ஒரே புளிப்பு!?
கதையாசிரியர்: சிறுவர் கதைகள்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 8,417
புவியூர் என்ற நாட்டை சக்கரபாணி என்ற மன்னன் ஆண்டான். அவன் ருசி பார்த்து சாப்பிடுவதில் வல்லவன். வித விதமான உணவுகளையும், தினுசு தினுசான பழ வகைகளையும் அதிக செலவிட்டு வாங்கிச் சாப்பிடுவான். மந்திரிகளும் மன்னனுக்கு பிடித்தமான உணவு வகைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொடுத்தனர்.
ஒரு நாள் மன்னன் சக்கரபாணி சோழ நாட்டுக்கு சென்றான். அந்த நாட்டு மன்னன் அவனை விருந்துக்கு அழைத்திருந்தான். அரண்மனையில் பெரிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விருந்தில் விதம் விதமான மாம்பழங்கள் இடம் பெற்றிருந்தன. மன்னன் சக்கரபாணி இதற்கு முன் மாம்பழங்களைப் பார்த்ததே இல்லை. மாம்பழங்களை அவன் சாப்பிட ஆரம்பித்தான். இதற்கு முன் இவ்வளவு சுவையான பழங்களை அவன் சாப்பிட்டதேயில்லை. அவன் சோழ நாட்டு மன்னனை மிகவும் புகழ்ந்து பாராட்டினான். “”நண்பா, இவ்வளவு சுவையான பழங்கள் உன் நாட்டில் இருக்கிறதா? உன் விருந்து எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று கூறினான்.
மாம்பழங்களில் மனதை பறிகொடுத்த சக்கரபாணி மன்னன் தன்னுடைய நாட்டிலும் மாமரங்களை வளர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். தன் ஆசையை சோழ மன்னனுக்கு தெரிவித்தான். சோழ மன்னன் இதைக் கேட்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தான். விருந்து முடிந்து செல்லும் போது நல்ல மாம்பழத் தோட்டக்காரனை உடன் அனுப்புவதாக கூறினான்.
மறுநாள் சோழ மன்னனிடம் விடை பெற்றான் சக்கரபாணி. புவியூர் நாட்டுக்குத் திரும்பினான். அப்போது அவனுடன் சோமு என்ற தோட்டக்காரனை சோழ மன்னன் அனுப்பி வைத்தான்.
புவியூரில் நல்ல மாந்தோட்டம் ஒன்றை அமைக்கும்படி மன்னன் உத்தரவிட்டான். சோமு நல்ல செழிப்பான ஒரு இடத்தை தேர்ந்தெடுத்தான். அதில் மாவிதைகளைப் போட்டான். அவற்றை மிகவும் கவனமாக வளர்த்தான். சில ஆண்டுகளில் மாமரங்கள் காய்க்க தொடங்கின.
மாமரங்கள் காய்த்துள்ள செய்தி மன்னனுக்குத் தெரிவிக்கப்பட்டது. மன்னன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். மன்னன் ஒரு நாள் தன் அமைச்சர்களுடன் மாந்தோட்டத்திற்குச் சென்றதும் சோமுவை வரவேற்றான்.
தோட்டமெங்கும் மாம்பழங்கள் பழுத்து தொங்கின. அவைகள் தொங்கும் அழகைக் கண்டு மன்னன் வியப்பு அடைந்தான். சோமுவை பெரிதும் பாராட்டினான். மாம்பழங்களை பார்த்து மன்னன் நாக்கில் எச்சில் ஊறியது.
சோமு நல்ல மாம்பழங்களை பறித்து அவற்றை பணிவுடன் மன்னனிடம் கொடுத்தான். மன்னன் மிகவும் ஆவலாக ஒரு மாம்பழத்தை எடுத்து சுவைத்தான் அவ்வளவுதான். “”தூ… தூ…” என்று வாயில் வைத்த மாம்பழத்தை எடுத்து துப்பினான். சோமு ஒன்றும் புரியாமல் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தான்.
மன்னன் அவனை பார்த்து, “”என்ன இது மாம்பழம் ஒரே புளிப்பாக இருக்கிறது. வாயில் வைக்க முடியவில்லை,” என்று கேட்டான். உடனே சோமு ஓடிச் சென்று வேறு சில மரங்களில் இருந்து பழங்களை பறித்து வந்தான். மன்னன் அவற்றையும் சுவைத்து பார்த்தான். அவை அனைத்துமே பயங்கரமாக புளித்தன. இதனால் மன்னன் கடுங்கோபம் அடைந்தான். கண்கள் சிவந்தன. மன்னன் சோமுவைப் பார்த்து, “”நான் எவ்வளவு பணம் செலவிட்டு மாம்பழங்களை பயிரிடச் சொன்னேன். நீ அத்தனையும் நாசமாக்கி விட்டாயே. இவ்வளவு பழத்தையும் இனி என்ன செய்ய முடியும், புளிப்பு மாம்பழத்தை யாராவது சாப்பிட விரும்புவார்களா? எனவே, இதற்கு நீ சரியான தண்டனை அனுபவிக்க வேண்டும். உனக்கு மரண தண்டனை அளிக்கிறேன்,” என்று உத்தரவிட்டான்.
காவலர்கள் சோமுவைப் பிடித்து இழுத்துச் சென்றனர். அப்போது சோமு மன்னனைப் பார்த்து, “”கட.. கட…” என சிரித்தான். அவன் சிரிப்பதைப் பார்த்த காவலர்கள் அவனை நன்றாக அடித்து உதைத்தனர். நன்றாக உதைப்பட்ட பின்னரும் சோமு சிரிப்பதை நிறுத்தவில்லை.
மன்னனுக்கு சோமு சிரிப்பது வியப்பாக இருந்தது. சாகப் போகிறவன் அழாமல் சிரிக்கிறானே. இதற்கு என்ன காரணம் என்று வியப்பு ஏற்பட்டது. மன்னன் சோமுவைப் பார்த்து, “”சற்று நேரத்தில் நீ சாகப் போகிறாய் அப்படி இருந்தும் ஏன் சிரிக்கிறாய்?” என்று கேட்டான். உடனே சோமு, “”மன்னா, உன் முட்டாள்தனத்தை எண்ணித்தான் சிரிப்பு வந்தது. எதற்கெடுத்தாலும் யோசிக்காமல் மரண தண்டனை என்று உத்தரவிடும் உன்னைப் போன்றவர்கள் இருப்பதை நினைத்தேன், சிரிப்பு வந்துவிட்டது. எனக்கு மரண தண்டனை விதிக்கும் முன் நீ கொஞ்சமாவது யோசித்தாயா? மாம்பழம் புளித்தது என்றால் அது என் தவறா? சற்று யோசித்துப் பார்,” என்று கூறினான். உடனே மன்னன், “”என் தீர்ப்பு தவறு என்று நீ எப்படி சொல்கிறாய்?” என்று கேட்டான்.
சோமு மிகவும் அமைதியாக, “”மன்னா, தோட்டத்தில் என்னை மாமரங்களைப் பயிரிடச் சொல்லி அழைத்து வந்தீர்கள். சில மா விதைகளை கொடுத்து இந்த இடத்தில் தோட்டம் போடச் சொன்னீர்கள். எனக்கு தாங்கள் இட்ட கட்டளையை நான் முழுவதும் நிறைவேற்றி விட்டேன். பழம் புளிப்பாக இருப்பதற்கு காரணம் தாங்கள்தான்! மா மரம் பயிரிடும் மண், மா விதை போன்றவற்றை தாங்கள் பரிசோதிக்கவில்லை. அவற்றை சார்ந்து தான் பழம் புளிக்குமா? இனிக்குமா என்பது இருக்கிறது. எனவே, தாங்கள் தான் குற்றவாளி,” என்று கூறினான்.
மன்னனுக்கு உண்மை புரிந்தது. உடனே சோமுவை விடுதலை செய்ய உத்தரவிட்டான். பின்னர் சோமுவை நோக்கி, “”சோமு இந்த மா மரங்கள் இனிக்கும் மாம்பழங்களை தர ஏதாவது வழி இருக்கிறதா?” என்று கேட்டான்.
சோமு அதற்கு, “”ஆமாம் அரசே… விஞ்ஞான முறையில் இந்த மண்ணை பரிசோதிக்க வேண்டும். பின்னர் அதற்கு தகுந்த உரங்களைப் போட வேண்டும். அப்போது மண்ணின் தன்மை மாற்றம் அடையும். மாமரமும் சுவையான இனிய மாம்பழங்களைத் தரும்,” என்று கூறினான்.
சோமுவை அவ்வாறு செய்ய ஏற்பாடு செய்யும்படி கூறிவிட்டு மன்னன் அங்கிருந்து சென்று விட்டார். மண்ணை பரிசோதிக்க முற்பட்டான் சோமு. அதற்காக சோழ நாட்டு விஞ்ஞான வல்லுனர்களை அழைத்து வந்தான். மண்ணின் தன்மையை அறிந்து அதற்கு ஏற்ப உரம் இட்டான். சில நாட்களில் மாமரங்கள் இனிய ருசியான மாம்பழங்களை கொடுக்க ஆரம்பித்தது. மன்னன் மீண்டும் மாந்தோட்டத்துக்கு வந்தான். மாம் பழங்களை உண்டு மகிழ்ந்தான். சோமுவின் அறிவுத் திறத்தை வியந்து பாராட்டினான். அவனுக்கு ஏராளமான பரிசுகளை வழங்கி கவுரவித்தான்.