ஒரு பேட்டி- ஒரு வாழ்க்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 31, 2026
பார்வையிட்டோர்: 1,671 
 
 

“சார்! நான் ஸ்டார்ட்னு சொன்னதும் பேச ஆரம்பிங்க ஓகேங்களா?”

என்று சொல்லிவிட்டு கேமரா மேனை நோக்கி “ரெடியா?” என்று கேட்பதுப்போல் சைகை செய்தான் அந்த நிருபர்,அந்தப் பக்கத்திலிருந்து ரெடி என்று கூறியதும் இங்கு “ஸ்டார்ட்” என்று கூறினான் அந்த நிருபர்.

அவன் கூறியதும் எதிரில் சோபாவில் அமர்ந்திருந்த டிக்ஸன் கேமராவைப் பார்த்து பேச ஆரம்பித்தான்.

“எல்லோருக்கும் வணக்கம்ங்க என் பேரு டிக்ஸன்! நான் ஒரு மெக்கானிக்கல் என்ஜினீரிங் ஸ்டூடன்ட்,என் வாழ்க்கை ரொம்ப அழகானதுங்க,கிராமத்து வாழ்க்கை கிராமமும் நல்ல ஒரு பசுமையான கிராமம் எனக்கு நாலு வயசா இருக்கும்போது எங்க அப்பா ஒரு ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டாரு, எங்க அம்மாதான் என்னை கஷ்டப்பட்டு படிக்க வெச்சாங்க, அதுக்கப்புறம் காலேஜ்ல மெக்கானிக் இன்ஜினீரிங் எடுத்து படிச்சேன். அப்போதான் எனக்குள்ளிருந்த சினிமா ஆசை விஸ்வரூபம் எடுத்தது அதை வீட்ல சொன்னதுக்கு எதிர்ப்பு “சினிமால எல்லாருக்கும்லாம் சான்ஸ் கிடைச்சிடாது” அப்படி இப்படின்னு சொன்னாங்க. நான் அவங்க சொன்னதெல்லாம் மீறி நான் சினிமால நடிக்கத்தான் போறேன்னு சொல்லி வீட்டைவிட்டு கிளம்பிவந்துட்டேன், அவங்களும் எவ்வளவோ சொல்லி என்னை தடுத்தாங்க “நீ எப்போ நடிகனாயி உன் தங்கச்சிக்கு எப்போ கல்யாணம் பண்றது? வேணாம்டா உன் ஆசை கண்ணை மறைக்கு அதை துடைச்சு எறிஞ்சுட்டு ஒழுங்கா படிச்சதுக்கான வேலையைப் பாரு, இல்ல அந்த சினிமாங்குற புதைக்குழியில் விழுந்து நான் சாகத்தான் போறேன்னு சொன்னா. நான் இப்பவே உன்னை தலைமுழிகிடுறேன்’னு சொன்னுச்சு எங்க அம்மா, நானும் எப்படியோ போய்த் தொலைன்னு கிளம்பி வந்துட்டேன். நான் படிக்கிற நேரத்துலேயே சைட் பை சைடா ஒரு இடத்தில் பார்ட் டைம் ஜாப் ஒன்னு பாத்துட்டிருந்தேன். அந்த வேலைல கிடைச்ச பணத்தை கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வெச்சு ஒரு இருபதாயிரம் போல் சேத்து வெச்சிருந்தேன். அந்த ரூபாயை எடுத்துக்கிட்டு சென்னைக்கு டிரெய்ன் பிடிச்சு ஏறிட்டேன், அங்க என் பிரெண்ட் ஒருத்தன் அசிஸ்டெண்ட் டைரக்டரா இருக்கான். அவனை நம்பித்தான் போய்க்கிட்டிருந்தேன் பல கனவுகளோட”

என்று சொல்லி சிறிது இடைவெளிவிட்டான், பிறகு தொடர்ந்தான்.

“அப்போதான் அந்த கோர விபத்து நடந்துச்சு”

என்று சொல்ல இடையில் அந்த நிருபர் கேள்வி கேட்டார்.

“எப்படி ஆக்ஸிடெண்ட் நடந்தது?”

“அது எப்படி நடந்ததுன்னே தெரியலை, ஓடிக்கிட்டிருந்த ட்ரெய்ன் திடீர்னு தண்டவாளத்தைவிட்டு விலகி அப்படியே கவுந்துட்டு. இதுல என்னன்னா ட்ரெய்ன் தண்டவாளத்தைவிட்டு விலகும் போதே ட்ரெய்ன் ஷேக் ஆக ஆரம்பிச்சிட்டு அவ்ளோதான் தெரியும் அப்புறம் என்ன நடந்தது? எப்படி கவுந்ததுன்னே? தெரியலை. அந்த ஷேக்கிலேயே கீழே விழுந்து மயக்கமாயிட்டனோ என்னன்னு எனக்கே தெரியலை. முழிச்சுப்பாக்கும்போது ஆஸ்பத்திரில கிடந்தேன். ஒரே மருந்து நெடி, சுத்தியும் கூட்டங்க. என்னால ஒழுங்கா முழிக்க கூட முடியலை. அப்போதான் காலில் வலி இருக்கறதையே என்னால உணர முடியுது, அப்போதான் என் காலை எடுத்துட்டாங்கங்குறது எனக்கு தெரியுது, எனக்கு எப்படி இருக்கும்? ஒன்னும் புரியலை? நான் ஹாஸ்பிடலில் கத்துறேன் கதறுறேன். ம்ஹூம்! யாரும் கண்டுக்கலை. வீடியோக்காரங்க எல்லாம் வீடியோ பிடிக்காங்க நியூஸ் காரங்களுக்கெல்லாம் இதுதான் ஹாட் நியூஸாக இருந்தது. நான் அங்க வருகிற டாக்டர்ங்கக்கிட்ட எல்லாம் போய் “என்னைய ஏதாவது விஷ ஊசி போட்டு கொன்றுங்க”ன்னு சொல்லி கேக்குறேன்”.

“பிறவு, அம்மாவோ என்னை தலைமுழுகிட்டா, என்னுடைய சினிமா ஆசையும் என் கால்போன மாதிரி அதுவும் என்னைவிட்டு போய்டுச்சு. இனி நான் யாருக்காக வாழனும்? எதுக்காக வாழனும்?இன்னும் சொல்லப்போனா எனக்கு ஆக்ஸிடெண்ட் ஆனதே வீட்ல யாருக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லதான். அப்படியே உட்கார்ந்துட்டே இருந்தேன். காலும் போய்ட்டு சொந்தமும் இல்ல என்ன? செய்யன்னு முழிச்சிக்கிட்டிருந்தேன்.அப்போதான் அவனை நான் பார்த்தேன்!”

என்று சொல்லி அமைதியானான்.

“யாரு சார்?”

என்று நிருபர் வினவ, அவன் பேச்சைத் தொடர்ந்தான்.

“என் ஆருயிர் நண்பன் சத்யா! அவன் ஒரு நியூஸ் சேனல்ல கேமராமேனா வேலைப்பாத்துட்டு வந்தான், இந்த ஆக்ஸிடெண்டைப் பத்தி டி.வியில் போட்டுக்கிட்டிருந்த நியூஸ் சேனல்ல அவன் வேலைப்பாத்துட்டு வந்த சேனலும் ஒன்னு, அதுக்குத்தான் வந்துருக்கான் என்னைப் பாத்ததும் அடையாளம் கண்டுக்கொண்டான். ஒரு நேரத்தில அவன்தான் என்னுடைய பெஸ்ட் பிரெண்ட்டா இருந்தான். ஆனா அதுக்கப்புறம் வாழ்க்கை அவனை ஒருபக்கமும் என்னைய ஒரு பக்கமும் பிரிச்சிட்டு. அவன் என்னைய ஆஸ்பத்திரில கண்டுக்கொண்டதும் எனக்கு என்ன செய்யன்னே தெரியலை? என் ஆருயிர் நண்பனை சந்திச்சதை நினைச்சு சந்தோஷப்படவா? இல்ல என் வாழ்க்கை அடியோடே முடிஞ்சிட்டேன்னு நினைச்சு வருத்தப்படவான்னு எனக்கு ஒன்னும் புரியலை. அவன்கிட்ட நடந்ததை எல்லாம் சொன்னேன், கடைசியில அவன் தான் அவன் சொந்தச் செலவில் என்னை பாத்துக்கிட்டான். மூனு மாசம் ஆஸ்பத்திரில கிடந்தேன். அவன்தான் என்னை முழுசும் கவனிச்சிக்கிட்டான், டிஸ்சார்ஜ் ஆனதுக்கப்புறமும் அவன் வீட்டில் தங்கவெச்சான்.”

“ஒன்றரை வருஷம் அவன் வீட்டில் இருந்தேன். அவன்தான் என்னை சாப்பிட்றதிலிருந்து பாத்ரூமுக்கு கூட்டு போற வரைக்கும் எல்லாம் செஞ்சான். என் வாழ்க்கை வீல்சேரிலேய கழிஞ்சது, அந்நேரத்தில் தான் அவனுக்கு ஊர்ல பொண்ணு பார்த்திருப்பதாகவும் நீ கட்டாயம் வந்தே ஆகனும்னும் அவங்க அம்மா அவனுக்கு கடுதாசி அனுப்பியிருந்தாங்க. அதன் காரணமா இவன் இப்படியே மத்தவங்களை நம்பி இருக்கக்கூடாதுன்னு சொல்லி எனக்கு ஒரு மேனுஃபேக்டுரிங் கம்பெனியில் டிராஃப்ட்மேன் வேலை வாங்கித்தந்ததோடு, எனக்கு செட்டாகுற மாதிரி ஒரு வீடையும் வாடகைக்கு பிடிச்சித் தந்தான். நானும் இதுதான் நம்ம வாழ்க்கை, இதோடதான் நாம வாழ பழகிக்கனும்னு என்னை நானே பாத்துக்க ஆரம்பிச்சேன். வேலைவிட்டா வீடு, வீடு விட்டா வேலைன்னு இருந்தது, சம்பளமும் ஓரளவுக்கு காணுச்சுன்னுதான் சொல்லனும்”.

“நான், அந்த வீடு, என் வீல்சேர் இதுதான் என்னோட வாழ்க்கை, இரண்டு மாசத்துக்கு ஒரு தடவை சத்யா வந்து பாத்துட்டுப் போவான். பலமுறை சுவத்துல, தியேட்டர்லன்னு ஒட்டியிருக்கிற போஸ்டரைப் பாக்கும் போது துக்கம் தொண்டையை அடைக்கும். தனியா உக்காந்து அழுவேன். அந்நேரத்தில் சத்யா வந்து இரண்டு வார்த்தை பேசிட்டுப் போவான், அவ்ளோதான் துக்கம்,சோகம் எல்லாம் பறந்துரும். அப்படியே வருஷங்க போனுச்சு. காலம் காயங்களை ஆற்றியதோடு, வாழப்பழகிக்கவும் கத்துக்கொடுத்துச்சு.”

“அதே காலம்தான் எனக்கு அந்த வாய்ப்பையும் கொடுத்துச்சு, என்னோட எழுபது வயசுல”

“என் நண்பன் சத்யாவின் மகன் ஆகாஷ் மூலமா, அவனுக்கும் என்னை மாதிரி சினிமாவில் பெரிய இடத்துக்கு போகனும்னு ஆசை அதுக்காக இரண்டு வருஷம் முயற்சி செஞ்சு ஒரு பெரிய டைரக்டர் கிட்ட அஸிஸ்டெண்ட் டைரக்டரா மூனு வருஷம் வேலைப்பாத்தான்.”

“அப்போதான் என் வீட்டுக்கு அவன் வந்து ‘கிழவன்’ அப்படின்னு ஒரு படம் பண்ணப்போறதாகவும், அதுல நீங்கதான் நடிக்கப்போறதாகவும் சொன்னான், எனக்கு ஒன்னும் புரியலை நான் எப்படி நடிக்க? அதுவும் இந்த வயசுல? இரண்டு கால் இல்லாம? முதல்ல மறுத்துட்டேன் அப்புறம் அவன்தான் “நீங்க சினிமாவுல ஹீரோ ஆகனும்னுதான உங்களோட கனவு,அது எந்த வயசில் ஆனா என்ன?கண்டிப்பா இந்தப் படத்துல நீங்கதான் நடிக்கனும்னுட்டான்”

“சரின்னு நானும் நடிக்க ஒத்துக்கிட்டேன், பிறகு தான் என்கிட்ட கதையை சொன்னான். அது எனக்கு ரொம்பவும் ஏற்புடையதா இருந்தது,நொண்டி கேரக்டர்…”

“ஷூட்டிங் டைம்ல என்கிட்ட அடிக்கடி வந்து சொல்வான். படம் ரிலீஸானதுக்கப்புறம் உங்க கேரக்டர் எப்படி மக்களோட மனசை ஆக்கிரமிக்க போகுதுன்னு,அதே மாதிரி தான் நடக்கவும் செஞ்சுது. தியேட்டர்ல பாத்துக்கிட்டிருந்த சின்னப்பசங்க முதற்கொண்டு நான் நடிச்ச அந்த ‘கிழவன்’ கேரக்டரைப் பாத்து ஏங்கி ஏங்கி அழுதுச்சுங்க, அதுவும் இந்தப் படம் வேற பேரனுக்கும் தாத்தாவுக்குமான கதை வேறயா? எல்லோருக்கும் ரொம்பவே மனசோட இந்தப் படம் ஒன்றிப்போச்சு”.

“நான் நினைச்ச மாதிரி ஒரு கமர்ஷியல் ஹீரோவாயிருந்தாக் கூட இந்தளவுக்கு அது மக்களோட மனசில் இடம்பிடிச்சிருக்குமான்னு கேட்டா,அது சந்தேகம் தான்?அப்போதான் நான் உணர்ந்தேன் நமக்குன்னு எழுதிவெச்சது எழுதிவெச்சது தான். அது நமக்கு எந்த ரூபத்தில் வேணுமானாலும் கிடைக்கலாம்? எந்த வயசுல வேணாலும் கிடைக்கலாம்னு”

என்று பேசி முடித்த எழுபது வயதான டிக்ஸனையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார் நிருபர்.

“சூப்பர் சார்! வாழ்க்கையில் என்ன வேணும்னாலும் நடக்கலாம், எப்படினாலும் மாறலாம்ங்குறதுக்கு உங்க கதை ஒரு எடுத்துக்காட்டு சார்! இன்னும் இதை மாதிரி நிறைய சினிமாவில் நடிங்க சார்!”

என்று அவன் கதையைக் கேட்டு கண்ணீருடன் கூறினார் அந்த கேமராமேன்.

“சொல்லப்போனா, நான் என்னைக்கோ செத்துப்போயிருப்பேன் என் நண்பன் சத்யா இல்லன்னா?அவனால் தான் என் வாழ்க்கையே மாறியது, அவன் மட்டும் அன்னைக்கு நான் பாக்கலன்னா விரக்தியிலேயே செத்துருப்பேன், அவனை மாதிரி தான் அவன் மகன் ஆகாஷூம் “என்னால் நடிக்க முடியும்”னு சொல்லி என்னை இந்த படத்தில் நடிக்க வெச்சு மக்களோட மனசுல நீங்கா இடம் பிடிக்க வெச்சிருக்கான”.

“இப்போ இந்த நிமிஷம் நான் செத்தாலும், மக்களோட மனசில் தங்கிய ‘கிழவன்’ கதாப்பாத்திரம் மூலமா நான் வாழ்ந்துக்கிட்டுத்தான் இருப்பேன், அப்படி ஒரு பெயரை எனக்கு உருவாக்கித் தந்த ஆகாஷ்க்கும், அவனது அப்பா சத்யாவுக்கும் இந்தப் பேட்டியின் மூலமா எனது நன்றியை தெரிவிச்சிக்கிறேன்”

என்று கூறியதோடு அவர் அந்த பேட்டியை முடித்துக்கொண்டார்….

பேட்டி முடிந்ததும், அந்த மீடியா சேனலில் இருந்து வந்தவர்கள் பேக்கப் செய்துக்கொண்டிருந்தபோது, அந்த சேனலில் கேமராமேனாக வேலைப்பார்க்கும் ஒருவர், கூட ஒரு ஏழு வயதுச் சிறுவனுடன் டிக்ஸன் அருகில் வந்தார், வந்தவர் அந்த ஏழு வயதுச் சிறுவனை சுட்டிக்காட்டி

“சார்! இதுதான் என் பையன்! உங்க படத்தைப் பாத்து ரொம்ப பிடிச்சுப்போய் உங்களை பாக்கனும்னு அடம் பிடிச்சிக்கிட்டிருந்தான், சரி,அதான் உங்களோட தான் இன்னைக்கு ஷூட் அதான் கூட்டுக்கிட்டு வந்துட்டேன்”

என்று சொல்லிவிட்டு, அச்சிறுவனிடம்

“பேசு! தாத்தாட்ட பேசனும், பேசனும்னு சொன்னீயே, போ, போய் பேசு!”

என்று அச்சிறுவனிடம் கூற,அச்சிறுவனோ மெல்ல டிக்ஸனின் அருகில் வந்தான்,

“தாத்தா! நீங்க தானே அந்தப் படத்தில் நடிச்சிருந்தீங்க? சூப்பரா நடிச்சிருந்தீங்க தாத்தா, உங்களை பாக்கும்போது எனக்கு எங்க தாத்தா ஞாபகம் தான் வந்துச்சு, என் தாத்தாவும் இப்படிதான் உங்களை மாதிரி ரொம்ப அன்பா என்னைப் பாத்துப்பாரு. ஆனா இப்போ என் தாத்தா உயிரோட இல்ல, இறந்துட்டார்”

என்று சொல்லும்போது அவனது கண்கள் கலங்கியது. அச்சிறுவன் கலங்குவதைக் கண்டு அவனுக்கே அழுகை தொண்டையை அடைத்தது.

“தாத்தா, இப்போ நான் உங்கக்கிட்ட நான் ஒன்னு கேப்பேன், உடனே தரனும் சரியா?”

என்று பாவமாக கேட்டான்,

“என்னப்பா வேணும் உனக்கு?”

“ஒரே ஒரு முத்தம் தருவீங்களா?”

என்று கேட்க, டிக்ஸனோ

“ஒரு முத்தம் என்னடா நூறு முத்தம் தரேன்”

என்று சொல்லி அவன் முகத்தை அழுந்த முத்தமிட்டான், முத்தத்தைப் பெற்ற அந்த பால்மனமுடைய சிறுவனோ டிக்ஸனை மார்போடு கட்டி அணைத்துக்கொண்டான்.

அந்த அணைப்பில் நெகிழ்ந்து நின்றிருந்தான் டிக்ஸன், அவனது கண்ணீர்த் துளியானது கீழே சிந்தி பால் மனதின் உடலை நனைத்து பாசத்தின் வடுவாக அமைந்தது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *