ஓடிப்போனவள்




தன் பேரப்பிள்ளையைப் பார்த்த மகிழ்ச்சியில் ரத்தினத்திற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவளுக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. இந்தக் காலைப்பொழுதில் இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியை அவள் எதிர்ப்பார்க்கவில்லை. வீடு தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தவனைத் தன் வீடுவரை அழைத்துவந்து விட்டுவிட்டுச் சென்ற கலாவை கையெடுத்துக் கும்பிட்டாள் இரத்தினம். கும்பிட்டக் கையோடு தன் பேரப்பிள்ளையின் இரண்டு கைகளையும் இறுக்கப் பிடித்துத் தன் கண்களில் ஒத்திக்கொண்டாள். இரண்டு கைகளுக்கும் மாற்றி மாற்றி வெற்றிலைப் பாக்கு போட்டு சிவந்த தன் வாயால் முத்தம் கொடுத்தாள் இரத்தினம். அப்போது அவள் மனதில் தேங்கிக் கிடந்த ஏங்கங்களும் பாசமும் பொங்கி வழிந்துகொண்டிருந்தன. அவற்றையெல்லாம் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தமுடியாத தவிப்புவேறு அவளுக்கு அணைபோட்டுக் கொண்டிருந்தது.
முப்பது ஆண்டுகளுக்கு முன் தன் குடும்பத்திற்கு ஒரு தீராத இழுக்கை உண்டாக்கிவிட்டுக் கல்லூரியில் தன்னோடு படித்துக்கொண்டிருந்த எவனோ ஒருவனுடன் ஓடிப்போன பாக்கியலட்சுமியின் ஒரே மகன் இவன்தான் என்பதை ரத்தினம் நம்புவதற்கே பலமணி நேரங்கள் ஆனது. அவன் உருவத்தில் தன் மகளின் முகச்சாயல் தெரிந்தது. பாக்கியலட்சுமி வீட்டைவிட்டு ஓடிப்போன பத்தாவது ஆண்டில் இறந்துபோனார் இரத்தினத்தின் கணவர் இலட்சுமணன். அவர் இறக்கும் தருவாயில் இரத்தினத்திடம் ‘எப்படியாச்சும் அவள கண்டுபிடிச்சாந்து உம் பக்கத்துல வெச்சிக்கோ, அவ போன ஆறு மாசத்துலயே அவமேல இருந்த கோவமெல்லாம் எனக்கு போயிடுச்சி, அத இவ்ளோ நாளா நான் உங்கிட்ட பகிந்துக்கல, தயவு செய்து அவள எப்பிடினா கண்டுபுடிச்சி உங்கூட வெச்சிக்கோ ரத்னம், அவ எங்க எப்பிடி கஸ்டப்படறாளோ… பாவம்…’ என்று கூறிவிட்டுத்தான் தன் உயிரை விட்டார்.
அவள் செய்துவிட்டுப் போனது மிகப்பெரிய தவறு. அவளை மீண்டும் ஏற்றுக்கொள்ளவே கூடாது என்பதில் ரத்தினத்தையும் லட்சுமணனையும்விட பாக்கியலட்சுமியின் அண்ணன்கள் இரண்டுபேரும் மிகவும் உறுதியாக இருந்தார்கள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ரத்தினத்தையும் லட்சுமணனையும் மிரட்டுவதோடு மட்டுமல்லாமல் அவள் குறித்த எந்த தகவலையும் தெரிந்துகொள்ளும் முயற்சிக்குக்கூட தடைப்போட்டிருந்தனர் பாக்கியலட்சுமியின் அண்ணன்கள். அவள் போன ஐந்து ஆறு ஆண்டுகளில் அவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்துபோனது. அடுத்த சில மாதங்களில் இரண்டு பையன்களும் தனிக்குடித்தனம் போய்விட ரத்தினமும் லட்சுமணனும் ஒரு சிறிய அறையில் வசிக்கத் தொடங்கினர். அவர்களின் தேவையை அவர்களே பூர்த்தி செய்துகொண்டனர். அப்பா அம்மா என்ன செய்கிறார்கள், சாப்பிடார்களா, சாப்பிடவில்லையா என்றுகூட கேட்பதற்கு மனமில்லாத மனைவிதாசன்களாக மாறிவிட்டிருந்த தங்களின் பிள்ளைகளின் நிலையை நினைத்து ரத்தினமும் லட்சுமணனும் வருத்தப்பட்டாலும் தங்களுக்குள் பாக்கியலட்சுமி பற்றிய நினைவுகளையோ, தற்போது அவள் எங்கிருக்கிறாளோ? எப்படி இருக்கிறாளோ என்பது போன்ற கருத்துகளைக்கூட பகிர்ந்துகொள்ளவில்லை. ஆனால் இருவரும் அவளைப்பற்றி தனித்தனியே மனதுக்குள் நினைத்து நினைத்து உருக்கிக்கொண்டிருந்தனர். தான் சாவதற்குள் தன் மகள் எப்படியும் வீடுதேடி வந்துவிடுவாள். அவளை எதிர்ப்பதுபோல் ஒரு பாசாங்கு காட்டிவிட்டு கொஞ்சகாலத்தில் ஏற்றுக்கொள்ளலாம் என்று நினைத்திருந்த லட்சுமணனுக்கு திடீர் சீக்கு வந்து இறப்பின் பிடியில் சிக்கிக்கொள்ள தன் மனதில் இருந்ததை மனைவியிடம் சொல்லிவிட்டார்.
அவர் போனபிறகு தன் ஊரைக் கடந்துபோகும் பஸ்களில் ஏதாவது ஒன்றில் பாக்கியலட்சுமி வந்து இறங்குவாள் என்று அந்தக் கிராமத்துப் பேருந்து நிறுத்தத்தில் பலநாட்கள் காத்துக்கிடந்திருக்கிறாள் இரத்தினம். எத்தனையோ ஊர்களில் இருந்து எத்தனையோ மனிதர்கள் வந்துபோனார்கள். ஆனால் பாக்கியலட்சுமி மட்டும் வரவேயில்லை. அவள் அந்த ஊரை விட்டுப் போகும்போதே அப்பா அம்மாவிற்கு பெரியதொரு அவப்பெயரை விட்டுச் செல்கின்றோம், ஆகையால் இனி இந்த ஊருக்குள் காலடி எடுத்து வைக்கக்கூடாது. அப்படி இனிமேல் நாம் போனால் ஓடிப்போனவள் திரும்பி வந்துவிட்டாள் என்று ஊரார் பேசுவார்கள். அப்போதெல்லாம் அப்பாவோ அம்மாவோ அண்ணன்களோ அதற்கு ஒரு அசட்டுச் சிரிப்பையா உதிர்ப்பார்கள். என்னால் எப்படியும் தேவையற்ற சண்டைகளும் சச்சரவுகளும் வரலாமில்லையா என்று தன் மனதிற்குள் எண்ணிக்கொண்டுதான் என் மக இந்த மண்ணை இன்னும் மெரிக்கவில்லையோ என்று நினைத்துக்கொண்டாள் இரத்தினம். பாக்கியலட்சுமியின் வயதை ஒத்த பெண்கள் எல்லாம் பல ஊர்களுக்குத் திருமணம் செய்துகொண்டு போய்விட்டார்கள். அவர்கள் தங்கள் கணவன்மாரோடும் பிள்ளைகளோடும் பிறந்த ஊருக்கு வருவதைத் தன் வீட்டு வாசலில் நின்றுகொண்டு பார்ப்பாள் இரத்தினம். அப்போதெல்லாம் பாக்கியலட்சுமியைக் கற்பனை செய்துகொள்வாள். தெருவில் வரும் பெண்கள் இரத்தினத்தின் வீட்டைக் கடக்கும்போதுதான் அவள் சுயநினைவிற்குத் திரும்புவாள். ஒருமுறை இப்படித்தான் வழியில் பாக்கியலட்சுமியின் ஒத்த வயதுடைய ஒரு பெண்ணை, வாமா.. பாக்கியம் என்று வாய்கொள்ள அழைத்துவிட்டுத் தன் வாய்மீதே குத்திக்கொண்டு வீட்டிற்குள் போய் அழுதிருக்கிறாள். இந்த கற்பனைக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும்விதாகத்தான் இருந்தது பாக்கியலட்சுமியின் மகன் சந்தானத்தின் வருகை.
தன் வீட்டு வாசலில் நின்றபடியே பக்கத்து அக்கத்து வீட்டுப் பெண்களையெல்லாம் கூப்பிட்டுத் தன் பேரப்பிள்ளையை அறிமுகப்படுத்தி வைத்தாள் இரத்தினம். கண்டும் காணாததுபோல் அவள் வீட்டைக் கடந்துபோகும் சந்தானத்தின் தாய்மாமனைச் சுட்டிக்காட்டிய இரத்தினம், அவர்களுக்கும் தனக்கும் எந்த ஒட்டும் உறவும் இல்லை என்பதை அவன் காதில் இரகசியமாகக் கிசுகிசுத்தாள். வீட்டு வெளித்திண்ணையில் அமர்ந்துகொண்டிருந்த சந்தானத்தை அந்தக் கிராமத்துப் பெண்கள் எல்லாம் மொய்த்துக்கொண்டு பாக்கியலட்சுமி குறித்த கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்களின் கேள்விக்கெல்லாம் முகம் சுளிக்காமல் பதிலளித்துக் கொண்டிருந்தான் அவன். திடீரென்று தன் மகளிடம் பேச வேண்டுமென்ற எண்ணம் இரத்தினத்திற்குத் தோன்றவே, ‘எப்பா.. உங்கையில வெச்சிகினு இருக்குறியே போனு.. அதக் கொஞ்சம் போட்டுக் குடுப்பா…உங்கம்மா கொரல கொஞ்சம் கேக்குறன்…’ என்று கெஞ்சலாய்க் கேட்ட இரத்தினத்தைப் பார்த்த சந்தானத்தின் முகம் வாடிப்போனது. அவன் அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்து நிற்க, மீண்டும் அவனைக் கெஞ்சலாய்க் கேட்டாள் இரத்தினம். தன் மனதைத் தேற்றிக்கொண்ட சந்தானம் ‘அம்மா இப்ப இல்ல பாட்டி… அவங்க நான் பொறந்த ரெண்டாவது வருசமே இறந்துபோயிட்டாங்களாம்…உங்கள விட்டுப் பிரிந்து வந்துட்டத எண்ணி எண்ணி வருத்தப்பட்டிருக்காங்க. அப்பா எவ்வளவோ சமாதானம் செஞ்சி பாத்திருக்காரு. கடைசியா உங்க ஊருக்கும் போகச் சொல்லி இருக்காரு. அதையெல்லாம் அம்மா காது கொடுத்துக் கேக்கலையாம். அப்பா வேலைக்குப் போயிருந்த நேரமா பாத்து அம்மா தூக்குப் போட்டுகிட்டாங்களாம். என்னோட அழுகைக் குரல் கேட்டு பக்கத்து வீட்டுக்காரவங்க வந்து பாத்தப்போ அம்மா இறந்துபோயிருந்தாங்களாம். அன்னையிலயிருந்து எனக்கு எல்லாமே அப்பாதான். அவரு எனக்காக இன்னொரு கல்யாணம்கூட செஞ்சிக்கல.. என்று சந்தானம் முடிக்க அவனைக் கட்டித்தழுவிக்கொண்டு கதறிக்கொண்டிருந்தாள் இரத்தினம்.
தன் கணவனுக்கு முன்னமே மகள் இறந்துபோயிருக்கிறாளே என்று அவள் மனது துடித்தது. அவள் எங்கு இருக்கிறாள் என்ற இரகசியத்தைக்கூட சொல்லாமல் போய்விட்டதால் இரத்தினம் தேடுவதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அவளைக் கூட்டிக்கொண்டு போனவன் ஏதோ வெளி மாவட்டத்திலிருந்து வந்து விடுதியில் தங்கிப் படித்துக்கொண்டிருந்தவன் என்பதால் அவன் எந்த ஊர் என்ன பேர் என்பதுகூட இரத்தினத்தின் குடும்பத்திற்குத் தெரியாமல் இருந்தது. அவள் கூடப் படித்த உள்ளூர்க்காரப் பிள்ளைகளும் அவர்கள் குறித்த தகவல் ஏதும் தங்களுக்குத் தெரியாது என்று கூறிவிட்டனர். பாக்கியலட்சுமியின் திருமண ஏற்பாட்டின்போதுதான் அவள் ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டுக் காணாமல் போனாள். அதோடு இரத்தினத்தின் குடும்பத்தில் அவள் நினைவுகளும் காணாமல் போயிருந்தது.
பாட்டியைப் பார்த்துவிட்ட மகிழ்ச்சியில் இரண்டு நாட்கள் அவளோடு தங்கியிருந்த சந்தானம் தன் ஊருக்குப் புறப்படத் தயாரானான். இரத்தினம் இருக்கும் அந்த சிறிய வீட்டில் உடை மாற்றிக்கொண்டு வெளியில் வந்தான் சந்தானம். கையைப் பிடித்துக்கொண்டு அவனோடு புறப்படுவதற்குத் தயாரானாள் இரத்தினம்.