ஒரு கிராமத்தின் கதை





(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பரந்த கடற்கரை வெளியில் மீனறுப்பும், உப்புத் தடவலும், கருவாடு காயவைப்பும் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. சுற்றுவட்டமெங்கும் வேலை செய் வோரின் உரையாடலும், மீன் வெடுக்குமாக ……
செதிழ் விரித்து, உப்புத் தூளிட்டுக் குவிக்கப் பட்டி ருந்த மீன்களைக் கூடையிலிட்டு வெயிலில் பரவிக் கொண்டிருந்தபோது, தங்கத்துரை’ என்று அவனை அழைத்தார் சம்மாட்டியார். தொட்ட குறைவிட்ட குறை யாக சம்மாட்டியாரிடம் ஓடினான் தங்கத்துரை.
‘கருவாடெல்லாம் காயப் போட்டுக் காவலிரு…நான் போயிட்டு அந்திக்கு வர்ரேன். கவனமாய்ப் பார்த்துக்கோ…….’ என்று கூறிவிட்டு வீட்டை நோக்கி நடை யைக் கட்டினார் சம்மாட்டியார்.
சவரிமுத்துச் சம்மாட்டியிடம் வேலை செய்யும் பல தொழிலாளர்களில் தங்கத்துரையும் ஒருவன் என்றாலும், அவன் மீது சம்மாட்டியாருக்கு வலு கரிசனை. எந்த வேலையென்றாலும் முகம் சுளிக்காமல் தன் வேலைபோல் மாடாய் உழைப்பதோடு நம்பிக்கைக்குப் பாத்திரமான வனாக இவன் இருப்பதுதான் காரணம். வலை பொத்தல், தரம் பிரித்தல். ஏலம் கூறல், கருவாடு போடுதல் எது வென்றாலும் சுறுசுறுப்பாகச் செய்வான். அவன் கடலுக்குப் போகும் நாட்களிலும் அதிக மீன் பட்டிருக்கும். நீ அதிர்ஸ்டக் காரண்டா என்று முதலாளி அடிக்கடி கூறினாலும், அரை வயிற்றுக்குக் காணக்கூடிய ஊதியம்தான் கொடுத்து வருகிறார், முன்னர் அவன் தனியாக இருந்த போது சமாளிக்கமுடிந்தாலும் இப்போது வேதவல்லியைக் கைப்பிடித்த பின் வங்கிரோத்தடித்தது. அப்படி இப்படி என்று அவளும் வேலை வெட்டி செய்து வந்ததால் ஒருவாறு சமாளிக்க முடிந்தது.
தங்கத்துரையின் உறவினர்கள், பரம்பரை பரம்பரை யாக அந்தக் கடற்கரைப் பிரதேசத்தில் வாழ்ந்து வந்த போதும் இன்றுவரை அவர்களில் எவருக்கும் ஒரு காணித் துண்டு கூட இல்லை. உழைத்து உழைத்து சம்மாட்டி களை உயர்த்தியதுதான் கண்ட மிச்சம். பரம்பரை பரம் பரையாகச் சம்மாட்டி களிடம் கடன்பட்டு, அவர்களது நிலத்திலேயே குடிசையமைத்து வறுமையோடு வாழ்ந்து வந்தார்கள். சில சாதகமான காலங்களில் தென்பகுதிச் சம்மாட்டிகள் இங்குவந்து வாடியமைத்து மீன் பிடிக்கின்ற நாட்களில் எல்லோருக்கும் வேலை கிடைக்கும். ஆனால் அவர்கள் கொடுக்கும் ஊதியமும் அப்படி இப்படித்தான். அவர்களிடம் வேலை செய்வது உள்ளூர்ச் சம்மாட்டி களுக்குப் பிடிக்காது. இயந்திரப் படகுகள் சகிதம் வந்து மீனை எல்லாம் வாரிக் கொண்டு போவதாக உள்ளூர் சம்மாட்டிகள் புறுபுறுப்பார்கள் இதனால் இப்போதெல் லாம் தென்பகுதிச் சம்மாட்டிகள் தொழிலாளர்களையும் அங்கிருந்தே அழைத்து வருவது சகஜமாகிவிட்டது.
ஆரம்பத்தில் ஓரளவு சுமுகமாக இரு சாராரும் பழகி வந்தாலும் கூட, காலப்போக்கில் உள்ளூர்க்காரர்கள் மீது தென் பகுதியினர் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த பின் பிரச்சினைகள் உருவாகின. அதிலும் அரசமரத்தடி விகாரை வந்தபின் இரு சாராருக்குமிடயே பிடுங்குப்பாடு அதிகமாயிற்று. இத்தனைக்கும் உள்ளூர்ச் சம்மாட்டிகளும் வெளியூர்ச் சம்மாட்டிகளும் நண்பர்களாகவே இருந்து கொண்டு அடியாட்கள் மூலம் அதை இதைச் செய்து வந்தார்கள்.யாழ்ப்பாணத்தில் வெடிச்சத்தம் கேட்டால் இங்கே கொக்கிளாயில் உள்ளூர்க்காரர்களின் குடிசைகள் எரிய ஆரம்பிக்கும். இப்படியே இரு சாராருக்குமிடையே குரோதம் வளர்ந்து வந்தது.
தங்கத்துரை வீண் வம்பு தும்புக்குப் போவதில்லை ஆனாலும் கடந்தவருடம் அவனது குடிசைக்கும் தீ வைத்து விட்டார்கள். அப்புறம் அதை மறுபடியும் கட்டியெழுப்ப அவன் பட்டபாடு அப்பப்பா! அழிப்பது சுகம், ஆக்குவது கஷ்டம், என்பதை அனுபவ வாயிலாக அறிந்தான் தங்கத்துரை.
கிராமத்துக்குச் சென்று களிமண் சுமந்து வந்து கடற்கரை மணலுடன் கலந்து, பிசைந்து குழைத்து பெரிய பெரிய உருண்டையாக்கி, இரு பக்கம் பலகை யடித்து, நேர்தப்பாமல் அடுக்கி, மொங்கானிட்டிறுக்கி அந்த நான்கு சுவர்களையும் அமைக்க அவனும் வேதவல்லியும் பட்ட சிரமம் எழுத்திலடங்காது.
பிறகு காட்டு மரங்களைக் குறுக்கு நெடுக்காக வைத்து வரிந்து கட்டி கோப்பிசம் அமைத்து, தென்னங் கிடுகுகளை வரிந்து கட்டி மேய்ந்து முடிப்பதற்கிடையில் ஐஞ்நூறு ரூபா செலவாகி விட்டது. அப்புறம் பாத்திரம் பண்டம் என்று தட்டு முட்டுச் சாமான்கள் வாங்கியதிலும் ஏகப்பட்ட செலவு. சவரிமுத்துச் சம்மாட்டியார் கை கொடுத்திருக்காவிட்டால் அவர்கள் கதி அதோ கதிதான்.
வெயில் ஏறிக் கொண்டிருந்தது. காற்றின் அசைவு இல்லாததால் வெப்பம் தாங்க முடியாததாக இருந்தது. கருவாடு பொறுக்கப் பறந்து வந்த பறவைகளை ‘சூய் என்று விரட்டிவிட்டு தலைப்பாவை அவிழ்த்து முகந்தில் வடிந்தோடும் வியர்வையைத் துடைத்துக் கொண்டான் தங்கத்துரை. மற்றத் தொழிலாளர்கள் குடிசைகளுக்குத் திரும்பி விட்டார்கள்.
காதில் தொருகி வைத்திருந்த பீடித் துண்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு திரும்பியபோது ‘என்ன பாரைக் கருவாடா?” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தான்.
ஆறடி உயரத்தில் அஜானுபாகுவாய், வெளுத்த வெள்ளச் சாரமும், வரிந்து கட்டிய பெல்ற்றும், கோட்டுமாக விரித்துப் பிடித்த குடையுடன் பியசேனா முதலாளி நின்று கொண்டிருந்தார்.
‘பாரையும், வஞ்சூரமும் இருக்குங்க’ தங்கத்துரை மெல்லச் சிரித்தான் பியசேனா, ‘எங்களுக்கு அதிக மீன் படுகுதில்லை’ என்று பெருமூச்சு விட்டபடி கையிலிருந்த சுருட்டைச் சாம்பல் தட்டி ஒரு தரம் இழுத்துப் புகையை ஊதிக் கொண்டார்.
‘அப்ப நான் வாரன்’ பியசேனா புறப்பட்டதும் வாயுள் கசந்த எச்சிலைத் துப்பிவிட்டு அணைந்த பீடியை எறிந்தான்.’இந்த அறுவானும், அந்தக் காவாலி மொட் டையனும்தான் போன வரிசமும் குடிசைகளை எரிப்பிச் சவங்கள். ‘இந்த வரிசமும் வந்திட்டாங்கள்’ என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான் தங்கத்துரை.
மறுபடியும் ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு ஒரு கணம் என்னவெல்லாமோ யோசித்தான். கிழக்குப்புற மிருந்து சவளும், வலையுமாக வன்னிநாயகன் வந்து கொண்டிருந்தான்.
‘என்ன வன்னியன், மீன் பட்டுதோ?’
‘அறுவாங்கள் வாரியள்ளிக்கொண்டு போக வந்திட் டாங்கள். இனியெங்க சின்ன வள்ளக்காரருக்கு மீன் படுகிறது?’ வன்னியன் சலித்துக் கொண்டே நடந்தான்.
முகத்தைத் துடைத்த துண்டையுதறி மறுபடியும் முண்டாசாகக் கட்டிக் கொண்டு பறவைகளைக்கலைத்துக் கொண்டிருந்தபோது சாப்பாடும் கையுமாக வேதவல்லி வருவது தெரிந்தது. அருகே வந்ததும் முகமெல்லாம் சிரிப்பாக அழகாகப் பூரித்தபடி சாப்பிட அழைத்தாள்.
தென்னைமர நிழலில் வந்தமர்ந்து கொண்டபோது. வேர்வை என்னமாய் வடியுது என்று முந்தாளையை எடுத்து அவன் முசத்தைத் துடைத்து விட்டாள் வேதவல்லி.
‘விடு… விடு….. முதல்ல பசி வயிற்றைப் பிடுங்குது…. கொண்டா’ என்று பிடுங்கினான். அவள் அன்போடு குழைத்துத் திரட்டிக் கொடுத்தாள். ‘ஊட்டிவிடு’ என்று சிறு பிள்ளையாட்டம் அடம்பிடித்தான் தங்கத்துரை. ஆசையைப்பாரு ஆசையை’ என்றபடி அக்கம் பக்கம் ஆளில்லாததை அவதானித்து விட்டு நாணத்தோடு ஊட்டி விட்டாள். ‘மீன் குளம்பு நல்ல ருசி” என்றான். ‘உன் கை பட்டதால…’
அவன் சொல்வதைப் புன் சிரிப்புடன் கண்களை மலர்த்தி வைத்துக் கொண்டு நாணத்தோடு ரசித்தாள். வேதவல்லி.
‘குழந்தை முழிச்சு அழப்போகுது’ அவன் சாப்பிட்டு முடிந்ததும் அவள் அவசரமாக விடை பெற்றாள்.
மாலைவரை நின்று கருவாடெல்லாம் அள்ளி வாடியுள் வைத்துவிட்டுத் தங்கத்துரை திரும்ப, மாலை ஆறு மணியாகி விட்டது. அவன் குடிசையை நோக்கி நடந்த போது வழியிலே எதிர்ப்பட்ட பேரம்பலம், கொழும்பில என்னவோவாம்… லொறிக்கார மன்சூர் சொன்னான் என்று கூறினான். தங்கத்துரைக்கு அடிவயிற்றைக் கலக்கியது.
அவன் பயந்தது போலவே இரவு உள்ளூர்காரர்களின் குடிசைகளுக்குத் தீ வைக்கப்பட்டது. குய்யோ முறையோ என்று குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு பெண்களெல்லாம் அலறியடித்துக் கொண்டு ஓடினர். உயிரைப் பிடித்துக் கொண்டு வெளியேறியவர்கள் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டார்கள்.
உள்ளூர்க் காரர்களுக்கும் ரோசம் வந்துவிட்டது ‘குட்டக் குட்டக் குனிபவன் மடையன்’ என்ற ஞானோ தயத்தினால் நள்ளிரவுக்குப் பின்னர் இவர்களும் ஒன்று சேர்ந்து சென்று வெளியூர்க்காரர்களின் வாடிகளுக்குத் தீ வைத்தனர்.
பொலிசார் வந்துதான் நிலைமை கட்டுக்கடங்சியது.
கலவர நிகழ்வுகள், அழிவுகள், பாதிப்புகள் எல்லாம் நீண்ட நாட்கள் மனதை வாட்டின. மூன்று மாதங் களுக்குப் பின்னர் அகதி முகாம்களிலிருந்து திரும்பி வந்து எரிந்து சாம்பரான குடிசைகளைப் பார்த்தபோது தங்கத் துரைக்கு இரத்தம் கொதித்தது.
தமது கஷ்டங்களைப் பற்றி அரசாங்க அதிபர், எம்.பீ., மந்திரி எல்லோருக்கும் மனுஅனுப்பிய உள்ளுர்க் காரர்களுக்கு மேலிடத்திலிருந்து பால் வார்க்கும் செய்தி ஒன்று கிட்டியது?
அந்தப் பிரதேசத்தில் மாதிரிக் கிராமம் அமைக்கப்படப் போவதாகவும், அதிலே வீடிழந்தவர்களுக்கு வீடு வழங்கப் படும் என்றும் அந்தச் செய்தியிலே குறிப்பிடப்பட்டிருந்தே அவர்களது குதூகலத்திற்குக் காரணமாகும்.
சொன்னபடியே வேலைகளும் துரிதமாக ஆரம்பித்தன.
சவரிமுத்துச் சம்மாட்டியாரின் நிலத்தில் ஒரு பகுதியை மாதிரிக்கிராமம் அமைக்க அரசாங்கம் சுவீகரித்த போது அவரும் முழுமனதோடு கையளித்தார்.
கல்லு, மணல், செங்கட்டி, ஓடு, கூரைத்தகடு என்று லொறிலொறியாக வந்திறங்கின. மூன்றே மாதத்தில் ழகான சிறிய கல்வீடுகளைக் கொண்ட கிராமம் உருவானபோது தங்கத்துரையும் சுற்றத்தாரும் மகிழ்ந்து பூரித்தனர்.
வீடு வழங்குவதற்குப் பெயர்கள் கூட திரட்டப்பட்டு விட்டது. அடுத்த மாத முற்பகுதியில் திறப்புவிழா என்று றிவிக்கப்பட்டும் விட்டது. அந்த நாளை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த வேதவல்லியும் தங்கத்துரையும் பலவிதக் கற்பனைகளில் மிதந்தனர்.
கிராமம் திறக்கப்படுவதற்கு இன்னமும் ஒரே வாரம் இருந்தபோது திடீரென்று, லொறிகளிலும், பஸ்களி லுமாக பியசேனா முதலாளி, மற்றும் பலரும் வந்திறங்கி னார்கள். ஒவ்வொரு வீடாக அந்த மாதிரிக் கிராம வீடுகளை ஆக்கிரமித்தார்கள். ஒரு வீடு கூட மிஞ்ச வில்லை.
ஒரு வாரம் கடந்து, ஒரு மாதம் கடந்து, ஒரு வருடம் கடந்து. இன்னமும் அங்கு குடியேறியவர்கள் வெளியேற்றப் படவுமில்லை, மாதிரிக் கிராமம் திறக்கப்படவுமில்லை.
‘இன்னமும் ஒரு வாரத்துள் வெளியேறாவிட்டால் இங்கு அத்து மீறிக் குடியேறியவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும்’ என்று அரசாங்கம் அறிக்கை விட்டபோது தங்கத்துரையின் மனதில் நம்பிக்கை துளிர் விட்டது.
மறுபடியும் ஒருவாரம், ஒரு மாதம், ஒரு வருடம் ஒடிக் கரைந்தது.
‘என்னங்க, அரசாங்கம் உத்தரவிட்டும் எதுவும் நடக்கவில்லையே? என்று வேதவல்லி கணவனிடம் கேட்டாள். ‘ம்…’ என்று நெடுமூச்செறிந்தான் தங்கத்துரை.
– மல்லிகை, 1984.
– மீன்குஞ்சுகள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மே 1994, மல்லிகைப் பந்தல், கொழும்பு.