கடன் கொடுத்தார் நெஞ்சம் போல
கதையாசிரியர்: கே.என்.சுவாமிநாதன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: January 1, 2026
பார்வையிட்டோர்: 2,577
(2024ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கடன் கொடுத்தார் நெஞ்சம் போல காலையில் எழுந்ததிலிருந்து கார்த்திக்கின் மனம் ஒரு நிலையில் இல்லை. இரவில் தூங்குவதற்கு முன்னால், மனைவி மாலதியிடம் பெரிய சண்டை. அவள் சொன்னது மனதில் ஒலித்துக் கொண்டிருந்தது. “தர்மப் பிரபு மாதிரி சுதாகர் கேட்டப்போ 30000 ரூபாய் கொடுத்தீங்க. கொடுத்து ஒரு வருடம் முடியப் போவுது. கொடுத்த கடனை திருப்பிக் கேட்டா என்ன தப்பு?எப்பக் கேட்டாலும் நாளைக்குக் கேட்கிறேன் அப்படின்னு பதில் சொல்றீங்க. பணம் திரும்பி வரும் அப்படிங்கிற நம்பிக்கை எனக்கு இல்லை”.
கார்த்திக்கின் நெருங்கிய நண்பன் சுதாகர். ஒரு வருடத்திற்கு முன்னால், “கார்த்திக், இந்த மாதம் எனக்கு சம்பளப் பணம் ஒரு வாரம் தாமதமாகக் கிடைக்கும். முதல் வாரத்திலேயே வீட்டுக் கடனுக்கு 30000 ரூபாய் கட்டணும். ஒரு நாள் டிலே ஆனா கூட வட்டி போடுவாங்க. எனக்கு 30000 ரூபாய் கடனாக் கொடு. சம்பளம் வந்தவுடன் திருப்பித் தரேன்” என்றான்.
“அதனால என்னடா, பணம் தரேன். உனக்கு சம்பளம் வந்த பிறகு எப்ப முடியுமோ அப்ப கொடு” என்றான் கார்த்திக். கொடுத்து ஒரு மாதமாகியது. பணம் திருப்பித் தருவதைப் பற்றி சுதாகர் ஒன்றும் பேசவில்லை.
கார்த்திக்கின் மனைவி மாலதி அவனைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தாள். திவாகரிடம் கடனை திருப்பித் தரும்படி கேளுங்கள் என்று நச்சரித்தாள்.
பள்ளிப் பருவத்திலிருந்தே திவாகர் நெருங்கிய நண்பன். கடனைக் கேட்டு, நல்ல நண்பனை இழந்து விடுவோமோ என்ற பயம் கார்த்திக்கை கேட்க விடாமல் செய்தது. வாங்கிய கடனைத் திருப்பித் தர வேண்டும் என்று நினைக்க வில்லையே என்று அவனுக்கு நண்பன் மேல் வருத்தம்.
அன்று மாலை சுதாகர் கார்த்திக்கிடம், “எங்க சபாவிலே இன்னிக்கு கம்ப இராமாயணம் சொற்பொழிவு. போகலாம்” என்று கூட்டிச் சென்றான்.
“சொற்பொழிவு நன்றாக இருந்தது இல்லையா கார்த்திக்” என்று கேட்டான் சுதாகர்.
“ஆமாம், சுதாகர், கம்ப இராமாயணம் வரிகளைச் சொல்லி அதற்கு விளக்கமும் சொன்னார். அதுவும் எனக்குப் பிடித்த வரிகள், “கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்” கம்பர் காலத்திலேயே கடன் பிரச்சனை இருந்திருக்கு. ஆனால், கடனை வாங்கியவன், அதனை சொன்ன காலத்திலே திருப்பிக் கொடுக்கணுமே அப்படின்னு பயப்படறான். இந்த வரிகளை இப்ப கம்பர் எழுதியிருந்தா மாத்தி எழுதியிருப்பார், இல்லையா” என்று சிரித்தான் கார்த்திக்.
“எப்படி எழுதியிருப்பார் அப்படின்னு சொல்லறே” என்றான் சுதாகர்.
“கடன் கொடுத்தார் நெஞ்சம் போல” அப்படின்னு எழுதியிருப்பார். கடனைக் கொடுத்துட்டு, பத்து நாளில் திருப்பித் தரேன்னு சொல்லி, ஒரு வருடமா அதைப் பற்றின நினைவே இல்லாம கடன் வாங்கினவன் இருந்தால், கொடுத்தவன் என்ன பண்ண முடியும். நம்முடைய பணம் திரும்பி வருமா என்ற பதட்டம். கொடுத்த கடனைத் திரும்பிக் கேளுங்கன்னு மனைவி நச்சரிப்பு. திருப்பிக் கேட்டால் பால்யத்திலிருந்து பழகிய நல்ல நண்பனை இழக்க வேண்டி வருமோ அப்படின்னு பயம். கடன் கொடுத்தவன் நெஞ்சம் கலங்கித்தான் போகும்” என்று பெருமூச்சு விட்டான் கார்த்திக்.
அடுத்த நாள் கார்த்திக்கின் அலைபேசிக்கு வங்கியிலிருந்து குறுஞ்செய்தி வந்தது. “உங்கள் வங்கிக் கணக்கில் 30000 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. செலுத்தியவர் சுதாகர்.”
– 11-10-2024, தமிழ்நாடு, ‘இ’பேப்பர்.காம்.
![]() |
பொறியியல் பயின்று, அரசுத் துறை, பொதுத் துறை, தனியார் குழுமங்களில் பணி புரிந்து, பின்பு, 15 ஆண்டுகளாக கணிதமும், தர்க்கமும் கற்பித்து வந்தேன். “யு-டியூப் – ஸ்வாமிமேடிக்ஸ்” என்ற சேனலில், சுலப கணிதம் குறித்து ஆங்கிலத்தில் விளக்கி வந்தேன். கோவிட் ஊரடங்கு என்னை கதை, கட்டுரை, எழுத ஊக்கம் அளித்தது. கதைகள், கட்டுரைகள் வெளியான இதழ்கள் - தினமலர்-வாரமலர், கலைமகள், அமுதசுரபி, தினமணி, சிறுவர்மணி, கதிர், நம் உரத்த சிந்தனை,…மேலும் படிக்க... |
