஏழாவது. கிழித்து எறிந்தான்.

‘இறையாம் நீ யென்றும் எனைவிடா நிலை யும் நான் என்றும் உன் நினைவிடா நெறியும்…’

ஒயிலாக நடராஜின் மேஜைமீது கையை ஊன்றிக் கொண்டு, “எப்படி சார் அடித்திருக்கிறேன்? நன்றாயிருக்கிறதா?” என்று கேட்டாள் டைப்பிஸ்ட் லதா.

“ஆகாகா! பிரமாதம்! என்ன டைப்! கண்ணிலே ஒற்றிக் கொள்ள வேண்டும். ஆனால் வெறும் காகிதத்தை ஒற்றிக் கொள்வதைக் காட்டிலும்…”

டக் டக். மரியாதைக்காகக் கதவில் இரண்டு தட்டுத் தட்டிவிட்டு, ப்யூன் உள்ளே வந்து, “உங்களைப் பார்க்க ஒரு குருக்கள் வந்திருக்கிறார் சார். உங்கள் ஊராம்” என்றான்.

‘குருக்களா!’

தளர்ந்து மெலிந்த சரீரத்துடன், ருத்திராட்ச மாலைகள் கலகலவென்று மார்பில் புரள அவர் உள்ளே வந்தார். பூ, தேங்காய், திருநீறு எல்லாம் பையிலிருந்து எடுத்து அவன் முன்னே வைத்தார்.

“அந்த நாளிலே, உங்கள் தகப்பனார் எங்கள் கோயில் உற்சவத்தின்போது மூன்று நாள் செலவை ஏற்றுக் கொள்வார். உங்கள் தாயார்தான் அட்ரஸ் கொடுத்தார்… நீங்கள் ஒருநாள்…”

சீறி விழுந்தான் அவன். “அப்படிக் கொடுத்துக் கொடுத்துத்தான் என்னை நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டுப் போனார். போய்யா வேலையைப் பார்த்துக் கொண்டு!”

‘அயலார் நிதியொன்றும் நயவாத மனமும், மெய்ந்நிலையென்றும், நெகிழாத திடமும்…’

“சும்மா வெற்றிலையை மடித்து நீட்டினால் போதாது. வாயிலே போட வேண்டுமாக்கும்! ஊம்! ஆ!” என்று வாயைத் திறந்து காட்டினான் நடராஜ்.

”உக்கும்! சும்மா இருங்க!” என்றாள் லதா.

“இதுகூட ஆபீசா, நான் உதவி மானேஜராயும், நீ டைப் பிஸ்டாயும் நடந்து கொள்ள? இது வீடு. நீயும் நானும் கண வன், மனைவி! ஊம், போடு” என்று அவன் அவள் இடுப்பை வளைத்துக் கொண்டிருக்கையில், தொண்டையைச் செருமிக்கொண்டு அவன் மாமனார் உள்ளே வந்தார்.

“ஒரு விஷயம் கேள்விப்பட்டேன், மாப்பிள்ளை. தஞ்சாவூரில் சுந்தரலிங்கம் என்று உங்களுக்கு ஒரு பெரியப்பா இருக்கிறாரா?”

“ஆமாம்” என்றான். மாமனாருக்குத் தரகர் தொழிலா கையால் எந்தத் தகவலை, எப்படி, எப்போது அறிந்து கொண்டார் என்று ஆச்சரியப்படுவதற்கில்லை.

“உங்களுக்குச் சேர வேண்டிய நாலு ஏக்கர் நிலம் அவர் வசத்தில் இருக்கிறதாமே? எதற்காக இருக்கணும்? பிறர் சொத்து நமக்கு வேண்டாம். நம் சொத்தும் இன்னொரு வரிடம் இருக்கக் கூடாது. என்ன நான் சொல்வது?”

“ஆமாம்” என்று தலையாட்டினான் அவன்.

ஒரு மாதம் கழித்து அம்மாவிடமிருந்து கடிதம் வந்தது.

‘நடராஜனுக்கு ஆசிர்வாதம். உன் பெரியப்பாவிடம் இருப்பது நம் சொத்தில்லை. உன் அப்பா அவருக்கு மனசாரக் கொடுத்தது. ‘நீயே வைத்துக் கொள்’ என்று அவர் சொன்னபோது நான்தான் பக்கத்தில் இருந்தேன். அதைத் திரும்பக் கேட்டு நீ வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகக் கேள்விப்பட்டுத் துடித்துப் போய்விட்டேன். இத்தனை வருஷமும் அவர்தான் எனக்கு மாசாமாசம் செலவுக்குத் தந்து கொண்டிருக்கிறார்… ‘

ஆனால் நடராஜ் விடவில்லை. கேஸ் போட்டான்.

‘உலகில் சீயென்று பேயென்று நாயென்று பிறர்தமைத் தீங்கு சொல்லாத தெளிவும்…’

“ஐய! ஒரு புது வண்டிதான் வாங்கிடுங்களேன்” என்று பரிகாசம் செய்து கொண்டிருந்தாள் லதா, ஸ்கூட்டரை அவன் உதைத்து உதைத்துக் கால் ஓய்ந்த சமயத்தில்.

ஒரு சைக்கிள் ரிக்ஷா வந்து நின்றது.

அம்மா இறங்கிக் கொண்டிருந்தாள்.

லதா அவனையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தாள். “இவள்தான் என் நாட்டுப் பெண்ணா?” என்று அவளை நெற்றி வழித்துத் திருஷ்டி கழித்தாள் அம்மா. அதற்குள் ஆயிரம் இருமல்.

‘சட்!’ லதா வீட்டுக்குள் திரும்பி விட்டாள்.

“இருமல் தாங்கலேடா தம்பி! இங்கே பட்டணத்தில் வைத்தியம் செய்து கொள்ளும்படி டாக்டர் சொன்னார்” என்றாள் அம்மா.

”என்னம்மா நீ அறிவில்லாமல்! நானே இங்கே மாமனார் வீட்டில் ஒண்டிக் கொண்டிருக்கிறேன்! திறந்த வீட்டில் எதுவோ நுழைகிற மாதிரி நீ வேறயா?” என்றான் அவன். மறு ரயிலிலேயே ஊருக்குத் திருப்பியும் அனுப்பிவிட்டான்.

‘திறமொன்றும் வாய்மையும் தூய்மையும் தந்து நின் திருவடிக்காளாக்குவாய்…’

திறமிருந்தது அவனுக்கு – சுயநலத்தோடு, தன்னை யும் தன் மனைவி மக்களையும் மட்டும் காப்பாற்றிக் கொள்ள. தூய்மை? வாய்மை? வயிற்றில் அடித்துக் கொண்டு சிரிப்பாள் அம்மா. பிரக்ஞை மட்டும் முழுசாக இருக்குமானால் என்னென்ன பேசுவாளோ? மரணத்தின் நுழைவாயிலில் ஒரு காலை வைத்து விட்டவள், ஒரு வினாடி ஒரே ஒரு வினாடி – நின்று திரும்பிப் பார்த்து விட்டால், அவளுக்குள்ளிருந்து என்னென்ன சாபங்கள் வெடித்துக் கொண்டு வெளிப்படுமோ?…

‘தாயென்று சென்னையில் கந்த கோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே! தண்முகத் துய்ய மணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே…’

“நடராஜா… நடராஜா…

யார் கூப்பிடுவது? திரும்பிப் பார்த்தான். திடுக்கிட்டான். அம்மாவின் உதடுகள்தான் மெல்ல அசைந்து கொண்டிருந்தன. அவன் உடம்பு நடுங்கியது. குனிந்து அவள் உதட்டருகே காதை வைத்துக் கொண்டான். அம்மாவுக்கு நினைவு வருகிறது.

“நடராஜா… நீ… நன்றா…”

“வேண்டாம் அம்மா, வேண்டாம். இதுவரை நான் பண்ணின பாவங்களே போதும். ‘நீ நன்றாயிருப்பாயா?’ என்று என்னைச் சாபமிடாதே!”

”நடராஜா…நீ நன்றாய் இருப்பாய்டா கண்ணா, நன்றாய் இருப்பாய்…” என்று அம்மா முனகினாள்.

– குடும்பக் கதைகள், முதற் பதிப்பு: 2007, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *