ஒருகோடி ஆண்டுகளுக்கு முன் நான்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: புனைவு
கதைப்பதிவு: November 12, 2025
பார்வையிட்டோர்: 101 
 
 

(2023ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

(15 வயதில் எழுதிய சிறுகதை)

உண்ட களைப்பு. உறங்க முயலும் கண்கள். அன்று போயாநாள் என்பது அக்கண்களுக்குத் தெரிந்து விட்டது போலும். ஆயினும் கண்முன்னே ஒரு கவின். என் கையில் ஒரு எழில்! அது தான் “தேன் அலைகள்” என்ற தெவிட்டாத புத்தகம்- அழகான அதன் அட்டைப்படம்! களிப்பூட்டும் தமிழகம் தந்த கருத்தூட்டும் எழுத்தாளர், கலைஞர் மு. கருணாநிதி (இன்றைய முதலமைச்சர்) அவர்களின் கற்பனை என்னும் தேன்கூட்டிலேயிருந்து சிந்திய, சிறுகதைகள் என்ற தேந்துளிகள் பன்னிரண்டு உண்டு அப்புத்தகத்தில். 

குளு குளு வென்று காற்று வீச, மாமரத்தின்கீழ்ப் படுத்துக்கொண்டே மள மள வென்று வாசித்துக் கொண்டிருந்தேன். முதலில் “முத்தாரம்”, மற்றது “மயிலிறகு” மூன்றாவது “முத்துமாலை” மூன்று சிறுகதைகளும் வாசித்து முடிந்தன. மூன்று தேன்துளிகளைச் சுவைத்துவிட்டேன்! நான்காவது ‘தோழி” என்ற சிறுகதையின் பெருந்தலைப்பைப் பார்த்தேன். அப்போது தனக்கொரு தோழன் வேண்டுமென்று என்னை அரவணைத்துக் கொண்டாள் நித்திரைச்செல்வி. அக்கணமே அவளுமென் தோழியானாள். 

மழை! மழை!! ஒரே பேய் மழை!!!… அதனுள் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தேன். எங்கும் ஒரே கும்மிருட்டு. ஆயினும் இனம் கண்டு கொள்ளக் கூடியளவு இயற்கைக்குணம் கொண்டிருந்த என் கண்களின் உதவியால் தட்டுத் தடுமாறி, முட்டிமோதி நடந்து கொண்டிருந்தேன். ஏதோ ஒரு பெரிய பாறை தட்டுப்பட்டது. அது உள்வளைந்ததாக, ஒரு குடைபோன்றும் குகைபோன்றும் தென்படவே அதன் கீழ் ஒதுங்கிக் கொண்டேன். அதனால் மழைக்குத் தப்ப முடிந்தது. மயக்கும் உறக்கத்திற்குத் தப்ப முடியவில்லை. அப்படியே அப் பாறையினடியில் அயர்ந்து விட்டேன். 

நான் விழித்தெழுந்தபோது, பொழுது சிரித்து நெடுநேரமாய் விட்டது தெரிந்தது.இரைப்பையும்,பெருங்குடலும் சிறுகுடலினுள் அகத்துறிஞ்சப்பட்டுவிடுமோ என்றெண்ணுமாறு வயிற்றைக் குடைந்தது பசி. எழுந்து பாறையொன்றின் மேலேறிப்பார்த்தேன். ஏதாவது உணவு கிடைக்குமா என்று. எதுவும் தென்படவில்லை. கண்ணுக்கெட்டிய வரையில் பாலைவனம் போன்று ஒரே வெற்றுத்தரை. சில இடங்களில் சிறிய மஞ்சள் நிறப் பூக்களும்,பெரிய பாறைகளும் காணக்கூடியனவாயிருந்தன. கண்போன போக்கிலே கால்கள் போயின. தள்ளாடியவாறு நடந்தேன், நடந்தேன், நடந்துகொண்டேயிருந்தேன். எத்தனை இரவு எத்தனை பகல் அவ்வாறு நடந்தேனோ அது எனக்குத் தெரியவில்லை. ஈற்றில் ஓரிடத்தில் மிகமிக என்று எத்தனை “மிக” வேண்டுமானாலும் அடுக்கிக் கொள்ளக்கூடிய மிக உயர்ந்த மர மொன்று, பழங்கள் தொங்கக் காட்சியளித்தது. எவ்வளவு உயரமானாலும் எனக்கு அது சிரமமாயிருக்கவில்லை. ஒரே பாய்ச்சல். மரத்தின் கீழ்க் கிளையிலே நான்! தொடர்ந்து ஒவ்வொருகிளைக்கும் ஒவ்வொரு பாய்ச்சல். இப்போது உயர்ந்த கிளையிலே நான்! பசி தீர்ந்தது. களைப்பு ஒழிந்தது. கவலை மறந்தது. அங்கிருந்தவாறே சுற்றாடலை நோக்கினேன். வெகுதூரத்தில் ஒரு குகைபோன்று குன்று ஒன்று இருப்பது தெரியவே மீண்டும் பாய்ச்சல்! நான்குபாய்ச்சல் – தாவல்களில் நிலத்திற்குக் குதித்துவிட்டேன். அங்கேயே நிற்கவில்லை. நேராக நான்கண்ட – மலை அடிவாரத்திலுள்ள-அக் குகைக்கு விரைந்தேன். குகையின் உள்ளே சென்ற எனக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. அந்தோ! அம்மகிழ்ச்சி ஒரு கணத்தில் நீர்க்குமிழியாயிற்று. ஒரு மனிதன் -என் போன்றவன்-அங்கு படுத்திருந்தான். அதனாற்றான் மகிழ்வு கொண்டேன். அருகிற் சென்ற பின்தான் அது மனிதனல்ல. மனிதன் சடலம் என்று புரிந்தது. அம்மனிதனின் வயிற்றிலிருந்து குருதி வடிந்திருந்தது. ஏதோ விலங்குதான் இவனைக் கொன்றிருக்க வேண்டும், என எண்ணினேன். மணம் எடுக்காத அவனது பிணம் எனக்கு அவ்வெண்ணத்தை உண்டாக்கியது. ஒருகணம் குகையைச் சுற்றிலும் நோட்டமிட்டேன். அது போன்ற பல சடலங்கள் இல்லை யில்லை, முன்னாள் சடலங்கள் இந்நாள் எலும்புக்கூடுகள்- தென்பட்டன. மண்டையோடுகள், எலும்புத்துண்டுகள் எல்லாம் சிதறிக்கிடந்தன.அந்தக் குகையில் ஏதோவோர் ஆட்கொல்லி விலங்கு இருக்கவேண்டும் “அது இறந்து கிடக்கும் அம் மனிதனை உண்ண உடனே வரலாம்” என்று என் மனம் கூறிற்று. நாமும் சடுதியாக வெளியேறி விடுவோமென நான் காலெடுத்துவைக்கவும், ‘சடபுடா சடபுடா…’ என்று ஓசை எழுப்பிய வண்ணம் மலைபோன்ற பெரிய விலங்கொன்று குகையினுள் நுழையவும் சரியாக விருந்தது. குருதியே உறைந்து விடும்போலிருந்தது எனக்கு. என்னைக் கண்டுகொண்ட அவ்விலங்கு என்னை நோக்கி உறுமியபடி வந்து கொண்டிருந்தது. அப்பப்பா! அதன் உருவந்தான் எவ்வளவு கோரமானது. வலியனவாக பரந்த உடலைத் தாங்கப் பின்பக்கமாக இரு கால்கள் பெரியனவாக. முன்பக்கம் பூனையின் கால்களைப் போன்று அளவில் சிறிய இரண்டு கால்கள். அவைதான் எதிரிகளைத் தாக்குவன போலும். முதலையின் வாய் போன்ற ஆனால் கூரிய பற்கள் உள்ள வாய். உயரம் இருபத்தைந்து அடி இருக்கும். நீளமோ மூக்கு நுனியிலிருந்து வால் நுனிவரையில் ஐம்பது அடிகள் இருக்கும் என்றால் கணக்கிட வேண்டியதுதான் அதன் கோரத்தோற்றத்தை! கற்பனைக்கடங்காத அப் பெரிய கொடிய பிராணியின் முன், கேவலம்நான் எம்மாத்திரம்? 

விலங்கிற்கும் எனக்கும் உள்ள இடைவெளி குறைந்து கொண்டி ருந்தது. ஓடுவதற்கும் குகையில் வேறு வழியில்லை. இருக்கும் ஒரே வழியும் மிருகத்தின் பக்கமே உண்டு. எனவே தப்பிக்க வழியில்லை. தப்ப நினைப்பதிற் பயனுமில்லை.”இதோ என்னை விழுங்கப்போகிறது”என்ற நிலையில் கண்களை மூடிக்கொண்டேன். கூச்சல் போடவில்லை, அதற்கான சக்தியும் இல்லை. ஆ…ஹா… ஹா என்ற அலறல் ஒலி என் காதுகளைப் பிய்த்தது. ஆயினும் கண்களைத் திறக்கவில்லை. என்னைத் தின்பதற்கு இத்தனை ஆரவாரமா? நேரம் போகிறது மிருகம் என்னைப் பிடிப்பதாக இல்லை.”ஓ…ஒருவேளை “லபக்” என்று விழிங்கிவிட்டதோ. அதன் வயிற்றினுள்ளே இருக்கிறேனோ” என எண்ணியவாறு திறக்காத குறையாகக் கண்களைத் திறந்தேன்… ஆ.. என்ன…ஆச்சரியம் “டைனொசோரஸ்” இனத்தைச் சேர்ந்த, டீரெக்ஸ் என்று உயிரியலாளர்களால் அழைக்கப்படுகின்ற அவ்விலங்கு இறந்து கிடந்தது. இறந்த அதன் உடலைப் பைத்தியம் பிடித்தவனைப்போல் குத்திக் குத்திக் கிழித்துக் கொண்டிருந்தான் ஓர் இளைஞன். ஓடிச்சென்று அவன் தோளில் தட்டினேன். பின்னர் கிள்ளினேன், கட்டிப்பிடித்தேன், எதையும் அவன் சட்டை செய்வதாயில்லை. தொடர்ந்து ஆவேசத்துடன் விலங்கின் உடலில் குத்திக் கொண்டேயிருந்தான். அவனை என் கவனத்திற்கு இழுத்து அவனது ஆவேசத்தைத் தணிப்பதற்குள் எனக்குப் போதும் போதுமென்றாகி விட்டது. அவனது சைகைகளின் மூலம் (பேசுவதற்கு இருவருக்கும் தெரியாதே. ஆமாம் மொழியே இல்லையே அப்போது!) “சிறிது நேரத்துக்கு முன்னர் நான் கண்ட சடலம் அவனது உறவினரோ…நண்பரோ… யாரோ… அவனுடன் இருந்தவர் என்றும் அவரைக் கொல்ல அம் மிருகம் எத்தனித்தபோது தெய்வாதீனமாக அவன் தப்பியிருக்கிறான் என்றும் தன் உறவினரைக் கொன்று விட்டதே என்ற ஆத்திரம்தான் ஒட்டி நின்று, என்னை முட்ட வந்த அம் மிருகத்தை கொல்லச் செய்தது” என்றும் ஊகிக்கவேண்டியிருந்தது. உண்மையும் அதுதான். கையிலிருந்த ஈட்டியினால் இறந்து கிடந்த “டைனொசோரஸ்” மிருகத்தின் உடலைக் கீறிக்கிழிக்க அவ்விளைஞனுக்கு நான் உதவி செய்தேன். மிருகத்தின் உடல் எங்கள் குடல்களை நிரப்பிற்று. ஒருநாள்… இரண்டு நாள்…மூன்று…நாள்…பிணம் மணம் எடுக்கும் வரை விடவில்லை!. உண்ணமுடியாதென்றநிலைவந்ததும் குகையை விட்டு வெளியேறி ஒரு திசையிலே நடந்தேன் நண்பனுடன். ஆம் நாம் நண்பர்களாகி விட்டோம். 

நண்பனின் சிறப்புக்கள் சிலவற்றையும் இங்கு கூறவேண்டாமா? நண்பன் என்னைப்போலன்றித் தன் பாலியல்புக்குரிய உறுப்புக்களை மிருகத் தோலினால் மறைத்திருந்தான். நானும் அவனைக் கண்டபின்- அவனுடன் பழகத்தொடங்கிய பின் – அக்குறையை நிறைவு செய்துவிட்டேன். அவனிடம் கல்லினாலானகூரிய ஆயுதமொன்றிருந்தது. எனக்கும் அதுபோல ஒன்றைச் செய்து கொடுத்தான். பலமனிதர்கள் கூட்டங்கூட்டமாக வாழ்கிறார் களென்பதும் அவ்வாறான ஒரு கூட்டத்தில் அவனும் இருந்திருக்கிறான் என்பதும் எனக்குப் புரியவந்தது. 

அலை அலையென்று அலைந்து திரிந்த எங்களுக்குத் தாகம் மேலிடவே “கும்பிடப் போனவனுக்குக் குறுக்கே தெய்வம் வந்தாற் போல” என்பார்களே அதுபோல ஒரு கால்வாய் குறுக்கிட்டது. தாகம் தீர்ந்தது. நடக்கும் வேகம் குறைந்தது. வயிற்றின் முழுப்பாகமும் நீர் நிரம்பிவிட்டதே அதனால்! களைப்பு மிகைப்படவே அவ்விடத்திலேயே இருவரும் படுத்து விட்டோம். துயில் மாதா இருவருக்கும் “துகில்” கொடுத்து அரவணைத்துக்  கொண்டாள். 

“ஹா…ஹி…ஹி…ஹச்சா”…என்ற பயங்கர ஒலி எங்கள் நித்திரையைக் கெடுத்தது. கண்கள் திறக்கப்படாமலேயே எழுந்து நின்று கொண்டேன். கண்களைத் திறந்து பார்த்தபோது “பளிச் பளிச்” என்று கத்தி போன்ற ஒன்று மின்னியது.அந்த ஒளியில் என் நண்பனைக் கண்டேன். அவன் அந்த ஒளியுடன் போராடிக்கொண்டிருந்தான். ஆனால் ஒளிக்குச் சமீபத்தில் அவன் செல்லவில்லை. சிறிது நேரத்தின் பின்பே எல்லாம் எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. அங்கே நின்றது ஓர் இராட்சதப் பிராணி, அதன் முதுகிலே கூரிய கத்தி போன்ற அமைப்பு. அந்த உறுப்பிலே யிருந்து ஒளி! அதே இராட்சதப்பிராணியுடன்தான் நண்பன் போராடிக் கொண்டிருந்தான். ஆபத்பாந்தவனல்லவா அவன்.எனவே அவனுடன் சேர்ந்து அப்பிராணியுடன் நானும் பொருதினேன். முதலையினதைப் போன்ற அதன் வாலைப் பற்றிப் பிடிப்பதும், அதன் முகத்திலே ஈட்டியாற் குத்துவதுமாக மாறி மாறி நாங்கள் அதனுடன் போரிட்டுக்கொண்டிருந்தோம். வெற்றி தோல்வி என்ற முடிவு இன்றிக் கதிரவனின் கணைகள் பூமியை அடையும் வரை போராட்டம் நீடித்தது. இறுதியில் களைப்பு மிகுதியால் இருவரும் விழுந்துவிட்டோம். நண்பனின் உடல் வியர்த்துக் கொட்டியது. எனக்குந்தான். களைப்பும் ஆத்திரமும் மீதுறப்பெற்று “எடபொசோரஸ் “என்று தற்கால உயிரியலாளர்களால் நாமம் பொறிக்கப்பட்டுள்ள டைனொசோரஸ் இனத்தைச் சேர்ந்த அவ்விலங்கு எங்கள் நோக்கிப் பாய்ந்தது வந்தது. இறப்பது நிச்சயம் என்ற எண்ணம் உதித்தும் கூட இருக்கும் சக்தியை எல்லாம் திரட்டிக் கையிலிருந்த ஈட்டியை வீசினான் நண்பன். வீரன்தான் அவன். குறி தப்பவில்லை. “எடபொசோரஸ்” உடைய அடி வயிற்றைத் துளைத்துப் பரிசோதனை நடாத்திச்சென்றது அவ்வீட்டி. எடபொசோரஸ் இறந்துவிட்டதே என்ற மகிழ்ச்சியோ என்னவோ எனக்குப் பலம்வந்துவிட்டது போன்ற ஓர் உணர்வு! ஆத்திர மிகுதியால் குத்தி அறுத்துக் கிழித்தேன் அதன் உடலை. 

“ஆத்திரத்தில் புத்தி மட்டு” என்பார்களே அதுபோல ஈட்டியை வீசிய எதிர்த்தாக்கத்தில் விழுந்துகிடந்த நண்பனைப் பற்றி நான் யோசிக் காதது, கவனிக்காதது, கவலையைத் தந்திற்று. ஆமாம். திரும்பிப்பார்த்தபோது அவனைக் காணவில்லை. அலறி புடைத்துக்கொண்டு தேடினேன். ஆகாயத் திலே சிறகடிக்கும் சத்தம் கேட்டது. அண்ணார்ந்து பார்த்தேன்.ஐயோ! என்னே பரிதாபம்!! என் நண்பனை ஒரு பறவை தூக்கிக்கொண்டு பறந்துகொண்டிருந்தது. அது ஒரு பறக்கும் டைனோசோரஸ்! அந்த இராட்சதப் பறவையின் கால்களின் கோரப்பிடியில் சிக்குண்டு தவித்துக் கொண்டிருந்தான் அவன். என்னால் நிற்கமுடியவில்லை. தொடர்ந்தேன் பறவையை. பறவை பறக்க பின்னால் பாய்ந்து நான் துரத்த நல்ல வேடிக்கை யாயிருந்திருக்கும். நல்ல வேளை வேடிக்கை பார்க்க வேற்று மனிதர் யாரும் அங்கு இருக்கவில்லை! ஓடினேன் ஓடினேன்…உடலில்வலுவிருக்கு மட்டும் பறவையைத் துரத்தி ஓடினேன். வலுவிழந்து, செயல்குலைந்து, நடைதளர்ந்த வேளையில் “ஆவீன மழைபொழிய இல்லம் வீழ அகத்தடியாள் மெய் நோவ…”என்பதைப்போல மரக்கட்டை ஒன்று தடக்கியது. அவ்விடத் திலேயே விழுந்து விட்ட எனக்கு எழுந்து நிற்க வலுவிருக்கவில்லை. அப்படியே சிந்தனையில் ஆழ்ந்து விட்டேன். நெடுநேரமாகச் சிந்தனை சிறகடித்துப் பறந்துகொண்டிருந்தது- மனக்கண்ணுள்! வேறொன்று பறந்துவருவது தெரிந்தது – புறக்கண்ணுள்! உண்மைதான்! நண்பனைத் தூக்கிச்சென்ற அதேயினப்பறவை (பெற்றோசோரஸ் அல்லது பிடெரொடக்டில் ஆக இருக்க வேண்டும்) என்னை நோக்கிச் சிறகடித்துப் பறந்து வந்து கொண்டிருந்தது. 

நான் நினைத்தது நடந்தது. வந்த பறவை என்னைத் தூக்கிக் கொண்டு, வந்த வழியே திரும்பியது. அதன் கால் விரல்களைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டேன். அந்த ஆகாயப் பயணத்தின்போது பச்சைப் பசேலென்று காட்சியளிக்கும் புல்வெளிகளைக் கண்டேன். புழுதியேயற்ற மணற்பகுதிகள் இயற்கை அன்னையின் எழிற் கோலத்தைக்காட்டக் கண்டேன். அவள் மூக்கிலிருந்து வடியும் சளியோ என்றெண்ணுமாறு தேங்கிநிற்கும் குளங்கள், குட்டைகளைக் கண்டேன். அவள் என் நிலைகண்டு கண்வடிக்கிறாளா, அதுதானா இதோ ஓடும் நீர் என்றெண்ணுமாறான நதிகள்…எல்லாம் கண்டேன். இவ்வாறு பலமைல்கள் கடந்து சென்றபோது எதிரே வேறெரு “பறக்கும் டைனோசோரஸ்” எதிர்ப்பட்டது. பின் கேட்க வேண்டுமா? இரண்டு பறவைகளுக்கும் இடையே சண்டை! சமர்! போர்! அப்பப்பா! அந்தப்போரின் கோரத்தை என்னவென்று கூறுவது? எழுத்தில் வடிக்கக் கூடியதா அது? ஏட்டில் பொறிக்கக்கூடிதா அது? நெஞ்சில் நினைக் கக்கூடியதா அந்தப்போர்? கீழே அதல பாதாளம். என்னைத் தூக்கிக் கொண்டிருக்கிறது ஒரு வேதாளம். அந்த இலட்சணத்திலே சண்டை வேறா? எல்லாம் எனது உடலுக்காக தம் உணவிற்காகத்தானே. இருவரும் பகிர்ந்து உண்டால் போகிறது. அதற்கு இப்படி இடையிற் சிக்கவைத்து என்னைச் சித்திரவதைப்பட வைக்க வேண்டுமா? இப்படியெல்லாம் நினைக்கத் தோன்றிற்று எனக்கு. இந்த நினைவுகளை எடுத்துச் சொல்லு வதற்கு நானென்ன முற்றும் துறந்த முனிவரா? புத்தரா? அப்பறவைகள்தான் சிஷ்யர்களா? போதிமரமும் அருகிலில்லை. பாதிவழியிலே இப்படி ஒரு மரண அவஸ்த்தை. அந்நேரத்திலே…இவ்வாறு சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்திலே என்னைத் தூக்கிக்கொண்டிருந்த பறவைக்கு ஒரு பெரிய தாக்குதல் – சொண்டினால் கழுத்திலே கொத்திவிட்டது மற்றப்பறவை . அவ்வளவுதான் . என்னைப் பிடித்திருந்த பிடி தளர்ந்தது. நான்… அதலபாதாலத்திலே…” ஐயோ..அம்… மா…ம்.. மா.ம்…மா …’ அலறிவிட்டேன் வாய்விட்டு. 


“என்ன தம்பி” என்றவாறே தேனீர்கோப்பையுடன் நின்றுகொண்டிருந்தாள் என் அன்னை. “என்ன சிறி…. வாறியா…வண் மில்லியன் யேஸ் பீ…சி…படத்துக்குப் போகலாம்…” என்றவாறே வந்துகொண்டிருந்தனர் என் பள்ளித்தோழர்கள். 

“என்தம்பி… நித்திரையில கத்தின நீ… கனவுகினவு கண்டநீயா”… இது அம்மாவின் பாசப்பரிவு நிறைந்த உரிமைக்குரல். 

அப்படியானால் நான் கண்டவை…கனவா…? 

“டேய் நான் கனவிலேயே பத்துலட்சம் வருசத்துக்கு முதல் சஞ்சரிச்சிப்போட்டு வந்திற்றன்டா… படம்வேற பார்க்கோணுமா” என்றேன் நண்பர்களிடம் 

“என்ன?” என்றார்கள் நண்பர்கள். அம்மாவும் கூடத்தான். சொல்வேனா… நடுங்குகிறதே நெஞ்சம்… பாதாளத்திலே விழுந்த நான் பாயிலே-மாமரத்து நிழலிலே-படுத்திருக்கிறேனே! “எல்லாம் விரிவாகச் சொல்கிறேன்” என்றேன். மேலே பேசவில்லை. எழுந்து விட்டேன் தோழர்களின் அழைப்புக்கு செவிசாய்த்து! 

(நிகழ்வோடு கலந்த கற்பனைக் கதை) 

கதை பிறந்த கதை! 

இது, 1969 ஆம் ஆண்டு, எனது பதினைந்தாவது வயதில், 10 ஆம் வகுப்பில், பட்டிருப்பு மகாவித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்த போது, நான் ஆசிரியராக நியமிக்கப்பட்டிருந்த “உயிர்ப்பு” என்ற கல்லச்சு இதழில் பிரசுரிக்கப்பட்ட எனது சிறுகதை. அன்று நான் எழுதியிருந்த இந்தக் கதையில், ஓர் எழுத்திலோ, சொல்லிலோகூட மாற்றம் எதுவும் செய்யாமல் அப்படியே பிரசுரிக்கப்படுகிறது. கற்பனையாக இதனை எழுதியமைக்குப் பின்னால் ஓர் உண்மைக்கதை உள்ளது. 

எங்கள் உயிரியல் ஆசிரியரான, அமரர், மயிலங்கூடலூர் பி. நடராசன் அவர்கள், நான் பத்தாம் வகுப்பில் படிக்கும்போது “உயிர்ப்பு” என்னும் பெயரில் ஒரு பத்திரிகையை மாதாந்தம் வெளியிடுவதற்குத் தீர்மானித்தார். பத்திரிகையைப் பற்றிய விளம்பரம் பாடசாலை விளம்பரப் பலகையில் போடப்பட்டிருந்தது. அதில் “இதழாசிரியர்” சு.ஸ்ரீகந்தராசா என்றிருந்தது. அதனைப் பார்த்ததும் நான் அவரிடம் ஓடோடிச் சென்று கேட்டேன். “என்ன சேர் இது…? ” என்று இழுத்தேன். “ஓம்… நீர்தான் இதழாசிரியர். நாளையிலை இருந்து பள்ளிக்கூடம் விட்டதும் வீட்டுக்குப் போகக்கூடாது. ஒவ்வொருநாளும் ஒரு மணித்தியாலம் இங்கேயிருந்து ‘உயிர்ப்பு’ வேலைகளைப் பார்க்கவேண்டும், விளங்குதோ?” என்றார். என்னால் மறுக்கவாமுடியும்? “சரி சேர்” என்றேன். உயிர்ப்பு இதழ் கல்லச்சுப் பிரதியாக வெளிவந்துகொண்டிருந்தது. புகைப்படப்பிரதி (Photocopy) எடுக்கும் வசதி, இல்லாத காலம் அது! தட்டச்சுக்கு அடுத்த படியாக “ரோனியோ” என்னும் கல்லச்சுப்பிரதி எடுத்து பரீட்சை வினாத் தாள்களைத் தயாரித்த காலம். 

திடீரென்று ஒருநாள் பாடசாலை விளம்பரப் பலகையில், “அடுத்த உயிர்ப்பு இதழில், ‘ஒருகோடி ஆண்டுகளுக்கு முன்னர் நான்!’ திருமுருகிறை எழுதும் கற்பனைக் கதை.” என்று இருந்தது. “திருமுருகிறை” என்பது எனது பெயரைத் தூயதமிழாக மாற்றி, பி.நடராசன் ஆசிரியர் அவர்கள் எனக்கு இட்டிருந்த புனை பெயர். அவரிடம் அந்த விளம்பரத்தைப் பற்றிக் கேட்டேன். “ஓம் நீர்தான் எழுதுதுறீர். வண் மில்லியன் இயர்ஸ் பீசீ படம் பாத்தீர்தானே! அதை மனதில் வைச்சுக்கொண்டு எழுதும்.” என்று சொன்னார். அதற்கு முந்திய வாரம் பாடசாலையால் ஆசிரியர்கள் எங்களை மட்டக்களப்பு விஜயா திரையரங்கில் திரையிடப்பட்ட “‘One Million Years BC “ என்ற திரைப்படத்திற்குக் கூட்டிச் சென்றிருந்தார்கள். 1966 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டிருந்த அந்த ஆங்கிலத் திரைப்படம் 1969 ஆம் ஆண்டு இலங்கையில் திரையிடப்பட்டது. 

டைனொசோர்ஸ் பற்றிய அந்தத் திரைப்படத்தைப் பார்த்ததால் எனக்கு ஏற்பட்ட உணர்வில், கற்பனையாக ஒரு கதையை எழுதும்படி என்னைப் பணித்தார். “ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால்” என்பது தான் படத்தின் பெயர். ஆனால், “ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்னால்” என்று எழுதும்படி அவர் கூறினார். 

அவர் ஏதும் சொன்னால் அதை அப்படியே ஏற்று நடப்பதைத் தவிர மாற்று வழி எதையும் நினைத்துக்கூடப் பார்க்காத, அவரின் விருப்பத்திற்குரிய மாணவர்களில் ஒருவனாக இருத்தமையால், இதையும் உள்ளார்ந்த மகிழ்வோடு தலையாட்டி ஒப்புக்கொண்டேன். அடுத்த உயிர்ப்பு இதழில் எனது கற்பனைக் கதை இடம்பெற்றது. 

அந்தக்கதையைப் பள்ளிக்காலத்தில் நான் எழுதிய சிறுகதைகள், கவிதைகளின் இரண்டாவது தொகுப்பில், “அந்த நாட்கள்” என்ற தலைப்பில், 03.07.1969 இல் பிரதிபண்ணி வைத்திருந்தேன். அது இன்னும் என்னிடம் உள்ளது. இதற்கு முன்னர் எழுதியிருந்த கதைகளைக் கொண்ட முதலாவது தொகுப்பு, 1978 புயல் அனர்த்தத்தில் சிதைந்து போயிற்று. 

திரைப்படமும்,கற்பனைக் கதையும் எப்படியிருந்தாலும், அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவுகளாக உள்ள சில தகவல்களை இங்கு பதிவு செய்வது அவசியமாகும் என நினைக்கிறேன். 

அவையாவன: 

1) திரைப்படத்தில் காண்பிக்கப்பட்டதைப் போல, ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு அல்லது படத்தின் பிரதிபலிப்பாக எனது கதையில் வருவதைப்போல ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் என்று சொல்லக்கூடிய காலப் பகுதியில் டைனோசோர்கள் வாழ்ந்ததில்லை. 

2) அவை 250 மில்லியன் ஆண்டுகள் அதாவது 25 கோடி ஆண்டுகளுக்கும் 65 மில்லியன் அதாவது ஆறரைக்கோடி ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட, மெசோஷோயிக் எனப்படும் காலத்தில் (Mesozoic era) வாழ்ந்திருக்கின்றன. 

3) ஒரு மில்லியன் வருடங்களுக்குச் சற்று முன்புவரையான காலத்திலிருந்தே மனித இனம் தோன்றத் தொடங்கியது. 

4) மனிதர்களும் டைனசோர்களும் ஒரே காலத்தில் எப்போதுமே வாழ்ந்ததில்லை. 

இந்தத் தகவல்களை வாசகர்கள் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

– இன்னும் கன்னியாக… (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2023, மகுடம் பதிப்பகம், மட்டக்களப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *