ஒரு பாய்மரத்துப் பறவை





1 | 2
அதுவொரு விடுமுறைநாள் குளித்துவிட்டுவந்த பரிசித்து கழுத்து, அக்கிளுக்கெல்லாம் ஓடி கொலோன் தடவிக்கொண்டு எங்கேயோ சங்கையாகப் புறப்பட்டுக்கொண்டிருந்தான், சுதாஸ் ‘வெளியே போகிறவனை எங்கே போகிறாய்’ என்றுவிசாரிக்கப்படாது’ அவனாக ஏதாவது சொல்லிக்கிறானாவென மௌனம் காத்தான் .
காப்பிவடிக்கருவியில் தயாராகிவிட்ட காப்பியை இரண்டு கோப்பைகளில் ஊற்றிப் பரிசித்துக்கானதை அலங்கரிப்பு மேசையின் மேலும் தனது கோப்பையைத் தன் கணினிமேசையிலும் வைத்துவிட்டுக் உடைகொளுவியில் தொங்கிய ஜக்கெட்டினுள்ளிருந்து சிகரெட்டுப்பாக்கெட்டை எடுக்கையில் பரிசித்து
“Freiburg இல ஜெகசோதி என்றொரு பிரமுகர் இருக்கிறார் மச்சான், கொஞ்சம் செல்வாக்குள்ள Guy போலயிருக்கு…….. அவர்தான் இங்கே தமிழ்ச்சங்கத்துக்கும் தவிசாளராம், ஒருநாள் தற்செயலாய்க் கண்டு கதைச்சதில தன்னுடைய பிஸினெஸ் காட்டுந்தந்து ஸ்டாப்லர் (Forklift machine) லைசென்ஸ் எடுத்தீரென்றால் Lager (கோடவுண்) ஒன்றில 2000 € இயூரோவுக்குக்குறையாத சம்பளத்தில வேலைக்குச் சேர்த்துவிடுறன் என்றவர், அதுதான் அவரை வீட்டிலபோய்ப் பார்த்து நட்பைப் புதுப்பித்து வைக்கலாமென்று போறன்….. நீயும் கூடவாறதென்றால் வா, பம்பலாய்ப் போயிட்டுவருவம்” என்றான்.

சரி…. ஒரு தமிழர்வீட்டுக்குப்போனால் வேலைதான் கிடைக்காவிட்டாலும், குறைந்தது காரம் மணங்குணமாயொரு சாப்பாடாவது கிடைக்கலாமென்கிற நப்பாசையில் கையுறையாக அவருக்கொரு Hennessy Cognac உம், வீட்டில் அரிவையர், தெரிவையர் இருப்பின் அவர்களுக்கு ஒரு Champagne போத்தலும், தோடை , ஆப்பிள், பனீச்சை (Persimmon) என்று பழங்களோடு, சில சொக்களேட் சலாகைகளையும் வாங்கிவைத்தொரு பையை நிறைத்துக்கொண்டு இருவரும் உற்சாகமாகப் புறப்பட்டனர்.
இரண்டு டிராம் வண்டிகள் எடுத்து உரிய தரிப்பில்ப்போய் இறங்கினார்கள், அதொரு இலையுதிர்காலம், அவர்கள் இருந்த குறுக்குவீதியின் நடைமேடையில் கொட்டியிருந்த பழுத்தல் இலைகள் இன்னும் அப்புறப்படுத்தப்படாமல் இருந்தன.
அவர்களது வளமனையை அடைந்து அழைப்புமணியை அழுத்தியதும் இறுக்கமான ஜீன்ஸினுள் நுழைந்திருந்த பார்ப்பவரைத் திடுக்கிடுத்தக்கூடிய ஒரு அழகான யுவதிவந்து கதவைத் திறக்கவும் இருவருக்கும் அதிர்ச்சி. இவர்களது மண்ணிறத்தோலைப் பார்த்தவுடன் “Guten Tag (வணக்கம்) உங்களுக்கு யாரைப்பார்க்கவேண்டும்” என்றாள் தெளிதமிழில்.
“மிஸ்டர். ஜெகசோதியைப் பார்க்கணும்.”
பின் ‘மொமென்ட் ப்ளீஸ்’ என்றுவிட்டுக் கதவைப் பாதிசாத்திவிட்டு உள்ளே போனாள், இரண்டு நிமிடத்தில் ஐம்பது அகவைகளைத் தாண்டிக்கொண்டிருந்த ஜெகசோதி வெளியே வந்து அவர்களை உள்ளே அழைத்துப்போனார். பிஜாமா கிற்றிலிருந்த அவர் உடல்வாகைப்பார்க்க ஒழுங்காக ஜிம்முக்குச் சென்று வருபவரைப்போலிருந்தது,. செவ்வகமாயிருந்த அவர்களின் வதியுமறையில் மென்னிருக்கையில் ஜெகசோதியோடு பரிசித்து அமர்ந்து ஜெர்மனியின் நம்தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், வேலைவாய்ப்புகள், திருப்பியனுப்பப்படுதல்கள்பற்றி எல்லாம் கதைக்கத்தொடங்கினர், எந்த விஷயமாயினும் அவர்கூறுவதுதான் இறுதியான முடிவாயிருக்க விரும்புபவர்போலிருந்தன அவரது உரையாடல்கள். வேலைவாய்ப்புத் தேடிவந்தவிடத்தில் நமக்கேன் வீண்வம்பென்று அவரது கருத்துக்கள் அனைத்தையும் ஆமோதித்துத் தலையசைத்துக்கொண்டிருந்தான் பரிசித்து. அவர்கள் இருவருக்கும் குளிர்பானங்களை வழங்கிவிட்டு மேலும் இரண்டு குளிர்பானங்களை குசினிக்கான இடைகழியில் (கொறிடோர்) இருந்த மேசையில் வைத்தாள் யுவதி, அது ‘ சுதாஸை அம்மேசையில் வந்து அமர்’ என்று அழைப்பதான சமிக்ஞையாகப் புரிந்துகொண்டு எழுந்து அதில்ப்போய் அமர்ந்தான். ஆரம்பத்தில் அவ்யுவதியின் கண்களை நேரே பார்த்துப்பேச அவனுக்குக் கூச்சமாயிருந்தது. சுதாஸுக்கு ஜெர்மன் தெரிந்த அளவில்த்தான் அவளுக்குத் தமிழும் தெரிந்திருந்தது.
அவள் “எனது பெயர் Bianca ” எனவும் அவன் நாக்கு அண்ணத்தில் ஒட்டுப்பட்டவனைப் போல அமைதி காக்கவும் ”உனக்கும் ஒர் பெயர் இருக்கணுமே” என்று அவள் கடிக்கவும் அவன் மிகுந்த கூச்சத்துடன் “ என் பெயர் சுதாஸ்” என்றான், பின் அடுத்ததாக படிக்கிறாயா, எங்கிருக்கிறாய், என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்று எளிமையான கேள்விகளைக்கேட்டு அவனைச் சகஜ நிலைக்குக்கொண்டுவந்தாள். ஜெர்மனியரின் வெள்ளைக்கும் எம்மவரின் மண்ணிறத்துக்கும் இடைப்பட்ட யுவதியின் பால்சொக்கோ நிறமும், சிரிக்கும் அவள் கண்களும் சுதாஸை ஈர்த்துவிட பயலும் அன்றே அவள்பால் மனதைத் தொலைத்துவிட்டுப்பின் அவளையே சுற்றிச்சுற்றிவர ஆரம்பித்தான்.
குசினிக்கான இடைகழி முகத்தில் அமர்ந்திருந்தும் தமிழ்ச்சமையலின் கந்தம் எதுவும் கிளம்பாதது அன்றைக்குச் சாப்பாடு எதுவும் அங்கே கிடைக்கப்போவதில்லை என்பதை நண்பர்களுக்கு உணர்த்திற்று. பிறகுதான் அவர்களுக்கு திருமதி. ஜெகசோதி தமிழிச்சியுமல்ல, அவளுக்குத் தமிழ்ச்சமையலும் வராது என்பது தெரியவந்தது. யுவதி பியாங்காதான் ஜெகசோதியின் ஒரே மகளாம், அவளின் பாட்டிக்கும் பூர்வீகம் கிரேக்கமாம் திருமதி. ஜெகசோதியும் அன்று அங்கேதான் இருந்தாள். இருந்தும் சும்மா சம்பிரதாயத்துக்குக்கூட வெளியில்வந்து வீட்டுக்குவந்தவர்களிடம் ஒரு ‘ஹலோ’ சொல்லவோ, முகலோபனம் செய்யவோவில்லை.
‘அடிக்கடி இனிச்சந்திப்போம்’ என்றுசொல்லி அங்கிருந்து கிளம்பும்போது பியங்காவின் கைத்தொலைபேசி இலக்கத்தையும் மறக்காமல் வாங்கி வைத்துக்கொண்டான் சுதாஸ். பின்னர் பியங்காவின் விழிமீன்கள் சதா அவன் மனக்குளத்தில் துள்ளிக்கொண்டிருக்கவும் அவன் நினைப்புடன்தான் சுதாஸின் பொழுதுகள் என்றாகின. சிரிக்கும் கண்களோடு பியாங்காவின் செல்ல நினைப்புகள் வந்து கிள்ளும்போதெல்லாம் அவளைப்போனில் அழைத்துப்பேசினான். பேச்சில் பொச்சம் தீரவில்லையென்றால் Freiburg இற்குத் தொடரி எடுத்துவிடுவான், பிரதி மாதமும் கணிசமான தொகை அவனுக்குத் தொடரிக்கே செலவாயிற்று. பிறகென்ன வேகமாக அவர்களிடையேயான சந்திப்புகள் வீட்டிலும் பலவேறிடங்களிலும் அமையவும் காதல் கடுகிவளர்ந்து கனிந்தது.
ஒருநாள் ஜெகசோதி கோட்டும் சூட்டுமாக வெளிக்கிட்டுக்கொண்டு பரிசித்தையும் ஒரு உள்ளூர் Logistic (விநியோக) கம்பனிக்கு கூட்டிக்கொண்டுபோய் அவர்களது Lager இல் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தார். அதனால் சில இடங்களில் அவருக்குச் செல்வாக்கு இருக்கென்ற விடயம் உறுதியாகவும் இவர்களுக்கு அவர் ஒரு மாமனிதராகவே தெரிய ஆரம்பித்தார்.
சுதாஸ் – பியங்காவுக்கிடையே பிணைப்பு அதிகரிக்கவும் ஜெகசோதி ஒரு தமிழ்ப்பெடியன் தன் குடும்பத்துக்கு மாப்பிள்ளையாக வருகிறானேயென்கிற களிப்பிலாயிருக்கலாம் வாளாவிருந்தார் தன் சுபாவத்தில் யாருடனாயினும் அளந்தளந்தே வார்த்தைகளைப்பேசும் ஜெகசோதி, ஒரு மாலைப்பொழுதில் இரண்டு கிளாஸ்கள் வைனுக்குப் பின் “என் சொத்துகள் இந்த வீடு, கார், சேமிப்புகள், எல்லாம் என்னுடைய பேரக்குழந்தைகளுக்குத்தானே” என்றொரு பிரகடனத்தையும் அறிவித்தார்.
பியங்காவைத் திருமணம் செய்தால் சொத்துகள் கிடைக்குமென்கிற விஷயந்தான் ஒருபுறமிருந்தாலும் குறைந்தபட்சம் ஊசலாடிக்கொண்டிருக்கும் எனது விஸாப்பிரச்சனைக்காவது ஒரு தீர்வு வந்துவிடுமேயென சுதாஸும் உள்ளூரவொரு நம்பிக்கையை வளர்த்ததோடு, மாமன்காரன் பெயரக்குழந்தைகளைப்பற்றியும் தன்னுடன்பேசிவிட்டதால் தமது காதலுக்கு அவரின் அங்கீகாரம் கிடைத்துவிட்டதாகவே அவன் மனது வியாக்கியானித்தது. சுதாஸின் வீட்டுக்கு வந்து போய்க்கொண்டிருந்த பியங்கா மெல்லமெல்ல இரவுகளையும் அங்கேயே கழிக்க ஆரம்பித்தாள். விளைவு அவளுக்கு மசக்கை கண்டது.
திருமதி. ஜெகசோதி மைலா வாரத்தில் பாதிநாட்கள் தங்களது சொந்தவீட்டில் தன் சகோதரியுடனேயே தங்குவாள். அவர்கள் (ஜெகசோதி வாழும்) வீட்டுக்கு வருவது குறைவு, வரும் நாட்களில் Gulash Soup போ Eintorf போ (காய்கறிகளும், இறைச்சி, கிழங்குகள் சேர்ந்த கெட்டியான ஒருவகைக் கூழ்) சமைத்துக்கொடுப்பாள், அதையே வாரம் முழுவதும் குளிர்பதனப்பட்டிக்குள் வைத்துக் குடித்துக்குடித்து ஜெகசோதி உயிர் தரிப்பார். எதற்காக அவர் வீட்டில் தங்குவதில்லை என்று சுதாஸ் பிரியங்காவைக் கேட்டதுக்கு ‘அவர் அப்படித்தான்’ என்பதற்கும்மேல் அவளிடமிருந்தும் பதில் கிடைக்கவில்லை. சில நாட்களில் ஜெகசோதியும் வீட்டைவிட்டு வெளியேறிவிடுவார். பகல் முழுவதும் வீடு வெறிச்சோடிப்போயிருக்கும். தன் குடும்பத்துக்குத் தெரியாமல் ஜெகசோதி ஏதும் கச்சடங்கள் (வியாபாரம்) செய்கிறாராக்கும் என சுதாஸுக்கும் எளிமையாகத்தான் சிந்திக்கமுடிந்தது. பரிசித்துத்தான் ஒருநாள் விஷயத்தையே போட்டுடைத்தான். “ விதவையோ விட்டிட்டிருப்பவரோ சரியாகத்தெரியாது, இன்னுமொரு தமிழ்ப்பெண்ணோடும் ஜெகசோதித்திருமனசு திருக்குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறாராம், இப்போதைக்கு உனக்கும் தெரிஞ்சமாதிரிக் காட்டிக்கொள்ளாதை.” என்றான்.
வாரத்தில் 20 மணிநேரம் PENNY எனும் பல்பொருளங்காடியில் பணிசெய்துகொண்டிருந்த பியங்காவுக்கு அடிக்கடியுண்டான மசக்கையால் அங்கு தொடர்ந்து வேலைசெய்யவும் முடியவில்லை. தானாகவே பணியிலிருந்து விடுவித்துக்கொண்டாள்.
மாசமாயிருக்கிற வேளையில் பியங்கா அவர்களது வீட்டிலிருப்பதுதான் பாதுகாப்பானதென இயல்பாக சுதாஸ் எண்ணினான். பியங்காவுக்கோ தாய் இருக்காத வீட்டில் மீண்டும் தனிமையில் போய்வாழ விருப்பமில்லாதிருந்தது.
சுதாஸுக்கும் பியங்காவுக்குமுள்ள நெருக்கமான உறவையிட்டு மைலாவும் தன்விருப்பையோ வெறுப்பையோ காட்டாது அமசடக்கமாக இருந்தாள். பியங்காபோய் அடிக்கடி சுதாஸின் வீட்டில் தங்குவதையிட்டுக்கூட அவள் அலட்டிக்கவோ ஆட்சேபிக்கவோ இல்லை. ஏதாவது விதத்தில் அவள் தன் அதிருப்தியைக் காட்டிக்கொண்டாலாவது பரவாயில்லை, அவளது மௌனம் ஒரு பரிச்சயமில்லாத விலங்கின் மௌனத்தைப்போலப் பீதியளிப்பதாக இருந்தது. ஜெகசோதி குடும்பத்தின் பழக்கவழக்கங்கள், வாழ்முறை தோரணகள் என்னதான் ஜெர்மன்காரரைப்போலவே மாறிவிட்டிருந்தாலும் தங்களது காதல் ஒருவேளை உள்ளூர அத் தம்பதிக்குப் பிடிக்கவில்லையோவெனவும் சுதாஸ் எண்ணலானான். பெற்றோரின் மௌனம்பற்றி பியங்காவிடம் ஏதாவது கேட்டால் அசட்டுத்தனமாக “எனது விருப்பத்துக்கு மாறாக அவர்கள் ஏன் இருக்கப்போகிறார்கள்” என்பாள். அவ்வளவுதான்.
பிறிதொருநாள் “ மமா ஒன்றுஞ்சொல்லாது, பப்பாவும் அப்பிடித்தான் எதுவுஞ்சொல்லாது, அப்பிடித்தான் ஏதாவது சொன்னாலும் நீ கண்டுக்காதை, நாம் ஒன்றும் குழந்தைகளல்ல எல்லாம் மேஜராகிட்டோமே” என்றாள்.
சுதாஸுக்கு அவன் செய்துவந்த பணியிடத்தில் ஒரு குறைவுமில்லாமல் இருந்தது. ஆனாலும் அவனது விஸாமட்டும் இன்னும் குளறுபடியானதாகவே நீடித்தது. அவனது அகதிவழக்கைக் கவனித்துவந்த சட்டத்தரணிமட்டும் பிரதி மாதமும் 200 € இயூரோத்தாள்களை வாங்கிவாங்கி மேசை இலாச்சிக்குள் போடுவதிலேயே குறியாயிருந்தானேயன்றி அவனது அகதிக்கோரிக்கை வழக்கில் ஒரு முன்னேற்றத்தையும் அவனால் பெற்றுத்தர முடியவில்லை.
Duldung (காத்திருத்தல்) வகையிலான விஸாக்களை வைத்திருந்தவர்களில் சிலரை ஜெர்மனி அவ்வப்போது நாடுதிருப்பிக்கொண்டிருந்ததால் இவனுக்கும் அவ்வாறான செய்திகள் வரும்போது கிலியில் மனது திக்திக்கென்று அடித்துக்கொள்ளும்.
ஜெகசோதியின் வீடிருந்த வளவுக்குள் சேர்த்தாற்போல் நாலைந்து கார்கள் நிறுத்தக்கூடியவண்ணம் கராஜ்களோ, அல்லது இன்னொரு வீடோ கட்டக்கூடிய அளவு காணிநிலம் இன்னும் வெறுமையாக இருந்தது. அதற்குள் குறுக்காக வலையொன்றைக்கட்டி முன்பு ஜெகசோதி மகளுடன் டென்னிஸ் விளையாடுவார்.
அந்நினைப்பிலிருந்த பியங்கா திடீரென ஒருநாள் “ சுதாஸ் வா………. நாங்கள் டென்னிஸ் விளையாடுவோம்” என்று அவனை அழைத்தாள். “இல்லை இல்லை………. இப்போது அப்படி எல்லாம் ஓடியாடி விளையாடக்கூடாதம்மா” என்று தன்மையாகவே சொல்லிப்பார்த்தான் சுதாஸ். அவளோ “இல்லை வா……..” விளையாடுவோமென்று அடம்பிடித்துக்கொண்டிருந்தாள். அப்போது மைலாவும் அங்கேயே நின்றிருக்கவும் சுதாஸ் அவளிடம்போய் முறையிட்டான். மைலா சொல்லிப்பார்த்தும் அவள் கேட்பதாக இல்லை. களஞ்சிய அறைக்குட்போய்க்கூடைப் பந்தொன்றை எடுத்துவந்து அதைவைத்து உதைபந்தாடத்தொடங்கினாள் பியங்கா. இவர்களுக்கான படுக்கையறை அவர்கள் வீட்டின் மாடியிலிருந்தது. இவள் படுக்கையறைக்குச் செல்லும் ஒவ்வொரு தடவையும் அதில் சூதானமற்று மாடிப்படிகளில் குதித்துக்குதித்து ஏறியும் இறங்கியும் கொண்டிருந்தாள்.
குழந்தைநல பெண்மருத்துவரிடம் கூட்டிச்சென்று அவளைப்பரிசோதித்ததில் அவர் “இதுவரை குழந்தை கருவில் பத்திரமாக இருக்கிறது ஆனால் இனிமேல் கவனமாக கருவைப்பேணவேண்டியது அவளின் கடமை”யென்றுகூறி அவளை எச்சரித்து அனுப்பினார்.
வீட்டுக்கு வந்தபிறகு ‘பெண்மருத்துவர் கூறியதெல்லாம் வேறு யாருக்கோ, தனக்கல்ல’ என்பது மாதிரி மீண்டும் குதிக்கத்தொடங்கினாள். அவளது மனவளத்தில் ஏதோ மெல்லிய பிசகு இருப்பதைச் சுதாஸ் உணரலானான்.
பியங்காவின் கர்ப்பம் நாலாவது மாதமாகும்போது ஒருநாள்.
“இனிமேல் என்னால ஆறுமணிமட்டும் காத்திருக்கேலாது……… ஒன்றரைக்கெல்லாம் நீரும் வீட்டுக்கு வந்திடவேண்டும்.” என்றாள்.
“ஏன் குஞ்சு ”
“இனிமேல் அப்பிடித்தான் ”
“நீ பென்னி மார்க்கெட்டில் செய்தது மாதிரி ரெஸ்ரோறன்டிலையெல்லாம் பார்ட் ரைம் வேலை செய்யமுடியாதம்மா…ஒரேயடியாய் வீட்டை அனுப்பிடுவான், பிறகு இரண்டுபேரும் ஜொப் – சென்டர் வாங்குகளைத்தான் போயிருந்து தேய்க்கவேணும்.”
“அதெல்லாம் எனக்குத்தெரியாது நீர் ஒன்றரைக்கு வீட்டுக்கு வந்திடவேணும்.”
‘திடீரென்று இவளுக்கு என்னாயிற்று’ என்கிற யோசனையோடு அன்று தூங்கப்போனான்.
அடுத்தநாள் உணவகத்தில் சுதாஸ் நிறைய பழங்கள், இலைவகைகளை நறுக்கி வரும் ஆக்ஞைப்பிரகாரம் (உத்தரவுகள்) கோப்பைகளை அடுக்கிவைத்து சலாட்டுகளைப்போட ஆரம்பிக்கையில் பியங்கா போன் பண்ணினாள். போனைக்கையில் எடுக்கவும் தொடர்பு அறுந்துபோயிற்று. திரும்பவும் இவனாகவே அவளுக்குத் தொடர்பை ஏற்படுத்தினான்.
“எனக்குப் போன் எடுத்தியா செல்லம்…என்ன பிரச்சனை.”
“நேற்று முழுக்க உமக்கு என்ன சொல்லிவிட்டனான்.”
“நீ சொல்லிட்டாய் என்பதற்காக அதெல்லாம் நடைமுறையில சாத்தியப்படாது கண்ணா, மாசமாய் இருக்கிற நீர் இப்படி வேலைத்தலத்துக்குப் போன்எடுத்தால் நான் என்னவோ ஏதோவென்று பயந்திடுவனல்லோ. இனிமேல் தயவு செய்து இங்கே அனாவசியமாய்ப் போன் பண்ணாதையும்.”
“நான் இப்பிடியே செத்தாலும் உமக்குப்பரவாயில்லை…… நான் போன் மட்டும் பண்ணப்படாது என்ன.”
“சரி நான் நாளைக்கு வாறன் ஒன்றரைக்கு, இன்டைக்குப் பொறுமையாய் இரு என்ன”
அடுத்த நாள் ஒரு மணிக்கே போன் எடுத்தாள். சுதாஸ் எடுத்துப்பேசவில்லை. பார்த்தால் ஒன்றரைக்கு டாக்ஸியொன்றைப் பிடித்துக்கொண்டு உணவகத்துக்கே வந்திறங்கினாள். “நான் சுதாஸை உடனடியாகப் பார்க்கவேண்டும்” என்று சொல்லவும் ஒரு பரிசாரகி அவளைச் சமையலறைக்குள்ளேயே அழைத்து வந்தாள்.
அவனைக்கண்டதும் உரத்தகுரலெடுத்து ஜெர்மனில் கத்தலானாள்.
“திருட்டு ராஸ்கல் ஒன்றரைக்கல்லே வீட்டுக்கு வாறன் என்ற நீ, இஞ்சை இப்ப என்ன செய்துகொண்டிருக்கிறாய், உடன கிளம்பி என்னோட வந்திடு அல்லது நடக்கிறதே வேற.”
இத்தாலியன் முதலாளி சுதாஸைத்தனியே தள்ளிப்போய்க்கேட்டான்
“உங்களுக்குள்ள என்ன பிரச்சனை சுதாஸ்………”
“அவளுக்கு கொஞ்சம் டிபிறெஸன் ப்ரொப்ளம் இருக்கு செஃப், அதுதான் இப்பிடிக் கத்திறாள்.”
“உங்களுக்குள்ள என்னதான் பிரச்சனையாயிருந்தாலும் உன் பொண்டாட்டி இப்படி வேலைத்தலத்துக்கு வந்து கூவிறதையெல்லாம் நான் இனி அனுமதிக்க முடியாது………… றெஸ்ரோறன்ட் என்பதே சனம் கொஞ்சநேரம் நிம்மதியான அமைதியான ஒரு சூழலில வந்தமர்ந்து சாப்பிட்டுட்டுப் போக வாறவொரு இடம். இங்கேயும் யாராவது கத்திக்கொண்டிருந்தால் அந்த விருந்தினர் என்ன நினைப்பார்கள் இந்த இடத்தைப்பற்றி சொல்லு பார்ப்பம்.”
“அவள் கர்ப்பமாக இருக்கிறாள் செஃப், அதானால கொஞ்சம் மன அழுத்தம்போல, தனிய இருக்கப்பயப்பிடுறாள்.”
“அதெல்லாம் உங்களது உள்ளகப் பிரச்சனை கண்டியோ, இப்பிடி வேலையைப் பாதியில விட்டிட்டு நீ புறப்படமுடியாது, ஒன்று நீ வேலையைவிடவேணும் அல்லது பொண்டாட்டியை விடவேணும் எதை விடுகிறதென்பதை யோசித்து ஒரு முடிவை எடு. சரி இன்றைக்கு நீ வீட்டைபோறதென்றால் நீ போகலாம். இதுமாதிரியே தினமும் இடையில விட்டிட்டு நீ ஓடுறதென்றால் உனது இடத்தில் நான் இரண்டு ஆட்களை இங்கே நியமிக்க வேண்டியிருக்கும், அதெல்லாம் சரிப்பட்டுவராது. சீக்கிரம் முடிவெடுத்திட்டு அதை எனக்குச்சொல்லு” என்றான் முதலாளி.
அவள் கொஞ்சம் தணிந்ததும் இருவருமாக கோப்பிகுடித்துவிட்டு டிராமில் வீட்டுக்குக்கிளம்பினார்கள். இரவு முழுவதும் கண்விழித்து பியங்காவுக்கு தான் எவ்வளவு கஷ்டப்பட்டு ஜெர்மனியை வந்தடைந்திருக்கிறேன் என்பதையும், ஒழுங்கான வேலைவட்டி இல்லாமல் இருந்த எனக்கு இந்த Duldung Visa வோடு அருமையாகக் கிடைத்திருக்கும் அவ்வேலையையும், ஒழுங்காய் மாதாமாதம் 1500 € இயூரோவைத் தூக்கித்தருகிற முதலாளியையும் உதறிவிட்டால் தன் குடும்பம் எத்தனை பின்னடைவுகளையும், தான் எவ்வளவு கஷ்டங்களையும் மேலும் எதிர்நோக்கவேண்டியிருக்கும் என்பதையும் விளக்கமுயற்சித்தான்.
இரவு பூராவும் அவளது கன்னங்களையும் முதுகையும் தடவித்தடவி கால்களையும் நீவிவிட்டுக்கொண்டு
“நான் ஜெர்மனிக்குள் நுழைந்தகதையே பல துன்பியல் முன்நிகழ்வுகளோடான ஒரு நாடகம் போலிருக்கும்., அதை முழுக்கச்சொல்லி உன்னையும் கலவரப்படுத்தாமல் இருக்கத்தான் நான் உமக்கு எல்லாவற்றையும் முன்னர்சொல்லவில்லை,” என்று தொடங்கிக் கட்டாரிலிருந்து Karlsruhe வரையிலான தனது சிலுவைப்பாதை முழுவதையும் சொல்லி முடித்தான்.
முதிர்கன்னியாகிக்கொண்டிருக்கும் தங்கைக்கு இந்த ஆண்டே திருமணம் செய்துவைக்கவேண்டியதன் அவசியம்.
ஊரில பட்டகடன் ஐம்பது இலட்சத்துக்கு வந்துநிக்குதென்று அம்மா எழுதும் கடிதங்கள்.
விதவையாயிருக்கிற அண்ணிக்கும் அவ குழந்தைகள் படிக்கவும் அவன் பணம் அனுப்பவேண்டியதன் அவசியம் எல்லாம்சொல்லி “என்னுடைய பக்கத்திலிருந்தும் இதையெல்லாம் தயவுசெய்து கொஞ்சம் யோசிடா செல்லம்.” என்று முடித்தான். அவன் கதையை முடிக்குமட்டும் பியங்காவோ அவனை ஒரு அந்நியனைப்போலப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவனது பக்க நியாயம் எதையும் உணர்ந்துகொண்டதுக்கான சமிக்ஞை எதுவும் அவளிடமிருந்து வரவில்லை.
அடுத்தநாள் “சரி இரண்டு மணிக்கு வர முயற்சிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு வேலைக்குப்போனான். பியங்கா ஒன்று நாற்பத்தைந்துக்கே போன் பண்ணத்தொடங்கினாள். ‘என்ன புறப்பட்டிட்டியா சீக்கிரம் புறப்படுபுறப்படு’ என்று அலுப்படிக்கத்தொடங்கினாள். “ இஞ்சபாரு கண்ணா……… இன்றைக்குச் சரியான வியாபாரம், இப்பவேலையைவிட்டிட்டுவந்தேன் என்றால் கிச்சின்ல சாமான்கள் குவிந்து அப்படியே எல்லாம் தாறுமாறாயிடும் என்ன.”
“அதெல்லாம் உன்னுடைய பிரச்சனை மான்” என்றுவிட்டுப் போனைத்துண்டித்தாள்.
அவள் இன்றைக்கும் வந்து கூத்தடிக்கலாம் என்பதால் தலைமைப்பரிசாரகரிடம் பியங்கா வந்தால் உள்ளே விட்டுவிடவேண்டாம் என்று சொல்லிவைத்தான்.
சொல்லிவைத்தாற்போல் மீண்டும் டாக்ஸியொன்றை வைத்துக்கொண்டு இரண்டேகாலுக்கு வந்திறங்கினாள்.
பரிசாரகர்கள் அவளை உள்ளேநுழைய அனுமதிக்கவில்லை. ’ என்னை உள்ளே அனுமதிக்காவிட்டால் பொலிஸில் முறையிடுவேன்’ என்று மிரட்டியும் பார்த்தாள். அவர்கள் மசியவில்லை. ‘ எங்கேவேணுமென்றாலும் போய் முறையிடு நாங்கள் உன்னை உள்ளேவிடுவதாயில்லை’ என்று திருப்பி அனுப்பியிருக்கிறார்கள்.
அன்றும் வழமைபோல ஆறு மணியளவின் வீடு திரும்பினான் சுதாஸ். வீட்டில் ஜெகசோதியையோ மைலாவையோ காணவில்லை. அங்கே ஒரு முள்ளிவாய்க்கால் அதகளம் அரங்கேறிருப்பது தெரிந்தது. அநேகமான நாட்களில் அவன் வீடுதிரும்பும்வேளைகளில் பியங்கா தொலைக்காட்சியில் ஏதாவது பார்த்துக்கொண்டிருப்பாள், அந்த 100 செ,மீ எல்.சி.டி தொலைக்காட்சி நொருங்கிப்போயிருக்க கலைகொண்டு பத்திரகாளியாட்டம் ஆடிக்களைத்துப்போன பியங்கா மென்னிருக்கையில் தூங்கியிருந்தாள். டிறெஸிங் டேபிள் கண்ணாடியும் நொருங்கி அதிலிருந்த அழகுசாதனப்பொருட்கள் எல்லாம் வதியுமறையின் தரையில் சிதறியிருந்தன.
விதிர்விதிர்த்துப்போன சுதாஸுக்கு அடுத்துத்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை. ‘இதை யாருக்கும் தான் சொல்லலாமா கூடாதா, சொல்லித்தான் ஆகப்போவதென்ன’ ‘இது உன் தனிப்பட்ட குடும்ப விவகாரம்’ என்று சொல்லப்போகிறார்கள். தோட்டத்துக்குப்போய் வாங்கிலமர்ந்து நாலைந்து சிகரெட்டுக்களை அடுத்துப் புகைத்தெறிந்தான். குறைந்தது பரிசித்துடனாவது நடந்தவைபற்றிப் பேசினால் தேவலாம் போலிருக்கவும் போனைப்பாக்கெட்டிலிருந்து எடுத்தவன் அதை மடித்துவைத்துவிட்டு அப்படியே வீதிக்குவந்து (Rosenheim) டிராம் ஏறிவீட்டுக்குப் போனான்.
நேரங்கெட்டநேரத்தில் வரும் சுதாஸைப்பார்க்கவும் பரிசித்துக்கு ஏதோ பிரச்சனையுடன் வருகிறான் என்பது புரிந்தது. குளியலறைக்குள் நேராகப்போய்க் குளித்துவிட்டு வந்தவன் பரிசித்துகொடுத்த கோப்பியைக்குடித்துவிட்டு அவள்வீட்டில் அன்று நடந்தவைகளை மேலோட்டமாகச் சொன்னான்.
“சுதந்திரமாய்த்திரிந்த எனக்குப் புலிக்கூண்டுக்க உள்ளட்டுப் பூட்டிக்கொண்டமாதிரியிருக்கடா………நீ ஏன்டா ஆரம்பத்திலேயே சொல்லி என்னை அடங்கவைக்கேல்லை பரதேசி ”
“அருமையான சந்தர்ப்பம்டா…… இதைவிட வேறு சான்ஸ் உனக்குக் கிடைக்கவே கிடைக்காது பசாஸை அங்கேயே கழட்டிட்டு அப்பிடியே திரும்பிப்பாராமல் ஒடிவந்திடு.”
“அப்பிடியெல்லாம் விட்டிட்டு ஓடிவரேலாடா…”
“ஏன்…சிங்கி இன்னும் உன்ர கோசானைப் பிடிச்சிருக்கிறாளோ.”
“அவள் மாசமாயிருக்காள்டா…என்னுடைய சிசுவொன்று அவளிட்டை இருக்கு, ஒன்று கிடக்க ஒன்று நடந்திச்சென்றால் அதுவே எனக்கு ஆயுளுக்கும் தண்டனையாய்ப் போய்விடும்டா.”
“ நீதான் அந்த விவரங்களில சிங்கனாச்சே…இப்படிக் கோசானை உள்ளவிட்டுக்கொண்டு ஆப்பை உருவுவாயென்று நான் நினைக்கலைடா , பியங்கா ஃபிகர் செமையாய் , அம்சமாயிருக்கிறாள்……… அவளை லவ் பண்ணாதையென்று நான் சொன்னால் புகைச்சல்ல மனைஞ்சுபோய்ச் சொல்றதாய் நீ எடுத்துவிடுவியோவென்றுதான் உனக்கு நான் எதுவும் நெகடிவாய் சொல்லப்பயந்து இருந்திட்டன். புலனாய்வுப்பிரிவில இருந்து இராணுவத்தின் கால்த்தடங்களை வேவுபார்த்த நீ, இப்படி ஒரு சிறுக்கியின் ஒற்றைத்தடுக்கில கவுந்துபோய்க்கிடக்கிறியே…”
மைலாவுக்குத்தான் மந்தபுத்தி புரியுதில்லை. வீட்டில் அவள் பண்ணியிருக்கும் அதகளங்களைப் பார்த்தபிறகாவது ஜெகசோதிக்கும் பியங்காவின் நிலமை புரிந்திருக்க வேண்டும். இம்முறை அவரிடமே முறையிட்டான் சுதாஸ்.
“ஒரு அப்பொயின்ட்மென்ட் வைத்திட்டு டாக்டர்.ஹேர்ட்ஸைப் போய்ப்பார்ப்போம் ” என்றுவிட்டு அவரும் விட்டுவிட்டார்.
“யார் டாக்டர்.ஹேர்ட்ஸ்.”
“அவர் ஒரு சைக்கியார்டிஸ்ட்”
“அவரிடம் முன்னமும் இவளைக் காட்டியிருக்கிறீர்களோ.”
“அவள் வயசுக்கு வந்தநேரம் காய்ச்சலோட சேர்ந்தொருமாதிரி வலிப்பு வந்தது……. அப்போ கூட்டிப்போய்க்காட்டின்னாங்கள்.”
“வலிப்புக்கு ஏன் சைக்கியாட்டிஸ்ட் ”
“அவர் சைக்கியாட்டிஸ்ட் மட்டுமல்ல ஜெனெரல் வைத்தியத்திலும் ஒரு எக்ஸ்பேர்ட்”
”பியங்காவுக்கு இப்படி ஒரு மனவளக்குறை இருக்கென்று நீங்கள் ஏன் ஒருத்தரும் எனக்கு முதல்லயே சொல்லித்தொலைக்கேல்லை…” என்று ஆத்திரத்தில் கத்தினான்.
அதற்கும் திரு. நரசிம்மராவ் மாதிரி வாயைக் கெட்டியாகப் பூட்டிவைத்துக் கொண்டிருந்தார் ஜெகசோதி.
அதற்கு மேலும் அக்கடற்பாறையுடன் விவாதித்து அங்கே ஒரு காட்சியை அரங்காற்ற சுதாஸ் விரும்பவில்லை. விட்டுவிட்டான் ஆனால் பெம்மான் டாக்டருக்குப் போன்பண்ணுவதாகவோ, சந்திப்பிணக்கம் ஏதும் வைப்பதாகவோ இல்லை.
ஒரு இரவு அபூர்வமாக மைலா பியங்காவுக்குப் பிடித்தமான துனாமீன் நூடில்ஸ் சமைத்துக்கொடுத்தாள். இரசித்துச் சாப்பிட்ட பின் படுக்கைக்கு வந்தவள் “ எங்களுடைய டி.வியைக்காணேல்லை……….. எனக்கொரு டி.வி வேணும்” என்றாள்.
“அதுதான் நீ அடிச்சுடைச்சுப்போட்டியே………. பிறகு எங்கிருந்துவரும் டி.வி”
“இல்லை நான் அதை உடைக்கேல்லை” என்று சாதித்தாள்.
அவளுக்குப் பிடித்த ‘மரகுயா’ ஜூஸை ஒரு கிளாஸில் வார்த்துக்கொணர்ந்து குடிம்மாவென்று சுதாஸ் கொடுக்கவும் அதைவாங்கி அப்படியே சுவரில் வீசி எறிந்தாள். அவள் எப்போது ரௌத்திரம் கொள்வாள் எப்போது சாந்தமாக இருப்பாளென்று எவராலும் கணிக்கமுடியவில்லை. வரவர அவளின் போக்குவாக்கும், நடத்தைகளும் சுதாஸுக்குப் பெரும் மனவழுத்தத்தைத்தரும் சுமைகளாயின. பியங்காவுக்கு நெருக்கமான தோழிகள் எவரையாவது இவளிடம் பேசவைத்து சிறுக்கி அடிமனதில் என்னதான் நினைக்கிறாள், என்று அறிந்தாலாவது கொஞ்சம் முன்னேற்றம் வரச்செய்ய முடியாதாவென நினைத்தான்.
அவளின் நெருக்கமான சிநேகிதிகள் யாரென்று பெற்றோரென்ற பிரகிருதிகளுக்கும் தெரியவில்லை.
அவளோடு பேசி ஏதாவது தெரிந்து கொள்ளலாமாவென்று முயற்சித்துப் பார்த்தான்.
“ஹனி……. உனக்கு ஸ்கூல்ல நிறைய ஃப்றென்ட்ஸ் இருந்தாங்களா.”
“இருந்தாங்களே ஏன்………”
“நீ அவங்களைப்பற்றி எனக்கின்னும் ஒன்றுஞ்சொல்லலையே……”
“நீ எப்பபார்த்தாலும் என்னைப் பிசைவதிலேயே குறியாயிருந்தாயல்லாமல்……… அவர்களைப்பற்றியெல்லாம், இப்பதானே கேட்கிறாய்”
“இல்லடாப்பா உன்னுடைய சிநேகிதிகள் என்று நீ யாரோடயும் தொடர்பில இருக்கிற மாதிரித்தெரியேல்லையே அதனால கேட்டன்”
“ஏன் அவளவையும் யாரும் என்னை மாதிரி அணைஞ்சால் பிடிச்சு அளையலாமென்று பார்க்கிறியோ.”
“வை ஆர் யூ ஹேர்ட்டிங் மீ லைக் தட் “
“யூ டூ ஹேர்ட் மீ இனஃப்.”
“உன்னை ஹேர்ட் பண்றதுக்காக நான் எதையும் கேட்கலைடா, அதுக்குமேல உன்னை ஹேர்ட் பண்ணும்ங்கற இன்டென்ஷனே எனக்கு இல்லம்மா.
“ம்….. ம்…….. நீதானே எம் புருஷன்…… என்னை எல்லாம் நீ கேட்பாயில்ல.”
“உன்னுடைய அம்மா அப்பா எதையும் சொல்றாங்களில்லையே………… அவங்களை மீறிப்போய் நாம எம்பாட்டுக்குத் திருமணம் செய்திட்டா அது நல்லாவா இருக்கும், ஏன் இப்படிக்கதைக்கிறாய்…… உன்னுடைய ஃப்றென்ட்ஸுக்கும் நாம கல்யாணம் பண்றதுக்கும் என்னடா சம்பந்தம்”
“கேட்பாய்……. கேட்பாய்……… இப்ப உனக்கு உறுதியாய்ச்சொல்றன் உன்னை ஒருபோதும் நான் கல்யாணம் பண்ணவேமாட்டன்.”
“அப்போ நம்ம குழந்தைக்கு ஒரு அப்பா வேணாமா.”
“அது ஒழுங்கா நான் சொல்றதை புரிஞ்சு ப்றைக்டிஸ் பண்ணக்கூடிவங்களுக்கு நான் சொல்றது.”
“அப்போ எனக்கில்லையா………… அதுதான் உன்னைய ஹேர்ட் பண்ற இன்டெஷனே எனக்கு இல்லைன்னேனே…..”
“அதுதான் அதை நீ எப்படியோ என் மூஞ்சியைப்பார்த்துச் சொல்லிட்டியே.”
“அப்போ நான் மறி பண்ணவே இல்லையே ….ஃப்றீயாய் இருந்தனே……”
அவள் வார்த்தைகள் சுவாதீனமற்று சம்பந்தமோ, தொடர்போ இல்லாமல் வரத்தொடங்கின. மனவழுத்தத்தின் அதீத நிலையில் ஞாபகசக்தி மந்தமாகும், அதை Amnesia என்பார்கள். உறவுகளையே மறந்துபோகும், நிலமை மோசமாகையில் இரண்டு செயல்களை இணைத்துச்செயல்படும் சக்தி இல்லாதுபோகும், செய்கைகளில் தர்க்கம் இருக்காது. அந்நிலையை மனவள மருத்துவத்தில் Schizophrenia என்பார்கள், வயதானவர்களுக்குச் சிலவேளைகளில் வருவது, அதிலிருந்து மீளுவது அரிது, ஒருவேளை அந்நிலையைத்தான் பியங்காவும் எட்டிவிட்டாளோ?
அவளிடம் இனிப்பேசிப் பிரயோசனம் இருக்கப்போவதில்லை.
அவளுக்கும் தான் நினைப்பதை, தன்நிலையைத் தெளிவாகக் கோர்வையாகச் சொல்லத்தெரியவில்லை.
சமையல்க்கட்டில் அவள் பீங்கான் கோப்பைகளை உடைப்பதைப்பார்த்த மைலா ஒருநாள் யாருக்கோ சொல்வதுபோல ‘அவளுக்கேதோ டிப்பிறெஸன் இருக்குப்போல இருக்கு” என்றாள். பியங்கா வீட்டில் இல்லாத சமயம் ஒருநாள் அவளின் அலமாரியைக்குடைந்தபோது பச்சைநிற மெடிகல் ஃபைல் ஒன்று அகப்பட்டது. அதில் பிறப்பிலிருந்து அவளுக்கேற்பட்ட சுகவீனங்களும், கொடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள்பற்றிய விபரங்களும் அதிலிருக்கும். ஒவ்வொரு பக்கமாகத் தட்டியபோது டாக்டர். ஹேர்ட்ஸ் என்கிற மனநலமருத்துவரின் அறிக்கையுமொன்று அதிலிருந்தது. மருத்துவமொழியில் எழுதப்பட்டிருந்த அக்குறிப்பிலிருந்து இவனால் எதையும் புரிந்துகொள்ளமுடியவில்லை. குழப்பமாயிருந்தது.
அந்த கோப்பில் டாக்டர்.ஹேர்ட்ஸின் அறிக்கையைமட்டும் கழற்றி எடுத்துக்கொண்டு ஜூகென்டாம்ட் (Jugendamt) எனப்படும் சமூகநலத்துறையின் பெண்கள், சிறார்களின் நலன்களைக்கவனிக்கும் சிறகத்துக்குப்போய் பெண் அலுவலர் Frau. Lieb என்பவரிடம் முறையிட்டான். அவளுக்கு மனவழுத்தக்குறைபாடு இருந்து வைத்தியம் செய்யப்பட்டிருக்கு, வீறமைவாக (சீரியஸாக) ஒன்றுமில்லை என்று விளங்கப்படுத்தியவர், அடுத்தநாள் ஒரு மனவளமருத்துவருடன் வீட்டுக்கே வந்தார். வந்தவர்கள் பியங்காவை முதற்கட்டமாக உடல்வெப்பம், இரத்தழுத்தம், நாடித்துடிப்பு, குருதிச்சர்க்கரை அளவுபோன்ற சோதனைகளுக்குட்படுத்திவிட்டு அழைத்துப்போய் ஒரு குழந்தைநலம், பெண்கள் மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கே அவளது உடல் பூரணசோதனைக்குட்படுத்தப்பட்டு ஒரு குழந்தை எப்படி வயிற்றுக்குள் வளர்கிறது என்பதைக் காணொளிமூலம் அவளுக்குக்காட்டி, அக்குழந்தை பிறக்குமட்டும் தாயானவள் எப்படி அதைக்காபந்து பண்ணவேண்டும் என்றும் புரியவைத்து அவளை அம் மருத்துவமனையிலேயே ஒருவாரம்வரையில் வைத்துப் பராமரித்தனர்.
வீடு திரும்பிய பின்னால் படிகளில் திடுதிடுப்பெனப் பாய்வதும் குதிப்பதும் கொஞ்சம் குறைந்தது. ஆனாலும் இரண்டுவாரத்துக்கொருமுறை மருத்துவமனைக்குச் சோதனைக்குச்செல்ல முரண்டுபிடித்தாள். “நாங்கள் பொலீஸை அனுப்பி உன்னைப் பிடித்துவரவேண்டியிருக்கும்,” என்று வைத்தியர்கள் மிரட்டியபின்னால் மன்னையைத் தூக்கிக்கொண்டும், மூக்கைச் சிந்திக்கொண்டும் வந்தாள்.
தமிழ்த்தாய்மார்களென்றால் கர்ப்பமாக இருக்கும் மகளை எப்படி வாஞ்சையோடு பராமரிப்பார்கள். மைலாவுக்கு பியங்காமேல் எந்த வாஞ்சையோ அக்கறைகளோ இல்லை, ‘பிள்ளையை வாங்கத்தெரிந்தவளுக்கு அதைப்பராமரித்துப் பெற்றுக்கொள்ளவும் தெரிந்திருக்கத்தானே வேணும்’ என்கிற தோரணையில் இருந்தாள்.
தாயாருக்குப்பயந்து பியங்கா கர்ப்பமான பிறகுதான் அவளுடனான தன் உறவைப்பற்றியே சொல்லியிருக்கிறான். அவருக்கு சுதாஸின் நிலமையைப் புரிந்துகொண்டு அவனது தாம்பத்தியத்தை ஏற்றுக்கொள்ளவும் முடிந்தது,
ஒருநாள் சுதாஸ் “மாசமாயிருக்கும் பெண்ணுக்கு என்ன கொடுக்கவேணுமென்று தாயிடம் போனில் கேட்கவும் அவரோ “பருத்தியிலை, ஆவரசிலை, அவித்துக் குளிக்கச்சொல்லு சுகப்பிரசவமாகும், இரவில பாலிலை குங்குமப்பூ போட்டுக் குடிக்கச்சொல்லு, பிள்ளை நல்ல சிவப்பாய்ப்பிறக்கும் குழந்தை பிறந்தாப்போல கறுத்தப் பூக்கொடி அவித்துக்குளிக்க வார்க்கவேணும். குடிக்கிற பால் நல்லா செரிமானமாகவும், நெஞ்சில சளிபிடிக்காமலும் இருக்கத் தினமும் வசம்பைத்தேனில தோயச்சு நாக்கில தடவவேணும்” என்றார்.
மைலா வீட்டுக்கு வந்திருந்த ஒரு நாளில் அவர் சமையலறைக்குள் சமையல் செய்துகொண்டிருக்கும்போது அவருக்கு வலிந்துபோய்ச் சில ஒத்தாசைகள் செய்துவிட்டு எல்லோருமாக மேசையிலமர்ந்து சாப்பிடும்போது சுதாஸ் “ நீங்கள் இருவரும் சேர்ந்திருக்கையில் எமக்குப் பொதுவானதொரு விருப்பத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்” என்றுவிட்டு ‘யாராவது இடையிட்டு என்னவென்று கேட்பார்கள்’ என நினைத்து நிறுத்தினான். எவரும் ஏதும் பேசாதிருக்கவே ஏமாற்றத்தைக் காட்டிக்கொள்ளது தொடர்ந்தான். ” எங்களுக்கு பேபி கிடைக்கமுதலே நம்ம திருமணத்தைப்பதிவு செய்துகொள்ள விரும்புகின்றோம். அவளும் அதைப்பற்றி நிறைய யோசிக்கிறாள் போல இருக்கு…..”
இரண்டுநிமிஷ இடைவெளிவிட்டு கடற்பாறை ஜெகசோதி மட்டும் தொண்டையைச்செருமினார். ஏதோ சொல்லப்போகிறார் என்று இவன் எதிர்பார்க்க அவர் கிளாஸிலிருந்த சிவப்பு வைனில் மேலுமொரு மிடறைச் சரித்துக்குடித்துவிட்டு சின்னதாயொரு ஏவறைவிட்டபடி எழும்பிப்போனார்.
பியங்காவோ அன்றைய சம்பாஷணையின் பின்னர் திருமணம் என்ற சொல்லையே உச்சரிக்கவில்லை, மைலாவின் உடல்மொழியிலோ மூஞ்சியிலோ இவன் சொன்னவை எதுவும் கிரகிக்கப்பட்டதுக்கான சமிக்ஞைகளுந் தெரியவில்லை, எழுந்து சாப்பிட்ட பீங்கான் தட்டுகளின் எஞ்சங்களைக் குப்பைக்குள் தட்டிவிட்டு அவற்றைக்கழுவும் இயந்திரத்துட் சேர்க்கப்போனார்.
பியங்காவின் பேச்சுக்கள், நடந்துகொள்ளும் விதங்கள், உளவியல் எதுவும் சுதாஸுக்குத் துண்டறப்புரியவில்லை. ஜெர்மன்காரப்பெண் எல்லா விஷயங்களிலும் முனைப்பாக இருப்பாள் என்று கற்பனைத்தது ஏமாற்றம் தந்தது.
அவளுக்கு திருமணத்துக்கோ திருமணப்பதிவுக்கோ எந்த அவசரமோ தேவையுமுமில்லை. அது தனக்குச் சம்பந்தமில்லாத விடயம் என்பதுபோல இருந்தாள்.
‘சுதாஸுக்கு வேலயில்லாவிட்டாலும் பரவாயில்லை’
‘தனக்குத்தான் வேலையில்லாவிட்டாலும் பரவாயில்லை’
‘அம்மா வீட்டுக்கு வந்தாலும் சரி. வராவிட்டாலும் நஷ்டமில்லை’
‘அப்பா எங்கேபோய் எப்போ வீடுதிரும்பினாலும் காரியமில்லை.’
ஏன் இப்படி அக்குடும்பத்தில் எல்லோருமே மத்தர்களாய் இருக்கிறார்கள்.
ஜெர்மன்காரி மைலா அப்படி நுண்ணுர்வுகளற்ற பிரகிருதியாயிருந்தால் பரவாயில்லை சகித்துக்கலாம். ஒரு தமிழரும் எப்படி இம்மத்தர்களுடன் இசைந்துபோகிறார்? அதிசயமான சைக்கோக்குடும்பமொன்றுள் அவசரமாய் மாட்டுப்பட்டது இப்போது மெல்லப்புரிகையில் நாட்டுக்கே திரும்பிவிடலாம் போலிருந்தது.
வேனிற்காலமோ, கோடையாகவோ இருந்தால் திடீரென “எனக்கு தண்ணீருக்குள் கால்களைப் புதைத்துக்கொண்டிருக்கவேணும்போல் இருக்கு, அல்லது மணலுக்குள் கால்புதைய நடக்கவேணும்போல் இருக்கு வெளிக்கிடு ” என்பாள். Dreisam ஆற்றங்கரைக்கு (Rhine மகாநதியின் கிளையொன்று) அழைத்துப்போவான்.
சாதாரண வேளையாயிருந்தாலென்ன, மாசமாயிருந்தாலென்ன பியங்காவுக்கு எப்போதும் எங்கேயாவது சுற்றிக்கொண்டேயிருக்கவேண்டும். அதுவும் காலநிலை வெளியேபோக உவப்பானதாயிருந்தால் வெளியே போயே ஆகவேண்டுமென்று அடம்பிடிப்பாள். தாவரவியற்சோலைகள், பூங்காக்கள் அலுத்துப்போனால் ஏதாவது பெரிய மோலுக்குப்போவோம் என்பாள். முடிந்தவரைக்கும் அவள் கேட்கும் வியாபாரநிலையங்களுக்கெல்லாம் கூட்டிப்போவான். ஏதாவது ஒரு உணவகத்துக்குப் போவதைப்போலவோ ஐஸ்கிறீம் பார்லருக்குள் நுழைவதைப்போலவோ அல்ல மோல் விஜயங்கள், மோல்களில் நுழைந்தால் கண்டதை எல்லாம் எடுப்பாள். புதிதாக ஒரு உடுப்பைப் பார்த்தாளாயின் அதே வர்ணத்தில் அதே மாதிரி அவளிடம் உடுப்பு இருக்கிறதென்பது மறந்துவிடும். அவசரப்பட்டு மேலும் மேலும் ஆடைகளை வாங்கிக்குவிப்பாள். உடைகள் பாதணிகள், அணிகலன்கள் மாத்திரமல்ல புதிதாக ஒரு அரிப்பானைப் பார்த்தாலும் அதில் உயர்ரக இலச்சினை இருந்தால் உடனே தூக்கிவிடுவாள், சுதாஸிடம் அதற்கான பணமிருக்கோ இல்லையோவென்பதெல்லாம் அவளது அக்கறைக்குட்பட்டதல்ல, அவனிடம் பர்ஸும் கடனட்டையும் இருந்தால் சரிதான்.. “இல்லேம்மா இன்றைக்கு அதைவிட்டுவிடு, அடுத்தமாதம் பார்ப்போம்” என்றால் “நீ வேறு யாருக்கோ கொடுப்பதற்குச் சேமிக்கிறாய், முட்டாள்த் தமிழன் நீ, எப்படி எனக்கு வாங்கித்தருவாய் கஞ்சல்க்கம்மனாட்டி” என்று மோலுக்குள் வைத்தே ஜெர்மனில் திட்டுவாள் சனங்கள் இவர்களை வேடிக்கை பார்க்கும். வேலையையும் இழந்திருந்த அவன் அவளது செலவுகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திண்டாடலானான். நுண்புரிதல்கள் குறைந்த, விடயங்களைப் பகுத்துப்பார்க்கத் தெரியாத பியங்காமேலான ஈர்ப்பு மெல்ல மெல்ல உலர்ந்து இடைவெளியொன்று உருவாகத்தொடங்கியது.
நாளும் பிக்கல் பிடுங்கல்களுடன் உழன்று ஒவ்வொரு மாதமுமாய் நகர்ந்து ஒருவிதமாக பியங்காவுக்குப் பிரசவமும் ஆயிற்று. நல்ல ஆரோக்க்கியமான குழந்தை. அவனுக்கு ஆதன் என்று பெயர்வைத்தார்கள். ஜெகசோதி ஒரேயொருநாள் வந்துபார்த்து குழந்தையைப் படமும் பிடித்துப்போனார். மைலா மருத்துவமனைப்பக்கமே வரவில்லை. பியங்காவுக்கும் அது ஒரு விஷயமேயில்லை. பரவாயில்லை. இப்படியான இக்கட்டிலில் இருப்பவர்களுக்கு உதவிசெய்யச் சில தன்னார்வலர்கள் இங்கு இருக்கிறார்கள். Bettina என்றொரு அம்மணி தான் வைத்துத் தாபரிக்கும் வேறும் மூன்று நான்கு குழந்தைகளுடன் ஆதனையும் வைத்து பராமரிக்க முன்வந்தார். அவர்களுக்கு பாலுணவு, டயப்பர்கள், உடுப்புக்களுக்கான பொருண்மிய உதவிகளை ஜூகென்டாம்ட் கவனிக்கும். மூன்று மாதங்கள் கழிந்தன. குழந்தை ஆதவனைப் பராமரிக்கவேண்டியதால் சுதாஸுக்குத் தன் உணவகப்பணியைத் தொடரமுடியவில்லை.
ஜூகென்டாம்டின் பணிப்பின்பேரில் சுதாஸுக்கு எப்படி ஆதனுக்குப்பாலூட்டுவது, குளிப்பாட்டுவது, டயப்பர்கட்டுவது, உடைகள் மாற்றுவதென்றெல்லாம் பயிற்சியளிக்கப்பட்டது. அவர்களுக்கு சுதாஸ் தன் குழந்தையை இனிப்பராமரிப்பான் என்ற நம்பிக்கை வந்தவுடன் அவனுடன் ஆதனை எடுத்துச்செல்ல அனுமதிக்கவும் அவன் தன்வீட்டுக்கே எடுத்துச்சென்றான். ஒவ்வொரு நாளும் ஒரு சமூக சேவகி / செவிலி வந்து ஆதனின் ஆரோக்கியத்தைக் கண்காணித்துச் செல்வார்.
பியங்காவின் மனவள நலிவையிட்டு அவளிடம் குழந்தையை எடுத்துச்செல்வதையோ, அவளிடம் விட்டுவிடுவதையோ ஜூகென்டாம்ட் அனுமதிக்கவில்லை.
எதற்குக் குழந்தையைப் பியங்காவிடம் விடப்படாது என்பதில் கடுமையாக இருக்கிறீர்கள் என்று அந்த ஜூகென்டாம்டின் பெண் அலுவலர் Frau. Lieb ஐ சுதாஸ் வற்புறுத்திக்கேட்டபோதுதான் “அதுக்கான காரணம் உமக்கு அவ்வளவு உவப்பாக இருக்காதென்று தெரிந்தாலும் அதைத்தெரிவிப்பதற்குரிய நேரம் வந்தபடியால் சொல்லுகிறேன். ‘மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பியங்கா மாணவியாக இருந்தபோதும் உம்மைப்போலவே ஒரு ஸ்ரீலங்கா இளைஞனுடன் நட்பாகப்பழகியதில் அவள்பெற்ற இன்னொரு ஆண்குழந்தையொன்று எங்களுடைய காப்பகத்தில் பராமரிக்கப்பட்டுக்கொண்டிருக்கு. தனக்கொரு குழந்தை இருப்பதான பிரக்ஞையோ, குழந்தைகளைக் கவனிக்கக்கூடிய மனவளமோ அவளிடம் இல்லை, தன் முதற்குழந்தைபற்றிய நினைவுகள் அவளிடம் இருந்திருந்திருந்தால் ஒருவேளை இரண்டாவது கர்ப்பத்தை அவள் தடுத்திருப்பாள். உடலுறவாலதான் கர்ப்பமுண்டாகிறது என்பதே அவளுக்குத் தெரியுமோ தெரியாது. இப்போ ஆதனும் தன்குழந்தை என்கிற எண்ணமோ மனப்பதிவோ அவளுக்கு இருக்க வாய்ப்பில்லை.” என்று முடிக்கவும் சுதாஸுக்கு பாதங்களுக்குக்கீழே தரை அதிர்வதைப்போலிருந்தது, தலை சுற்றவாரம்பித்தது. சுதாகரித்துக்கொண்டான்.
பியங்கா போனில்க்கூட ‘குழந்தை எப்படி இருக்கிறான் என்றோ அவனைக்கொண்டுவாவேன் நான் பார்க்கவேணும்’ என்றோ கேட்காமல் இருப்பதன் காரணம் மெல்லப்புரிந்தது.
ஜூகென்டாம்ட்டுக்குத் தெரியாமல் சுதாஸாக எப்போதாவது தன்னார்வத்தில் ஆதனை பியங்காவிடம் எடுத்துச்சென்றால் வாங்கிவைத்துக் கொஞ்சநேரம் கொஞ்சுவாள், அவ்வளவுதான். இவ்வாறாக மூன்று நான்கு தடவைகள் ஆதனைத் தாயிடம் எடுத்துச்சென்றுமிருக்கிறான்.
மெல்ல ஆதனது பிறந்தநாளும் வந்தது நிறையவே வண்ணமான உடுப்புக்கள் வாங்கிவைத்திருந்தாள் பியங்கா. சினிமாக்களில் வருவதைப்போன்று குழந்தையின் அணுக்கத்தால் இனி மெல்லமெல்ல சாதரணநிலமைக்குத் திரும்பிவிடுவாளோவென சுதாஸும் மற்றவர்களும் நம்பினர். அன்றிரவே அது பொய்யென்றாகியது.
சுதாஸின் நெஞ்சின்மீதே தூங்கிப்பழக்கப்பட்டுப்போன ஆதன் பியங்காவின் அணைப்பில்த் தூங்கமறுத்தான். அவளின் நெருக்கத்தை வெறுத்தான். அவள் எத்தனைதான் அணைத்தாலும் உருண்டுவந்து அப்பாவுடனே படுத்தான்.
“நான் பெத்தது என்னோடயே படுக்க மாட்டேங்குது, டேய் நாதாரிகளா…… இது என்னுடைய வீடு உங்களுக்கு இங்கே ஒரு அலுவலும் இல்லை, பேர்த்டே எல்லாம் முடிஞ்சுது எழும்பிப்போங்கடா இரண்டு கழிசடைகளும்” என்று சாமத்தில் பேய்க்கூச்சல் போட்டபடி ஆதனையும் தூக்கி மற்றக்கட்டிலில் வீசவும் அவன் பயந்து அலறினான். அச்சம்பவத்தின் பிறகு பியங்காவுடன் ஆதனை விடுவதென்பது சுதாஸுக்கும் ஒரு கொடுங்கனவானது.
இவன் குர்திஷ்தானிலிருந்து நாடுகடந்துவருவதற்காக நண்பர்கள் பலரிடமும் வாங்கிய தொகைகளை இன்னும் சரியாகத் திருப்பியாகவில்லை. தாயாரோ திருமணமாகவிருக்கும் தங்கையின் திருமணத்தை நினைவூட்டியபடி இருக்கிறார். எப்போதாவது அவரது மூட்டுவலி / ஆர்திறிட்டீஸ் எப்படியிருக்கிறது என்று உசாவப்போன் எடுத்தாலும் இதுதான் அவரது முதன்மைக் கோரிக்கையாக இருக்கிறது.
இன்றும் அம்மாவின் கடிதம் வந்திருந்தது. நீண்டகாலத்துக்குப்பிறகு குறுணிக்குறுணியாக எழுதும் அவர் எழுத்தைப்ப்பார்த்ததும் சுதாஸுக்குக் கண்கள் நிறைந்துவிட்டன. டெலிபோனில் சொன்னால் பெடியன் மறந்துபோய்விடுகிறான், கடிதத்தில் எழுதிவிட்டால் அவன் கண்ணில்படுகிற நேரங்களிலாவது நினைப்புக்குவரும் என்று நினைத்தாரோ அவனது அம்மா கடிதம் எழுதியிருந்தார்.
அதன் சாரம் இதுதான்: மகன் நீ துவக்கு இருக்கென்ற ஏண்டாப்பில் எங்கள் கிராம்சேவகரோட மிண்டிவிட்டுப்போய்விட்டாய். அந்தாளோ இந்தக் குடும்பத்துக்கு ஒரு குறையுமில்லை. ஒரு பெடியன் மாவீரன்தான், ஆனால் மற்றவன் ஐந்தாறு வருஷமாய் வெளிநாட்டிலை இருந்து உழைக்கிறான் என்று எங்கள் பிரதேச செயலாளருக்குப் போட்டுக்கொடுத்து வரவிருந்த சமுர்த்தி உதவிகளையும் நிறுத்திவிட்டிருக்கிறான். எங்களை ஒரேயடியாய் மறந்துவிடாதே, உன்னால முடிந்தளவு பணம் விரைந்து அனுப்பிவிடு மகன்.
சுதாஸ் பியங்காவை வளையவருகையிலும், காதலித்தபோதும் ஜெகசோதி தம்பதி மௌனம் காத்தது இவனைத்தம் மனவளக்குறையுடைய மகளிடம் மாட்டிவிடத்தான் என்பது இப்போது புரிகிறது. இவனுக்கு நிரந்தர வதிவுரிமையுள்ள விஸா எப்போ கிடைக்குமோ தெரியவில்லை. ஆதனின் தாய்க்கு ஜெர்மன் பிரஜாவுரிமை இருப்பதால் இவனது விஸாவை ஒரேயடியாக நிராகரித்துவிடவும் வாய்ப்பில்லைத்தான் ஆயினும் அவனுக்கு எந்த விஸாவும் கிடைப்பதாயில்லை, சுதாஸுக்கும் தன் மனவழுத்தங்களையெல்லாம் சொல்லி மனம் ஆற பரிசித்தையும், வருணன் என்கிற இஸ்தான்புல்லுக்கு அவர்கள் மேலும் பயணத்தைத்தொடர 500 $ டாலர்கள் அனுப்பிவைத்த Karlsruhe விலிருக்கும் அவனது ஒன்றிவிட்ட சகோதரனையும்விட்டால் வேறு ஆட்கள் இல்லை. சுதாஸ் ஒருநாள் தான் பணிபுரிந்த உணவகத்துக்குச் சென்றான், அவனைக்கண்டதும் முதலாளி “ உன்னால் இனி எப்போது பணியில் சேரமுடியுமோ அப்போது தயக்கமில்லாமல் என்னிடம் வந்துவிடு” என்று சொன்னது, அவனுக்குக் கொஞ்சம் மனஆறுதல்.
ஆதன் அம்மாவுக்குமான அன்பைச்சேர்த்து அப்பாவிடம் பொழிகின்றான். அவன் தமிழும் ஜெர்மனும் கலந்துபேசும் மழலைகள் அவனின் உயிரைக் குளிர்விக்கின்றன. விளையாட்டிடத்திலோ தொடரிகளுக்குள்ளோ புதிதாகப்பார்க்கும் எவரையும் பால்பேதமின்றி ‘அம்மா’ என்கிறான். சில சந்தர்ப்பங்களில் புதிதாகவும் சொல்லாக்கங்களும் செய்ய ஆரம்பித்துள்ளான். பூஞ்சோலையொன்றின் குறுக்கேபாயும் ஒரு வாய்க்கால்க்கரையோரம் ஆதனைக் கூட்டிச்சென்றபோது அங்கே நீந்திக்கொண்டிருந்த அன்னங்களைக் கண்டதும் சந்தோஷத்தில் கிறீச்சிட்டு ‘குயூகோ’ ‘குயூகோ’ என்று அவற்றை அழைத்தான். இப்படி தமிழ் ஜெர்மன் எம்மொழிக்குள்ளும் அடங்காத ஒரு அகராதியை ஆக்கிக்கொண்டிருக்கிறான். ஆதனை மழலையர் ஆதரவுநிலையமொன்றில் ஒப்படைத்துவிட்டு அவனைப் பிரிந்தும் சுதாஸால் வாழமுடியாது.
காதலுக்கு ராகினி, வீரத்துக்குச் சமர்க்களங்கள், தியாகத்துக்கு தேசத்துக்காய் அர்ப்பணித்த களவாழ்க்கையென்று வாழ்க்கை ஒளியும் நம்பிக்கையுமாய்த் தெரிந்தவொரு காலம் அவனுக்கு இருந்தது. ‘ஆதன் இப்போது எனக்குத்தரும் சந்தோஷத்தைப்போலத்தானே இருபத்தைந்து முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இராணுவத்தினர் தம் பெற்றோருக்குக் கொடுத்திருப்பார்கள்’ என்றெல்லாம் நினைப்பதனால் இப்போது அவனது இரவுகள் அமைதியற்றிருக்கின்றன. அவனது Rounds பட்டுச்செத்துப்போன இராணுவத்தினரும் கனவுகளில் முகில்களுக்கு இடையிலும் மேலாலும் குழந்தைகளாகி எட்டிப்பார்க்கிறார்கள், தேவதைகளுடன் சேர்ந்துவரும் மாற்றியக்கப்பெடியளும் சிலர் சிரிக்கிறார்கள், சிலர் முறைக்கிறார்கள், சிலரது முகங்கள் இறுகிப்போயிருக்கின்றன, சில குழந்தைகள் ‘சுடாதே சுடாதே’யென அலறுகின்றன. ‘அம்மா ஒருகுடம் தண்ணீர் மொண்டுவரக்கேட்டபோது முடியாதென மறுத்த நான் எவனோ ஒருவனின் ஆக்ஞையில் இத்தனை இராணுவத்தினைச் சுட்டுக்கொன்றேனே’ எனும் நினைப்புக்களால் ஒவ்வோரிரவும் தூக்கம் தொலைந்துபோகுது. தமிழ்ப்புலி என்பதற்காக அவர்களும் , சிங்கள இராணுவத்தினன் என்பதற்காக நாங்களும் ஒருவர் உயிரை மற்றவர் குடித்ததும் சிறுபிள்ளைத்தனந்தான்!
இப்போது ஆதனது உடனடித்தேவை அவன்மேல் அன்புசெலுத்தி அவனைத் தாபரிக்கக்கூடிய இதயமுடைய ஒரு அம்மா மட்டுந்தான். அம்மா வாய்த்துவிட்டால் சுதாஸும் வீடு, வேலை, குடும்பமென்று ஒரு இயல்பான வாழ்க்கைச் சகடத்தோடு சுழலத் தொடங்கிவிடுவான், அபரிமிதமான பச்சாதாப உணர்வுகள், சிந்தனைகள் வந்துவந்து அவனைக் குழப்பாமலாவதிருக்கும். இனி ஆதனுக்கான அம்மாவைத்தேடி அவன் இன்னும் எத்தனை காதங்கள் பயணிக்க வேண்டுமோ, அதைத்தன் திசைகளைத் தொலைத்துவிட்டு அலமலங்கியிருக்கும் ஒரு பாய்மரத்துப்பறவை எப்படி அறியும்?
– இக்கதை இவ்வாண்டு 2021 பேசும் புதியசக்தி சஞ்சிகை எழுத்தாளர் ‘ராஜகுரு’ நினைவாக நடத்திய சிறுகதைபோட்டியில் முதாலாவதாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.