ஒரு விடியலுக்கு முன்…!





(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மினிபஸ்ஸின் வாசலில் குவிந்து நின்ற சனங்களை இடித்து, விலக்கி வெளியில் கால்களை வைத்த போது தோளில் தொங்கிய ‘றவலிங் பாய்க்கை’ உரசிக் கொண்டு “உர்ர், உர்ர்” என பஸ் தன் பயணத்தைத் தொடர்ந்தது. சனநெரிசலால் விலகியிருந்த ‘பெலிற்றையும்,’ ‘றவுசரையும்’ சரி செய்தவாறே கையை உயர்த்தி கடிகாரத்தைப் பார்த்தான். நேரம் பத்து மணியைத் தாண்டியிருந்தது. பூட்டிய கடைகள் முன்னால் பழைய பேப்பர் விரித்து படுத்திருந்த பிச்சைக்காரர்களில் சிலர் பஸ்ஸின் இரைச்சலால் ஒரு முறை நெளிந்து, பின் திரும்பி மறு பக்கம் படுத்துக் கொண்டனர்.
வீதியைக் கடந்து கடல் பக்கமாக நடந்தான். கிரிக்கெட்டோ, கிளித்தட்டோ விளையாடலாம் போல விளையாட்டு மைதானமாக காலி வீதி ஒரே வெளியாய் ஓய்ந்து கிடந்தது. இவன் திரும்பும் குச்சொழுங்கையின் பெயர்ப் பலகையுடன் பச்சையும், சிகப்புமாகப் பிணைந்து இருக்கும் தபால் பெட்டிகளின் பின் அரசியல்வாதிகளின் தொனியில் ஏதோ சதா பேசிக் கொண்டிருக்கும் அந்தப் பைத்தியக்காரன் கூட உடுத்திருந்த ஊத்தைச் சாரத்தினால் தன்னை மூடி சுருண்டு படுத்து விட்டான்.
குச்சொழுங்கையில் வெளிச்சம் கொஞ்சம் குறைவாகவே இருந்தது.நிதானமாக நடந்தும் ஒரு குழியில் காலை விட்டு நிரம்பியிருந்த தண்ணீரைத் தெறிக்க வைத்து ஒரு கணம் தன் ‘பலன்ஸை’ இழந்து திடீரென சுதாகரித்து மீண்டும் நடக்க ஆரம்பித்தான். இன்றும் அந்திமழை தன் சேவையை செவ்வனே நிறைவேற்றித்தான் இருக்கிறது. இவன் தங்கியிருக்கும் வீட்டின் முன்புறத்தே கிழக்குப்பக்கமாக ஓர் அறையில் மட்டும் வெளிச்சம் தெரிந்தது. ‘கேற்’ பூட்டி விட்டார்களோ? என்னவோ?
மதிலோரம் ஒட்டிய தொலைபேசிக் கம்பத்தைத் தேய்த்தவாறே வேகமாகச் சென்று ‘கேற்றில்’ கை வைத்தான். கொழுவித் தான் இருந்தது. ஓசைபடாது கொழுக்கியை எடுத்து உள்நுழைந்து மீண்டும் கொழுவும் போது இவனையும் மீறி “டொங்” எனச் சத்தம் கேட்டது. வாசலில் சுருண்டு படுத்திருந்த ‘றெக்சி’ திடீரென எழுந்து இவனை உச்சிமுதல் கால்வரை பார்த்துவிட்டு கழுத்தைத் திருப்பி, உடலை ஒருமுறை உதறி மீண்டும் முடங்கிக் கொண்டது.
முன்னறையில் இருந்து ‘நியூஸ்பேப்பரும், மூக்குக் கண்ணாடியுமாக ஓடிவந்த முதியவர் “எட நீரே?” என்று விட்டு, கொஞ்ச நேர இடை வெளியின் பின், “பஸ்ஸோ, றெயினோ” என்று கேட்டார். “வவுனியா பஸ் கனகராஜன் குளத்தடியிலை ‘செக்கிங்’ காலை கொஞ்சம் ‘டிலே’யாப் போச்சு. ‘றெயினை மிஸ்’ பண்ணிட்டன். பிறகு அநுராதபுரத்துக்கு வந்து வாறன் “என பாடமாக்கி வைத்த தேவாரமாக வார்த்தைகளை ஒப்புவித்துவிட்டு பதிலுக்காகப் பார்த்திராதவனாக ஓடைப்புறத்தால் பின் வாசல் நோக்கி நகர்ந்தான்.
இப்போ ‘றூம்மேற்’ ரஞ்சித் என்ன செய்கிறானோ? ‘லங்கா புவத்’தின் ஆதார செய்திகளையும், பீ.பீ.சி.யையும் கேட்டு விட்டு யாழ்ப்பாணத்திலுள்ள தனது தாயாருக்கோ, அல்லது வேறு ‘எவருக்காவதோ’ கடிதம் எழுதிக் கொண்டிருக்கலாம். இல்லாவிடின் வானொலி ஒரு பக்கமாக சீர்காழியின் குரலிலோ, அல்லது பெங்களுரின் குரலிலோ இரைந்து கொண்டிருக்க மறுபக்கமாக வளைந்து, குறட்டை விட்டுக் கொண்டிருக்கலாம்.
ஓடையால் மிதந்து பின் புறத்தை அடைந்தான். ‘றாமில்’ இன்னும் ‘லைட்’ எரிவதை கதவின் கீழ் இடைவெளி வீட்டுக்காரனுக்குக் கோள் சொல்லிக் கொண்டிருந்தது. “மச்சான், இன்னும் படுக்கேல்லை!” என்று நினைத்தவனாக, மெலிதாக கதவில் “டொக் டொக்” எனச் செய்தான். ரஞ்சித் குதித்தெழுந்ததால் கட்டில் ராகமிசைத்தது. உள்புற பூட்டை அழுத்தி திறந்து கதவை இழுத்தான். உதறியபடி கதவு “ஆ” வெனத் திறந்து கொண்டது. “லபக்” என உள்நு ழைந்தவன் கதவைச் சாத்தியவாறே, ரஞ்சித்தின் முகத்தைப் பார்த்தான்.
“வருக! வருக! சாந்திமணாளனே வருக! என்ன புதன்கிழமை வேலைக்கு வாறனென்டுட்டுப் போனாய் இண்டைக்கு ஞாயிற்றுக்கிழமை யுமாச்சு. . . கையில் வைத்திருந்த குமுதத்தையோ, விகடனையோ ஏதோ ஒன்றை தனது மேசையில் போட்டவாறே ரஞ்சித் கேட்டான்.
“என்னடாப்பா செய்யிறது? ஹர்த்தால், கடையடைப்பு எண்டு ரண்டு நாள் கழிஞ்சுது. ‘கேவியூ’ போட்டு ‘றவுண்ட்டப்’ பண்ணி கலாதிப்படுத் தினதிலை ரண்டு நாள் வெளிக்கிடேலோமல் போச்சுது. இண்டைக்குத் தான் ஓரளவுக்காவது நகர முடிஞ்சுது!” ‘ரவலிங் பாய்க்’ கை கட்டிலில் ‘தொம்’மென வைத்தவன், தனது மேசை மீதிருந்த கடிதங்கள் மீது பார்வையைத் திருப்பினான்.
“ஒவ்வீசிலை இருந்து உனக்கு ‘ரெலிகிறாம்’ வந்திருந்துது, வேலைக்கு வரச் சொல்லி. ‘சிக் பெக் லீவ்’ எண்டு வழமை போலை உன்ரை ‘பொஸ்’ சில்வாவுக்கு ‘றிப்ளை’ பண்ணியிருக்கிறன்.”
“எங்கடை பிரச்சினைகள், கஷ்ரங்கள் அவங்களுக்கு எங்கை விளங்கப் போகுது? ஏதோ வேணு மெண்டு அங்கை படுத்துக் கிடக்கிறம் எண்ட மாதிரி அவங்களின்ரை நினைப்பு. நாட்டு நிலவரத்தை சாதகமாக்கி சீவிக்கப் பாக்கிறம் எண்ட மாதிரி ஒரு சந்தேகம்.
“நாங்கள் இப்பிடியே ‘சவர்’ பண்ண வேண்டியது தான். அது போக மகள் மீரா எப்பிடி?”
“சீ ஸ் ஓல்றயிற்.உடம்பு பிரள ஆரம்பிச்சிருக்கிறாள். பத்து நாளும் அவளை மடியிலை வைச்சிருந்தது தான் உருப்படியாக நான் செய்த ஒரே வேலை.
“அப்ப நான் நினைச்சதுக்கு மாறாக சாந்திக்கு பெரிய ஆறுதல்தான் குடுத்திட்டு வந்திருக்கிறாய்” என்று கூறிச் சிரித்தவாறே நண்பன் இவனது மேசை விளக்கினை ஒளிரவிட்டு, அறை விளக்கினை அணைத்துவிட்டு படுக்கையில் சென்று விழுந்தான்.
வானொலியில் இனிய புல்லாங்குழல் இசை ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. ரி.ஆர். மகாலிங்கமோ, அல்லது வேறொரு தமிழ்நாட்டு கலைஞனோ வாசித்ததாக இருக்கலாம்.
இவனது பார்வை மீண்டும் மேசைப் பக்கமாகத் திரும்பியது. மேசைவிளக்கில் சிலந்தி வலை பின்னியிருந்தது. ஒட்டடையும், தூசியும் மேசையினை மொத்தமாகக் குத்தகை எடுத்திருந்தது. சப்பாத்துத் துடைக்கும் பழைய ‘பெனியனை’ எடுத்து எல்லாவற்றையும் துடைத்தெடுக்க வேண்டுமெனத் தான் நினைத்தான். ஆனால், எழும்ப முடியாதவாறு தோள்மூட்டு “விண் விண்” என வலித்தது. முதுகெலும்பு, இடுப்பு யாவும் உடைந்துவிட்டதோ போன்ற ஒரு உணர்வு.
கட்டிலில் இருந்தவாறே எட்டி மேசை மீது கடிதங்களை இழுத்தெடுத்தான். மேசை மீது படிந்திருந்த தூசியில் கோடிட்டவாறே கடிதக் கோவைகள் கட்டிலில் வந்து விழந்தன. காரியாலயத்திலிருந்து வந்த தந்தி, மக்கள் வங்கியின் மாதாந்தக் கூற்று, சவுதியிலிருந்து வந்த நண்பன் சீலனின் கடிதம், அந்த மாதத்துக்கான மல்லிகை இதழ், வழமையாக வரும் தாய் மாமனார் கடிதம் ஆக ஒவ்வொன்றும் தம்மை இனங்காட்டிக் கொண்டன.
புல்லாங்குழல் இசைக்கு போட்டியாக ரஞ்சித் “குர், குர்” என குறட்டை வாசித்துக் கொண்டிருந்தான்.
போட்டிருந்த ‘ரீசேட்’ ‘பிசு, பிசு’ப்பாக உடலோடு ஒட்டி ஒரே அரியண்டமாக இருந்தது. பதினாறு மணித்தியால வியர்வை அல்லவா? கட்டிலை ஊன்றி மெல்லென எழுந்து, உடுப்புக்களை களைய ஆரம்பித்தான். கொடியில் தொங்கிய சாரத்தை உருவி எடுத்து, உடுத்துக் கொண்டான்.
‘குளிப்பு ஒண்டு அடிச்சால் நல்லாத்தான் இருக்கும். ஆனால் தண்ணிச் சத்தம் கேட்டு வீட்டுக்காரன் எழுந்துவிட்டால்?’ முகமாவது கழுவி வரலாம் என குனிந்து கட்டிலுக்கடியில் இருந்த ‘சோப் கேசை’ இழுத்தான். இழுத்த இழுவையில் ‘கேஸ்’ மூடி வந்து இவன் காலடியில் விழுந்தது. ஐம்பது சத நாணயமளவில், அல்லது அதற்கு சற்று குறைவானதாக மூன்று, நான்கு துண்டுகள் மட்டும் மூக்குச்சளியாக பெட்டிக்குள் இழுபட்டன. ஊருக்குப் போன போது பெட்டிக்குள் புதிதாக ‘சோப்’ வேண்டிப் போட வேண்டுமென எண்ணிக் கொண்டது இப்போ தான் நினைவுக்கு வந்தது.
உடுப்புகளுக்குத் தேய்க்கும் சவர்க்காரத்தையும், கருவாடாகக் காய்ந்து வரண்டு சொந்த நிறமே தெரியாது மங்கிப்போன தனது துவாயையும் எடுத்தவாறே ‘பாத்ரூம்’ போனான். ஏறத்தாழ வீட்டின் எல்லா அறைகளிலிருந்தும் “குர், குர்” சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
‘பைப்’பினைத் திறந்து விட்டு, அதன் கீழ் குந்தியிருந்தான். மெல்லிய சூடாக வந்த தண்ணீர் உடலுக்கு இதமாக இருந்தது. ‘இந்தச் சத்தம் வீட்டுக்காரனுக்கு அதுதான் ‘பீறிஸ் மாத்தயாவுக்கு’ எங்கே கேட்கப் போகிறது?’ என்ற தைரியத்தில், உடல் சூடு தணியு மட்டும் குளித்தான். உடலில் வழுவழுத்த எண்ணெய் தன்மையை உப்புச் சவர்க்காரம் சுத்தமாக எடுத்திருந்தது.
மீண்டும் அறைக்கு வந்த போது வானொலி ‘நமோ, நமோ’ இசைத்துக் கொண்டிருந்தது. அதை ‘ஓவ்’ பண்ணி நண்பனின் மேசையில் வைத்துவிட்டு கொண்டு வந்த ‘ட்ரெவலிங் பாக்’கை ‘கிளியர்’ பண்ணினான். மனைவி சாந்தி ‘அயன்’ போட்டு வைத்த இவனது உடுப்புகள், “ஒவ்வீசாலை வந்து ‘g’ போட்டுக் குடிக்கைக்குள்ளே இதுகளிலையும் ஒவ்வொண்டு எடுத்தியள் எண்டால் பசியும் அடங்கும். உடம்பும் உறுதியாகும்”, என்ற முன்னுரையுடன் வைக்கப்பட்ட பருத்தித்துறைவடை, பொரி விளாங்காய், புளுக்கொடியல் பார்சல்கள், யாவற்றையும் எடுத்து உரிய இடங்களில் அடுக்கி வைத்தவன் அடியில் கிடந்த ஒரு கட்டு கடிதங்களை எடுத்து மேசையில் போட்டான். வெளிநாட்டிலிருக்கும் தனது மகனுக்காக பக்கத்து வீட்டு தங்கம் மாமி தந்த கடிதம் உட்பட கொழும்பு, பண்டாரவளை என உள்நாட்டுக்குரிய கடிதங்களுமாக ஏறத்தாழ இரண்டு டசின் அதில் இருந்தது.
வெறுமையாகி விட்ட ‘ட்ரெவலிங் பாய்க்’கை சுவரில் நீண்டிருந்த ஆணியில் கொழுவிவிட்டு குனிந்த போது காரியாலயத்திலிருந்து வந்த தந்தி கட்டிலில் கிடந்து மீண்டும் பயம் காட்டியது. அதை எடுத்து கசக்கி மூலையில் போட்டதில் மனதில் ‘ரென்ஷன்’ கொஞ்சம் குறைந்ததைப் போல் இருந்தது.
மின்விளக்கில் தொங்கிக் கொண்டு தந்தி மீட்டிக் கொண்டிருந்த சிலந்தி வலையும் மேசையை ஒட்டி ஆக்கிரமித்திருந்த ஒட்டடை, தூசியும் மனதுக்கு என்னவோ செய்தது. ஓசைபடாது மேசைப் பொருட்களை எடுத்து கட்டிலில் வைத்து மேசையைச் சுத்தம் பண்ணி பின்னர் கட்டிலையும் சுத்தமாக்கி பொருட்களை அடுக்கி விட்டு நிமிர்ந்த போது வீட்டின் பின்புற வாசல் பூட்டு திறபடும் சத்தம் கேட்டது. கையிலிருந்த பழைய பெனியனை சடாரென தூரத்தே போட்டுவிட்டு, எட்டி மேசை விளக்கினை அணைத்தான். இவன் எதிர்பார்த்ததை உறுதிப்படுத்துமாப் போலவே, பீறிஸ் மாத்தயாதான் காறித் துப்பும் சத்தம் வெளியில் கேட்டது.
கட்டில் மேல் மெதுவாக இருந்து பின் மெள்ள மெள்ளமாக சரிய ஆரம்பித்தான். தனக்கென காத்துக் கிடந்த கடிதங்கள், மாதத்துக்கான ‘மல்லிகை’ எவற்றையுமே பிரிக்கக் கூட முடியாத தன் துர்அதிஷ்டத்தை எண்ணினான். இன்னும் ஒரு பத்து நிமிடமோ, அல்லது கால் மணித்தியாலமோ அவகாசம் இருந்திருந்தால் மேலோட்டமாகவாவது சகலதையுமே பார்த்திருக்கலாம் தான். அதற்குள் இந்த வீட்டுக்காரன்?
காலி வீதி வழியே இரைந்து செல்லும் வாகனச் சத்தம் இடையிடையே கேட்டுக் கொண்டிருந்தது. காலி, மாத்தறை போன்ற வெளியிடங்களிலிருந்து கொழும்புக்கு வந்து சேரும் மினி பஸ்களாகவோ, அல்லது பொலிஸ் ஜீப்புகளாகவோ அவை இருக்கலாம்.
படுக்கும் போது நேரம் பார்க்கக் கூட மறந்து போன தன்னை நொந்து கொண்டான். நேற்று இந்நேரம் மனைவியின் அருகாமையில் உறங்கியதும், மகளுக்காக மாட்டப்பட்டிருந்த அந்த மங்கிய மின்னொளியின் அருகில் கடிகாரத்தைப் பிடித்து அடிக்கடி நேரம் பார்த்துக் கொண்டதும் நினைவுக்கு வந்தது. அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து சோற்றுடன், உருளைக்கிழங்குப் பிரட்டல், பருப்பு என இவனுக்குப் பிடித்தமானதெல்லாம் சமைத்து பகலுக்கும், இரவுக்குமென இரு ‘பார்சல்’களாக பொலித்தீன் தாள் போட்டு பழுதுபடாத வாறெல்லாம் கட்டித் தந்த சாந்தியின் கடமை உணர்ச்சியை வியந்து கொண்டான். பத்து நாட்களும் வேளைக்குச் சாப்பாடும் மகளுக்குப் பராக்குமாக நேரம் போனதே தெரியவில்லை. உள்நாட்டில் நிகழும் பதற்ற நிகழ்வுகள் போக, உணவுக்காகவோ அன்றி வேறு எவற்றுக்காகவுமோ மனதைப் போட்டு அலைக்கழிக்க வேண்டாத சீவியம். ஆனால் இனி?
காலையில் ஆமர்வீதி சைவக் கடைகளில் ஒன்றில் நான்கு ஐந்து இடியப்பம், மத்தியானம் காரியாலயத்திற்கு வரும், ‘பொல் சம்பல், ஈரப்பலாக்காய் கறியோடு அரைவயிற்றை மட்டும் நிரப்பிக் கொள்ளும் அவிந்தது பாதி அவியாதது மீதியுமான சம்பா அரிசிச் சோறு, இரவில் பாவம் பட்டரோ முட்டையோ ஏதோ ஒன்று, இதற்குள் ‘கண்டபடி முட்டை எடாதையுங்கோ பிறசர் வரும். ரீயுக்கு சீனி குறைவாய் போடுங்கோ. பிறகு டயபிற்றிக் வந்தால் ஒண்டுஞ் செய்யேலாது!” என வாரந் தவறாது கடிதங்கள் மூலம் சாந்தியின் அட்வைஸ் வேறு.
வவுனியா பஸ்ஸை பிடிப்பதற்கென பருத்தித்துறை ‘டிப்போ’விற்கு கொண்டு சென்று இவனைச் சேர்ப்பிப்பதற்காக, அதிகாலை ஐந்து மணிக்கு ‘கேற்’றடியில் வந்து நின்று இவனது மருமகன் திரையன் சைக்கிள் ‘பெல்’லடித்த போது, ‘ரெடி’யாகி வெளிக்கிட்டு வந்தவனை வாசல் வரை வந்து வழியனுப்புகையில் “ஐடென்ரிக் காட் பொக்கெற்றுக்குள்ளை தானே?” என்ற வார்த்தையை மட்டும் சாந்தி இறுதியாகச் சொல்லிக் கொண்டாள். ‘இந்த அடையாள அட்டையிலை மூன்று உயிர் தங்கியிருக்கு’ என அப்போ இவன் நினைத்துக் கொண்டான்.
இன்று உடம்பு பிரட்டி எக்காளமிட்டுச் சிரித்து, முத்தந் தந்த மீரா அடுத்த முறை இவன் செல்லும் போது தவழ்ந்து வரலாம். ஒருவேளை வண்டிலை உருட்டி நடையும் பயிலலாம். கடந்த முறைக்கும், இந்த முறைக்கும் குழந்தையில் தான் எத்தனை வித்தியாசம்? இந்த வளர்ச்சி, பூரிப்பு எல்லாவற்றையுமே அடிக்கடி பார்த்து மகிழ இவனுக்குக் கொடுத்து வைக்கவில்லையே.
இவன் சிறுவனாகப் புற்றளைப் பள்ளியில் சின்ன முதலோ, பெரிய முதலோ படித்த போது கிழமை தவறாது கொழும்பிலிருந்து வந்து சென்ற தனது தகப்பனாரை எண்ணிக் கொண்டான். வெள்ளிக்கிழமை இரவுகளில் இடியப்பமும், முருங்கைக்காய் சொதியோ, தக்காளிப் பழக் குழம்போ சமைத்துவிட்டு அம்மா பத்து மணி வரை ஐயாவுக்காகத் தூங்கி வழிந்தது, இவன் மனதில் புற்றளைப் பள்ளி மாதிரியே இன்னமும் அழியாதிருக்கிறது. அப்போ சனி, ஞாயிறுகளில் ஐயாவோடு தான் இவன் இருப்பான்,உண்பான், உறங்குவான்.
ஆனால், இப்போ? வெள்ளி இரவு பஸ் எடுத்தால் கூட சனி பகலில் தான் ஊர் செல்ல முடிகிறது. அதற்குள் இடை வழியில் கண்ணிவெடி, ஊரடங்கு, ஹர்த்தால் என்று ஏதாவது நிகழ்ந்தால், வவுனியா ஆச்சிரமமோ, அல்லது வரணியில் யாராவது தெரிந்தவர்கள் வீடோ கதியெனக் கிடந்துவிட்டு செவ்வாயோ, புதனோ தான் வீடு செல்ல முடிகிறது. போய் அடுத்த சனியோ, ஞாயிறோ சந்தர்ப்பம் பார்த்து இங்கு வந்து சேர வழமை போல் காரியாலயத்திலிருந்து தந்தி வந்து மேசையில் கிடக்கும். இனி மூன்றோ, நான்கோ மாதங்கள் பொறுத்துத் தான் அடுத்த பயணம் பற்றி அதிகாரியுடன் ‘பேச்சுவார்த்தை’ நடத்த முடியும். அதுவும் மனைவிக்கு உடல் நலக் குறைவென்றோ, அல்லது குழந்தைக்கு சோறுதீத்து, காது குத்து என்றோ காதுகுத்தி சமயங்களில் அம்மா ஐயாவுக்கு வலு ‘சீரியஸ்’ என்பது போல முகாரி ராகத்தில் முகத்தை வைத்திருந்து., சிவாஜி கணேசனது பழைய படங்கள் பெருமளவில் பார்த்து வைத்திருந்ததில் இவனுக்கு அதெல்லாம் அத்துபடி.
நாளைக்கு காரியாலயத்தில் நடப்பதை கூட இவனால் தீர்க்க தரிசனம் பண்ண முடிகிறது. எட்டரைக்கு மட்டுமட்டாக ‘அற்றண்டென் சீற்றில் கையெழுத்து வைத்துவிட்டு இருக்கையில் இருந்ததுமே இவனது பெயர் சத்தமாக அழைக்கப்படும்.கண்ணாடிக் கதவைத் திறந்து உள்நுழைந்ததும் அதிகாரியின் கடுகடுப்பான முகம் தலைகீழாக இவன் விழித்திரையில் விழும். “வட் ஹபன்ட் ரூ யூ?” என்பதே ஒரே கேள்வியாய் அமையும். இனி நடந்த வற்றை ஆங்கிலப்படுத்தி, அதிகாரிக்குப் புரியவைத்து, அவரது அபிப்பிராயங்க ளையும், ‘அட்வைஸ்’களையும் ‘சிவனே’ எனக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு இறுதியாக, அரோகராப் பரியாரியாரின் ‘மெடிக்கல் சேட்டிபிக்கட்டை’ ‘சப்மிற்’ பண்ணி ‘லீவ் சிற்றில்’ கையெழுத்தும் வாங்கி மேசைக்கு வர ‘லஞ்ச் பார்சல்’ இவனுக்காகக் காவலிருக்கும்.
பின்னர் தான் புத்தகங்களைத் திறந்து ‘அரியேஸ்’ வேலை பற்றி சிந்திக்க வேண்டும். அவற்றினைச் செய்து முடித்து, வழமைக்குத் திரும்ப நாட்களை ‘அலோக்கேற்’ பண்ண வேண்டும்.
பால் விநியோகிக்கும் லொறி பெருஞ் சத்தத்துடன் காலி வீதியில் சென்று கொண்டிருந்தது. இப்போ மணி பன்னிரெண்டரையாகவோ, அல்லது ஒருமணியாகவோ ஆகியிருக்கும். மூன்று மணிக்கெல்லாம் எழுந்து குளிக்கும் ‘ஐயா’ என அங்கு தங்கியிருப்பவர்களால் அழைக்கப்படும் முன்னறை முதியவர் இன்னும் கொஞ்ச நேரத்தில் ‘பாத்ரூமில்’ தண்ணீரை நிரப்ப தகரத்தை நிமிர்த்தலாம்.
இவனுக்கு நித்திரை இன்னும் வருவதாக இல்லை. பயணம் வந்த இரவில் இப்படிப் படுத்துப் புரண்டு சிந்திப்பதும், இனி அடுத்த பயணம் பண்ண எத்தனை மாதங்கள் செல்லுமோ என அங்கலாய்ப்பதும், திருமணமான பின் இவன் வாழ்வில் இன்றொடு பதினாறாவதோ, பதினேழாவதோ தடவையாக நிகழ்கிறது. ‘இந்த பஸ், ரெயின் எல்லாம் ஒழங்காக ஓடி கொடிகாமத்தில் போய் பிரதி வெள்ளி இரவுகளும் இறங்கும் நாள் வரும் போது மன அலைச்சல், உடல் அலைச்சல் இன்றி எப்படியாக நிம்மதியாக வாழலாம்?’ என்று கூட, சற்று மிகையான எதிர்பார்ப்புத் தான் ஆனாலும் முடிவில் இவன் எண்ணத் தவறுவதில்லை.
வடக்குத் திசையில் ஜன்னலுாடே வெகு உயரத்தில் ஏதோ வெளிச்சம் தோன்றி, மறைந்தது போல இவன் உணர்ந்தான்.
கூ…கூ… இரவைக் கிழித்துக் கொண்டு எரிபொருள் ‘றெயினோ,’ சரக்கு ‘றெயினோ’ ஏதோ ஒன்று தெற்கிலிருந்து வடக்கு நோக்கி சென்று கொண்டிருப்பது, மிக அண்மித்ததாகவே இப்போ இவனுக்குக் கேட்கிறது.
வடக்கில் அதே வெளிச்சம் இன்னோர் தடவை மிக அருகாமையில் தோன்றி மறைந்தது.
– வீரகேசரி
– புதிய பயணம் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: வைகாசி 1996, பதிப்புரிமை: திருமதி இ.சாந்த குமாரி, கொழும்பு.