ஒரு வழி




(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“ஓ ‘களவெடுத்தா கொம் பியத்தில் சொல்லு வேணு’ மெண்டு சுவாமி சொல்லித் தந்தவர். நான் இன்னும் பாவம் செய்யேல. பாவம் செய்யாட்டி கொம்பியாரிக்க ஏலாது. அது தான், ‘களவெடுத்தனா’னெண்டு பொய் சொன்னனான்”
“புஸ்பம், இப்ப ஏன் கோயில்ல மணியடிக்குதெண்டு எங்க சொல்லண பாப்பம்?”
”செவஞ் சொல்றதுக்குத்தானண. பேந்தென்ன?”

“ம் கூ… இல்ல”
“ம்… பிராத்தினைக்கு”
“இல்லயண, இல்ல…”
“அப்ப நீ சொல்லண புள்ள பாப்பம்?”
“அப்பிடியெண்டா, நீ ஆத்தாப்பி?”
“நான் ஆத்தாப்பீதான். எங்க, நீ சொல்லண:”
“ஆ… ஒத்துக்கொண்டிட்டா ஒத்துக்கொண்டிட்டா”
“ஆத்தே இவவுக்கும் தெரியாது…’
“ங்க்…ங்க்…”
“தெரிஞ்சா எங்க சொல்லனண?”
“சொல்லட்டோ?”
“சொல்லன்”
”சொல்லிப்போடுவன்”
“சரி சொல்லுமன்”
“நாளைக்குப் பெருநாள். எங்களுக்கு முதச் சப்பிரசாதம். அதுக்காவத்தான் இப்ப கொம்பிசததுக்கு மணி அடிக்கினம்”
”எடியே, உண்ணாணையடி ஜோதி இது என்ர மனதுக்க இம்மட்டு நேரமாக் கிடந்தது. சொல்றதுக்கு அப்ப வாய்க்க வரேலடி”
”சரி, கொம்பிசம் பண்ணுற பாடம் மனதுக்க கிடந்தா அவுக்கெண்டு சொல்லண பாப்பம்?”
“சருவேசுரன் கற்பனை பத்து. திருச்சபையின் கட்டளை ஆறு”
“ஏழாங் கற்பனை என்ன?”
“களவு செய்யாதிருப்பாயாக”
“நாலாங் கற்பனை?”
“பிதாவையும் மாதாவையும் சங்கித் திருப்பாயாக”
“நீ என்ன பாவஞ்செய்தனியெண்டு ஞாபகமிருக்கோ?”
“ம்……ம்……”
”என்ரி இது? ஊமாண்டியாட்டம் ‘உம்’மெண்டு முழு சிறாய்?”
“ம்… களவெடுத்தனான்!”
“அய்யோ. எக்கணம் நரகத்துக்குத்தான் போவாயண புள்ள”
”களவெடுத்தாத்தானே?”
“அப்ப, நீ இப்ப களவெடுத்ததெண்டு சொன்னாய்?”
“ஓ… ‘களவெடுத்தா கொம்பியத்தில சொல்லவேணு’ மெண்டு சுவாமி சொல்லித் தந்தவர். நான் இன்னும் பாவம் செய்யேல. பாவம் செய்யாட்டி கொம்பியாரிக்க ஏலாது. அதுதான் ‘களவெடுத்தனா’னென்டு ‘பொய்’ சொன்னனான்”
”அய்யோண, பொய் சொன்னா அதுவும் சாவான பாவமல்லோ?”
“அப்பிடியெண்டாத்தானே ‘பாவம் செய்தனானெண்டு, அதைக் கொம்பியத்தில சொல்லலாம்?”
“எடிய ஓமடி. கொம்பியத்துக்குப் போறதெண்டா பாவம் செய்யத்தான்ரி வேணும்”
“சுவாமி கோவிச்சால் ?”
“எண ஆத்தே. இவவுக்குத் தெரியாதாக்கும். சுவாமி ஒருக்காலும் கோவிக்கமாட்டார்’ அவர் ‘இந்தப் பெரீய’ பட் டுத்தாடி வச்ச நல்ல அச்சாச் சுவாமி. அப்ப ஏன் கோவின்கிறா?”
“கோவிச்சால்…?”
“இவவுக்கு ஒண்டும் தெரியாது . ம்… ம்…சுவாமி ஆசீர்வாதம் தருவார்… இனிப்புத் தருவார்…?”
”எண ஜோதிப்புள்ள, நாளைக்கு நீ புதுச்சட்டை போட் டருவியோண?”
“ஓம் போட்டருவன்’
”அப்ப, நீ?”
”ஓ, நானும் போடுவன்”
“என்னெண்டெண போட்டருவீர்?”
“ஏன்:”
“உங்கட பப்பா கொழும்பில. அப்ப, உளக்கு ஆரண புள்ள சட்டை வேண்டித் தாறது?”
“அ… எங்கட பப்பாவோ? அவர்.. எங்கட பப்பா பெருநாள் கொண்டாடுறதுக்கு .. நாளை ராவைக்கு… ‘குச்சுக் குச்சுக் கூ’வெண்டு குசாலா வாற றயிலில வருவார்”
”வருவாரோ?”
“ஓ எங்கட பப்பா வருவார். வரேக்க எனக்கு அச்சாச் சட்டை… பூப்போட்ட பட்டுச் சட்டை… காலுக்குச் சப் பாத்து மேசு, சின்னட்டிக் குடை… சோறு கறி காய்ச்சி விளையாடுறதுக்கு சுக்குட்டிச் சுக்குட்டிச் சட்டி பானை எல் லாம் வேண்டியருவாரணை. உங்கட அப்பு உனக்கு என்ன வாங்கித் தருவார், எங்க சொல்கண… புஸ்டப்பிள்ள சொல் லண பாப்பம்”.
“எங்கட அப்புவோ?… ம். ம்… எங்கட அப்பு… ம் எங்கட அப்புவும்…”
“அய்யய்ய… இவ, ‘எங்கட அப்பு எங்கட அப்பு’ வெண்டு சும்மா வாய அலட்டுறாவல்லாம, தங்கட அப்பு என்ன வேண்டித் தருவாரெண்டு சொல்றாவில்லைத்தானே…?”
”அங்… எங்கட அப்புவும் நாளைக்குப் பெரிய பட்டி னம் போய், உங்கட பப்பா கொழும்பால வாங்கியருவா ரெண்டு நீ சொன்ன விளையாட்டுச் சாமான்போல இல்ல இல்ல, அதுக்குங் கூட இந்தப் ‘பெரீசா’… ஊரிப்பட்ட விளையாட்டுச் சாமான் வாங்கியரத்தான் போறார்”
“என ஆத்தே… புஸ்பம் நீ பொய் சொல்றியணை”
“ஏனணை நான் பொய் சொல்லப்போறன்?”
“பின்ன என்னண, உங்கட கொப்பர் ‘முட்டு’ப் பட்ட வர். எப்பிடியண வாங்கித்தருவார்?”
“நீ இருந்து பாரண புள்ள”
“எப்பிடிச் சொல்லுவீர்?”
“எங்கட ஆச்சி எனக்கு எல்லாம் சொன்னவ”
“எப்ப சொன்னவ?”
”ராத்திரி படுக்கேக்க”
”ராத்திரி என்ன திண்டனீங்கள்?”
“பாண்”
”பாணோ?’
“ஓ, அதுக்கென்ன?”
“அப்ப. எங்களப்போல சோறு தின்றேலயாக்கும்?”
”சோறு தின்றனாங்கள் தான். கூப்பன் முடிஞ்ச பிறகு அரிசிக்குக் காசிராது ஆச்சி எங்களுக்குப் பாணதான் தாறவ”
“அப்பபட்டுச் சட்டை சப்பாத்துக்கு உங்கட அப்பு ஆச்சியவேயிட்டக் காசு இருக்கோண புள்ள?”
“இருக்கும் தான். எல்லாம் வேண்டித் தாறனெண்டு ஆச்சி சொன்னவ”
”உங்கட அப்பு சொன்னவரோ?”
“அப்பு சொல்லேல. அவர் ஆச்சிக்குச் சொன்னதெண்டு, ஆச்சி எனக்குச் சொன்னவ”
“அப்ப, உங்கட அப்பு உனக்குச் சட்டை வாங்கித் தரு வாரெண்டு நம்புறியோ?’
”ஓ…ஓ தருவார்தான்”
“இம்மட்டுப் பென்னாம்பட்ட கண்ணாடி பவுடர் போணி?”
“ஓ, அதுவுந்தான்”
“அப்ப, தொப்பி சப்பாத்து?”
“அ, பின்ன”
“குடை?”
“ஓ”
“ம்… ம் சின்னச் சோறி கறி காச்ச இம்மட்டு நக் கிணி நக்கிணிப் பான சட்டியும்’ வேண்டித் கருவின மோண?”
“ஓமண புள்ள”
“அப்புடியெண்டா, எங்கட பப்டா எனக்கு ‘பளபள’க் கிற சட்டி பானை பவுணில வேண்டித் தருவார். இருந்து பாரும்”
“எங்கட அப்புவும் வேண்டித் தருவார் நீரும் இருந்து பாரும்”
“கட்டாயம் வேண்டித் தருவாரோ?”
“ஓ, கட்டாயம் வேங்கித் தருவார்”
“ம் எங்கட பப்பா அதுக்கும் கூட பட்டுச் சங்கிலி காப்பு எல்லாம் கொண்ணந்து எனக்குத் தருவாரணை. இருந்து பாரனண”
”எனக்கும் எங்கட அப்பு அப்புடிக் கொண்டந்து தருவார் தானே?”
“புசுக்கிட்டிப் பட்டுக் காப்பும் வாங்கித் தருவாரோ?”
“ஓ……”
“சங்கிலி?”
“ஓ…ஓ…”
“வேண்டித் தராட்டி?”
“அங்க்……”
“கள்ளப் புள்ள .. புஸ்பப்புள்ள அம்புட்டுப் போனா அதுதாள் ‘ம்’மெண்டு முழுசுறா”
“எண புஸ்பப் புள்ள, இந்தப் பைக்குள்ள என்ன கிடக் கெண்டு எங்க பாக்காமச் சொல்லு பாப்பம்?”
“சொன்னா என்ன தருவீரண?”
“இதுக்க கிடக்கிற சாமானில அரவாசி… இல்ல இல்ல பத்துச்சாம் தாறன் ம்.. இல்ல பதினாஞ்சியம் தாறன்”
“அப்ப, சொல்லட்டோ?”
‘ஓ, சொல்லும்”
“ம்.. பினாட்டும் புளுக்கொடியலும்”
“இல்லயல்லோ தோத்துப்போனா”
“அங்.. ம்.. ம்.. நேத்துச் சின்னம்மாப் பெத்தாச்சி யின்ர வளவுக்க புடுங்கின விளாங்காயள்”
“இல்ல.. ஏப்பிச்சுப் போனாயண”
“ம்…… மாம்பழம்”
“இல்ல”
“வாழப் பழம்”
“க்ஹி… ஹி… ஹி
“ஈ ஈ யெண்டு இளிக்கிறா, உது வாழப் பழம்தானே?”
“க்ஹி… க்ஹி ஹி… ஹி..”
“என்ன ஈஹி..ஹி…?”
“வவ் வவ் வவ்…”
‘வவ் வவ்… வவ்வவ்… வவ்வே”
“போடி”
“நீ போடியங்கால”
”இவவுக்கு வெக்காளம் வந்துட்டுது”
”உனக்குத்தான் வெக்காளம்…”
“எனக்கேன் வெக்காளம் வருது?”
“அப்ப, நீ ஏன் ‘ஈ’யெண்டு இளிச்சுப் பகுடி பண்ணினனி?”
“நீ எல்லாத்தையும் படு புழையாச் சொன்னா…?”
”ம்… சரி, இனிச் சரியாச் சொல்லட்டோ?’
“ஓ, சொல்லெண்டுதானே கேக்கிறன்?”
“முதல்ல நான் ஒண்டு கேசகிறன். அதச் சொல்றி யோண?
“அதென்ன. கேளன்?”
”கேக்கட்டோ?”
“கேளன், சொல்ல”
”உதுக்க தின்ற சாமானே அல்லாட்டி விளையாட்டுச் சாமானோ?”
“தின்ற சாமானில்ல”
“அப்ப, விளையாட்டுச் சாமான்…?”
“அதுவுமில்ல”
“அப்ப, என்னாவ சொல்லேலாது”
“சொல்லாட்டிக் காசு தரமாட்டன்”
”எனக்கு உம்முடைய காசு வேண்டாமண”
”பதினஞ்சியம்… வேண்டாம் தானோ?”
“வேண்டாம்”
“கடசியாக் கேக்கிறன்; வேண்டாம் தானோ?”
“ஓம், வேண்டாம்”
“சரி, இனி பையத் துறக்கப்போறன். அதுக்கிடையில சொல்றெண்டாச் சொல்லிப்போடண புள்ள. புறகு சொன் னாச் சேர்க்க மாட்டன்”
“என்னால ஏலாது. ஆகச் ‘செட்டு’ விடாமல் சொல்லும்”
“இந்தா துறக்கப்போறன்..இந்தா வண்… ரூ…திறீ… அ, பிஞ்ச பார் புள்ள… பாத்தியோண பட்டுச் சட்டை….!?”
”அய்யய்யோ, வாயப் பேசமாட்டாவாம்… என்ரி புஸ்பம், இதப் பாத்திட்டுக் கண்ணால ஏன் அழுறாய்?”
“அங்…”
“நான் பேசினானோ?”
“இல்ல ஜோதி”
“அப்ப ஏன் மறுக்காலும் அழுறாய்?”
”உங்… உங்கட பப்பா கொழும்பால வந்திட்டாராக்கும்?”
“ஓம் வந்திட்டார்”
“எங்கட அப்பு?”
“அவருக்கு என்ன?”
“ம். அவர் ம்… மங்… மங்…?”
“பேந்தும் ஏன் அழுறாய்?”
“அப்பு பெரிய கடைக்குப் போகேல்ல”
“ஏன்?”
“காசில்ல.. ங்க்… ங்க்.”
“நீ அழாத புஸ்பம்… அய்ய, வயிறு எக்கியிருக்கே…? பசிச்சா சொல்லு… எங்கட பப்பா கொண்டந்த விசுக்கோத்து எடுத்தந்து தாறன்”
”எனக்கு விசுக்கோத்து வேண்டாம் ஜோதி”
“அப்ப, பசிக்கேலியா?”
“ம் ஹும்…”
“அப்ப, ஏன் அழுதனி?”
“நான் அழேல்ல… சும்மா கண்ணீர் வந்தது”
“பச்சப் பொய் சொல்றா. எனக்கென்ன பொய் சொன்னா, பேய் புடிச்சுக்கொண்டுபோய் பாதாள நரகத்திலதான் தள்ளும்”
”பொய் சொன்னாலோ?”
“பின்ன என்ன சுவாமி சொன்னவர். அதுக்குள்ள மறந்திட்டியே?”
”இனி நான் பொய் சொல்லமாட்டன். ம்.. உது பட்டுச் சட்டைதானே?”
“ஓ, பட்டுச் சட்டைதான். இஞ்ச பார், நல்ல சிவத்தப் பூப் போட்டிருக்கு. வட்டமா, வடிவான பூ…”
“எடியே, நாச்சியார். சோக்கான சட்டதான்.”
“சப்பாத்து மேசு பாக்கேலியோ?”
“எங்க எடு பாப்பம்?”
”அ, இந்தா… நல்லா உத்துப் பார்”
”எடியாத்தே, இதுவும் பட்டடி”
“எல்லாம் பட்டிலதான்”
”அப்ப சப்பாத்து?”
“தொப்பி,சப்பாத்து, மேசு, சங்கிலி எல்லாம் பட்டில தான். சோறு கறி காச்சச் சின்னச் சட்டி பானை. ‘பளக் பளக் கெண்டு வடிவான பட்டு றிபன், சின்னடடிச் சீப்பு. அம்மாவுக்குப் பட்டுச் சீல. தம்பிக்குப் பட்டுக் களிசான், தங் கச்சிக்கும் வடிவான நிறத்தில பட்டுச் சட்டை.. ம்.. நீ என்ன மறுக்காலும் முகத்தைக் கோவிச்சுக்கொண்டு அங் கால திரும்பினா, நான் முழுவாத்தினியும் சொல்லமாட்டன்”
“சொல்லாட்டிப் போரும்”
“இவவுக்கு வாற வெக்காளத்தைப் பார்”
“ங்ஙே… உனக்குத்தான்ரி வெக்காளம்”
“ஏனண புள்ள எனக்கு எங்கட பப்பா எல்லாம் வேண் டித் தந்திருக்கார்தானே? அப்ப, ஏன் எனக்கு வெக்காளம் வருகுது?”
“நாங்க முட்டுப்பட்ட தெண்டாலும் எங்கட அப்பு எனக்கும் உப்பிடி வேண்டித் தருவார்தானே?”
“முதச் சப்பிரசாதத்துக்குப் போட்டுக்கொண்டு போறெண்டா, ராவைக்கிடேல் வண்ட ணுமல்லோண புள்ள?”
“எங்கட அப்பு ராவைக்கிடேல வாங்கித் தாறாரோ இல்லியோண்டு இருந்து பாருமன்”
“உனக்குச் சொன்னவரோ?”
”எனக்கு நேத்துச் சொன்னவர். அதுக்கு முந்தி…. அது கும் முந்தி அதுக்கு அதுக்கும் முந்தி நெடுகலும் சொன்னவர். நாளைக்கும் சொனைவர்”
“க்ஹி…ஹி…ஹி…”
“சிரிக்கிறியோண புள்ள சிரியும் சிரியும். சிரிச்சுச் சிரிச்சுச் சொண்டுத்தண்ணிய வாங்கிக் குடியும்”
“என்ரி புஸ்பம், ராவைக்குப் பூசை துவங்கிறதுக்கு முந்தி உங்கட அப்பு சட்டை தொப்பியெல்லாம் வாங்கிக் தருவாரெண்டியே, ஆக்களெல்லாம். கோயிலுக்கு வெளிக் கிட்டும் பே கினம். எங்க, உன்ர சட்டை, தொப்பி சப் பாததைக் காணல்லியே?”
”ம்.. அது.. வீட்டில காசில்லியாம் ‘வாற வரியப் பெருநாளுக்கு ரண்டு பட்டுச் சட்டை வேண்டித் தாதன். பள்ளிக்கூடத்துக்குப் போடுற சட்டைய – சவுக்காரம் போட் டுத் கோச்சுப்போட்டுக் கொண்டு போ’வெண்டு சொல்லிப் போட்டு அப்பு எங்கயோ போட்டார்”
“எங்க தோச்ச சட்டைய எடுத்துக் கொண்டா பாப்பம்?”
“இஞ்ச நான் போட்டி நக்கிறன்- இதுதான்”
“இந்தச் சட்டையோடயே கோயிலுக்கு வரப்போறாய்?”
“பின்ன, பேந்தென்ன செய்யிறது
“இது தோச்சதோ?”
“ஒ, வேறயென்ன?”
“ஆர் தோச்சது?”
“ஆச்சி”
”சிச்சீ……”
”ஏன்ரி ஜோதி ‘சீ’யென்கிறாய்’ இது என்ன செய்யிது?”
“இன்னும் இந்தச் சட்டையத் தோய்க்கேல. உங்கட ஆச்சி உனக்குப் ‘பொய்’ சொல்லியிருக்றாவாக்கும் ”
“இல்ல, நான் கண்டனான். சவுக்காரம போட்டு நல் லாத் தோச்சவ. அங் அ… அவ தோய்க்கேலயெண்டு உனக்கென்னெண்டு தெரியும்?”
“இதெல்லாம் கிழிஞ்சிருக்கு. இஞ்ச பார் தோள் மூட் டாலயும் கிழிஞ்சிருக்கு. அப்ப உங்கட ஆச்சி இதை ஏன் தைக்கேல?”
“தைச்சிருக்கிறாதானே?”
”வடிவாத் தைக்கேல”
“சாமப்பூசை,ராவில தையல் – கிழிஞ்சது ஒண்டையும் ஆக்கள் கவனிக்கமாட்டின’மெண்டு ஆச்சி சொன்னவ”
”எங்களுக்கென்ன, உங்கட ஆச்சி ‘பொய்’ சொல்லி ஏமாத்தியிருக்கிறா. எக்கணம் அவவுக்கு நரகம்தான் கிடைக்கும்”
”அ.. எங்கட ஆச்சி பாவம். அவ தான் தின்னாட்டியும் கிடக்கிறதை எங்களுக்குத் தந்துபோட்டுப் பட்டினியாப் படுக்கிறவ. பொய் சொன்னாலும் அவவுக்கு நரகம் வராது”
“எப்பிடியெண்டாலும் ‘பொய்’ சொல்லியிருக்கிறா தானே?”
“அப்பிடியெண்டாலும் நரகம் வராதெண்டுறன்”
”அ இப்ப ஒத்துக்கொண்டியா?”
“…ங்க்”
“என்ரி புஸ்பம், பேந்தும் கண்ணால அழுறாய்?” “ஒண்டுமில்ல; நான் அழேல்ல”
“நீ அழாத… அழுதியோ… அழுதியெண்டா… ம்..அழுதியெண்டா நான் அழுவன்”
“நான் அழேல்ல… ம்… இது பீத்தல் சட்டையாத்தான் கிடக்கு. வேற சட்டையுமில்ல. என்னெண்டு கோயிலுக்குப் போறது?”
”அப்ப, கொஞ்சம் பொறு, வாறன்”
”ஜோதி, நீ எழும்பிப்போய் இப்ப ஏன் அழுதுகொண்டு வாறாய்? அய்யய்யோ… இதென்னடி ஜோதி உன்ர முக மெல்லாம் தடிச்சிருக்கு?”
“நான்… நான்… ஒருத்தருக்கும் தெரியாமக் காசு எடுப்பமெண்டு றங்குப் பெட்டியத் துறந்தன். அம்மா கண்டிட்டா”
”ஏனண களவெடுத்தனி? சாவான பாவமெல்லே? சப் பிரசாதம் எடுக்கமுந்திப் பாவம் செய்தால், அதும் பிறகு சப்பிரசாதம் எடுக்கப்படாதல்லோண?”
“அது தான் அம்மா என்ர கன்னத்தில சுத்துக்கும் பித் துக்கும் அடிச்சவ”
“பாவம் நீ இனி அழாத… நல்லா அடிச்சுப்போட்டா. எங்க இஞ்சால திரும்பு ஜோதி”
”என்ர ஆச்சி! பிஞ்ச பார் எல்லாடமும் ‘பொதுக்குப் பொதுக்’கெண்டு வீங்கிப் போச்சு, என்னத்தால அடிச்சவ?”
“கையாலயும் பூசரங்கம்பாலயும்”
“எங்கட ஆச்சிமாதிரி உங்கட அம்மா உன்னில் நேச மில்ல.. நல்லா நோகுதே?”
”இல்ல, எங்கட அம்மா என்னில நல்ல நேசம். ஆனா… “
“எங்கினேக்க நோகுது?”
“இஞ்ச முதுகில…”
“ங்க்…ங்க்…ங்ங்க்’
“இதென்ரி புஸ்பம், எனக்கு அடி விழுந்ததுக்கு நீ ஏன்ரி அழுகிறாய்?’
“ம்… ஜோதி”
“என்ன புஸ்பம்”
“ஏன் காசு களவெடுத்தனி?”
”உனக்குத் தாறதுக்குத்தான்”
”எனக்கேன், நான் உன்னட்டக் காசு கேட்டனானே?”
“நீ கேக்கேல. ஆனா, பெருநாள் பூசைக்கு நாங்க ரண்டு பேரும் ‘ஒரே மாதிரி – ஒண்டாப்போக’ உனக்குச் சட்டை இல்ல. அதுதான் எடுத்தனான்”
“ஆ. எனக்குச் சட்டை எடுக்கவே?”
“எடியே, இவவின்ர முகத்தில வாற ஆசையப் பாற்றி?”
“அச்சா ஜோதி என்று பட்டு ஜோதி”
“க்ஹி…ஹி ஹி ஹி…”
“நீ என்ன ‘அச்சாப்பிள்ள’யெண்டு சொல்லேல?”
“அ நீயும் அச்சாப் புஸ்பம்…என்ர பட்டுப் புஸ்பம்”
“க்ஹி… க்ஹி… க்ஹி.. ஹி….ஹி”
”ஜோதி, பூசைக்கு நேரஞ்செண்டு போச்சு கெதியா வெளிக்கிட்டுவாவன்”
“நீயும் வாறியோ?”
”பின்ன, வராம்”
”உனக்குச் சட்டை?”
“இந்தச் சட்டையோட வாறன்”
”அப்ப நானும் இப்பிடியே வாறன்; வா, போவம்”
“ஆ..!?”
“என்ரி புஸ்பம் ‘ம்’மெண்டு கண்ணை முழிக்கிறாய்?”
“உனக்கு நல்ல பட்டுச் சட்டை இருககே அதை மறந் திட்டு இப்பிடியே வாறனெண்டிறியே?”
“நீ புதுச் சட்டையில்லாமலிருக்கிறியே, அதுக்குத்தான் சொன்னனான்”
”வாறவரியம் கட்டாயம் வேண்டித் தாற னண்டு அப்பு சொன்னவர். நான் வாறவரியப் பெருநாளுக்குப் போடுவன்”
”அப்ப, என்ர புதுச்சட்டையையும் நான் வாற வரியம் தான் போடுவன். அது இப்ப எனக்கு வேண்டாம்”
“உங்கட பப்பா அம்ம வே சொன்னாலும் போடமாட்டியோ?”
“ப்ஹு… போடமாட்டன்”
”அவே. அடிச்சால்…?”
“அடிச்சா அடிக்கட்டுக்கள்”
”எனக்காவ நீ ஏன் ஜோதி அடிவேண்டுறாய்?’
“உன்னைப்போல் உன் அயலாரையும் நேசி’யெண்டு ஏசுநாதர் சொன்னவரெல்லே? அப்புடி உண்மையா நடந்தாத்தான் எங்களுக்கு மோச்சம் கிடைக்கும்”
“ஓ…நீதான் சோக்கான – நல்ல ஜோதி”
“அ… நீயும் சோக்கான – நல்ல புஸ்பம்தான்”
“என்ர ஜோதியல்ல, ஒருக்கா உன்ர கைய நீட்டித் தா”
“ம் இந்தா”
”த்சொ… த்சொ”
“இதேன்ரி புஸ்பம், என்ர கையக் கொஞ்சிறாய்?”
“உன்ர அன்பில் உன்ர நேசத்தில்”
”அப்ப உன்ர கையயும் நீட்டித்தாண”
”அ, இந்தா கொஞ்சு”
“த்சொ த்சொ”
“இஹி…ஹி..ஹிஹி…ஹிஹிஹி”
‘இஹி…ஹி…ஹிஹி ஹிஹிஹி…’
– 1963 தினகரன்
– அகஸ்தியர் கதைகள், முதற் பதிப்பு: 1987, ஜனிக்ராஜ் வெளியீடு, ஆனைக்கோட்டை.