ஒரு பே(ர)ட்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 2, 2024
பார்வையிட்டோர்: 284 
 
 

(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“டாக்டர் இருக்கிறாரா?” 

குரல் கேட்டதே ஒழிய யாரையும் காணவில்லை. வாசலில் இருந்த வேலையாள் திகைப்புடன் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு விழித்தான். 

”உன்னைத்தானே,டாக்டர் இருக்கிறாரா?” 

“நீங்கள் யார்? எங்கிருந்து பேசுகிறீர்கள் என்று தெரியவில்லையே!” 

“நான் இங்கிருந்தேதான் பேசுகிறேன். டாக்டர் இருக்கிறாரா?” 

“யார் டாக்டர்?” 

“ஆகாயத்தில் கட்டிடம் கட்டப் பார்க்கிறாரே, அவர்.” 

“ஐயாவைக் கேட்கிறீர்களா? இருக்கிறார். நீங்கள் யார்?” 

“எனக்கு அவரைப் பார்க்கவேண்டும்.” 

“ஒரு குரல் மற்றொருவரை எப்படிப் பார்க்க முடியும்?” 

“அந்தக் கதை எல்லாம் உனக்கு எதற்கு? யாரோ பார்க்க வந்திருக்கிறார் என்று சொல்லேன். “

”பேர் கேட்பாரே.” 

“பிரகிருதி என்று சொல்.” 

சரி என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் திரும்புமுன் அங்கே ஓர் உருவம் முளைத்து விட்டது. வேலையாள் பயந்து போய் உள்ளே ஓடி விட்டான். ஐந்து நிமிஷத் திற்குள் விஞ்ஞானி வெளியே வந்தார். அங்கிருந்த உரு வத்தை ஆணா பெண்ணா என்று நிச்சயிக்க முடியவில்லை. இருந்தாலும் வந்தவரை வணங்கி விட்டு வரவேற்பறைக்கு அழைத்துச் சென்றார். 

“உங்கள் பெயரை என் வேலையாள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையோ என்று நினைக்கிறேன். என் னவோ என்று பிதற்றினான்.” 

“பிரகிருதி என்றுதான் சொல்லி அனுப்பினேன்.” “அப்படி என்றால் சரிதான். ஆனால் ஒன்று; உங்க ளுக்கு உருவம் இருக்கிறதே!” 

“எங்களுக்கு உருவம் கிடையாது. ஆனால் உருவங் களை எங்களால் உண்டாக்க முடியும்; அவைகளுக்குள் புகுந்துகொண்டு மிஞ்சியும் இருக்கமுடியும்.” 

“விளங்குகிறது.” 

“நீங்கள் ஆகாயத்தில் கட்டிடம் கட்ட ஏற்பாடுகள் செய்திருப்பதாகச் சொன்னார்கள். அதைப்பற்றித் தெரிந்துகொள்ளலாம் என்று வந்தேன்.” 

“ஆமாம். என் திட்டம் பூர்த்தியாகி விட்டது.அதற் கான அணுசக்தி, தளவாடச் சாமான்கள் எல்லாம் தயாராகி விட்டன. இரண்டு மாதத்துக்குள் வேலை துவங்கிவிடும்.” 

“நீங்கள் மட்டுந்தான் அந்தக் கட்டிடத்தில் வசிப்பீர் களா? அல்லது குழந்தை குட்டி வேலையாட்களுடன் தங்குவதாக உத்தேசமா?” 

“நல்ல வேளையாக அந்தத் தொந்தரவெல்லாம் எனக்கு இல்லை. என் வேலையாள் மட்டுந்தான் வருவான்.”

“சரி, உங்கள் வேலையாள் வருவதானால் உங்கள் உல கத்தில் உள்ளவர்கள் எல்லாருமே வரக் கூடியதான திட்டம் இருக்கவேண்டுமே! நகரங்கள் நிர்மாணிக்கும் திட்டம் இருக்கவேண்டுமே.” 

“இருக்கிறது.” 

“எங்களுக்கு இரண்டொரு சந்தேகம், இப்பொழுது மனித ஜாதிக்குப் பொறி, புலன்கள், ஜீரணக் கருவிகள், ரத்த நாளங்கள், மூச்சுப்பை இவற்றை யெல்லாம் அமைத்துச் சிருஷ்டி செய்து வருகிறோமே. நீங்கள் விஞ் ஞான ஆராய்ச்சிக்காகத் தயார் செய்து அனுப்பும் ஆட் களைப் பார்த்தால், எங்கள் இயற்கை முறைச் சாதனங் களை அமைப்பதா வேண்டாமா என்று யோசிக்க வேண்டி வந்து விட்டது. நான்கு நாளைக்கு முன் ஓர் ஆகாச வாணத்தில் ஒரு விஞ்ஞானி வந்தார். அவரைப் பார்த் ல் சோளக் கொல்லைப் பொம்மைக்குப் பொருத்தமாய் இருந்தது. கண்ணா. மூக்கா. உடம்பா ஒன்றையும் காண வில்லை. முகம், உடம்பெல்லாம் ஏதோ ஒரு பொருளால் மறைந்திருந்தது. காது இருக்கவேண்டிய இடத்தில் ஒரு சின்ன யந்திரம்; மூக்கு இருக்கவேண்டிய இடத்தில் ஒரு சின்ன யந்திரம். கண் இருக்கவேண்டிய இடத்தில் ஒரு சின்ன யந்திரம். இப்படிக் காட்சி அளித்தார். நான்கு நாள் எங்களுடன் இருந்தார். எங்களுடன் பேசவும் இல்லை; சாப்பிடவும் இல்லை. சாதாரண உணவு தேவை இல்லாமல் உங்களால் மனிதனை ஆக்க முடியும் என்று தெரிந்தவுடன் தான் உங்களைப் பார்க்க வேண்டியது அவசியம் என்று கருதினோம். 

“ஆமாம், இதில் ஓர் அளவு வெற்றி கண்டு விட்டோம்.” 

“அப்படியென்றால் எங்கள் முறையில் ஜீரணக் கருவிகளை ஏன் இனி அமைக்க வேண்டும் என்பதுதான் அடுத்த கேள்வி.” 

“கேள்வி சரிதான். விஞ்ஞானி என்ற முறையில் அதற்கு எங்களால் பதில் சொல்ல முடியாது. அது உங்கள் பொறுப்பு. எங்களைக் கேட்டுக்கொண்டா உல கத்தைச் சிருஷ்டித்தீர்கள்?” 

“இயற்கைக்கு உதவியாக நீங்கள் வேலை செய்வதாக இது வரையில் நினைத்து வந்தோம். இப்பொழுது அப்படி இல்லை என்று தெரிந்துவிட்டது. எங்கள் வேலையில் குறுக்கிட்டுச் சிக்கலையே உண்டாக்கி வருகிறீர்கள்.நம் இருவருக்கும் இடையில் மனித ஜாதி கஷ்டப்படுகிறது. விஞ்ஞான ரீதியாக உணவு அளிக்க ஆரம்பித்தால் விஞ் ஞான ரீதியில் உணவுக் கருவிகளை அமைக்க வேண்டாமா? அதற்கு ஏற்பாடு செய்யாமல் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தினால் பாதி ஆற்றைத் தாண்டின கதைதான். இதே தான் மூச்சுப்பை விஷயத்திலும்.” 

”உண்மைதான். என் வேலையாள்கூடத் தன் ஜீரணக் கருவிகளில் ஏதோ கோளாறு என்று டாக்டரிடம் காட்டினானாம். உன்னுடைய உணவு முறையின் விளைவு என்று அவர் பதில் சொல்லிவிட்டாராம்.” 

“அதையேதான் நானும் சொல்கிறேன். கீரைத் தண்டு, வெங்காய சாம்பார், சப்பாத்தி, ரஸகுல்லா, ரொட்டி, மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, குயில் நாக்கு, தவளை, பாம்பு இவைகளை உணவாக ஏற்கும் முறையில் ஜீரணக் கருவிகளை அமைத்திருக்கிறோம். அவைகளும் பழகி விட்டன. விட்டமின் ஏ.பி.ஸி.டி.என்றெல்லாம் மாத்திரைகளைத் தின்று சமாளிக்க அவைகளுக்குத் தெரி யாதே. அதைப் பற்றித்தான் யோசிக்கிறேன். அதே மாதிரி, நாங்கள் அமைத்திருக்கும் மூச்சுப்பை இந்தச் சூழ்நிலையில் வேலை செய்வதற்காகத் தயார் செய்யப் பட்டது. அதைக் கொண்டு போய் ஆகாயத்தில் வைத்து என்ன விஞ்ஞான தந்திரம் செய்தாலும் முடிவில் அத னால் நிலைமையைச் சமாளிக்க முடியாது. உயிருக்கு ஆபத்து நிச்சயம். எனவே ஓர் அடிப்படையான விஷ யத்தை நீங்கள் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும். இயற்கையை வைத்துக்கொண்டு அதற்கு உதவியாக விஞ்ஞானத்தை உபயோகப்படுத்தப் போகிறீர்களா? அல்லது அதை விரட்டி விட்டு அந்த ஸ்தானத்திலே அமரப் போகிறீர்களா?- இதுதான் கேள்வி. மனித ஜாதியின் தலைவிதியை இதுதான் நிர்ணயிக்கும்.” 

“நாங்கள் எதிர்பார்க்காததுதான் நடந்துவிட்டது; நடந்து வருகிறது. இயற்கைக்கு உதவியாகத்தான் ஆரம் பித்தோம். ஆலம் விதை மதில் சுவரைப் பிளக்கும் கதை ஆகிவிட்டது. இயற்கைக்குப் போட்டியாகவே மாறி விட்டோம்.” 

“என்ன லாபம்! ஜடப் பொருள்களையும் ஜட சக்தி களையும் பயன்படுத்தி எவ்வளவு அற்புதங்களைச் செய்த போதிலும் உயிர், மனம் இவைகளைச் சிருஷ்டிக்க முடி யாதே. அதற்கு என்ன செய்வீர்கள்? அது முடியாத வரையில் போட்டி பலிக்காது.’ 

“அதை நாங்கள் ஒப்புக்கொள்வதில்லை. விஞ்ஞானிக் குத் தோல்வி என்பதே இல்லை. இன்று இல்லாவிட்டால் நாளை, நான்கு வருஷங்களுக்குப் பிறகு ஆனாலும் சரி: நானூறு வருஷங்களுக்குப் பிறகு ஆனாலும் சரி; வெற்றி காண்போம் என்பதுதான் எங்கள் மதம்.” 

இந்தச் சமயத்தில் அறைக்குள் ஒரு விநோதமான ஆள் நுழைந்தார். 

“என்ன மூணாம் நம்பர்?” என்று விஞ்ஞானி திரும் பிப் பார்த்துக் கேட்டார். 

“நம்முடைய கோஷ்டியின் பத்தாம் நம்பருக்கு அமைந்திருக்கும் பிராணவாயுப் பை நாளையுடன் காலி யாகிவிடும். பிறகு அவன் சாதாரண மனிதன் ஆகிவிடு வான். அதற்கு என்ன ஏற்பாடு! என்று கேட்க வந்தேன். 

“பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு விஞ்ஞானி பிரகிருதியை நோக்கித் திரும்பினார். 

“பார்த்தீர்களா? இதுதான் எங்கள் முக்கியமான சிக்கல். நாங்கள் விசுவாமித்திரரைப்போல் போட்டி உலகத்தையே முழுவதும் சிருஷ்டிக்கவேண்டி யிருக்கிறது. நீங்கள் சிருஷ்டி செய்வதில் பணச் செலவு இல்லை. ஆனால் எங்கள் வேலைக்கு ஏராளமான பணம் வேறு வேண்டி யிருக்கிறது.” 

“நீங்கள் தாம் பெரிய திட்டங்கள் எல்லாம் போட் டிருக்கிறீர்களே! முதலில் பூமியைச் சுற்றிவர ஒரு செயற்கைச் சந்திரனை அனுப்பப் போகிறீர்கள். பிறகு சந்திரமண்டலத்திற்கு யாத்திரை போகப்போகிறீர்கள்: அதற்கு, டிக்கெட்கூட இப்பொழுதே யாரோ ‘ரிஸர்வ் செய்துவிட்டார்களாமே. அதற்குப் பிறகு செவ்வாய்க் கிரகததுக்குக் குடியேறப் போகிறீர்கள்.’ 

“தர்க்க ரீதியாக, விஞ்ஞான ரீதியாக, எங்கள் வெற் றிக்கு அளவில்லை; எல்லை இல்லை.” 

”உண்டு என்று எச்சரிக்கை செய்யத்தான் நான் வந்திருக்கிறேன். உங்கள் எல்லையைத் தெரிந்துகொள் ளுங்கள். அணு சக்தியைக் கொண்டு ஆகாய மாளிகை கட்டுங்கள். பூமியைச் சுற்றி வாருங்கள்.இன்னும் எது வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் அந்தச் சக்தியைக் கொண்டு அணுக்குண்டுகளையும் ஜலஜ குண்டுகளையும் வெடிக்கச் செய்து பரீட்சை பார்க்கக் கூடாது. ஆழம் தெரியாமல் காலை விடுவதுபோல ஆகிவிடும். உஷார்! உடலுக்குள் உயிர் எங்கே ஒளிந்துகொண் டிருக்கிற தென்று சத்திர சிகிச்சை செய்து ஆராயத் துணிவீர்களா? உயிர் வளர்வதற்காகத்தான் விஞ்ஞானம் இருக்க வேண்டும்.உயிரை அழிப்பதானால் விஞ்ஞானம் தானே அழிந்து போகும். இந்த நுட்பத்தைக் கவனியுங்கள் என்று கடைசி முறையாக எச்சரிக்கிறேன்.” 

”நீங்கள்—’ 

விஞ்ஞானி வார்த்தைகளை முடிக்கவில்லை. எங்கிருந்தோ ஒரு கோடை இடி விழுந்தது.பங்களா வாசலில் இருந்த தென்ன மரம் தீப்பிடித்து எரிந்தது. வந்திருந்த உருவத்தைக் காணவில்லை. வார்த்தைகள் மட்டும் எதிரொலித்துக்கொண் டிருந்தன. விஞ்ஞானி சிந்தனையில் ஆழ்ந்தார். 

– மாங்காய்த் தலை (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: டிசம்பர் 1961, கலைமகள் காரியாலயம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *