கடத்து
அரங்கப்பட்டி கிராமத்தின் மண் பாதையில் அந்தக்கார் வந்து கொண்டிருந்தது.

“நேரா பக்திசார பட்டர் வீட்டுவாசல்ல காரை நிறுத்தி அவரை கோவிலைத் திறக்கச் சொல்லி நாம வந்தவேலையை கச்சிதமா முடிக்கணும்” என்றான் நிர்மல்.
இருவருக்கும் முப்பதுவயதுக்கு மேலிருக்காது. வாட்டசாட்டமான உடம்பு. திருட்டில் பல விதமான யுத்திகளைக் கையாண்டு வெற்றி கண்டவர்கள். இதுவரை வாகனங்கள் திருடுவது, வீட்டிற்குள்புகுந்து பணம் நகை திருடுவது என செய்துகொண்டிருந்தார்கள் இப்போது சிலை திருட்டில் கன்னி முயற்சி.
முன்கூட்டியே அரங்கப்பட்டி மோகனரங்கன் ஆலயத்தின் திருப்பணிக்காக அர்ச்சகர் பக்திசாரனுக்கு முப்பதாயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி நல்ல பெயர் பெற்றிருந்தார்கள். கோயிலுக்கு ஒருநாள் வந்து வணங்கிப்போக அனுமதி கேட்டிருந்தார்கள்.
“ஆகா திருப்பணிக்கு இப்படி ஒரு பெரும் தொகை கொடுத்திருக்கிற நீங்கள் அரங்கப்பட்டிக்குக் கண்டிப்பா வாங்கோ. லாண்ட்லைன் போன், செல்போன்லாம் இல்லை. பழக்கமில்லை. ஆச்சு அறுபது வயசு இனிமே எதுக்கு இந்த ஒண்டிக்கட்டைக்குன்னு உபயோகிக்கல. அதான் கடுதாசியாய் போட்டேன். உங்க வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
இப்படிக்கு
தாசன்
பக்திசாரன்.
கடிதத்தை பாண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்துப்படித்த நிர்மல் உரக்க சிரித்தான்,பிறகு அமலனை நோக்கி, “டேய் நாம் இப்போ தேசிகன், ராமானுஜன் என்கிற பேருல வந்திருக்கிறோம். அந்த பட்டரு சந்தேகப்படாதபடி பேச்சில் நடை உடை பாவனையில் நடந்துக்கணும்” என்றவன் சாலையின் இடப்பக்கம் வாய்க்கால் ஒன்று ஓடிக்கொண்டிருந்ததின் அருகே தெரிந்த மண் பாதையில் காரை நிறுத்தினான்.
ஜனநடமாட்டம் இல்லாத இடமாக இருந்ததும் அவர்களுக்கு வசதியாய்போய்விட்டது.
“எடுடா வேட்டி சட்டையை”.
“பட்டுவேட்டியா வாங்கி இருக்கலாமோ? இது பாலியெஸ்டர் வேட்டின்னு பாத்ததும் சொல்றமாதிரி ஒரு அசட்டுபளபளன்னு இருக்குது இதுக்கு மேட்சிங்கா சட்டையும் முழுக்கையில் வெள்ளை பாலியெஸ்டரா வாங்கிட்டோம்!.”
“ஆமாடா கொஞ்சநாழிப்பொழுது போட்டுக்கப்போறோம் அதுக்கு பட்டுவேட்டிக்கு துட்டு செலவழிக்கணுமா? இதே போதும். நாமம் போட்டுக்கிட்டுக் கிளம்புவோம். பூணலு நல்லவேளை நேத்திக்கே சென்னைல கடைல வாங்கிப்போட்டுக்கிட்டோம்!”.
வீட்டு வாசலில் கார் வந்ததும் அகமகிழ்ந்து சிரித்தபடி வீட்டினுள்ளிருந்து ஓடிவந்தார் பக்திசாரன் பட்டர்.
திருவிளையாடல்பட தருமிபோல கெச்சலான உடம்பு. கட்டுக்குடுமி. நெற்றியில் நாமம் பளிச்சிட்டது. முகத்திலேயே வெகுளித்தனம் தெரிந்தது. சற்றே தூக்கலான பற்கள் தெரிய கைகுவித்தார்.
நிர்மல். “பட்சி சாதுவா இருக்குது. கோயில் உள்ள போனதும் ஒரே தட்டு தட்டினாலே கீழ விழுந்திடும். விக்ரஹத்தை அமுக்கிட்டுக் கிளம்பிடலாம்” என்று கிசுகிசுத்தான்.
“வாங்கோ வாங்கோ..கார்த்தாலையே வருவீர்களோன்னு எதிர்பார்த்தேன். சாயரட்சை பெருமாளை சேவிக்கிறதும் ஸ்ரேஷ்டம் தான் வாங்கோ” என்று வாயாற வரவேற்றார் பக்திசாரன்.
“காரைக் கொண்டு கோயில் வாசல்ல நிறுத்திடலாம். நீங்க இப்பவே கோயிலுக்கு வாங்கோ எங்களோட” என்றான் அமலன்.
“நீங்க ஜோரா முகக்கவசமெல்லாம் போட்டுண்டு வந்திருக்கேள்! டவுன்காராளுக்கு எப்பவுமே சமூக அக்கறை ஜாஸ்திதான்” என்று பிரமிப்பு குரலில் தவழ பக்திசாரன் சொன்னார்.
“சமீபத்துல நடந்த திருவிழாக்கு கண்ட கண்ட கூட்டம் வந்து எல்லா இடமும் தொட்டிருக்கும். நிர்மல்! நீ நல்லா சானிடைஸர் போட்டுக்கிட்டு கோவில் உள்ள போ.. வைரஸ் பாதிப்பில் நம்ம போறாத காலம் ஏதும் வந்திட்டா என்ன செய்றது. அதான் சானிடைஸர் பாண்ட் பாக்கெட்டுலயே வச்சிக்க”.
கிசுகிசுத்தான் நிர்மல்.
“நேத்திலேருந்து கோயிலே வெறிச்சுன்னு இருக்கு நல்லவேளை இன்னிக்கு நீங்க வந்தேள்!”
“நல்லவேளை பார்த்து வர்ரதுதான் எங்க வழக்கம்”
“ஆங் காதுல சரியா விழலயே…இதான் கோயில். ரொம்பபழசு புதுப்பிக்க ரொம்ப செலவாகும் யாரும் இதுவரை முன்வரல்”.
”என்ன செலவானாலும் அதை நாங்க பார்த்துக்றோம் பெருமாளூக்குச் செய்றதுக்கு என்ன கணக்கு?பெருமாளே எங்களுக்கு அதாவது நமக்குத்தானே?”
”நன்னா சொன்னேள்.. அப்ப கார்லயே கிளம்பி நீங்க ரெண்டுபேரு வாங்கோ. நான் பொடிநடைல வந்துடுவேன் பக்கம்தான் கோயில்”
பக்திசாரன் பதிலுக்குக் காத்திராமல் சிக்கென்ற இடுப்பைச்சுற்றியிருந்த பஞ்சகச்ச வேஷ்டியின் விசிறிமடிப்பினிடையே செருகியிருந்த கோயில் கொத்துசாவி அசைய , அதை கைவிரலால் சரி செய்தபடி நடந்துபோக ஆரம்பித்தார்.
காரைக்கொண்டுவந்து கோயிலின் கீழ்ப்பக்க மதில் சுவர் அருகே நிறுத்தினார்கள். அக்கிரஹார வீடுகளில் யாரையும் வெளியே காணவில்லை. பசுமாட்டை ஓட்டிக்கொண்டு போனவன் மட்டும் கார்க்கண்ணாடியில் தன் கோரைத்தலை மயிரை சரி செய்து கொண்டு போனான்.
“என்னடா நடுங்கித்தொலக்கிறே? அல்சேஷன் நாய்களையே அடிச்சி நொறுக்கி இருக்கிறோம்? சரி இதோபார், நினைவிருக்கட்டும்…அமலா! நீ உள்ளே போனதும் நான் கோயில் மெயின் கதவை வெளிப்பக்கம் மூடிட்றேன். யாரும் வந்து விசாரிச்சாங்கன்னா அறநிலைத்துறையினர் ஏதோ கோயிலுக்கு உதவ பார்க்க வந்திருக்கிறதாயும் யாரும் உள்ளே போகக்கூடாதுன்னும் சொல்லிட்றேன். நீ கச்சிதமா வேலையை முடிச்சி தருமியை தட்டி ஓரமாய்போட்டுடு. அந்த விக்ரஹத்தோடு வா. வேலை முடிச்சதும் போன் செய்யி. உன போன் வந்த அப்புறம் தான் கதவைத் திறப்பேன். முக்கியமா சானிடைசர் கைக்குப் போடாம அங்கயும் அதையும் தொட்டுடாதே என்ன?”
“சரிடா நிர்மல். மறக்கமாட்டேன்”
“ஒகே… ப்ளான் பக்காவா இருக்குது”
அமலன் பாண்ட்பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த சுத்தியல் வெளியே தலைகாட்டாமல் இருக்க மேல் ஷர்ட்டை இழுத்து நன்கு மூடிக்கொண்டான். கிளம்பினான்.
“வாங்கோ ராமானுஜன். ஆமா தேசிகன் எங்கே?” என்று அப்பாவியாய் கேட்டார் கர்ப்பக்ரஹம் நோக்கி நடந்துகொண்டிருந்த பக்திசாரன்.
“அவன் கார்ல பர்சை வச்சிட்டு வந்துட்டான் தட்டுல பணம் போடணுமே. அதான் எடுத்துண்டு வரப் போய்ருக்கான் சுவாமி”
“பெருமாளுக்குப்பணம் போடலைன்னா என்ன. அவர் நம்மகிட்ட கேக்கறது நல்ல குணம்தானே?”
கர்ப்பக்ரஹ சயனக்கோல மோகனரங்கன்”என்னப்பா கைவரிசையை என்கிட்டயும் காட்டவந்துட்டியா?’ என்று கேட்பதுபோலிருந்தது.
மூலவர்..சாளக்ராம சிலை. ஹ்ம்..அது யாருக்குவேண்டும்!
உற்சவரைப்பார்த்தான்.
உற்சவர் ஜொலித்தார்.
“என்ன ஏதோ நினைவில் இருக்கேள் ராமானுஜன்? பெருமாளைப் பாருங்கோ. நெய்தீபத்துல எப்படி ப்ரகாசிக்கிறார் பாருங்கோ? சாந்தாகாரம் புஜக சயனம். பத்ம நாபம் சுரேசம்…”
பக்திசாரன் சஹஸ்ரநாமம் சொன்னது எங்கே காதில் விழுந்தது மனமெல்லாம் கோடிரூபாயை எண்ணிக்கொண்டிருந்தது.
“தேசிகன் வந்ததும் மறுபடி சேவை பண்ணி வைக்றேன். இந்தாங்கோ நெய்தீபம் கண்ல தொட்டு சேவிச்சிக்கோங்கோ” என்றார் அன்பும் அக்கறையுமாக.
அவர் குரலின் பரிவோ அல்லது அந்த இடத்தின் சூழ்நிலயோ அமலனை அந்த தூபக்காலில் சுடர்விட்டு எரிந்த நெய் தீபத்தை இருகைகளாலும் தொட்டு கண்ணில் ஒற்றிக்கொள்ளத்தூண்டியது.
அப்போது குபீரென கையில் நெருப்பு பற்றியது. சற்று முன் உள்ளங்கையில் தெளித்துக் கொண்ட சானிடைசரிலிருந்த ஆல்கஹால் நெருப்புக்குத் தோழன். அதனால் நெருப்பு உடனேயே மணிக்கட்டை இறுக்கிக் கொண்டிருந்த அந்த பாலியெஸ்டர் பட்டு சட்டைமீது பரவியது . பாலியெஸ்டர் வேஷ்டிக்கும் ஆசையாய் பற்றிக்கொள்ள..துணியும் உடல் தோலும் ஒன்றி இணைந்து நெருப்பில் கருக, தொடர்ந்து வேஷ்டியைப் பிடித்துக்கொள்ள பாக்கெட் வைத்த வேஷ்டிக்குள்ளிருந்த சானிடைசர் பாட்டில் குப்பென நெருப்பைக்கவ்விக்கொள்ள…
அந்த நெருப்பு ஜுவாலைகண்டு பக்திசாரன் பதறினார்.
“பெருமாளே இதென்ன சோதனை!” அலறினார்.
அமலன் கூச்சல்போட்டபடி கர்ப்பக்ரஹ கல்மண்டபத்தரையில் புரண்டு விழுந்தான். நெருப்பு செல்போனை மேய்ந்து கொண்டிருக்க, அலறியபடி திரும்பினான். தன்னிடமிருந்து வெளிப்பட்ட பேரொளியில் தெரிந்த மோகனரங்கனின் இதழோரச் சிரிப்பு அமலனை நிலைகுலைய வைத்தது.
“ஐய்யோ எரியுதே’ என்று வீறிட்டான். நெருப்பு இப்போது கேசத்தை முத்தமிட ஆரம்பித்தது.
பக்திசாரன் பெரியகுரலில்,
“யாராவது வாங்கோ தயவு பண்ணிவாங்கோ… நெருப்பு பத்திண்டு ஒரு உயிர் தவிக்கறது. பெருமாளே என்ன செய்வேன்?” என்று வாசலை நோக்கி வந்தார். கதவை மடார் மடார் எனத்தட்டினார். நிர்மல் திட்டப்படி கதவு வெளியே அடைத்திருந்தது. உள்ளிருந்து குரல் வெளியே போகாத அளவிலான பெரிய மரக்கதவுகள்.
நண்பனிடமிருந்து காரியத்தை முடித்து போன் வந்தாலே தவிர கதவைத் திறக்க வேண்டாமென எங்கோ பார்த்தபடி தொலைவில் நின்று கொண்டிருந்தான் நிர்மல்.