ஓர் இயக்கமும் ஒரு காரியதரிசியும்





(1976ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பொன்னுக்குட்டி அம்மானுக்கு மனத்திற்குள் ஒரு பிரளயம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பல பிரச்சினைகள் முரல் மீன்களாய் எகிறிப் பாய்ந்து கொண்டிருந்தன. இன்றைய கூட்டத்தில் அந்தப் பிரச் சினைகளில் சிலவற்றை அலசி ஆராய வேண்டுமென்று மனத்திற்குள் ஒரு முடிவெடுத்துக் கொண்டார்.

சாயந்தரம் ஆறு மணிக்குக் கூட்டம் என்றதினால் பின்னேரச் சீவலை வெகு துரிதமாக முடித்துக் கொண்டு கத்திக் கூட்டைக் களட்டும் பொழுதுதான் அவருக்குச் சட்டென ஒரு யோசனை வந்தது. தான் கோப்பறேசனுக்குக் கண்துடைப்பிற்காகக் கொடுக்கும் ஏழெட்டுப் போத்தல் கள்ளையும் ஒரு முட்டிக்குள் வாத்து வைத்துவிட்டு, மிகுதிக் கள்ளை வீட்டுக்குப் பின்னால் ஒளித்து வைத்த பின், தனது வாடிக்கைக்காரர் யார் யாரென்றும், அவர்களுக்கு எவ்வளவு எவ்வளவு கொடுக்க வேண்டுமென்பதையும் தனது மனைவி பூமணிக்கிழவி குக் கூப்பிட்டுச் சொன்னார். அத்தோடு தான் வீட்டில் வைத்துக் கள்ளு விற்று ‘கோப்பறேசன்’ ஒழுங்கு விதிகளுக்கு மாறான இந்த விடயம் தென்பதால், தனக்கு நம்பிக்கையான ஆட்களுக்கு மட்டுமே தெரியவேண்டும் என்பது அவரது நோக்கம். எனவே, பூமணிக் கிழவியைக் கூப்பிட்டு,
‘அறிமுகமில்லாத ஒருதருக்கும் கள்ளு விக்கவேண்டாம். கள்ளு விலைப்படாவிட்டாலும் பறவாயில்லை…’ என்ற ஒரு திட்டவட்டமான எச்சரிக்கையும் கொடுத்துவைத்தார்.
பொன்னுக்குட்டி அம்மான் கால்முகம் கழுவிக் கொண்டு வெளுத்த வேட்டியொன்றைக் கட்டி தோழில் ஒரு துவாயையும் போட்டுக் கொண்டு அடுத்த வீட்டுச் சீவல் தொழிலாளியான வேலுப்பிள்ளையையும் கூட்டிக் கொண்டு கள்ளுக் கோப்பறேசன் கூட்டத்திற்குப் போய்க் கொண்டிருந்தார்.
தனது கிராமத்துக் கள்ளுக் கோப்பறேசனில் நடக் கு ம் தில்லு முல்லுகளையும், மனேச் சர்மாரின் எழுந்தமான போக்குகளையும் பற்றி இன்றைக்கு நேருக்கு நேரே கேட்டு விட வேண்டுமென்று எண்ணிக் கொண்டார் பொன்னுக்குட்டி அம்மான்.
பொன்னுக்குட்டி அம்மான் போய்ச் சேரவும் கள்ளுக் போப்பறேசன் மனேச்சரின் கந்தோரில் கூட்டம் தொடங்கவும் சரியாக இருந்தது.
பொன்னுக்குட்டி அம்மான் வாயுக்குள் ஒரு புகையிலைக்காம்பைப் போட்டுக் கொண்டு கூட்ட நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
2
சீவல் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கக் காரியதரிசி வைரமுத்து எழுந்து சென்ற கூட்ட அறிக்கையை வாசித்தார். பனை பிரிக்கும் பொழுது காலில் கருக்கு வெட்டியதால் பொன்னுக்குட்டி அம்மான் சென்ற கூட்டத்திற்கு சமுகமாக முடியவில்லை எனவே சென்ற கூட்ட அறிக்கையை வெகு உன்னிப் பாகக் கவனித்துக் கொண்டிருந்தார்.
அறிக்கையை காரியதரிசி வைரமுத்து அவர்கள் வாசித்து முடித்ததும் அறிக்கை சரியென சபையோரால் ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, காரியதரிசி வைரமுத்து அவர்கள் பேசினார்
‘இன்று எமது கூட்டத்திற்கு எமது பகுதிக்குப் பொறுப்பான கூட்டுறவுப் பரிசோதகர் ஐயா அவர்கள் வந்திருக்கின்றார்கள். அவர்கள் இன்று எமது அதாவது கள்ளிறக்கும் தொழிலாளர்களின் கூட்டுறவுச் சங்கத்தைப் பற்றியும் அதன் நோக்கத்தைப் பற்றியும் அதன் முன்னேற்றத்திற்கு நாம் எப்படி உழைக்க வேண்டும் என்பது பற்றியும் உரையாற்றுவார். ஐயா அவர்களை வந்து உரையாற்றும்படி மேற்படி சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன்’, என்று கூறிவிட்டு கூட்டுறவுப் கூட்டுறவுப் பரிசோதகர் குமாரசாமி அவர்கள் அங்கு வந்திருந்த சீவல் தொழிலாளர்களுக்கு முன்பாக வர ஒதுங்கி நின்று வழிவிட்டு, பின்பு போய் தனது கதிரையில் அமர்ந்துகொண்டார்.
கூட்டுறவுப் பரிசோதகர் குமாரசாமி அவர்கள் முன்னுக்கு வந்து,
‘நான் இன்று இந்தச் சீவல் தொழிலாளர் மத்தியில் கூட்டுறவு முறையில் தவறணை எப்படிச் சிறப்பாக இயங்க முடியுமென்றும் அதற்கு நீங்கள் எந்தெந்த வகையில் உதவ முடியு மென்றும் சிறிது சொல்லலா மென நினைக்கின்றேன்… எனது பேச்சைக் கடைசிவரை கேட்டு விட்டு ஏதாவது கேள்வி கேட்க வேண்டுமாயின் அதை வெட்கப் படாது, பயப்படாது கேட்கும்படி வேண்டிக் கொள்கின்றேன்’ என்று சொல்லிவிட்டு கூட்டுறவுத் தவறணை முயற்சியில் உள்ள சிறப்பம்சங்களை எடுத்துக் கூறினார். தொழிலாளருக்குரிய போனஸ், மற்றும் கடன்வசதிகள், காப்புறுதித் திட்டங்கள் முதலியனவற்றைப் பற்றிச் சொல்லிவிட்டு இறுதியாகத் தான் தொழிலாளருக்கு ஒரு வேண்டுகோள் விடுப்பதாகச் சொல்லிவிட்டு,
‘நீங்கள் கூட்டுறவுத் தவறணை முறையைச் சிறப்பாகக் கொண்டு வரவேண்டுமென்றால் தாம் தாம் சீவும் கள்ளை வீட்டில் வைத்து விற்காது முழுக் கள்ளையும் தவறணைக்கே கொடுத்து அதன் வளர்ச்சிக்கு உதவவேண்டும் என்றும் யாராவது வீட்டில் வைத்துக் கள்ளு விற்கிறார்களென்று எமக்குத் தகவல் கிடைக்குமானால் அவர்களது பாளைகள் அனைத்தும் வெட்டப்படு மென்பதையும் இங்கு கூறிவைக்க விரும்புகின்றேன்’ என்றார். அவர் மீண்டும் தொடர்ந்து, ‘இந் நாட்டுச் சீவல் தொழிலாளர்களையும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து, அரசாங்க உத்தியோகத்தர்களின் அந்தஸ்த்திற்கோ அல்லது அதற்கும் மேலான அந்தஸ்திற்கோ உயர்த்துவதுதான் அரசாங்கத்தின் திட்டம்’ என்றும் சொல்லி விட்டுத் தன் ஆசனத்தில் போய் அமர்ந்தார்.
கூட்டுறவுப் பரிசோதகர் குமாரசாமி தனது ஆசனத்தில் போய் அமர்ந்தபொழுது, காரியதரிசி வைரமுத்து எழுந்து வந்து ‘கூட்டுறவுப் பரிசோதகர் ஐயா’ வுக்கு நன்றி தெரிவித்து விட்டு, யாராவது கேள்விகள் கேட்க விரும்பினால் கேட்கலா மென்று சொன்னார்.
காரியதரிசி அப்படிச் சொன்னதுதான் தாமதம், பொன்னுக்குட்டி அம்மான் எழுந்து நின்று சால்வையை உதறி இடுப்பில் கட்டிவிட்டு வாயுக்குள் வைத்து உமிழ்ந்து கொண்டிருந்த புகையிலைக் காம்பைத் துப்பிவிட்டுக் கேட்டார்.
‘பரிசோதகர் ஐயா அவர்களே மரவரி இருக்கேக்கை நாங்கள் எங்களுக்குத் தேவையான மரங்களை வாங்கிச் சீவி எங்களுடைய சீவியத்தைத் தளபடி இல்லாமல் கொண்டு போனம். ஆனால் இந்தத் தவறணை முறை வந்ததும் ஒரு ஆளுக்கு இத்தனை மரம்தான் சீவமுடியும் எண்டு கட்டுப்படுத்தியிருக்கினம்… இது சரியோ…? மூன்று நாலு மரங்களைச் சீவி எங்கடை சீவியத்தைக் கொண்டு போறதெப்படி.. ? எங்களை அரைப்பட்டினி போட்டு எமது சமூகத்தை நசுக்குவதற்குக் கொண்டுவந்த திட்டமோவென யோசிக்க வேண்டியிருக்கு… அது போக, தவறணையில் நாங்கள் கொண்டுபோய்க் குடுக்கிற கள்ளு முழுவதையும் எடுப்பதில்லை? இருப்பிருக்கு கள்ளுச் சரியில்லை…யெண்டெல்லாம் சொல்லி எம்மைத் திருப்பி விடு கின்றார்கள். இந்தமாதிரியான நிலைமையில் நாங்கள் வீட்டில் வைத்து கள்ளை விற்பது தவிர்க்க முடியாதது… வீட்டில் கள்ளு வைத்திருந்தால் கோப்பறேசன்காறர் வந்து வழக்கு எழுதுகின்றார்கள். இந்த அநியாயத்திற்கு ஒரு முடிவு வேண்டும் அல்லது நாங்கள் சீவிக் கொடுக்கும் கள்ளு முழுவதையும் எடுப்பதற்கு கோப்பறேசன்காரருக்கு உத்தரவு கொடுக்க வேண்டும் அல்லது இந்தக் கோப்பறேசனின் வளர்ச்சிக்கு எம்மால் உதவி செய்ய முடியாது…’ என்றார் பொன்னுக்குட்டி அம்மான்.
பொன்னுக்குட்டி அம்மானின் இந்த ஆவேசமான பேச்சுக்கு அனேக தொழிலாளர்களிடமிருந்து ஆதரவு கிடைத்ததுபோல் அவர்கள் எல்லோரும் பொன்னுக்குட்டி அம்மானைப் பார்த்துத் தலையாட்டினார்கள்.
இந்தக் கேள்விக்குத் தானே பதிலளிப்பதாக காரியதரிசி வைரமுத்து எழுந்து முன்னுக்கு வந்து,
‘பொன்னுக்குட்டி என்ற அங்கத்தவர் கேட்ட கேள்வியைப் போலவே ஆரம்பத்தில் எம்மைப் பலர் கேட்டனர். நாங்கள் ஒவ்வொரு தவறணைக் களிலும் ஏற்படும் விற்பனையைப் பொறுத்து அங்கத்தவர்களுக்குக் கொடுக்கும் தொகையை ரங்களின் காலத்துக்குக் காலம் கூட்டிக்கொண்டே வருகின்றோம். காலம் காலமாக யுகம் யுகமாக தனிப்பட்ட முதலாளி மாருக்குத் தம்மைப் பிளிந்து தமது வாழ்வை தானம் பண்ணிக் கொடுத்த தொழிலாளர்களுக்கு இந்த எமது கூட்டுறவு முயற்சி ஆரம்பத்தில் சிறிது கஸ்டமாகத்தான் தோன்றும். ஆனால், போகப் போக எமது அரசாங்கம் விஸ்தரிக்க இருக்கும் பல பல நோக்கங்களுக்கும் திட்டங்களுக்கும் கீழ் அடையப் போகும் நன்மைகளை அனுபவிக்கப் போகின்றவர்களும் எமது அங்கத்தவர்களே. எனவே இந்த ஆரம்பக் கட்டத்தில் முகம் கொடுக்கும் சிறு சிறு கஸ்டங்களைப் பாராது பாரதூரமாக எடுக்காது இந்தக் கூட்டுறவு முயற்சிக்கு தம்மாலான ஒத்துழைப்பை நல்கும் வண்ணம் எமது சங்கத்தின் சார்பிலும் எனது சார்பிலும் பொன்னுக்குட்டி அவர்களைக் கேட்டுக் கொள்ளுகின்றேன்’ என்று கூறி விட்டு காரியதரிசி அவர்கள் கூட்டுறவுப் பரிசோதகரைப் பார்த்தார். அவர் ஒரு புன் முறுவலோடு தலையை ஆட்டி ஆமோதித்தார்.
பொன்னுக்குட்டி அம்மான் மீண்டும் எழுந்து. ‘காரியதரிசி அவர்கள் சொன்னார்கள் அரசாங்கம் எங்களுடைய முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு பல திட்டங்களை வகுத்து வைத்திருக்கின்றதென்று. அதையீட்டு எனக்கு மிகவும் சந்தோசம். ஆனால், அந்தத் திட்டங்கள் நடைமுறையில் வரும் வரை நான் மூன்று பனைகளோடு காலம்விட முடியாது. எனவே , எமது பகுதியில் கொஞ்சக் காலத்துக்காவுதல் நாம் கொடுக்கும் கள்ளு முழுவதையும் தவறணையில் ஏற்றுக் கொள்ள காரியதரிசி அவர்கள் ஆவன செய்ய வேண்டும் அல்லது பாளை வெட்டும் விசயத்தைத் சிறிது காலத்திற்கு தள்ளிவைக்க வேண்டும்’ என்றார்.
இதற்குப் பதிலளித்த காரியதரிசி வைரமுத்து, பொன்னுக்குட்டி அம்மானின் வேண்டுகோளைப் பற்றி முகாமையாளரின் கவனத்துக்குக் கொண்டு வருவதாகச் சொன்னார்.
அத்தோடு கூட்டம் முடிவுற்றது. பொன்னுக்குட்டி அம்மான் துவாயைத் தூக்கித் தோழில் போட்டுக்கொண்டு வாய்க்குள் மீண்டும் ஒரு கையிலைக்காம்பை முறித்துப் போட்டபடியே வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தார்.
அவரது மனத்திலிருந்த பிரச்சினைகள் எவ்வளவோ குறைந்தது போல அவரின் மனது மிகவும் இலேசாக இருந்தது.
3
சாப்பாட்டிற்குப் பின் பொன்னுக்குட்டி அம்மான் நித்திரையால் எழுந்து தேனீரைக் குடித்துவிட்டு பின்னேரச் சீவலுக்கு ஆயத்தமாக தனது கத்திகளைத் தீட்டிக் கொண்டிருந்தார்.
அப்பொழுதுதான் பக்கத்து வீட்டு வேலுப்பிள்ளை ஓடிவந்து ‘அம்மான், அம்மான்’ என்று கூப்பிட்டான். பொன்னுக்குட்டி அம்மான் எழுந்து போய் என்ன வென்று கேட்டார்.
‘அம்மான் உங்களிடைய பாளையெல்லாம் வெட்டி விழுத்திக்கிடக்கு. உந்தக் கோப்பறே சன்காறர்தான் செய்திருக்கிறாங்கள்…’
‘என்ன பாளையெல்லாம் வெட்டி விழுத்திக் கிடக்கோ…’ பொன்னுக்குட்டி அம்மானுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் தான் சீவும் வளவுக்குள் ஓடிப் போய் தனது பனைகளை அண்னாந்து பார்த்தார். பனைகள் அத்தனையும் மொட்டையாக முட்டிகள் வெறும் பனை மட்டைகளில் கிடந்து காற்றுக்கு ஆடிக் கொண்டிருந்தன. பாளைகள் அத்தனையும் துண்டு துண்டாக, பசியால் வாடிச் சுருண்டு போய்க் கிடக்கும் சின்னஞ் சிறு குழந்தைப் பிள்ளைகளைப் போல வாடி, வதங்கித் துவண்டு, சுருண்டுபோய் பொன்னுக்குட்டி அம்மானின் பனைமரங்களின் கீழ் அங்கும் இங்குமாகச் சிதறிக் கிடந்தன.
அந்தப் பிஞ்சுப் பாளைகளைப் பார்த்ததும் பொன்னுக்குட்டி அம்மானுக்கு ஆத்திரமும், அழு கையும் வந்தது.
‘ஏன் வேலுப்பிள்ளை, உந்த கோப்பறேசன்காறருக்கு நான் இஞ்சை கள்ளு விக்கிறது எப்பிடித் தெரியும். அவன் காரியதரிசிக்கு நான் கூட்டத்திலை என்ன சொன்னனான். அவங்கள் எந்தப் பக்கத்தாலை போறாங்கள்…?’ பொன்னுக்குட்டி அம்மானுக்கு ஆவேசமாக இருந்தது.
‘அவங்கள் உங்கடை பனைகளைத்தான் ஏறி வெட்டிப் போட்டு தவறணைப்பக்கமாகப் போறாங்கள்… இதை நாங்கள் காரியதரிசிக்குக் கூட்டிக் கொண்டு வந்து காட்டவேணும் அம்மான்… இதைச் சும்மா விடக்கூடாது. நீங்கள் போய் ஒருக்கா காரியதரிசியைக் கூட்டிக்கொண்டு வாருங்கோ…’ என்றான் வேலுப்பிள்ளை.
பொன்னுக்குட்டி அம்மான் காரியதரிசியைக் கூட்டிக் கொண்டு வந்து காட்டுவதற்காக ஓட்டமும் நடையுமாக காரியதரிசியின் வீட்டை நோக்கி ஓடினார். அவரின் கையில் வெட்டிய பாளைத் துண்டு ஒன்று இருந்தது.
அப்பொழுதுதான் காரியதரிசியின் வீட்டுப் பின்புறத்திலிருக்கும் படலையைத் திறந்து கொண்டு தபால்காரச் சோமுவும் கச்சேரிக் கிளாக்கர் தம் பையாவும் வாயைத் துடைத்து ஏவறை விட்டுக்கொண்டு சைக்கிளில் ஏறிப் போறார்கள்.
பொன்னுக்குட்டி அம்மான் திகைத்துப்போய் அவர்களையே பார்த்துக் கொண்டு நிற்கிறார்.
பொன்னுக்குட்டி அம்மானின் கண்கள் சிவந்து அனல் கக்க, பற்கள் ஒன்றோடொன்று நெருடுகின்றன. அவர் கையிலிருந்த பாளைத்துண்டு அவரை அறியாமல் இரண்டு மூன்று துண்டுகளாய் முறிந்து, கசங்கி விழுந்தன.
– மல்லிகை, ஆகஸ்ட் 1976.