கடவுள் ஏன் கல்லானார்?





கரைந்து ஒழுகுகின்றன மேகங்கள். அதன் ஊடே எட்டி எட்டிப் பார்க்கிறான் பகலவன் “மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன” என்று பாடலே பாடத்தோன்றும் நிலமகளுக்கு, அவ்வளவு அழகிய காலைப்பொழுது.
அழகிய முற்றமுள்ள ஒற்றை மாடி வீடு. விருந்தோம்பல் பண்பை பேசாமலேயே சொல்லித்தரும் பெரிய திண்ணைகள் வீட்டின் இருமருங்கிலும், தலையில் அவ்வளவு கனமிருப்பினும் தடுமாறாமல் எடுத்துக்காட்டாய் எழுந்து நிற்கும் தூண்கள் அசையாமல் பறைசாற்றுகிறது அப்பாவின் அன்பை.
வீட்டைச் சுற்றியுள்ள தோட்டமும், வீட்டின் ஒழுங்கும் சொல்லாமல் சொல்லும் ஆகச் சிறந்த ஆசிரியர் அம்மா தான் என்று. கால மாற்றத்தில் மறந்தும், மறைந்தும், போன பழமையின் சில அங்கங்களில் சிறந்ததை தனக்குள்ளே தக்க வைத்திருந்த எம் அழகிய வீட்டின் வாசலில் அமர்ந்திருந்தேன்.
என் பெயர் இனியா. பெயர் மட்டும் அல்ல பேச்சிலும் இனியவள் தான். எழுந்தது முதலே என் கருத்தினில் எழுந்த ஒரு வினா என்னை தொடர்ந்து துளைத்துக் கொண்டிருந்தது. “கடவுள் ஏன் கல்லானார்?” காரணம் அடிக்கடி கேட்கும் புலம்பல்கள், இந்த சாமிக்கு காதே கேட்காதா? கல்லாயிடுச்சா? என…
யாரிடம் கேட்பதென மூளைக்குள் ஒரு “நீயா? நானா?” நடக்க, கடைசியில் வெற்றி பெற்றதோ இணைய நண்பன் “கூகுள்” தொடுதிரையில் தட்டச்சு செய்தேன். “கடவுள் ஏன் கல்லானார் ?” என,
“உனக்குள்ளே” கேள் என்பது போல் அது எழுத்துக்களை என்னிடமே காட்டியது.
பின், “கடவுள் ஏன் கல்லானார் மனம் கல்லாய் போன மனிதர்களாலே” என்ற பாடல் வரியாய் மின்னியது.
இது தானா? கடவுளால் எனக்கு கூறப்பட்ட விடையென யோசித்தவாறே “எனக்குள்” கேட்டேன்.
என் மீது ஐயம் கொள்ளாதே! நான் கல் அல்ல என்று அரற்றிய என் மனத்தை சற்றே சமாதானம் செய்ததில் ஒன்றை உணர்ந்தேன்.
“மனம் நல்லா இருந்தா தானே மனிதர், கல்லாய் இருந்தால் எவ்வாறு மனிதரெனக் கொள்வது?” ஆக இதுவும் விடையன்று.
அந்நாள் முழுவதும் இக்கேள்வியிலேயே கழிய, முழுநிலவு மெதுவாய் முகம் காட்டியது. வேலைப்பளுவால் மூளை சோர்வடைந்து அயர்ந்தது. அந்நேரத்தில், அழகிய உருவம் ஒன்று அருகே தெரிய அதன் எழில் நிறைந்த ஒளியில், வாய் திறக்க வழியின்றி இரு விழிகளிலும் ஏனோ நீர் வழிய, இயங்காமல் அவ்வாறே நிறுத்தி வைத்தேன் இமைகளை. இதயத்தோடு பேசியது, அவ்வழகிய உருவம், சம்மந்தப்பட்ட என்னிடம் கேட்காமல் சகலரிடமும் வினவினால் எவ்வாறு விடை காண்பாய்? என.
நாவோ எழ மறுக்க, “நான்” என்பதையே நான் மறக்க,
நான் சொல்லாவேன்.. புல்லாவேன்.. புள்ளாவேன்.. வில்லாவேன்.. கல்லும் ஆவேன் என்றது அவ்வுருவம். அசையாமல் ஆசையாய் பார்த்த என்னைப் பார்த்து சிரித்தபடியே,
கற்றுக்கொள்.. வணங்கப்படும் நிலைபெற வேண்டுமெனில்,
வலிகளை பொறுத்தே ஆக வேண்டும் என்ற..
வாழ்க்கைப்பாடத்தை,
கற்றுத்தரவே…
கல்லும் ஆனேன்…
என்ற அதன் திருவடியை இறுக பற்ற அவ்வுருவம் மீண்டும் சிரித்தது..
“இறைவா!” என்றேன்.
இயங்கத்தொடங்கியது மூளை. இமை திறந்தது. பலகணி வழியே பகலவன் கதிர்களை பாய்ச்சி வாழ்த்த பதில் கிடைத்ந மகிழ்ச்சியோடு பயணம் தொடர்கிறது புதியதாய்.