கடமையும்… காதலும்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 22, 2025
பார்வையிட்டோர்: 733 
 
 

சுற்றமும் நட்பும் கூடி வந்து மணமக்களை மனதார வாழ்த்தி முதல் பந்தியில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார்கள். தூரத்தில் இருந்து வரும் சொந்தங்கள் எல்லாம் இப்போதுதான் தலையை காட்டிக் கொண்டிருந்தார்கள். மணமக்கள் இன்னும் மேடையை விட்டு கீழே இறங்கவில்லை. நண்பர்கள் பரிசு பொருட்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். நெருங்கிய உறவுக்காரர்கள் சந்தனம், குங்குமத்தை மணமக்களின் நெற்றியில் இட்டபடி புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அந்த நெரிசலும் தள்ளுமுள்ளும் குறைந்த பிறகு மணமகன் வெற்றிச்செல்வன் மணமகள் காவியாவின் கரத்தைப் பற்றிய’ படி “நாம தனியா போட்டோ எடுத்துக்கலாமா” என்றான்.

இருவரும் மேடையில் இருந்து இறங்கினார்கள். மண்டபத்தினுள் சுற்றுச் சுவரை ஒட்டிய இடது புறமாக சின்ன பூந்தோட்டம் போட்டிருந்தார்கள். அந்தப் பூச்செடிகளுக்கு நடுவிலும்,மலர்களை இழுத்து தம் மார்போடு அனைத்தபடியும், புல்வெளியில் அமர்ந்து ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தபடியும் புகைப்படங்கள் பிடித்துக் கொண்டார்கள் மணமக்கள். புகைப்படங்கள் என்பது காலம் கடந்த பிறகும் கூட நினைவுகளால் சிலிர்க்கச் செய்யும். சந்தோசங்களை துளிர்க்கச் செய்யும் காலக்கண்ணாடி அல்லவா.

நெருங்கிய உறவுக்காரர் ஒருவர் வந்து “நேரமாச்சு பொண்ணும் மாப்பிள்ளையும் சாப்பிட வாங்க” என்று குரல் கொடுத்தார். வெற்றிச்செல்வனும் காவியாவும் பந்திக்குச் சென்றார்கள். உண்மையில் இருவரும் நல்ல பசியில் தான் இருந்தார்கள். ‘இந்த சடங்குகள் எல்லாம் எப்போது முடியும். யாராவது வந்து நம்மை சாப்பிட அழைக்க மாட்டார்களா’ என்று எதிர்பார்த்தபடி தான் இருந்தார்கள். ஆகவே அழைத்ததும் உடன் வந்து விட்டார்கள். “மாப்ள அளவா சாப்பிடுங்க. இன்னும் பாலும் பழமும் சாப்பிட வேண்டியது இருக்கு” என்று பந்தியின் கூட்டத்திலிருந்து நக்கலாய் ஒரு குரல் எழுந்தது. அது மணமகள் காவியாவின் காதுகளிலும் வந்து விழுந்தது. அவள் தலை குனிந்தபடியே நாணிச் சிரித்தாள். வெற்றிச்செல்வன் தலையை உயர்த்தி குரல் வந்த திசையை பார்த்தான். அப்போது அவன் கைபேசி சிணுங்கியது.

எடுத்துப் பார்த்த வெற்றிச்செல்வன் காவியாவிடம் இப்படிச் சொன்னான்: “காவியா ஒரு முக்கியமான போன் வருது. நீ சாப்டுட்டு இரு. இதோ ரெண்டு நிமிசத்துல வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். “வெற்றி சாப்பிடும் போது என்னப்பா போன் பேசிக்கிட்டு. அப்புறமா பேசிக்கலாமே” என்று அன்போடு அதட்டினார் வெற்றியின் அப்பா. “இல்லப்பா இது முக்கியமான போன்.இப்ப வந்துருவேன்” மண்டபத்தில் இரைச்சல் இல்லாத இடம் தேடி வேகமாக நடந்தான் வெற்றிச்செல்வன். எதிர்முனையில் இருந்தவர் அவனுடைய ராணுவ உயர் அதிகாரி. அவர் வெற்றிச்செல்வனைப் பற்றியோ, இங்கு நடந்து முடிந்த திருமணத்தைப் பற்றியோ விசாரிக்கவில்லை. ‘நமது நாட்டின் எல்லையோரத்தில் பதற்றமான சூழ்நிலை இருப்பதாகவும், பக்கத்து தேசத்திலிருந்து எப்போது வேண்டுமானாலும் அவர்கள் யுத்தத்தை தொடங்கலாம். அல்லது நாம் யுத்தத்தை முன்னெடுக்க வேண்டியது இருக்கும்.

ஆகவே ஐந்து நாளில் எல்லைக்கு வந்து சேர வேண்டும்’ என்ற தகவலை கட்டளையாக சொல்லிவிட்டு வெற்றிச்செல்வனின் பதிலுக்காகக் கூட காத்திருக்காமல் அந்த இராணுவ உயர் அதிகாரி தன் இணைப்பைத் துண்டித்துக் கொண்டார். வெற்றிச்செல்வனுக்கு இந்தக் கட்டளையின் தொனி, சூழ்நிலையின் பதற்றம்,உறவு,நட்புகளின் பிரிவு இவை எல்லாம் ஏற்கனவே பழக்கப்பட்ட அனுபவம் தான்.ஆனாலும், எப்போதும் போல இப்போது அவனால் இந்த சூழலை இயல்பாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. காரணம் இந்த வினாடியில் இருந்து அவன் ஒரு குடும்பத் தலைவன். இப்போதுதான் இல்வாழ்க்கையை தொடங்கி இருக்கிறான்.

காவியாவிடம் சொல்வதற்கு அவன் நெஞ்சம் நிறைய காதல் வைத்திருக்கிறான். அவளிடம் பரிமாறிக் கொள்ள அளவில்லாத அன்பு வைத்திருக்கிறான். ஜோடியாக ஊர் சுற்றவும், கேலியாக பேசி சிரிக்கவும் நிறைய விசயங்களை அவன் தன் மனத்துள் பதியம் போட்டு வைத்திருக்கிறான். பயண நாள்களை கழித்துப் பார்த்தால் எஞ்சியிருப்பது இரண்டு நாள்தான். இந்த இரண்டு நாளில் அப்படி என்ன அவளோடு பெரிதாக வாழ்ந்து விட முடியும்?.அவளுக்காக எதை நான் பெரிதாக செய்து விட முடியும்?. நினைத்துப் பார்க்கவே அவனுக்கு மனம் கனத்தது. வேறு எந்த பிரிவை விடவும், காதலின் பிரிவு வலியை தரக்கூடியது தானே. எதிரியோடு சண்டையிட்டு ஜெயிக்கும் தைரியம் இருந்தாலும், காதல்..காதலின் பிரிவு என்று வரும்போது யாரும் கலங்கித் தான் போய் விடுவார்கள்.

காவியா உணவு அருந்திவிட்டு தன் தோழிகளோடு பேசி சிரித்துக் கொண்டிருந்தாள். வெற்றிச்செல்வன் அருகில் வந்ததும் தன் தோழிகளிடம் அவனை அறிமுகம் செய்து வைத்தாள்.வெற்றிச்செல்வன் அவளிடம் அந்தச் செய்தியை சொல்வதற்கு முற்பட்டான். அவன் சொல்ல வந்ததை கவனிக்காத காவியா “நீங்க இன்னும் சாப்பிடவே இல்லையே, முதல்ல சாப்பிடுங்க” வெற்றிச்செல்வனின் கரத்தை பற்றி இழுத்துக் கொண்டு போய் பந்தியில் உட்கார வைத்தாள். அந்தச் செய்தியை மறைக்கவோ,மாற்றவோ முடியாது. எப்படியும் அதை சொல்லித்தானே ஆக வேண்டும். பரிமாறிக் கொண்டிருந்த காவியாவிடம் தனக்கு போன் வந்த விசயத்தைப் பற்றி எடுத்துச் சொன்னான். இதைக் கேட்டதும் ஆரம்பத்தில் அவன் தன்னை கேலி செய்வதாக நினைத்தாள்.

பின் பொலிவிழந்த அவன் முகத்தைப் பார்த்து காவியா புரிந்து கொண்டாள்.

இதை அருகில் இருந்து கேட்ட தூரத்து உறவுக்காரப் பெண் ஒருத்தி தாமதிக்காமல் உடனே போய் காவியாவின் தாய்மாமன் சுந்தரேசனிடம் வத்தி வைத்தாள்.

ஒரு நாள் பக்கத்தூரின் கடை தெருவில் சலசலப்பு ஒன்றில் எழுந்த கைகலப்பில், தன் நண்பனுக்காக சுந்தரேசனோடு மல்லுக்கட்ட முறுக்கிக் கொண்டு வந்தான் வெற்றிச்செல்வன்.அன்று முதல் அவனைக் கண்டாலே சுந்தரேசனுக்கு ஆகாது. இந்த கல்யாணத்தை நிறுத்த பொண்ணோட தாய் மாமன் என்கிற வகையில், தன்னால் ஆன எல்லா கெடுதல்களையும் செய்து பார்த்தார் சுந்தரேசன்.

‘உறவு முறையைக் காரணம் காட்டி இப்போது உள்ள இளசுகளைக் கட்டுப்படுத்த முடியாது’ என்ற நடைமுறை எதார்த்தத்தில் அவர் தோற்றுப் போனார்.

அரை மனதோடு தான் இந்த கல்யாணத்திற்கு அவர் சம்மதம் சொன்னார். அவருடைய வெறுப்பு வேள்வியில் எண்ணெய் ஊற்றுவது போல இருந்தது. அந்த உறவுக்கார பெண் ஒருத்தி சொன்ன செய்தி. இதை வைத்து வேண்டுமென்றே கலகம் செய்தார் சுந்தரேசன். “இதுக்குத்தான் அப்பவே இந்த சம்பந்தம் வேண்டாம்’னு தலையில அடிச்சுக்கிட்டேன். யாராவது கேட்டீங்களா. பட்டாளத்தானுக்கு வாழ்க்கைப் பட்டா பாதி வாழ்க்கை தான். கல்யாணம் முடிஞ்ச கையோட நம்ம பொண்ண அம்போ’னு விட்டுட்டு துரை போய்டுவாராம். அதுக்கு ஏன் கல்யாணம் பண்ணனும்” என்று எல்லோர் காதிலும் படும்படி கத்திச் சொன்னார். பதிலுக்கு அந்த தரப்பில் இருந்து ஒருவர் கத்திப் பேச, இப்படியே ஆளாளுக்கு ஒரு கருத்தைச் சொல்ல, அந்த மண்டபம் முழுவதும் வார்த்தைகளின் இரைச்சலால் நிரம்பியது.

மணமக்களை வீட்டுக்கு அழைத்து வந்த பிறகும் கூட சலசலப்பு குறைந்தபாடில்லை. இதில் நேரடியாக சம்பந்தப்பட்ட வெற்றிச்செல்வனும் காவியாவும் இது விசயமாக எந்த கருத்தையும் சொல்லவில்லை. அவர்கள் பிரிவின் துன்பத்தை நினைத்து மௌனமாகவே இருந்தார்கள்.இப்போது சுந்தரேசனுக்கு தன் வக்கிர புத்தி வேலை செய்யத் தொடங்கியது. சாந்தி முகூர்த்தத்திற்கு நேரம் குறித்து தரும் ஜோசியனை அவர் தன் வசப்படுத்திக் கொண்டார். “பத்து நாள்கள் கழிஞ்சப் பிறகு தான் சாந்தி முகூர்த்தம் வச்சுக்கணும். அப்பத்தான் வம்சம் விருத்தியாகும்” என்று ஜோசியக்காரரை பொய் சொல்ல வைத்தார். உறவுகளுக்குள் பகை வந்துவிட்டால், அதை ஊதி பெரிது படுத்தவே சிலர் காலச் சூழலை பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதை சரி செய்ய யாரும் மெனக்கெடுவதில்லை.

சுந்தரேசனைப் பொருத்தவரை ‘போருக்குப் போகும் வெற்றிச்செல்வன் உயிரோடு திரும்பி வந்தால் பார்ப்போம்’ என்ற மனநிலை தான் அவரிடம் மேலோங்கி இருந்தது. “கல்யாணம் முடிஞ்ச கையோட என்னை தனியா விட்டுட்டு போறியா” என்று கேட்பது போல இருந்தது காவியாவின் பரிவான பார்வை. அவள் கண்கள் ஒளி மங்கிய சுடர் போல ஆனது. இந்த முதலிரவு, தாம்பத்திய உறவு இதையெல்லாம் தாண்டி நிறைய சந்தோசங்களை அவளுக்குத் தர வேண்டும். என தன் மனத்துள் நினைத்துக் கொண்டான் வெற்றிச்செல்வன்.

ஒவ்வொரு மணித்துளியையும் அவளுக்காகவே அர்ப்பணிக்க அவன் எத்தனித்தான். இரண்டு சக்கர வாகனத்தில் அவளை ஏற்றிக் கொண்டு நெடுந்தூரப் பயணம் செய்தான்.

வழியில் தென்படும் கடைத்தெரு எல்லாம் கூட்டிப் போனான். அவள் பிரியப்பட்டு கேட்கும் எல்லாவற்றையும் வாங்கி கொடுத்தான். போகும் வழியில் பக்கத்து ஊர் திருவிழாவிற்கு போனார்கள். ராட்டினம் ஏறினார்கள். அபாய கிணற்றுக்குள் சைக்கிள் ஓட்டுவதை வேடிக்கை பார்த்தார்கள். வித்தைக்காரனின் பேய் வீட்டுக்குள் புகுந்து அச்சத்தை அனுபவித்தார்கள். வீச்சு புரோட்டா வாங்கி உண்டார்கள். நுங்கு தின்று பதநீர் பருகினார்கள். சோப்பு நுரை போல திரவம் ஊற்றி வைத்த சின்னச் சின்ன கண்ணாடி குடுவைகள் வாங்கி, காற்றில் ஊதி பலூன் விட்டார்கள்.

எத்தனை தான் தங்க ஆபரணங்கள் அணிந்திருந்தாலும் கண்ணாடி வளையல்களின் மீது பெண்களுக்கு ஒரு தனி காதல் உண்டுதானே. நிறைய பொன் வளையல்களை வாங்கி காவியாவின் கைகளில் அணிவித்து அழகு பார்த்தான் வெற்றிச்செல்வன். ஒவ்வொரு நாளும் வீடு திரும்பியதும் மறுபடியும் சோகம் அவர்களை தொற்றிக் கொண்டது. இரண்டு நாள் கழிந்த வேகமே தெரியவில்லை. இருவரும் ஒரே அறையில் தூங்கினால் இளசுகள் தானே..உணர்ச்சிவசப்பட்டு விடுவார்கள் என்பதற்காக, அவர்கள் தனி தனி அறையில் தூங்கும்படி பார்த்துக் கொண்டார்கள் பெரியவர்கள்.

அவர்களைப் பொறுத்தவரை ஜோசியக்காரர் சொன்னதை பொய்யாக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். அப்படி ஒரு நம்பிக்கை அவர்களுக்கு. ஆனால் அந்த சின்னஞ்சிறுசுகளை இப்படி பிரித்து வைத்திருப்பது வெற்றிச்செல்வன் மீது சுந்தரேசனுக்கு உள்ள வெறுப்பு தான் காரணம் என்பது அங்கே யாருக்கும் தெரியாது.

மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து பயணத்திற்காக கிளம்பிக் கொண்டிருந்தான் வெற்றிச்செல்வன். காவியாவும் நேரத்தோடு எழுந்து வந்து அவனுக்கு காபி போட்டு கொடுத்தாள். சுடச்சுட இட்லி வைத்து கொடுத்தாள். அருகில் இருந்து ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து பண்ணிக் கொடுத்தாள். இன்னும் அரை மணி நேரத்தில் அவன் புறப்பட்டாக வேண்டும். அவனை வழி அனுப்பி வைக்க உறவுகளும், நட்புகளும் வாசலில் கூடியிருந்தன. கம்பீரமான இந்திய ராணுவத்தின் உடையை பெருமையோடு அணிந்து கொண்டு ஒவ்வொருவரிடமும் அவன் விடை பெற்றுக் கொண்டிருந்தான். காவியா மட்டும் அந்த அறையை விட்டு வெளியில் வரவே இல்லை.

வெற்றிச்செல்வன் அவள் இருக்கும் அறையின் பக்கமே திரும்பித் திரும்பி பார்த்தபடி இருந்தான். திடீரென தன் சட்டை பையில் விரல்களை விட்டு துலாவினான். ஏதோ ஒன்றை மறந்து விட்டது போல பாவனை காட்டிவிட்டு, காவியா இருக்கும் அறை நோக்கி விரைந்தான்.காவியா கதவருகே நின்று குமுறிக் குமுறி அழுது கொண்டிருந்தாள். அவளை சமாதானம் சொல்லித் தேற்ற அவனுக்குத் தெரியவில்லை. அப்படியே இறுகக் கட்டி அணைத்து..

நெற்றி, கண், மூக்கு, கன்னம், வாய்..என கண்முன் தெரியாமல் முத்தத்தை விதைத்தான்.

‘இரண்டு குடும்பங்களின் உறவுகளுக்குள் பிரிவினையை உண்டாக்குகிறவன். இரண்டு தெரு ஜனங்களுக்குள் பிரிவினையை உண்டாக்குகிறவன்.

ஒரு சமூகத்தில் வெறுப்பை உமிழ்ந்து பிரிவினையை உண்டாக்குகிறவன். சமூக நலனைக் கருதாமல் தேசத்தில் பிரிவினையை உண்டாக்குகிறவன். இரண்டு தேசத்தின் அமைதியை கெடுத்து பிரிவினையை உண்டாக்குகிறவன்’ என்று சுந்தரேசனைப் போல குறுகிய மனப்பான்மையோடு இங்கே நிறையபேர் உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கும் சேர்த்து தான் எல்லையைக் காக்க புறப்பட்டு போகிறார்கள் வெற்றி செல்வன் போன்றவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *