ஒரு நாய் தன் வாலைப் பிடிக்கிறது

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 10, 2025
பார்வையிட்டோர்: 732 
 
 

(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அறியாமை! அறியாமை! அறியாமை! இல்லாமை மாத்திரமன்றி இதுவும் சமுதாயத்தின் ஒரு பகுதியினருக்கு உடைமை ஆகிவிட்டதா! இது அவர்களுக்கு ஒரு முது சொமாக வந்து கொண்டிருக்கிறதோ! சமுதாயத்தில் இல்லாமல் ஒழித்துக்கட்ட வேண்டிய ஒன்றைப்பற்றி உள்ளது உள்ள படிசொல்கிறது. இந்தக்கதை. 


“வணக்கம்… வணக்கம், சேர்” என்று கூறிய மாணவர்களுக்குப் பதில் வணக்கம் கூறிய ஆசிரியர் இடுப்பிற் கைகளை ஊன்றியவண்ணம் கதம்ப மாலையாகக் காட்சியளிக்கும் மாணவ மாணவிகளை படை அணிவகுப்பைப் பார்வை யிடும் தளபதபோலப் பார்த்துக்கொண்டு வருகிறார். 

பாடசாலைக்குச் சற்று மேலாக இருக்கும் ரோட்டில், சற்று அகலமான அந்த இடத்திலிருந்து வகுப்புக்கு ஏற்றபடி பலதரப்பட்ட வாய்பாடுகளைக் கத்திக் கொண்டிருந்த சிறுவர்கள், ஆசிரியர் வரவால் கைகளைக் கட்டிக் கொண்டு ‘கப்சிப்’ என்றிருக்கின்றனர் பாடசாலையைக் கூட்டுவதற் காக உள்ளே சென்று ஆடிக் கொண்டிருந்த வாண்டுகள் நான்கும் கைகளிலிருந்த சவுக்குத் தழைகளைச் சப்பாத்தி வேலிகளுக்கு மேலாகத் தூக்கி எறிந்துவிட்டு, ‘பம்மிப் பம்மி’ ஓடிவந்து வரிசையில் நுழைந்துகொண்டன. 

முதல் நாள் பள்ளியை மூடிய கையோடு ஆசிரியர் வீட்டில் கொண்டுபோய்ப் போட்டிருந்த மேசை நாற்காலி ஆகியவற்றைத் தூக்கிக் கொண்டுவரும் சிறுவர்கள் ‘தொங்கு தொங்’ கென்று ஓடிவருகின்றனர். “ஹும் ஹும்.. மெதுவா மெதுவா” என்று ஆசிரியர் அதட்டுகிறார். 

மூடப்படாமல் திறந்த மண்டபமாகக் கிடக்கும் பள்ளி யில் உள்ள தளபாடங்கள் இரவிற் களவு போய்விடுகின்ற படியால் ஸ்கூலை கவர்பண்ண வேண்டும் என்று துரைக்கு ‘லொக் புக்கில்’ எழுதி எழுதிச் சலித்துப் போய்விட்ட ஆசிரியர், சோதனைக்கு வரும் இன்ஸ்பெக்டர் மூலமாகவும் எழுதிப் பார்த்துவிட்டார். நாலைந்து மரத் தளபாடங்களைப் பாதுகாப்பதற்காக நாலாயிரம் ரூபா செலவு செய்து ‘ஸ்கூல் கவரிங் செய்வதற்கு ‘ஜனவசம்’ இடம் கொடுக்காது என்று துரை அடிக்குறிப்பு எழுதியிருந்தார். இதனால் ஏமாற்ற மடைந்து ‘கோதாரியள் விழற்கதை கதைக்கினம்’ என்று ஆசிரியர் பொருமிக்கொள்கிறார். 

ஆசிரியரின் தலையசைப்பைத் தொடர்ந்து, சமநிலத்தில் அசையும் நதியாக மாணவர்கள் பள்ளிக்குள் செல்கின்றனர். மேசைமேல் இடாப்பை விரித்து வைத்துக் கொண்டு ஆசிரியர் பெயர்களை அழைக்கிறார். 

”வத்தேன் சேர்.” “வந்தேன் சேர்.” “வந்தேன் சேர்.”

மாணவர்கனின் குரலைத் தொடர்ந்து கோடும் சைபரு மாக இடாப்பில் அடையாளங்கள் இடப்படுகின்றன. 

”லெச்சுமி! லெச்சுமி!” ஆசிரியரின் முதல் அழைப்பிற்குப் பதில் வராதபடியால் மறுமுறையும் அழைக்கிறார், பலமாகவும் அதட்டலாகவும். 

“லெச்சுமுக்கு காச்சல்ங்க. அதா வரலீங்க.” 

அந்த இடத்திற்கு முற்றிலும் அறிமுகம் இல்லாத அந்தக் குரலைக் கேட்டு ஆசிரியர் நிமிர்ந்து பார்க்கிறார். அரைச் சுவருக்கும் கூரைச்சாய்ப்பிற்கும் ஊடே தெரியும் ரோட்டில் நிற்கும் அவளை – லெச்சுமியின் தாயை காக்கையாய் தலை சாய்த்துப் பார்த்துவிட்டு இடாப்பில் மொத்தம் கூட்டிப் போடுகிறார். 

“ஸ்கோலுக்கு வர்ர புள்ளைக அடிக்கிதுன்னுதாங்க வரப் பயப்புடுதுங்க.” 

“யாரு அடிக்கிறதாம்?” என்றபடி இடாப்பை மூடுகிறார். மாணவர்கள் கைகளைக் கட்டியவாறு மௌனமாக நிற்கின்றனர். 

“யாரோ அம்மாசி மவனாங்க ஐயா. நேத்து ஸ்கோலுக்கு வந்த புள்ளைய கையப் புடிச்சி இழுத்து, இங்க வாடி ஒன்னை ஒரு வேலை…” 

அவள் முடிக்கவில்லை. சொல்லிக் கொண்டே போகிறாள். அவளுடைய பேச்சு பாலியல் தொடர்பான விஷயங்களை நோக்கி, பள்ளத்தை நாடிப் பாயும் வெள்ளத்தைப் போலப் போய்க்கொண்டிருக்கிறது. மிகவும் பச்சையாக – ஒளிவு மறைவு என்னும் வரம்புகளை முறித்துக் கொண்டு, கண்ணியம் கட்டுப்பாடு என்னும் பண்புகளை மிதித்து நசுக்கிக் கொண்டு அவள் பேச்சுப் போய்க்கொண்டிருக்கிறது. 

வெற்றிலைச் சாறு கடைவாயில் நுரைக்க அவள் பேசும் சத்தம் பாடசாலை அமைதியில், மிகவும் துல்லியமாக ஒலிக்கிறது. இந்த எதிர்பாராத அசிங்கப் பேச்சால் ஆசிரியர் தடுமாறித் தவிக்கிறார். கிழவியின் வாயையோ மாணவர்களின் காதுகளையோ அடைக்க முடியாத ஒரு இரண்டுங் கட்டான் நிலைமையில் நின்று தவிக்கிறார்! தனது அந்தரங்கமான இரகசியம் அம்பலமானதுபோன்ற அலமான உணர்ச்சியில் ஆத்திரமும் மேலிட மாணவர்களைப் பார்த்து அதட்டுகிறார். 

“ஏன்ற வாயப் பாக்கிறியள் படியாமல்?” என்று மாணவர்களை நோக்கிக் கத்துகிறார். மாணவர்கள் மெதுவாகப் படிக்கத் தொடங்கிப் பின் பலமாகக் கத்தத் தொடங்கிவிட்டனர். அந்த இரைச்சல் அப்போதைக்கு மிகவும் அவசியமான – அவசரமான ஒளஷதமாக விளங்கியது. 

ஆசிரியர் ஒரு திருப்தியுடன் மெதுவாக ரோட்டிற் கேறுகிறார். ”சின்னப் பிள்ளைகள் முன்னிலையில் இப்படியா பேசுவது” என்கிறார், அவளைக் கண்டிப்பதற்காக அவளோடு கூட நிற்கும் வயது வந்த ஒரு பெண்ணைக் கண்டதும் ஆசிரியர் தயங்குகிறார். அவருக்கே வெட்கமாக இருக்கிறது. 

“இதுகளாங்க சாரு சின்னப் புள்ளைக!…” அவ்வா அவ்வா என்று உள்ளங்கையால் வாயைப் பொத்தியவள், “இது எத்தப் பெரிய கொமருங்க” என்று தனக்குப் பின் நிற்கும் மகளை முன்னால் இழுத்துக் காட்டுகிறாள். ரவிக்கை இறுக்கத்திலும் கம்பாயச் சுற்றலிலும் புடைவைக் கடை விளம்பரப் பொம்மையாகக் காட்சியளிக்கும் அவள் பொய்யான வெட்கத்துடன் தாய்க்குப்பின்னால்  மறைந்து கொண்டு அவள் தோளில் “சும்மா இரு” என்று செல்லமாகக் குத்துகிறாள். 

“என்னா ரொம்ப வெக்கப்படுற? அதுனாலதானே நேத்தி மொளைக்காத வாண்டு ஒன்யை போட்டு ஏறி மிதிக்கப் பாக்குது” என்று மகளைக் கண்டித்து விட்டு மீண்டும் தொடர்கிறாள். 

“இது எத்தப் பெரிய புள்ளைங்க! இத கையத் தட்டிக் கூப்பிடுறாங்க அந்த பய! கறையாந் தலையாட்டம் இருந்து கிட்டு! அப்பப் பாருங்க, என்னா ஒரு அக்கிருமம் அந்த மொளைக்காத மொட்டைக்கு!” என்கிறாள். 

அவளை இழுத்து அறைய வேண்டும் போன்ற ஆத்திரம் வருகிறது ஆசிரியருக்கு. பேச்சை மேலும் வளர்த்துவிட விரும்பாமல் “அவன் இங்க ஸ்கூலுக்கு வாரதில்லை” என்று கூறியபடி பாடசாலைக்கு இறங்குகிறார். 

“நீங்க கொஞ்சங் கண்டிச்சி வைங்க.ஹூம் இந்தக் காலப் புள்ளைக படிக்கவா வருதுக ” என்று கூறிய படியே செல்கிறாள். 

விண்டுரைக்க முடியாத மன உளைச்சலால் வெறுப்பு மேலோங்கிய மனத்துடன் ஆசிரியர் படிகளில் இறங்கி வருகிறார். அணில் குதறிய சோளக் கதிர் போல மனம் எண்ணப் பிசிர் விட்டுக் கிடக்கிறது. 

அவன் பாடசாலைக்கே வராதவன் என்பதால் ஆசிரியர் சற்று திருப்திப் பட்டுக் கொள்கிறார், மானத்தைக் காப்பாற்றினானே என்று. இல்லாவிட்டால் “ஒங்க வாத்தியாரு இப்படித்தான் படிச்சிக்குடுத்தாரோ!” என்று அவனைக் காணும் போதும், ”இப்படித்தான் நீங்க ஸ்கோல்ல படிச்சிக் குடுக்கிறீங்களோ!” என்று ஆசிரியரைக் காணும்போதும் பேச்சு எடுபடும். இரண்டிலும் ஆசிரியர் தலையே இழுபடும். 

சமுதாயச் சீர்கேடுகள் அனைத்திற்கும் ஆசிரியரே பொறுப்பு என்று வாதிடும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்வதில்லையே! 

இரண்டு மாணவர்கள் ஏதோ இரகசியமாகப் பேசிச் சிரித்துக் கொள்வகைக் கண்ட ஆசிரியர் பின்புறமாகச் சென்று கவனிக்கிறார். 

”ஒங்க அக்காவுக்குக் காலு போடுடா!” ‘அக்க’ என்று எழுதியிருப்பவனிடம் மற்றவன் கூறுகிறான். ஆசிரியர் பளார், பளார், என்று அவனை அறைகிறார். திடீர்த் தாக்குதலால் மாணவன் துடித்துப் போகிறான்! ஆசிரியருக்கே பாவமாக இருக்கிறது. ”குழப்படி பண்ணின” – ஆசிரியர் எச்சரித்து விட்டு நாற்காலியிற் போய் அமருகிறார். 

பாவம் சின்னப் பிள்ளைகள் என்ன கண்டார்கள் ஏதோ பெரியவர்கள் பேசுகிறார்களே என்று தாங்களும் வாய் கூசாமல் பேசிவிடுகிறார்கள். இப்பொழுது அந்தக் கிழமூதேசி பச்சை பச்சையாகப் பேசவில்லையா! சிறுவர்கள் இருக்கிறார்களே என்று நினைத்தாளா! பள்ளிக்கூடம் என்று பார்த்தாளா! மகள் கூட நிற்பதையும் மதித்தாளா! சிறுவர்களும் அதே போல வாய்க்கு வந்தபடி கதைக்க வேண்டியதுதானே! 

பாம்பு தோலுரிப்பதைப் போல வயது முதிர முதிரப் பெண்மைக்குரிய நாணம், அடக்கம் முதலிய குணங்களைக் கழற்றிவிட்டு, நாங்கள் எல்லோரும் காலத்தைக் கடந்தவர்கள் என்றும், பொறுப்பில்லாமலும் அடக்கம் இல்லாமலும் கட்டுப்பாடுகளைக் கடந்தும் நடந்து கொள்ளலாம் என்றும், அப்படி நடந்து கொள்வதால் தமக்கு ஒரு பெருமை என்றும், மதிப்பு என்றும் வறட்டுத்தனமான போலித் திருப்தியுடன் அலட்சியமாக நடந்து கொண்டு, தங்கள் அடியினைப் பின்பற்றி வரும் இளஞ் சந்ததியினருக்கு ஒழுக் கத்தை வலியுறுத்துவது எவ்வளவு மடமைத்தனம்! இது ஏமாற்று வித்தையாக உள்ளது. மழலைப் பேச்சு மாறாத பருவத்திலேயே பாலியல் இலக்கணத்தை உறுப்பியலோடு ஒப்பிக்கும் பாலகர்கள் எந்தப் பள்ளியில் இவற்றைக் கற்றார்கள்? யார் கற்பித்தார்கள்?

ஆசிரியரின் சிந்தனை விரிய விரிய வெறுப்பும் எல்லை கடந்து விரிகிறது. 

‘இந்தச் சிறிய வயதிலே இவன் இப்படி என்றால் வாலிபப் பராயத்தில்? எதிர்காலத்தில்? குற்றவாளியைத் திருத்த வேண்டும்’ என்று அவர் மனம் – ஆசிரிய மனம் துடிக்கிறது. அவனுடைய தகப்பனிடம் கூறிக் கண்டிக்கச் சொல்ல வேண்டும் என்ற தீர்மானத்துடன் பாடசாலை முடிந்தும் வீட்டிற்குச் செல்லாமல் அங்கேயே அடைந்து கிடக்கின்றார். 

பாடசாலைக்கு மிக அருகிலேயேதான் அவனுடைய அம்மாசியின் – தகப்பனுடைய ‘லயம்’ இருக்கிறது. ஆளுயரம் வளர்ந்து கிடக்கும் சப்பாத்திச் செடி வேலி இல்லாவிட்டால் லயம் நன்றாகத் தெரியும். வேலி கண்களைத்தான் மறைக்குமே தவிர, காதுகளையும் மறைக்குமா? அங்கே பேசுவது அனைத்தும் இங்கே கேட்கும். பாடசாலை அமைதியாக இருந்தால்! பழக்கப்பட்டவர்களுக்குக் குரலைத் கேட்டதும் பேசுவது யார் என்று அறிய முடியும். 

‘அவனுடைய தகப்பனை வரச்சொல்லுவோம்’ என்று நினைத்த ஆசிரியர் விஷயத்தை எப்படிச் சொல்வது என்று குழம்புகிறார். மனதிற்குள் பலமுறை ஒத்திகை பார்த்தும் மனம் சொல்வதற்குத் தடுமாறுகிறது! கூசுகிறது! 

ஆனால், காலையில் அவள் எவ்வளவு சாதாரணமாகக் கூறினாள். அது பழக்கம். ஜென்மாந்திரப் பழக்கம். கல்லாமற் பாகம்படும் வித்தை! 

ஆசிரியர் எண்ணிக் கொண்டிருக்கும் போதே லயத்தில் பேச்சுக்குரல் கேட்கிறது ‘ஆம் அவன்தான் வருகிறான். வரட்டுக்கும்’ என்று எண்ணிக் கொள்கிறார். பேச்சு தெளிவாகச் செவியுட் பாய்கிறது. 

”பாப்பாத்தீ… இப்ப நேரம் என்னா இருக்கும்?” 

“தெரியல்லீயே.” 

“ரேடியோவ போட்டுப் பாக்கிறதுதாலே.” 

வேண்டும் என்றே வம்புக்கிழுக்கும் சேட்டைப் பேச்சு என்பது தெரிகிறது. 

“இப்ப ரேடியோவ போடப் புடாது.” 

”……. வீட்டுக்கு தூரமா இருக்கோ!” 

இளகிய ஈயமாக ஆசிரியரது காதுகளில் இச்சொற்கள் பாய்கின்றன! 

“ஒங்களுக்கு சும்மாப் போவ ஏலாது.” 

அவள் பொய்க் கோபத்தில் ஏசுகிறாள். 

“ஐயைய! சும்மாப் போனா வெக்கமல்ல… கல்லடிப்  பாங்க!” 

தன்னுடைய கடைசி மகளை ஓத்த ஒரு சிறுமியிடம் ஒருவன் கதைக்கும் இலட்சணமா இது! இவனிடம் போய் உன்மகன் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறானே என்று கூறினால், “அட!  அவனாட்டம் நா இருக்கயில பண்ணுவ அட்டகாசத்தில இது எந்த மூல!” என்று அவன் நினைப்பானே! புலிக்குப் பிறந்ததல்லவா! பூனையாகுமா! தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயுமாமே. அப் பொழுது எப்படி! 

ஆசிரியர் குழம்பிக்கொள்ளும்போதே அவன் பாட சாலை வளவிற்குள் வந்துவிட்டான். ஆசிரியரை வேலி மறைத்துக் கொள்கிறது. அவராகவே தன்னைக் காட்டி கொண்டாலொழிய அவனாற் கான முடியாது. 

“அம்மா புல்லு வெட்டவா போனீங்க?” 

மீண்டும் அவன் குரல் கேட்கவே ஆசிரியர் நிமிர்ந்து பார்க்கிறார். அதோ அவளேதான். காலையில் கொந்தாப்பு வெட்டச் சென்ற லெச்சுமியின் தாயேதான். தன் மகளுடன் வந்துகொண்டிருக்கிறாள். வழக்கில் சம்பந்தப்பட்ட வருமே சந்தித்துக் கொள்வதால் ஆசிரியர் தமது தலையீடின்றி பிரச்சனை ஆராயப்படப் போகிறதென்ற ஆவலில் காது களைக் கூர்மையாக்கிக் கொள்கிறார். 

”புல்லு வெட்டவா போனீங்க” என்ற அவன் கேள்விக்கு ”ஆமாங்க” என்று பதில் கூறுகிறாள். 

“புல்லு எல்லாம் வெட்டி முடிச்சிட்டீங்களா?” 

“அங்கெல்லாம் வெட்டியாச்சி இங்குதான் இன்னும் கெடக்கு.” அவள் அசிங்கமாகக் கைச் சாடை காட்டுகிருள். 

ஆசிரியர் தன் காதுகளை இறுக மூடிக் கொள்கிறார்! வெந்த புண்ணில் ஊசியாற் குத்தியது போல் இருக்கிறது. காலையில் இருந்து துடித்துத் தவித்துக் குழம்பிக்கொண்டிருந்த அவரது மனம் சப்பென்று சோர்ந்துவிட்டது, காற்றுப் போன பலூனைப் போல! 

குற்றவாளியைத் திருத்தவேண்டும் என்று தவித்துக் கொண்டிருந்தவருக்கு யார் குற்றவாளி என்றே தெரியவில்லை! 

யார் குற்றவாளி? 

உணர்ச்சி தவறிய ஒரு கணத்தில், தடுக்க முடியாத ஒரு நிலையில் உலகில் ஜனித்துவிடும் குழந்தைகளா? 

ஓர் உயிரைக் கோற்றுவிக்கும் புனித சக்தியைக் கேலிக் கூத்தாக. கேவலச் செய்கையாக மாற்றிவிட்ட மனிதப் பிண்டங்களா? 

இல்லை! இல்லவேயில்லை! 

ஒரு சந்ததியினரை அறிவற்ற குருடர்களாக்கி, மிருக வெறிகொண்ட மனிதர்களாக்கி, அதே வாழ்க்கை அடிப்படையில் ‘ஒரு நாய் தன் வாலைப் பிடிப்பதுபோல்’ சுற்றிச் சுற்றி வரச் செய்துகொண்டிருக்கும் இந்த நாசகரமான சமுதாய அமைப்புத்தான் காரணமோ! 

– மல்லிகை, 1978. 

– தகவம் பரிசுக் கதைகள் (தொகுதி-I), முதற் பதிப்பு: ஒக்ரோபர் 1987, தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்), யாழ்ப்பாணம், இலங்கை.

பரிபூரணன் 

மலையகத்தின் இளைய தலைமுறை எழுத் தாளர்களில் தமது பார்வைக் கூர்மையா லும் படைப்பாற்றலாலும் கணிப்புப் பெற்ற வர், ‘பரிபூரணன்’ என்னும் புனைபெயரில் எழுதிவரும் ச.பாக்கியசாமி. 1967 ஆம் ஆண்டளவில் எழுத்துத் துறைக்குள் அறிமுகமான இவர், மலையகத்தில் மண்டிக்கிடக்கும் கொடுமைகள், தீமைகள், அறியாமை ஆகியவை களைந்தெறியப்பட வேண்டும் என் னும் ஒரே நோக்கோடு இலக்கியம் படைப் பவர். இவர் கதாசிரியர் மாத்திரமன்றிக் கவிஞருமாவார். 

சிறுகதைகளும் கவிதைகளுமாக வரை ஐம்பதுக்குமேல் எழுதியுள்ள பரிபூரணன் மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் நடத்திய மலையகச் சிறுகதைப்போட்டிகளில் மூன்று தடவைகள் பரிசுகள் பெற்றுள்ளார். ‘கதைக் கனிகள்’ என்னும் பரிசுக் கதைத் தொகுப்பினிலே இவருடைய சிறுகதைகள் இரண்டு இடம்பெற்றுள்ளன. 

பரிபூரணன் ஊவா கட்டவளையில் ஆசிரியராகக் கடைமையாற்றி, அண்மையில் தமிழகம் சென்றுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *