ஒரு பெண் நினைத்தால்…
கதையாசிரியர்: முத்தமிழ்ப்பித்தன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: December 20, 2025
பார்வையிட்டோர்: 242

ஒரு வார காலமாக அவன் அழகிய முகத்துடனும், மோகத்தை தூண்டும் தேகத்துடனும் ஓர் அழகிய தேவதையை, நார்ச்சந்தியின் ஓர் ஓரத்தில் ஒரு நாற்காலியில் அமர்ந்த நிலையில் அவள் அமர்ந்திருப்பதை பார்த்துக் கொண்டிருந்தான். மாலை நேரத்தில் சாலை ஓரத்தில் அவள் ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவன் அவளைப் பார்த்தான். அவளைப் பார்க்கப் பார்க்க கனிந்த பழச்சாறின் இனிமை மெல்ல மெல்ல அவன் உள்ள இறங்கிக் கொண்டிருந்தது.
பொன் நிறத்தை ஒட்டிய செந்நிற மேனியில் அவள் மின்னும் தேவதையாய் அவன் கண்களுக்கு தெரிந்தாள். அவன் அவள் அருகில் சென்று 5 அடிக்கு முன்பாக நின்று, அவளையே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். அவள் அவனைப் பார்த்தும் பாராதது போல் புத்தகத்திலேயே மூழ்கி இருப்பது போல பாவனை செய்தாள். சில நிமிடங்களுக்குப் பிறகு அவனைப் பார்த்து அவள் கேட்டாள்.
“என்ன என்னையே பார்க்கின்றீர்கள்?”
“நீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள்!”
“சரி அதனால்….”
“உங்களைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றுகிறது”
“நீங்கள் என்ன வேலை பார்க்கின்றீர்கள்?”
“நான் படித்துவிட்டு இப்போதுதான் வேலை வேலையை தேடிக் கொண்டிருக்கின்றேன்.”
“நீங்கள் என்னை தினமும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைத்தால், முதலில் நீங்கள் ஏதாவது ஒரு வேலையை தேடிக் கொண்டு அதன் பிறகு என்னை வந்து பாருங்கள்”
அடுத்த ஒரு வாரத்தில் அவன் ஒரு மிகப்பெரிய துணிக்கடையில் பதினைந்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தான். அதன் பிறகு அவன் அவளை அதே இடத்தில் திரும்பவந்து பார்த்தான்.
“நீங்க வேலைக்கு சேர்ந்து விட்டீர்களா?”
“ம்… சேர்ந்து விட்டேன்”
“என்ன வேலை? எவ்வளவு சம்பளம்?”
“நட்சத்திர ராஜா துணிக்கடையில் 15000 ரூபாய் ஊதியத்தில் விற்பனையாளர் வேலை”
“அங்கே சம்பளத்தை முன்கூட்டியே தந்து விடுவார்களே?”
“ம்.. நாளை தருவதாக சொல்லி இருக்கின்றார்கள்.”
“அப்படி என்றால் நீங்கள் வாங்கிய சம்பளத்தை உடனே என்னிடம் வந்து கொடுங்கள். அதன் பிறகு நீங்கள் தினமும் என்னை வந்து பார்க்கலாம் ரசிக்கலாம்”
அவன் மறுநாள் வாங்கிய ஊதியத்தை அப்படியே அவளிடம் வந்து கொடுத்தான். அவள் அவனை அருகிலே இருந்த அவளது வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.
அந்த வீடு 10 சதுரத்தில் தோட்டத்துடன் அழகாக இருந்தது. இருவரும் உள்ளே சென்றார்கள். அவள் வழக்கம்போல் ஒரு நாற்காலியில் அமர்ந்தாள். அவனும் அவளுக்கு எதிரே அமர்ந்து அவளை ரசிக்க ஆரம்பித்தான். இப்படி சில நாட்கள் தொடர்ந்தது. ஒரு நாள் அவன் உணர்ச்சி வசப்பட்டு அவள் அருகில் சென்று அவள் கன்னத்தில் முத்தமிட முயன்றான். அவள் உடனே அவனை ஓங்கி கன்னத்தில் அறைந்தாள். அவன் திகைத்துப் போனான்.
“நான் உங்களைப் பார்க்க பார்க்க ஆசை அதிகரிக்கிறது. அதனால் உங்களை முத்தமிடத் தோன்றுகிறது”
“நீங்கள் அந்த துணிக்கடையில் எவ்வளவு நேரம் வேலை பார்க்கிறீர்கள்?”
“காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை”
“அப்படி என்றால் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நீங்கள் வேறு எங்கேயாவது வேலை பார்க்கலாமே! அதன் மூலம் உங்களுக்கு அதிக வருமானம் கிடைக்கலாம் இல்லையா? அப்படி செய்தால் உங்களுக்கு எனது முத்தம் நித்தமும் கிடைக்கும்”
“நான் அப்படி வேலை செய்துவிட்டு இரவு 10 மணிக்கு பிறகு வந்தால் நீங்கள் இங்கே இருப்பீர்களா?”
“இது எங்கள் வீடு தான். நான் மாலை 5 மணிக்கு பிறகு இங்கு தான் இருப்பேன். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம்”
அடுத்த சில நாட்களில் அவன் காலை மாலை இரு வேலையும் துணிக்கடையிலும் மாலையும் இரவும் ஒரு உணவகத்திலும் பணிபுரிந்தான். அதன் மூலம் அவனுக்கு கூடுதலாக பத்தாயிரம் ரூபாய் கிடைத்தது. அதன் பிறகு அவன் அவளைப் பார்க்க வந்தான். பார்த்தான் ரசித்தான் அருகில் சென்றான் அவளே அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். அவனும் அவளுக்கு அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
சில நாட்களுக்குப் பிறகு அவன் ஆசை அதிகரிக்க அந்த தேவதையை முத்தமிட்டபின் கட்டி அணைக்க முற்பட்டான். அவனுக்கு மீண்டும் அவளிடமிருந்து ஓர் அறை விழுந்தது.
“நீங்கள் நினைப்பது நடக்க வேண்டும் என்றால் உங்களது ஊதியத்தை இன்னும் உயர்த்த வேண்டும். அப்போதுதான் அது நடக்கும்” என்றாள்.
அவன் அடுத்த சில நாட்களில் இரவு 10 மணி முதல் விடியற்காலை 4 மணி வரை பேருந்து நிலையத்திற்கு அருகிலே உள்ள ஒரு உணவகத்தில் வேலைக்கு சேர்ந்தான். அவனது ஊதியம் மேலும் 10,000 ரூபாய் உயர்ந்தது. ஆனால் அவனால் தினமும் அவளைப் பார்க்க முடியவில்லை. வாரத்தின் இறுதியில் அவன் அவளை சென்று பார்த்தான். அவனது ஊதியம் இப்போது மேலும் பத்தாயிரம் கூடியிருப்பதை தெரிவித்தான். அவள் மகிழ்ந்தாள். உடனே அவன் மகிழ்ச்சியில் அவளை கட்டிப்பிடித்து முத்தமிட நெருங்கிய போது அவள் அவனைக் கட்டுப்படுத்தினாள்.
“ஒரு நிமிடம் நான் சொல்வதைக் கேளுங்கள். நான் சொன்னபடி நீங்கள் கேட்டு நடந்து கொண்டதற்கு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.”
“ உங்களைப் பார்க்கப் பார்க்க அப்படியே முத்தமிட்டு கட்டி அணைக்க தோன்றுகிறது! நான் நீங்கள் சொன்னபடி எல்லாம் நடந்து கொண்டு தானே வருகிறேன். பிறகு ஏன் என்னை தடுக்கிறீர்கள்?”
“நீங்கள் என்னை விரும்புகிறீர்கள் என்பது புரிகிறது. நான் சொல்வதை எல்லாம் நீங்கள் கேட்டு அதன்படி நடக்கிறீர்கள். அதுவும் எனக்கு பிடித்திருக்கின்றது. ஆனாலும் நான் உங்களை மனம் செய்து கொள்ள முடியாது”
அவன் படபடப்புடன் அவளைப் பார்த்தான். அவன் இதயத்தின் மேல் இமயமலையே சரிந்து விழுந்தது போல் துடித்தான். அவள் தொடர்ந்தாள்.
“என் முகத்தை நீங்கள் சாதாரணமாக பார்த்தால், விகாரமாக இருக்கும். அது அம்மை தழும்பினால் ஏற்பட்ட வடு, முகத்தை விகாரம் ஆக்கிவிட்டது”
“இப்போது பார்க்க நன்றாக தானே இருக்கின்றீர்கள்”
“இல்லை இது உண்மையான முகம் இல்லை. நான் தினமும் அழகு நிலையத்திற்குச் சென்று அதனை மறைத்து வருகிறேன். மேலும் எனக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள்.”
“சரி உங்கள் கணவர் எங்கே?”
“அவர் இப்போது இல்லை அவர் துபாய்க்கு வேலைக்கு சென்ற போது அங்கே கசையடி வாங்கி இறந்து விட்டார்!”
“சரி இத்தனை விஷயங்களை நீங்கள் ஏன் என்னிடம் ஆரம்பித்திலேயே சொல்லவில்லை?”
“என்னுடைய நோக்கமே வேறு!”
“உங்களின் நோக்கம் என்ன?”
“நான் எனது தங்கைக்காகத்தான் இவற்றையெல்லாம் செய்தேன். அவளுக்கு ஒரு நல்ல துணையை நல்ல கணவனை தேர்ந்தெடுக்க வேண்டி உங்களை நான் பார்த்தேன். பேசினேன். பழகினேன்.”
“சரி இதற்கு ஏன் இத்தனை எழுத்தடிப்புகள்?”
“என் தங்கை என்னிடம் ஒரே ஒரு வேண்டுகோளை முன் வைத்தாள். அந்த வேண்டுகோளுக்காக தான் நான் உங்களை இப்படி சிரமப்படுத்தும் படி ஆகிவிட்டது!”
“அந்த வேண்டுகோள் என்ன?”
“ நான் பார்க்கும் துணை “தனது சொல்படி நடக்க வேண்டும்; தனது ஆசைகளை பூர்த்தி செய்யக் கூடிய நபராக இருக்க வேண்டும்”_ என்ற நிபந்தனையை முன்வைத்து என்னை அவளுக்குரிய துணையை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை தந்தாள். அதனால்தான் உங்களை நான் இவ்வளவு தூரம் சிரமப்படுத்தும் படி ஆகிவிட்டது. என்னை மன்னித்து விடுங்கள்”
“சரி பரவாயில்லை! உங்கள் வீட்டில் அப்பா அம்மா எல்லாம் இருக்கின்றார்களா? அவர்கள் எல்லாம் எங்கே?”
“அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில் இறந்து போய் விட்டார்கள்!”
“சரி உங்கள் தங்கை நீங்கள் இப்போது இருப்பது போல் அழகாக இருப்பாளா?”
“இதோ அவளே வருகிறாள். நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்”
அவன் திரும்பி வாசலை பார்த்தான். அப்போது அங்கே ரோஜாவின் நிறமும், துளசியின் மனமும், தூதுவளையின் குணமும் கொண்ட ஒரு தேவதை அவனை நோக்கி அழகாக நடந்து வந்து கொண்டிருந்தாள்.
அவன் மனம் அந்த தேவதையை பார்த்து ரசித்தபடி மங்கள இசையை மனம் உருகி இசைத்துக்கொண்டிருந்தது.
![]() |
எழுத்தாளர் பற்றிய குறிப்புகள்: பெயர்: கா. ஆசைத்தம்பி,M.A.,M.Sc.,M.Ed.,M.Phil., புனைப்பெயர்: முத்தமிழ்ப் பித்தன் இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள்: 1. English for Indian Pupils (2003) 2.மாண்புமிகு மாணவர்கள் (2019) (தொகுப்பு நூல்) 3.எண்பதுக்கு எண்பது (2022) (தொகுப்பு நூல்) 4.இசையின் எதிரொலிகள் சிறுகதைகள்(2025) இதுவரை (15.12.25) மின் இதழ்களில் வெளி வந்துள்ள எனது சிறுகதைகள்: 1. மாமோய் (மயிர்) 2. கருப்பு நிறத்தில் ஒரு மின்னல் (மயிர்) 3. ஆலமரத்தடியில் ஒரு அழகி (மயிர்) 4.…மேலும் படிக்க... |
