கடவுளின் பிறந்த நாள்
சூஃபி மெய்ஞானிகளில் ஒருவரான ஃபரித், ஒரு நாள் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் அவர் சொர்க்கத்திற்கு சென்றிருந்தார். அப்போது சொர்க்கம் விழாக் கோலம் பூண்டிருந்தது. எங்கும் வண்ணமயமான விளக்குகள், வாண வேடிக்கைகள், இன்னிசை, ஆடல் – பாடல்கள், பல்வேறு கலை நிகழ்ச்சிகள். பெருந்திரளான மக்கள் கூட்டம், மகிழ்ச்சியும் ஆனந்தமுமாக விழாவைக் கொண்டாடிக்கொண்டிருந்தது.

ஃபரித் ஒருவரிடம், “இங்கு என்ன விசேஷம்?” என்று கேட்டார்.
“இன்று கடவுளின் பிறந்த நாள். அதைத்தான் சொர்க்கமே கொண்டாடி மகிழ்ந்துகொண்டிருக்கிறது. சரியான தருணத்தில்தான் நீங்களும் வந்திருக்கிறீர்கள்!” என்றார் அவர்.
ஃபரீத், தெருவோரத்தில் ஒரு மரத்தடியில் நின்றபடி நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்க்கலானார். அப்போது தெருவில் ஊர்வலம் வந்தது. அதன் முன்னிலையில் ஒருவர் குதிரையில் வர, அதன் பின்னே மக்கள் கூட்டம் ஆரவாரத்தோடு வந்துகொண்டிருந்தது.
“யார் இவர்?” என்று அருகில் இருந்தவரிடம் கேட்டார் ஃபரீத்.
“இவர்தான் முஹம்மது நபி. அவர் பின்னே வருகிறவர்கள், அவரைப் பின்பற்றும் இஸ்லாமியர்கள்!” என்று பதில் வந்தது.
அந்தக் கூட்டம் நகர்ந்த பிறகு, இன்னொரு கூட்டம் வந்தது. அதற்குத் தலைமை தாங்கி இருப்பவரைக் காட்டி, “இவர் யார்?” என்று கேட்டார்.
“இவர்தான் இயேசு! இவருக்குப் பின்னே வருகிறவர்கள், இவரைப் பின்பற்றும் கிறிஸ்தவர்கள்!” என பதில் வந்தது.
அதற்குப் பின்னே புத்தரின் தலைமையில் பௌத்தர்கள், மகாவீரரின் தலைமையில் சமணர்கள், சிவன் தலைமையில் சைவர்கள், விஷ்ணுவின் தலைமையில் வைஷ்ணவர்கள் என உலகம் முழுக்க உள்ள மதங்களின் தோற்றுவிப்பாளர்களும், அவர்களைப் பின்பற்றும் மதத்தவர்களுமாக, கூட்டம் சென்றுகொண்டே இருந்தது.
இறுதியாக ஒரு கழுதையின் மீது, மிக வயோதிகமான ஒரு நபர் வந்தார். ஆனால், அவருடனோ, அவருக்குப் பின்னாலோ ஒரு மனிதர் கூட இல்லை.
அருகில் இருந்த நபர் உட்பட எல்லோரும் போய்விட்டிருக்கவே, அவர் யார் என்று விசாரிக்க ஆள் இல்லாமல், ஃபரீத் அவரிடமே சென்று, “நீங்கள் யார்?” என்று கேட்டார்.
“நான்தான் கடவுள்! மனிதக் கூட்டம் மதங்களைப் பின்பற்றி அவற்றின் பின்னேதான் சென்றுகொண்டிருக்கிறது. என்னைப் பின்பற்றுவதற்கு யாருமே இல்லை!”
ஃபரீதுக்கு விழிப்பு வந்துவிட்டது. அந்தக் கனவின் வெளிப்பாடு, அவருள் ஆழ்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
மறு நாள் காலையில் அவர் தனது சீடர்களிடம் அறிவித்தார்: “இனி நான் இஸ்லாமியனாக இருக்கப்போவது இல்லை. எந்த ஒரு மதத்தையும் சார்ந்து இருக்க மாட்டேன். கடவுளை மட்டுமே பின்பற்றுகிறவனாக இருக்கப்போகிறேன். குறைந்தபட்சம் நான் ஒருவனாவது கடவுளைப் பின்பற்றுகிறவனாக இருந்தால், கடவுள் சற்றேனும் ஆறுதல் அடைவார்!”