ஒரு வெள்ளி ரூபாய்





(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிந்தனை அறுந்தது நன்றாக முறுக்கி விடப்பட்ட கயிறு படீரென வெடித்து அறுந்தது போல் கம்பீரமாக ஒலித்த பெரிய பள்ளியின் பாங்கோசையே காதரின் சிந்தனையை நறுக்கிவிட்டது.
‘அடடா! ஜும்மாவுக்கு நேரமாகிவிட்டதா’.
முள்ளாகக் குத்திய தாடியைச் சற்று தடவிவிட்டுக் கொண்டு கொல்லைப் பக்கம் சென்றான் காதர். முகத்தை நன்றாக அலம்பிவிட்டுக்கொண்டான்.
தண்ணீரின் சலசலப்பைவிடக் குழந்தையின் முனகல் கடுமையாக இருக்கிறதா?
மன்னாரைப் பிடுங்கித் தின்றுகொண்டிருந்த மலேரியாச் சுரம் ஆஜானுபாகுவான ஆசாமிகளையே குதறித் தின்னும் போது தாய்ப்பாலையே பார்த்தறியாத, காதரீன் நோஞ்சான் குழந்தையைச் சும்மா விட்டுலைக்குமா என்ன?
பூனை உறங்கும் அடுப்பை ஒருமுறை நோட்டம் விட்டுக் கொண்டு ஏதோ முணுமுணுத்த காதர்,குடத்தைத் திறந்து தண்ணீர் இருக்கிறதாவென்றும் பார்த்துக்கொண்டான். நகரசபை நிர்வாகத்தில் நீர்க்குழாய் களெல்லாம் தொண்டை கட்டிக்கிடப்பது அவனுக்குத் தெரியாதா என்ன?
பள்ளிவாசலுக்குள் நுழைந்து ஹௌலை நெருங்கி ஒழுச் செய்தான். ஆழ்ந்த பெருமூச்சொன்றை விட்டவாறு பள்ளியுள் அமர்ந்த அவன் பலரைப் போல் பராக்குப் பார்க்கும் குணமற்றவ னாகையால் தலையை அறுந்த கோழிக்கழுத்தின் நிலையில் வைத்துக் கொண்டான்
சுதீப் மிம்பரில் ஏறிவிட்டார் அவரின் குரலைக்கேட்டுத் தலையை நிமிர்த்திய காதர் தோளோடுதோள் மோதும் நண்பர்களையும் நோட்டம் விட்டான்; பிரபல மொத்த வியாபாரியான ஹபீப் லெப்பையும் ஸீ. ஸீ எஸ். அதிகாரியான சரிபுதீனும் இரு பக்கமும் இருந்தனர். இஸ்லாம் ஏற்படுத்திய சமத்துவமும் சகோதரத்துவமும் பள்ளியிலாவது பிரதிபலிக்கிறதே என்று இறும்பூகிய அவனுக்கு, மாவிட்டபுரம் நிகழ்ச்சிகளும் அதன் விளைவாக ஏற்பட்ட கொலைகளும் மனதில் நிழலாடின.
முரட்டுத்தனமான குரட்டையொன்றினால் திடுக்கிட்ட காதர் குரட்டை வரும் திசையை நோக்கினான். ஹாஜா முகைதீன் தான். மார்க்கத்தைக் கட்டியழும் அந்த ‘மகான்’ அலுப்பில் சற்று கண்ணயர்ந்துவிட்டார். அவ்வளவுதான். இரண்டாம் முறை ஒழுச்செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் அவ்வளவு நைஸாகத்தான் தூங்கிக்கொண்டிருந்தார்.
எதிர்க் கோடியில் இளைஞர்கள் சிலரின் கலகலப்போலி கேட்டுக்கொண்டிருந்தது. பூனைகளும், நாய்களும், குதிரைகளும், குரங்குகளும் தொனி எழுப்புவது போல் எழுந்த சிரிப்பொலியிலிருந்து ‘அயின்’ ஹோலின் ‘அடல்ஸ் ஒன்லி’ சினிமாவைப் பற்றியோ அல்லது வரும் வழியில் சந்தித்த கிளியோபாட்ராவைப் பற்றியோ தான் இவ்வளவு உ ற்சாகமாகக் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஓருவாறு ஊகிக்கமுடிந்தது.
“ஸ்….ஸ்… ஸ் யாரோ ஒருவரின் அதட்டலுடன் சேர்ந்த குரல் ஒலிக்கவே, தவளைகள் தீடீரெனத் தமது அலறலை நிறுத்திவிட்டு மீண்டும் ஒரே சீராக ஆரம்பிக்குமே …… அது போல…
ஹௌலில் இருந்து காலை இழுத்து இழுத்து வந்து கொண்டிருந்தார் ஹமீதுறாவுத்தர், அவருக்கு நெடுங்காலமாகப் பாரிசவாதம். இருந்தும் பள்ளியை மறக்கார் – பள்ளியை மட்டுந்தான் மற்ற மார்க்கக் கடமைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அதிலும் குறிப்பாக ‘சக்காத்’ என்றால் அந்தப் பக்கம் தளைசாய்க்கமாட்டார்.
ஹதீபின் கம்பீரக் குரல் மண்டபமெங்கும் எதிரொலித்து வெளியேயும் அதிர்ந்தது. ஆனால் மண்டபத்துள்…..
ஒரு பக்கம் குரட்டை ஒலி மறுபக்கம் வாலிபர்களின் வம்பளப்பு வேறொருபக்கம் புறுபுறுப்பு, தொண தொணப்பு…
பிரசங்கத்தை எவ்வளவு ஊன்றிக் கவனித்தும் அதில் காதரின் மனம் நாட்டங் கொள்ளாததற்குக் காரணம் பள்ளியில் நிலவிய வம்பளப்புக் கூச்சலுமல்ல. வீட்டிலே புழுப்போல் துடித்துக் கொண்டிருந்த குழந்தையின் பரிதாப நிலை… பத்து நாட்களாகப் புசித்தறியாத மனைவியின் வரண்ட தோற்றம். வீரிடும் பாலகர்களின் விம்மிடும் தோற்றம்…… இவையே அவனது மனக்கண்முன் மண்டியிட்டன.
தொழுகை ஆரம்பமாகியது. பிரதான தொழுகை மண்ட பத்திற்குள் நெருக்கியடித்துக் கொண்டு நுழைந்தனர்.
மருந்து வாங்கக் கூட கையில் செப்புக் காசில்லை. ஆஸ்பத்திரியிலோ கைவிரிப்பு கடைகளிலோ கடன் கொடுக்க மறுப்பு. ஓட்டியிருக்கும் உயிரை உதிர்ந்து விடாமல் தடுப்பதற்கு நகரசபைக் குழாய்களாலாவது முடிகிறதே என ஒரு திருப்தி. தண்ணீருக்கும் பணம் கொடுக்க வேண்டிய தேவையில்லையே என்ற ஒரு மகிழ்ச்சி. (விரைவில் அந்நிலையும் ஏற்படலாம்) இவைகளே அவனைப் பேய்போல் பிடித்து ஆட்டின.
விரித்திருந்த வெண்போர்வையின் மேல் நடந்து மண்டபத்தின் கடைசி மூலையில் சுவரோரமாய் ஒதுங்கிக்கொண்டான் காதர்.
‘அல்லாஹு அக்பர்.’
கலகலப்பு நிறைந்திருந்த அப்பள்ளி ‘கப்சிப்’பென்றா சாந்தியடைற்கது. பக்தி நிறைந்து வழிய உணர்ச்சி ததும்ப உள்ளங்கள் துடிக்க, உடலெங்கும் புல்லரிக்க ஜும்மா நடை பெற்றுக்கொண்டிருந்தது.
ஆனால் காதர்…
‘இறைவனே! ஒரு ரூபாய் கிடைத்தால்தான் இன்று: உயிர்வாழ முடியும்’
அண்டம் கிடுகிடுக்க ‘ஆமீன்’ முழங்கியது.
காதரோ?.. ஒரு வெள்ளி ரூபாய் கிடைத்தால் போதும். காதரின் இடது தோள் சற்று பலமாக அழுந்தவே வலது தோள் சுவரில் மோதியது.
இரண்டு பக்தர்களின் இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கும். நகைக்கடை முதலாளி ஜமாலுத்தீனின் உருவந்தான் தன்னை இடித்தது……..
காதருக்கு இதுவா பிரச்சினை?
‘இறையே ஒரு ரூபாய் கிடைத்தால்!…’
கதீப் சுஜுது நோக்கிச் செல்லவே பக்தர்கள் அனைவரும் குனிந்து தங்களது நெற்றியை நிலத்தில் அழுத்தினார்கள்.
‘நங் ‘
வெண்கல ஓசையுடன் விழுந்த பொருள் என்ன? ஜமாலுத்தீனின் சேட் பொக்கட்டுக்குள் இருந்து விழுந்த ஒரு வெள்ளி ரூபாய் உருண்டு ஓடிச்சென்று விரித்திருந்த வெண்சீலையின் அடியில் மாபிள் தரையில் நிம்மதியாக சென்றமர்ந்தது.
கண்ணிமைக்கும் நேரம்…
கவனித்து விட்டான் காதர்.
கதீப் தன் செயலில் முழுமூச்சாக ஈடுபட்டிருந்தார். காதரின் கண்கள் அந்த வெள்ளி ரூபாயை -ஒரு ரூபாய் நாணயத்தை வெறிக்க, வெறிக்க விழுங்கிக் கொண்டிருந்தன. அந்த நாணயம் தான் சீலையின் அடியில் புதைந்து கிடக்கிறதே! ஆயினும் அவனது கண்முன் அவை நிழலாடின.
பணத்தை நழுவவிட்ட அந்த நகைக்கடை முதலாளிக்கு தனது பணம் சிதறி விழுந்தது தெரிந்துதான் இருக்கவேண்டும். ஆனால் அப்படி ஒரு பிரமையே இல்லாதவர் போல் நடந்து கொண்டார். காரணம் பக்தியா? அல்லது பணத்தியே விளைந்த வரட்டுக் கெளரவமா?…
அவரைப் பொறுத்த அளவில் அந்த வெள்ளி நாணயம் அவர் அணிந்துள்ள செருப்பிலே இருந்து சிந்துகின்ற மண் தூசுக்குச் சமன்….
ஆனால் காதருக்கோ…
அவனது ஏக்கம் நிறைந்த மனைவி விலா எலும்புகள் துறுத்திய விம்மல் நிறைந்த குழந்தைகள், பயங்கர நோயில் புழுப்போல் துடித்தலறும் பச்சிளம் பிஞ்சு, அனைவரும் அந்த வெள்ளி ரூபாய் நடுவே வலம் வந்தார்கள்.
சே! என்ன தவறு செய்துவிட்டேன்; ஆண்டவனின் பாதையில் சென்று கொண்டிருந்த மனதைப் பலவாறாக அலைய விட்டு விட்டு விட்டேனே! ‘தொழுகை நடக்கும் நேரத்தில் அந்நியன் ஒருத்தனின் பணத்தைப் பற்றிய சிந்தனையா?’
தன்னையே நொந்து கொண்டு தனது முழுக்கவனத்தையும் தொழுகையின் பால் திருப்பினான்
ஆயினும் பாழும் மனம் இருக்கிறதே!
இந்த வெள்ளி ரூபாய் மட்டும் என்னிடம் இருந்தால்…
தொழுகையின் இறுதிக் கட்டம்…
அந்த வெள்ளி நாணயத்தின் சொந்தக்காரன் – அந்த இலட்சாதிபதி – இதைக் கவனித்ததாகவே தெரியவில்லை.
தொழுகை முடிந்துவிட்டது… பாஃத்திஹா மட்டும் ஓதப்படவில்லை.
விருட்டென எழுந்தார் அந்த நகை வியாபாரி. மிகவும் அவசரமான வேலையுள்ளவர் போல் தன்னைக் காட்டிக் கொண்டு அந்த மண்டபத்தை விட்டு வெளியேறினார்.
‘அல்லாஹ்.. இது என்ன சோதனை எனது ஆசையை அங்கீகரித்துவிட்டாயா’ எனக்குத் தேவையான ஒரு ரூபாயை இந்தப் பள்ளியிலேயே தந்துவிட்டாயா… சே! என்ன மடத்தனமான சிந்தனை.. மாற்றான் பணத்தை என் முன் காட்டி என்னை ஒரு அயோக்கியனாக மாற்றுவதுதான் உன் சித்தமோ…
ஃபாத்திஹா ஓதிக்கொண்டிருந்தார் சுதீப்.
இரு கைகளையும் ஏந்திக்கொண்டிருந்தான் காதர்…
அவன் அயோக்கியனாக மாறிக்கொண்டிருக்கிறானோ?
‘ஓ மனமே! பொறு.. இந்தப் பணத்திற்கு உரியவன் எவனோ? அவன் இங்கிருந்தே போய் விட்டான். இனி இதற்கு உரிமை கொண்டாட யாருமில்லை. இறைவனாகப் பார்த்து எனக்குத் தந்த சொத்து இது… எனக்கே உரியது… ‘சே! பயன்படுத்தப் நான் என்ன தீயவழியிலா இப்பணத்தைப் பயன்படுத்தப் போகிறேன். கேவலம், இந்த ஒரு ரூபாய் நாணயத்தினால் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருக்கும் எனது குடும்பத்திற்கு சற்றாவது நிம்மதி கிடைக்காதா…’
தொழுகை முடிந்துவிட்டது. மண்டபத்தை விட்டுப் படிப்படியாக அனைவரும் வெளியேறினர். ஓரிருவரைத்தவிர… அதிலே காதரும் ஒருவர்.
காதர் சற்று தைரியமடைந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். ஒருவரும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை.
‘இறைவா… என்னை மன்னித்துக் கொள்… என் வாழ் நாளில் நான் செய்யும் முதல் தவறும் இதுதான், கடைசித் தவறும் இதேதான்…’
வெண்போர்வையினடியில் கையைவிட்டு அந்த நாணயத்தைக் கவ்வி எடுத்தான். மனம் பயங்கர பாதாளமொன்றில் தன்னந்தனியாகச் சென்று கொண்டிருந்தது. எவ்வளவு தான் முயன்றும் அவனுக்குக் கை நடுங்கியது.
முழுப் பலத்தையும் திரட்டிக்கொண்டு… அவ்விடத்தை விட்டு எழுந்தான்.
‘அந்தக் காசை இப்படித் தாறிங்களா?’
சம்மட்டி கொண்டு இதயத்தைப் பிளப்பதுபோன்ற உணர்ச்சி வெட்கம் பிடுங்கித்தின்ன, வேர்த்து விறுவிறுக்க… பின்னால் திரும்பிப் பார்த்தான்.
பார்வையில் இருந்து கர்ண கடூரம் சற்றேனும் குறையாமல் அவனையே வெறிக்கப் பார்த்துக் கொண்டு நின்ற மனிதன் யார்.. ‘அவன்தான பணத்தின் சொந்தக்காரன்? இல்லை, நிச்சயமாக இல்லை. அந்தப் பணத்தின் சொந்தக்காரன் எப்போதோ பள்ளியை விட்டுப் போய்விட்டான். இவன் யாரோ?… இவன் யாரோ ஒரு அயோக்கியன் என்னைப் போல…’
‘என்னப்பா முழிக்கிறா… ஏம்பா அற்பப்புத்தி… குடு… என்ர காசை…’
காதர் கூனிக்குறுகிவிட்டான். வெடித்துச் சிதறமுயன்ற விம்மலை எல்வாறோ கட்டுப்படுத்திக் கொண்டு தாடிக் காரனிடம் கொடுத்தான். கை நடுங்கியது. அப்படிக் கொடுக்காமல் இருந்தால் அப்பள்ளியில் வைத்தே அறை விழுந்தாலும் விழும் என்பது தாடிக்காரன் நின்ற நிலையிலிருந்தே தெரிந்தது.
பார்வைக்கு ஒரு ஆலிமைப்போல் தோற்றமளித்து அந்தத் தாடிக்காரன் யார் ?
அவன் யாராய் இருந்தால் என்ன? அந்த வெள்ளி ரூபா நிச்சயமாக அவனுடைய சொத்து இல்லை என்பது மட்டும் காதருக்குத் தெரிந்த உண்மையே!
‘இறைவா… என்னை மன்னித்துகொள்…’
வெறுங்கையுடன் பெரிய பள்ளியைவிட்டு வெளியேறினான் காதர்.
ஆனால் அவனது மனம் நிறைந்திருந்தது.
(யாவும் கற்பனை)
– 13-9-1968, இன்ஸான் முஸ்லீம் வாரப் பத்திரிகை.
– ஒரு வெள்ளி ரூபாய் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: செப்டம்பர் 1982, மன்னார் வாசகர் வட்டம் வெளியீடு, இலங்கை.