ஒரு அந்தரங்கம் ஊமையானபோது




அவள் சுமைஹா பெற்றோருக்கு செல்லப்பிள்ளை அண்ணன் தம்பி,அக்கா தங்கை உடன் பிறப்புகள் இல்லா தனிகட்டை அதனால் தானோ என்னவோ வீட்டில் அவள் அடம்பிடிக்கும் எதுவும் அடுத்த நொடியில் அவள் காலடியில் கிடைத்துவிடும்
வாப்பா.. சுலைமான் ஊரறிந்த பணக்காரன் ,பணம் இருந்தால் இன்னும் சொல்லவா வேண்டும் அரசியல் செல்வாக்கு எல்லாம் ஒரு அத்துப்பிடி ஊருக்குள் அரசியல் வாதிகள் காலடி வைப்பதென்றாலே அவரின் அனுமதி இன்றி நடமாடவே முடியாது ஒரு முறை அவர் சாராத அரசியல் கட்சியின் அந்தரங்க கூட்டம் ஒன்று மிகரசியமானமுறையில் நடைபெறுவதற்கு ஏற்பாடகி எல்லாம் தடபுடலாக நடைபெற்று அழைப்பிதழ்கள் கொடுப்பதற்குகூட அவர்களால் முடியவில்லை ஏற்பாட்டாளர்கள் பலர் இனம்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள் ,இருந்தும் இது சுலைமானின் வேலைதான் என்று தெரிந்தபோதும் எவராலும் வாய்திறக்கவோ பொலிசில் முறைப்பாடு செய்வதற்கோ முன்னிற்பதில்லை சில திரைப்படங்களில் வரும் தாதாக்கள் போல எங்கும் எதிலும் சுலைமானின் செல்வாக்கு ஓங்கியிருந்தது வில்லனுக்கு கதாநாயகன் பிறக்காமலா போய்விடுவான் என்று ஊரார் அவரவர் மனங்களை ஆறுதல்படுத்திக்கொள்வதை விட வேறு தெரிவுகள் இருப்பதில்லை
“வாப்பா எனக்கு ஏதாவது தனியார் வங்கியில் தொழில் எடுத்துதாங்க படித்தற்கு கொஞ்சநாளாவது தொழில் பார்க்கவேண்டும்போல ஆசையாக இருக்கு”
“மகள் உங்களுக்கு என்ன குறை நமக்கிட்ட இருக்கிற பணம் செல்வாக்கு, இதுக்குள்ள மகளுக்கு உத்தியோகம் என்றால் ஊரில என்னத்த கதைப்பாங்க நமக்கு ஒரு கொளரவம் வேண்டாமா அப்படியெல்லாம் ஆசைப்படக்கூடாது மகள்”
“பிளீஸ் வாப்பா ஒரு பொழுதுபோக்குக்காவது..உங்கட செல்வாக்கை பாவித்து எடுத்துதாங்க வாப்பா”
எப்போதும் மகளின் வேண்டுதலை அவரால் தட்டிக்களிக்க முடிவதில்லை
“ம்.. பார்ப்போம்”
அப்படி ஒரு வார்த்தை அவரால் சொன்னால் போதும் எப்படி சரி முடித்துவிடுவார் என்பது சுமைஹா விற்கு நன்கு தெரியும் அவள் அமைதியாகிக்கொண்டாள்
அன்று அவளுக்கு அவள் நினைத்தது போல் தனியார் வங்கியில் நியமனம் கிடைத்துவிட்டது “மகள் நான்தான் இன்று வேலைக்கு கூட்டிக்கொண்டு விட்டுட்டு வருகிறேன் வேலை முடிந்தால் கோள் எடுங்க நான் உடனே வருவேன்,அடுத்து வங்கி வேலைதானே கஸ்டமாகத்தான் இருக்கும் அப்படி கஸ்டம் என்றால் நேரகாலத்தோட சொல்லிடனும் சரிதானே அப்புறம் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கக்கூடாது”
“சரி வாப்பா.. நீங்க எனக்காக கஸ்டப்படவேண்டாம் றைவருட்ட சொன்னா இருக்கிற ஏதாவது வாகணத்தை எடுத்துகொண்டுவருவாருதானே”
அவர் எதுவும் பேசவில்லை தனது தலையை தடவிக்கொண்டார் அப்படி என்றால் அவருக்கு விருப்பம் இல்லை என்று அர்த்தம் மேற்கொண்டு கதைக்க முடியாது அவள் அமைதியானாள்.

“எனக்கு நான் சொன்னபடி அந்த வங்கியில் வேலை கிடைத்து விட்டது இன்று வாப்பாவுடன் வருகிறேன்”
இப்படி ஒரு எஸ் எம் எஸ் ஐ தனது நெருங்கிய தோழிகளுக்கும் முக்கியமாக தான் விரும்பும் அவனுக்கும் அனுப்பிவிட்டுஅவைகளை டிலீட் பண்ணினாள்.
கடந்த வாரம் அவனது தொடர்பை அறிந்த வாப்பா ஆத்திரப்பட்டு கொதித்தெழுந்தபோது அவள் மொளனமானாள் “என்ன கணக்கில அந்த நா…கு அப்படி ஒரு எண்ணம் வரும் நான் யாரு என்குடும்பம் என்ன எனது ஒரு நாளைய வருமானம் தெரியுமா அவனுக்கு வேலவெட்டி இல்லாதவனுக்கு காதலும் கத்தரிக்காயும் அவன…என்ன செய்யிறன் பாரு..”
”வாப்பா… வாப்பா அவருல எந்த தப்பும் இல்லை வாப்பா பிளீஸ் என்ன மன்னிதிடுங்க வாப்பா எல்லாம் என் தப்புத்தான் நான் உங்கள மீறி எதுக்கும் ஆசைப்படமாட்டன் பிளீஸ்..பிளீஸ் “
சில நொடிகள் தனது முகத்தைகரங்களால் தடவிக்கொண்டார் அதன் அர்த்தம் ஆத்திரம் கலைந்துவிட்டது என்பதை உணர்ந்துகொண்ட சுலைகா தனது அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டவள் நடந்தவைகளை
அவனிடம் தெரியப்படுத்தி ”எதற்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்துகொள்ளுங்கள்”என்று எஸ்.எம்.எஸ் மூலம் வேண்டிக்கொண்டாள்.
நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது காலப்போக்கில் வங்கி முகாமையளருடன் வாப்பா அடிக்கடி நலம் விசாரிக்கும் அளவிற்கு மட்டுமல்லாது வீட்டில் ருசியான சாப்பாடு சமைக்கும் நாட்களில் முகாமையாளரை வீட்டுக்கு விருந்தாளியாய் அழைத்துவிடுவார் இவைகளெல்லாம் சுலைகாவிற்கு அறவே பிடிக்காத போதும் அவைகளை வேளியே காட்டிகொள்ளவும் அவளால் முடிவதில்லை, ”மகள் வங்கியிலதான் மனேஜர் இது நம்ம இடம் நம்மவீடு வீட்டுக்கு விருந்தாளியாக வந்தால் நம்ம குடும்பத்தில ஒருத்தர் வெட்கப்படக்கூடாது”
ஏன் இப்படிஎல்லாம் வாப்பா நடந்து கொள்கிறார் அவளுக்கு சில நேரங்களில் குளப்பமாகவே இருக்கும்
“மகளுக்கு மனேஜர் மாப்பிள வாப்பா பாக்காராக்கும்” அவளை விரும்பும்அவனும் அவளோடு வேலை செய்யும் தோழிகளும் சொல்கின்றபோது சுலைகா மிகவும் வேதனைப்பட்டாள்
“பாவம் மனேஜர் பையன் மிகவும் கஸ்டப்பட்டுத்தான் படித்து இந்த நிலைக்கு வந்திருக்கிறான் இதுவரை வாப்பா யார் என்றே தெரியாதாம் உம்மாவின் வயிற்றில் இருக்கும்போதே வாப்பா பிரிந்துவிட்டாராம் உம்மா வீடு வீடாக வேலை செய்து அப்பம்,இடியப்பம் சுட்டு விற்றுத்தான் இவரை படிப்பித்திருக்கிறார் இருப்பதற்கு இடம் இல்லாம பையண்ட தொழில்கிடைத்த பிறகுதான் வீடேவாங்கியிருக்காங்க என்றால் எவ்வளவு கஸ்டத்தோட வாழ்ந்திருக்கிறான், என்ன செய்யலாம் பையண்ட உம்மாவிக்குத்தான் மகண்ட திருமணத்தையாவது பார்ப்பதர்கு கொடுத்து வைக்கவில்லை போனவருசம்தான் நெஞ்சுவலி என்று மருந்து எடுக்க ஆஸ்பத்திரிக்கு சென்றவர் உயிரோடு திரும்பிவரவில்லையாம் என்று பையன் என்னிடம் சொன்னபோது எனக்கே தாங்கமுடியாமல் கண்ணீர் வந்து விட்டதென்றால்அந்த பையனுக்கு எவ்வளவு கவலையாக இருந்திருக்கும்.. ம்..எல்லாம் அவனது நாட்டம்”
வப்பா உம்மாவிடம் இவையெல்லாம் ஏன் கதைக்கிறார் சிலவேளை தோழிகள் சொல்வதுபோல் … அப்படி எதுவும் நடக்கக் கூடாது என்று தனக்குள் இறைவனை வேண்டிக்கொண்டாள்
“மகள் ..நாளை விடுமுறைதானே நானும் மனேஜரும் அவங்கட ஊருக்கு நமது வாகணத்திலேயே போகலாம் என்று சொல்லியிருக்கன் வீட்டில நீங்க உம்மாவோட இருங்க ஒருநாளைய பிரயானம்தான் ,இன்று சனிக்கிழமை தானே ஞாயிற்றுக்கிழமை பின்நேரம் வந்திடுவம்”
“சரி வாப்பா கவனமாக போய்வாங்க”
மனேஜரின் வீட்டுக்குள் நுளைந்த சுலைமானுக்கு சுவரில் மாட்டப்பட்டிருந்த போட்டோவை பார்த்ததும் திகீர் என்றது வார்த்தைக்கு வார்த்தை மனேஜர் மனேஜர் என்று அழைக்கும் அவர் அவரை அறியாமலே” மகன் இந்த போட்டோவில இருப்பது யாரு சொந்தக்காறங்களா”
“இல்ல இவங்கதான் எனது உம்மா”
“அப்படியா .. வாப்பாவின் போட்டோ”
“கடைசிவரை வாப்பா யார் என்றுகூட சொல்லாமமே போய்ட்டாங்க”
சில நொடிகள் சுலைமான் இருபத்தைந்து வருடங்களுக்குமுன் சென்றுவிட்டார் ,தனது தவறான நடத்தைகளால் தனக்கு பிறந்தகுழந்தைதான் இந்த மனேஜர் என்பதை உணர்ந்துகொண்டதும் “இந்த நிமிடத்திலிருந்து நானே உங்களை எனது மகனாகவே ஏற்றுக்கொள்கிறேன் எதற்கும் கவலைப்படவேண்டாம்”மகன் என்று எதுவும் தெரிந்தமாதிரி காட்டிக்கொள்ளாமல் மகன் மகன் என்றே பேசிக்கொண்டு வீடு நோக்கி வந்துகொண்டிருந்தார், தனது தங்கையின் மகளுக்கு மனேஜரை மாப்பிள்ளையாக்கவேண்டும் என்ற நினைவுகளுடன்.
வீட்டில்…
மகள் சுமைஹா அவளது அவனுடன் காணாமல் போயிரிந்தாள்.
– தமிழன் வார இதழ் 30/04/2023
மிக அருமை நன்றி…