ஒற்றை கூடு
கதையாசிரியர்: தில்சாத் எ.எச்.எம்.
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: March 31, 2026
பார்வையிட்டோர்: 215

கதிரவனின் முதல் கதிர்கள், கடற்கரையோர அடுக்குமாடிக் கூட்டின் ஜன்னல்களை மெல்லத் தழுவி, சாதனாவின் கனவை ஒரு மென்மையான தூரிகையால் வருடியது.
“அவருக்குன்னு தனி பிளாட்டு இருக்கு, அவங்க அம்மா அப்பா அவங்கட சொந்த கிராமத்துல இருக்காங்க, உனக்கு எந்தத் தொல்லையும் இல்ல, கண்ணு, ஒத்துக்கோ கல்யாணத்துக்கு,” என்று அம்மாவின் குரல், கிராமத்து நிலவொளியைப் போல அவள் மனதில் ஒலித்தது. “என்னம்மா, நீங்க உங்கள விட்டுட்டு எப்படி அந்த ஊருக்கு போவேன், அதுவும் அது பெரிய நகரம் ம்ம், எனக்கு யாரைத் தெரியும்?” என்று கூறினாள், ஒரு பறவை கூட்டை விட்டுப் பறக்கத் தயங்குவது போல. “போனா பழகிடும், நீதான் பழகணும், நீயும் எல்லோரடையும் நல்லா பேசுவாயே,” என்ற அம்மாவின் ஆறுதல், காற்றில் கரையும் மலரின் மணம் போல, அவள் தூக்கத்தைக் கலைத்தது. உடனே கண் விழித்த சாதனா, சுற்றும் பார்த்தாள்.
அறையில், மேசையில் சூடு குறைந்த டீ, அமைதியாகக் காத்திருந்தது. அருகே, கடிக்கப்படாத சிக்கன் சாண்ட்விச், ஒரு பயணியின் பயணச் சின்னமாக அமர்ந்திருந்தது. அறையை விட்டு வெளியே பார்த்தாள் கணவன் வழமைபோல வேலைக்குச் சென்றுவிட்டிருந்தான். இவள் இங்கே புதிது என்பதால், அபார்ட்மென்ட் வாழ்க்கையின் கான்கிரீட் கூடு, ஒரு அந்நியப் பறவையின் கூட்டைப் போல இன்னும் பழகவில்லை. அதனால், கணவன் காலையில் அவளைத் தொந்தரவு செய்யாமல், அன்பின் அடையாளமாக டீயையும் சாண்ட்விச்சையும் மேசையில் வைத்துவிட்டுச் சென்றான்.
டீயை மெல்ல உறிஞ்சியவள், சாண்ட்விச்சை முழுதும் கடிக்காமல், மேசையில் வைத்துவிட்டு, வெல்கனிக்குச் சென்றாள், பறவை கூட்டை விட்டு வெளியேறுவது போல. அருகில், கடற்கரையின் காற்று, அலைகளின் பாடலுடன் சத்தமாய் மோதியது. ஜன்னல் கம்பிகள், கடலின் உப்பில் துருப்பிடித்து, காலத்தின் கதைகளைச் சுமந்து நின்றன. காற்றோடு உப்பு கலந்து வருவதால், அதனைத் தன் கைகளால் தொட்டுப் பார்த்தாள். துருப்பிடித்த துகள்கள், அவள் விரல்களில் ஒட்டிக்கொண்டு, கடலின் ரகசியங்களை பேசியது.
அருகில் நிற்கும் கட்டிடங்களை, வழமைபோலப் பார்த்தாள். கயிற்றில் காயும் ஆடைகள், காற்றில் ஆடி, வண்ணத்துப்பூச்சிகளின் சிறகுகளைப் போல பறந்தன. மூடிய ஜன்னல்கள், உள்ளிருக்கும் வாழ்க்கைகளின் கதைகளை மறைத்து, மௌனத்தின் திரையை விரித்தன. காற்று வாங்கும் சிலர், காதல் செய்யும் தொலைபேசிகளின் மெல்லிய முனகல்கள், காற்றில் கலந்து, ஒரு மென்மையான இசையை உருவாக்கின. வெல்கனிகளில் நின்று உடைகளைக் கழுவும் வயோதிபர்கள், வாழ்க்கையின் இறுதியை உணர்த்தினர்.
கண்ணெட்டிய சிறு பாதையில், தள்ளுவண்டிகளில் பொருட்களை கூவி விற்கும் சிறு வியாபாரிகள், நகரத்தின் இதயத் துடிப்பை உயிர்ப்பித்தனர். இரவு கண்விழித்து, பகலில் உறங்கும் காவலாளிகள், ஆடி அசையும் சில பெண்களும் ஆண்களும் இவை எல்லாம், சாதனா தினம் வெல்கனியில் நின்று காணும் காட்சிகள், ஒரு ஓவியத்தின் பல வண்ணங்களைப் போல.
காலை ஏழு ஆனது, பக்கத்து வீட்டுப் பெண், வேலைக்குச் செல்லப் புறப்பட்டு, வெல்கனியில் நின்று, ஆபீஸ் செல்லும் வாகனம் கீழே நிற்கிறதா எனப் பார்த்தாள். அந்த நேரம், சாதனா அவளுடன் பேசுவாள் அது, இந்த கான்கிரீட் கூட்டில் அவள் வேறு ஆளுடன் பேசும் ஒரே வாய்ப்பு, ஒரு தனித்தீவில் கிடைத்த ஒரு சிறு படகு போல.
அந்தப் பெண், வேறு மொழி பேசுபவள், ஆனால் தமிழில் கொஞ்சமாய் உரையாடுவாள். “சாதனா அக்கா, நல்லாமா? சாப்பிட்டாங்களா?” என்று அவள் கேட்பாள், ஒரு பறவையின் கீச்சொலி போல. “ஆமா, இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி,” என்று சாதனா புன்னகையுடன் பதிலளிப்பாள். “ஆஹ்… சரி அக்கா, நான் போயி வருவேன்,” என்று அவள் விடைபெற, “சரி சரி,” என்று சாதனா முடிப்பாள். அவ்வளவுதான் பேச்சு ஒரு சிறு அலை, அவள் தனிமையின் கரையைத் தொட்டுவிட்டுச் செல்லும்.
உயர்ந்த மரத்தின் தனித்து இருக்கும் பறவைக் கூடு போல, பகலில் அப்பார்ட்மென்ட் துணையாய், சாதனா மட்டும் கூட்டில் இருப்பாள். கடற்கரையின் காற்று, அவள் தனிமையை மெல்லத் தழுவினாலும், கிராமத்தின் கூட்டத்தில், அம்மாவின் அரவணைப்பில் இருந்தவள், இந்த கான்கிரீட் கூட்டில், வேற்றுக் கிரகப் பெண் போல புதிய உலகைப் புரிந்துகொள்ள முயன்றாள். காற்றில் கலந்த உப்பு, அவள் ஏக்கங்களைச் சுமந்து சென்றது, கிராமத்திற்கு.
கதிரவன் மாலை நேரத்தில் தன் இறுதி கதிர்களை கடற்கரையோர அடுக்குமாடிக் கூட்டில் தீட்டி, சாதனாவின் மனதில் ஒரு பொற்கால சாயத்தைப் பூசியது, ஓவியத்தில் புதிய கனவுகளை அமைதியாக வடிவமைப்பது போல.
சாதனாவின் ஊரு , பறவை தன் சிறகுகளை மடித்து திரும்பும் கூட்டைப் போல. சிறகுகள் விரிக்கும் தூரிகை, காற்றில் ஒரு நடனக் காவியத்தை நிகழ்த்த, தூரிகை தீட்டும் சத்தங்கள் இயற்கையின் மெல்லிய வீணை இசையைப் போல ஒலிக்கும்.
வயல், குளம் இரண்டும் பேசிக் கிளறி, வண்ண ஓவியங்களைப் போல அழகு தீட்டி, அமைதியை ஒரு பட்டு திரையால் மூடி மங்கள மாலை உருவாகும்; ஆனால், இங்கு என்னதான் இருக்கு! என்று சாதனா தன் நோட் புக்கில் எழுதி, வெள்ளை காகிதத்தில் அவள் உள்ளத்தை பதித்தாள். எழுத்துக்கள் தனிமையில் இல்லை, எனவே அவள் ஒற்றை எழுத்து வார்த்தைகளைத் தவிர்த்து, தன் எண்ணங்களை ஒரு நீண்ட ஆற்றைப் போல நெய்தாள்.
மாலை ஐந்து மணி. கதவு ஓரம் இயந்திர மணி சத்தம், தொலைவில் ஒரு பறவையின் கூவல் ஒரு காட்டின் ரகசிய அழைப்பைப் போல எதிரொலித்தது. எழுந்து சென்று கதவின் துளை வழியே பார்த்தாள் வீட்டுக்குத் தேவையான பொருட்களுடன் கணவர் வெளியில். கதவைத் திறந்து, “உள்ளே வாங்க,” என்றாள், அன்பின் மெல்லிய காற்றை ஒரு புனித பூவைப் போல வீசினாள். “தேநீர் போட்டிருக்கேன், குடிங்க,” என்று கோப்பையை நீட்டினாள், மரம் தன் பழத்தை தங்கப் பெட்டியில் வைத்து அர்ப்பணிப்பது போல. “குளிக்க பாத்ரூமில் எல்லாம் வச்சிருக்கேன், ம்ம், குளிச்சிட்டு வாங்க,” என்றாள். பாத்ரூம் கதவு அடைக்கும் “டப்” சத்தம், அவள் காதுகளை தட்டியது. அந்த நேரம் தேநீர் கோப்பையை எடுத்து, கிட்சன் தட்டில் கழுவி, கொழுவியும் விட்டாள்.
கிட்சனில் இருந்து வெளி வந்த சாதனா, வீட்டை மொப் செய்து, டைல்களில் ஒட்டிய தூசுகளை அகற்றினாள். அப்போது கதவு திறக்கும் சத்தம் ஒலித்து, நனைந்த கால்கள் தடம் பதித்துச் சென்றன. சாதனாவின் அறைக்குச் சென்ற கணவர் உடை மாற்ற, அவள் வெல்கனி வந்து நின்றாள்.
காலையில் கண்ட காட்சிகள், பின்வரிசையாக மீண்டும் தோன்றின மூடிய ஜன்னல் திரைகள் திறந்து, கான்கிரீட் கூடுகள் மெல்லிய ஒளியில் ஒளிர்ந்தன. இடையில், தொலைக்காட்சி சத்தம் கேட்டது. சாதனா, தொலைக்காட்சியருகே சென்று அமர்ந்தாள். இசை நிகழ்ச்சியின் இனிமையான மாலை நேர பாடல்கள், அவள் மனதில் மலர்களின் தோட்டமாக மலர்ந்தன. கணவரை நோக்கி, “நீங்க பாடுவீங்களா?” என்று கேட்டாள், கணவரின் நிழல் தலையை அசைத்தது. சாதனா, “எனக்குப் பாட முடியும், ஸ்கூல் டைம்ல பாடுவேன், இப்பவும் முடியும்,” என்று புன்னகைத்தாள். அந்த நேரம் சேனல் மாறியது; செய்தி வாசிக்கப்பட்டது. நேரம் ஆறு கடந்தது. செய்தியில் ஓர் ஊர் பெயர் வரவும், “அட, எங்கட பக்கத்து ஊரு!” என்று சிரித்தாள், குழந்தை சந்தோஷத்தில் தங்க மணியை அணிவது போல. அப்போது கணவர் எழுந்து வெல்கனி பக்கம் சென்றான்.
கணவன் பின்னே சென்ற சாதனா, துருப்பிடித்த கம்பியை பற்றினாள் கடலின் குளிர்ச்சியைத் தழுவிய ஒரு பாறை, ஆயிரம் வருட நதியின் அமைதியைப் போல. “அங்க பாருங்க, இங்க இருந்து பாக்க, எவ்வளவு சிறிய அலைகள்,” என்று கூற, கணவரின் தலை அவள் பக்கம் திரும்பி, அவள் கண்களைப் பார்த்தது. கடல் அலை கரையை தங்க நூலால் தொடுவது போல, அவள் வெக்கம் கொண்டாள், புது மலர் காற்றில் நாணி தலைகுனிவது போல.
நேரம் இரவு ஏழு மணி. அவர் கைகள் குளிர்ந்திருந்தன; அப்போது சாதனாவின் கை மென்மையாய் உருகியது. கணவன் படுக்கை அறைக்குச் சென்றார். அறையில் சில நேரம் கணினியை இயக்கி இருக்க, வெளிக்கதவு சத்தம் எழ, கதவருகே சென்ற கணவன் உணவுப் பொதியுடன் வந்து, “இரண்டு ஸ்பூன் போட்டு, ஒரு பிளேட்டில் கொண்டு வாங்க,” என்று சாதனாவிடம் கொடுத்தான். சிக்கன் கொத்து வாசம் வீசியது.
இரவு உணவை உண்டு சில நேரம் கழித்து, “லைட் ஆப் செய்யவா?” என்று கேட்டார் கணவர், மாலை நேரப் பாடல் இசை நிகழ்ச்சி முடிவதைப் போல. சாதனா “ம்ம்” என்றாள். கான்கிரீட் கூடு, சாதனாவின் வீட்டோடு சேர்ந்து, வெளியில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
சாதனாவின் காலைப் பொழுது, ஒரு ஓவியமாகப் புலர்ந்தது. கதிரவனின் மெல்லிய கதிர்கள், வெல்கனி இரும்புத் தூண்களில் பட்டு, சுவற்றுக் கார்ட்டூன் உருவங்களுடன் கலந்து, அவளது கூடு கனவுலகமாக விரிந்தது. தொலைக்காட்சி சேனல்கள் தானாகவே மாறி மாறி, பழைய பாடல், செய்தி, விளையாட்டு என்று தொடர்ந்து சத்தங்கள் கலந்தது கூண்டோடு.
சாதனா தன் கைகளில் கணவனுக்காக ஊற்றி வைத்த தேநீரைக் குடித்து, சாண்ட்விச்சைக் கடித்தபடி பிரதான கதவைத் திறந்தாள்.
“என்ன தம்பி, இன்னைக்கு நேரத்துக்கு வந்துட்டே!” என்று சிரித்தபடி, உணவுப் பொதியை வாங்கி, கதவை மூடிவிட்டு உள்ளே வந்தாள். பொதியை மேசையில் வைத்து, உணவைத் தயார் செய்யத் தொடங்கினாள். “எழுந்திருங்க, நான் பேசுறது கேட்குதா?” என்று கணவனை அழைத்தாள். அவன் மெளனமாக, படுக்கையில் அசைவின்றி யிருந்தான். “ம்ம், நான் மட்டும்தான் உதவிக்கு யாரும் இல்ல. உங்க அம்மா-அப்பா வந்தாங்க, ஆனா நான் சொன்னேன், ‘நானே பாத்துக்குவேன்’னு. சரிதானே?” என்று பேசிக்கொண்டே, அவள் மனதில் ஒரு கடல் அலை அசைந்தது.
மேல் வீட்டு வாடகையும், கீழ் வீட்டு வாடகையும் இன்று வங்கிக் கணக்கில் விழுந்திருக்கும். “அதுல உங்களுக்கு மருந்து வாங்கணும். நீங்க ஹோமா நிலைக்குப் போன நாளிருந்து, உங்க அம்மா-அப்பா கொஞ்ச நாள் உங்க கூடவே இருந்தாங்க. அவங்க மனசு கஷ்டப்படாம இருக்க, நான்தான் வர வேண்டாம்னு சொன்னேன். பாவம், இந்த மாசம் வந்து பார்க்கட்டும்,” என்று படுக்கைத் துணிகளையும், கணவனின் உடைகளையும் மாற்றினாள். ஈரமான பாதங்களுடன், அவள் பாத்ரூமில் துணிகளைக் கழுவி, கதவை மூடிவிட்டு வெளியே வந்தாள். அவள் பாதங்கள், கணவனின் நினைவுகளைப் போல, ஈரமாக நடந்தன.
கணவனை ஈஸிச் செயரில் அமரவைத்து, வெல்கனிக்கு அழைத்து வந்தாள். கடல் அலைகளின் சத்தம், வெளியே மெல்லிசையாக ஒலித்தது. “அங்க பாருங்க, அலைகள் எவ்வளவு சிறியவை இங்கிருந்து பார்க்க!” என்று கூறி, அவள் பேசிக்கொண்டே இருந்தாள். அவன் மெளனமாக இருந்தாலும், அவள் குரலில் ஒரு நம்பிக்கை ஒலித்தது. ஒரு நாள் அவன் நினைவுக்குத் திரும்புவான் என்று.
கடல், அவளது காதலைப் போல, எல்லையற்று அலைந்தது.
அவள் பேச்சு, காற்றில் மிதக்கும் பறவையின் சிறகுகளைப் போல, இலகுவாகவும் ஆழமாகவும் இருந்தது. “நீங்க பாடுவீங்களா?” என்று மீண்டும் கேட்டாள், அவன் நிழல் தலையசைப்பது போல உணர்ந்தாள். “எனக்குப் பாடத் தெரியும், ஸ்கூல் டைம்ல பாடுவேன், இப்பவும் முடியும்,” என்று சிரித்தாள். அவள் குரல், கடலின் மெல்லிய அலைகளைப் போல, அவனைத் தொட்டு, திரும்பி வந்தது.
நேரம் மதியமாகியது. உணவை மேசையில் வைத்து, “வாங்க, சாப்பிடலாம்,” என்று அவனை அழைத்தாள். சிக்கன் வாசம், வீட்டை நிறைத்தது. அவன் கைகளைப் பற்றி, மெல்ல உணவை ஊட்டினாள். “இன்னைக்கு மருந்து வாங்க இருக்கு, மறந்துடக் கூடாது,” என்று மனதில் குறித்துக்கொண்டாள்.
மாலையில், வெல்கனியில் அமர்ந்து, கடல் அலைகளைப் பார்த்தபடி, “ஒரு நாள் நீங்க இதை எல்லாம் பார்ப்பீங்க, என்னோட பேசுவீங்க,” என்று கணவரிடம் கூறினாள் அவரைத் தழுவி யபடி. அவள் கண்கள், கடலின் ஆழத்தைப் போல, நம்பிக்கையும் காதலும் கலந்து ஒளிர்ந்தன. ஒற்றை கூடு, அவளது காதலால், ஒரு புனிதமான இறை இல்லமாக மாறியது.